Home Ilaya Rani Ilaya Rani Ch10 | Ilaya Rani Sandilyan | TamilNovel.in

Ilaya Rani Ch10 | Ilaya Rani Sandilyan | TamilNovel.in

93
0
Ilaya Rani Ch10 Ilaya Rani Sandilyan, Ilaya Rani Online Free, Ilaya Rani PDF, Download Ilaya Rani novel, Ilaya Rani book, Ilaya Rani free, Ilaya Rani,Ilaya Rani story in tamil,Ilaya Rani story,Ilaya Rani novel in tamil,Ilaya Rani novel,Ilaya Rani book,Ilaya Rani book review,இளையராணி ,இளையராணி கதை,Ilaya Rani tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Ilaya Rani ,Ilaya Rani ,Ilaya Rani ,Ilaya Rani full story,Ilaya Rani novel full story,Ilaya Rani audiobook,Ilaya Rani audio book,Ilaya Rani full audiobook,Ilaya Rani full audio book,
Ilaya Rani Ch10 | Ilaya Rani Sandilyan | TamilNovel.in

Ilaya Rani Ch10 | Ilaya Rani Sandilyan | TamilNovel.in

இளையராணி – சாண்டில்யன்

அத்தியாயம் – 10 சொல்லித் தெரிவதில்லை…?

Ilaya Rani Ch10 | Ilaya Rani Sandilyan | TamilNovel.in

குற்றத்தினால் விளையும் தீமையின் அளவு, அக் கற்றத்தைச் செய்பவன் வாழ்க்கைத்தரம், அவனுக்குச் சமூகத்தில் உள்ள செல்வாக்கு, இவற்றையே பெரிதும் பொறுத்திருக்கிறது. ஏழை செய்யும் குற்றம் அவனை மட்டுமே பாதித்து, தன் கொடூர ஆட்சியை அவன்மீது மாத்திரமே செலுத்திவிட்டு அகன்றுவிடுகிறது. பிரபு வாயிருப்பவன் குற்றம் செய்தால், அது சமூகத்துக்கே பெருந்தீங்கை விளைவித்து, அவனைச் சேர்ந்தவர் சேராதவர், குற்றத்தில் சம்பந்தப்பட்டவர், படாதவர் எல்லாரையும் ஒன்றாக வாட்டுகிறது. குறி பார்த்து எறியப்படும் சிறிய கவண்கல் தனது லட்சியத்தை மாத்திரந்தான் தாக்கும். ஆனால் ரஸ்தாவைப் பதனிடுவதற்காக இழுக்கப்படும் பெரிய பாறாங்கல் உருளையோ அங்குள்ள கல், கட்டிகளைத் தவிர இடையே வாழும் புழு, பூச்சி, புல், பூண்டு எல்லா வற்றையும் நசுக்கி மாய்க்கிறது.

ஏழை இரண்டு பெண்டாட்டிக்காரனாயிருந்தால் அதனால் ஏற்படும் அவதி அவனோடு போய்விடுகிறது. அதே குற்றத்தை மன்னன் செய்தால் தேசத்தில் ராஜீயக் கிளர்ச்சிகள், சதிகள், உள்நாட்டுச் சண்டை முதலியன ஏற்பட்டு, அரசன் குற்றத்தில் சம்பந்தப்படாத பிரஜைகளையும் மாய்த்து, அவர்கள் இரத்தது தையும் பூமியில் சிந்துகிறது.

சமூக நோய்களுக்கும் தனி மனிதன் நோய்களுக்கும் அதிக வித்தியாசம் கிடையாது. சில ஜூரங்கள் ஒரு மனிதனைப் பிடித்தால், அவனை மட்டும் துன் பத்திற்குள்ளாக்குகின்றன. இன்னும் சில நோய்கள் பிறத்தியாருக்கும் தானாகவே தொத்திப் பரவுகின்றன சின்ன மனிதன் வீட்டில் சண்டை ஏற்பட்டால் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் கவனிக்கமாட்டார்கள். கவனித்தாலும் வேடிக்கை பார்ப்பார்கள். ராஜா வீட்டுச் சண்டையானால் அப்படி முடியுமா? தொத்து நோய் மாதிரி அது சமூகத்தில் பரவுகிறது. இந்தப் பக்கம் பாதிப் பேர்; அந்தப் பக்கம் பாதிப் பேர் சேர்ந்து கொள்ளுகிறார்கள். ஜனங்கள் பெருவாரியாக மாள்கிறார்கள். அந்த விபரீதத்துக்குத்தான் நமது பெரியவர்கள் “யுத்தம்’ என்ற கண்ணியமான பெயரைச் சூட்டியிருக்கிறார்கள்.

