Home Chittaranjani Chittaranjani Ch7 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

Chittaranjani Ch7 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

81
0
Chittaranjani Ch7 Chittaranjani Sandilyan, Chittaranjani Online Free, Chittaranjani PDF, Download Chittaranjani novel, Chittaranjani book, Chittaranjani free, Chittaranjani,Chittaranjani story in tamil,Chittaranjani story,Chittaranjani novel in tamil,Chittaranjani novel,Chittaranjani book,Chittaranjani book review,சித்தரஞ்சனி,சித்தரஞ்சனி கதை,Chittaranjani tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Chittaranjani ,Chittaranjani ,Chittaranjani ,Chittaranjani full story,Chittaranjani novel full story,Chittaranjani audiobook,Chittaranjani audio book,Chittaranjani full audiobook,Chittaranjani full audio book,
Chittaranjani Ch7 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

Chittaranjani Ch7 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

சித்தரஞ்சனி – சாண்டில்யன்

அத்தியாயம் – 7 குல வைரி

Chittaranjani Ch7 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

ஸஹ்யாத்ரி மலைத்தொடரின் தாபோல் பகுதி செங்குத்தாக எழுந்து மிகப்பயங்கரமாகக் காட்சியளித்தாலும், அடர்த்தியான மலைக்காடு வெண்மதியைக் கூடியவரை உட்புகாது தடுத்தாலும், இருளைக்கிழிக்கும் மின்னல் போல் வெள்ளை உடையில் சித்தரஞ்சனி காட்டின் ஊடே மிக வேகமாக வந்தாள். அத்தனை இருளிலும் அவள் பூவுடலைத் தழுவ ஆசை கொண்ட சந்திரன் தனது கதிர்களை அவள்மீது வீச முயன்று முடியாது போகவே, கதிர்களை மரங்களின் இலை இடுக்குகளின் வழியாக அவள் மீது செலுத்தி அவள் வெண்ணிறச் சேலையை வட்டம் வட்டமான வெள்ளிக் காசுகளால் இழைத்து அழகு பார்த்தான். அந்தச் சமயத்தில் சந்திரன் தனது குருபத்தினியான தாரையை நினைத்து, அவளைப் போலவே சித்தரஞ்சனியையும் ஆடையற்ற வளாகப் பார்க்க வேண்டுமென்று துர் எண்ணம் கொண்ட தனால் அவன் துஷ்டக் கண்களைச் சிறுமேகமொன்று அவன் முகத்தில் படர்ந்து மூடியது. ஆனால் அந்தத் துஷ்டன் கண்கள் அந்தச்சிறு மேகத்தைக் கலைத்து எட்டிப் பார்க்கவே சண்டிகாதேவி குகைப் பகுதியில் வெளிச்சம் ஓரளவு தெரியவே செய்ததால், சித்தரஞ்சனி பாறை மீதிருந்த புஷ்பக் குவியலைப் பார்க்க முடிந்தது. அந்த புஷ்பக் குவியலைக் கண்ட சித்தரஞ்சனியின் முகத்தில் சிறிது குழப்பம் தெரிந்தாலும்; ‘இருக்காது இருக்காது. நேற்று நான் குவித்த புஷ்பங்கள் இத்தனை நேரம் வாடாதிருக்க முடியாது’ என்று தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டாள். அதன் விளை வாகப்பாறைமீது குனிந்து புஷ்பக் குவியலைக் கலைத்து, அது மறைத்திருந்த செய்தியையும் உற்று நோக்கினாள். பிறகு மிக மெதுவாக நகைத்தாள். புஷ்பங்களில் இரண்டொன்றை எடுத்துத்தலைக்குழலில் சொருகிக்கொண்டாள். மீதியிருந்த புஷ்பங்களை அள்ளியெடுத்து மார்பிலும் அணைத்துக் கொண்டாள். அவள் செய்கைகளையெல்லாம் புதரின் மறைவிலிருந்து பார்த்த பூஜாரி, “இன்று மோகினி இந்த முரடனைக் கண்டிப்பாய்ப் பிடித்துக் கொள்ளும்” என்று உள்ளூர சொல்லிக்கொண்டான். அப்படி நினைக்கவில்லை கௌதமிபுத்ரன். “அணைத்த புஷ்பங்களின் இதயப்பிராந்திய மேடுகளில் தனது தலையிருந்தால், எப்படியிருக்கும்?” என்று நினைத்துப் பெருமூச்சு விட்டான்.

