Home Historical Novel Jala Deepam Part 1 Ch18 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 1 Ch18 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

62
0
Jala Deepam part 1 Ch18 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 1 Ch18 | Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 1 Ch18 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 18 தேவியின் கட்டளை

Jala Deepam Part 1 Ch18 | Jala Deepam | TamilNovel.in

புலன்கள் ஐந்தும் பொருந்தும் இடங்கள் இரண்டு. காமத்திடம் பொருந்தும். கடவுளிடம் பொருந்தும். காலத்தால் அழியாத நமது பாதிக் கிரகங்கள் காமத்தைக் காட்டி கடவுளைக் காட்டியதற்குக் காரணம், இதுதான். கடவுளிடம் புலன்கள் அனைத்தும் பொருந்துவதைக்கூட ஒருவிதக் காமம் என்று கூறுவதும் உண்டு. “மற்றை நம் காமங்கள் மாற்று’ என்று ஆண்டாள் சொன்னதற்கு ஆன்மிகக் காதலும் ஒருவகைக் காமம் என்பதும் காரணமாகும். இருவகைக் காமத்துள் ஒரு வேறுபாடும் உண்டு. ஆன்மிகக் காமத்தில் அறிவு விரிகிறது. தெளிவடைகிறது. உடலுணர்ச்சிக் காமத்தில் அறிவு குழம்புகிறது மயங்குகிறது.

பிந்திய மயக்கத்தில், வாலிப பருவத்தின் உணர்ச்சி வேகத்தில், இதயப் படபடப்பில் உணர்ச்சிகள் தழுவியதால் உடல்களும் தழுவத் துடித்த அந்த நேரத்தில், தங்கள் புறக் கண்கள் பார்வையிழந்து விட்டதால் உலகமே கண்களை மூடிவிட்டதாகப் பிரமை முற்றுகையிட்ட நிலையில் இருந்த இடம், பிறந்த நிலை, மொழி, இனம் அனைத்தையும் காற்றில் விட்டுக் கவலையொழித்து, பரஸ்பர ஸ்பரிசத்திற்கு மட்டுமே ஏங்கிய அந்த இருவரும், சூழ்நிலை மறந்து தன்னிலை துறந்து கிடந்தனர்.

அவளுக்கும் அவனுக்கும் இந்த நிலை நீடித்திருந்தால் வேறெந்த நிலையில் முடிந்திருக்கும் என்பது ஊகத்தால் எட்டமுடியாத ஒன்றல்ல. ஆனால் அசைக்க முடியாத எதையும் அசைக்கவல்ல விதி அவர்களுக்குக் குறுக்கே பாய்ந்ததால் அவ்விருவரும் திடீரென சுயநிலைக்குத் திரும்ப வேண்டியதாயிற்று. பானகத் துரும்பு எப்படி பானகத்தின் இனிப்பைத் தடை செய்யுமா அப்படித் தடை செய்தது விதி அவ்விருவர் இன்ப நிலையையும்.

சலனமற்ற குளத்தில் சிறு கல் வீசப்பட்டாலும் சலனச் சுழல்கள் நீரில் கிளம்பி விடுவதைப்போல, திடீரென மரங்களுக்குப் பின்னால் ஏற்பட்ட பட்டென்ற ஓசை அவர்கள் உணர்ச்சிகளிலும் சலனத்தைக் கிளப்பி இருவரையும் சற்று விலக வைத்தது. ஏதோ சின்னஞ்சிறு செடிகள் அருகில் அசைந்த ஓசைதான் அவர்கள் திடீரென விலகிப் பிரிய விசையிட்டது. சட்டென்று இதயசந்திரன் கைகளை எடுத்துக்கொண்டு ஓசை வந்த திசையை நோக்க, அரசகுல மகளும் அவன் கரம் விலக்கிய மேலாடையைச் சரி செய்து கொள்ள, புறக் கண்களும் உணர்ச்சிகளும் இவ்வுலகத்துக்கு வரவே, இருவரும் இருந்த இடத்திலிருந்து எழுந்து நின்றனர். எழுந்த பின்னரும் அவள் நின்ற இடத்தை விட்டு நகராதிருந்தாலும், அவன் மட்டும் இடையிலிருந்த கைத்துப்பாக்கியை எடுத்துக்கொண்டு அரவம் எழுந்த இடத்தை நோக்கி மெல்ல நடந்து சென்றான். எதிரே வட்டமாக நின்ற செடிக் குவியலைத் தாண்டி நடந்த அவன் அடர்ந்த புதர்களிடம் சென்று பார்த்ததும் யாரும் அங்கிருந்ததாகவோ அகன்றதாகவோ தெரியாததால் மீண்டும் பானுதேவி இருந்த இடத்துக்கே வந்தான்.

