Home Historical Novel Jala Deepam Part 1 Ch13 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 1 Ch13 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

66
0
Jala Deepam part 1 Ch13 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 1 Ch13 | Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 1 Ch13 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 13 மரண அணைப்பு

Jala Deepam Part 1 Ch13 | Jala Deepam | TamilNovel.in

வாழ்வில் ஏற்படும் சின்னஞ்சிறு நிகழ்ச்சிகள் வாழ்வின் பாதையில் பெரும் திருப்பங்களை ஏற்படுத்தி விடுகின்றன. பிரும்மேந்திர சுவாமியுடன் செல்லாமல் தனித்து நின்று பரசுராமபுரத்தின் அழகைப் பருகிய இதய சந்திரனும் அத்தகைய ஒரு பெரும் திருப்பத்தில் நின்று கொண்டிருந்தானானாலும் அதை அவன் அறிந் தானில்லை.

பரசுராமபுரத்து தெய்வீக அழகில் மயங்கி நின்று கொண்டிருந்தான் அவன், மஞ்சள் வெய்யில் வீசிய அந்த மாலை வேளையில். தாமினிக் காட்டிலிருந்து புறப்பட்டுக் கஷ்டப்பட்டு மலையில் ஒருபுறம் ஏறியதால் ஏற்பட்ட கஷ்டங்கள்கூட, அதே மலையின் இன்னொரு புறச் சரிவிலிருந்து பரசுராமபுரத்தின் இணையற்ற அழகைப் பார்த்ததால் அடியோடு அகன்று விட்டது அவனுக்கு. அன்றைய பகலில் உச்சிவேளைக்குச் சற்று முன்பு கூடாரங்களைக் கழற்றிச் சுருட்டிப் பயணப்படும்படி சுவாமிகள் உத்தரவிட்டபோதும் சரி, பிறகு மிகக் கஷ்டமான பயணத்தின் போது கனோஜி கூறிவந்த பரசுராமபுரத்தின் அற்புதக் கதையின் போதும் சரி, அவர் சாதாரண ஒரு மலைப்பட்டிணத்தை எதிர்பார்த்தானே தவிர, இத்தகைய இதயத்தை அள்ளும் காட்சியை எதிர்பார்க்கவில்லை. காவல் வீரர்கள் கூடாரங்களைச் சுருட்டியதும் பிரும் மேந்திர சுவாமி காயமடைந்த அபிஸீனியனை பானுதேவியின் பல்லக்கில் படுக்க வைத்துத் தூக்கிவர உத்தரவிட்டு, தமது பூஜைப் பெட்டியுடன் ஒரு புரவியில் ஏறிக் கொள்ள, பானுதேவியும் காவலன் புரவியொன்றில் ஏறிவர, இதயசந்திரன் மற்றொரு காவலன் புரவியில் ஆரோகணிக்க, கூட்டம் பயணப்பட்டது. கூட்டம் நகர்ந்து ஒரு நாழிகைக்குப் பிறகுதான் கனோஜி ஆங்கரே;

ஒரு பெரிய வெண்புரவியில் அவர்களுடன் கலந்து கொண்டார். அப்படிக் கலந்து கொண்டபோதும் அவர் சுவாமிகள் பக்கலில் செல்லாமல் தமது புரவியைத் தேக்கிக் கடைசியில் வந்து கொண்டிருந்த இதயசந்திரன் புரவியுடன் இணைத்துக் கொண்டார். சுவாமிகள் பக்கத்தில் சென்று கொண்டிருந்த பானுதேவி, கனோஜி ஆங்கரே இதய சந்திரன் அருகே சென்றதும் அவர்கள் இருவர்மீதும் உஷ்ணப்பார்வையொன்றை வீசி விட்டு மீண்டும் தலையை அலட்சியமாகத் திருப்பி எதிர்ப் பாதையைக் கவனித்துக் கடிவாளத்தை உலுக்கிப் புரவியை நடத்தினாள்.

தாமினிக் காடு அடர்த்தியாயிருந்ததன்றி, மலைச் சரிவில் அவர்கள் ஏற வேண்டியிருந்ததாலும், பாதை மிகக் கரடுமுரடாயிருந்தபடியாலும் புரவிகள் சற்றுச் சிரமப்பட்டே நடந்தன. அந்தப் புரவிக் கூட்டத்தில் கனோஜி ஆங்கரேயின் புரவி மட்டும் தனிப்பட்ட வேகத்தைப் பெற்றிருந்ததைப் பார்த்த இதயசந்திரன் வீரனுக்கு இயற்கையாகவுள்ள ஆசையால் கேட்டான், ”இந்தப் புரவி தனிரகம் போலிருக்கிறதே?” என்று.