பெரிய வீடுகள், பற்றி எரிவதற்கு எங்கோ அகஸ் மாத்தாகப் பிடித்துக்கொள்ளும் சிறிய பொறி காரணமா யிருப்பதுபோல மேவாரின் பெரிய போர்களுக்கெல்லாம் அந்நாட்டு அரசர்களின் குடும்பச் சண்டைகளே காரணமாயின, அத்தகைய ஒரு சிறு பொறி மீண்டும் மேவார் அரண்மனையில் தலையெடுக்க ஆரம்பித்தது. இளைய ராணியின் ஜாக்கிரதையும் பொறாமையும், பேராசையும் பெரிய சூறாவளியாகக் கிளம்பி, அந்தப் பொறியை ஜ்வாலைவிட்டுப் பிரகாசிக்கும்படி விசிறத் தொடங்கியது. அந்த ஜ்வாலையில் நாமும் தீய்ந்து சாம்பலாகிவிடுவோமே என்ற கவலையே இல்லாமல் இளைய ராணி தனது ‘அழிவு வேலையைப் பூர்த்தி செய்யக் கங்கணம் கட்டிக்கொண்டாள். கிழவன் ராஜ குமாரியிடம் பேசிய பேச்சுக்கள் அவள் உறுதியைப் புலப்படுத்தின.

அன்றிரவு மகாராணிக்குத் தூக்கம் பிடிக்கவில்லை. மனதில் கவலை மிதம்மீறி ஏறியிருந்ததால் படுக்கையில் புரண்டு கொண்டேயிருந்தாள். ஜன்னலுக்கு வெளியே தெரிந்த சந்திர வெளிச்சம் ஊரிலுள்ள ஜனங்களுக்கு எல்லாம் சந்தோஷத்தை அளித்தாலும் அவர்கள் எல்லோரையும்விடப் பெரிய அந்தஸ்தில் இருந்து கொண்டு ஹம்ஸதூளிகா மஞ்சத்தில் புரண்டு கொண்டிருந்த இளையராணியின் மனதுக்கு எச்சாந்தியையும் அளிக்கவில்லை. ‘இன்றிரவு சந்திர வெளிச்சம்: நாளைக்கு மறுநாள் ராகிப் பண்டிகை; ஊரெல்லாம் ஒரே அமர்க்களமாயிருக்கும்’ என்ற நினைப்புக்கூட கமலாதேவியின் கவலையைத் தளர்த்த முடியவில்லை. ‘அமரன் இன்னும் வெளியிலிருக்கிறான், ராதோர் சிசோதய துருப்புக்களும் வெளியிலிருக்கின்றன’ என்ற எண்ணமே அவள் மனத்தில் தலைதூக்கி நின்றது. போதாக்குறைக்கு அரசரும் திரும்பி வருகிறார் என்ற செய்தி கிடைத்தது. அரசர் திரும்பி வந்தால் நிலைமை என்ன என்பதைப் பற்றி ஆராயத் தொடங்கினாள். அமரன் வந்து ரஜனியை என்னுடன் அனுப்பு என்று கேட்டால், அரசர் எப்படி மறுக்க முடியும்? அவள் வளையல் அனுப்பின நாள்முதல் ராஜபுத்ர தர்மப்படி அவன் அவளுக்குக் காவலனாகி விட்டான். அரசர் என் சொல்லைக் கேட்டு அவளை அனுப்ப மறுத்தால், ராஜ புத்திரர்கள் க்ஷத்திரிய தர்மத்தை மீறியதாக அரசன் மீது திரும்பி விடுவார்களே’ என்றெல்லாம் யோசிக்கலானாள். எல்லாவற்றையும் விட அவள் அதிகமாகப் பயந்தது அடுத்து வரும் ராகிப் பண்டிகையைப் பற்றித்தான்.

