Home Historical Novel Jala Deepam Part 1 Ch19 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 1 Ch19 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

60
0
Jala Deepam part 1 Ch19 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 1 Ch19 | Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 1 Ch19 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 19 பதிலும் விளைவும்

Jala Deepam Part 1 Ch19 | Jala Deepam | TamilNovel.in

சித்தத்தை அலையவிட்டு இக்கட்டில் இதயசந்திரன் சிக்கிக்கொண்ட இரண்டாம் முறை அது. பரசுராம பட்டணத்து மதிளுக்குப் புறம்பே நின்று பராக்குப் பார்த்து ஸாத் ஸித்தியுடன் முந்திய மாலையில் மோதிய அவன், இரவின் பின் பகுதியில் அதே ஸாத் ஸித்தியிடம் தூது போக நேர்ந்ததை நினைத்து மலைத்து, தேவி போன திசையை நோக்கி நின்றுவிட்டதால் பாறைக்குப் புறம்பே ஒருவன் எழுந்ததையோ தன் முதுகுக்கு நேரில் கைத் துப்பாக்கியைக் குறி வைத்ததையோ பார்க்க இயலாது போயிற்று. தேவியின் கட்டளையால் சிந்தனை கிளப்பிய பல போராட்டங்கள் அவன் மனத்தை உளைத்ததால் வேறெதையும் நினைக்கவும் சக்தியற்றவனானான் இதய சந்திரன்.

கனோஜி ஆங்கரேயை ஸாத் ஸித்தியிடம் ஒப்படைக்கத் தன்னை ஒரு கருவியாக உபயோகிக்கப் பானுதேவி தீர்மானித்து அவனைப் பரம சங்கடத்தில் ஆழ்த்தியிருந்ததால், ‘இந்த விபரீதத்துக்கு என்ன செய்வது?’ என்று திணறினான் தமிழகத்தின் வாலிபன்.

ஆரம்ப முதல் ஒரு மன்னன் இன்னொருவனைக் காட்டிக் கொடுத்தே வேறு மதங்களும் நாகரிகங்களும் நாட்டில் ஊன்ற வழி வகை செய்ததை அவன் அகக் கண்ணில் கண்டான். சுயமதத்தைப் பழிப்பவர்கள். சுய இனத்தில் சிறந்து விளங்குவதைவிட வேறு இன நடை உடை பாவனைகளைக் கடைப்பிடித்து அவற்றுக்கு அடிமைகளாகத் திகழ்பவர்கள், உயர முடியாதென்பதற்கு இந்நாட்டுச் சரித்திரமே சான்று என்பது தெள்ளென விளங்கிற்று இதயசந்திரன் இதயத்துக்கு. ஆழ்ந்த அசை யாத மதநம்பிக்கையால் மற்ற இனத்தவர் உலகெங்கணும் பெரும் சாம்ராஜ்யங்களை நிறுவியதும், மதாபிமான அஸ்திவாரமில்லாததால் பாரத நாட்டவர் நீண்ட காலம் அடிமை வாழ்வில் இருந்ததும், நியாயந்தானென்றுங்கூடப்பட்டது இதயசந்திரனுக்கு. ‘சமாதானம் என்ற பெயரில் தனது பலவீனத்துக்குச் சப்பைக் கட்டு கட்டுவதும், புரட்சி என்ற பெயரில் இனக்கோட்பாடுகளை உடைப்பதும் நம்மைத் தவிர வேறுயாரும் செய்வதில்லை’ என்றும் உள்ளுக்குள் கூறி வெறுத்துக்கொண்டான் இதயசந்திரன். இந்த விபரீத வரலாற்றின் கடைசி கட்டமாகப் பானுதேவி தன்னை ஸாத் ஸித்தியிடம் தூது அனுப்பத் தீர்மானித்ததில் எத்தனை பொருத்தமிருக்கிறது என்றும் எண்ணித் திகைத்ததால் பின்னால் ‘துப்பாக்கியைக் கீழே போடு’ என்ற சொல் எழும் வரையில் அவன் சூழ்நிலையை மறந்தே இருந்தான். முதல் கட்டளை எழுந்ததும் திரும்ப முயன்ற அவனை. “திரும்பாதே!” என்ற இரண்டாவது பயங்கரக் கட்டளை அசையவொட்டாமல் நிறுத்தியது.

