Home Chittaranjani Chittaranjani Ch9 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

Chittaranjani Ch9 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

70
0
Chittaranjani Ch9 Chittaranjani Sandilyan, Chittaranjani Online Free, Chittaranjani PDF, Download Chittaranjani novel, Chittaranjani book, Chittaranjani free, Chittaranjani,Chittaranjani story in tamil,Chittaranjani story,Chittaranjani novel in tamil,Chittaranjani novel,Chittaranjani book,Chittaranjani book review,சித்தரஞ்சனி,சித்தரஞ்சனி கதை,Chittaranjani tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Chittaranjani ,Chittaranjani ,Chittaranjani ,Chittaranjani full story,Chittaranjani novel full story,Chittaranjani audiobook,Chittaranjani audio book,Chittaranjani full audiobook,Chittaranjani full audio book,
Chittaranjani Ch9 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

Chittaranjani Ch9 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

சித்தரஞ்சனி – சாண்டில்யன்

அத்தியாயம் – 9 புதிதாக வந்த மரக்கலம்

Chittaranjani Ch9 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

மகாக்ஷத்ரபனும் மகாராஷ்டிரத்தையே ஆக்ரமித்துத் தனது ஆட்சிக்குள் கொண்டு வந்து விட்டவனும் மகாவீரனென்று பெயர் பெற்றவனுமான நாகபாணன், தன்னை அழைத்து வரும் பொறுப்பைச்சித்தரஞ்சனியிடம் ஒப்படைத்துவிட்டுத் தம்பியுடன் சென்றுவிட்டதையும், அதற்குப் பிறகு, குகைக்குள் அடியோடு மாறிவிட்ட நிலையையும் எண்ணிப் பார்த்த கௌதமிபுத்ரன் பல விஷயங்களுக்கு விடை காணாமல் தவித்தான். சித்தரஞ்சனியின் இதழ்கள் தனது இதழ்களுடன் இணைந்துவிட்ட பிறகும் தன்னை மணக்கும்படி அவள் வெளியிட்ட கோரிக்கைக்குப் பிறகும், குகையின் சம்பவங்கள் இயற்கைக்கு முற்றும் மாறாயிருப்பதை எண்ணிப் பார்த்த கௌதமிபுத்ரன் சிறிது குழப்பத்திலேயே இருந்தான். சித்தரஞ்சனி குகை வாயிலை மூடிவிட்டு வரும்படி தன்னைக் கேட்டுக்கொண்டதையும் அவள் எண்ணத்திற்கு இசைவது போல் குகைவாயிலும் சத்தம் போடாமல் மூடிக்கொண்டதையும் கவனித்த சாதவாகனன் குகை தானாக மூடிக்கொள்ளவில்லை யென்பதையும் யாரோ வேண்டுமென்றே மூடியிருக்க வேண்டுமென்பதையும் சந்தேகமறப் புரிந்து கொண்டான். அப்படி யாராவது மூடியிருந்தால் அது யாராயிருக்கும் என்ற சிந்தனையிலும் இறங்கிச் சித்தரஞ்சனியைத் தழுவிய கைகளை அகற்றாமலே “சித்தரஞ்சனி, குகை வாயிலை இங்கிருந்தே மூட விசை ஏதாவது இருக்கிறதா?” என்று வினவினான், அவள் கழுத்தில் தனது உதடுகளைப் புதைத்த வண்ணம்.

அவன் உதடுகள் புதைந்ததால், உணர்ச்சிக்குப் பெரிதும் இலக்கான சித்தரஞ்சனி தனது அழகிய மெல்லிய கழுத்தை லேசாகத் திருப்பினாள். பெருமூச்சு விட்டு அவன் கைகளில் அதிகமாக நெருங்கினாள். அந்தப் பூவுடலை லேசாகத் திருப்பி அவள் முதுகுப் பகுதியைத் தன்மீது சாய்த்துக் கொண்ட கௌதமிபுத்ரன் தனது கைகளை அவள் தோள்மீது தவழச் செய்து முன்புறத்தில் தொங்கவிட்டுக் கொண்டான். முன்புறத்தில் துளைந்த அவன்கைகளிலிருந்தோ பின்புறத்தில் அதிகமாக நெருங்கிய அவன் திடமான தேகத்திலிருந்தோ விடுபட எந்த விதமான முயற்சியையும் எடுக்காத சித்தரஞ்சனி, எதிரே தன்னைப் பார்த்துக்கொண்டிருந்த சண்டிகாதேவியின் முகத்தைப் பார்த்த வண்ணம், “குகையை மூட இங்கு ஏதும் விசைகிடையாது” என்று மிக மெதுவாகச் சொன்னாள்.