பானுதேவி அவனை நோக்கினாள். பேசவில்லை. ஆனால் கண்களில் கேள்வியிருந்தது. “ஒன்றுமில்லை. வீணாகப் பயந்துவிட்டோம்” என்று அந்த வாலிபன் சிரித்தான்.

அந்த அசட்டுச் சிரிப்பு! இச்சை நிறைவேறாத சமயத்தில் ஆண்கள் சிரிக்கும் அசட்டுச் சிரிப்பு அது. சாதாரண காலத்தில் பெண்கள் வெறுக்கும் அசட்டுச் சிரிப்பு அந்தச் சமயத்தில் பானுதேவிக்குப் பேரின்பமாயிருந்தது. அந்த அசட்டுச் சிரிப்பில் அர்த்தங்கள் ஆயிரமாயிரம் இருந்ததை அவள் உணர்ந்தாள். ”வீணாகப் பயந்துவிட்டோம்” என்று அவன் தன்னையும் சேர்த்துக்கொண்டு சொன்னதில் பொதிந்து கிடந்த பொருள்களையும் துணிவையுங் கூடப் புரிந்து கொண்டாள் பானுதேவி. ஆனால் எதையும் வெளிக்குக் காட்டாமல் மறைக்கக் கூடிய பெண்ணின் சக்தியால் உணர்ச்சிகளை அடியோடு மறைத்து, ”ஒன்று மில்லையா வீரரே?” என்று சர்வசாதாரணமாகக் கேள்வி யொன்றை வீசினாள்.

“ஒன்றுமில்லை… தேவி…” என்று சற்று தயக்கத்துடன் பதில் சொன்னான் தமிழகத்தின் வாலிபன்.

அந்தப் பதிலிலிருந்து, அவன் தயக்கத்திலிருந்து, உணர்ச்சி நிலையிலிருந்து உண்மை நிலைக்கு அவன் மீள முயல்வதையும், அது அவனுக்குப் பெரும் சங்கடமாயிருந்ததையும் உணர்ந்தாள் பானுதேவி. ஆனால் அவனை விட வெகு சீக்கிரத்தில் தன் உணர்ச்சிகளைக் கட்டுக்குக் கொண்டு வந்துவிட்ட ஷாஹுவின் மருமகள், “என்ன ஒன்றுமில்லயைா! ஒன்றுமேயில்லையா?” என்று வினவினாள் வியப்புடன்.

”இல்லை தேவி!” இம்முறை இதயசந்திரன் பதில் திடமாயிருந்தது.

“கிளையொன்று ஒடிந்ததை நான் கேட்டேனே” என்று கூறினாள் பானுதேவி கண்களை அவன் முகத்தில் தைரியத்துடன் நாட்டி.

அந்தக் கண்களில் அப்பொழுது மயக்கமில்லை, குழப்பமில்லை, சலனமில்லை பழைய அரசகுல மகளின் கட்டளைக் கண்கள் தன்னை நோக்குவதைக் கண்டான் இதயசந்திரன். அவள் உடல்கூடத் துவண்ட நிலையிலிருந்து உறுதிப்பட்டு நிமிர்ந்து விட்டதையும், புரவியேற்றத்துக்காக அவள் பின்னால் இழுத்துக் கட்டியிருந்த மகாராஷ்டிரக் கட்டின் சேலைப்பகுதியின் முன் புறத்தைக்கூட அவள் சரிப்படுத்திக் கொண்டுவிட்டதையும் கண்ட இதயசந்திரன் மீண்டும் தான் பானுதேவியின் முன்பு நிற்பதைப் புரிந்து கொண்டான். ஆகவே அவனும் பழைய இதயசந்திரனாக மாறி, ”நானும் கேட்டேன் தேவி. ஆனால் கிளை உடைந்ததையும் காணோம். வேறு யாரும் இங்கு வந்ததற்கான அறிகுறியும் தெரியவில்லை” என்று பணிவுடன் கூறினான்.