ஆமென்பதற்கு அறிகுறியாகத் தலையசைத்த கனோஜி ஆங்கரே. “அரபு நாட்டுப் புரவி இது. பாலைவனங்களில் வேகமாகச் செல்லும். மலையில் செல்ல நான் தான் பழக்கினேன். இதை சுவாமிகளுக்குக் கொடுக்கத்தான் கொண்டு வந்திருக்கிறேன்” என்று.

“சுவாமிகளுக்கா! அடிக்கடி சுவாமி புரவியில் ஏறிச் செல்வாரா?” என்று வினவினான் இதயசந்திரன்.

“சாதாரணமாக நடந்துதான் செல்வார். பாரதம் முழுதும் யாத்திரை செய்திருக்கும் சுவாமிக்கு நடை ஒரு பிரமாதமல்ல. இருப்பினும் அவசியமானால் புரவியிலும் செல்வார்” என்றார் கனோஜி ஆங்கரே.

”பாரதம் முழுவதும் பயணம் செய்திருக்கிறாரா!” இதயசந்திரன் வியப்புடன் வினவினான்.

கனோஜி இக் கேள்விக்கு உடனடியாகப் பதில் சொல்ல வில்லை. சற்றுச் சிந்தித்துவிட்டு. “‘வீரனே! உனக்குக் கதை முழுதும் சொன்னால் தான் புரியும். சொல்கிறேன் கேள்!” என்ற அவர் மெள்ளத் துவங்கினார் கதையை:

”பிரும்மேந்திர சுவாமியின் பெயர் விஷ்ணு. அவர் தந்தையின் பெயர் மகாதேவ் பட். தாயின் பெயர் உமா பாய் சுமார் எட்டு வயதிலிருந்தே விஷ்ணு என்ற சிறுவன் சமாதியில் திளைத்து மணிக்கணக்கில் மூச்சுப் பேச்சின்றி இருப்பதைத் தாய் தந்தையர் பார்த்து வியாகூலமடைந் தனர். அந்த மோன நிலை வயதுடன் வளர்ந்து. வேத் பாடங்களுடன் விருத்தியாயிற்று. சுமார் பன்னிரண்டு வயதில் சுவாமி துறவறம் பூண்டு காசிக்குப் போய்ப் பல ஆண்டுகள் வேத சாஸ்திரங்களைக் கற்றறிந்தார். பிறகு பிரும்மேந்திர சுவாமியென்ற பட்டமும் பெற்று, பாரத யாத்திரை கிளம்பினார். ஹிமாலயத்திலிருந்து கன்னியாகுமரிவரை அத்தனை தலங்களையும் தரிசித்தார். அத்தனை புண்ணிய நதிகளிலும் புஷ்கரணிகளிலும் நீரானார். பிறகு உள்ளே ஏதோ ஒரு சக்தி உத்தரவிட, கொங்கண நாடு வந்தார். பரசுராமபுரத்தை அடைந்தார்…’ இந்த இடத்தில் கனோஜி தமது சொற்களைச் சிறிது தேக்கி இதயசந்திரனைக் கவனித்தார். இதயசந்திரன் பிரமித்துக் கேட்டுக் கொண்டிருந்தான். கனோஜி பயத்துடன் மேலே தொடர்ந்தார்:

“அவர் இங்கு வந்தபோது மலைச்சரிவின் உச்சியிலிருந்த பரசுராமன் கோவில் இடிந்து கிடந்தது. சித்பவன் அந்தணர்களின் பிறப்பிடமான பரசுராமபுரத்தில் இடிந்த வீடுகள் சில இருந்தன. சித்பவன் அந்தணர்களையும் அவர்களுக்காகக் கொங்கணத்தையும் சிருஷ்டித்த பார்கவ ராமனான- பரசுராமன் இருப்பிடம் கேடுற்றுக் கிடந்த தைக்கண்ட சுவாமி கண்ணீர் விட்டார். இடிந்த கோயிலிலேயே தியானத்தில் உட்கார்ந்துவிட்டார் ..

