Home Ilaya Rani Ilaya Rani Ch2 | Ilaya Rani Sandilyan | TamilNovel.in

Ilaya Rani Ch2 | Ilaya Rani Sandilyan | TamilNovel.in

64
0
Ilaya Rani Ch2 Ilaya Rani Sandilyan, Ilaya Rani Online Free,Ilaya Rani PDF,Download Ilaya Rani novel,Ilaya Rani book,Ilaya Rani free,Ilaya Rani full audio book
Ilaya Rani Ch2 | Ilaya Rani Sandilyan | TamilNovel.in

Ilaya Rani Ch2 | Ilaya Rani Sandilyan | TamilNovel.in

இளையராணி – சாண்டில்யன்

அத்தியாயம் – 2 ரஜனியின் வளையல்

Ilaya Rani Ch2 | Ilaya Rani Sandilyan | TamilNovel.in

சிசோதயர்கள் தலைநகருக்குள் புகுந்த அமர சிம்மன் பெரும் தியாகங்களுக்கும் வீரச்செயல்களுக்கும் பெயர் போன தனது மூதாதையர்கள் வாழ்ந்து வந்த அந்த நகரத்தைப் பார்த்து ஒருமுறை பெருமூச்சு விட்டான். பிறகு அப்புறமும் இப்புறமும் இருந்த பெரும் கட்டடங்களையும் வீர ஸ்தூபிகளையும் பார்த்துக் கொண்டே வீதிகளில் புரவியைச் செலுத்தினான். தூரத்தேயிருந்த இளையராணியின் அரண்மனையின் அந்தப்புரத்தையும் பார்த்தான். அவற்றை அடையாளம் கண்டுகொள்வது பெரும் கஷ்டமாகவும் இல்லை அவனுக்கு. மேவார் தலை நகரைப் பற்றியும் அதன் அமைப்பைப் பற்றியும் பாடாத தெருப் பாடகர்கள் ராஜபுனத்தில் கிடையாதல்லவா?

ஆகவே சிறுபிள்ளைப் பருவத்திலேயே தாயுடன் அம் மாநகரை விட்டு அகன்றாலும், அதைப்பற்றிய சிறப்புகளைக் கேட்டிருந்த அமரசிம்மன் அவற்றை மிக எளிதில் அடையாளங் கண்டுகொண்டானாகையால், சேனாதிபதி மாளிகை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். அப்படிச் சென்ற சமயத்தில் அடிக்கடி அரண்மனை அந்தப்புரத்தை நோக்கி, இந்த இடத்தில் என் தாயல்லவா உறைய வேண்டும்?’ என்ற எண்ணத்தால் மனக் கொதிப்பையும் அடைந்து அந்த கோபமும் அடங்காமலே சேனாதிபதி மாளிகையை அடைந்து புரவியிலிருந்து குதித்துத் தன் வீரனிடம் சேணத்தை எறிந்துவிட்டு மாளிகைக்குள் புகுந்தான். அவன் யாரென்று அறியாததால் தடை செய்ய முற்பட்ட இரு வீரர்கள் அவன் முகத்தில் ஜொலித்த கோபத்தைக் கண்டு விலகி நின்றனர். குறுக்கே கத்தியை நீட்டிய இருவர் கத்திகள் மின்னல் வேகத்தில் அமரன் உறையிலிருந்து உருவப்பட்ட வாளால் அகற்றப் பட்டன.