“என்னுடன் வாருங்கள். நான் பார்க்கிறேன்” என்று கூறி அவள் மரக்குவியலை நோக்கி நடந்தாள். தான் காணாததை அவள் மட்டும் என்ன கண்டுவிட முடியும் என்ற எண்ணத்தில் இதயசந்திரனும் அவளைப் பின்பற்றி நடந்தான். மரக்குவியலை அடைந்த அவள் அந்தக் குவியலில் எதையும் தேடாமல் அதைத் தாண்டி நடந்தாள். மரக்குவியலிலிருந்து நாலைந்து அடிகள் தாண்டி யிருந்த புதர்கள் முன்பு சில விநாடிகள் நின்றாள். பிறகு மரக்குவியலுக்கும் முட்புதர்களுக்கும் இடையேயிருந்த வெறும் நிலத்தை உற்றுப் பார்த்து, முட்புதர்களுக்கு அப்பாலிருந்த செடிகளின் அடர்த்தியையும் கவனித்தாள். பிறகு தானாகவே தலையை ஆட்டிக்கொண்டு முட்புதர்களுக்கும் மரக்குவியலுக்கும் இடையே இருந்த வெறும் நிலத்தை ஊன்றிக் கவனித்தாள். கன்னங்கரேலென்ற சின்னஞ்சிறு பாறைகள் குத்துக் குத்தாய், தள்ளித் தள்ளி நிற்கவும் வெள்ளைக் கூழாங்கற்கள் உருண்டு கிடக்கவும் கருப்பும் வெண்மையும் கலந்ததாகத் தெரிந்த அந்த இடை நிலம் மேற்கு நோக்கிப் பாதைபோல் சென்றது. அதன் இருபுறமும் புதர்களும் மரக்குவியல்களும் அடர்த்தி யாகத் தெரிந்தன. நிலவொளியிருந்தும் பாதைமீது பக்க மரங்கள் நிழல் வீசியதால் அற்ப ஒளியே அங்கு தெரிந்தது. அறவே மரங்களோ புதர்களோ இல்லாத இடங்களில் பெரும் பாறைகளிலிருந்ததால் அங்கு மட்டும் நிலவொளி பூரணமாக விழுந்திருந்தது. அந்த முழுப்பாதையின் மீதும் தன் கண்களை ஒரு விநாடி ஓட்டிய பானுதேவி சரேலனத் தானிருந்த பாறையைக் குனிந்து நோக்கினாள். “இங்கு யாரோ ஒருவன் வந்திருக்கிறான். நம்மை உற்று நோக்கியிருக்கிறான்” என்று கூறவும் செய்தாள்.

ஏதும் விளங்காததால் இதயசந்திரன் கேட்டான், “எப்படித் தெரிகிறது தேவி? எனக்கேதும் தெரியவில்லையே’ என்று.

”நீங்கள் மகாராஷ்டிரர் அல்லவே’ என்றாள் பதிலுக்கு.

”மகாராஷ்டிரர் கண்கள் வேறு போலிருக்கிறது?” என்றான் இதயசந்திரன் சற்று சலிப்புடன், தனது ஆராய்ச்சித் திறனுக்கு அவள் பழுது சொல்கிறாள் என்ற நினைப்பில்.

”ஆம் வாலிபரே” என்றாள் பானுதேவி சர்வ சகஜமாக.

“எதனாலோ?”

“மகாராஷ்டிரர்கள் மலைவாசிகளல்லவா?”
“ஆம்.”

“மலையின் சூட்சுமங்கள் உங்களைவிட அவர்களுக்குத் தெரிவது சகஜமல்லவா?” என்ற பானுதேவி, “அதோ அந்த இடத்தைப் பாருங்கள்” என்று தனது காலிலிருந்து சற்று எட்ட இருந்த இடத்தைச் சுட்டிக் காட்டினாள்.

அந்த இடத்தைப் பார்த்த இதயசந்திரனுக்கு ஏதும் விளங்காததால் கேட்டான், “என்ன இருக்கிறது அங்கே?” என்று .
”பெரிய கூழாங்கற்கள் சில, குழவிகள் அளவுக்கு இருக்கின்றன அல்லவா?”

“ஆம். இருக்கின்றன.”

“அவை புரண்டு கிடக்கின்றன.”