ராகிப் பண்டிகையன்று ராஜபுதனம் கோலாகலமாக விளங்கும். முக்காடிட்ட பெண்களும் ஆயுதம் தரித்த ராஜபுத்திர வீரர்களும் கூட்டம் கூட்டமாகத் தெருவில் நடமாடுவார்கள். கோயில்கள், தெருக்கள் எங்குமே கூட்டத்துக்குக் குறைவிருக்காது. அரசர் அரண்மனையும் பொது விதிக்கு விலக்கானதல்ல. ஏராளமான ஜனங்கள் தங்குதடையின்றி அரண்மனைக்குள் பிரவேசிப்பார்கள். பிச்சைக்காரர்கள், பண்டாக்கள் இவர்களின் கோஷம் அரண்மனையை அதிரச் செய்யும் இந்தத் திருவிழாவன்று கூட்டத்தைத் தடுக்கவோ ஓர் ஒழுங்குக்குள் ஜனங்களைக் கொண்டு வரவோ யாராலும் முடியாது. மேவாரின் அரசரல்ல, அவரைக் கைக்குள் போட்டுக் கொண்டிருக்கும் இளையராணி யான தன்னால்கூட முடியாது என்பதைக் கமலாதேவி சந்தேகத்துக்கு இடமின்றித் தெரிந்து கொண்டிருந் தாள். இம்மாதிரி ஒரு நாளில் அமரன் அரண்மனைக் குள்ளே வர நினைத்தால் அவனை எப்படி தடை செய்வது என்றுதான் ராணி யோசித்தாள். ‘அரசர் திரும்புவதானால் ராதோர் வீரர்களைத் தலைநகருக்குப் புறம்பில் அதிக நாள் வைத்திருக்கச் சேனாதிபதி துணிய மாட்டானே! எதற்காக வீரர்களை அங்கு அனுப்பினாய் என்று அரசர் கேட்டால் சேனாதிபதி சரியான விடை சொல்ல முடியாதே’ என்றும் நினைத்தாள். இம்மாதிரியே தன் செய்கைகளின் பலாபலன்கள், ராஜ்ய ஆசையால் படிப்படியாகத் தனக்கு நேர்ந்து வரும் கஷ்டங்கள் இவற்றைச் சீர்தூக்கிப் பார்த்துக் கொண்டே ராணி புரண்டாள். புரண்டு படுப்பதிலும் அலுப்புத் தட்டவே, மஞ்சத்திலிருந்து இறங்கி அறையை விட்டு உப்பரிகையின் வெளித்தாழ்வாரத்துக்கு வருவதற்காகக் கதவை லேசாகத் திறந்தாள். ‘திறந்தவள் தன் அறைக்கு எதிரே இருந்த ரஜனியின் அறையின்மீது ஒரு வினாடி கண்ணைச் செலுத்தினாள். அப்பொழுது தான், கிழவன் தன் இருப்பிடத்தைவிட்டுச் சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டே ரஜனியின் அறைக்குள் நுழைந்தான். அவன் ரஜனி கட்டிலை நோக்கிச் செல்லத் தன் முதுகைத் திருப்பியதும் இளையராணி தன் அறையைவிட்டு வெளியே வந்து மறுபுறம் இருந்த சுவரோடு சுவராக ஒட்டிக்கொண்டு ரஜனி அறையில் நடக்கும் நாடகத்தைக் கவனிக்கலானாள்.

கிழவன் ரஜனியின் கட்டிலை அடைந்ததும் ஒரு நிமிஷம் பேசாமல் நின்றான். பிறகு அவள் கன்னங்களைத் தடவிக் கொடுத்தான். ரஜனி தூங்கவில்லை.. அவள் இருந்த ஸ்திதியில் தூக்கம் எப்படிவரும் ஆகையால், அவன் தொட்டவுடனே விழித்துக்கொண்டு எழுந்து நின்றாள். அவள் கண்களில் ஜொலிக்க கோபத்தைக் கண்டு கிழவன் சிரித்தான். “அப்பா! என்ன கோபம்!” என்று பரிகாசமும் செய்ய ஆரம்பித்தான்.