”அன்ன ஆகாரமின்றி, கண் திறவாமல், உயிரே உடலில் இல்லாதது போல் நாற்பது நாட்கள் சமாதியிலிருந்த சுவாமியைப் பார்த்து பலர் சில முஸ்லிம்கள் உள்பட பிரமித்துப் போயினர். இப்பொழுது பரசுராமபுரம் இருக்கும் பெத்தே என்ற கிராமத்தையும் அம்பாஸ் என்ற கிராமத்தையும் ஜன்ஜீராத் தீவின் தலைவர் ஸித்திரஸுல்யாகூத்கான், சுவாமிக்கு இனாமாகக் கொடுத்திருக்கிறார். பட்டண நிர்மாணத்துக்குப் பணம் நிரம்பக் கொடுத்திருக்கிறார். அவர் உதவியால் நிர்மாண மான பரசுராமன் கோயிலையும் பட்டணத்தையும் பார். அங்குள்ள மற்றக் கோவில்களையும் பெரும் பிரார்த்தனை மண்டபத்தையும், தனித்து உயர்ந்து நிற்கும் ஜோதி ஸ்தம்பத்தையும் பார். உனக்கு சுவாமியின் சக்தி. செல்வாக்கு இரண்டும் தெரியும்!” என்றார் கனோஜி ஆங்கரே.

இதற்குப் பிறகு அவரும் பேசவில்லை. இதயசந்திரனும் பேசவில்லை. மௌனமாகவே பயணம் நடந்தது. மெள்ள பரசுராம மலையின் வடபுறத்திலிருந்த தாமினிக்காட்டைக் கடந்து தென்புறத்தில் கீழிறங்கிய பாதையில் சுவாமிஜியின் கூட்டம் நகர்ந்தது. அந்தப் பகுதி வந்ததும் கனோஜி ஆங்கரே தமது புரவியை நிறுத்திக் காட்டு முகப்பிலேயே நின்றுவிட்டார். இதயசந்திரன் மனம் பரசுராமபுர விருத்தாந்தங்களில் திளைத்திருந்ததால் அவர் நின்று விட்டதைக் கவனிக்காமல் புரவியை நடத்திச் சென்றான்.

சுவாமி கூறியபடி அவர்கள் பரசுராமபுரத்தின் தெற்கு வாயிலை மாலை நெருங்கிக் கொண்டிருந்த சமயத்தில் அடைந்தார்கள். சுவாமிகள் வந்துவிட்டதை மலை உச்சியிலிருந்து பார்த்த ஒருவர் கையசைக்க, பரசுராமன் கோவிலின் மணி ‘டணார் டணார்’ என்று பலமாக அடித்தது. உடனே வாயிலுக்குப் பெருங்கூட்டம் வந்து அவரை எதிர்கொள்ளவே சுவாமிகள் புரவியிலிருந்து இறங்கி ஒரு கையில் பூஜைப்பெட்டியையும் இன்னொரு கையில் பூண் போட்ட பெருந்தடியையும் தாங்கிக்கொண்டு நடந்தார். எங்கும் மக்கள் கூட்டமாகத் திரண்டு வந்தனர். அவர்களில் பல நாட்டு மக்களும் இருந்தனர். பலதரப்பட்ட மக்களும் இருந்தனர். சுவாமியைப் பற்றிய ஜெயகோஷம் வானைப் பிளந்தது. இதையெல்லாம் பார்த்துப் பிரமித்து நின்று கொண்டிருந்த இதயசந்திரனை இடை புகுந்த கூட்டம் சுவாமியிடமிருந்து பிரித்து விட்டாலும் அதைப்பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் இதயசந்திரன் அந்த மாலை அழகை, பட்டணத்தின் அற்புதத்தை, சூழ்நிலையின் சிறப்பைப் பருகிக் கொண்டிருந்தான்.

