Home Historical Novel Jala Deepam Part 1 Ch15 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 1 Ch15 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

67
0
Jala Deepam part 1 Ch15 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 1 Ch15 | Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 1 Ch15 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 15 இரவில் ஓர் அழைப்பு

Jala Deepam Part 1 Ch15 | Jala Deepam | TamilNovel.in

ஜன்ஜீராத் தீவின் தலைவனான ஸித்தி ரஸுல் யாகூத்கானின் தரைப்படைத் தளபதியும் அஞ்சன்வேல் கோட்டையின் அதிபதியுமான ஸாத் ஸித்தி அந்தப் பிரார்த்தனை மண்டபத்தில் மிகுந்த அடக்கத்தைக் காட்டி சுவாமியிடம் வெளியிட்ட கோரிக்கை தமிழகத்தின் வாலிப வீரனை அதிர்ச்சியுறச் செய்ததென்றால் அதற்குக் காரணப் இருக்கவே செய்தது. தனது காவல் வீரனொருவனைச் சுட்டவனைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமென்றும், அல்லது அவன் மீது தக்க நடவடிக்கையெடுக்க வேண்டுமென்றும் நினைத்திருந்த இதயசந்திரனுக்கு ஸாத் ஸித்தியின் முதல் கோரிக்கை தன்னைப்பற்றியே இருந்ததைக் கேட்டதும் திக்பிரமை உண்டாவது சகஜமேயல்லவா? “இவனை என்னிடம் சுவாமி ஒப்படைக்க வேண்டும்” என்று ஸாத் ஸித்தி தன் பக்கம் கைகாட்டிக் கேட்டதும் சற்றும் எதிர்பாராத அந்தக் கோரிக்கையால் இதயசந்திரன் சித்தம் சில விநாடிகள் உடைந்துவிட்டதானாலும் பிறகு சுயநிலைக்கு அதிவேகமாகத் திரும்பவே, வியப்பு நிரம்பிய விழிகளை அந்த அபிஸீனியன் மீது நிலைக்கவிட்டான் அவன். ஸாத் ஸித்தியின் முகம் அந்தக் கோரிக்கைக்குப் பிறகுங்கூட எந்தவித உணர்ச்சியையும் காட்டாதிருந்ததையும் அவன் அடக்கம் சிறிதளவும் குறையாததையும் கண்ட தமிழக வீரன் அஞ்சன்வேல் அதிபனைப் பற்றிப் பெருமதிப்புக் கொண்டதன்றி அவனைப்பற்றி ஆங்கரே எச்சரித்ததில் அர்த்தமுமிருக்கிறதென்பதைப் புரிந்தும் கொண்டான்.

ஆனால் சுவாமியின் நிலை ஸித்தியின் நிலையைவிட அதிக நிதானத்திலிருந்தது. அவர் கண்களில் சற்று முன்பு வேதம் சொன்னபோதிருந்த சாந்தி அப்பொழுது இருந்தது ஒரு விநாடி அவர் ஸாத் ஸித்தியையும் பார்த்துத் தமக்கு முன்பு ஜ்வாலை அடங்கித் தணிந்துவிட்ட ஹோமாக்கினியையும் பார்த்தார். ஜ்வாலை அடங்கி விட்டாலும் உள்ளூரத் தணல் இருக்கிறதென்று மனத்துக்குள் நினைத்துக்கொண்ட பிரும்மேந்திர ஸ்வாமி ஸாத் ஸித்தியைப் பார்த்து. “இவனை முன்பே தெரியுமா உனக்கு?” என்று வினவினார் சாந்தி குரலிலும் ஒலிக்க.

சுவாமியின் கண்கள் தன்னை நோக்கி ஹோமாக்கினியையும் நோக்கியதைக் காணத் தவறாத ஸித்தியும் சாதாரணக் குரலிலேயே பதில் சொன்னான், “சற்று முன்புதான் தெரிந்து கொண்டேன்” என்று.