குரல் தெரிந்த குரலாயிருந்தது. ‘’ஆம்! சந்தேகமே யில்லை” என்று ராஜகுமாரி மனத்திற்குள் சொல்லிக் கொண்டாள். கோபத்தால் கூர்மையாக விழித்த கண்களை ஆச்சரியமும் ஆனந்தமும் தழுவிக்கொண்டு மலரச் செய்துவிட்டன.

“என்ன ராஜகுமார்! நீங்களா! நிஜந்தானா? இளையராணி என்னைக் காவல் செய்ய உங்களையா நியமித்தார்?” என்றாள் ரஜனி.

“என் சிறிய தாயை முட்டாளென்று நினைத்துக் கொண்டாயா ரஜனி? உன்னைக் காவல் செய்ய யார் தகுதி என்று அவர்களுக்குத் தெரியாதா?” என்று சொல்லிவிட்டு அமரசிம்மன் சிரித்தான்.

சிரிப்பின் சத்தம் எங்கே வெளியில் கேட்டுவிடப் போகிறதோ என்று ரஜனி பயந்துபோனாள். அவனிடம் சரேலென்று நெருங்கி, தன் மலர்க்கரத்தால், அவன் வாயைப் பொத்தி, “இதென்ன சிரிப்பு வேண்டியிருக்கிறது? சமயா சமயமில்லாமல் உங்களுக்குக் கோபம் போய் சிரிப்பு வந்திருக்கிறதேயொழிய இரண்டின் பலனும் சமமாய்த்தான் இருக்கும் போலிருக்கிறது” என்று ரஜனி எச்சரிக்க ஆரம்பித்தாள்.

“அப்பாவே தேவலை போலிருக்கிறதே ரஜனி” என்றான் அமரன்.

“எப்படி?”

அப்பாவை இரண்டாம் பெண்டாட்டி வந்த பிறகு தான் அடக்க ஆரம்பித்தாள். பிள்ளை ஆரம்பத்திலேயே அடங்க வேண்டியிருக்கும் போலிருக்கிறதே.”

“சரி போதும் போதும்! இந்த வேஷமும் இதுவும். எனக்குச் சகிக்கவில்லை.”

“எனக்கு மாத்திரம் சகிக்கிறதென்று நினைக்கிறாயா ‘ரஜனி! நான் இதுவரை வேஷம் போட்டது கிடையாது உனக்காக வேஷம் போடுகிறேன். சேனாதிபதியிடம் பல்லைக் காட்டி வேலை கேட்கிறேன். என்ன என்னவோ செய்கிறேன். நாலு நாளில் இப்படி அடங்கிப் போன மனிதனை இதற்குமுன் பார்த்திருக் கிறாயா ரஜனி?” என்று கொஞ்சினான் அரசகுமாரன்.

ரஜனி வெட்கத்தால் தலைகுனிந்து கொண்டாள். அவன் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் உண்மை என்று அவளுக்குத் தெரியும், அவன் வெகு அருகில் வந்து அவளை அணைத்துக் கொண்டான். அருவருக் கத்தக்க அவன் வேஷமோ அவனிருந்த ஸ்திதியோ அவளுக்கு எத்தகைய வெறுப்பையும் தரவில்லை. வேண்டியவர்களிடத்தில் குறையிருப்பதை அறியா திருப்பது மனித இயற்கைதானே!

“நீங்கள் எப்படி இங்கு வேலைக்கு வந்தீர்கள்?” என்று ராஜகுமாரி கேட்டாள்.

“சத்திரத்தில் உன்னைச் சேனாதிபதி தூக்கிப் போய்விட்டதை மூர்ச்சையாயிருந்த ரகு சொன்னான். அவனைக் காப்பாற்ற வேண்டியது முதல் கடமையாயிற்று. நான் வெகு அருகிலேயே இருக்கிறேனென்பதையும் எந்த நிமிஷத்திலும் திரும்புவேனென்பதையும் அறிந்த சேனாதிபதி, ரகு சரியாகத் தாக்குண்டானா என்பதைக் கவனியாமலேயே அவனை அரைகுறையாகக் காயப்படுத்திவிட்டு, உன்னைத் தூக்கம் கொண்டு ஓடிவிட்டான். நான் திரும்பிவந்ததும் முதலில் ரகுவை ஒரு வைத்தியரிடம் அழைத்துச் சென்றேன். அவர் சில மூலிகைகளை வைத்துக் கட்டினார். ரகு மறு நாள்கூட பலஹீனமாய்த்தான் இருந்தான்..