இந்த அமர்க்களங்களெல்லாம் மேலறையிலிருந்த சேனாதிபதியின காதுகளில் விழுந்தன. வருபவன் யாரென்று அவன் ஊகிக்கும் முன்பே, “இளவரசன் அமரசிம்மன் வந்திருக்கிறானென்று சேனாதிபதியிடம் சொல், ஓடு” என்ற சொற்கள் பலமாக ஒலித்தன. வீரன் ஓடிவந்து விஷயத்தை அறிவிக்கு முன்பே, வருபவன் யாரென்று உணர்ந்து கொண்ட சேனாதிபதி கிலியால் தத்தளித்தான். பெரும் புயலில் அகப்பட்ட தனிப் பயிர் எந்த நிலைமையில் இருக்குமோ அந்த நிலைமையில் இருந்தது அவன் மனநிலை. உள்ளத்தில் வேகமாக எழுந்து வீசிக்கொண்டிருந்த முரண்பாடான உணர்ச்சிகளால் சில சமயங்களில் ராணியின் பக்கமாகச் சாய்ந்தது. மீண்டும் வேறு எண்ணங்கள் அதைத் தூக்கி அரசகுமாரன் பக்கத்தில் சாய்த்தன. இப்படி அப்புறமும் இப்புறமும் எடுத்து வீசப்பட்டதால் சுழன்று செயலற்று விழும் ஸ்திதிக்கும் வந்தது.

எஜமான் ஒருவனாயிருந்தாலே அடிமைத் தொழில் செய்வது மிகவும் கஷ்டம். எஜமான்கள் ஒட்டிக்கு இரட்டிப்பாகி, யாருக்கு என்ன அதிகாரம், யார் சொல்வதைக் கேட்டால் பிழைக்கலாம் என்பதை அறியாத சேவகன் என்ன தான் செய்ய முடியும்? இப்பொழுது ஜெயசிம்மன்தான் அரசன்! அவன் அன்புக்கு இன்னும் பாத்திரமாய் இருப்பவள் இளையராணிதான். அவள் சொல்லைக் கேட்கலாமா? சரி கேட்கிறோம். நாளைக்கு நம் கதி என்ன? அமரசிம்மன் மூத்த குமாரன். மூத்தவன் இருக்கையில் இளையவனுக்குப் பட்டம் சூட்டுவதை பாலபத்திர வீரர்கள் அனுமதிக்கமாட்டார்களே, அமரன் கானே அரசனாகிவிடுவான், அப்பொழுது என்ன செய்வது?’ என்று சேனாதிபதி சிந்தித்தான். இந்த எண்ணங்கள் அவன் மனத்தில் மாறி மாறி ஓடி ஒரு நிலைக்கு வருமுன் வெளியே இரண்டு வாசல்களுக்கு அப்பால் யாரோ அதிகக் கோபத்துடன் இரைந்து பேசும் சப்தமும், துரிதமாக உறையிலிருந்து இழுக்கப்பட்ட ஒரு வாளின் கிரீச் என்ற சப்தமும் சேனாதிபதியை நிதானத்துக்குக் கொண்டு வந்துவிட்டன. தற்சமயம் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் தீபந்தான் தனக்குச் சரியான அடைக்கலம் என்று தீர்மானிக்கும் விட்டிற் பூச்சியைப் போலச் சேனாதிபதியின் மனம் ஒருவிதமாக ராணியின் பக்கமே சாய்ந்தது.

அதே சமயத்தில் “யாரடா அவன் சேனாதிபதி? எங்கே இருக்கிறான் பார், இந்த அறைதானா?” என்று அடையாளங் கேட்ட ஓர் அதட்டலான குரலைத் தொடர்ந்து விளையாட்டுப் பிள்ளை போன்ற ஒரு வாலிபன் உள்ளே நுழைந்தான்.

சேனாதிபதி தனது உடைகளைச் சரியாக இழுத்து விட்டுக்கொண்டு தலையை வணங்கி இளவரசனை மரியாதையாக வரவேற்று, “இப்படி உட்காரலாம்” என்பதற்கு அடையாளமாக ஓர் ஆசனத்தையும் காட்டினான்.