காரணத்தையோ வேறு விவரணத்தையோ சுவாமி விசாரிப்பாரென்று எதிர்பார்த்த இதயசந்திரன் ஏமாந்தே போனான். சுவாமி சாதாரணமாக ஸித்தியை நோக்கி, “அதற்குள் இவனிடம் அன்பு ஏற்படக் காரணம்?” என்று வினவினார்.

”வீரன் வீரனை விரும்பாதிருக்க முடியுமா?” என்று வினவினான் ஸாத் ஸித்தி.

”இவன் வீரனென்பதையும் புரிந்து கொண்டாயா? ஒரு வேளை வாளை உபயோகப்படுத்தினானா?” என்று வினவினார் சுவாமி.

“இந்தப் பட்டணத்தில் வாள் உருவக்கூடாது என்று சுவாமியின் கட்டளை இருக்கும் போது அதை யார் மீற முடியும்?” என்று பதில் கேள்வி விடுத்துத் தனக்கு சுவாமியிடத்தில் மதிப்பிருப்பதாக நடித்தான் ஸித்தி.

“வேறு எந்த விதத்தில் இவனை வீரனென்று புரிந்து கொண்டாய்? வாளை இடுப்பில் கட்டியிருப்பதாலா?” என்று கேட்டார் சுவாமி.

”இல்லை சுவாமி, வாளை யார் வேண்டுமானாலும் இடுப்பில் கட்டித் தொங்கவிட்டுக் கொள்ளலாம்” என்று குறிப்பிட்டான் ஸித்தி.

“உன் அன்பை ஈர்க்க ஏதாவது நிகழ்ச்சி ஏற்பட்டிருக்க வேண்டுமே ஸித்தி?” என்றார் பிரும்மேந்திர ஸ்வாமி ஸித்தியை நோக்கி.

ஸாத் ஸித்தியின் அடுத்த சொற்கள் சுவாமியின் கண்களில் லேசாகக் கவலை ரேகையைப் படரவிட்டது. ”என் காலை ஒருவன் கணநேரத்தில் திருகிப் புரவியிலிருந்த என்னை மலைச்சரிவில் உருளவிட்டால் அவன் வீரத்தையும் துணிவையும் பற்றி என்ன நினைக்கிறீர்கள் சுவாமி!” என்ற ஸாத் ஸித்தியின் உதடுகளில் புன்முறுவல் தவழ்ந்தது. அந்தப் புன்முறுவலுடன் இதயசந்திரனையும் திரும்பி ஒரு முறை நோக்கிவிட்டு மீண்டும் சுவாமியின் மீது கண்களைத் திருப்பினான் ஸாத் ஸித்தி.

சுவாமியின் கண்களில் லேசாகப் படர்ந்த கவலைகூட இதைக் கேட்டதும் அகன்றுவிட்டது. அவர் உள்ளத்தில் எந்த உணர்ச்சி இருந்தாலும் அது அவர் முகத்திலோ நின்றிருந்த தோரணையிலோ சற்றும் தெரியவில்லை. மிகச் சாவதானமாகவே சொன்னார் சுவாமி, ”அப்படி அவன் செய்திருந்தால் அது பெரும் குற்றம்” என்று.

அதுவரை பொறுத்துக் கேட்டுக்கொண்டிருந்த இதய சந்திரன் அவர்கள் சம்பாஷணையில் குறுக்கிட்டு, “சுவாமி! நான் தமிழ் நாட்டவன். இங்குள்ள சட்ட திட்டங்கள் எனக்குத் தெரியாது’ என்று தாழ்மையுடன் விண்ணப்பித்துக் கொண்டான்.