அப்படி அவள் பதில் சொன்னபோது அவள் தேகம் நடுங்கியதால் அதைச் சற்றுத் தனது உடலுடன் அழுத்திப்பிடித்த சாதவாகனன், “அப்படியானால் யாரோ அதை மூடியிருக்க வேண்டும்” என்று அவள் காதுக்கருகில் சொன்னான்.

உணர்ச்சியின் சுழற்சியில் சிக்கியிருந்த சித்தரஞ்சனி தனது மார்புமீது தவழ்ந்து கொண்டிருந்த அவன் கைகளைத் தனது கைகளால் பற்றி அழுத்தியவண்ணம், “ஆம்” என்றாள் மிக மெதுவாக.

அவன் தனது கன்னத்தை அவள் கன்னத்தோடு இழைத்துக் கொண்டே, “மூடியது உன் தந்தையாயிருக்குமா அல்லது உங்கள் வீரர்கள் யாராவதாயிருக்குமா?” என்று வினவினான்.

“என்னைச் சேர்ந்தவர்கள் யாரும் இதைச் செய்யத்துணிய மாட்டார்கள்” என்றாள் அந்தச் சித்தினி.

“ஏன் அப்படித்திட்டமாகச் சொல்கிறாய்?” என்று கேட்ட கௌதமிபுத்ரன் தனது கைகளை அவள் மார்பிலிருந்து நீக்கி அவளைப் பிடித்துத் தன்னை நோக்கித்திருப்பி அவள் விழிகளை நோக்கினான்.

அவள் கண்கள் மூடிக்கிடந்தன. நேராகத் திருப்பப்பட்ட தாலும் அவன் கைகளால் இறுக்கப்பட்டதாலும் அவன் மார்புடன் அழுந்திய அவள் மார்பு மிகவும் கெட்டிப்பட்டது. அவள் கால்கள் அவன் கால்களுடன் அழுந்தி இழைந்தன. அவள் மூச்சு பெருமூச்சாக வந்து உதடுகள் லேசாகத் துடித்தன. அவளை வளைத்திருந்த கைகளில் ஒன்றை முன்புறமாகக் கொண்டு வந்த கௌதமிபுத்ரன் அவள் முகவாய்க் கட்டையைச் சிறிது கையால் தூக்கிவிட்டுச்சற்றே குனிந்து அவள் பங்கயக் கண்களைத் தனது உதடுகளால் தீண்டினான். பிறகு சற்று மீண்டு அந்தக்கண்களைத் தனது கைவிரல்களால் பிரிக்க முயன்றான். “கண்களை விழித்துப்பார் சித்தரஞ்சனி” என்று சொல்லவும் செய்தான் அந்த வாலிபன்.

“ஊஹூம்!” முடியாது என்பதற்கு அடையாளமாக அந்த மறுப்பு ஒலியை எழுப்பினாள் அந்தப் பைங்கிளி.

“ஏன் சித்தரஞ்சனி! என்னைப் பார்க்க இஷ்டமில்லையா?” முணுமுணுத்தான் அந்த வாலிபன்.

“இஷ்டமில்லாமலா இப்படி…” கண்களை மூடிய படியே அவள் பேசினாள்.

