Home Historical Novel Jala Deepam Part 1 Ch1 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 1 Ch1 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

117
0
Jala Deepam Ch1 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 1 Ch1 | Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 1 Ch1 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 1 கொங்கணியின் மடி

Jala Deepam Part 1 Ch1 | Jala Deepam Sandilyan | TamilNovel.in

இதயசந்திரன் இமைகள் சற்றே விரிந்து விழிகளின் இருண்ட கருமணிகளுக்கு இடங்கொடுத்தாலும், ஏதோ மங்கலான வெளிச்சமும், வெளிச்சத்தின் ஊடே புகுந்து வந்த பனி மண்டலமும், பனி மண்டலத்தின் இடை யிடையே முத்து முத்தாய்ப் பாய்ந்த வைரக் கற்களுமே கண்களின் பார்வைக்குப் புலப்பட்டதால், இருப்பது இக லோகமா சொர்க்கமா, இரண்டுமற்ற சொப்பன உலகமா என்பதை நிர்ணயிக்க முடியாத நிலையில் அவன் தனது தலையை இருபுறமும் அசைத்துப் பார்த்தான். அசைந்த தலை திடீரென நீரில் மூழ்கிவிட்டதாலும், ஏதோ பேரிரைச்சல் காதுகளில் விழுந்ததாலும், எதையும் நிர்ணயிக்கத் திராணியற்ற அவன், விழிகளை மீண்டும் மூடி மூச்சையும் இழுத்துப் பிடித்துக் கொண்டான். அடுத்த ஜலதீபம் வினாடி மூழ்கிய நீரிலிருந்து விடுபட்ட முகத்தில் சுரணை முன்னைவிடச் சற்று அதிகமாக வரவே, தானிருப்பது பூலோகந்தான் என்ற முடிவுக்கு வந்து. அந்த முடிவின் விளைவாகச் சற்றுத் திருப்தியையும் முகத்தில் படரவிட்டுக் கொண்டான். அந்தத் திருப்தியின் இடையே லேசாகப் புன்முறுவல் அவன் உதடுகளில் தவழத் தொடங்கியது.

சொர்க்கத்தின் சிறப்புக்களை புராணங்கள் எத்தனை தான் வர்ணித்தாலும், பேரின்பத்தை அடைவதன் உயர்வை வேதாந்தங்கள் எத்தனைதான் போதித்தாலும். பூலோகத்தில் இருப்பதில் மனிதன் எத்தனை திருப்தி அடைகிறான் என்பதை எண்ணினான் இதயசந்திரன் அந்தச் சமயத்தில். உலகத்தில் மதங்கள் பல இருந்தாலும், தத்துவங்கள் பல இருந்தாலும், இந்த உலகத்தைவிட்டு மேல் உலகம் சென்றால் அங்கு எத்தனை அமைதியும் சந்துஷ்டியும் உண்டு என்பதை எத்தனை மதங்களும் தத்து வங்களும் வலியுறுத்தினாலும், உயிருடன் பூவுலகத்தில் கூடியவரை வாழவேண்டும் என்ற பூதத்துவம் மனிதனை விட்டு அகலாததை நினைத்து, ”மண்ணாசை எவ்வளவு சிறந்தது!” என்று உள்ளுக்குள் சொல்லிக் கொள்ளவும் செய்தான் அவன்.