அந்த நினைப்புக்குச் சுருதி கூட்டுவது போல் சித்தரஞ்சனி தனது வீணைக்குரலில் பாடத்துவங்கினாள். முந்திய நாட்கள் போல் கீழ் ஷட்ஜத்திலிருந்து எழுந்து நிஷாதத்துக்குச் செல்லும் முறையை அவள் கடைப்பிடிக்கவில்லை. ஒரே ரீதியில் ஸாமகானம் போல் துல்யமாகச் சவுக்ககாலத்தில் எழுப்பப்பட்ட அந்த கீதம் அன்று எழும்பவில்லை. அவள் முந்திய இரு இரவுகளைப்போல் நின்ற இடத்தில் செங்குத்தாக நின்று பாடிக்கொண்டே பூமிக்குள் மறையவும் இல்லை. அன்றைய கீதம் ஸ்வரங்களை முன்னும் பின்னுமாக அமைத்து ஏதோகாமகீதம் போல் சலசலப்புடன் ஜலதரங்கம் போல் ஒலித்தது. தாள ஜதி துரிதப்பட்டு வர்ண மெட்டும் முற்றும் மாறி, துன்பம் தோன்றும் பிசாசகீதமாக இல்லாமல் காமத்தைக்கிளறும் இன்ப கீதமாக அமைந்தது. வர்ணமெட்டு ஊஞ்சலாடியது. அவளையும் இருபுறங்களிலும் ஆட்டியது. அவள் மோகன உருவம் அப்புறமும் இப்புறமும் அசைந்தது. கால்கள் மாற்றி மாற்றி வைக்கப்பட்டன. கீழே குத்தும் பாறையின் மணிக்கற்கள் அவள் பாதத்தைக் குத்துவதையும் அவள் லட்சியம் செய்யாமல் நிருத்தம் செய்தாள். கடைசியாக அப்புறமும் இப்புறமும் பார்த்தாள். யாரும் கண்ணுக்குப் புலப்படாமல் போகவே பாட்டை நிறுத்திப் பெருமூச்சு விட்டாள். பிறகு கீழே உட்கார்ந்து ஏதோ ஒரு சிறு குத்துக்கல்லைக் காலால் உதைக்கப் பெரிய பாறை அகன்றது. அது கொடுத்த இடத்தில் அவள் மெதுவாக இறங்கினாள் பூமிக்குள். பாறை நீங்கிய இடத்தில் அடிமட்டும் இருளே தெரிந்தாலும் ஆரம்பப்படிகள் கண்ணுக்கு நன்றாவே தெரிந்தன. சித்தரஞ்சனி கண்ணுக்கு மறைந்த பிறகு அந்தப் படிகளில் கௌதமிபுத்ரனும் இறங்கினான். அவனுடன் அதுவரை புதரில் பதுங்கியிருந்த பூஜாரி ஓடி வந்து, அந்த வாலிபனைத் தடுக்க முயன்றும் முடியவில்லை. அவன் இரண்டடி குகையை நோக்கி எடுத்து வைப்பதற்குள் குகைவாய் மூடிக்கொண்டது. மேலே இருந்த பெரிய பாறை ஏதோ விசையால் ஏவப்பட்டது போல் மெதுவாக நகர்ந்து பழையபடி குகையை சுவடு தெரியாமல் அடைத்துவிட்டது. என்ன செய்வது என்று தெரியாத பூஜாரி மனிதயத்தனம் பயன்படாதபோது சாதாரண மனிதர்கள் செய்யும் அலுவலில் இறங்கினான்; அதாவது தாபிலேசுவரரை மனத்தில் தியானித்தான். சண்டிகாதேவியையும் வேண்டிக்கொண்டான். “தாயே! இந்த வாலிபன் யார் பெற்ற பிள்ளையோ, அவனைக் காப்பாற்றிவிடு. அவன் அசட்டுத் துணிவை மன்னித்துவிடு” என்று.