“உம், துப்பாக்கியைக் கீழே போடு” என்று மீண்டும் பின்னாலிருந்து எழுந்த குரல் அதட்டியதால் இதயசந்திரன் இடைக் கச்சையிலிருந்த கைத்துப்பாக்கியை எடுத்துக் கீழே எறிந்தான். கீழிருந்த கற்களில் ‘கிளிங்’ என்ற சத்தத்துடன் விழுந்த துப்பாக்கியை உற்றுப் பார்த்த இதயசந்திரனை மேலே ஏதும் யோசிக்கவிடாத பின் குரல், ”இப்பொழுது மெல்லத் திரும்பு. ஆனால் கையை வாளிடம் கொண்டு செல்லாதே!” என்று திட்டமாக உத்திரவிட சூத்திரக் கயிற்றால் இயக்கப்படும் பாவைபோல் மெல்லத் திரும்பினான் இதயசந்திரன்.

பாறைக்கு அப்புறத்தில் நீண்ட துப்பாக்கியைத் தனக்கு நேரே குறிவைத்த வண்ணம் நின்றிருந்த மொகலாய வீரனைக் கண்டதும் அவன் யாரென்பதைப் புரிந்து கொண்ட இதயசந்திரன். ”நீயா என்று சர்வ சாதாரணமாக அவனை நோக்கி வினவினான். மொகலாய வீரன் குறிவைத்த துப்பாக்கியை அசைக் காமலும், கண்களை இதயசந்திரனிடமிருந்து இம்மியளவும் விலக்காமலும், ”நான் தான், நாம் ஏற்கெனவே சந்தித்திருக்கிறோம்” என்று பதிலுறுத்தான்.

”சென்றுவிட்ட மாலையில் சந்தித்தோம். பட்டணத்து மதிளுக்கு வெளியே’ என்று பேச்சுக் கொடுத்தான் இதய சந்திரன்.

மொகலாய வீரன் கண்கள் வியப்பைக் கக்கின. துப்பாக்கி முனையில் இதயசந்திரன் காட்டிய நிதானத்தை நினைத்து அவனிடம் மதிப்பும் கொண்ட அந்த மொகலாய வீரன், “மதிளுக்கு வெளியே மாலையிலும் நிலை மாறவில்லை, இரவிலும் நிலை மாறவில்லை” என்றான்.

”என்ன சொல்கிறாய்?’ இதயசந்திரன் கேள்வியில் வியப்பிருந்தது.

“எங்கள் தலைவரை நீ புரவியிலிருந்து புரட்டிய போது உன்னை வெட்ட வாளையெடுத்தவன். நான் தான்” என்று சுட்டிக் காட்டினான் மொகலாய வீரன்.

”ஆம்.”

”அப்பொழுதும் தலைவர் உன்னை வெட்டுவதைத்தடுத்தார்.”

“ஆம்”

“இப்பொழுதும் தடுத்திருக்கிறார், உன்னை உயிருடன் பிடித்து வரும்படி. ஆகையால் மாலைக்கும் இரவுக்கும் நான் சம்பந்தப்பட்ட வரையில் மாற்றம் ஏதுமில்லை.” இதைச் சொன்ன மொகலாய வீரன் சிறிது வருத்தத்தைக் காட்டினான்.

இதயசந்திரன் இதழ்கள் குறு நகை காட்டின. “என்னைக் கொல்லாதது அத்தனை வருத்தமாகவா இருக்கிறது உனக்கு?” என்று வினவினான் கேலி ஒலித்த குரலில்.

“தைக்கும் முள்ளையும் இடறும் செடியையும் எடுத்தெறிவதுதான் விவேகமென்பது என் கருத்து’ என்றான் மொகலாய வீரன்.

