Home Historical Novel Jala Deepam Part 1 Ch11 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 1 Ch11 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

58
0
Jala Deepam part 1 Ch11 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 1 Ch11 | Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 1 Ch11 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 11 கனோஜியின் சகஜம்

Jala Deepam Part 1 Ch11 | Jala Deepam | TamilNovel.in

மகாராஷ்டிரர்களின் கடற்படைத் தளபதியும், மாலுமிகளிற் சிறந்தவரும், மகாவீரனுமான கனோஜி ஆங்கரே இருட்டில் திருட்டுத்தனமாகப் படுத்திருந்ததே விசித்திரமாயிருந்ததென்றால், அவர் பேச்சு பரம விசித்திரமாயிருந்தது இதயசந்திரனுக்கு. அவர் படுத்திருந்த இடம் கூடார வாயிலைவிட்டு நன்றாகத் தள்ளி சந்திர வெளிச்சத்தை அடியோடு மறைக்கும் நாலைந்து: நெருங்கிய பெரு மரக் கூட்டத்தின் நடுவேயிருந்தபடியால் இருட்டு நன்றாகக் கவிந்திருந்தது. அந்த இருட்டில் மரங்கள் உதிர்த்திருந்த சருகுகளின் மேல் கால்களை நன்றாகப் பரப்பிக்கொண்டு படுத்திருந்த ஆங்கரே அந்த இலைகளுக்கடியிலிருந்த பாறையின் முகப்புகளின் குத்தல் களைக்கூட லட்சியம் செய்யாமல் கிடந்தாரென்றாலும், இதயசந்திரன் முதுகில் முரட்டுக் கற்கள் குத்தவே. இத்தகைய தரையில் ஏதோ பஞ்சணையில் படுத்திருப்பது போல் இவர் எப்படி படுத்திருக்கிறார்?’ என்று தன்னைத் தானே கேட்டுக்கொண்டான் தமிழகத்தின் அந்த வாலிபன். அப்படிப் படுத்தும் அவர் உறங்காமல் தான் படுத்ததும் தன்மீது கையைப் போட்டுப் பரிகாச வார்த்தைகள் பேச ஆரம்பித்ததும் வியப்பாயிருந்தது அவனுக்கு. தவிர அவர் தம்மைக் கள்வன் என்று கூறிக் கொண்டது பெரும் விசித்திரமாயிருக்கவே அதை மறுக்கும் வகையில் கூறினான், ”நானும் காதலனல்ல; தாங்களும் கள்வரல்ல!” என்று.

“உண்மை தமிழா! நீ இந்தத் தாமினிக் காட்டைச் சுற்றி வேடிக்கை பார்த்துப் போக வந்திருக்கிறாய். நான் பிறநாட்டார் கப்பல்களைத் தர்மத்துக்காக வளைக்கிறேன்” என்று ஆங்கரே நகைச்சுவையைக் காட்டினார்.

இதயசந்திரனுக்கு அவருடைய சொற்கள் சங்கடத்தை அளிக்கவே, “ஏன்; காட்டைச் சுற்றிப் பார்க்கக் ‘கூடாதா?’ என்று வினவினான் ஏதோ கேட்க வேண்டுமென்பதற்காக.

“சுற்றிப் பார்க்கலாம் சுற்றிப் பார்க்கலாம். அதற்கு இதுதான் சமயம். காலையில் பார்த்தால் அவ்வளவு ‘சுகப்படாது” என்று ஆங்கரே மெல்ல நகைத்தார்.

“ஏன் சுகப்படாது? இந்தக் காட்டின் அழகு காலையில் மறைந்துவிடுமா?” என்று வினவினான் இதயசந்திரன் எரிச்சலுடன்.

“மறைந்துவிடாது தமிழா. காலையில் மற்றவர்களும் இதன் அழகைப் பார்ப்பார்கள். மற்றவர்கள் விழித்திருக்கும்போது நாம் விரும்பும் அழகை நாம் துணிவுடன் பார்க்க முடியாது. ஆனால்…” என்று கனோஜி ஆங்கரே இழுத்தார்.

“என்ன ஆனால்?”

”ஒரு வேளை அந்தத் துணிவும் உனக்கு உண்டோ என்னவோ?”

“எந்தத் துணிவு?”