இளவரசன் ஒரு நிமிஷ நேரம் பதில் ஏதும் சொல்லாமல் ஆகாயமளாவியிருந்த ராஜகிருகத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டு நின்றான். சுமார் ஆறடி உயரம் வளர்ந்து போர்க்கவசங்களுடனும் நீண்ட வாளுடனும் இடுப்பில் இரு கைகளையும் கொடுத்துக்கொண்டு மஹாலின் உச்சியைப் பார்த்து நிற்கும் அரசகுமாரனைச் சேனாதிபதியும் ஏற இறங்கப் பார்த்து எடை போட்டுக் கொண்டான். ‘முகம் சிறு பிள்ளைத்தனத்தைக் காட்டுகிறது. ஆனால், அந்த நீண்ட கைகளில் கெட்டித்திருக்கும் சதைகளின் உரமும், அவற்றிலிருக்கும் ஆழ்ந்த வெட்டுக் காயங்களும் நீண்ட கால தேகப்பயிற்சியையும் யுத்த அது வத்தையும் காட்டுகின்றன. இந்தப் பேர்வழியிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டும் என்று சேனாதிபதி தனக்குள் சொல்லிக் கொண்டான்.

அப்பொழுது தன் நினைவுகளிலிருந்து விழித் தெழுந்த அரசகுமாரன், சேனாதிபதியின் கண்கள் தன் கையிலிருந்த வடுக்களை நோக்குவதைக் கண்டு சிரித்தான். மேவார் சேனாதிபதிக்குக் கத்திக்காயத்தைப் பார்ப்பதே புதிதாயிருக்கிறது போலிருக்கிறதே” என்று சொன்னான்.

ராஜகுமாரன் சொன்ன வார்த்தைகளில் அடங்கியிருந்த ஏளனத்தைச் சேனாதிபதி அறியாததில்லை. தன்னைப் பேடி என்று அழைப்பதற்குப் பதிலாகத் தான் ராஜகுமாரன் இப்படிச் சொல்கிறான் என்பது சேனாதிபதிக்குத் தெரியும். சில சமயங்களில் அர்த்தம் தெரிந்தாலும் தெரியாதது போல் பாவனை செய்வதில் லாபம் இருக்கிறது. அத்தகைய ஒரு சமயம் இது என்பதையும் ஜெயபாலன் உணர்ந்திருந்தான். ஆகவே அவனும் மிகவும் சாமர்த்தியமாகச் சிரித்துக் கொண்டே “கத்திக் காயம் எனக்குப் புதிதல்ல. ஆனால் தங்கள் உடம்பில் இப்பொழுது தான் புதிதாகப் பார்க்கிறேன்” என்றான்.

அதற்கும் ராஜகுமாரன் சளைத்தவனாகக் காணவில்லை. “என் உடம்பை இதற்கு முன் எத்தனை தடவை பார்த்திருக்கிறீர்?” என்று கேட்டான்

சேனாதிபதி தான் மிகவும் கடுமையான பேர்வழியிடத்தில் சிக்கியிருப்பதை உணர்ந்து கொண்டான்.
‘இதென்னடா எதைச் சொன்னாலும் எப்படியாவது மடக்கிச் சண்டைக்கு இழுப்பான் போலிருக்கிறதே’ என்ற பயத்தில், “அந்தப் பாக்கியம்தான் ‘நாங்கள் செய்யவில்லையே ராஜகுமார்” என்றான் மிகுந்த பணிவுடன். குரலில் சிறிது துக்கத்தைக்கூடக் காட்டினான்.

அந்தப் பதிலில் அமரனின் மற்றொரு குணாதி சயத்தைச் சேனாதிபதிக்குக் காட்டிக் கொடுத்தது. அமரன் சேனாதிபதியை நோக்கித் திரும்பித் தன் கையை அவன் தோள் மேல் போட்டு, “அதற்கு நீங்கள் என்ன செய்யலாம் சேனாதிபதி? அப்பா இஷ்டம் அப்படியானால் அதற்கு நாமெல்லாம் தலை வணங்குவது தான் நியாயம். என் மாதா தன் வாழ்வையே அவருக்காக வெறுத்துச் சந்நியாசினிபோல் காலங் கழிக்கவில்லையா?” என்றான். இதைச் சொல்லும் போது அழகிய அவன் முகத்தில் வருத்தம் படர்ந்தது.