அதற்குமேல் கௌதமிபுத்ரன் அவளைத் தனது இருகை களிலும் அனாயாசமாகத் தூக்கிக்கொண்டு போய்க்கடைசிப் படியில் உட்கார்ந்து அவளை மடியில் கிடத்திய வண்ணம் அவளை உற்று நோக்கினான் சில விநாடிகள். கர்ப்பக் கிரகத்தின் விளக்கின் பொன் ஒளியில் அவள் மார்பு எழுந்து எழுந்து தாழ்ந்துகொண்டிருந்தது. இரண்டு தாமரை மொட்டுக்கள் காற்றால் சலனப்பட்ட நீரின் அலைகளால் தூக்கித் தூக்கி அமிழ்த்தப்பட்டது போன்ற பிரமையை விளைவித்தது. மூடியிருந்த அவள் கண்களின் இரப்பைகள் சமுத்திரக் கிளிஞ்சல்கள் இரண்டு மலர் இதழ்களாக மாறிவிட்டது போன்ற நிலையை சிருஷ்டித்தன. அவள் செவ்விய அதரங்கள் ஏதோ சொல்ல முற்பட்டு அசைந்து மூடிக்கொண்டனவே தவிர சொற்கள் ஏதும் வெளிவர வில்லை. தன் மடியில் புஷ்பக் கொடிபோல் சக்தியை அடியோடு இழந்தவளாய் பலவீனப்பட்ட வளாய்க் கிடந்த சித்தரஞ்சனியை மெள்ள எழுப்ப முற்பட்ட சாதவாகனன் அவள் உடலை அசைத்து, “சித்தரஞ்சனி! கண்களைத் திறந்து பார். நாம் பேச வேண்டியது இருக்கிறது. துரிதமாகச் செயல்பட வேண்டியதும் இருக்கிறது” என்று கூற அவள் மெதுவாகக் கண்களைத் திறந்தாள். சாதவாகனனின் காந்தக் கண்கள் அவள் விழிகளைக் கவர்ந்து நின்றன. அந்தச் சில நிமிடங்களில் சுயஉணர்வை வரவழைத்துக் கொண்ட கௌதமிபுத்ரன், “சித்தரஞ்சனி! துரிதமாக விளைந்து விட்ட பல நிகழ்ச்சிகளுக்கு எனக்குக் காரணம் புரியவில்லை . நீதான் விளக்கவேண்டும்” என்றவன், “நான் இங்கு வரப்போவதை நீ முன்பாகவே ஊகித்திருக்கவேண்டும்” என்று சொன்னான்.

அவன் விழிகளிடமிருந்து தனது விழிகளை நீக்காமலே அவள் பதில் சொன்னாள், “ஆம் ஊகித்தேன்” என்று.

“என்னை ஓடிவிடும்படி செய்தி எழுதியிருந்தாய்.”

“ஆம்…ஆனால்…”

“சொல்…”

“நீங்கள் ஓடமாட்டீர்களென்பது எனக்குத் தெரியும்….”

“இங்கு வருவேனென்பதும் தெரியுமா?”

“தெரியும்”

“உன் தந்தையும் நாகபாணனும் வருவதும் தெரியுமா?”

“தெரியாது. நாகபாணர் இங்கு வந்தது நான் முற்றும் எதிர்பாராத நிகழ்ச்சி.”

“உன் தந்தை…” என்று ஏதோ பேசத் துவங்கிய சாதவாகனனைச் சற்றுத் துரிதமாகவே இடைமறித்த சித்தரஞ்சனி, “அவர் என் தந்தையல்ல” என்று ஒரு வெடியை எடுத்து வீசினாள்.

கௌதமிபுத்ரனுக்கு இது ஒருபுதிய கதையாயிருக்கவே அவன் தனது மடியிலிருந்த சித்தரஞ்சனியைத் தூக்கிப் பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டு, “க்ஷத்ரபன் உன்னை மகளென்று அழைத்தானே?” என்று வினவினான்.

பக்கத்தில் உட்கார்ந்த சித்தரஞ்சனி தனது தலையைச் சாதவாகனன் தோள் மீது சாய்ந்துக்கொண்டு, “வளர்த்தது அவர்தான்” என்றாள்.

“பெற்றது?”

“யாரோ தெரியாது!”

“எங்கிருந்து உன்னை எடுத்து வந்தார்?”

“சிந்து நதிக்கரையில் ஒரு மரத்தடியில் நான் கிடந்ததாகச் சொன்னார்.”

இதைக்கேட்ட கௌதமிபுத்ரன் நீண்ட நேரம் சிந்தனையில் ஆழ்ந்தான். ”உன்னை அவன் அன்று கடற்கரையில் அறைந்ததற்குக் காரணம் புரிந்தது. சொந்த மகளை எந்தத் தந்தையும் அப்படி அடிக்கமாட்டான்” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்ட சாதவாகனன், “உன்னை மணம் புரிந்துகொள்ளும்படிக் கேட்டாயே…” என்று சொற்களைச் சிறிது நீட்டினான்.

