Home Historical Novel Jala Deepam Part 1 Ch12 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 1 Ch12 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

84
0
Jala Deepam part 1 Ch12 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 1 Ch12 | Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 1 Ch12 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 12 ஸாத் ஸித்தி

Jala Deepam Part 1 Ch12 | Jala Deepam | TamilNovel.in

குறுக்கே கனோஜியின் கை இரும்பு உலக்கையைப் போல் விழுந்தழுத்த, அவர் எச்சரிக்கைச் சொற்கள் உஷ்ணத்துடன் ஒலிக்க, தூரத்தே யாரோ ஒருத்தன் முனகல் தொடர்ந்து கேட்க, இத்தகைய விபரீத சூழ்நிலையிலிருந்த இதயசந்திரனுக்குப் பல விஷயங்கள் விளங்கவில்லை. இதே இரவுக்கு முந்திய இரவில் கரையருகே கப்பல் போர் நடந்து பீரங்கிகள் முழங்கியிருந்தும் கடற்கரையருகே பானுதேவியோ அவள் தோழிகளோ காவலரோ வராதிருந்ததையும் சுவாமிகள் மட்டும் ஏதும் நடவாததுபோல் சங்கு பொறுக்கியதையும் எண்ணிப் பார்த்த அந்த வாலிப வீரன். ‘நேற்றிரவுதான் அப்படி. இன்றைய இரவில் கைத் துப்பாக்கியின் வெடிச் சத்தம் கேட்டும் சுவாமிகளோ பானுதேவியோ மற்றவர்களோ எந்தப் பதற்றத்தையும் காட்டாமல் எப்படிப் படுத்திருக்கிறார்கள்?’ என்று தன்னைத்தானே கேட்டுக் கொள்ளவும் செய்தான். அந்தக் கூட்டத்தின் போக்கு மனித இயற்கைக்கு முழுதும் மாறுபட்டிருப்பதை நினைக்க நினைக்க ஏதும் விளங்கவில்லை அவனுக்கு. அவனுக்கு விளங்க வைக்க யாரும் முன்வரவும் இல்லை. சுவாமிகள் கூடாரத்திலிருந்த காவலர் கூட்டத்திலும் எந்தப் பரபரப்பையும் காணோம் சிறிது நேரத்திற்குப் பிறகு அவன் மீதிருந்த கையை எடுத்த கனோஜி ஆங்கரே தீர்க்க நித்திரையில் ஆழ்ந்து விடவே அவர் சுவாசம் பெரிய தாகவும் ஒரே சீராகவும் வந்து கொண்டிருந்தது. அந்தத் தாமினிக் காடு மீண்டும் அமைதி பெற்றது. அந்த அமைதியைக் கலைத்தது தூரத்தே கிடந்த யாரோ ஒரு மனிதனின் முனகல்தான்.

அந்த முனகல் மற்றவர்களைப் பாதிக்காவிட்டாலும் இதயசந்திரனைப் பாதிக்கவே செய்ததால் அவன் உறக்கம் பிடிக்காமல் அசைந்து அசைந்து படுத்தான். சற்று நேரத்திற்கொருமுறை பக்கத்தில் படுத்திருந்த ஆங்கரேயின் ஆழ்ந்த நித்திரையைக் கவனித்ததும் வியப்படைந்தான். • இப்படி ஆழ்ந்த நித்திரை செய்யும் இவர் சின்னஞ்சிறு ஓசை கேட்டதும் எப்படி எழுந்திருக்கிறார்? ஆழ்ந்த நித்திரையும், விநாடி நேர எச்சரிக்கையில் விழிப்பும் எப்படி ஏற்பட முடியும்?’ என்று நினைத்துப் பார்த்தும் விடை கிடைக்கவில்லை அவனுக்கு அந்த இரவில் அது தவிர வேறொரு விஷயமும் விசித்திரமாயிருந்தது அவனுக்கு. காவலர் கூடாரங்களை அமைத்திருக்க பானுதேவி, அவள் தோழிகள், ஆங்கரே முதலிய அனைவரும் ஏன் வெளியில் படுக்கிறார்கள் என்பதையும் எண்ணிப் பார்த்தான் இதயசந்திரன். ‘வெப்பத்துக்காக. இவர்கள் வெளியே படுத்திருக்க முடியாது. பனிக் குளிரும் அதிகமாகத்தானே இருக்கிறது. எதற்காக இந்தக் குளிரில் இவர்கள் விரைக்க வேண்டும் என்ற வினாவையும் எழுப்பிக் கொண்டான். ஆனால் எதற்கும் விளக்கம் கிடைக்காது போகவே அரைத் தூக்கமும் அரை விழிப்புமாக அன்றிரவைக் கழித்தான்.