அவனிருந்த அரை மயக்கத்திலும் அவன் மண்ணில் கிடந்தது அவனுக்குப் பெரும் துணிவை அளித்தது. துணிவு சுரணையைத் தூண்டியது. பூமியின் ஸ்பரிசம் சுரணையைத் தூண்டுவது எத்தனை விந்தை என்பதையும் எண்ணிப்பார்த்த இதயசந்திரன், ‘மண்ணில் உயிர் இருப்பதால் சுரணையைத் தூண்டுகிறது,’ என்று விளக்க மும் செய்து கொண்டான். ‘மண்ணிலிருந்து மரம், செடி, கொடிகள் முளைக்கின்றன. அவற்றின் ஜீவ சத்துக்களிலிருந்து மனிதனும் சக்தியையும் உயிர்த் துடிப்பையும் பெறுகிறான். ஆகவே இந்த மண்ணைவிட்டு விலக எவன் இஷ்டப்படுவான்? என்று தன்னை வினவியும் கொண்டான் அவன். இன்னொரு முறை அவன் உடல்மீது கொங்கணியின் மடி நீர் திரண்டது. ஆனால் இம்முறை தலை மூழ்கவில்லை. உடலின் கழுத்துக்குக் கீழுள்ள பகுதியே மூடிற்று, அந்த நீர் மூட்டம் விலகியபோது மார்பு மீது தங்கிவிட்ட ஓரிரு கிளிஞ்சல்களிலிருந்தும், மெள்ளப் பக்கவாட்டிலிருந்து தங்களது நீளக் கால்களைக் கொண்டு தொற்றிக் கழுத்தை நோக்கி ஏறி வந்த இரண்டு நண்டுகளிலிருந்தும், தானிருப்பது ஏதோ ஒரு கடற்கரை என்பது அவன் உணர்ச்சிகளுக்கு நன்றாகத் தெரிந்தது.

உணர்ச்சிகளுக்குத்தான் விளக்கம் கிடைத்ததே தவிர விழிகளுக்கு அத்தனை விளக்கம் கிடைக்கவில்லை. திறந்த கண்களுக்கு இரவு பகல் தெரியவில்லை. அந்தப் பழைய மங்கலான வெளிச்சமும் பனி மண்டலமுமே தெரிந்தன. ஆனால் இடையிடையே பாய்ந்த அந்த வைரக்கற்கள் தெரியவில்லை. இருப்பினும் சிந்தனை தெளிவடைந்து வேலை செய்ததால் தெரிந்த மங்கலான வெளிச்சம் வெண் மதியின் வெளிச்சமாகத்தானிருக்கவேண்டுமென்றும், அதை அவ்வப்பொழுது லேசாக மறைக்கும் சின்னஞ்சிறு வெள்ளி மேகங்களே கண்களுக்குப் பனிமண்டலங்களாகக் காட்சி யளித்திருக்கவேண்டுமென்றும் ஊகித்தான் இதயசந்திரன். முதலில் தெரிந்து பின்பு மறைந்துவிட்ட வைரக் கற்கள் கூட அலைகள் வீசிய நீர்த் திவலைகளாகத்தானிருக்குமென்றும் முடிவு செய்து கொண்டான். ஆகவே நன்றாகக் கண் களைக் கசக்கிக்கொள்ள இரு கைகளையும் எடுக்க முயன்றதும் அவன் நினைப்பு முன்னைவிட அதிகமாகப் பளிச்சிடவே, தன் நிலைமை வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தது அவனுக்கு. ஒரு கையை அவனால் நன்றாகத் தூக்க முடிந்தாலும் இன்னொரு கை இடியெனக் கனத்து அகல மறுத்தது. அந்தக் கை வலித்த வலியில் அவன் முகத்தை வேதனையுடன் சுளித்தான். வேதனையும் வலியும் அவன் சுரணைகளை நன்றாகத் தூண்டிவிட்ட தன்றி, கண்களுக்கும் பார்வை அதிகமாகக் கொடுத்த தால், அலை நீரும் அது அள்ளி வீசிய சிறுமணலும் கண்களுக்கு எரிச்சலைக் கொடுத்ததை உணரக்கூடிய ஜலதீபம் நிலைக்கு அவன் வந்துவிட்டதால், அசைக்க முடிந்த இடது கையால் கண்ணின் மணலிரண்டை விழி ஓரங்களில் ஒதுக்கி, கழுத்துக்கருகில் வந்து ஊட்டியைக் கௌவ முயன்ற நண்டுகளையும் பிடித்தெறிந்தான்.