“ஐயோ பாவம்!” என்று ராஜகுமாரி பச்சாதாபப்பட்டாள்.

அமரன் மேலே கதையைச் சொல்லலானான் அதற்கடுத்த நாள் சிறிது குணமடைந்தான். உன்னைக் காப்பாற்றுவதில் ரகுதான் என்னைவிட அதிகத் துடிப்பாய் இருந்தான். ராஜ்குமார்! நீங்கள் தலைநகருக்குச் செல்லுங்கள்! நான் ராதோர்களைக் கூட்டிக்கொண்டு வருகிறேன்: மேவார் தலைநகரைப் பொசுக்கிவிடுவோம்’ என்றான். நாங்கள் பேசிக்கொண்டிருக்கையில் முரசொலிகளும் தண்டோராக்களும் கேட்டன. என் தகப்பனார் திரும்பி வருவதை தண்டோராக்காரன் பறைசாற்றினான். அரசர் இரண்டு காதங்களுக்கப்பால் கூடாரத்தில் தங்கியிருந்தார். நான் அவரிடம் செல்லவில்லை . உபசேனாதிபதியிடம் சென்றேன்…”

“ஏன்?”

தகப்பனார் இளைய ராணிக்கு எதிரான எந்தப் பேச்சையும் கேட்கமாட்டார். தவிர, நிலைமை இங்கு எப்படி இருக்கிறது என்பதைப் பற்றிப் பெரிதும் சந்தேகமாயிருந்தது. ஆகையால், உபசேனாதிபதியிடம் சென்றேன். அவனுக்கும் இந்த சேனாதிபதிக்கும் உள்ளூர விரோதம். ஆனால், அந்த விரோதத்தைச் சின்னஞ்சிறு காரியங்களில் காட்டிக்கொள்ள மாட்டார்கள் என்பதும் எனக்குத் தெரியும். ஆகையால் அவ னிடமிருந்து சிபாரிசு கடிதம் வாங்கி வந்தேன்.”

“வேறெந்த இடத்திலாவது காவலுக்குப் போட்டிருந்தால் என்ன செய்வீர்கள்?”

“அதற்காகத்தான் நான் கிழவன், கண்ணில்லாதவன் என்றெல்லாம் சொல்லிக் கொண்டேன். சதிகாரர்கள் மனோபாவம் நேர்வழியில் நடக்காது ரஜனி உன்னைச் சிறை வைத்தவர்கள் நீ வெளி உலகத்தோடு சம்பந்தம் வைத்துக் கொள்வதை விரும்பமாட்டார்கள். ஆகையால், உன்னுடன் பேச்சுவார்த்தை வைத்துக் கொள்ளாத மனோதிடமுள்ளவனையே விரும்புவர்கள். அப்படி இருக்கும்போது இயற்கையிலேயே சக்தியில்லாதவன் கிடைத்தால் அதிருஷ்டந்தானே!” என்றான் அமரன்.

“நீங்கள் நினைத்தபடிதான் நடந்திருக்கிறது. நன்றாகக் காவல் வைத்தார்கள்…”

“பாலுக்குப் பூனையைக் காவல் வைத்த மாதிரி!”

இரண்டு பேரும் மெதுவாகச் சிரித்தார்கள். “உஸ்” என்று இருவரும் எச்சரித்துக்கொண்டு ஒருவர் வாயை மற்றொருவர் மூடினார்கள்.

இரண்டு நிமிஷங்கள் கழிந்தன. அந்த இரண்டு நிமிஷங்கள் இளைய ராணிக்கு எத்தகைய சந்தர்ப்பத்தை அளித்துவிட்டன என்பதை அவர்கள் அறியவில்லை .

“ரஜனி! ரகு இன்னும் ஒரு நாளில் வந்துவிடுவான் ராதோர் வீரர்களுடன். அதற்கப்புறம் உனக்கு விடுதலைதான். கொஞ்சம் பொறு” என்று அவளுக்கு ஆறுதல் சொன்னான்.

