Home Ilaya Rani Ilaya Rani Ch1 | Ilaya Rani Sandilyan | TamilNovel.in

Ilaya Rani Ch1 | Ilaya Rani Sandilyan | TamilNovel.in

86
0
Ilaya Rani Ch1 Ilaya Rani Sandilyan, Ilaya Rani Online Free, Ilaya Rani PDF, Download Ilaya Rani novel, Ilaya Rani book, Ilaya Rani free, Ilaya Rani,Ilaya Rani story in tamil,Ilaya Rani story,Ilaya Rani novel in tamil,Ilaya Rani novel,Ilaya Rani book,Ilaya Rani book review,இளையராணி ,இளையராணி கதை,Ilaya Rani tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Ilaya Rani ,Ilaya Rani ,Ilaya Rani ,Ilaya Rani full story,Ilaya Rani novel full story,Ilaya Rani audiobook,Ilaya Rani audio book,Ilaya Rani full audiobook,Ilaya Rani full audio book,
Ilaya Rani Ch1 | Ilaya Rani Sandilyan | TamilNovel.in

Ilaya Rani Ch1 | Ilaya Rani Sandilyan | TamilNovel.in

இளையராணி – சாண்டில்யன்

அத்தியாயம் – 1 கமலாதேவி

Ilaya Rani Ch1 | Ilaya Rani Sandilyan | TamilNovel.in

அாசன் பெயர் ஜெயசிம்மன். சேனாதிபதியின் பெயர் ஜெயபாலன். இருவரும் ஆயுள் முழுவதும் தோல்வியைத் தவிர வேறெதையும் கண்டதில்லை. மொகலாயர்களின், கையாட்களாகவே காலங் கழித்து விட்டார்கள்.

இருவரும் பலமுறை போருக்குச் சென்றிருக்கிறார்கள். ராஜபுதனத்தின் கௌரவத்தைக் காப்பாற்றவோ, இருபத்தைந்து வருஷங்களுக்கு மேல் மொகலாய சாம்ராஜ்யத்தின் அஸ்திவாரத்தை உலுக்கி அக்பரையே கலங்கச் செய்து விட்ட பிரதாபசிம்மன் குல மானத்தைக் காக்கவோ இவர்கள் போருக்குச் செல்லவில்லை. யாரிடம் கைகட்டிச் சேவகம் செய்தார்களோ அந்த எஜமானர்களின் கட்டளைப்படி யுத்த பூமியில் இரத்தம் சிந்தினார்கள். ஆளும் சக்தி “கொண்டா ஆட்களை” என்றதும் சைன்னியங்களைத் திரட்டி அனுப்புவதும், அதற்காகச் சக்கரவர்த்தி முதுகில் தட்டிக் கொடுத்து, ‘சபாஷ்’ என்றால் சந்தோஷத்தால் நிலைகுலைந்து போவதும், டில்லியிலிருந்து வரும் கௌரவப் பட்டங்களைச் சூட்டிக் கொண்டு பவனி வருவதும், இந்திய மன்னர்களுக்கு அக்பர் காலம் முதலே ஏற்பட்டுவிட்ட குணாதிசயங்கள்!

இப்படி அடிமைத்தனத்திலேயே காலங்கழித்து விட்டவர்களுக்குத் தைரியம் உடம்பில் தங்கி இருப்பது துர்லபமல்லவா? எதிரிகளிடமிருந்து குடிகளின் சொத்தையும் பெண்டு பிள்ளைகளின் உயிரையும், அதையும் விட முக்கியமான மானத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று கத்தியை உருவும் வீரன் உடலில் வீரம் பெருகுமா அல்லது இன்றைக்கு ஜெயத்துடன் திரும்பா விடில் நாளைக்கு நவாப் தலையைச் சீவி விடுவாரே என்ற பயத்தில், உயிர் எந்த இடத்தில் போனால் என்ன என்று காவு ஆடுபோல யுத்த பூமிக்குச் செல்லும் மனிதன் இரத்தத்தில் சூரத்தனம் சொட்டுமா? ஆகையால் பயமே நிரம்பியது ஜெயசிம்மன், ஜெயபாலன் இருவர் வாழ்க்கையிலும். ராஜசேவையில் மட்டுமின்றி சாஜகிருதத்திலும் இவர்கள் பயங்கொள்ளிகளாய் வாழ்க்கையை நடத்தி வந்தார்கள். ஆகவே நமது கதை தொடங்கும் சமயத்தில் ராஜ துர்க்கத்தின் கதவுகள் சரேலெனத் திறந்து இளைய ராணி கமலாதேவி உள்ளே நுழைந்ததும், ஜெயபாலன் மிகுந்த பீதி அடைந்து ஆசனத்திலிருந்து துள்ளியெழுந்தான்.