பொழுது புலருவதற்குக் கால் ஜாமத்திற்கு முன்பே அந்த முகாம் விழித்துக்கொண்டது. காவலர் நடமாட்டம் துரிதமாகக் கேட்டது. கூப்பிடு தூரத்தில் அமைதியான அந்தக் காட்டின் ஊடே எழுந்த காற்சிலம்பு ஒலிகள் பெண் களும் விழித்தாகிவிட்டதையும் நிரூபித்தன. இதயசந்திரனும் மெள்ள எழுந்து கண்களைக் கசக்கிக் கொண்டான். அவன் காதுகளில் வேத ரிக்குகளின் ஓசை கம்பீரமாக விழுந்தது. ஸ்வரங்களைத் திட்டமாக உச்சரித்துரிக்குகளைச் சொல்லிக் கொண்டிருந்தார் கூடாரத்துக்குள்ளே பிரும்மேந்திர ஸ்வாமி. அந்த பஞ்ச உஷத்காலத்தில் வேதசப்தங்கள் உடம்பின் ஒவ்வொரு நரம்புக்கும் உணர்ச்சிக்கும் பெரும் ஆறுதலையும் சாந்தியையும் இன்பத் தையும் அளிப்பதை உணர்ந்த இதயசத்திரன் அதை நீண்ட நேரம் கேட்டுக்கொண்டு உட்கார்ந்தான். அடுத்து ஏதோ மகாராஷ்டிர பஜன்களையும் அவற்றை அடுத்துத் திருப்பல்லாண்டிலிருந்து இரண்டு பாட்டுகளையும் சுவாமிகள் சொல்லவே, சுவாமிக்குத் தெரியாதது ஏதுமிருக்க முடியாது என்று நினைத்ததோடு அவர் தமிழ்ப் பிரபந்தப் பாட்டுகளைச் சொன்னது பேரின்பமாயிருந்தது அவன் செவிகளுக்கு. இப்படிக் கேட்டு, எத்தனை நாளா கிறது என்று நினைத்த இதயசந்திரன் மிக இன்பமான எண்ணங்களுடன் எழுந்திருந்து கூடாரத்துக்குள் சென்று சுவாமிகளை வணங்கிவிட்டு வெளியே சென்றான். வாயிலில் வந்து தூரத்தில் தானும் ஆங்கரேயும் படுத்திருந்த மரக்கூட்டத்தைக் கண்டான். ஆங்கரேயை அங்குக் காணோம். பிறகு இரவில் முனகல் கேட்டுக்கொண்டிருந்த இடத்தை நோக்கிச் சென்றான். அங்கும் யாரையும் காணோம். இரண்டொரு இடங்களில் ரத்தக்கறை மட்டும் இருந்தது. அதனால் தீர்க்க சிந்தனையுடன் காட்டுக்குள் நடந்த இதயசந்திரன் காடு வர வர உயரத்தில் போவதையும் அது ஒரு மலைச்சரிவில் இருப்பதையும் புரிந்து கொண்டான். காட்டின் பல பகுதிகளில் அருவிகள் ஓடும் சலசலப்புச் சத்தம் கேட்கவே. ஓர் அருவியின் திசை நோக்கிச் சென்று அதில் நீராடி காலைக் கடன்களை முடித்துக்கொண்டு சுவாமிகளின் கூடாரத்துக்குத் திரும்பினான்.

பிரும்மேந்திர ஸ்வாமி ஆழ்ந்த நிஷ்டையிலிருந்தார். அவர் கண்கள் விழித்திருந்தாலும் புருவ மத்தியை நோக்கித் திரும்பிக் கிடந்தன. அவருக்கு முன்பு கனோஜி ஆங்கரேயும் பானுதேவியும் தோழிகளும் நீராடிப் புத்தாடை அணிந்து நெற்றியில் திலகம் தீட்டி நின்றிருந்தார்கள். சுவாமிஜியின் பூஜைப் பெட்டி அவர் முன்பு திறந்திருந்தது. அதிலிருந்து சாளக்கிராமங்கள் வாய்களில் சந்தனக் காப்புடன் காட்சியளித்தன. ஒரு சுவேத லிங்கமும் ஸ்படிக விநாயகர் பிம்பமும் அவற்றுக் கிடையே பளிச்சிட்டுக் கொண்டிருந்தன. எங்கும் ஒரு.

