Home Historical Novel Jala Deepam Part 1 Ch10 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 1 Ch10 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

63
0
Jala Deepam part 1 Ch10 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 1 Ch10 | Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 1 Ch10 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 10 காதலனும் கள்வனும்

Jala Deepam Part 1 Ch10 | Jala Deepam | TamilNovel.in

மேலிருந்த மரக்கிளைகள் ஊதா நிற மலர் தூவ, மரக்கிளைகளின் இடுக்குகள் வழியாக மதி நிலவை பாய்ச்ச, கூடார உள்விளக்கு மங்கிய ஒளி வீச, மல்லாந்து படுத்திருந்த மங்கையைப் பார்த்ததுமே மதிமயங்கி மனம் நெகிழ்ந்து விட்ட இதயசந்திரனுக்கு. பானுதேவி தன்னை மறைவிடத்துக்கு அழைத்து வந்ததும், ஆவல் ததும்பிய விழிகளைத் தன் மீது திருப்பியதும், புரியாத விந்தையாக மட்டுமல்ல, ஆபத்துக்கு அறிகுறியாகவும் தெரிந்தது. சற்று முன்பு தன்னுடன் காட்டுக்குள் தனித்து வர யோசனை செய்த தேவியின் துணிவு எத்தனை அத்துமீறிவிட்டது. தோழிகளுக்குத் தெரியாமல் எழுந்திருந்து. தன்னைத் தனியிடத்துக்கு அழைத்து வர என்று எண்ணினான். அந்த எண்ணத்தில் எழுந்த மோகனக் கற்பனைகள் பல. ஆனால் பானுதேவியின் முதல் கேள்வி அந்தக் கற்பனைகளை உடைத்தெறிந்தது. அவள் விழிகளில் பூத்த ஆவலுக்குக் காரணம் தான் நினைத்தது அல்ல என்பதை நொடி நேரத்தில் புரிந்து கொண்டான் இதயசந்திரன். புரியாத விந்தை புரிந்துவிட்டது மட்டுமல்ல, அவள் குணமும் நன்றாகப் புரிந்துவிட்டது தமிழனுக்கு. தான் மிக எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டியவர்களில் பானுதேவியும் ஒருத்தி என்பதை உணர்ந்து கொண்டான் அந்த வாலிப வீரன்.

கூடாரத்துக்குப் பின்னிருந்த மறைவிடத்துக்கு அவனை அழைத்து வந்த பானுதேவி ஆவலுடன் நோக்கினாள் அவனை. அத்துடன் ஆவலுடன் கேட்கவும் செய்தாள், ”புதிதாக வந்தானே அந்த மனிதன் யார்?” என்று.

அவள் விழிகளில் தெரிந்த ஆவலின் காரணத்தை அப்பொழுதுதான் உணர்ந்த இதயசந்திரன் ஒரு கணம்.

திகைத்துவிட்டுப் பதில் கேள்வி கேட்டான், ”ஏன். உங்களுக்குத் தெரியாதா?” என்று.

”தெரியாது. ஆனால் ஊகிக்க முடிகிறது. ஊர்ஜிதம் செய்து கொள்ளவே கேட்கிறேன்” என்றாள் பானுதேவி.

“பானுதேவி…” என்று துவங்கினான் இதயசந்திரன் பதில் சொல்ல. ஆனால் அவன் மேற்கொண்டு ஏதும் பேசு முன்பே, “என்ன! என்ன! என் பெயரைச் சொல்லி விட்டாரா சுவாமி?” என்று வினவினாள் பானுதேவி. அவள் குரலில் லேசாகப் பதற்றமும் தெரிந்தது.

அந்தப் பதற்றத்தைக் கவனித்த இதயசந்திரன் அதற்குக் காரணம் என்னவாயிருக்குமென்பதை உள்ளூர நினைத்துப் பார்த்தும் விளங்காததால் பாராட்டுதலாகப் பதில் சொல்லத் துவங்கி, “சூரியனை மறைக்க முடியுமா தேவி…” என்று மெல்ல இழுத்தான்.

பானுதேவி குறு நகை கொண்டாள். “வீரரே! தமிழர்கள் குறும்புக்காரர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்…” என்ற பானுதேவி குறு நகை கோட்டி, பவள இதழ் நீக்கி மேலும் ஏதோ சொல்லப் போனாள்.