குகைக்குள் இறங்கிய கௌதமிபுத்ர சதகர்ணியின் நிலைமை பூஜாரியின் நிலைமைக்கு முற்றும் மாறாயிருந்தது. பாறை மூடியதுமே காரிருள் சூழ்ந்துவிட்டதால் பக்கப் பாறைகளைப் பிடித்துக்கொண்டும் தடவிக்கொண்டும் படிகளில் மிக எச்சரிக்கையுடன் இறங்கலானான். இருபுறத்திலும் இருந்த சுவரில் பாறையில் கடினம் இருந்தாலும் ஓரளவு நேராகவே இருந்தது. படிகளும் ஒரு படியைப் போலவே அகலமும் உயரமும் உள்ளதாக அமைந்திருந்ததால் இறங்குவது சுலபமாயிருந்த போதிலும் கௌதமிபுத்ரன் எச்சரிக்கையாகவே இறங்கலானான். அவன் நாலு படிகள் இறங்கியதும் செண்பக மலரின் சுகந்தமொன்று கிளம்பி அவனை மயக்கவே, அந்த வாசனையைச் சிறிது நேரம் முகர்ந்த கௌதமிபுத்ரன் மூன்றாவது படியிலேயே சிறிது நேரம் நின்றதும் இன்னொருவித பூ வாசனை கீழேயிருந்து மிதந்து வந்தது. அப்படி மாறி வந்த வாசனைக்குக் காரணத்தை அறியவும் தனக்கு முன்பு இறங்கிச் சென்ற சித்தரஞ்சனியைச் சந்திக்கவும் மெள்ள படிகளில் இறங்க முற்பட்டான். பத்து படிகள்தான் இறங்கியிருப்பான். அவன் இறங்குவது சிறிது தடைப்பட்டது. எதிரேகையில் பட்ட இரு தூண்களால். தூண்களை அசைக்க முயன்ற அந்த வாலிபன் அவை நகராததால் என்ன செய்வது என்று சிந்தித்த சமயத்தில் இரண்டு மெல்லிய கைகள் அவன் வலது கையைப் பிடித்தன. அவை முன்பு தன் கழுத்தை முறிக்க முயன்ற கைகளே என்பதை அவற்றின் பரிமாணத் தாலும் விரல்களின் மென்மை கலந்த வன்மையாலும் புரிந்து கொண்ட கௌதமிபுத்ரன் அந்தக் கைகளைத் தனது இன்னொரு கையாலும் பற்றி இழுக்க ஆரம்பித்ததும், பூவுடலொன்று அவன் உடலுடன் உராய்ந்தது. அவன் காதுக்கருகில் தவழ்ந்த இரு அதரங்கள், “கௌதமிபுத்ரா! பெரும் ஆபத்திலிருக்கிறாய். எந்த நிமிடத்திலும் நீ சிறைப்படலாம். நீ இங்கிருந்து போய்விடுவது நல்லது” என்று கூறிய போது அந்த உதடுகள் காதில் அவ்வப்பொழுது பட்டதால் இந்த இந்திர போகத்தை விட்டு நான் ஏன் ஓட வேண்டும்?’ என்று உள்ளூர எண்ணினான். எண்ணியதோடு நிற்கவில்லை அவன். தான் என்ன செய்கிறோமென்பதை அறியாமலே இருட்டில் நின்ற சித்தரஞ்சனியின் உடலைத் தனது கைகளால் சுற்றினான். ஆனால் அவன் பிடியில் அவள் அகப்படாமல் வெகு லாகவமாகக் கழன்று கொண்டாள். அடுத்து அவள் படிகளில் இறங்கி வேகமாக ஓடும் காலடி ஓசை மட்டும் கேட்டதால் தானும் வேகமாக இறங்க முற்பட்டான் சாதவாகனன். சுமார் பதினைந்து படிகள் இறங்கியதும் திடீரென ஒரு விளக்கு பாதாளத்தில் ஏற்றப்பட்டது. அந்த விளக்கில் சண்டிகாதேவியின் அருளும் பயங்கரமும் இணைந்த முகம் பளீரெனத் தெரிந்தது. கருங்கல்லில் வடிக்கப்பட்ட சிலையாயினும் தேவிக்குக் கண் மலர்களும் நகைகளும் அணிவிக்கப்பட்டிருந்ததால் அவள் கண்கள் நேராக உற்றுப்பார்ப்பது போன்ற பிரமையை அளித்தன. அவள் கையில் காணப்பட்ட சூலம் எதிரிகளை சம்ஹரிப்பதற்குச்சித்தமாயிருப்பது போல் குகைப்படிகளை நோக்கிக் கொண்டிருந்தது.