இதற்குப் பின்பு முழுச் சுரணை அடைந்துவிட்ட இதயசந்திரன் கண்களுக்கு வான்மதியும் நன்றாகக் காட்சியளித்தான். பார்வை நன்றாகக் கிடைத்ததும் வாளைச் சிறிது நேரம் உற்று நோக்கிவிட்டுத் தலையசைத்து அக்கம் பக்கம் பார்த்த அவன் கண்களின் இடது பக்கத்தில் கடலலைகளும் வலது பக்கத்தில் ஸஹ்யாத்ரி எனப் புராணங்களும், காட்மாதா என மகாராஷ்டிரரும், மேற்குத் தொடர்ச்சிமலை என நவீன பூகோள ஆசிரியர்களும் அழைக்கும் மலைத்தொடரின் பேருச்சிகளும் தெரிந்ததால், ஓரளவு ஆசுவாசப் பெருமூச்சும் விட்ட இதயசந்திரன், தன் உடலை மெள்ள அலையோரத்திலிருந்து நன்றாகக் கரைக்கு இழுக்க முயன்றான். அப்பொழுது அவனுக்குத் தன் உண்மை நிலை சந்தேகமறத் தெரிந்ததால் திக்பிரமை இதயத்தைச் சூழ்ந்துகொண்டது. உடலை அணுவளவும் நகர்த்தத் தன்னால் முடியாதென்பதும், யாராவது சீக்கிரம் உதவிக்கு வந்தாலொழிய எந்த மண்ணின் பிரபாவத்தைப் பற்றிச் சற்று முன்பு எண்ணி மகிழ்ச்சியடைந்தானோ அந்த மண்ணிலிருந்து தான் போய் விடுவது பரம நிச்சய மென்பதையும் உணர்ந்ததால், தனக்கு உணர்ச்சி திரும்பியது நன்மைக்குத்தானா என்றுகூடச் சந்தேகித் தான் இதயசந்திரன், வானவீதியில் தன்னைப் பார்க்கும் வெண்மதி தன்னைப் பார்த்து நகைக்கிறானா திகைக்கி றானா என்பது புரியாததால் திரும்ப ஒருமுறை கடலை நோக்கவும் செய்தான்.

அப்பொழுது ஆனி மாதமில்லாததால் அரபிக் கடலின் அலைகள் பனைமர உயரத்துக்கு எழாவிட்டாலும், திதி பௌர்ணமியாகையால் சாதாரண நாட்களைவிட அதிக உயரத்துக்கு அலைகள் திரண்டு வருவதை அவன் கொங்கணியின் மடி கண்கள் கண்டன. தான் கடலோரத்தில் தள்ளப்பட் டிருந்தாலும் வரும் அலைகள் எட்டவே மடிந்து திரை நுரை மட்டுமே தன் மார்புமீதும் ஒவ்வொரு சமயம் முகத்தின் மீதும் புரளுமென்றாலும், நாழிகை ஏற ஏற ஏதாவது பேரலைகளிரண்டு கரையை ஆக்ரமித்தால் தன்னை உருட்டிக்கொண்டு போய்த் தனக்கு உம்பருலகை அளித்துவிடும் என்பதைச் சந்தேகமறப் புரிந்து கொண்டான் இதயசந்திரன். வானத்தை நன்றாகக் கண் கொண்டு மீண்டும் நோக்கிய அவன் சந்திரனிருந்த இடத்திலிருந்து இரவு இன்னும் உச்சி காலத்தை நெருங்க வில்லையென்பதை முடிவு செய்து கொண்டான். நடு உச்சி வரவரப் பேய் அலைகள் கரையை நோக்கிப் பாய்ந்து வருமாதலால் அதற்குள் தனக்கு யாராவது உதவினா லொழிய தான் கடலுக்குள் மீண்டும் சென்றுவிட வேண்டி யிருக்குமென்பதை நன்றாக உணர்ந்து கொண்டான். இதயத்தில் உதயமானாலும் அதற்கு வாய்ப்பு இல்லை யென்றே அவன் முடிவில் எண்ணினான். அதற்குக் காரணமும் இருந்தது.

