Home Chittaranjani Chittaranjani Ch8 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

Chittaranjani Ch8 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

51
0
Chittaranjani Ch8 Chittaranjani Sandilyan, Chittaranjani Online Free, Chittaranjani PDF, Download Chittaranjani novel, Chittaranjani book, Chittaranjani free, Chittaranjani,Chittaranjani story in tamil,Chittaranjani story,Chittaranjani novel in tamil,Chittaranjani novel,Chittaranjani book,Chittaranjani book review,சித்தரஞ்சனி,சித்தரஞ்சனி கதை,Chittaranjani tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Chittaranjani ,Chittaranjani ,Chittaranjani ,Chittaranjani full story,Chittaranjani novel full story,Chittaranjani audiobook,Chittaranjani audio book,Chittaranjani full audiobook,Chittaranjani full audio book,
Chittaranjani Ch8 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

Chittaranjani Ch8 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

சித்தரஞ்சனி – சாண்டில்யன்

அத்தியாயம் – 8 அவள் கோரிக்கை!

Chittaranjani Ch8 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

கௌதமிபுத்ரன் தோளைப் பிடித்துத் தனது இடது கையால் திருப்பி வலது கை குறுவாளால் அவனை வெட்டிப்போட ராட்சதன் போன்ற க்ஷத்ரபன் தனது உலக்கைக் கையை ஓங்கியதும் சாதவாகன வாலிபன் அழிந்தானென்றே எண்ணி மிதமிஞ்சிய அச்சத்துக்கு ஆளான சித்தரஞ்சனி அடுத்த விநாடி விவரிக்க முடியாத அளவுக்கு வியப்பையும் பிரமிப்பையும் அடைந்தாள். க்ஷத்ரபன் கைமுழுதும் திடீரென நடுங்கியதையும், நடுக்கத்தைத் தொடர்ந்து குறுவாள் தரையில் விழுந்து உலோக ஒலிகளை குகையெங்கும் பரப்பியதையும் கண்ட சித்தரஞ்சனி அதற்குக் காரணம் எதுவாயிருக்கும் என்று ஊகிக்க முற்பட்டுக் குகைப்படிகளை நோக்கியதும், மேலிருந்து கீழே இறங்கிக்கொண்டிருந்த மனிதனைக் கண்டதன் விளைவாக தனது ஊகத்தைவிட்டு அடுத்து நடக்கக்கூடிய நிகழ்ச்சிகளை எதிர்பார்த்து நின்ற இடத்தைவிட்டு நகராமலே நின்றாள்.

குகைப்படிகளில் மேலிருந்து கீழே இறங்கி வந்த மனிதன் கௌதமிபுத்ரனைக் கொல்ல முயன்ற க்ஷத்ரபனை விட அதிக உயரமானவனாகத் தெரிந்தாலும், வீண் சதைப்பிண்டமாக இராமல், தேவையான அளவுக்கு சதைபிடித்து பொதுப் பார்வைக்கு க்ஷத்ரபனைவிடச் சற்று இளைத்தவனாகவே காட்சியளித்தாலும், அவனிடம் ஒரு தோரணை இருந்தது. நடையில் நிதானமும் கம்பீரமும் தெரிந்தன. அவன் கண்களில் ஒரு அசட்டையும் பெருந்தன்மையும் கூடக் காணப்பட்டன. அவன் விசால நெற்றியின் குறுக்கே சந்தனக்கீறுகள் இட்டதுபோல் சருமம் மூன்று மெல்லிய மடிப்புகளுடன் தெரிந்தது. அவன் கௌதமி புத்ரனை விட சிறிது அதிக வயதுடையவனென்பதை நிரூபித்தன. அவன் தலைக்குழல்கள் முரடாகவும், சுருண்டும் இருந்ததால் அவன் விசால முகத்துக்குச்சிறிது அழகையும் ஊட்டின. நடுத்தர வயதுடைய அவன் வாலிபவயதில் அழகின் இலக்கணமாக இருந்திருக்க வேண்டுமென்பதைப் பொதுத்தோற்றம் விளக்கவே செய்தது. அவன் அடர்ந்த பெரிய பழுப்புநிற மீசை அவன் அஞ்சா நெஞ்சத்துக்கு அடையாளமாக அமைந் திருந்தது. அவன் நீண்ட உறுதியான கால்களும் விசால மார்பும் பழைய கிரேக்கர்கள் அணிந்திருந்தது போன்ற இரும்புவலைச்சட்டையும் காலில் இருந்த பாத அணிகளும் அவன் சாக வம்சத்தினனென்பதையும் *ஷஹராட குலத்தைச் சேர்ந்தவன் என்பதையும் வலியுறுத்தின. எல்லாவற்றையும் விட அவன் மார்புச்சட்டையின் நடுவிலிருந்த ஒரு பதக்கத்தில் காணப்பட்ட வில்லம்பு இலச்சினையில் அம்பின் நுனிபாம்பின் தலைபோல் இருந்ததும் சாகர்களின் சாதாரண முத்திரைகளுக்குச் சிறிது மாறுதலாகக் காட்சியளித்தது.