ராஜகுமாரனின் பெருந்தன்மையைக் கண்டு சேனாதிபதி பிரமித்துப் போனான். ராஜபுதனத்தின் ஜோதியாக ஜனங்கள் அவனை மதித்துக் கொண்டாடி வருவதில் தவறேதுமில்லை என்பது சேனாதிபதிக்கு வெட்டவெளிச்சமாகி விட்டது.

“பெருந்தன்மையும் வீரமும் பொருந்திய இவன் எங்கே, இளையராணியின் சூழ்ச்சிகளையே பக்கபலமாகக் கொண்டு அரசைப் பறிக்க இருக்கும் பயந்தாங் கொள்ளியான ஜஸ்வந்தசிம்மன் எங்கே!” என்று நினைத்துச் சேனாதிபதி கலங்கிப்போனான். அமரசிம்மனுக்கும் ஜஸ்வந்தசிம்மனுக்கும் உள்ள தாரதம்மியம் ‘மலைக்கும் மடுவுக்கும் போன்றதென்பதை ஜெயபாலன் தெரிந்து கொண்டான். மலையைப் பார்க்கிறோம். அதன் திடத்தையும் அது ஆகாயமளாவி நிற்பதையும் ‘கண்டு பயப்படுகிறோம். அடுத்தபடி கீழே இருக்கும் அகாதமான மடுவைப் பார்க்கிறோம். அதுவும் அச்சம் கைத்தான் தருகிறது. மலை இப்பொழுது திடீரென இடிந்து விழாது என்ற தைரியத்தில் மடுவில் இறங்குவது போல இளையராணியின் சதியில் இறங்கி இருந்தான் சேனாதிபதி. எதிரே இருப்பது எரிமலை; அது எந்தச் சமயத்திலும் வெடிக்கக் கூடியது என்பதை அவன் அறியவில்லை.

அமரசிம்மன் கையிலிருந்த கேடயத்தை ஒரு மூலையில் எறிந்து விட்டுச் சேனாதிபதி முதலில் காட்டிய ஆசனத்தில் அமர்ந்தான். இடுப்பிலிருந்த கத்தியைக் கழற்றித் தனக்கு முன்னால் ஊன்றிக்கொண்டு சேனாதிபதியுடன் பேச ஆரம்பித்தான்.

“சேனாதிபதி! அறையில் நாம் தனியாகப் பேச முடியுமா? முக்கியமான விஷயத்தைப் பற்றிப் பேச வேண்டும்” என்றான் அமரன்.

“ஆகா! பேசலாம். இங்கு யாரும் வரமாட்டார்கள். ஆனால் பேச்சுக்கு என்ன அவசரம்? தங்களுடன் வந்திருக்கும் காவற்படையைப் பராமரிக்க ஏற்பாடு செய்து விட்டுத் தாங்களும் ஸ்நானபானாதிகளை முடித்துக் கொண்டபின் பேசினால் போகிறது” என்றான்.

“காவற்படையா? நான் யாரையும் அழைத்து வர வில்லையே?”

“என்ன! மேவார் இளவரசராகிய தாங்கள் காவற்படை இல்லாமல் தன்னந்தனியாகவா வந்தீர்கள்?”
“தனியாக வரவில்லை. ஒரு சேவகனை அழைத்து வந்திருக்கிறேன்.”

“துணையேதுமில்லாமலா வந்திருக்கிறீர்கள்?”

“துணையென்ன வேண்டியிருக்கிறது சேனாதிபதி? நான் என்ன விரோதி ஊருக்கு வந்திருக்கிறேனா?” என்று அமரன் சேனாதிபதியை நோக்கினான்.