ராணியின் கண்கள் ஒருமுறை அறை முழுவதும் சுற்றி வளைத்துவிட்டுச் சேனாதிபதியின் முகத்தில் சிறிது நேரம் நிலைத்தன. கூரிய அந்தத் திருஷ்டியைப் பார்க்க முடியாமல் ஜெயபாலன் தலைகுனிந்து கொண்டான். சிறிது நேரத்தில் மெள்ளச் சமாளித்துக்கொண்டு பேச முயன்றான். ராணியிடமிருந்த நடுக்கத்தில் நாக்கு சொற்களை உச்சரிக்க மறுக்கவே, சேனாதிபதி உடம்பை அப்புறமும் இப்புறமும் அசக்கித் தொண்டையிலிருந்து ஏதோ சப்தங்களைக் கிளப்பினான்.

“அரசர் யுத்தத்திலிருந்து எப்போது திரும்புவார்?’ என்று ராணி கேட்டாள்.

சேனாதிபதி விழித்தான். தன்னைப் பற்றிய நிஜமான தகவல் ஏதும் ராணிக்குச் சொல்லவேண்டா மென்று அரசர் அனுப்பி இருந்த நிரூபத்தை அப்பொழுதுதான் படித்து முடித்திருந்தான். ராணி ஒரு நிமிஷம் தாமதித்து வந்திருந்தால் அந்தக் கடிதம் தீக்கு இரையாகியிருக்கும். அரசர் கடிதத்தை அவன் படித்து முடிப்பதற்கும் ராணி உள்ளே நுழைவதற்கும் சமயம் சரியாயிருந்தபடியால், கடிதத்தை அப்படியே சுருட்டிக் கயில் பிடித்துக்கொண்டு, சேனாதிபதி எழுந்துவிட்டான். ராணி அரசரைப் பற்றித் தகவலைக் கேட்கவும், கடிதம் பிடுத்திருந்த கை வெடவெடவென நடுங்க ஆரம்பித்தது.

சேனாதிபதி! நான் சொல்கிறது காதில் விழுகிறதா இல்லையா?” என்று இரண்டாம் முறை ராணி கேட்டாள். இந்தத் தடவை ராணியின் சொற்கள் கொஞ்சம் அழுத்தந்திருத்தமாக வந்ததோடு, கபடமான அவள் கண்கள், கடிதம் பிடித்திருந்த கையையும் நோக்கு வதைக் கண்ட சேனாதிபதி, நான் இனியும் பேசாதிருந்தால் அனர்த்தம் வந்து விடுமென்று “மகாராணி! இதைக் கேட்கத் தாங்கள் இங்கு வரவேண்டுமா? அரண்மனைக்கு வரச் சொல்லி ஆளனுப்பியிருந்தால் நானே வந்திருப்பேனே” என்று தட்டுத் தடுமாறிப் பேசினான்.

இளையராணியின் உதடுகள் ஓர் ஓரமாக ஒதுங்கிச் சிறிது மடிந்து சேனாதிபதியின் மேல் அவளுக்கிருந்த கேவல அபிப்பிராயத்தைத் தெளிவாக எடுத்துக் காட்டின! ஏளனமாகச் சிரித்துக் கொண்டே பக்கத்திலிருந்த ஆசனத்தில் ராணி உட்கார்ந்து கொண்டாள்.