சுவாமியின் கண்கள் இதயசந்திரனை அனுதாபத்துடன் நோக்கின. சொற்களிலும் அந்த அனுதாபம் ஒலிக்க, “இதயசந்திரா! எந்த நாட்டிலும் அந்த நாட்டுப் படைத்தலைவனை மலையில் உருட்டித் தள்ளிவிட்டுத் தப்பிச் செல்ல அனுமதிக்கும் சட்டம் கிடையாது” என்று கூறினார்.

“இந்த நாட்டுச் சட்டம் எனக்குத் தெரியாது சுவாமி. ஆனால் எங்கள் நாட்டில் படைத்தலைவராயிருந்தாலும்

சாதாரண வீரனைக்கூடக் காலால் உதைக்க முடியாது’ என்றான் இதயசந்திரன் சற்றுக் கோபத்தைக் குரலில் காட்டி.

சுவாமி இதைக் கேட்டதும் வியப்புடன் ஸாத் ஸித்தியை நோக்கினார். ”இவன் ஏதோ சொல்கிறானே?” என்றும் கேட்டார் வியப்பைக் குரலில் நன்றாகக் காட்டி.

“இவன் நடுப்பாதையில் நின்றிருந்தான். என் புரவி வேகமாக வந்தது. இவனை நான் அகற்றாவிட்டால் புரவி இவனை மிதித்துத் தீர்த்திருக்கும். உதைத்து இவனை அகற்றுவதைத் தவிர வேறு என்ன வழி இருந்தது?” என்று வினவினான் ஸாத் ஸித்தியும் குரலில் உஷ்ணத்தைக் காட்டி.

”புரவியின் கடிவாளத்தை இழுத்து அதை நிறுத்தவோ பக்கச்சரிவில் சற்று இறங்கவோ முடியாதவன் புரவியேறுவது எப்படிச் சரியாகும்? தவிர என்னை உதைக்கக் காலை ஒருவன் தூக்கும்போது அந்தக் காலைத் திருகி அதற்குடையவனைக் கீழே வீழ்த்துவதைத் தவிர எனக்கு வேறு என்ன வழி இருந்தது?” இந்தக் கேள்வியை இதயசந்திரன் பாதி சுவாமியையும் ஸித்தியையும் பார்த்துக் கேட்டான்.

சுவாமி சில விநாடிகள் சிந்தித்தார். பிறகு ஸித்தியை நோக்கி, ”ஸாத்! நீ பெரிய வீரன். இவன் வேறு நாட்டவன். இவனை நீ மன்னிக்க முடியாதா?” என்று வினவினார்.

ஸாத் ஸித்தி சுவாமியை நோக்கி, “சுவாமி! சாதாரண மாகக் காட்டைக் காவல் புரியும் என் வீரரில் ஒருவன் முதலிரவு சுடப்படுகிறான். மறு நாள் காலையில் என்னையே ஒருவன் மலைச்சரிவில் உருட்டுகிறான். அத்தனையும் நான் பொறுக்க வேண்டும். இது எந்த நியாயத்தில் சேர்ந்தது?” என்று வினவினான்.

“ஸாத்! உன் வீரனைச் சுட்டவனை நீ பிடித்துப் போகலாம். பரசுராம பட்டணத்து எல்லைக்கு வெளியில்

அவன் இருந்தால், அவனுக்கு நான் பரியவில்லை . அவனைக் காப்பதும் என் வேலையல்ல. ஆனால் இவன் இந்த நாட்டு விதிகளை அறியாதவன். நீ யாரென்பதும் இவனுக்குத் தெரியாது. தவிர தன்னை உதைக்க ஒருவன் காலைத் தூக்கும்போது எந்த வீரனும் பொறுக்க மாட்டானென்பது வீரனான உனக்கு நான் சொல்ல. வேண்டுமா?” என்று வினவினார்.

ஸாத் ஸித்தியின் முகத்தில் கோபம் திடீரெனச் சுடர் விட்டது. அவன் மண்டபம் அதிரும்படியான குரலில் இரைந்து கூவினான், “இது தான் உங்கள் முடிவா?” என்று.