“பகலில் பாலையரை நெருங்கும் துணிவு!” என்று ஆங்கரே மீண்டும் பலமாகச் சிரித்தார். .
ஆங்கரே எத்தனை பெரிய வீரனாயிருந்தாலும் விரசமுள்ளவர், கேவலமான மனிதர் என்று தீர்மானித்த இதய சந்திரன் மேற்கொண்டு அவருடன் பேச்சுக் கொடுக்க இஷ்டப்படாமல் வேறுபுறம் திரும்பிப் படுக்க எத்தனித் தான். ஆனால், அவன்மேல் விழுந்திருந்த ஆங்கரேயின் இரும்புக்கரம் அவனை நகரவொட்டாமல் அழுத்தியது. “தமிழா! பெண்களை அணுகுவதில் துணிவு ஒன்றுதான் தேவை இரவில் அணுகுவது துணிவின் குறையைக் குறிக் கிறது. தவிர நீ என்னுடன் வரப்போவதால் இரவு பகல் வித்தியாசத்தை மறந்துவிடவேண்டும். நமக்கு இரவும் ஒன்றுதான்; பகலும் ஒன்று தான். கிடைக்கும் வேளையில் எதையும் அனுபவிக்க வேண்டும். என்னைப் போன்ற கொள்ளைக்காரன் வாழ்க்கை அப்படிப்பட்டது. நீ என்னுடன் வரும்போது பல நாட்டு மக்களைப் பார்ப்பாய். அவர்களில் பலவித மாதர்களைப் பார்ப்பாய். விதவிதமான அழகிகள் உன் கைக்கு எட்டுவார்கள். அவர்களிடம் நீ. எப்படி நடந்து கொண்டாலும் நான் கவனிக்க மாட்டேன். பலரைச் சந்திக்கும் சந்தர்ப்பம் உனக்குக் கிடைக்கும். அனுபவங்கள் பலவகையாயிருக்கும். இந்த வாழ்க்கைக்குத் தான் நீ வருகிறாய் சுவாமி சொற்படி” என்றார் ஆங்கரே.

இதயசந்திரனின் வியப்பும் வெறுப்பும் பன்மடங்காகி யது. பெண்களைப்பற்றி அவர் தாறுமாறாகப் பேசியதும், தன்னை இஷ்டப்படி அனுபவிக்குமாறு கூறியதும் அவனுக்குப் பெரும் மனக்கசப்பை அளித்தது. ஆகவே சொன்னான், “மகாராஷ்டிர தளபதி ஒரு கொள்னைக் காரரென்று நான் இதுவரை கேட்டதில்லை” என்று. ”கொள்ளைக்காரராயிருப்பது அத்தனைத் தவறா?” “சரியென்று நினைக்கிறீர்களா?” ‘ஆம் தமிழா! சுற்றிலும் நாட்டைப் பார். யார் கொள்ளைக்காரனில்லை? முகம்மது கஜினி ஸோம்நாத் தைக் கொள்ளையிடவில்லையா? அவரைப்போல் படையெடுத்து வந்த எத்தனை பேர் கோவில்களை இடிக்க வில்லை. அங்குள்ள பொருள்களைச் சூறையாடவில்லை? ஏன், முந்திய சக்கரவர்த்தி அவுரங்கசீப் எத்தனை கோயில்களைச் சூறையாடியிருக்கிறார்! அதற்காக அவர்களை யார் கொள்ளைக்காரர்கள் என்றழைத்தார்கள்? நமது ராஜபுத்திரர்களே அவர்களிடம் கைகட்டி சேவகம் செய்யவில்லையா? ராஜபுத்திரர்கள் அவர்கள் படைத் தலைவர்களாக நம்மீது போர் தொடுத்து நம்மைச் சூறையாடவில்லையா? அவர்களைச் சரித்திரம் இகழ்ந்து