இவையனைத்தையும் சித்தரஞ்சனி மட்டுமின்றி கௌதமிபுத்ரனும் கவனித்ததால் வந்தவன் யாரென்பதை அவன் திட்டவட்டமாக அறிந்து கொண்டான். அவன் வரவு சித்தரஞ்சனியை நிலைகுலுங்கச் செய்தாலும் கௌதமி புத்ரனுக்குச் சிறிதளவும் அச்சத்தை விளைவிக்காததால், அவன் மேலிருந்து இறங்கி வந்து க்ஷத்ரபனுக்குப் பின்னால் நின்று கொண்ட அந்த மனிதனை தலைசாய்த்து வணங்கி “ஷஹராட மகாப்பிரபு நாகபாணர்வரவு இங்கு சுபிட்சத்தை விளைவிக்கட்டும்” என்று முகமன் கூறினான் சாதவாகன வாலிபன்.

மகாக்ஷத்ரபனான நாகபாணன் உதடுகளில் புன்முறுவல் அரும்பியது. அவனும் லேசாக தனது தலையை ஒருபுறம் சாய்த்து, ”சாதவாகன மன்னர் வீரத்தைப் பற்றியும் துணிவைப் பற்றியும் நான் ஏற்கனவே கேள்விப்பட்டிருக் கிறேன். அவர் புத்திக் கூர்மையைப் பற்றியும் கதைகள் பல உலாவுகின்றன மகாராஷ்டிரத்தில். அந்தக் கதைகள் பொய்யல்லவென்பதை இன்று நானே கண்டேன்” என்று கௌதமிபுத்ரனை சிலாகித்தான்.

“சாதவாகனர் ஆண்டுவந்த மகாராஷ்டிரத்தையும், வடக்குப் பகுதிகளையும் விழுங்கிய நாகபாணர் வீரமும் குறைந்ததல்லவே” என்று பதிலுக்குச் சிலாகித்தான் கௌதமிபுத்ரன்.

ஏதோ நெடுநாள் கழித்துப் புதிதாக சந்தித்த இரு நண்பர்கள் குசலப் பிரச்னம் செய்து கொள்வதுபோல் பேசிக் கொண்டு நின்ற இருவரையும் பார்த்து எரிச்சல் கொண்ட ராட்சத க்ஷத்ரபன் கைகள் நடுங்கிய நிலையிலேயே, “இங்கு நடந்ததை மகாக்ஷத்ரபர் கவனிக்கவில்லை போலிருக்கிறது?” என்று கூறினான் குரலில் எரிச்சலைக் காட்டி.

இதைக்கேட்ட நாகபாணன் இன்னுமிரண்டு படிகள் இறங்கி க்ஷத்ரபன் தோளில் கையை ஆதரவுடன் வைத்து, “தம்பீ! நீ செய்தது தவறு. காரணமில்லாமல் ஒரு மகாவீரனைக் கொல்ல முயன்றது தவறு. அதுவும் சண்டிகா தேவியின் சந்நிதானத்தில் கொலை போன்ற மகாபாதகச் செயலைச் செய்யத் துணிந்தது மிகவும் பாவம்” என்று கூறி இன்முறுவல் கொண்டான். அவன் சொற்களில் இகழ்ச்சி நன்றாகவே ஒலித்தது.