அந்த மாலை நேர மஞ்சள் வெய்யிலில் பரசுராம மலையின் தென்புறத்திலிருந்த பரசுராம பட்டணம் பொன் மெருகோடியிருந்தது. அதன் தெற்கு வாயில்கூடக் கிட்ட தட்டக் கோட்டை வாயில் போல இருந்ததன்றி. அதன் முகப்பில் நின்றிருந்த இரு துவார பாலகர்கள் சிலைகளும் சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக அமைந்திருந்தன. அந்த பிம்பங்களையும் அதற்குப் பின்புறம் மலைச்சரிவில் தெரிந்த பெரும் கட்டிடங்களையும் உச்சியில் தெரிந்த பரசுராமன் கோவிலையும் கண்ட இதயசந்திரன் ‘என்ன ரம்மியமான இடம்’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். அவன் நின்றிருந்த இடத்திற்கு நேர் கீழே வாசிஷ்டி நதியின் பெரும் பிரவாகம் அந்த மலையின் அடிவாரத்தை அணைத்து ஓடிக் கொண்டிருந்ததையும், அந்த நதியில் அரபிக்கடலின் எதிர் அலைகள் பாய்ந்ததால் பேராழம் அதற்கிருந்ததையும், இரண்டு மூன்று சிறு மரக்கலங்கள் அந்த நதியில் ஆடி நின்று கொண்டிருந்ததையும் கண்ட இதயசந்திரன் பரசுராமபுரம் தெய்வீக இருப்பிடமாகவன்றி நல்ல வர்த்தக ஸ்தலமாகவும் இருக்கக்கூடுமென்று கணக்குப் போட்டான். எதிரே நதியைத் தாண்டியிருந்த சிப்ளன் நகரத்தையும் சற்றுத் தொலைவில் தெரிந்த கோவில் தீவு, அதன் கோட்டை இவற்றையும் பார்த்த இதயசந்திரன். அந்தப் பிராந்தியம் வர்த்தகத்துக்கும் போருக்கும் எத்தனைப் பிரதான மென்பதை உணர்ந்து கொண்டான். இந்தச் சமயத்தில் அவனிருந்த இடத்தைச் சுற்றி வளைத்துச் சென்ற மலைப் பாதையில் புரவி வீரர்கள் கூட்டம் வருவதை அவன் கவனிக்காததால் பாதையை விட்டு நகர அவனுக்கு அவகாசமும் இல்லாது போயிற்று. இந்த நிலையில் நிகழ்ந்தது அந்த விபரீத சம்பவம். புரவிக் கூட்டத்தின் முகப்பில் வந்தவன் சற்றுப் புரவியை நிறுத்தி இதய சந்திரனைக் கண்டித்திருந்தால் இந்தக் கதையின் திருப்பம் முற்றிலும் மாறாயிருந்திருக்கும். ஆனால் என்றுமே பிரும்மேந்திர ஸ்வாமியை மதிக்காதவனாக அவரைத் துன்புறுத்துவதையும், அவர் அதிகாரத்துக்குட்பட்ட கிராமங்களைத் தனது அதிபதியான ஸித்தி ரஸுல் யாகூத் கானுக்குத் தெரியாமல் கொள்ளையிடுவதையுமே குறிக் கோளாகக் கொண்ட ஸாத் ஸித்தி, இதயசந்திரன் பாதை யின் நட்ட நடுவில் நின்றதை அதிகாரத்தாலும் ஆணவத்தாலும் அகற்றக் கருதிக் காலைத் தூக்கிவிட்டதால் வந்த விபரீதம் அது.

ஜன் ஜீராவின் ஸித்தி ரஸுல் யாகூத்கான் பொறுமை யுள்ளவன், மகாராஷ்டிரர்களோடு நட்புரிமை கொண்டாட நினைத்தும், மொகலாய சக்ரவர்த்தியின் உத்தரவால் போரிட்டு வந்தவன். ஆனால் அவன் தரைப் படைத் தலைவனும் அஞ்சன்வேல் கோட்டை அதிகாரியு மான ஸாத் ஸித்தி, அப்படி இல்லை. சுவாமியின் எல்லையற்ற பொறுமையையும் சோதித்து வந்த அவன் இதய சந்திரனை உதைத்துத் தள்ளக் காலைத் தூக்கினான். ஏதோ யாரோ பராக்குப் பார்க்கிறானென்று தப்புக் கணக்குப் போட்டான் ஸித்தி. பராக்குப் பார்த்த முகத்தில் சினம் மின்னல்போல் பளிச்சிட்டது. உதைக்க எழுந்த. ஸித்தியின் கால் இரும்பு போன்ற பிடியில் கண்ணிமைக்கும் நேரத்தில் சுழன்றது. அடுத்த விநாடி மலைச் சரிவில் புரண்டதைத் தவிர வேறெதுவும் தெரியவில்லை ஸாத் ஸித்திக்கு.