அந்தப் பார்வை கூரிய கத்திபோல் தன் இதயத்துக்குள் ஊடுருவிச் சென்று அங்கு ஆராய்ச்சி செய்வது ‘போல் சேனாதிபதிக்குத் தோன்றியது. அமரசிம்மன் கண்கள் அறையைச் சுற்றி உலாவி அளவெடுப் பதையும் பார்த்த சேனாதிபதி, ‘ஓகோ! நாம் எடை போட்டதிலும் தப்பு இருக்கிறது. நாம் சமாளிக்க வேண்டியது லேசான பேர்வழியல்ல; சுத்த வீரத்தனத் தோடு எந்த நிலைமையையும் சமாளிக்கவல்ல, ஆழ்ந்த அனுபவசாலியிடம் அகப்பட்டுக் கொண்டிருக்கிறோம்’ என்று தெரிந்து கொண்டான்.

ஆகவே, “அதற்காக ராஜகுமார் பட்டத்துக்கு வரக் கூடிய அரசகுமாரன் தன்னந்தனியே வருவது முறையல்ல என்பதாகச் சொன்னேனே தவிர வேறல்ல” என்று மழுப்பினான்.

அமரன் முகத்தில் சோகம் சிறிது கிளம்பியது, அவன் கோபத்திற்கு அறிகுறியாகப் பாதரக்ஷைகள் தரையில் அழுந்தித் தேய்ந்தன. “முறைப்படிதான் இப்பொழுது எல்லாம் நடக்கிறதா சேனாதிபதி? பட்ட மகிஷி மன்னனைப் பிரிந்திருப்பதும் காமாந்தகனான அரசன் இளையராணியின் மோகத்தில் மூழ்கித் தவிப்பதும் மேவார் வம்சத்தின் முறைதானோ?” என்றான்.
சேனாதிபதி சிரமப்பட்டுக் கண்களில் நீர்த்துளிகளை வரவழைத்துத் துடைத்துக் கொண்டான். ‘தசரதன் காலந்தொட்டு இதே கதைதான் ராஜகுமார், அதற்கு என்ன செய்யலாம்? ராஜபுதனம் செய்த துர் பாக்கியம் அது. இளையாள் மோகத்தில் சிக்கிய எந்த அரசர் உருப்பட்டார்?” என்று கூறினான்.

“தசரதன் காலத்துக்கும் ஜெயசிம்மன் காலத்துக்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது சேனாதிபதி. அந்தக் காலக்தில் இளையராணி சாகஸத்தால் ராமன் காட்டுக்குச் சென்றான். ஆனால், இந்த அமரசிம்மன் இந்த மேவார் சிம்மாசனத்தில் ஏறி உட்காரப் போவது நிச்சயம். அதைத் தடுக்க யாராலும் முடியாது!” என்று அமரன் ஆவேசத்துடன் கத்தியைப் பூமியில் தட்டினான்.

இளைய ராணியின் ஏற்பாடுகளைக் கேட்டபோது சேனாதிபதி அமரன் கதி அதோ கதிதான் என்று தீர்மானித்தான். இப்பொழுது அமரனின் திடசித்தத்தைப் பார்த்தபோது, ‘ஆசாமி மிகவும் பொல்லாதவன்’ என்று அவனிடம் நம்பிக்கை வேரூன்றலாயிற்று.

“தெய்வச் சித்தம் அப்படியே இருக்கட்டும் இளவரசே” என்று சமாதானமாகச் சொல்லிவிட்டு, “தாங்கள் வந்த விஷயத்தைச் சொல்லவில்லையே” என்று சேனாதிபதி கேட்டான்.