”தேவியின் சொல்லில் தான் சிறிது மாறுபாடு இருக்கிறது. ஆனால் மகாராஷ்டிர ராஜ வம்சத்தினருக்கு இத்தனை தமிழ் தெரிந்திருப்பதும் பாராட்டத்தக்கது தான்” என்றான் இதயசந்திரன் குறுக்கே புகுந்து. ”என்ன மாறுபாடு வீரரே?” ” தமிழர்கள் குறும்புக்காரர்கள என்கிறீர்கள்…’

”ஆம்.”

”நகைச்சுவையுள்ளவர்கள் என்று சொன்னால் பொருத்தமாயிருக்கும்.”

”அப்படியானால் என்னைப் பார்த்து நகைக்கிறீர்களா?”

“அதல்ல அர்த்தம் தேவி! தங்களைப் பார்த்து அடிமை நகைக்க முடியாது. ஈயாடாது நற்கருடற்கெதிரே, நரி யாடாது உறுவெம்புலிமுன், மின்மினியும் ஆடாது வெங்கதிரோன் முன்பு…” என்று சொன்ன இதயசந்திரன். “இப்படியொரு கருத்துள்ள பாட்டுண்டு தமிழிலே” என்றும் பணிவுடன் தெரிவித்தான்.

பானு தேவி மெல்ல நகைத்தாள். தான் பெண் என்பதையும் காட்டிக் கொண்டாள். அந்த ஆண்மகன் புகழ்ச்சியில் சற்று விழவே செய்து. ”வீரரே!” என்று மெல்ல அழைத்தாள் அந்த நகைப்பின் ஊடே.

“தேவி…” என்றான் இதயசந்திரன் மெல்ல.

“நீங்கள் லேசுப்பட்டவரல்ல…” என்றாள் தேவி கண்களை நிலத்தில் தாழ்த்தி.

“ஏன் தேவி?”

“பெண்களை உங்களுடன் தனித்து விடுவது பெரும் தவறு.”

“அத்தனை கயவனா தேவி நான்!”

“இல்லை. கெட்டவரில்லை. நீங்கள் நல்லவராயிருக்கலாம். ஆனால் உங்கள் புகழ்ச்சியில் எந்தப் பெண்ணும் மயங்கி விடுவாள்.”

இதயசந்திரன் சற்றுத் தயக்கமான குரலில் பதில் சொன்னான். “எந்தப் பெண்ணும் என்று சொல்வது தவறு தேவி விலக்கும் உண்டு” என்று.

அவன் சுட்டிக் காட்டியது யாரை என்பது புரிந்தது தேவிக்கு சற்று வெட்கமும் சங்கடமும் அவளை ஆட்கொண்டாலும் அவற்றை உதறிவிட்டு நகைத்தாள் தேவி. “வீரரே! ஏதோ பேச்சைக் கிளப்பி எங்கோ போய் விட்டோமே அந்த மனிதன் சொன்னது சரியாகப் போய் விடப் போகிறது” என்று கூறினாள் நகைப்புக்கு இடையே. அந்தச் சமயத்தில் உணர்ச்சி வசப்பட்ட முந்திய குரல் மாறிவிட்டது அவளிடத்தில். கேலியும், இகழ்ச்சியும் லேசாக அகம்பாவமும் கூடிய குரல் ஒலித்தது.

குரல் மாற்றத்தை இதயசந்திரனும் கவனித்தான். எந்த உணர்ச்சியையும் நினைத்த மாத்திரத்தில் உதறி விடவும். காதலர்கள் என கனோஜி ஆங்கரே குறிப்பிட்ட தைக்கூட அலட்சியமாகத் தரும்பவும் குறிப்பிடும் திறனும் உள்ள அவள் நெஞ்சுரத்தை எண்ணிப் பார்த்து வியக்கவும் செய்தான். மேற்கொண்டு அவளிடம் சகஜ வார்த்தைகள் பேசுவதில் அர்த்தமில்லையென்பதை உணர்ந்துகொண்ட இதயசந்திரன், “ஆம் தேவி! வேறு ஏதோ பேசிவிட்டோம். வந்த மனிதன் பெயரை ஊகிக்க முடியுமென்று கூறினீர்களல்லவா?” என்று வினவினான்.

பானுதேவியின் விழிகளில் பழைய ஆவல் மீண்டும் துளிர்த்தது. ”ஆம், கூறினேன்” என்றாள் குரலிலும் ஆவல் தொனிக்க.

“அவர் பெயர் கனோஜி ஆங்கரே!” என்றான் இதய சந்திரன் மிகப் பணிவுடன்.