அந்த ஒரு நாள் அவகாசத்தை எதிரிகள் உனக்குக் கொடுக்க வேண்டுமே அமரா?” என்று இளையராணி அழுத்தந்திருத்தமாகச் சொன்ன பதில் அவர்கள் ஆறுதலைக் கெடுக்க வந்த அம்பு போல் இடையே பாய்ந்தது.

அமரனும் ரஜனியும் திரும்பிப் பார்த்தார்கள். சற்று தூரத்தில் கோபப் பார்வையுடன் ராணி நின்றுகொண்டிருந்தாள். அவளுக்குப் பின்னால் ஏராளமான அம்பர் வீரர்கள் உருவின கத்திகளுடன் நின்றார்கள். தாழ் வாரத்தில் அதிகமாக இருந்த இருளை அகற்றப் பெரிய பந்தங்கள் கொண்டு வரப்பட்டன. அவற்றின் ஜ்வாலையை வெளியிலிருந்து பார்த்தவர்கள் அரண் மனை தீக்கு இரையாகிவிட்டதோ என்று சந்தேகித்தார்கள்.

காரியம் மிஞ்சிவிட்டதென்பதை அமரன் தெரிந்து கொண்டான். வாளை எடுத்துப் போர் புரிவதைத் தவிர வேறு வழியில்லை என்பது நன்றாகப் புலப்பட்டது. அறையிலிருந்த சாளரத்தால் வெளியே எட்டிப் பார்த்தான். இளைய ராணியின் சௌகரியத்துக்காக மலைப் பாறையைக் குடைந்து அரண்மனையை அடுத்தாற் போல் அரசர் நிர்மாணித்திருந்த சிறிய அகழி கிடுகிடு பாதாளத்திலிருந்தது.

எதிரிகளை வரவேற்பதைத் தவிர வேறு மார்க்க மில்லை என்பதை நன்றாக உணர்ந்து கொண்ட அமரன் தன் கேடயத்தை எடுத்துக்கொண்டு கத்தியையும் உருவினான்.

ரஜனியின் அறையை இந்தச் சண்டைக்கு எப்படி உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்று அமரன் ஆராய்ந்தான். அவள் படுத்திருந்த கட்டிலை இழுத்து அறை வாசற்படிக்குக் குறுக்கே போட்டு அதை ஓர் அரணாகச் செய்துகொண்டான்.

“அவன் ஏற்பாடுகளை முடித்துக்கொண்ட பிறகு தான் நீங்கள் சண்டைக்குக் கிளம்புவீர்களா?” என்று இளைய ராணி சினந்து கொண்டதும் அம்பர் வீரர்கள் அமரனை நோக்கி முன்னேறினார்கள். பயங்கரமான சண்டை மூண்டு விட்டது.

அமரன் வாள் கரகரவென்று நாலா பக்கத்திலும் ஏககாலத்தில் சுழன்றது. முன்னால் காலடி வைத்த இரண்டு வீரர்கள் பூமியில் உருண்டு விட்டார்கள் அமரன் தோளிலும் சிறிது காயம் பட்டு இரத்தம் வெளியே தெரியத் தொடங்கியது. இன்னும் இரண்டு பேர் கட்டிலை அணுகினார்கள். ஒருவன் மார்பில் அமரன் வாள் சரேலெனப் பாய்ந்தது. அவன் குப்புறக் கட்டிலின்மேல் சாய்ந்தான். அவன் கையிலிருந்த வாளை அமரன் பிடுங்கி, “ரஜனி இந்த வாளை எடுத்துக் கொள்! இப்படி அருகில் வா!” என்றான். அவள் காதில் ஏதோ சொல்லிக்கொண்டே எதிரே தொடர்ந்து வந்துகொண்டிருந்த ஆட்களைச் சமாளித் தான். ரஜனி அறையில் உட்புறம் சென்று மஞ்சக்திலிருந்த விரிப்புகளை எடுத்து நீளக் கட்டினாள். சாளாத்தின் உட்பக்கம் நீட்டிக் கொண்டிருந்த பாறாங் கல்லில் அதை இறுகக் கட்டித் துணியை வெளிப்பக்கம் தொங்கவிட்டாள். இது முடிந்ததும் திரும்பி வந்து, “தயாராகிவிட்டது” என்று அமரனுக்குத் தெரிவித்தாள்.