விளக்கில் ஜொலித்த சண்டிகாதேவிக்கு முன்பாகச் சித்தரஞ்சனி மண்டியிட்டுத் தலை வணங்கி உட்கார்ந் திருந்தாள். அவள் உதடுகள் பழைய சித்தரஞ்சனி ராகத்திலேயே உச்சாடனம் செய்யப்பட்டாலும் இம்முறை அந்தக் காலத்தில் குகையின் மேற்பகுதியிலிருந்த குதூகல மில்லை. பயபக்தியும் துன்பமும் நிறைந்த வர்ணமெட்டில் அவள் மந்திரங்களைக் கீதம்போல் இசைத்தாள். அந்தக் கீதத்தைக் குகைப் பாறைகள் நாலா பக்கங்களிலுமிருந்து எதிரொலி கிளப்பியதால் ஏதோ நாத வெள்ளம் அங்கு பிரவகிப்பது போன்ற பிரமை ஏற்பட்டது சாதவாகன வாலிபனுக்கு. எங்கும் நிறைந்த அந்த நாதப்பிரம்மத்துக்கு அடிமையாகச் சித்தரஞ்சனியின் பக்கத்திலேயே உட்கார்ந்து தரையில் சிரசை வைத்து வணங்கினான் அந்த வாலிபன். பல நிமிஷங்கள் கழித்து அவன் தலை தூக்கியபோதும் சித்தரஞ்சனி எழுந்திருக்காமல் தரையில் தலைமுட்டிய நிலையிலேயே கிடந்தாள்.

மெல்ல அவள் மீது கையை வைத்தான், கௌதமிபுத்ரன். அவன் கைப்பட்டது அவளுக்குத்தெரியவில்லை. சுரணை சிறிதும் வராத நிலையில் கிடந்தாள் அந்த அழகி. கவிழ்ந்த நிலையிலும் அவள் பூவுடல் எத்தனை அழகாயிருந்தது என்பதைக் கண்ட அந்த வாலிபன் வளைந்த அந்த உயிர்ச் சிலையைக் கவனிக்கலானான். அவள் வளைந்து கிடந்ததால் அவள் மார்பகம் சிறிதும் தாழாமல் கெட்டிப்பட்டு ஒரே நிலையில் நின்றதையும், இடை வளைந்ததால் அவள் பின்னழகு அதிகமாக எழுந்து கிடந்ததையும் எண்ணிய கௌதமிபுத்ரன், “சே! இந்த எண்ணங்கள் சந்நிதியில் வரலாமா? அபசாரம்! என் சித்தமென்ன இப்படிக் குலைந்துவிட்டது?’ என்று தன்னைத்தானே கண்டித்துக் கொண்டு தனது மனத்தைத் தூய்மைப்படுத்திக்கொள்ள மகாசண்டியை நோக்கினான். சண்டிகா தேவி தன்னை எரித்துவிடுவதுபோல் பார்ப்பதாகத் தோன்றியதால் தனது கண்களை அம்பாளின் திருவடிகளில் செலுத்தினான். சகல பாவங்களையும் தீயினில் தூசுபோல் பஸ்மீகரப்படுத்திவிடும் அந்த அருட்பாதங்கள் அந்த வாலிபனின் இதயத்தைத் தூய்மைப்படுத்தவே செய்தன. தன்னை இன்னும் தூய்மைப்படுத்திக்கொள்ள அம்பாள் திருவடிகளைத் தொட எண்ணித் தேவியின் சிலையருகே சென்றான். அந்தச் சமயத்தில் ஒலித்தது சித்தரஞ்சனியின் குரல், “சண்டியை நெருங்க வேண்டாம்” என்று.