“ஆம். புரண்டு கிடக்கின்றன. அவை இன்றுதான் புரண்டு கிடக்க வேண்டுமென்பதில்லை “

‘புரண்ட கற்களின் அடிப்பாகத்தைப் பாருங்கள். பசுமையாயிருக்கிறது. மலைக்கற்கள் புரண்டு ஒரு நாளானாலும் அடிப்பாகத்தில் பசுமையிருக்காது. அதுவும் இந்த வேனிற்காலத்தில் மலைச்சூட்டில் புரளும் கற்களின் அடிப்பகுதி ஒரே நாழிகையில் காய்ந்து கருகிவிடும்” என்ற பானுதேவி, ”யாரோ ஒருவன் இங்கு வந்திருக்கிறான். நாம் உட்கார்ந்திருந்த இடத்திற்கு அருகாமையில் தாழ்ந்த

மரக்கிளையைப் பிடித்து நின்றிருக்கிறான் கிளை உடைந்ததும் துரிதமாக ஓடியிருக்கிறான். ஓடிய நேரத்தில் தான் இந்தப் பெரும் குழவிகள் புரண்டிருக்கின்றன” என்று விளக்கினாள்.

வியப்பின் வசப்பட்டு நின்றான் இதயசந்திரன். மகாராஷ்டிரர்கள் மலைகளின் ரேகைகளை இப்படி அணு அணுவாய் அறிந்திருப்பதால் தான் மகாசக்தி வாய்ந்த மொகலாய சாம்ராஜ்யத்தால் கூட அவர்களை வெல்ல முடியவில்லை’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். அவள் விளக்கம் அவனுக்கு விஷயத்தை தெளிவுபடுத்திய தென்றாலும் அவன் கேட்டான், “நேரில் பார்த்ததுபோல் சொல்கிறீர்களே?” என்று.

”நேரில் தான் பார்க்கிறேன்” என்று கற்கள் சரிந்த இடத்தை மீண்டும் சுட்டிக் காட்டினாள் அவள்.

”என் கண்களுக்கு மட்டும் ஏன் தெரியவில்லை?” என்று வினவினான் அவன்.

”உங்களுக்கு மலைக்கண்கள் இல்லை” என்ற அவள் லேசாக நகைத்தாள்.

அவன் அந்தச் சிரிப்பிலும் அழகைக் கண்டான். யார் நகைத்தாலும் யார் இழிவு செய்தாலும் முன்கோபம் அடையும் அவன் இதயம். அவள் நகைப்பைப் பெரிதும் ரசிக்கவே செய்தது. ஆகவே பணிவுடன் கேட்டான், “தேவி! அப்படியொருவன் வந்திருந்தால் எங்கு மறைய முடியும்?” என்று.

”அதோ அந்தப் புதர்களுக்குப் பின்னால் மறைந் திருக்க முடியும். அல்லது அந்தச் செடிகளின் குவியலில் மறைந்திருக்கலாம்” என்று எட்ட இருந்த புதர்களையும் செடிக்கூட்டத்தையும் சுட்டிக் காட்டினாள் பானுதேவி.

“கிளை உடைந்த ஒலி கேட்டதும் நான் ஓடிவந்தேன். அதற்குள் அவன் எப்படி மறைந்திருக்க முடியும்?” என்று வினவினான் இதயசந்திரன்.

வெட்கம் கலந்த புன்னகையொன்று அவள் இதழ் களிலே விரிந்தது. “ஓசை கேட்டவுடன் நீங்கள் ஓட வில்லை” என்றாள் அவள் பார்வையைக் கூழாங்கற்கள் மீது ஓட்டி.

”இல்லை தேவி! ஓடினேன்” என்று வலியுறுத்தினான் வாலிபன்.

”இல்லை வீரரே! சிறிது நேரம் பிடித்தது. நாம் யார் யார் என்பதை மறந்ததால் ஏற்பட்ட தடுமாற்றம் அது” என்ற பானுதேவி மீண்டும் மரக்கூட்டத்தை நோக்கி நடந்தாள்.

அலையும் உணர்ச்சிகளுடன் அவள் பின் சென்ற இதய சந்திரன், “அப்படியானால் உடைந்த கிளை என்ன ஆயிற்று !” என்று வினவினான்.

”வந்தவன் கையோடு எடுத்துச் சென்றிருப்பான்” என்று கூறி மரக்கூட்டத்தில் நுழைந்த பானுதேவி தாழ்ந்த ஒரு கிளையைக் காட்டினாள். மெல்லிய கிளை அது. அப்பொழுதே முறிந்ததால் ஏற்பட்ட விரிசலும் பச்சையும் அதில் இருக்கத்தான் செய்தது.