அந்த இகழ்ச்சியின் சாயையைக்ஷத்ரபனும் கவனித்திருக்க வேண்டும். “அண்ணா! நமது குலவைரிக்கு சாதகமாகப் பேசுகிறீர்கள்…” என்ற வார்த்தையை முடிக்காவிட்டாலும் சினம் சொற்களில் நன்றாகவே தெரிந்தது.

“தம்பீ! அவரும் நம்மை அப்படித்தான் நினைக்கிறார். வைரிகளாயிருப்பதால் தவறில்லை. வைரியிடமும் நிதானத்துடனும் தர்மத்துடனும் நடந்து கொள்ளவும் மனப்பாங்கு நமக்கு வேண்டும்” என்று உபதேசித்தான் நாகபாணன்.

“அப்படியானால் இவனைச் சீராட்டட்டுமா?” என்று தம்பி வினவினான்.

“இப்பொழுது உன்னால் முடியாது. உன் கை நடுக்கம் இன்னும் விடவில்லை” என்று நாகபாணன் மேலும் சில படிகள் இறங்கி வந்து தம்பியின் உடலைச்சுற்றித் தனது ஒரு கையால் வளைத்து ஆடிய கையில் ஏதோ ஒரு பகுதியை அழுத்த கையாட்டம் நின்றது. அதை நிறுத்திய நாகபாணன் எதிரே சற்று எட்ட நின்றிருந்த கௌதமிபுத்ரனை நோக்கி, “தம்பிக்கு மல்யுத்தத்தின் நரம்பு சாஸ்திரம் தெரியாது” என்று தம்பியின் அறியாமைக்கு மன்னிப்பு கேட்கும் பாவனையில் பேசினான் மகாக்ஷத்ரபனான நாகபாணன்.

அவனுக்கு நேரிடையாகப் பதில் சொல்லவில்லை கௌதமிபுத்ரன். “பழமொழி சற்று மாறியிருக்கிறது. தங்கள் குடும்பத்தில்” என்று கூறினான்.

“பழமொழியா! மாறுதலா!” என்று வினவினான் நாகபாணன்.

“ஆம்… மகாராஜா! தம்பியுள்ளான் படைக்கஞ்சான் என்பது பழமொழி. தங்கள் குடும்பத்தில் அது மாறியிருக்கிறது. அண்ணனுள்ளான் என்ற சொல் பொருத்தமாயிருக்கும்” என்ற கௌதமிபுத்ரன், “தாங்கள் இங்கு வந்தது இந்த ஏழையைச் சந்திப்பதற்காக மட்டும் இருக்காதென்று நினைக்கிறேன்” என்று சொல்லி முறுவல் கொண்டான்.

இதைக் கேட்ட நாகபாணன் எதிரியின் முறுவலைக் கண்டு சீற்றம் கொள்ளவில்லை சிறிதளவும். “தவறு சாதவாகனா! உன்னைக் காணவே இங்கு வந்தேன். நீ இங்கு வரப் புறப் பட்ட அன்றே எனக்குச் செய்தி வந்தது. ஸஹ்யாத்ரிக்கு மேற்குப் புறமிருக்கும் கொங்கணிக்கும் கீழ்ப்புறமிருக்கும் பிரதிஷ்டானாதலைநகருக்கும் இடையே நிற்பது ஒரு மலை. அதன் மறுபுறமிருப்பதை, அதன் நிலவரத்தை அறியாத மன்னர் நாடு எத்தனை நாள் நிலைக்கும். தவிர மகாவீரனென்றும் எதையும் சாதிக்கும் திறனுள்ளவனென்றும் பெயர்பெற்ற கௌதமிபுத்ரன் தெற்கு நோக்கிப் புறப்பட்டா னென்றால் காரணத்தை ஊகிப்பது ஒரு பிரமாதமான காரியமல்ல” என்று தனது ஊகத்தைச் சர்வசாதாரணமாக விளக்கினான்.

அதற்குமேல் விவாதிக்க இஷ்டப்படாத நாகபாணன், “சாதவாகன மகாராஜாவை சகல மரியாதைகளுடன் எங்கள் இருப்பிடத்திற்கு அழைத்துச்செல்ல இஷ்டப்படுகிறேன். உங்களை அழைத்துவர தம்பி மகள் இருக்கிறாள்” என்று கூறிய நாகபாணன், “சித்தரஞ்சனி! சாதவாகன மகாராஜாவை நமது இருப்பிடத்திற்கு அழைத்து வருவது உனது பொறுப்பு” என்று சொல்லிச் சட்டென்று திரும்பி மீண்டும் படிகளில் ஏறலானான். அவன் அப்படி கௌதமி புத்ரனை சுதந்திரமாக விட்டுச் செல்வதைக் கண்ட க்ஷத்ரபன், “அண்ணா ! இவனுடன் என் பெண்ணைத்தனியாகவா விட்டுவரச் சொல்கிறீர்கள்?” என்று கூவினான்.