திரும்பிப் பார்த்த சதகர்ணி, சித்தரஞ்சனி வணங்கிய நிலையிலிருந்து எழுந்துவிட்டதையும், அவள் கண்களில் கோபப் பொறிகள் வீசுவதையும் கண்டான். “சித்தரஞ்சனி!” என்று மெதுவாக அழைக்கவும் செய்தான்.

அவள் அவனை ஏறெடுத்து நோக்கினாள். “உன்னை யார் இங்கு வரச்சொன்னது? குகையைத் திறக்கும் சூட்சுமம் உனக்கு எப்படித்தெரிந்தது?” என்று சினம் பெரிதும் துளிர்த்த குரலில் வினாக்களைத் தொடுத்தாள்.

இந்த திடீர் மாற்றத்துக்கு என்ன காரணம் என்று அவன் வியந்து கொண்டிருந்தபோதே அவன் தோள் மீது இரும்புக் கையொன்று விழுந்து அவனை வேகமாகத் திருப்பியது. தன்னைத் திருப்பியவன் முந்திய இரவில் சித்தரஞ்சனியை அறைந்தவன் என்பதை உணர்ந்து கொண்ட கௌதமிபுத்ரன், “எடு உன் கையை. தெய்வசந்நிதானத்தில் பூசலுக்கு இடமில்லை” என்று சொன்னான்.

“பெண்ணைக் கெடுக்கத்தான் இது இடம்போலிருக் கிறது?” என்று சினத்துடனும் ஏளனத்துடனும் பேசியதன்றி அந்த ராட்சதன், “உன் உயிர் இத்துடன் முடிந்தது. சண்டியைப் பிரார்த்தித்துக்கொள். நல்ல கதிக்காவது போகலாம்” என்றும் கூறி இடையிலிருந்த குறுவாளை வலது கையில் எடுத்துக்கொண்டு ஓங்கினான் கௌதமிபுத்ரனை அங்கேயே வெட்டிப்போட. “சண்டிகாதேவி! இந்த நரபலியை வாங்கிக்கொள்” என்று இரைந்தும் கூவினான். ஆனால் தேவி அன்று பலியை விரும்பவில்லை. அந்த ராட்சதன் வலதுகை திடீரென்று நடுங்கத் தொடங்கி விட்டது. கையிலிருந்த குறுவாள் தரையில் விழுந்து விபரீத ஒலிகளைக் குகையெங்கும் கிளப்பியது. ஆனால் அந்த இரவின் கதை அத்துடன் முடியவில்லை . அந்த ராட்சதனுக்குப் பின்னால் இன்னொருவன் குகைக்குள் இறங்கி வந்து கொண்டிருந்தான். அந்த மனிதன் பாரத சரித்திரத்தின் ஒரு முக்கிய பகுதியைத் திருப்பியவன் என்பதையும் சாதவாகனர்களின் குல வைரி என்பதையும் கௌதமிபுத்ரன் புரிந்து கொண்டான்.

Previous articleChittaranjani Ch6 | Chittaranjani Sandilyan | TamilNovel.in
Next articleChittaranjani Ch8 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here