“நல்ல கருத்துதான் வீரனே. எனக்கும் அது உடன் பாடுதான்” என்ற இதயசந்திரன், ”என்னை நீ மட்டும் அழைத்துச் சென்றுவிட முடியுமென்று நினைக்கிறாயா?” என்று வினவவும் செய்தான்.

“என் நினைப்பு அப்படித்தான். ஆனால் தலைவர் அப்படி நினைக்கவில்லை.”

“யார், ஸாத் ஸித்தியா”

‘ஆம்”
“அதனால்?”

”இன்னும் சிலரையும் அனுப்பியிருக்கிறார்.”

”எங்கே அவர்கள்?”

“திரும்பிப் பார். ஆனால் குனிந்து துப்பாக்கியை எடுக்க முயலவேண்டாம். குனிந்தால் நான் தலைவர் உத்தரவையும் மீறி, சுவாமியின் நிபந்தனையையும் மீறி, உன்னைச் சுட வேண்டியிருக்கும்” என்ற மொகலாய வீரன் மெல்ல நகைத்தான்.

அவன் கூறியபடி திரும்பிய இதயசந்திரன் சற்று எட்ட இருந்த இரண்டு பாறைகளின் மறைவிலிருந்து எழுந்து விட்ட நான்கு அபிஸீனிய வீரர்கள் துப்பாக்கிகளைத் தனக்காகக் குறி வைத்துக்கொண்டு நெருங்குவதைக் கண்டான். இனித் தப்ப வழியில்லையென்பதை உணர்ந்து கொண்ட அந்த வாலிப வீரன் அந்தக் கணத்தில் விதியைத் தான் நினைத்தான். ‘தஞ்சையிலிருந்து கிளம்பியது மகாராஷ்டிர அரசுப் போட்டியில் மூன்றாவது வாரிசைத் தவிர்க்க, தவறி விழுந்தது போட்டியும் போரும் முற்றிய கொங்கணியின் மடியில், சுவாமி பணித்தது தாராபாயின்

தளபதி ஆங்கரேயுடன் செல்ல, தேவி பணித்தது மொகலாய தளபதியிடம் அதே ஆங்கரேயைக் காட்டிக் கொடுக்க! விதி எப்படி எங்கே கொண்டு திணிக்கிறது என்னை’ என்று நினைத்து, ‘சரி, எங்கு கொண்டு செல்கிறதோ பார்ப்போம்’ என்று தீர்மானித்து, மீண்டும் மொகலாய வீரர்களை நோக்கித் திரும்பி, ”நல்ல ஏற்பாட்டுடன் தான் வந்திருக்கிறீர்கள். சரி, போகலாமா?” என்று வினவினான். போகிலாமென்று துப்பாக்கியா லேயே திசையைச் சுட்டிக் காட்டிய மொகலாய வீரன், இதயசந்திரன் நான்கைந்து அடிகள் நடந்து சென்றதும் அவனைச் சுற்றிக் கொண்ட மற்ற வீரர்களிடம், ”அவன் வாளை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று உத்தரவிட்டு வலக்கையிலிருந்த துப்பாக்கியையோ, கண்ணை இதயசந்திரனைவிட்டு அகற்றாமலே முழந்தாளை மெள்ளலைத்துத் தனது இடது கையால் இதயசந்திரன் கைத் துப்பாக்கியை எடுத்துக் கொண்டான் பிறகு இதய சந்திரனைக் காத்து அழைத்துக்கொண்டு முன்னேறும்படி உத்தரவிட்டு இதயசந்திரன் புரவியில் தான் ஏறிக் கொண்டு, தனது பெரும் துப்பாக்கியைப் புரவிச் சேணத்தில் பொருத்தியும், கடிவாளத்தை இடதுகையில் பிடித்தும், இதயசந்திரன் கைத்துப்பாக்கியை அவன் தலைக்குக் குறி வைத்துக் கொண்டும் புரவியை நடத்தினான். துப்பாக்கி யேந்திய நான்கு வீரர்கள சூழ்ந்துவர பின்னால் புரவி மேல் மொகலாய வீரன் கைத்துப்பாக்கியைத் தனக்குக் குறி வைத்து எச்சரிக்கையுடன தொடர்ந்துவர. நடந்த இதயசந்திரன் இரண்டு நாழிகை நேரத்திற்குப் பிறகு ஸாத் ஸித்தியின் மாளிகைக்குள் கொண்டு ஃபாய் நிறுத்தப்பட்டான்.