“இதோ இப்படி உட்காரலாமே” என்று ராணிக்கு ஆசனம் தேடும் சாக்கில், கடிதத்தை மறைத்துவிடலா மென்று சேனாதிபதி ஆட்டம் காட்ட ஆரம்பித்தான்.

இதற்கெல்லாம் ராணி மசிகிற பேர்வமியா? “வேண்டாம். இந்த இடமே சௌகரியமாயிருக்கிறது” என்று சொல்லி, சேனாதிபதியை, இருக்கிற இடத்திலேயே உட்காரும்படி சைகை காட்டினாள்.

“சேனாதிபதி! நான் கேட்ட கேள்விக்கு உம்மிடமிருந்து இன்னும் பதில் வரவில்லை . அரசர் எப்பொழுது திரும்புவார்? இப்பொழுது யுத்தம் எந்த இடத்தில் நடக்கிறது? இந்த விஷயங்கள் உமக்குத் தெரியுமா. கெரியாதா?” என்று கேட்டாள் கமலாதேவி.

“தெரியாது மகாராணி” என்றான் சேனாதிபதி.

‘’கொஞ்ச காலமாக அரசர் ஏதாவது சாக்குப் போக்குச் சொல்லித் தலை நகரத்திலிருந்து வெளியிலேயே தங்கியிருக்கும் காரணம் என்னவென்றாவது உமக்குத் தெரியுமா?” என்றாள் தேவி.

‘அரசர் அடிக்கடி தலை நகரை விட்டுப் போய் விடுவதற்கு நீங்கள் தான் காரணம்’ என்று சேனாதிபதி எப்படித் துணிந்து சொல்வான்! இரண்டு பெண்டாட்டியைக் கல்யாணம் செய்து கொள்பவன் மேவார் அரசனாயிருந்தாலென்ன, கீழ்த்தர ஆண்டியாயிருந்தாலென்ன? தொல்லை தொல்லைதானே? ஆண்டிக்காவது சொந்தத் தொல்லையோடு போகிறது. அரச னுக்கோ சொந்தத் தொல்லையோடு பொதுத் தொல்லையும் சம்பவித்து விடுகிறது. சொந்தத்தொல்லை ராணிக்குத் தெரிந்திருக்கும். ராஜீயத் தொல்லைகளை ராணிக்கு எப்படி விவரித்துச் சொல்வது?’ என்று சேனாதிபதி தனக்குள்ளேயே தர்க்கித்துக் கொண்டான். ஆனால், மேவார் ராஜ்யத்தின் சிக்கல்களைத் தன்னைவிட ராணி நன்றாக உணர்ந்திருக்கிறாள் என்பது சேனாதிபதிக்குத் தெரியாது.

ஜெயசிம்மன் கமலாதேவியின் மோகத்தில் மூத்த ராணியையும் அவள் குழந்தை அமரனையும் தள்ளி வைத்த தினத்திலிருந்து மேவார் அரசாங்கம் இரண்டாகப் பிளந்து விட்டது. மூத்த ராணியின் பிள்ளை அமரசிம்மன் பெரிய வீரனாக வளர்ந்ததும், ஜெயசிம்மன் சக்தி பெரிதும் பலவீனமடைந்து அப்பன் பிள்ளைக்குப் பயப்படும்படியான ஸ்திதி மேவாரில் ஏற்படலாயிற்று. ராஜபுதனத்தின் பிற்காலக் கதியை அமரனே பெரிதும் நிர்ணயிப்பான் என்று ராதோர்கள், சிசோதயர்கள் எல்லோருமே நம்பினார்கள். ‘பாட்டன் பிரதாபசிம்மனை அப்படியே உரித்து வைத்தது போலிருக்கிறது’ என்று அமரனைப்பற்றி ஜெயசிம்மன் முன்னிலையிலேயே ராஜபுத்திர வீரர்கள் பேச ஆரம்பித்தார்கள். இப்படித் தன் முன்னிலையிலேயே ராஜபுத்திரர்கள் தன் பிள்ளையைப்பற்றிப் புகழ்வதன் அர்த்தத்தை ஜெயசிம்மன் அறிந்து கொள்ளாமலில்லை, “உனக்குப் பதில் அவன் அரசனாயிருந்தால் நன்றாயிருக்குமே’ என்று சொல்வதற்குப் பதிலாகத்தான் ராஜபுத்திரர்கள் அப்படி மறைமுகமாகப் பேசுகிறார்கள் என்பது ஜெயசிம்மனுக்குத் தெரியும். இதனால் ஏற்பட்ட மனோ வேதனையின் இடையே ‘நமக்குப் பிறந்த பிள்ளையல்லவா சூரன் எனப் பெயர் வாங்கியிருக்கிறான்’ என்ற நினைப்பினால் ஏற்படும் சந்தோஷமும் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும், ஆனால் அந்தப் புரத்துக்குச் சென்றதும், அங்கு இளையராணி கமலா தேவி விடும் பொறாமைக் கண்ணீர் அந்த சந்தோஷ ஜோதியை அணைத்து விடும்.