அவன் எந்த மரக்கலத்தில் வந்தானோ அந்த மரக்கலம் கரைக்கு அருகாமையிலேயே கொள்ளைக்காரர்களால் தாக்கப்பட்டிருக்க, பெரும் பீரங்கிகள் இரு கப்பல்களிலும் சப்தித்திருக்க, தீப்பிடித்த கப்பலிலிருந்து பாய்மரத் தண் டாடுதான் கடலில் விசிறப்பட்டிருக்க, அந்தப் பெரும் நிகழ்ச்சியைக் கடலோரக் கிராமங்கள் எப்படிப் பார்க்காமலிருக்க முடியும், பார்த்திருந்தால்; கடற்கரையில் கூட்டம் எப்படி இல்லாதிருக்கும் என்று யோசித்தான் இதயசந்திரன் ஆகவே நடந்த அந்த உக்கிரமான கப்பற் போரும், மனித சஞ்சாரம் அதிகமிராத கரைக்கருகேயுள்ள கடலில் தான் நடந்திருக்க வேண்டுமென்றும், தான் கடலோரத்தில் தள்ளப்பட்டிருந்தாலும் தன்னைக் கரையோரத்தில் தள்ளிய அலைகளே திரும்பவும் தன்னைத் தங்களிடம் அழைத்துச் சென்று விடுமென்றும் தீர்மானித்தான். அசந்தர்ப்பம் எத்தனை இருந்தாலும் அபாயம் மீறிவிட்டதாக எண்ணமெழுந்தாலும், உயிர் ஆசை மனித முயற்சியை நன்றாகத் தூண்டும் வேகமுள்ள தாதலால், அவன் இடது கையைத் தூக்கி வலது கையில் பாய்ந்திருந்த மரச்சிலாம்பைப் பல்லைக் கடித்துக்கொண்டு பிடுங்கினான்.

பிறகு இடது கையையும், சற்று ஊன்றியதும் மரண வலியளித்த வலது கையையும் இருமுறை ஊன்றிக் கரை மீது நகர்ந்தான். அப்படியும் இரண்டே அடிகள் தான் நகர முடிந்தது அவனால். மரச்சிலாம்பு பிடுங்கப்பட்டதால் பீறிட்டு வெளிவந்த குருதி மண்ணை மெல்ல நனைத்தது. சிலாம்பு பிடுங்கப்பட்டதால் திறந்த காயத்தில் பட்ட மணலும் மணலிலிருந்த உப்பு நீரும் அசாத்திய எரிச்சலைக் கிளப்பி அவன் உயிரை உறிஞ்சிவிடும் நிலைக்குக் கொண்டு வந்தது. குருதி அதிகப்பட்டதால், மெள்ள மெள்ள மீண்டும் சுரணை இழக்க ஆரம்பித்தான் அவன். அதுவரை சகலத்தையும் காட்டிய கண்கள் மீண்டும் மெள்ள மெள்ளப் பஞ்சடைய ஆரம்பித்தன. ஆரம்பித்த வேகத்தில் இருண்டும் விட்டன.