பட்டுப் படுதாக்களால் அலங்கரிக்கப்பட்ட பஹாலின் மத்திய மண்டபத்தில், திண்டு திவாசுகளின் மேல் கம்பீர மாகச் சாய்ந்து கொண்டிருந்த ஸாத் ஸித்தி. வருக வீரனே! வருக!” என்று முகமன் கூறி அழைத்தான் புன் சிரிப்புடன்.

அந்தச் சமயத்தில் ஸாத் ஸித்தியின் நிதானத்தைக் கண்டு, பெரிதும் வியந்தான் இதயசந்திரன். அஞ்சன்வேல் கோட்டையின் பெருந்தலைவன், பலர் முன்னிலையில் விபரீதமாக வீழ்த்தப்பட்டவன். அத்தனை நிதானத்தைக் காட்டியதைக் கண்டதும், உணர்ச்சிகளைச் சிறிதும் பறக்க விடாதவனும் வெகு ஆழமான மனமுள்ளவனுமான ஒரு பெரு வீரன் முன்பு தான் நிற்பதைப் புரிந்து கொண்டான் தமிழகத்தின் வீரன். அவன் இதயத்தில் ஏற்பட்ட மதிப்பை உயர்த்த ஸாத் ஸித்தி கூறினான். தனது வீரரில் ஒருவனை நோக்கி, ”இவனுக்கு ஓர் ஆசனத்தை எடுத்துப் போடு” என்று .

வீரனொருவன் சற்று எட்டப் போட்ட ஆசனத்தில் அமர்ந்த இதயசந்திரன் ஸாத் ஸித்திக்குத் தலைவணங்கி, “அஞ்சன்வேல் அதிபரே! இந்தப் பட்டணத்தில் யாரும் ஆயுதமெடுக்கக் கூடாதென்று நிபந்தனையிருக்கிறதல்லவா?” என்று கேட்டான்.

“இருக்கிறது. பிரும்மேந்திர ஸ்வாமியின் நிபந்தனை.” ஸாத் ஸித்தியின் குரலில் ஏளனமிருந்தது.

ஏளனத்தை இதயசந்திரன் கவனித்தும் கவனிக்காத வன் போலவே நடித்து, “அப்படியிருக்க, இவர்கள் துப்பாக்கி முனையில் என்னை எப்படிக் கொண்டு வரலாம்?” என்று வினவினான்.

”வீரனுக்கு வீரன் காட்டும் மரியாதை இது.”

“கைது செய்வது மரியாதையா?”

”கைது செய்வதே ஒரு மரியாதை. சுட்டும் புதைத்து விடலாம்!”

“சுட்டுப் புதைத்தால் பிரும்மேந்திர ஸ்வாமிக்குப் பதில் சொல்ல வேண்டாமா?”

”சொல்ல வேண்டும். அதனால் தான் இங்கு சுடவில்லை.”

‘வேறு எங்கு சுட உத்தேசம்?”

”அஞ்சன் வேல் கோட்டையில். அங்கு சென்றபின் சுட்டாலும் சுடலாம்; தூக்கில் மாட்டினாலும் மாட்ட லாம். அங்கு வழிகள் பல உண்டு.’ இதைச் சர்வ சாதாரணமாகச் சொன்னான் ஸாத் ஸித்தி.

இதயசந்திரன் ஸாத் ஸித்தியை வியப்புடன் நோக்கினான். ‘இப்பொழுது என்ன செய்ய உத்தேசம் என்னை?” என்று வினவவும் செய்தான்.