அமரன் பதில் சொல்லவில்லை. தன் கச்சைக்குள் கையை விட்டு இரண்டு பெரிய தங்க வளையல்களை எடுத்துச் சேனாதிபதியின் கையில் கொடுத்தான். அவற்றை இரண்டு கைகளிலும் மரியாதையாக வாங்கினான் சேனாதிபதி. அவற்றின் மேல் மெள்ளப் பார் வையைச் செலுத்தியதும் அவன் கண்கள் மிகுந்த பீதியாலும் ஆச்சரியத்தாலும் இறந்தவன் விழிகளைப் போல் நிலைத்து நின்றுவிட்டன. தான் ராணியிடம் செய்து கொண்ட ஒப்பந்தம் ஒவ்வொரு நிமிடமும் பேராபத்தாகச் சூழ்ந்து நெருங்குவதைக் கண்ட சேனாதிபதிக்குப் பேசக்கூட நா எழவில்லை. அந்த இரண்டு வளையல்களிலும் அம்பர் சமஸ்தான ராஜமுத்திரைகள் இருப்பதைக் கண்ட சேனாதிபதியின் நிலைமையை நீங்களே ஊகித்துக் கொள்ளலாம். புத்திரர்களிடையில் அந்தக் காலத்தில் இருந்து வந்த ஒரு வழக்கத்தைத் கெரிந்துகொண்டால் சேனாதிபதியின் நிலைமையை இன்னும் நன்றாக ஊகிக்க முடியும்.

ராஜபுத்திர ஸ்திரீகளுக்கு அந்தக் காலத்தில் ஆபத்து ஏதாவது ஏற்படுவதாயிருந்தால் அவர்கள் தங்களுக்கு இஷ்டமான ஒரு புருஷனுக்குத் தங்கள் கைவளையல்களையோ கடகங்களையோ, ரக்ஷைகளையோ அனுப்புவார்கள். அதைப் பெற்றுக்கொள்ளும் வீரன் அவளுக்கு உதவியே ஆக வேண்டும். எந்த ஸ்திரிக்கு உதவுகிறோம் என்பதை அறியாமலேகூட வீரர்கள் தங்கள் உயிரைக் கொடுத்து உதவுவார்கள். இப்படிக் கங்கணம் கொடுப்பதற்காக ஒரு பண்டிகையும் நடப்பதுண்டு. அதற்கு ராசிப் பண்டிகை என்று பெயர்.

ஆகையால் அம்பர் சமஸ்தான ராஜமுத்திரைகளுடன் கூடிய வளையல்களை அமரன் தன் கைகளில் கொடுத்ததும் விதியின் விசித்திர விளையாட்டைப் பற்றி பெரிதும் வியந்தான் சேனாதிபதி.

“இந்த வளையல்கள் அணிந்த கைகளுக்குச் சொந்தமானவளின் பெயர் ரஜனியாம். அவள் மிகுந்த அழகியாகத்தான் இருக்கவேண்டும்” என்றான் அமரன்.

மதிமயங்கியிருந்த சேனாதிபதியும் ஏதோ நினைத்துக் கொண்டு வாய் தவறி, “ஆம்” என்று சொல்லி விட்டான்.

அடுத்த நிமிஷம் இரும்பு போன்ற ஒரு கை சேனாதி பதியின் கழுத்தருகில் இருந்த உடையைப் பிடித்துக் குலுக்கியது. கூரிய இரு கண்கள் அவன் கண்களுக்கு வெகு அருகில் வந்து இரண்டு நெருப்புப் பொறிகள் போல் ஜொலித்தன.

“சேனாதிபதி! அம்பர் அரசகுமாரி அழகியென்று உமக்கு எப்படித் தெரியும்?” என்று வினவினான்.

“குடிமக்கள் அப்படித்தான் சொல்லிக் கொள்ளு கிறார்கள்” என்றான் சேனாதிபதி.

அடுத்த கேள்வி சேனாதிபதியைத் திக்குமுக்காடச் செய்தது. “குடிமக்களிடம் உமக்கு நெருங்கிப் பழக்கமோ?” என்று வினவினான் அரசகுமாரன்.

“ஆம்” என்றான் சேனாதிபதி.

“குடியிடமா? குடிமக்களிடமா?”

“இளவரசே!’