கனோஜியின் சகஜம் விட்டதா தமிழா! எப்பொழுதும் எந்தக் காலத்திலும் அரசியலில் கொள்ளை இருக்கும். கொள்ளைக்காரர்கள் பேரும் புகழும் பெறுவார்கள். நல்லவர்கள் திண்டாடுவார்கள். ராணா பிரதாப சிம்மன் திண்டாடினான் அக்பரால் ஆயுள் மட்டும். சிவாஜி மலைமலையாகத் திரிந்து போரிட்டார் எதிர்த்து ஆயுள் மட்டும். மகாராஷ்டிர சாம்ராஜ்யத்துக்காகத் தந்திரப்போர் நடத்திய அவரைக் கொள்ளைக்காரன் என்றார்கள் மொகலாய சரித்திராசிரியர்கள். இது மனித சமுதாயத்தின் இயற்கை நீதி. இந்த நீதியை மறக்காதே. கொள்ளைக்கார னாவதும் அவசியம் நாட்டு நன்மைக்காக. உன் நன்மைக்கும் அதுதான் நல்லது. காதலை நிறைவேற்றிக் கொள்ள எத்தனைத் தந்திரங்களைக் கையாளுகிறோமோ அத்தனை தந்திரங்களை வாழ்வை மற்ற வழிகளில் வளப்படுத்திக் கொள்ளவும் கையாளவேண்டும். நாட்டுக் குப் பணி புரிவதற்கும் அந்தத் தந்திரங்கள் தேவை!” என்று உபதேசித்தார் கனோஜி.

அவர் பேசியபோது பொதுவாக அவர் குரல் சாதாரணமாகத் தெரிந்தாலும் இடையிடையே அதில் சிறிது உணர்ச்சி மின்னல்கள் பளிச்சிட்டதை இதயசந்திரன் கவனித்தான். அவர் பேச்சு மேலுக்குப் பொறுப்பற்ற பேச்சுப்போல் காணப்பட்டாலும் அதில் உள்ளூர ஒரு கோபமும் உறுதியும் புதைந்து கிடப்பதையும் ஊகித்துக் கொண்டான் இதயசந்திரன். அந்தப் பேச்சின் சாரத்தை அவன் எடை போட்டுக்கொண்டிருக்கையிலே கனோஜி ஆங்கரே மேலும் பேசத் தொடங்கினார். “தமிழா! ஏதோ மொகலாயர்மேல், அவர்கள் மதத்தின்மேல் நான் சினப்பட்டுப் பேசுகிறேனென்று நினைக்காதே. மற்றவர்களும் அவர்களுக்கு விலக்கல்ல. கோவாவிலிருக்கும் போர்ச்சுக்கீஸியர் என்ன செய்கிறார்கள்? இங்கு வர்த்தகம் செய்ய வந்தார்கள், சில ஊர்களைச் சொந்தமாக்கிக் கொண்டார்கள். அவர்கள் ஊரிலிருந்து சாராய புட்டிகளை நிரம்பக் கொண்டு வருகிறார்கள். வேறு கண்ணாடி

சீப்பு முதலிய அலங்காரப் பொருள்களும் வருகின்றன. அவற்றைக் காட்டி இங்கு மக்களை மயக்குகிறார்கள். எதிர்ப்போரை இம்சை செய்கிறார்கள். கோவாவில் விபசார விடுதிகள் வைத்து அவற்றில் இந்த நாட்டுப் பெண்களைக் கொண்டு போய் அடைத்துப் போர்ச்சுக் கீஸிய மாலுமிகளுக்கும் மற்ற பிரபலஸ்தர்களுக்கும் ஆனந்தம் அளிக்கிறார்கள். இதையும் நாடு சகிக்கிறது. அவர்களுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்யும் அரசர்களும் நவாப்புகளும் இங்கிருக்கிறார்கள்” என்ற ஆங்கரே சற்று நிதானித்துவிட்டு, “போர்ச்சுக்கீஸியர்கள் கொள்ளையடிக்கிறார்கள். காமவெறி களியாட்டங்கள் நடத்துகிறார்கள். டச்சுக்காரர்கள் அத்தனை தூரம் போகவில்லை, வர்த்தகக் கொள்ளையோடு நிற்கிறார்கள். இந்த இரு நாட்டவரையும் விடப் பேராபத்து விளைவிக்கிறது இன்னொரு நாடு!” என்றும் கூறினார்.
”அது எந்த நாடு?” இதயசந்திரன் உணர்ச்சிகள் கொந்தளித்துக் கொண்டிருந்ததால் தழுதழுத்த குரலில் வெளிவந்தது அவன் கேள்வி.