“அதுதான் சொன்னேனே. அஞ்சன் வேல் கோட்டைக்குக் கொண்டு செல்ல உத்தேசம் என்று என அறிவித்த ஸாத் ஸித்தி, “ஆமாம். பானுதேவியை நீ சந்தித்து நீண்ட நாளாகிறதா?” என்று வினவினான்.

“இல்லை. மூன்று நாட்கள் தான் ஆகின்றன.”

“அதற்குள் எப்படி அவளை வலையில் போட்டுக் கொண்டாய்?” என்று வினவிய ஸாத் ஸித்தியின் கண்களில் ஆவல் தெரிந்தது.

“வலையில் போட்டுக் கொண்டதாக யார் சொன்னது?” சற்றே நிதானத்தை கைவிட்டுச் சீற்றத்தைக் காட்டினான் இதயசந்திரன்.

ஸாத் ஸித்தி மட்டும் நிதானத்தைச் சிறிதும் இழக் காமலே சொன்னான்: ”தமிழா! எந்த வினாடியில் நீ என்னைப் புரவியிலிருந்து வீழ்த்தினாயோ அந்த வினாடியிலிருந்து நீ என் வீரர்களின் கண்களிலிருந்து தப்பவில்லை. உனக்குத் துறவி காட்டிய இடம், நீ அறை யிலிருந்து வெளிக் கிளம்பி புரவி ஏறி மதில்களுக்கு வெளியே சென்றது. பிறகு அந்தப் பெண் உன்னைத் தொடர்ந்தது. அனைத்தும் எனக்கு அவ்வப்பொழுது அறிவிக்கப்பட்டது. பெண் ஆணைத் தொடர்ந்தாலும் ஆண் பெண்ணைத் தொடர்ந்தாலும் விவகாரம் லேசில் முடியாதென்று எனக்குத் தெரியுமாதலால் என் வீரர்களை அனுப்பினேன்…”

வாசகத்தை ஸாத் ஸித்தி முடிக்கு முன்பு மொகலாய வீரன் இடை புகுந்து, ” இருவரும் தென் சரிவு மரக் கூட்டத்தில் நுழைந்தார்கள். ஒரு வீரனை நான் புதர்கள் வழியாகச் சுற்றிச் சென்று மரக்கூட்டத்தில் மறைந்து கண்காணிக்கச் சொன்னேன். மற்றவர்களை அவர்கள் திரும்பும் வழியில் எழுந்திருந்த பாறைகளின் மறைவில் பதுக்கினேன். நானும் பதுங்கினேன். இவரை அந்தப் பெண் விட்டுச் சென்றதும் மறைவிலிருந்து எழுந்து மடக்கினேன்” என்று நடந்ததை எடுத்துச் சொன்னான்.

இதயசந்திரன் முகத்தில் சிந்தனை ஒரு வினாடி தோன்றி மறைந்தது. அவன் ஸாத் ஸித்தியை நோக்கிக் கேட்டான். “உங்கள் வீரர்கள் கண்டதைக் கேட்டீர்கள் கேட்டதையும் கேட்கலாமல்லவா?” என்று.

”தேவையில்லை. ஆணும் பெண்ணும் இரவில் மரக் கூட்டமளிக்கும் பாதுகாப்பில் தனித்துச் சந்திக்கும்போது நிகழக்கூடிய காதல் களியாட்டத்தை ஊகிக்க முடியாதா?” என்று ஸாத் ஸித்தி கேட்டான் நகைப்புக்கிடையே.

“காதல் களியாட்டத்துக்குத் தவிர வேறு எதற்கும் ஆணும் பெண்ணும் சந்திக்க முடியாதா?” என்று வினவினான் இதயசந்திரன்.

அவன் குரலிலிருந்த வெறுப்பைக் கவனித்தான் ஸாத் ஸித்தி. அதற்குக் காரணம் புரியாமல் கேட்டான். “வேறெதற்குச் சந்தித்தாய் அவளை?” என்று சினத்தைச் சிறிது காட்டி:

இதயசந்திரன் தனக்கும் ஸாத் ஸித்திக்கும் எதிரே நின்ற மொகலாய வீரனைக் காட்டி, ” இவனுக்குத் தெரியும்” என்று கூறினான்.