தெய்வீகச் சூழ்நிலையிருந்தது சுமார் இரண்டு நாழிகை கள் கழித்துத்தான் சுவாமிஜி கண்களைத் திறந்தார். அவர் கண்ணைத் திறந்ததும் பக்கத்திலிருந்த வலம்புரிச் சங்கிலிருந்து தீர்த்தமெடுத்துப் பிம்பங்களுக்குப் புரோக்ஷித்து விட்டுத் தமக்கெதிரே வணங்கியவர்களுக்கும் தீர்த்தப் பிரசாதம் வழங்கினார் எல்லோரும் வணங்கி தீர்த்தப் பிரசாதம் பெற்றதும் பூசைப் பெட்டியை மூடி எடுத்து ஒரு மான் தோலில் கட்டிய பிரும்மேந்திர ஸ்வாமி, “நாம் காலைப் போஜனத்தை இங்கேயே முடித்துக் கொண்டு கிளம்புவோம்” என்று கூறினார் கனோஜி ஆங்கரேயை நோக்கி. கனோஜி ஆங்கரே அந்த உத்தரவை ஏற்றுக் கொண்டு சுவாமிகளின் திருவடியில் படுத்து எழுந்திருந்து வெளியே சென்றார்.

அவர் சென்றதும் இதயசந்திரன் பானுதேவியை நோக்கினான். அவள் முகம் அந்தக் காலையில் களை யிழந்து கிடந்தது. களையிழந்த சமயத்திலும் அது எத்தனை . அழகாயிருக்கிறதென்பதைக் கவனித்த இதய சந்திரன் ‘களையிழப்பதால் சந்திரன் அழகு குன்று கிறதா என்ன?’ என்று தனக்குள் கேட்டுக் கொண்டான். தவிர அவள் முகம் களையிழந்திருப்பதற்குக் காரணமும் புரிந்தது அவனுக்கு. தாராபாயின் ஸார்கேல் அந்தக் கூட்டத்துக்கு வந்ததும் அதில் கலந்து கொண்டதும் ஷாஹுவின் மருமகளுக்குச் சிறிதும் பிடிக்கவில்லையென்பதைப் புரிந்து கொண்டான் இதயசந்திரன். அவன் அப்படி நினைக்கையிலேயே பானுதேவி அதைப்பற்றி சுவாமிகளையே கேட்டுவிட்டாள். இந்த மனிதன் எங்கள் எதிரி என்று கேள்விப்பட்டேன். உண்மைதானா?” என்று.

பிரும்மேந்திர ஸ்வாமியின் கூரிய கண்கள் பானு தேவியை நோக்கிக் திரும்பின ”எந்த மனிதன் எந்த மனித னுக்கு விரோதியில்லை தேவி? எநத மனிதன் தனக்கே விரோதியில்லை?” என்று வினவினார் சுவாமிகள் வெகு சாதாரணமாக.

”சுவாமி, நான் தத்துவம் பேச இஷ்டப்படவில்லை” என்றாள் ஷாஹுவின் மருமகள் தைரியத்துடன்.

“தத்துவம் பேச யார் இஷ்டப்படுவார்கள்? தத்துவம் என்பது அடிப்படை உண்மையல்லவா?” என்று வினவினார் பிரும்மேந்திர ஸ்வாமி.

“நான் உண்மையைப் பேச இஷ்டப்படுகிறேன் சுவாமி! இந்த மனிதன் என் மாமனின் பரம வைரி அவனும் நானும் ஒரே இடத்தில் எப்படி இருக்க முடியும்?” என்று வினவினாள் பானுதேவி குரலில் சிறிது உஷ்ணத்தையும் காட்டி

பிரும்மேந்திர ஸ்வாமி அவளை அனுதாபத்துடன் நோக்கினார் ”பரசுராமபுரம் உனக்குப் பதில் சொல்லும். இன்று மாலையில் கதிரவன் அஸ்தமிக்கு முன்பே அங்கு நாம் சென்று விடுவோம்” என்றும் கூறினார் அனுதாபம் குரலில் ஒலிக்க.

பானுதேவி அப்பொழுதும் அசையாமல் கேட்டாள் “என்ன பதில் சொல்லும் சுவாமி?” என்று.