பானுதேவி ஆமோதிப்பதற்கறிகுறியாக மெல்லத் தலையசைத்தாள் அவள் விழிகளில் ஆவல் மறைந்தது. குளிர்ச்சியும் மறைந்தது. நெருப்புப் பொறி பறந்தது. “நினைத்தேன், அப்பொழுதே” என்ற அவள் குரலில் பூரண உஷ்ணம் தெரிந்தது.

மகாராஷ்டிரர் அனைவரும் மதிக்கும் அந்த மாபெரும் கடல் வீரன் பெயரைக் கேட்ட மாத்திரத்தில் பானுதேவி ஏன் கொதித்தெழ வேண்டும் என்பதை எண்ணிப் பார்த்த இதயசந்திரன், ”தேவி! அந்த மனிதரைப் பெரிய வீரர் என்று சொல்கிறார்களே! உங்களுக்குப் பிடிக்கவில்லையா அவரை?” என்று வினவவும் செய்தான் பானுதேவியை நோக்கி.

பானுதேவியின் அடுத்த கேள்வி மிகுந்த பதட்டத்துடன் வெளி வந்தது ”வீரனுக்கும் கொள்ளைக்காரனுக்கும் வித்தியாசமில்லையா?’ என்று கேட்டாள் பானுதேவி.

  "மகாராஷ்டிரக் கடற்படைத் தளபதியல்லவா அவர்? ஸார்கேல் அல்லவா?'' என்று கேட்டான் வியப்புடன் இதயசந்திரன். 

‘ஸார்கேல்! ஸார்கேல்!” என்று இருமுறை இகழ்ச்சியுடன் நகைக்கவும் செய்த பானுதேவி, ”ஸார்கேல்” யாருக்கு ஸார்கேல்? யார் நியமித்தது ஸார்கேலாக?” என்று சீற்றத்துடன் வினவவும் செய்தாள்.

“மகாராஜாவால் நியமிக்கப்பட்டார்…”

”மகாராணியென்று சொல்லுங்கள் ….”

“மகாராணியா!”

“ஆம் வீரரே! இந்தக் கொள்ளைக்காரரை, ஸார்கேலாக நியமித்ததும் ஒப்புக் கொண்டதும் மகாராணி தாராபாய். தனது முட்டாள் செல்வன் சிவாஜியை மகாராஷ்டிர அரியணையில் ஏற்ற பன் ஹாலாவிலிருந்து சதி செய்யும் தாராபாய்தான் இவருக்குக் கடற்படைத் தளபதி பதவி அளித்தாள். மகாராஷ்டிரத்துக்கு சத்ரபதி சிவாஜியின் நேர் வழியில் வந்த பரம்பரை ஒன்று தான். சத்ரபதி சிவாஜி அவர் மூத்த மகன் ஸம்பாஜி, ஸம்பாஜியின் மூத்த மகன் ஷாஹு என்றழைக்கப்படுபவரும் தற்சமயம் சத்ரபதியுமான ஷாஹு-இதுதான் பரம்பரை. மகாராஷ்டிரர்கள் வேறு மன்னரை ஒப்புக் கொள்ளவில்லை. இந்த மனிதன் இந்தக் கொள்ளைக்காரர் … மகாராஷ்டிரத்தைத் துண்டாடச் சதி செய்யும் தாராபாயின் கையாள்… இவருடைய கடற்படையும் மகாராஷ்டிரர் கடற்படையல்ல, இவரும் மகாராஷ்டிரர்களின் ஸார்கேல் அல்ல” என்று விடுவிடுவென வார்த்தைகளை உதிர்த்தாள் பானுதேவி. அவள் குரலில் விவரிப்புக்கு அப்பாற்பட்ட கோபம் ஒலித்தது.

இதயசந்திரன் சில விநாடிகள் மௌனம் சாதித்தான். மகாராஷ்டிர சாம்ராஜ்ய சரித்திரத்தை அவன் நன்கு அறிந்திருந்தாலும் அதைப்பற்றி விவாதித்து, பானுதேவியின் மனத்தைப் புண்படுத்த அவன் விரும்பவில்லை. சிவாஜியின் இரண்டாவது மகனான ராஜாராம் மகாராஜா ஷாஹுவின் தாய் ஏசுபாயின் விருப்பப்படி ராஜப்பிரதி நிதியாகவே இருந்தாரென்பதையும், இறக்கும்போது ஷாஹுவைச் சத்ரபதியாக்கும்படி வேண்டிக்கொண்டார் என்பதையும் அவன் உணர்ந்திருந்தான் தாராபாய் தன் மகன் நலத்துக்காக மகாராஷ்டிரத்தைத் துண்டாடி வருவதும் அவனுக்குத் தெரியாத விஷயமல்ல. இருப்பினும் மகாராஷ்டிர வரலாற்றில் தலையிடத்தான் யார் என்று நினைத்ததால். ”பானுதேவி! நீங்கள் வரலாறு கூறுகிறீர் கள். நானோ சாதாரண வீரன்…” என்று இழுத்தான்.