நாளாக ஆக அரசன் நிலைமை பெரிய சங்கடமாகி விட்டது. ராணி கமலாதேவி தன் புத்திரன் ஜஸ்வந்த சிம்மனுக்கு முடுசூட்டும்படி அரசனை வற்புறுத்தினாள் ராணியின் இந்தத் தூண்டுதலைப் பற்றிய தகவல் எப்படியோ காற்றடித்து ஜனங்களிடமும் பரவிவிடவே அதைப் பற்றி ராஜபுதனம் முழுவதும் ஏக அமர்க்கள் மாயிருந்தது. “மூத்த மகன் இருக்கையில் இளையன்னுக்கு எப்படிப் பட்டம் கட்டலாம்?” என்று ஜனங்கள் பகிரங்கமாகக் கேட்க ஆரம்பித்தார்கள். இந்த தொல்லையை எங்கேயாவது கண் மறைவாய்ப் போய், தீர்த்துக் கொள்ளலாம் என்றுதான் அரசன் மொகலாய போரில் கலந்து கொண்டான். அவன் போருக்கு சென்ற நாளாய் ராணிக்கு கடிதங்கள் வருவது கிடையாது.

இதன் மர்மத்தை இளையராணி அறிந்தேயிருந்தாள். அரசன் யுத்தத்துக்குப் போயிருக்கையில் அமரனின் கட்சி வலுத்து அவன் சிம்மாசனமேறி விட்டால் மேவார் வம்ச சிம்மாசனம் தன் கையிலிருந்து மாறிவிடுமே என்ற கவலையால்தான் அரசனைப் பற்றிய தகவலறிய என்றும் வெளிக் கிளம்பாத அவள் அன்று வெளியேறி சேனாதிபதியின் இருப்பிடமான ராஜ துர்க்கத்துக்கு வந்தாள்.

அன்று சேனாதிபதி சரியான முகத்தில் விழிக்க வில்லை என்பது நிச்சயம். அரசர் கடிதம், ராணியின் வருகை இந்த இரண்டுடன் மற்றொரு விஷயமும் அவன் மனத்தைக் கலக்கிக் கொண்டிருந்தது. அது இன்னதென்று மட்டும் ராணி அறிந்திருந்தால் சேனாதிபதியை அவள் குத்திக் கொன்றிருப்பாள். ‘நல்ல வேளை! அந்தத் தகவலையாவது ராணி அறிந்து கொள்ளாமல் இருந்தாளே!’ என்று அவன் நினைத்துக் கொண்டிருந்த சமயத்தில் அவன் தலையில் மற்றோர் இடி விழுந்தது.

“அரசர் இருப்பிடந்தான் உமக்குத் தெரியாது. அமரன் இங்கு வரப் போகிறானாமே. அந்தத் தகவலாவது உமக்குத் தெரியுமா?” என்று ராணி வினவினாள்.