இதயசந்திரன் அவள் நுண்ணிய அறிவை வியந்து கொண்டே அவளுடன் சென்றான். அவள் சற்று வேக மாகவே நடந்து புரவிகள் கட்டிய இடத்திற்கு வந்து தனது புரவியை அவிழ்த்து அவன் புரவியையும் அவிழ்த்துக் கொள்ளச் செய்து, “வாருங்கள் வீரரே! போவோம்” என்று புரவிமீது தாவி ஏறினாள்.

இதயசந்திரன் தனது புரவியின் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டு சிறிது தாமதித்தான். “உம். ஏறுங்கள்” என்றாள் தேவி.

“நம்மைக் கண்காணித்தவனைத் தொடர்ந்தா லென்ன?” என்று வினவினான் இதயசந்திரன்.
“இந்த மழலைக்காட்டுக் குவியலிலும் புதர்க் குவியலி லும் பெரும் பாறைகளின் எழுச்சியிலும் அவனை இனிக் கண்டுபிடிக்க முடியாது. தவிர நாம் இங்கிருக்கும் ஒவ்வொரு விநாடியும் அபாயகரமானது. நாம் அவனைக் காண முடியாது ஆனால் அவன் நம்மைக் கண்டு கொண்டுதானிருக்கிறான்” என்றாள் தேவி.

”அதற்காக அஞ்சுபவனல்ல நான்” என்றான் இதயசந்திரன்.

“வீரரே! ஒரு சமயம் அச்சப்படுவதாகச் சொல்கிறீர்கள்; இன்னொரு சமயம் அச்சமில்லையென்றும் சொல்கிறீர்கள். மிக மாறுபாடாயிருக்கிறது உமது பேச்சு. அது கிடக்கட்டும். இப்பொழுது நாம் காட்டும் துணிவு அசட்டுத்தனமானது. பாறையின் மறைவிலோ புதர்களின் மறைவிலோயிருக்கும் மனிதனுக்கு நாம் இப்பொழுது சிறந்த குறி. தாமதிக்காதீர்கள். நமது பாதுகாப்பு வேகத்திலிருக்கிறது” என்று கூறித் தனது புரவியின் வயிற்றைக் காலால் உதைக்கப் புரவி பறந்தது.
இதயசந்திரனும் தாவி ஏறி வெகு வேகமாகத் தனது புரவியைச் செலுத்தி அவளை அடைய முயன்றானானாலும் அது மிகக் கஷ்டமாகவே இருந்தது அவனுக்கு. ஆனால் மலைகளில் சஞ்சரித்த அந்தப் புரவி அவனையும் மீறி வேகத்தைக் காட்டி முன் சென்ற புரவியைப் பிடிக்க முனைந்தது. சிறிது தூரம் சென்றதும் ஒரு மலைப் பாறையின் மறைவில் புரவியை நிறுத்திக்கொண்ட பானுதேவி இதயசந்திரன் புரவி வந்ததும் தரையில் குதித்து. ”வீரரே! உமது கைத்துப்பாக்கியைத் தயாராக வைத்துக்கொள்ளும். இந்தப் பாறையின் மறைவில் நாம் பயமின்றி உரையாடலாம். நம்மை ஒட்டுக் கேட்கயாராலும் முடியாது. ஏற்கெனவே ஒட்டுக் கேட்டவன் மறைவிடத்திலிருந்து வெளிவந்தால் அவன் உமக்கு நல்ல இலக்கு!” என்று கூற இதயசந்திரனும் புரவியை விட்டு இறங்கினான்.

மேற்கொண்டு எந்த ஆலசியமும் செய்யாமல் தான் கூற வந்ததை விடுவிடு என்று கூற முற்பட்டு, ”வீரரே! அதோ அந்தப் பெருமாளிகை எது தெரியுமா?” என்று வினவினாள்.

“தெரியும். பிரார்த்தனை மண்டபத்தின் மகுடம் அது” என்றான் இதயசந்திரன்.

”அதிலிருந்து நேரே தெற்கில் மலைச்சரிவில் நான்கு மாளிகைகள் தெரியவில்லை?” அவற்றையும் சுட்டிக் காட்டினாள் பானுதேவி.

“தெரிகின்றன.”

”அவற்றின் மகுடங்கள் எப்படியிருக்கின்றன?” “மொகலாயர் கலைமுறையில் இருக்கின்றன.”