“கேட்டேன்.”

“முன்பின் தெரியாதவனை எப்படித்திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டாய்.”

“நீங்கள் முன்பின் தெரியாதவரல்ல. உங்களைப்பற்றிச் சாகர்கள் வட்டாரங்களில் சதா பேசப்படுகிறது. தவிர இங்கேயே உங்களைப் பலமுறை பார்த்துவிட்டேன்.”

“அது போதுமா திருமணத்திற்கு?”

“போதும் தவிர…”

“சொல் உண்மைக் காரணத்தை.”

“எனக்குக் கணவனாக நீங்கள் என்னுடன் வந்தால் உங்களை என் தந்தையோ மகாக்ஷத்ரபரோ எதுவும் செய்ய முடியாது. க்ஷத்ரபர் மருமகனைத்தொடக்கூட யாரும் துணியமாட்டார்கள்” என்றாள் சித்தரஞ்சனி.

சற்றுச் சிந்தித்த சாதவாகனன் லேசாக நகைத்து, “என் உயிரைக் காப்பாற்ற என்னை மணம் செய்துகொள்ள நினைக்கிறாயா?” என்று வினவினான் நகைப்பின் ஊடே.

“அதுவும் ஒரு காரணம். ஆனால் அது மட்டும் காரண மில்லை, சந்தேகமிருந்தால் என் இதயத்தைக் கேளுங்கள்” என்று கூறிய சித்தரஞ்சனி அவன் வலது கையை எடுத்துத் தனது மார்புமீது வைத்துக்கொண்டாள். அப்படி அவன் கையைக் கொண்டுவந்த சமயத்தில் அவள் மேலாடையும் உள் கச்சையும் சரிந்து கிடந்ததால் அவன் கை அவள் திண்ணிய வழுவழுத்த சருமத்திலேயே பதிந்ததால் அவன் சற்று நிலைகுலைந்தாலும் சட்டென்று நிதானத்துக்கு வந்து, “உன் இதயம் கைக்குச்சேதி சொல்ல முடியாது” என்றான். இருப்பினும் பதிந்த கையை எடுக்காமலே, “சிந்தரஞ்சனி! உன்னை அழைத்து வருவதாக என் தாயிடமே சபதம் செய்துவிட்டு வந்திருக்கிறேன். ஆகவே திருமணத்திற்கு அதிக தடையிருக்காது. ஆனால் கௌதமிபுத்ரன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளத் திருமணம் செய்து கொண்டான் என்ற அவப்பெயர் கூடாது” என்று சொன்னவன், “சரி வா, போவோம்” என்று அவள் கையைப்பற்றி அழைத்தான்.

“எங்கே?” திகிலுடன் கேட்டாள் சித்தரஞ்சனி.

“நீ அழைத்துச் செல்லுமிடத்திற்கு” என்றான் கௌதமி புத்ரன்.

“நான் எங்கு அழைத்துச் செல்லவேண்டும்?” சற்று குழப்ப மிருந்தது அவள் குரலில்.

“என்னை எங்கு அழைத்து வரும்படி மகாக்ஷத்ரபர் உத்தரவிட்டிருக்கிறாரோ அவ்விடத்திற்கு” என்றான் கௌதமிபுத்ரன்.

“அங்கு அபாயம் காத்திருக்கிறது உங்களுக்கு” என்றாள் சித்தரஞ்சனி.

“அதைப்பற்றிக் கவலைப்படாதே” என்று கூறிய கௌதமி புத்ரன் அவள் கையைப் பற்றி அழைத்துக்கொண்டு சண்டிகா தேவி முன்பு அவளை மண்டியிடச் சொல்லித்தானும் மண்டி யிட்டு வணங்கினான். அப்படி மண்டியிட்ட வண்ணம், “தாயே சண்டிகே! இந்தப் பெண்ணை நீதான் காப்பாற்ற வேண்டும். பெரிய ஆபத்தில் இருக்கிறாள்” என்று சற்றே இரைந்தே பிரார்த்தனை செய்தான்.