“இங்கிலாந்து. கிரேட்பிரிட்டன் என்று அதைக் கூறுகிறார்கள். பிரிட்டிஷ்காரர்கள் தான் நமக்குப் பேராபத்து” என்று கூறினார் ஆங்கரே.

“அத்தனை கெட்டவர்களா அவர்கள்!” இதயசந்திரன் குரலில் வியப்பு இருந்தது. சென்னையிலிருந்த ஆங்கிலேயர் கூடியவரையில் நல்ல பெயரே எடுத்திருந்தபடியால் அவர்களைக் குறைகூறும் காரணம் விளங்கவில்லை இதய சந்திரனுக்கு.

”கெட்டவர்களில்லை தமிழா! நாணயஸ்தர்களுங்கூட. அவர்களுக்கென்று சட்டதிட்டங்கள் உண்டு. அவர்கள் போக்குதான் பயங்கரம். மற்ற நாட்டினரைவிட அவர்கள் கப்பல்களில் அதிக சரக்கு போகிறது. அவர்கள் நிர்வாகம் நமது மக்களாலேயே போற்றப்படுகிறது. பம்பாயில் உள்ள அவர்கள் கம்பெனி அரசு, பிரிட்டிஷ் சட்ட திட்டங்களின் முறையில் நடக்கிறது. இப்பொழுது நாட்டிலுள்ள சர்க்கார்களில் பம்பாயிலுள்ள பிரிட்டிஷ் சர்க்கார் தான் திடமானது. அவர்கள் கப்பல்கள் மற்ற நாட்டுக் கப்பல்களைவிடத் திடமானவை. அவர்கள் பீரங்கிகள் மற்ற நாட்டுப் பீரங்கிகளை விட உறுதியும் சக்தியும் வாய்ந்தவை. அவர்கள் மாலுமிகள் கடற்போரில் மிகச் சிறந்தவர்கள். இந்த அரபிக் கடலில் எனக்கு அடுத்தபடியாக ஆட்சி செய்யக்கூடியவை பிரிட்டிஷ் கப்பல்தான். இப்போழுது பிரிட்டிஷ் கூட்டம் சிறிய வர்த்தகக் கூட்டம். ஆனால் உறுதியுள்ள ராஜ்யக் கூடு அது. வர்த்தகக் கொள்ளை மட்டும் அவர்கள் நடத்துகிறார்கள். அதுவும் பிரிட்டிஷ் மன்னரின் பெயரால் சட்ட ரீதியாக நடக்கிறது. ஆனால் அந்தச் சிறு கூட்டம் இந்த நாட்டை மெள்ள கறையான் மாதிரி அரித்து விழுங்கிவிடும். இது நமது நாடு இதயசந்திரா. இந்த நாட்டை ஓரளவு இத்தனை எதிர்ப்புக்களிலிருந்து காத்தவர் சத்ரபதி சிவாஜி. கொள்ளையால் திடீர்த் தாக்குதல்களால் காத்தார். வேறுவிதமாக இந்த விபரீதங்களுக்கு யாரும் அணை போட்டிருக்க முடியாது. அவரது பாதையில், சிவாஜி மகாராஜாவின் பாதையில் நான் நடக்கிறேன். கொள்ளைக்காரனாயிருப்பதில் தவறில்லை தமிழா! எதுவாயிருப்பதும் தவறில்லை. விளைவு நல்லதாயிருந்தால்” என்று சுட்டிக் காட்டினார் ஆங்கரே.

இதயசந்திரன் மனம் பெரும் போராட்டத்திலிருந்தது. ஆங்கரேயின் வார்த்தைகள் அவன் மனத்தில் ஆழப் புதைந்து அவன் முந்திய கருத்துகளைச் சிதைத்துக் கொண்டிருந்தன. அந்தச் சில விநாடிகளில் அவன் பானுதேவியை மறந்தான். தான் வந்த பணியை மறந்தான். ஆங்கரேயின் வார்த்தைகள் அனைத்தையும் மறக்க அடித்து விட்டதால் நாட்டின் நிலைமை அவன் சித்தத்தில் உறைந்து கிடந்தது. ‘இந்த நிலையில் நான் யார் பக்கம் சேருவது? ஆங்கரேயின் பக்கமானால் நான் தாராபாயின் பக்கம். பானுதேவியின் பக்கமானால் நான் ஷாஹுவின் பக்கம் இந்தத் தொல்லையில் சிக்க வேண்டாமென்றாலும் முடியாதே’ என்று உள்ளூர எண்ணமிட்டான். இந்த எண்ணங்களால் குழப்பம் அதிகமாகவே கேட்டான். “இதில் சுவாமி யார் பக்கம்?” என்று.