நீண்ட நேரம் கழித்து இரண்டாம் முறையாக அவன் நினைப்பு மீண்டபோது தனது நிர்க்கதி நன்றாகப் புரிந்ததால் அவன் ஆகாயத்தைப் பார்த்தவண்ணம் ஆண்டவனைத் தியானித்தான். மனித சக்திகள் பயனற்றுப் போகும்போதுதான் மனிதன் ஆண்டவனைச் சந்திக்கிறான் என்ற ஆன்றோர் போதனை எத்தனை உண்மையானது என்று அந்தச் சமயத்தில் தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டே இதயசந்திரன், “உன்னைத் தவிர வேறு கதியில்லை” என்று வானை நோக்கி. உள்ளத்திலிருந்து அபயக் குரல் கொடுத்தான். ‘திடவிசும்பு எரிவளி நீர் நீலம் இவைமிசை உடல்மிசை உயிரெனக் கரந்து எங்கும் பரந்துள’ பரந்தாமன் ஏன் என்னைக் காக்க வழி செய்யக்கூடாது என்று கேட்கவும் செய்தான். அவன் அபயக் குரல் வானத்தை எட்டித்தானிருக்க வேண்டும். கடல் ஓரத்தே ஓர் உருவம் குனிந்தும் நிமிர்ந்தும் எதையோ பொறுக்கிக்கொண்டு மடியில் கட்டியவண்ணம் நடந்து வந்துகொண்டிருந்தது. நிலவொளியில் ஆஜானுபாகுவான அந்த உருவத்தின் மேனி தங்கத் தகடுபோல பளபளத்ததையும் அதன் இடது கையிலிருந்த நீளத் தடியின் நுனியிலிருந்த தங்கப் பூண்கூட அந்த உருவத்தின் மேனிப் பளபளப்பின் காரணமாகச் சற்றுக் குறைந்தே பிரகாசித்ததையும் கண்ட இதயசந்திரன் தன் பிரார்த்தனை வீண் போகவில்லை என்பதைப் புரிந்து கொண்டான். அந்த உருவம் அவனிருப்பதை அறியாமலேயே குனிந்து குனிந்து அலைகளை ஆராய்ந்தவண்ணம் வந்து ஓரிடத்தில் சற்று நின்று ஸஹ்யாத்திரி மலைப்பக்கமாகக் கண்களைத் திருப்பியது.

வந்த உதவி திரும்பிவிட்டால் என்ன செய்வதென்ற வேதனையில் உடலில் திராணியிருந்த மட்டும் முனகினான் இதயசந்திரன். அலைகளின் பேரிரைச்சலில் தன் முனகல் கேட்குமோ என்ற அச்சம் அவன் மனதில் புகுந்து இதயத்தைத் திக்திக்கென்று அடிக்க வைத்துக் கொண்டிருந்த சமயத்தில், அந்த ஆஜானுபாகுவின் கண்கள் திடீரென அவனிருந்த திசையில் நிலைத்தன. அதற்குப் பிறகு இரண்டு வினாடிகளில் இதயசந்திரன் இருந்த இடத்தை அது அடையவும் செய்யவே, தன் முன்னிருப்பது ஒரு துறவியென்பதைப் புரிந்து கொண்ட இதயசந்திரன் கைகளைக் கூப்ப மெள்ளக் கைகளைத் தூக்க முயன்றான். இடது கை மட்டுமே எழுந்ததால் அந்தத் துறவி அவன் நிலைமையைப் புரிந்துகொண்டு அவனை அசையாமலிருக்கும்படி சைகை செய்து அவனருகே மண்டியிட்டார். அருள் நிரம்பிய கண்கள் இதயசந்திரன் கண்களைச் சந்தித்தன. அந்த அருள் விழிகளில் ஈட்டி போன்ற கூர்மையும் இருப்பதைக் கண்ட அந்த வாலிபன் இடது கையால் தனது வலது கையைச் சுட்டிக்காட்டினான். துறவி புரிந்து கொண்டதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்து அவனது காயத்தைப் பரிசோதித்தார். பிறகு எழுந்து தனது மடியிலிருந்த ஒரு சிறு சங்கை எடுத்துக் கிரீச் சென்று காதைத் துளைக்கும்படியாக ஊதினார்.