பிரும்மேந்திர சுவாமி மிக நிதானமாக, ‘ஆம்’ என்ற ஒரே சொல்லில் பதில் கூறினார்.

“என் வீரனைச் சுட்டது யாரென்பதை நான் ஊகிக்க முடியும்” என்று மீண்டும் இரைந்தான் ஸித்தி.

“ஊகத்துக்கு அவசியமில்லை ஸாத்! காலின் அரவத்தைக் கொண்டு இருட்டில் நோக்கிச் சுடக்கூடியவர் ஆங்கரே ஒருவர் தான்” என்றார் சுவாமி ஏதோ அனைவரும் அறிந்த சாதாரண உண்மையைக் கூறுபவர் போல.

‘ஸித்திகளின் பரம வைரி.”

”ஆம்.”

“அவரை நீங்கள் பாதுகாக்கிறீர்கள்.”

“நானல்ல. பரசுராமன்.”

“பரசுராமனை எனக்குத் தெரியாது. உங்களை எனக்குத் தெரியும்.”

“யாராவது ஒருவரைத் தெரிந்து கொண்டால் இன்னொருவரைத் தெரிந்து கொண்ட மாதிரிதான்” என்றார் சுவாமி.

“எங்கள் எதிரியை எங்கள் மாநிலத்தில் நீங்கள் எப்படி அனுமதிக்கலாம்?” என்று வினவினான் ஸாத் ஸித்தி அதிக எரிச்சலுடன்.

“பரசுராம பட்டணம் யார் மாநிலத்தையும் சேர்ந்த தல்ல. இங்கு யாரும் யாருக்கும் வைரியுமில்லை. இங்கு யாரும் யாரையும் பிடித்துப் போகவும் முடியாது. கொல்லவும் முடியாது. இங்கு இனபேதம் மனபேதம் அரசுபேதம் எதுவும் கிடையாது. இங்கு மேலிருப்பது ஆண்டவன் கூரை. கீழிருப்பது அவன் நிலம். இங்கு எல்லாரும் சமம். இது உன் தலைவன் ஸித்தி ரஸுலும் ஒப்புக்கொண்டது” என்று மிக நிதானமாகச் சொன்ன சுவாமி அத்துடன் பேட்டி முடிந்துவிட்டதென்பதற்கறிகுறியாகப் பக்கத்திலிருந்த மணியை அதனருகிலிருந்த தண்டத்தால் தட்டினார். அதன் மெல்லிய வெண்கல ஒலி மண்டபத்தில் பரவியதும் மண்டபப் பின்கதவைத் திறந்துகொண்டு இரு சாதுக்கள் வரவே சுவாமி அவர்களை நோக்கி, “அஞ்சன்வேல் தலைவரிடம் அவர் வீரனை ஒப்படையுங்கள். அவரும் அவர் வீரர்களும் தங்க வசதி செய்யுங்கள்” என்று உத்தரவிட்ட சுவாமி ஸித்தியை நோக்கி, ”ஸாத்! பெரிய வீரன் சிறு நிகழ்ச்சிகளை மறந்து விடுவது நல்லது” என்று அறிவுரையும் கூறிவிட்டு உள்பக்கம் சென்றுவிட்டார்.