“மனிதகுலம் ஒன்று என்று.’’

“எப்படித் தெரியும்?”

”பரசுராமபுரத்தில் முஸ்லிம்களும் ஹிந்துக்களும் ஒற்றுமையாய்ப் பூசலில்லாமல் வாழ்வதைப் பார்ப்பாய் பெண்ணே! பரமவைரிகள் அக்கம் பக்கத்தில் கைகட்டி நிற்பதைப் பார்ப்பாய். இம் மாநிலத்தில் மற்ற இடங்களில் அதாலது தரையிலும் கடலிலும் மரணப் போராடுபவர்கள். ஆயுதங்களை எடுக்கவும் துணியாத காட்சியைப் பார்ப்பாய் பரசுராமபுரத்தில் தாங்கக் கூடிய ஆயுதம் பரசு அதைத் தாங்கி நிற்பவர் பார்க்கலரான பரசுராமன். வேறு ஆயுதம் எதுவும் அங்கு உருவப்படுவதில்லை பரசு ராமபுரம் சாந்தி நகரம் அங்கு வைரிகளுக்கு இடமில்லை. உன் மனத்தில் யார் மீதாவது வைரமிருந்தால் அதை இங்கே யே அகற்றி விடு ஷாஹுவின் மருமகளே! இந்தத் தாமினிக் காடு எனது தஃபாவனம். இது பரசுராம

மலையின் வடபுறம் இருக்கிறது. மலையின் தென் சரிவிலிருக்கிறது பரசுராமபுரம். மலைக்காட்டில் ஏறி அப்புறம் இறங்கினால் இதுவரையில் நீ காணாத காட்சியைப் பார்ப்பாய். ஹிந்துக்களை அறவே வெறுக்கும் ஸாத் ஸித்திகூடத் தனது ஆட்களைப் பகலில் அனுப்பத் துணியாமல் இரவில் அனுப்புவதை நீ நேற்றிரவு உணர்ந்திருக்கலாம்” என்ற பிரும்மேந்திர ஸ்வாமி பானுதேவி போகலாம் என்பதற்கு அறிகுறியாகக் கையசைத்தார்.
பானுதேவி சுவாமிகளுக்கு கோபத்துடன் தலை வணங்கிச் சென்றாள் வெளியே. அவளுடன் அவள் தோழிகளும் சென்றனர். இதயசந்திரன் மட்டும் தாமதிக்கவே சுவாமி அவனை நோக்கிப் புன்முறுவலுடன் கேட்டார். ”நீ ஏதாவது கேட்க வேண்டியிருக்கிறதா?” என்று.

இதயசந்திரனுக்கு இரவு நிகழ்ச்சியைப்பற்றிக் கேட்கத் தோன்றினாலும் பிரும்மேந்திர ஸ்வாமியிடம் உள்ளூர இருந்த பயத்தால், “இல்லை ஸ்வாமி, ஏதும் கேட்க வேண்டியதில்லை” என்றான்.

பிரும்மேந்திர ஸ்வாமி அவனைக் கருணையுடன் நோக்கிவிட்டுச் சொன்னார். ”குழந்தாய்! இதய சந்தேகத் தைவிடப் பொய் மிகவும் கெடுதலானது. உன் மனத்தில் எழுந்துள்ள சந்தேகங்கள் எனக்குத் தெரியும். நேற்றிரவு கப்பல் போர் நடந்ததும் அருகாமையிலிருந்த நாங்கள் துடிப்பைக் காட்டாதது உனக்கு வியப்பு. ஆனால் கொங்கணியில் அதில் வியப்புக்குரிய அம்சம் ஏதுமில்லை. அரபிக்கடலில் சதா பல நாட்டுக் கொள்ளைக்காரர்கள் உலாவுகிறார்கள் சதா கப்பல் போர்கள் ஏற்படுகின்றன. சில கொள்ளைக்காரர் படகுகளில் தரைக்கும் வந்து தங்கு வதுண்டு. ஆகவே எந்தப் போரும் எந்த நிலையும் கிராம மக்களுக்கு சகஜமாகிவிட்டது. யாரும் போர்களைச் சட்டை செய்வதில்லை. நேற்றிரவு ஆங்கரே ஒருவனைச் சுட்டதும் உனக்கு வியப்பாயிருக்குமே ஸாத் ஸித்தி இப்படி இரவில் தாக்குவதும் ஆட்களைத் தூக்கிச் செல்வதும் வழக்கமாகிவிட்டது. அப்படி அவன் அனுப்பிய வீரர்களில் ஒருவனைத்தான் ஆங்கரே சுட்டார். இரவில் அந்த இடத்துக்கு நீங்கள் யார் சென்றிருந்தாலும் உங்களை ஸாத் ஸித்தி ஆட்கள் சுட்டிருப்பார்கள். ஆகையால்தான் சுடப்பட்டவனைக் காலையில் எழுந் திருந்த பின்பு ஆங்கரே கவனித்தார். அவனுக்குத் துப்பாக்கிக் காயம் தொடையில் தான் பட்டிருந்தது. அவனுக்குக் கட்டுப் போட்டுக் காவலர் கூடாரத்தில் தூக்கிப் போட்டிருக்கிறார்” என்று. ”இனி சந்தேகம் ஏதாவதிருக்கிறதா தமிழா?” என்றும் வினவினார்.