”சுவாமி எந்தப் பக்கமும் இல்லை ” என்றார் ஆங்கரே.

“யார் பக்கமும் இல்லையென்றால்?” என்று கேட்டான் இதயசந்திரன்.

”சுவாமி நாட்டில் அமைதியை விரும்புகிறார். நீதியையும் தர்மத்தையும் விரும்புகிறார். ஆகவே அவர் எந்தப் பக்கமும் சாயவில்லை; மொகலாயர் கடற்புரத்தலைவர்களான அபிஸீனிய ஸித்திகளைக்கூட அவர் வெறுக்கவில்லை. அவர் நடத்தும் விழாக்களில் ஜன்மவைரியான ஸித்திகளும் என்னைப் போன்ற மகாராஷ்டிரர்களும் வந்திருப்பார்கள். ஆனால் ஒரு சண்டையோ சச்சரவோ நடக்காது” என்றார் ஆங்கரே.

”அப்படியா!”

“ஆம்.”

“முஸ்லீம்களும் ஹிந்துக்களும் ஒரே விழாவில் கலந்து கொள்கிறார்களா?”

”ஆம்.”

“விரோதிகள் அங்கு சண்டையிடுவதில்லை?”

”இல்லை.”

“அதெப்படி சாத்தியம்?” என்று வியப்பு மிதமிஞ்சிக் கேட்டான் இதயசந்திரன்.

“மற்றவர்களுக்குச் சாத்தியமில்லாதது சுவாமிக்கு சாத்தியம். அவர் சொல்வது பலிக்கும், நடக்கும். ரஸுல் யாகூத்கான் ஜன்ஜீராவின் தலைமை ஸித்தியாவா னென்று அவன் சாதாரண மாலுமியாயிருக்கையில் சுவாமி கூறினார். அவன் இப்பொழுது ஜன்ஜீரா தீவின் சர்வாதிகாரி. எனது பால்ய நண்பன் பாலாஜி விசுவவாத் சிப்ளன் உப்பு ஆலையில் குமாஸ்தாவாயிருந்தான். ‘நீ மகாராஷ்டிரத்தின் பேஷ்வா ஆவாய்’ என்றார் சுவாமி. இப்பொழுது அநேகமாக அவன் பேஷ்வாவுக்கு அடுத்தபடி. சீக்கிரம் பேஷ்வா ஆடுவிடுவான். நானும் சாதாரண மாலுமியாகத்தானிருந்தேன்! ஒரு முறை தசரா விழாவுக்குப் பரசுராமபுரம் சென்றிருந்தேன். பரசுராம னுக்கு சுவாமிகள் பூஜை செய்து கொண்டிருந்தார். பெரும் கூட்டம் அவரைச் சுற்றி நின்று கொண்டிருந்தது. அந்தக் கூட்டத்தில் என்னை மட்டும் தனித்து அழைத்தார் சுவாமி. பரசுராமன் திருவடியிலிருந்து ஒரு புஷ்பத்தை எடுத்துக் கையில் கொடுத்து, ‘நீ மகாராஷ்டிரத்தின் கடற்படைத் தளபதியாகி மேல் கடலைப் பாதுகாத்துவா’ என்றார். புஷ்பத்தை வாங்கிக் கொண்டேன். சுவாமியின் திருவடி களில் விழுந்தேன். அடுத்து நடந்தது சுவர்ண துர்க்கத்தில் போர். ஸித்தி காஸிம்கான் சுவர்ண துர்க்கத்தைப் பிடிக்க முடியவில்லை. அப்பொழுது சுவர்ண துர்க்கத்தைக் காத்ததும் சுவாமியின் ஆசி.”

”எங்கு வழங்கினார் சுவாமி தமது ஆசியை?”