என்ன செய்வான் சேனாதிபதி! அவளுக்குப் பதில் சொல்வதைவிட, காலையில் யார் முகத்தில் விழித்தோம் என்ற விஷயத்தை ஆராய்ச்சி செய்தால் பலன் உண்டு என்று நினைத்தான்.

ஏதாவது பதில் சொல்லியாக வேண்டுமே என்று “அந்தத் தகவலும் எனக்குத் தெரியாதே மஹாராணி” என்று தடுமாறி உளறினான்.

“உமக்கு என்ன தான் தெரியும் சேனாதிபதி சைன் னியத்தை நடத்த உமக்குத் துப்பில்லை என்று அரசர் தாமே யுத்தத்துக்குப் போயிருக்கிறார். அரசர் இருப்பிடத்தைத் தெரிந்து கொள்ள உமக்குத் துப்பில்லை என்பதை நீரே ஒப்புக்கொள்கிறீர். எதிரி தன் நகருக்கு வரும் விஷயங்கூட உமக்குத் தெரியாது. எதற்காகத் தான் நீர் சேனாதிபதி வேலை வைத்துக் கொண்டிருக்கிறீர்? நீர் இருக்கிற இடத்தில் ஒரு பெண்ணைச் சேனாதிபதியாகப் போட்டால் அவள்கூட உம்மை விடத் திறமையாக வேலை பார்ப்பாளே!” என்று ராணி அதட்டிக்கொண்டே எழுந்தாள்.

சேனாதிபதியின் பொறுமைகூட மிஞ்சிவிட்டது. எல்லாப் பெண்களாலும் முடியாது. மஹாராணியைப் போல் இருந்தால்தான் சாத்தியம்” என்று மரியாதையாகச் சொன்னான்.

ராணி கோபச் சிரிப்புச் சிரித்தாள். “மஹாராஜாவும் சேனாதிபதியும் இருக்கிற அழகுக்கு ஏளனம் வேறா? ராஜபுதனத்தில் ஆண் பிள்ளைகளை விட வீரம் மிகுந்த பெண்கள் பலர் இருக்கிறார்கள்” என்றாள் ராணி.

“மஹாராணியே அதற்கு அத்தாட்சியாயிற்றே” என்று சேனாதிபதி வெளிக்கு மரியாதையாகவும் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டும் பேசினான்.

“அது கிடக்கட்டும், அமரனை நீர் நேரில் பார்த் திருக்கிறீரா? எப்படி இருப்பான் தெரியுமா?” என்று. ராணி கேட்டாள்.

எனக்கு எப்படித் தெரியும்? மஹாராணியைப்போல் தான் நானும். சின்னஞ்சிறு குழந்தையாக இருந்தபோது பார்த்தது தான். இளவரசர் ஒரு வயதுக் குழந்தையாய் இருந்தபோதே தங்கள் உத்தரவுப்படி மஹாராஜா பட்டமகிஷியைத் தூர தேசத்தில் தள்ளி வைத்து விட்டாரே!” என்றான். ஜெயபாலன் ராணி தன்னை மிரட்டுவதற்குப் பழிவாங்கிக் கொள்ளவே இளவரசர். பட்டமகிஷி என்ற பதங்களை ஜாடை மாடையாக உபயோகித்தான்.

சுந்தரமான அவள் கழுத்தில் கத்தியைச் செருகி யிருந்தால்கூடக் கமலாதேவிக்கு அவ்வளவு வேதனை உண்டாயிராது. அமரனை இளவரசன் என்றும், சக்களத்தியைப் பட்டமகிஷி என்றும் சேனாதிபதி சொன்னது. அவள் இதயத்தில் சுருக்கென்று தைத்தது. இருந்தாலும் கோபத்தை அடக்கிக்கொண்டு, நான் கூட அமரனைப் பார்த்ததேயில்லை. மிகவும் முரடனென்றும் முன்கோபியென்றும் சொல்லக் கேள்வி என்றாள் ராணி.
“அதைப்பற்றி எனக்கும் கேள்வி உண்டு. முன் கோபத்தால் பல சமயங்களில் அபாயத்தில் கூட சிக்கிக் கொண்டதாகச் சொல்கிறார்கள்” என்று சேனாதிபதியும் ஒத்துப் பாடினான்.