சுமார் ஆறரை அடி உயரத்துக்கு மேல் ஆஜானுபாகு வாய், திடமான வைரம் பாய்ந்த புஷ்டியான தேகத்துட னும், உருண்ட கெட்டியான கன்னக் கதுப்புக்களுடன், ராட்சதப் பார்வையுடனும், கூச்சாகக் கத்தரித்துவிட்ட தாடியுடனும் அந்த மண்டபத்தின் கூரையை அளந்து விடுபவன்போல் நின்றிருந்த ஸாத் ஸித்தி ஒருமுறை மண்டபத்தில் பூமியை உதைக்கக் காலைத் தூக்கினான். அடுத்த விநாடி அந்த நோக்கத்தை நீக்கிக்கொண்டு சாதாரணமாகக் காலைத் தரையில் ஊன்றிலிட்டுத் திரும்பி மண்டப வாயிலை நோக்கி நடந்தான். ஒரே சீராக திடமாகச் சென்ற அவன் கால்களைக் கவனித்துக் கொண்டு நின்ற இதயசந்திரன். அவன் வாயிலுக்கு வெளியே சென்று மறைந்ததும் பெருமூச்சு விட்டு மண்டபத்தைச் சுற்றுமுற்றும் பார்த்தான். தன்னந்தனியே நின்றிருந்த அந்தச் சமயத்தில், மண்டபத்தில் பெரு விதானங்களும், சிற்பங்களும், ஹோமாக்கினியின் மெல்லிய சமித்துப் புகையும், சற்றுத் தூரத்தில் ஒரு மூலையில் தூபக் காலிலிருந்து கிளம்பிக்கொண்டிருந்த அகிற்புகையும் பெரும் சாந்தியை அளித்திருக்கக்கூடும் இதயசந்திரனுக்கு, அவன் மன நிலை அன்றைய மாலை நிகழ்ச்சிகளால் சிதறியிராத பட்சத்தில். ஆனால் எதையும் ரசிக்கச் சக்தியற்ற நிலையில் பெருமூச்சே அவன் நாசியிலிருந்து வெளிவந்தது அந்தச் சமயத்தில். பெருமூச்சு விட்டு எங்கு செல்வதென்று தெரியாமல் வாயிலை நோக்கி நடக்கத் திரும்பிய அவனை உள்வாயிலிலிருந்து வந்த ஒரு சாது தம்மைத் தொடரும்படி சைகை செய்து முன் நடந்தார். அவரைத் தொடர்ந்து இரண்டு கட்டுகளைத் தாண்டி மண்டபத்தின் வடக்கு வாசலுக்கு வந்த இதய சந்திரனை அங்கிருந்த தோட்டத்தைத் தாண்டி எதிரே தெரிந்த ஒரு சிறு விடுதிக்கு அழைத்துச் சென்றார் சாது. “உள்ளே போகலாம். சுவாமி இருக்கிறார்” என்று கூறி வீட்டு சாது போய்விட அந்த விடுதிக்குள் நுழைந்து சுவாமியின் எதிரே நின்றான் இதயசந்திரன்.

வியாக்கிராசனத்தில் அமர்ந்திருந்த சுவாமி, ‘தமிழா! உட்கார்” என்று எதிரேயிருந்த ஒரு மான் தோலைச் சுட்டிக் காட்டினார்.

சுவாமியின் அறைக்கும் பிரார்த்தனை மண்டபத்துக்கும் சம்பந்தம் அறவே இல்லாதிருந்ததைக் கவனித்தான் இதயசந்திரன். கோடியில் பூஜைப் பெட்டி, சுவாமி தாங்கி நடக்கும் தங்கப் பூண்போட்ட பெரும் தடி. இரண்டு குத்து விளக்குகள், ஒரு மந்திர தண்டம், தாமரை மணி மாலைகள், இரண்டு மூன்று புலித்தோல்கள், மான் தோல்கள். ஒரு கமண்டலம் இவற்றைத் தவிர வேறு எதுவும் அந்த அறையில் இல்லை. எந்த வசதியுமில்லாத அந்த அறைக்கு வெளியே இருந்த பூந்தோட்டமும் கிணறும் சுவாமியின் ஸ்நானத்துக்கும் பூஜைக்கும் மட்டும் உபயோகப்படுமென்பதையும் புரிந்துகொண்ட இதய சந்திரன, ‘அரசுகளை அசைக்கவல்ல இந்த சுவாமி எத்தனை எளிய வாழ்க்கை நடத்துகிறார்” என்று தனக்குள் வியந்துகொண்டதன்றி அவர் சுட்டிக் காட்டிய இடத்தில் அடக்கத்துடன் கைகட்டி அமர்ந்தும் கொண்டான்.