”இங்குதான். மகாராஷ்டிர சாம்ராஜ்யத்தைத் தகர்க்க எந்த ஸித்திகள் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்களோ எந்த ஸித்திகள் என் பரம வைரிகளோ அந்த ஸித்திகளின் அரசில் தான். இப்பொழுது நாம் இருப்பது ஸித்தி களின் அரசு. நாளை நீயே பார்ப்பாய் தமிழா. பரசுராமன் கோவிலும் அவர்கள் எல்லைக்குள் கட்டப்பட்டிருப்பதை. அந்தக் கோவிலுக்கு இரண்டு கிராமங்களை ஸித்தி ரஸுல்யாகூத்கான் தானம் செய்திருக்கிறான். பரசுராம புரத்தின் எல்லை ஒன்றுதான் ஹிந்துக்களுக்குத் தற்சமயம் பாதுகாப்பு. ஆனால் அந்தப் பாதுகாப்பும் சில நாட்களாக உடைபட்டு வருகிறது. ஹிந்துக்களின் பரம எதிரியொருவன் இங்கிருந்து இரண்டு காத தூரத்தில் இருக்கிறான். இப்பொழுது நீயும் நானும் படுத்திருக்கும் பூமி அவன் ஆட்சியில் இருக்கிறது.”

“அத்தனை பயங்கர மனிதன் யார்?” என்று வினவினான் இதயசந்திரன்.

“அஞ்சன்வேல் கோட்டையின் அதிபதி. ஸித்திகளின் தரைப் படைகளின் தலைவன் ஸாத்ஸித்தி’ என்ற கனோஜி. அநேகமாக நாளை நாம் அவனைப் பரசுராம புரத்தில் சந்தித்தாலும் சந்திக்கலாம்” என்றும் தெரிவித்தார்.

கனோஜி ஆங்கரே அளித்த தகவல்கள் இதயசந்திரன் இதயத்தில் ஏதேதோ எண்ணங்களைக் கிளப்பிவிட் டிருந்தது. பரம எதிரிகளைத் தனக்கு சீடர்களாக வைத்துக் கொண்டிருக்கும் பிரும்மேந்திர ஸ்வாமியின் அமானுஷ்ய சக்தியை எண்ணிப் பெரும் பிரமிப்பை அடைந்திருந்தான் அவன். கனோஜி ஆங்கரே தனது உயிர் அந்தப் பகுதியில் செல்லாக்காசு பெறாது என்பதை அறிந்தும் அங்கு சுவாமி யைப் பார்க்க வந்த துணிவும், சுவாமியின் சொல்லால் சாதாரண மாலுமிகள், குமாஸ்தாக்கள். பெரும் பதவிகளுக்கு வந்ததும் நம்பத்தகாததாயிருந்தது அவனுக்கு.

அவன் அவநம்பிக்கை கனோஜி ஆங்கரேக்குப் புரிந்து தானிருந்தது. ஆகவே மீண்டும் சொன்னார்: “தமிழா! உனக்கு நான் சொல்வதில் இப்பொழுது நம்பிக்கை வராது. நாளை பரசுராம பட்டணத்தைப் பார்த்ததும் புரிந்து கொள்வாய்” என்று.
ஆனால் அதுவரை அவன் தாமதிக்க அவசியமில்லாது போயிற்று. அடுத்த நாழிகைக்குப் பிறகு நடந்த விபரீதம் தூங்கிக் கொண்டிருந்த அவனை வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்திருக்க வைத்தது. அவன் எழுந்து உட்கார்ந்த பொழுது கனோஜி சகஜத்துடன் உட்கார்ந்திருந்தார். அவர் இடையிலிருந்து கைத் துப்பாக்கியொன்று புகைந்து கொண்டிருந்தது. சற்று தூரத்தில் யாரோ முனகும் சப்தமும் கேட்டது. திடீரென்று நாலைந்து பேர் அடவிக்குள் ஓடும் காலொலிகளும் கேட்டன.

இதயசந்திரன் எழுந்திருக்க முயன்றான். கனோஜியின் இரும்புக் கை அவனை அழுத்தியது. ”உயிரின் மீது ஆசை யிருந்தால் இந்த இடத்தை விட்டு நகராதே” என்ற சொற்களும் அவர் வாயிலிருந்து உஷ்ணத்துடன் உதிர்ந்தன.

Previous articleJala Deepam Part 1 Ch10 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 1 Ch12 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here