“அமரன் இங்கு வந்தால் நீர் என்ன செய்வதாக உத்தேசம்?”

“நான் செய்வது என்ன இருக்கிறது?”

“நீங்களாகப் பிடிக்க முடியாத ஒரு பட்சி தானாக உங்கள் வலைக்குள் வந்து விழும்போது கையைக் கட்டிக் கொண்டா உட்கார்ந்திருக்கப் போகிறீர்?”

“மேவார் இருக்கும் நிலைமை மகாராணி அறியாத விஷயமல்ல. ராஜபுதனத்தின் விடுதலை அமரன் கையில் இருப்பதாகவே ராஜபுத்திர வீரர்கள் நினைக்கிறார்கள். நாம் அவரைக் கைது செய்தால் அடுத்த நிமிஷம் அரண்மனையை ஜனங்கள் சூறையாடி விடுவார்களே மகாராணி! அத்தகைய நடவடிக்கை எடுப்பதே பிசகு! அதுவும் அரசர் இல்லாத சமயத்தில்…” என்று சேனாதிபதி இழுத்தான்.

“அரசர் இல்லாத சமயத்தில் நீர் பணியவேண்டியது அரசியைத்தானே சேனாதிபதி? என் கட்டளைப்படி நடக்க உமக்கு என்ன ஆட்சேபணை?” என்றாள் ராணி இடைமறித்து.

ஓர் ஆட்சேபணையும் இல்லை, மகாராணி. என் கலையைக் கொடுத்தாகிலும் உங்கள் கட்டளையை நிறைவேற்றுகிறேன்” என்றான் சேனாதிபதி.
“அப்படியானால் அமரன் வந்ததும் அவனைச் சிறை செய்து விடும்”- என்றாள் ராணி.

சேனாதிபதி சிரித்தான்.

“ஏன் சிரிக்கிறீர்? நான் சொல்வது வேடிக்கையாக இருக்கிறதா?” என்று ராணி சீற்றத்துடன் வினவினாள்.

“இதுவா வேடிக்கை மகராரணி? நான் தலையைக் கொடுத்து உங்கள் ஆணையை நிறைவேற்றுவதாகச் சொன்னேன். நீங்கள் நிஜமாகவே தலை போகும் படியான காரியத்தைச் சொல்கிறீர்கள். அமரசிம்மன் மேல் கைவைத்த மறு நிமிடம் என் தலை என் உடலில் இருக்கப் பிரமேயமே இல்லை. இது வேடிக்கையான விஷயமாக மகாராணிக்குத் தோன்றினால், சித்தம்” என்றான் சேனாதிபதி.

மகாராணியின் பொறுமை காற்றில் பறந்து விட்டது. சேனாதிபதி! உம்முடன் விளையாட நான் இங்கு வந்திருக்கிறேன் என்று நினைக்கிறீரா? அமரசிம்மனைக் கைது செய்ய உமக்குத் தைரியம் இல்லாவிட்டால் அரண்மனைக்கு அனுப்பும், நான் கவனித்துக் கொள்கிறேன்” என்றாள்.

“மகாராணியின் சித்தப்படி செய்கிறேன். அமர சிம்மன் இங்கு வந்ததும் சிறிய தாய் பார்க்க விரும்புவதாகத் தெரிவிக்கிறேன்’ என்றான் ஜெயபாலன்.

“அமான் வருவதற்கு முன்னே தலை நகரிலுள்ள ராதோர்களையும் சிசோதய வீரர்களையும் வேறு இடங்களுக்கு அனுப்பி விடுங்கள்” என்றாள் ராணி.
“தலைநகர் பாதுகாப்புக்கு என்ன செய்வது?”