சற்றுச் சிந்தித்துவிட்டு சுவாமி சொன்னார்: ”தமிழா! உனக்கும் இந்த நாட்டுக்கும் ஏதோ பிணைப்பு இருக்கிறது. இல்லையேல் நீ வந்த இரண்டு நாட்களுக்குள் ஷாஹுவின் மருமகள், மகாராஷ்டிரக் கடற்படைத் தலைவர், ஸித்தியின் தரைப்படைத் தளபதி இத்தனை பேருடன் மோதியிருக்கமாட்டாய். விதியை நான் மாற்ற முடியாது. அது வகுக்கும் வழிகளிலிருந்து நான் உன்னை மீட்க முடியாது. ஆனால் முடிந்தவரை எச்சரிக்கிறேன். உன் முன் கோபத்தை விட்டு விடு. பொறுமையாயிருக்கப் பழகிக் கொள். வேறு நாட்டில் கொந்தளிக்கும் அரசியல் சூழ்நிலையில், சதா போர்கள் நிகழும் பகுதியில், ஒரு முக்கிய பணியை மேற்கொண்டு மகாராஷ்டிர அரசின் ஒரு வாரிசைத் தேடி வந்திருக்கும் நீ, பெரும் பொறுமையையும் அடக்கத்தையும் கைப்பிடித்தாலொழிய உன் பணியை நிறைவேற்றுவது கஷ்டம். உதையைக்கூடச் சில சமயங்களில் பொறுப்பது நல்லது. சமயம் வரும்போது அதைத் திருப்பலாம். இன்று நீ ஸாத் ஸித்தியின் விரோதத்தைப் பெற்றுவிட்டாய், இனி உனக்கு இந்தப் பரசுராம பட்டிணத்தில்கூடப் பாதுகாப்பு இருக்காது. ஸாத் ஸித்தி எதையும் மதிக்காதவன். என்னை மதிப்பதற்குக்கூட அவன் தலைவனுக்கு என்னிடமிருக்கும் பயமும் பக்தியுமே காரணம். ஆனால் அந்தப் பயபக்திகூட உனக்குப் பாதுகாப்பை அளிக்காது. ஆகவே இங்கு இருக்கும் போது உனக்குக் கொடுக்கப்பட்டுள்ள இடத்தைவிட்டு அகலாதே. இரவில் அறவே வெளியே போகாதே. பகலில் கோவில், கடைவீதி, பிரார்த்தனை மண்டபம் இவற்றின் எல்லைகளை விட்டுவிட்டுத் தாண்டாதே. சதா கூட்டத் தோடு கலந்து நடமாடு”