”அவற்றில் நடுவிலிருக்கும் பெரிய மகுடந்தான் ஸாத் ஸித்தியின் வீடாயிருக்க வேண்டும்.”

“உங்களுக்கு எப்படித் தெரியும்? இந்தப் பரசுராம புரத்துக்கு முன்பே வந்திருக்கிறீர்களா?”

”இல்லை. ஆனால் பிரும்மேந்திர ஸ்வாமி எந்த மதத்தினர் மனத்தையும் புண்படுத்தாதவர் என்றும் அவரவர்கள் இஷ்டப்படி மாளிகைகளைக் கட்டிக்கொள்ள அனுமதித்திருப்பதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். வேறு மகுடங்கள் மொகலாய அமைப்பில் இல்லை பாருங்கள்” என்றாள் அவள்.

இதயசந்திரன் கவனித்தான். இல்லையென்பதைப் புரிந்துகொண்டான். அவள் ஊகம் சரியானது தானென்பதையும் புரிந்து கொண்டு அதை ஆமோதிப்பதற்கு அறிகுறியாகத் தலையை ஆட்டினான். அவன் தலையசைத்ததும் அவள் பேச முற்பட்டு. ”அந்த மாளிகைக்குச் செல்லுங்கள். சென்று ஸாத் ஸித்தியிடம் நான் உங்களை அனுப்பிய தாகச் சொல்லுங்கள்” என்றாள்.

”சொல்கிறேன்.” இஷ்ட விரோதமாக வந்தது அவன் பதில்.

”கனோஜி ஆங்கரே இங்கு தனிமையில் வந்திருப்பதாகச் சொல்லுங்கள்.”

”என்ன! என்ன!” என்று அதிர்ச்சியுடன் கேட்டான் தமிழன்.

”பதட்டப்படாதீர்கள். அவரைக் கைது செய்யக் கூடிய சமயத்தை நான் தெரிவிப்பதாகக் கூறுங்கள்.”

இதயசந்திரன் ஸ்தம்பித்து நின்றான் “இது துரோகமல்லவா தேவி’ என்று வினவினான்.

”இல்லை. துரோகமில்லை. மகாராஷ்டிரத்தின் உண்மை மன்னரின், சிவாஜியின் நேர் பரம்பரையின், திலகத்தின், பரம வைரியை அழிப்பது என் கடமை” என்றாள் பானுதேவி உணர்ச்சி மிகுந்த குரலில்.

”ஸாத் ஸித்தி அதற்கு உடன்படுவானென்பது என்ன நிச்சயம்?”

“உடன்படுவான். ஸாத் ஸித்தி ஜன்ஜீராத் தீவின் தலைவனின் தரைப்படைத் தளபதி. ஜன்ஜீராத் தீவின் தலைவன் மொகலாய மன்னரின் கடற்புறப் பிரதிநிதி. சத்ரபதி ஷாஹுவையே மகாராஷ்டிர மன்னராக மொகலாய மன்னர் ஒப்புக் கொண்டிருக்கிறார். போய் வாருங்கள். உங்களை நான் நாளைக் காலையில் சந்திக்கிறேன்” என்று கூறி மீண்டும் புரவியில் தாவி லெகு வேகமாகச் சென்றுவிட்டாள் தேவி.

புரவியைப் பார்த்துக் கொண்டே நீண்ட நேரம் நின்றான் இதயசந்திரன். அவன் உள்ளத்தை மாறுபட்ட உணர்ச்சிகளும் சிந்தனைகளும் குழப்பிக் கொண்டிருந்தன. என்ன செய்வதென்று தெரியாமல் திண்டாடிக் கொண்டிருந்த அவனுக்கு. செல்லும் மார்க்கமறியாது திணறிக் கொண்டிருந்த அவனுக்கு, வழிகாட்ட ஓர் உருவம் அதே பாறையின் மறுபுறத்திலிருந்து எழுந்தது. ”துப்பாக்கியைக் கீழே போடு” என்ற குரலும் அதனிடமிருந்து எழுந்தது. திரும்ப முயன்றான் இதயசந்திரன். “திரும்பாதே. திரும்பினால் பிணமாகிவிடுவாய்” என்ற எச்சரிக்கைக் குரல் பயங்கரமாக ஒலித்தது.

Previous articleJala Deepam Part 1 Ch17 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 1 Ch19 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here