“தலைநகருக்கு இப்பொழுது ஆபத்து எதுவும் ‘இல்லை! ராதோர் வீரர்களும் சிசோதயர்களும் இருந்தால் தான் ஆபத்து. அவர்கள் அமரனின் வீரத்தைக் கண்டு மலைத்துப் போயிருப்பார்கள், அந்த உதவியை அகற்றி விடும். அப்புறம் அமரனைவிட இன்னும் பெரிய வீரன் இங்கு வந்தாலும் நாம் சமாளிக்கலாம்?” என்றாள் மகாராணி.

கமலாதேவியின் தந்திரத்தையும் மிகுந்த முன் யோசனையுடனும் ஆழ்ந்த சூழ்ச்சியுடனும் அவள் அமரனுக்காக விரிக்கும் வலையையும் கண்ட சேனாதிபதியின் கண்கள் ஆச்சரியத்தால் அகன்றுவிட்டன.

‘புத்தியிருந்தால் எப்பேர்ப்பட்ட ஆபத்தையும் சமாளிக்கலாம் என்பது சேனாதிபதியின் மூளைக்கு மெள்ள எட்டுகிறாற்போல் இருக்கிறது” என்றாள் ராணி.

சேனாதிபதி, பக்கத்தில் இருந்த வாளை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டு ராணியை நோக்கி, “மகாராணி! உங்கள் சூழ்ச்சி பலமாகத்தான் இருக்கிறது; ஆனால் அதில் அபாயம் இருக்கிறது. அரசர் அமரனை எதிர்க்க விரும்பவில்லை! உங்கள் சூழ்ச்சிகளிலிருந்தும் அவர் தப்ப விரும்புவதாகத் தெரிகிறது. இதோ அவர் ‘’கடிதம்” என்று கையில் இருந்த கடிதத்தை நீட்டினான். ராணி கடிதத்தைப் படித்துவிட்டு எதுவும் பேசாமல் சேனாதிபதியைப் பார்த்தாள்.

சேனாதிபதி மீண்டும் பேசினான். “மகாராணி, இந்த வேலையில் யோசித்து இறங்குங்கள். அரசருக்கு இஷ்டமில்லாத விஷயத்தில் என்னைத் தலையிடச் செய்கிறீர்கள். தேசத்தில் எங்கும் கலவரம் இல்லாத சமயத்தில் ராதோர் சிசோதயத் துருப்புகளை வேறிடத்துக்கு அனுப்பினால் நாளைக்குக் கேள்வி வரும். அப்பொழுது என்னை நீங்கள் காப்பாற்ற முடியாது. அமர சிம்மனைச் சாதாரணக் குற்றவாளிபோல் நாம் சிறைப் படுத்துவதும் எளிதல்ல. யோசியுங்கள்” என்றான்.

நான் யோசித்து ஆகிவிட்டது, என் குமாரன் ஜஸ்வந்தசிம்மனே மேவார் சிம்மாசனத்தில் உட்காரப் போகிறான். அதற்காக அமரசிம்மனை நாம் ஒழித்து விடவேண்டும். தவிர உமக்குத் துணைக்கும் ஏற்பாடு செய்திருக்கிறேன்.”

“துணையா? ஏது மகாராணி?”

“போன தடவை அம்பர் சமஸ்தானத்துக்குப் போயிருந்தபோது ரஜனியை அழைத்து வந்தேனே, ஞாபகம் இருக்கிறதா?”

“ஆகா.”

“அந்தப் பெண்ணை ஜஸ்வந்தசிம்மனுக்கு மண முடிக்கப் போகிறேன். அதனால் அம்பர் அரசன் உதவியும் கிடைத்திருக்கிறது. அம்பர் வீரர்கள் பலர் ஏற்கனவே எனது அரண்மனையில் நிரம்பி இருக்கிறார்கள்.”

சேனாதிபதி அந்த ஸ்திரீயின் ஏற்பாடுகளைக் கேட்டு இடிந்து போனான். ‘அம்பர் வீரர்களா? பிரதாபனைப் போன்ற சிம்மங்கள் ஆண்ட மேவார். நரிகளுக்குச் சமமான அம்பர் வீரர்களின் சூழ்ச்சிக்கா இலக்காக வேண்டும்? அட கடவுளே!” என்று மனத்திற்குள் சொல்லிக் கொண்டான்.