“அவர்கள் வந்தது. ஆழ்ந்த தூக்கத்திலிருந்த கனோஜிக்கு எப்படித் தெரிந்தது?” என்று வினவினான் இதயசந்திரன்.

“புலி உறங்கும்போது விழித்திருக்கும். விழித்திருக்கும் போது உறங்கும், அதன் போக்குத்தான் கனோஜிக்கும். அவர் ஓர் அற்புத மனிதர் இதயசந்திரா! மகாராஷ்டிரத்தின் விமோசனம் அவர் கையில் தானிருக்கிறது” என்ற சுவாமியின் குரல் மிகவும் கனிவாயிருந்தது.

கனோஜியிடம் அவருக்கிருந்த பெருமதிப்பையும் அன்பையும் புரிந்து கொண்ட இதயசந்திரன் வெளியே செல்லக் கிளம்பினான். போகும்போது அவனை, “இதய சந்திரா!” என்றழைத்து சுவாமி கூறினார். ”எக் காரணத்தை முன்னிட்டும் உன் வாளை உருவாதே. ஸாத் ஸித்தி உன்னை அவமதித்தாலும் பொறுத்துக்கொள்” என்றும் எச்சரித்தார்.

“ஸாத் ஸித்தி பரசுராமபுரத்துக்கு வருவானா?” என்று வினவினான் இதயசந்திரன்.

“வருவான், காயமடைந்த அவன் வீரனை அழைத்துச் செல்ல. அவன் வீரன் காரணமின்றிச் சுடப்பட்டதாகப் புகாரும் செய்வான். நாளை பரசுராமபுரத்தில் பல விசித்திரங்களை நீ பார்ப்பாய். எதைப் பார்த்தாலும் கவலைப்படாதே. ஆனால் ஸாத் சித்தியிடமிருந்து விலகி நில்” என்று எச்சரித்த சுவாமி அவனுக்குப் போக விடையளித்தார்.

ஆனால் பரசுராமபுரத்தில் விதி அவனைத் தொடர்ந்து வந்தது. பரசுராமபுரத்திற்குள் பிரும்மேந்திர ஸ்வாமி நுழைந்தபோது அவருடன் செல்லாமல், கண்ணைக் கவர்ந்த அந்த நகரத்தின் சூழ்நிலையைப் பார்த்துப் பிரமித்துக் கொண்டிருந்த இதயசந்திரனை நோக்கிப் புரவி வீரர் கூட்டமொன்று பாய்ந்து வந்தது. அதன் முகப்பில் அராபியப் புரவியில் வெகு கம்பீரமாக அமர்ந்து வந்த ஒருவன் அவனருகே வந்ததும் புரவியை நிறுத்தி, “டேய்! பாதையில் நிற்காதே! விலகி நில்” என்று அதட்டியதன்றி அவனை உதைக்க இடது காலையும் தூக்கினான். அந்த உதை இதயசந்திரன் மீது விழவில்லை. பதிலுக்கு அந்த ஆஜானுபாகு அடுத்த விநாடி மலைச் சரிவில் புரண்டுகொண்டிருந்தான். அக்கம் பக்கத்திலிருந் தவர் திகிலுற்றுத் திக்பிரமையடைந்து நின்றனர். உருண்டவன் ஸாத் ஸித்தியென்ற காரணத்தால்.

Previous articleJala Deepam Part 1 Ch11 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 1 Ch13 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here