“சேனாதிபதி! இங்கு வருமுன் அனைத்தையும் விசாரித்துக் கொண்டு தான் வந்திருக்கிறேன். நீர் பெரும் குடிகாரரென்றும், கோழையென்றும் இளைய ராணி சோல்கிறபடி ஆடும் பதுமையென்றும் மக்கள் பேசிக் கொள்ளுகிறார்கள். அது மட்டுமல்ல…”

“வேறென்ன?”

“நீர் அடிக்கடி அரண்மனைக்குச் செல்வதாகவும், எனது தாயின் அந்தஸ்தைக் குலைக்க இளைய ராணியிடம் சதி செய்வதாகவும் கேள்விப்படுகிறேன். ரஜனி என்னும் அம்பர் நாட்டுப் பெண்ணை என் இளைய தாயின் மகனுக்கு மணமுடிக்க ஏற்பாடு நடப்பதாகவும் கேள்விப்படுகிறேன். உண்மையா?”

இந்தக் கேள்விக்கு சேனாதிபதி என்ன பதில் சொல்வான், “முழுவதும் பொய்” என்று கூறினான். அத்துடன் “சற்றுக் கழுத்தை விடுங்கள்” என்றும் கேட்டான்.

அமரசிம்மன் சேனாதிபதியின் கழுத்துச்சட்டையை விட்டான். “சேனாதிபதி! இந்த வளையலை அனுப்பி வம்பர் அரசகுமாரி என் ஆதரவைத் தேடுகிறார் வந்திருக்கிறேன். அவள் எங்கிருக்கிறாள்?” என்று வினவினான்.

“அரண்மனையில்” என்றான் சேனாதிபதி”.

சரி. கிளம்பும். போவோம்” என்றான் அமரன்.

‘’எங்கு?” என்று அச்சத்துடன் கேட்டான் சேனாதிபதி”.

“அரண்மனைக்கு, அந்தப்புரத்திற்கு”

“தாங்கள் சற்று இளைப்பாறிவிட்டு, உணவருந்தி விட்டு…”

“அவசியமில்லை.”

“நெடுந்தூரம் பயணம் செய்திருக்கிறீர்கள், களைப்பாயிருக்கும்.”

“ராஜபுத்ரர்கள் கடமை முன்னிடும்போது களைப்பைக் கவனிப்பதில்லை.”

சேனாதிபதிக்கு என்ன பதில் சொல்வதென்று தெரி யாததால் மெள்ள உண்மையை அவிழ்த்தான். “இளவரசே! நீங்கள் அரண்மனை செல்லவேண்டாம். அங்கு உங்களுக்கு ஆபத்துக் காத்திருக்கிறது” என்றான்.

“மிகவும் மகிழ்ச்சி!”

“எதற்கு மகிழ்ச்சி?”

“ஆபத்தே எனக்கு மிக்க மகிழ்ச்சி. அது வீரன் மகிழ்ச்சியல்லவா சேனாதிபதி” என்ற அமரன் அரண்மனை செல்ல எழுந்து,”சேனாதிபதி, கிளம்பும்” என்றான்,

எதோ மரண தண்டனைக்கு அழைப்பது போன்ற உணர்ச்சி ஏற்படவே சேனாதிபதி விழித்தான். கடைசியில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, “நீங்கள் அரண்மனை சென்றால் அழிக்கப்படுவீர்கள். அதற்கு நான் உடந்தையாக இருக்க முடியாது” என்று திட்டமாகக் கூறினான்.

“அப்படியானால் வேறு வழி இருக்கிறது” என்றான் அமரன்,

“என்ன வழி?” என்று வினவினான் சேனாதிபதி.

வமியைச் சொன்னான் அமரன். அதைக் கேட்ட சேனாதிபதி அடியோடு நிலைகுலைந்து திக்பிரமை பிடித்து நின்றான்.

Previous articleIlaya Rani Ch1 | Ilaya Rani Sandilyan | TamilNovel.in
Next articleIlaya Rani Ch3 | Ilaya Rani Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here