பானுதேவியின் பதில் பட்டென்று வந்தது. ”வீரனில் சாதாரண வீரன் உயர்ந்த வீரன் என்பது கிடையாது. வீரன் வீரன் தான் வரலாற்றில் சிறு மணல் அளவுக்காவது சம்பந்தப்பட வேண்டியவன் தான்” என்ற பானுதேவி, “ஆகையால் கேட்கிறேன், சொல்லுங்கள். நீங்கள் யார் பக்கம்? சத்ரபதியின் பக்கமா? சதிகாரர்கள் பக்கமா? கொள்ளைக்காரர் பக்கமா, மக்கள் ஒப்புக்கொண்ட மகாராஷ்டிர மன்னன் பக்கமா?’ என்ற கேள்விகள் தடங்கலின்றி விடுவிடுவென எழுந்தன.

”தேவி! நான் மகாராஷ்டிரனல்லவே?” என்றான் இதயசந்திரன்.

இல்லாவிட்டால் என்ன?” என்று வினவினாள் பானும்தவி.

”மகாராஷ்டிர வரலாற்றில் நான் ஏன் தலையிட வேண்டும்?’

”இந்தக் கேள்வியைத் தஞ்சையிலேயே கேட்டுக் கொண்டிருக்கலாமே?”

“தஞ்சையிலா?”

“ஆம். தஞ்சையில் தான். எந்தப் பெண்ணின் பேச்சைக் கேட்டு அவன் மகனைத் தேட இங்கு வந்தீர் களோ அவளை இக் கேள்வி கேட்டிருக்கலாமே?”

இதற்குப் பதில் சொல்ல முடியாமல் திணறிய இதய சந்திரன் மௌனம் சாதித்தான். பானுதேவியே பேச்சைத் தொடர்ந்து, “இஷ்டமிருந்தோ இஷ்டமில்லாமலோ நீங்கள் மகாராஷ்டிர வரலாற்று வலையில் விழுந்து விட்டீர்கள். இனி அதிலிருந்து தப்புவதும் சாத்தியமல்ல. ஆகவே, இந்த அரசியல் சமரில் நீங்கள் யார் பக்கம் என்பதை நிர்ணயித்துக் கொள்வது நல்லது. ஷாஹுதான் உண்மையான சத்ரபதி, அவர் பக்கத்தில் சேருவது தான் தர்மம். இந்தக் கனோஜி ஆங்கரே மகாராணி தாராபாயின் கட்சியைச் சேர்ந்தவர். அவருடன் நீங்கள் எந்தச் சம்பந்தமும் வைத்துக்கொள்வது உசிதமல்ல'' என்றாள்.

இதயசந்திரன் தலைவிதியை நினைத்து நகைத்தான். சற்று முன்பு சுவாமிகள் தன்னை கனோஜி ஆங்கரேக்கு அடிமைப்படுத்தியதும், இப்பொழுது தன்னை அதிலிருந்து விடுபட பானுதேவி உத்தரவிடுவதும் பெரும் சங்கடமாயிருந்தது அவனுக்கு. அந்தச் சங்கடத்துடன் நகைத்து விட்டுச் சொன்னான். “தேவி! சுவாமிகள் அபிப்பிராயம் இதில் எப்படியோ?” என்று.

”எப்படியிருந்தால் நமக்கென்ன!” என்று பானுதேவி கேட்டாள்.

“சுவாமிகள் உத்தரவை யாராவது மீற முடியுமா?” என்று மீண்டும் கேட்டான் இதயசந்திரன்.

”அப்படியென்ன உத்தரவிடப் போகிறார் சுவாமி?” பானுதேவியின் குரலில் சந்தேகம் ஒலித்தது.

“உத்தரவிட்டுவிட்டார்’ என்ற இதயசந்திரன் அவள் விழிகளைச் சந்திக்க முடியாமல் வேறு பக்கம் பார்த்தான்.

“யாருக்கு உத்தரவிட்டார்?”