அதுவரை மனித சஞ்சாரமற்ற அந்தப் பகுதியில் எங்கோ காலடிகள் ஓடிவரும் சத்தம் கேட்டது. அந்தச் சத்தம் கலீர் கலீரெனக் காதுக்கு மிக இன்பமாயிருந்தது. அடுத்த அரை நாழிகை நேரத்துக்கு ஐந்தாறு பேர் துறவியிருந்த இடத்துக்கு ஓடிவந்ததும் அந்த ஐந்தாறு பேரும் பெண்களாயிருப்பதைக் கண்ட இதயசந்திரன் வியப்பு உச்சியை எட்டிக் கொண்டிருந்தது. அந்தப் பெண்களில் முகப்பில் நின்றாளைத் துறவி விளித்து, “இவன் வலது கையில் இரத்தம் சேதப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு கட்டைப் போடு’ என்று கூறி, தன் காவி உடையிலிருந்து நீளமாகச் சிறிது துணியைக் கிழித்துக் கொடுத்தார். அந்தப் பெண் ஒரு வினாடி துறவிமீது கலக்கம் நிறைந்த பார்வையை வீசினாள். பிறகு பேசாமல் உட்கார்ந்து இதயசந்திரன் கையைத் திருப்பிக் காயத்தைப் பரிசோதித் தாள்.

இதயசந்திரன் இதயம் நின்றுவிடும் நிலைமையி லிருந்தது. கையைத் திருப்பிய அந்தக் காரிகையின் அழகு அவனுக்குக் காயமளிக்காத மயக்கத்தை அளித்துவிடும் போலிருந்தது. சிறிதும் லட்சியம் செய்யாமல் அவள் மண்டியிட்டு உட்கார்ந்து கையைத் திருப்பி காவிச் சீலையை வைத்துக் கட்டியபோது அவளைப் பக்கவாட்டில் பார்த்த அந்த வாலிபன் உணர்ச்சிகள் கட்டுக்கடங்காமல் தத்தளித்தன. தனது கையை வெகு லாவகமாகத் தூக்கிக் கட்டுப்போட்ட பின்பு அவள் அவனைச் சிறிதும் லட்சியம் செய்யாமல் எழுந்து விட்டதையும், மேற்கொண்டு என்ன ஆணை என்று கேட்பது போல் அந்தத் துறவியை அவள் நோக்கியதையும் கண்ட இதயசந்திரன், ‘இந்தத் துறவி யார்? இத்தனை பெண்கள் சங்கு சத்தம் கேட்டு ஏன் ஓடி வருகிறார்கள்?’ என்று உள்ளூர எண்ணமிட்டதன்றி, துறவியை நோக்கி, “நான் எங்கிருக்கிறேன்?” என்று ஈனசுரத்தில் கேட்கவும் செய்தான்.

”பரசுராமன் திருவடியில்” என்றார் துறவி.

ஏதும் விளங்காத இதயசந்திரன் குழப்பம் மிகுந்த பார்வையொன்றைத் துறவிமீது வீசினான்.

“கொங்கணியின் மடியில்” என்று அவனுக்குக் கட்டுப் போட்ட கட்டழகி விளக்கம் கூறிப் புன்முறுவலும் செய்தாள்.

ஏதோ புரிந்ததற்கு அறிகுறியாகத் தலையை அசைத் தான் இதயசந்திரன் மெல்ல. ஆனால் அலைகள் தள்ளியிருப்பது கொங்கணியின் மடியிலல்ல. பாரத நாட்டுச் சரித்திரத்தின் பெரும் கட்டத்தின் மடியில் விதி அவனை வீசியிருப்பதை இந்த வேளையில் அவன் உணரவில்லை. அவன் மட்டுமென்ன அவன் நிலையைப் பரிதாபக் கண்களுடன் நோக்கிக் கொண்டு நின்ற அந்தக் கட்டழகியும் உணரவில்லை. கட்டழகி மட்டுமா உணர வில்லை! அந்த இருவரையும் மற்றும் பலரையும் கருவி களாக இயக்கி மகாராஷ்டிரர்களின் மகோன்னத சரித்திரத்தை இஷ்டப்படி வளைத்த அந்தத் துறவிகூட உணர்ந்தாரில்லை.

Previous articleJala Mohini Ch32 | Jala Mohini Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 1 Ch2 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here