நாகபாணன் மேல்படியிலிருந்து சற்றே தலையைத் திருப்பித் தம்பியை நோக்கினான். “தம்பி! உன்னைக் கொண்டு கௌதமிபுத்ரனை எடை போடாதே. அவன் முறை தவறாதவன், ஒழுக்கத்தின் இலக்கணம் என்று பெயரெடுத்திருக்கிறான். பேசாமல் வா” என்று சற்று கடுமையுடன் கூறிவிட்டுப்படிகளில் ஏறிச்சென்றுவிட்டான்.

க்ஷத்ரபன் சில நிமிடங்கள் சிந்தனை வசப்பட்டு அண்ணனைத் தொடராமலே நின்றான். பிறகு தன்னைத் தானே சமாதானப்படுத்திக்கொள்பவன் போல் தலையை அசைத்துவிட்டுத் தனது ராட்சத விழிகளை கௌதமிபுத்ரன் மீது திருப்பி, “சாதவாகனா! என் பெண்ணுக்கு ஏதாவது தீமை நேர்ந்தால் உன்னைக் கண்டதுண்டமாக வெட்டி அஞ்சன்வேல் நதியின் முதலைகளுக்குப் போட்டு விடுவேன்” என்று எச்சரித்துவிட்டுப் படிகளில் ஏற முற்பட்டான்.

அவனை நோக்கிய கௌதமிபுத்ரன், “உங்கள் மகளை நீங்கள் அழைத்துப் போவதை நான் தடுக்கவில்லை” என்று சொன்னான்.

க்ஷத்ரபன் தனது மகளைத் திரும்பிப் பார்த்தான். பிறகு ஏதும் பேசாமல் படிகளில் ஏறிச்சென்றுவிட்டான்.

தனிமையில் விடப்பட்ட சித்தரஞ்சனியும் கௌதமி புத்ரனும் ஒருவரையொருவர் சில நிமிடங்கள் பார்த்துக் கொண்டே நின்றார்கள். அந்த வாலிபனின் அழகும் வீரமும் கலந்த வதனத்தையும் நீண்ட கைகளையும், விசால மார்பையும், நின்ற தோரணையில் இருந்த கம்பீரத்தையும் நன்றாகப் பார்த்தாள் சித்தரஞ்சனி. பிறகு துன்பப்பெருமூச்சு விட்டாள்.

குகையில் அதுவரை நடந்த நிகழ்ச்சிகள் பலவற்றுக்குக் காரணம் புரியவில்லை கௌதமிபுத்ரனுக்கு. எந்த சித்தரஞ்சனியை நெருங்கியதற்காகத் தன்னை க்ஷத்ரபன் கொல்ல முயன்றானோ அதே சித்தரஞ்சனியை அண்ணன் உத்தரவால் தன்னிடம் எப்படி ஒப்படைத்துப் போகத்தம்பி ஒப்புக்கொண்டான் என்று சிந்தித்தான் அந்த வாலிபன். தவிர எந்த தைரியத்தைக் கொண்டு தன்னை அழைத்துவரச் சொல்லி நாகபாணன் சித்தரஞ்சனிக்கு உத்தரவிட்டான் என்றும் எண்ணிப் பார்த்தான். தான் போக மறுத்தால் அபலையான சித்தரஞ்சனி என்ன செய்யமுடியும் என்றும் சிந்தையை ஓட்டிப் பார்த்தான். இதில் தன் சிந்தனைக்கும் எட்டாத ஏதோ மர்மம் இருப்பதைப் புரிந்து கொண்டாலும் அதைப்பற்றி திட்டமாகத் தெரியாததால் சித்தரஞ்சனியை விசாரிக்கலாமென்று அவளை நோக்கினான்.