“இந்தக் கல்யாணத்தில் பெண்ணுக்கு இஷ்டந்தானா?”

நான் இஷ்டப்பட்டால் பெண்ணும் இஷ்டப்படத் தான் வேண்டும்” என்றாள் ராணி.

சேனாதிபதியின் விழிகள் அவளை ஏறெடுத்து நோக்கின. பெண்ணை அப்படிக் கட்டாயப்படுத்த முடியுமா?’ என்ற சொற்கள் அவன் வாயிலிலிருந்து உதிர்த்தன.

‘”என் முடியாது?” என்ற கேள்வி உக்கிரத்துடன் எழுந்தது இளையராணியிடமிருந்து.

“ராஜபுத்ர ஸ்திரீகளை இஷ்ட விரோதமாக இணங்க வைக்க அலாவுதீன் கில்ஜியாலேயே முடியவில்லை. அத்தனை ஸ்திரீகளும் பாதாளக் கிடங்கில் ஜோஹர் செய்து எரிந்து போனது உங்களுக்குத் தெரியாதா?” என்று வினவினான் சேனாதிபதி.

இளையராணி கமலாதேவி அவனை நோக்கி நகைத்து, “சேனாதிபதி! உமது மூளை வரவர மழுங்கிக் கொண்டு வருகிறது” என்றாள்.

“அப்படியா?”

“ஆம்! உமது உவமையே அதற்குச் சான்று கூறுகிறது. கற்பழிக்கத் திட்டம் போட்ட அலாவுதீன் கில்ஜிக்கு ராஜபுத்திர ஸ்திரீக்ள் இணங்காததற்கும் என்னைப்போல் மைந்தன் நன்மைக்காகப் பாடுபடும் ஒரு தாய்க்கு ரஜனி இணங்குவதற்கும் வேறுபாடு நிரம்ப உண்டு” என்றாள் கமலாதேவி.

“அந்த வேறுபாட்டைப் பற்றிக் குறிப்பிட வில்லை.”

“வேறு எதைக் குறிப்பிட்டீர்?”

“கட்டாயத்தைப் பற்றி! ராஜபுத்திரிகள் கட்டாயத்துக்கு இணங்கியதாக வரலாற்றில் இல்லையே”

”புது வரலாறு சிருஷ்டிக்கிறேன்!”

தங்கள் ஏற்பாடுகள் புதுமையைத் தெரிவிக்கின்றன” என்றான் சேனாதிபதி.

சேனாதிபதியின் மீது சுடுவிழிகளை நாட்டிய கமலாதேவி, “சேனாதிபதி, உம்முடைய சம்பாஷணை சாமர்த்தியத்தை அறிய நான் வரவில்லை. என் சக்க எத்திப் பிள்ளையை அழிக்க உமக்கு உத்தரவிட வந்தேன். உம்மால் முடியாவிட்டால் அரண்மனைக்கு என்னிடம் அனுப்பும்” என்று கூறிவிட்டு எழுந்திருந்து சென்று விட்டாள் கமலாதேவி.

அவள் சென்றதும் தலையைக் கையில் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டான். சேனாதிபதி எத்தனை நேரம் உட்கார்ந்திருந்தானோ அவனுக்கே தெரியாது. ஒருபுறம் இளைய ராணியின் ஆட்சி ஆசையும், இன்னொரு புறம் மேவாரின் வாரிசான அமர சிம்மன் வந்தால் அவன் உக்கிரத்திலிருந்து தப்ப என்ன செய்வது என்ற யோசனையும் அவன் தலையில், இருபெரும் விட்டாள் இறங்கின.

அவன் இப்படி உட்கார்ந்திருந்த அதே சமயத்தில் அமரசிம்மனும் வீரனொருவன் பின்தொடர தலைநகர எல்லைக்குள் புகுந்து கொண்டிருந்தான்.

Previous articleChandramathi Ch11 | Chandramathi Sandilyan | TamilNovel.in
Next articleIlaya Rani Ch2 | Ilaya Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here