இப்படி உபதேசித்த பிரும்மேந்திர சுவாமி, “இந்த விடுதியிலிருந்து சற்றுத் தள்ளி ஒரு விடுதியிருக்கிறது. அதன் வலப்பாகத்தை உனக்கு ஒழித்துவிடச் சொல்லியிருக்கிறேன்” என்றும் கூறி அவனை அழைத்துக்கொண்டு அறைக்கு வெளியே வந்து அங்கிருந்த ஒரு சீடனிடம் அவனை ஒப்படைத்தார். அந்த விடுதியை நோக்கிச் சென்ற இதயசந்திரன் வியப்படைந்து ஒரு விநாடி நின்றான். அந்த வாயிற் படியில் அவன் மண்டப வாயிலில் விட்டு வந்த காலணிகள் வைக்கப்பட்டிருந்தன. உள்ளே அவனுக்கு அதிக வியப்புக் காத்திருந்தது ஒரு மஞ்சத்தில் அவன் அளவுக்குச் சரியான புத்தாடைகள் சிடைத்தன. பெரும் கச்சையும் ஒரு கைத்துப்பாக்கியுங் கூட இருந்தன. அவனை உள்ளேயும் தொடர்ந்து வந்த சீடப்பிள்ளை. ”நீங்கள் நீராட அடுத்த அறையில் உஷ்ணோதகம் (சுடுநீர்) தயாராயிருக்கிறது” என்று அரை மராத்தியிலும் அரை சமஸ்கிருதத்திலும் கூறினான். வியப்பில் அடியோடு ஆழ்ந்துவிட்ட இதயசந்திரன் தனது வாளை மஞ்சத்தில் போட்டுவிட்டு அந்தச் சீடப்பிள்ளை காட்டிய பக்கத்தறைக்குச் சென்று சுகந்தப்பொடியிட்டு நீராடித் திரும்பிப் புத்தாடையணிந்து அதற்கு முன்பே அறைக்கு வந்துவிட்ட உணவையும் அருந்திவிட்டு மஞ்சத்தில் படுத்தான். ‘என்ன வசதிகள், ராஜஃபாகத் துடன் முறைப்படி சகலமும் நடக்கிறது! இப்படியோர் அதிசய பட்டணம் இருப்பதாக நான் கேள்விபட்டதுகூட இல்லையே!’ என்று திரும்பத் திரும்ப ஆச்சரியத்தில் ஆழ்ந்து கிடந்த இதயசந்திரன், ஒரு நாழிகைக்குப் பிறகு கதவைத் திறந்து கொண்டு வந்த சீடன், “நாங்கள் கோவிலுக்குப் போகிறோம். வருகிறீர்களா?” என்று வினவிய போது கூட வர மறுத்து. கதவைத் தாளிட்டுக் கொண்டு மஞ்சத்திலேயேபடுத்துக் கிடந்தான். அவன் சிந்தனைகள் எங்கெங்கோ சுழன்றன. தமிழகத்திலிருந்து கொங்கணம்வரை நடந்த நிகழ்ச்சிகள் முடிய கண்களுக்கு முன்பாக வலம் வந்தன. அத்தனை எண்ணங்களையும் கடைசியாக உதறிவிட்டு, “இன்றிரவாவது நன்றாக உறங்கலாம். நல்லவேளை, கனோஜி ஆங்கரேகூட பக்கத்தில் இல்லை. இன்று யாரும் என்னைத் தொந்தரவு செய்யமாட்டார்கள்” என்று தனக்குத்தானே கூறிக்கொண்டு மஞ்சத்தில் நன்றாகக் கால் நீட்டிப் படுத்தான். ஆனால் அவன் வாழ்க்கையின் அமைதி தஞ்சையுடன் போய்விட்டதை உணரவில்லை. அன்று’ நள்ளிரவில் அவன் கதவு மெல்ல இருமுறை தட்டப்பட்டதும் இதயசந்திரன் மஞ்சத்தில் எழுந்து உட்கார்ந்தான். கையில் கைத்துப்பாக்கியையும் எடுத்துக்கொண்டான்.

“யார்?” இதயசந்திரன் குரல் அதட்டலுடன் ஒலித்தது.

வெளியிலிருந்து பதில் ஏதுமில்லை. மெள்ள மஞ்சத்திலிருந்து எழுந்த இதயசந்திரன் கைத்துப்பாக்கியை வலது கையில் சுடுவதற்குத் தயாராக ஏந்தியவண்ணம் சரேலெனக் கதவைத் திறந்தான். கதவு திறந்த வேகத்தில் வெளியே இருந்த உருவம் இதயசந்திரன்மீது பலமாக விழவே, இதயசந்திரனும் நிலை தடுமாறித் தரையில் விழுந்தான். கைத்துப்பாக்கி சிதறித் தூரத்தில் போய் விழுந்ததால் அதை எடுக்கவோ உபயோகிக்கவோ வசதி இல்லாது போயிற்று அவனுக்கு.

Previous articleJala Deepam Part 1 Ch14 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 1 Ch16 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here