‘அமரன் சண்டையில் முன்னேறுவது போல் திடீரென மஞ்சத்தின்மீது தாவினான். முன்னேறிய வீரர்கள் திடீரெனப் பின்னுக்குப் பாய்ந்தார்கள். அமரன் பின்னால் திரும்பிச் சாளரத்துக்காகச் சென்றான். அவன் ‘யோசனையை ஒருவாறு ஊகித்துக்கொண்ட அம்பர் வீரர்கள் அவனைத் தொடர முன்னேறினார்கள். ரஜனி கத்தியும் கையுமாய் அவர்களைத் தடுத்து நின்றாள். அவளை நிராயுதபாணியாக்குவதா அவர்களுக்குப் பெரிய காரியம்? ஒரு நிமிஷத்தில் ரஜனியின் கத்தி அவள் கையிலிருந்து பறந்தது. அம்பர் வீரர்கள் அறைக் குள் நிரம்பிவிட்டார்கள். அவர்களில் ஒருவன் சாளரத்தின் அருகில் சென்று, நீளத் தொங்கிக் கொண்டிருந்த துணியை அவிழ்த்துவிட்டான். அதைப் பிடித்து இறங்கிக்கொண்டிருந்த அமரன் தடாலென்று அகழியில் விழுந்த சப்தம் அறையில் இருந்தவர்களுக்கு நன்றாகக் கேட்டது. “அகழிக்கு ஓடுங்கள்! அவனைப் பிடித்து வாருங்கள்!” என்று இளைய ராணி கடுங்கோபத்துடன் கூச்சலிட்டாள்.

அமரனைத் தங்களாலானவரை தேடிவிட்டு வந்த சேவகர்கள் அவன் அகப்படவில்லை என்று சொன்னார்கள். ‘ராகிப் பண்டிகை வந்து ராதோர்களும் வந்து வார்கள். நம் கதி என்ன?’ என்று இளைய ராணி நினைத்து நடுங்கினாள். ‘அதற்கு முன்பே ரஜனியின் கல்யாணத்தை நடத்திவிட்டால் என்ன?’ என்று யோசனை மனத்தில் உதித்ததும் இளைய ராணி பெரிதும் மகிழ்ச்சியடைந்தாள். பலவந்தமாக ‘ரஜனியின் கழுத்தில் தாலி ஏறிவிட்டால் பல பிரச்சினைகள் அதனால் தீர்ந்துவிடும்’ என்று தீர்மானித்துக் கொண்டாள்.

ஆகையால், மறு நாள் ஜஸ்வந்தசிம்மனுக்கு யோசனை சொன்னாள்: “மகனே! அந்தப் பெண்ணிடம் சென்று அவள் மனத்தைத் திருப்பப் பார். உன்னால் அவளுக்குக் கிடைக்கக்கூடிய அந்தஸ்தை எடுத்துச் சொல். இல்லாவிட்டால் ஏற்படக்கூடிய ஆபத்தையும் சொல்” என்றாள்.

முடியாது! முடியாது! என்னால் முடியாது!” என்றான் ஜஸ்வந்தசிம்மன்.

“ஏன் முடியாது?” என்று வினவினான் ராணி.

“எனக்குப் பயமாயிருக்கிறது” “கழுத்தை நெரித்த உன் தமையன் போய் விட்டானடா!”

அவன் போனால் என்ன, ரஜனியே கழுத்தை நெரிப்பாள்.”

ராணிக்குக் கோபம் தலைக்கேறிவிட்டது. “போகா விட்டால் உன் கழுத்தை நான் முறிப்பேன்” என்று கூவினாள்.

வேறு வழியின்றி இரண்டாம் முறையாக ஜஸ்வந்த சிம்மன் பலிக்குச் செல்லும் ஆடுபோல் ரஜனியின் அறையை நோக்கிச் செல்ல ஒப்புக்கொண்டான்.

Previous articleIlaya Rani Ch9 | Ilaya Rani Sandilyan | TamilNovel.in
Next articleIlaya Rani Ch11 | Ilaya Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here