அந்தப் பிரார்த்தனைக்குக் காரணம் அவளுக்குப் புரிய வில்லை. தனக்கு ஆபத்து ஏற்படக்காரணம் ஏதுமில்லை என்பது அவளுக்குத் தெரிந்தே இருந்ததால் அவளுக்கு அவன் பிரார்த்தனை செய்ததே பெருவியப்பைத் தந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. சண்டியை வணங்கிய நிலையிலிருந்து அவன் எழுந்ததும் அவளும் எழுந்தாள். அவன் படிகளில் ஏறிச்சென்றபோது அவளும் ஏறிச் சென்றாள். குகை வாயிலை மூடியிருந்த பாறைக்கு வந்ததும் கௌதமிபுத்ரன் தனது கச்சையிலிருந்த கட்டாரியை எடுத்து இருமுறை பாறைமீது தட்டினான். அடுத்து அந்தப்பாறை மெதுவாக நகர்ந்து சந்திரவெளிச்சம் உள்ளே புகுந்தது. அந்த ஒளி வீச்சு உடலைத்தழுவ வெளியே வந்த கௌதமிபுத்ரன் சித்தரஞ்சனியையும் கை கொடுத்து மேலே தூக்கிவிட்டான்.

வெளியே வந்ததும் குகை வாயிலை மூடிவிட்ட சாதவாகனன், “சித்தரஞ்சனி! நீ முன்னால் போ. அஞ்சன் மேல் நதியின் முகத்துவாரக் கரையில் படகு ஒன்று நின்றிருக்கும். அதில் ஏறிக்கொள். அந்தப் படகு செல்லுமிடத்திற்குப் போ. நீ மகாக்ஷத்ரபரைச் சந்தித்ததும் அவரை நான் மரக்கலத்தில் சந்திப்பதாகச் சொல்” என்றான்.

“மரக்கலமா?” வியப்படைந்தாள் சித்தரஞ்சனி.

அவளைக் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு நல்ல பாறையின் உச்சிக்குச்சென்று, “இப்பொழுது கடலைப்பார்” என்றான் கௌதமிபுத்ரன்.

சித்தரஞ்சனி கடலை நோக்கினாள். அதில் பெரிய மரக்கலம் ஒன்று அலைகளில் அசைந்து கொண்டிருந்தது. அதைக்கண்டு பிரமித்த சித்தரஞ்சனி, “எனக்கு ஏதும் புரியவில்லை ” என்றாள்.

இதைக்கேட்ட கௌதமிபுத்ரன் லேசாக நகைத்தான். “எனக்குப் புரிகிறது” என்று நகைப்பின் ஊடே சொல்லி விட்டு, “நீ செல் சித்தரஞ்சனி! நான் உன்னை வெகுசீக்கிரம் சந்திக்கிறேன்” என்று கூறினான்.

அவள் மெதுவாக நடந்து சென்றாள். அவள் போவதைப் பார்த்துக் கொண்டிருந்த கௌதமிபுத்ரன், “பாவம் அபலை! பெரிய சூழ்ச்சிக்காரர்கள் கைப்பாவையாகிவிட்டாள்” என்று உள்ளூர வருந்தினான். அடுத்து பக்கத்திலிருந்த புதரை அணுகி, “பூஜாரி! வெளியே வாரும்” என்றான்.

நடுங்கிக்கொண்டே வெளியே வந்த பூஜாரியிடம் ஏதோ ரகசியம் சொன்னான். பூஜாரி புரிந்ததற்கு அறிகுறியாகத் தலையை அசைத்தான். பிறகு தனது கிராமத்துக்குச் செல்லும் பாதையில் விரைந்தான். அவன் செல்வதைப் பார்த்துக் கொண்டு சில விநாடிகள் நின்ற கௌதமிபுத்ரன் வெகு வேகமாகக் கடற்கரையின் முகப்பிலிருந்த பாறைகளை அடைந்தான். அவன் கண்ணெதிரே எழுந்த நிகழ்ச்சியால் அவன் வியப்படையவில்லை. சித்தரஞ்சனி இரு வீரர்களுக் கிடையில் சிக்கிக்கிடந்தாள். அவளை ஏற்றிக்கொண்ட படகு அஞ்சன் வேலை நோக்கி விரையவில்லை. கடலில் ஆடி நின்ற மரக்கலத்தை நோக்கி விரைந்தது.

Previous articleChittaranjani Ch8 | Chittaranjani Sandilyan | TamilNovel.in
Next articleChittaranjani Ch10 | Chittaranjani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here