”எனக்கு.”

“என்ன உத்தரவு?”

”கனோஜி ஆங்கரேயிடம் பணிபுரியச் செல்லுமாறு.”

அசைவற்று நின்றாள் பானுதேவி. “ஆங்கரேயிடமா உங்களையா?” என்ற சொற்கள் எரிச்சல் கலந்த வியப்பில் உதிர்ந்தன.

“ஆம்” என்றான் இதயசந்திரன்.

சில விநாடிகள் சிந்தனையில் ஆழ்ந்த பானுதேவி,“வீரரே! அக் கட்டளைக்கு நீர் கீழ்ப்படியக் கூடாது” என்று கூறினாள் கடைசியில் திட்டமாக.

”அதெப்படி முடியும்?” என்று கேட்டான் இதய சந்திரன்.

“முடியவேண்டும். என் மாமனுக்கு எதிராக நடக்கும் எதையும் நான் அனுமதிக்க முடியாது” என்றாள் பானுதேவி.

தனக்கு உத்தரவிட பானுதேவிக்கு என்ன உரிமையுண்டென்று நினைத்துப் பார்த்தான் இதயசந்திரன். இருப்பினும் அவள் உரிமை கொண்டாடியது அவனுக்கு இன்பமாகவே இருந்தது. ஆகவே அவளுக்கு அதிருப்தி விளைவிக்காமல் பதில் கூறினான், “அதைக் காலையில் யோசிப்போமே தேவி” என்று.

“சரி வீரரே! காலையில் யோசிப்போம். ஆனால் முடிவு நான் கூறியபடியே இருக்கட்டும்” என்ற பானு தேவி மறைவிடத்திலிருந்து வெளியே நடந்தாள்.

அவள் சென்ற சில விநாடிள் கழித்து இதய சந்திரன் மீண்டும் சுவாமியின் கூடாரத்தை நோக்கிச் சென்று. வாயிற்புறத்திலேயே வாளை அவிழ்த்து வைத்துத் தரையில் நன்றாகப் படுத்துக்கொண்டான். கூடாரத்துக்கு வெளியில் அவன் படுத்த இடம் இருட்டாயிருந்தபடியால் நன்றாகக் கால் நீட்டிப் படுத்து ஓர் ஆசுவாசப் பெருமூச்சும் விட்டான். அவன் பக்கத்தி லிருந்து ஒரு பெரும் முரட்டுக்கை அவன் மீது விழுந்தது.

தமிழா! நீ கைகாரன். சட்டென்று பெண்களை வளைக்கிறாயே?” என்ற முரட்டுக் குரல் காதுக்குச் சற்றுத் தூரத்தில் ஒலித்தது.

கனோஜி ஆங்கரேயின் பக்கத்தில் தான் படுத்து விட்டது அப்பொழுதுதான் புரிந்தது இதயசந்திரனுக்கு. அவர் எதற்காகக் கூடாரத்துக்குள் படுக்காமல் இருட்டில் வந்து படுத்திருக்கிறார் என்று எண்ணிப் பார்த்தான் இதயசந்திரன். அவன் எண்ணத்தைக் கனோஜி புரிந்து கொண்டிருக்க வேண்டும். அவர் சொன்னபதில் அத்தனைத் தெளிவாயிருந்தது. ”காதலனுக்கும் இருட்டு அவசியம். கள்வனுக்கும் இருட்டு அவசியம்!’ என்று கூறி ஆங்கரே நகைத்தார். அத்துடன் இதயசந்திரனை அதிர்ச்சிக்கு உள்ளாக்கக் கூடிய பேருண்மையொன்றையும் விளக்க முற்பட்ட ஆங்கரே கூறினார். இருட்டில் கிடப்பது நல்லது தமிழா! இல்லையேல் நீயும் நானும் எந்தச் சமயத்திலும் கொலை செய்யப்படலாம்!” என்று. இதயசந்திரன் திகைத்தான். ”என்ன! என்ன சொல்கிறீர்கள்?” என்று வினவவும் செய்தான். ”காதலனும் சரி கொள்ளைக்காரனும் சரி. எந்த விநாடியிலும் உயிரிழக்கத் தயாராயிருக்கவேண்டும். இரண்டிலும் பயனும் உண்டு பயங்கரமும் உண்டு’ என்று கூறிய ஆங்கரே மீண்டும் நகைத்தார் இடி இடியென்று.

Previous articleJala Deepam Part 1 Ch9 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 1 Ch11 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here