ஸித்தியின் காலைத் திருகி அவனைப் புரவியிலிருந்து உருவிவிட்டதும் கையைத் துடைத்துக்கொண்டு நின்ற அந்த தமிழக வாலிபனை ஸித்தியின் வீரர்கள் அங்கேயே வெட்டிப் போட்டிருக்கலாம். ஆனால் நடந்த காரியம் சிறிதும் எதிர்பாராததால் பிரமிப்பு அவர்களை ஆட்கொள்ளவே, நீண்ட நேரம் சிலையெனச் சமைந்து நின்றனர். சற்றுச் சுரணை வந்ததும் வாட்களை உருவிய அவர்களைச் சரிவிலிருந்து எழுந்த கம்பீரக் குரல் தேக்கியது. ‘நில்லுங்கள்!” என்று கூவிய ஸாத் ஸித்தி, எழுந்திருந்து தனது ஆடையிலிருந்த தூசியைத் தட்டிக்கொண்டு மலைச் சரிவில் நிதானமாகவும் கம்பீரமாகவும் நடந்து பாதைக்கு வந்தான். பல வினாடிகள் பேசாமலே இதய சந்திரனை ஆச்சரியத்துடன் உற்று நோக்கினான். “நீ எந்த நாட்டவன்?” என்று வினவினான் கடைசியில் ஸாத் ஸித்தி.

”தமிழ் நாட்டவன், போரில் என்னைக் கொல்லலாம். காலால் உதைக்க முடியாது” என்றான் இதயசந்திரன் முகத்தில் சுடர்விட்ட கோபம் சிறிதும் தணியாமல்.

ஸாத் ஸித்தியின் முகத்தில் கோபம் சிறிதும் இல்லை. மிக நிதானத்துடன் இதயசந்திரனைப் பார்த்த அவன், “தமிழா! உன்னை இங்கு கொல்ல முடியாது. உனக்குத் தெரியுமல்லவா அது?” என்று வினவினான்.

“ஏன்?”

“இந்தத் துறவியின் எல்லையில் யாருமே ஆயுதம் உருவக் கூடாது என்பது அனைவரும் ஒப்புக்கொண்ட ஏற்பாடு. ஆனால்…’ என்று சற்று நிதானித்த ஸாத் ஸித்தி, ”ஆயுதம் உருவாமல் உன்னைத் தண்டிக்கலாம்” என்று கூறி சற்றும் எதிர்பாராத வகையில் தன் முஷ்டியைத் தூக்கி வெகு பலமாக இதயசந்திரன் முகத்தில் பாய்ச்சினான்.

அடுத்த வினாடி ஸாத் ஸித்தியின் வியப்பு எல்லையை யும் மீறியது. அவன் பலமான முஷ்டி தமிழன் முகத்தை அணுகவில்லை. மெல்லிய கரம் அவன் கணுக்கையை இரும்பு போல் பிடித்து நிறுத்தியிருந்தது.

ஸாத் ஸித்தி கையை முறுக்கி முஷ்டியை விடுவித்துக் கொண்டான். இரண்டாம் முறை அவன் கையை ஓங்க முற்படவில்லை. இதயசந்திரனை மார்புறத் தழுவிக் கொண்டான்.

“வீரன் வீரனைப் புரிந்து கொள்ள முடியும். இன்று முதல் நாம் நண்பர்கள்” என்று கூறிவிட்டு மீண்டும் புரவி மீதேறிப் பட்டண வாயிலில் நுழைந்து சென்றான்.

ஸாத் ஸித்தி சென்ற திக்கைப் பார்த்துக்கொண்டே நின்ற இதயசந்திரன் மனம் குழம்பிக் கிடந்தது. மஞ்சள் வெய்யில் மறைந்து இருட்டும் கவிந்து கொண்டிருந்தது பட்டணத்தின் விளக்குகள் எரிய ஆரம்பித்தன. ஜோதி ஸ்தம்பம் ஆயிரம் விளக்குகளால் அற்புதமாகக் காட்சி யளித்தது. அந்தச் சமயத்தில் அவன் பின்புறத்திலிருந்து வந்த கனோஜி ஆங்கரே, “தமிழா! ஸாத் ஸித்தியின் அணைப்பைப்பற்றி மகிழ்ச்சி கொள்ளாதே. அது உனக் கேற்பட்டுள்ள மரண அணைப்பு’ என்றார்.

Previous articleJala Deepam Part 1 Ch12 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 1 Ch14 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here