சித்தரஞ்சனி தலைகுனிந்து நின்று கொண்டிருந்தாள். சண்டிகாதேவியின் முன்பு அவள் ஏற்றிவைத்த விளக்கு வெளிச்சத்தில் அவள் வெள்ளைத் துகில் பெரிதும் பளபளக்க ஏதோ தெய்வ மங்கைபோல அவள் விளங்கினாள். நல்ல வெண்மை பெற்ற அவள் சங்குக் கழுத்தின் மீது விளக்கின் பொன்னிற ஜோதி விழுந்ததால் அந்தக் கழுத்து பழுப்பு தந்தத்தைப் போல சிறிது நிறம் மாறியிருந்தது. அவள் ஆடை மிக மெல்லியதாயிருந்ததால் அது தந்த அவள் மேனியின் விளக்கம் கௌதமிபுத்ரன் சித்தத்தை அள்ளிச் சென்றது. தலைகுனிந்து நின்றதால் அவள் மேலாடை இடைவெளி கொடுத்ததன் விளைவாக உட்புறம் சிறிய கச்சையை மீறி நின்ற அழகிய மார்பு முகடுகள் அவனைப் பைத்தியமாக அடித்துவிடும் போலிருந்தன. சிற்றிடையில் இறுகக் கட்டியிருந்த ஆடையால் சற்றே கன்னிக் காணப்பட்ட சருமப்பகுதி அந்த வாலிபன் அனுதாபத்தைக் கிளறியதா அல்லது ஆசையைக் கிளறியதா என்று புரியாத ஒரு நிலையை அடைந்தான் கௌதமிபுத்ரன். இத்தனைக்கும் அவள் கால்களில் புகுந்த சேலை கால்களின் திண்ணிய பரிமாணத்தை எடுத்துக்காட்டவே செய்ததால் அவன் மனம் கலங்கி மெள்ள அவளை அணுகி “பெண்ணே !” என்று மெதுவாக அழைத்தான்.

அப்பொழுதும் அவள் அவனை தலைநிமிர்ந்து பார்க்க வில்லை. அவன் அவளை அணுகி அவள் சிற்றிடையில் ஒரு கையை வைத்த போதும் சிலையென நின்றாள். அவன் இன்னொரு கையால் அவள் தலையை மெதுவாகத் தூக்கி அவள் கண்களை நோக்கினான். அவள் கண்களில் அச்சம் நிரம்பியிருந்தது. அவள் செம்பருத்தி இதழ்கள் லேசாகத் துடித்தன. அடுத்த விநாடி அவள் திடீரென செயல்பட்டாள். அவள் கைகள் எழுந்து அவன் கழுத்தை இறுக்கி கீழ்நோக்கி இழுத்தன. அவள் இதழ்களுடன் இழைந்தன. பிறகு அவை சிறிது பின்வாங்க, “எனக்கு ஒரு உதவி செய்வீர்களா?” என்று அவள் இதழ்களை அசைத்துக்கேட்டாள்.

“என்ன உதவி?”

“எதுவாயிருந்தாலும் செய்யவேண்டும்.”

“சரி சொல்.”

“உங்கள் வாளின்மீது ஆணையிடுங்கள்.”

“என் சொல்லே ஆணைதான்”

அவள் சிறிது மௌனம் சாதித்து, பிறகு மிக மெதுவாகச் சொன்னாள். “கௌதமிபுத்ர! என்னை இப்பொழுதே இந்த சந்நிதியிலேயே சண்டிகாதேவி முன்பு திருமணம் செய்து கொள். மறுக்காதே” என்றாள்.

இப்படி ஒரு திருப்பம் ஏற்படுமென்பதை சொப்பனத் திலும் நினைக்காத கௌதமிபுத்ரன் சித்தரஞ்சனியின் பூவுடலை அப்படியே தனது கைகளில் வாரி எடுத்துக் கொண்டான்.

“குகை வாயிலை மூடிவிட்டு வாருங்கள்” என்று அவள் தனது கன்னத்தை அவன் கன்னத்துடன் இழைத்து காதுக்கருகில் செய்தி சொன்னாள்.

அப்படி அவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே குகைவாயில் சிறிதும் சத்தமின்றித் தானாகவே மூடிக் கொண்டது.

Previous articleChittaranjani Ch7 | Chittaranjani Sandilyan | TamilNovel.in
Next articleChittaranjani Ch9 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here