ஸாத் ஸித்தியின் முகத்தில் சற்றுக் குழப்பம் தெரிந்தது. “என்ன தெரியும் இவனுக்கு?” என்ற ஸாத் ஸித்தியின் குரல் இடியென ஒலித்தது.

”நானும் தேவியும் நின்று பேசிய பாறையின் இன்னொரு புறத்தில் இவன் மறைந்திருந்தான். ஆகையால் தேவியின் கட்டளையை இவன் கேட்டிருக்க வேண்டும்.”

ஸாத் ஸித்தியின் கண்கள் மொகலாய வீரன்மீது பதிந்தன. அந்தக் கண்களிலேயே கேள்வியிருந்ததால், மொகலாய வீரன் தலைவணங்கி, ”தேவி இவனைத் தங்களிடம் தூது செல்ல உத்தரவிட்டாள்” என்றான்.

“இவனையா! என்னிடமா?”

“ஆம் நவாப் கனோஜியைத் தங்களிடம் காட்டிக் கொடுக்க உதவுவதாகக் கூறச் சொன்னாள் தேவி” என்று வீரன் பெரு வெடியை எடுத்து வீசவே, பேரதிர்ச்சி யடைந்த ஸாத் ஸித்தி திண்டை விட்டு எழுந்து மஞ்சத்தில் பஞ்சணையில் காலை மடித்து உட்கார்ந்தான். “உண்மையாகவா?” என்று அவன் பெருங்குரலில் கேட்ட கேள்வி மண்டபச் சுவர்களில் தாக்கிப் பலமுறை எதிரொலி செய்தது.

“ஷாஹூ மகராஜ் மொகலாய மன்னரால் ஆதரிக்கப் பெற்றவராதலால் அவரது வைரியை உங்களிடம் ஒப்படைப்பது தனது கடமை எனக் கூறினாள் அவள்” என்ற வீரன் வார்த்தையைக் கேட்ட ஸாத் ஸித்தி அசந்து பல வினாடிகள் உட்கார்ந்துவிட்டான். பிறகு கூவினான், “நீங்கள் செல்லுங்கள்” என்று வீரர்களை நோக்கி. வீரர்கள் சென்றதும் இதயசந்திரனை நோக்கி, “இனி நீ எனது வீரன். ஸாத் ஸித்தி விரோதிகளை நசுக்குவதில் எப்படிப் பின் வாங்குவதில்லையோ அப்படியே தனது வீரர்களுக்கு நலன் செய்வதிலும் பின்வாங்குவதில்லை யென்பதை சீக்கிரம் உணருவாய்” என்று கூறிவிட்டு. “அடுத்து என்ன செய்ய உத்தேசம்?” என்று வினவவும் செய்தான் ஸாத் ஸித்தி ஆவல் நிரம்பிய குரலில் .

இதயசந்திரன் பதில் அந்த ஆவலைத் தகர்த்தது.. அதிர்ச்சியை அளித்தது. ஸாத் ஸித்தியின் வெறியை உச்ச நிலைக்குக் கொண்டு சென்றது. “முட்டாள் உன்: கழுத்துக்குத் தூக்குக் கயிற்றை நீயே மாட்டிக்கொண்டு விட்டாய்’ என்று இரைந்து கூறினான் ஸாத் ஸித்தி. அந்தக் கூவலைக் கேட்டு ஓடிவந்த வீரனிடம், ”இவனைக் கொண்டு போய் அஞ்சன்வேல் சிறையில் அடையுங்கள். நான் வந்தபின் இவனை அணு அணுவாகச் சித்திரவதை செய்து கொல்லுகிறேன்” என்று உத்தரவும் இட்டான்.

வீரர் நால்வர் இதயசந்திரனைச் சூழ்ந்து நெருங்கினர்.

Previous articleJala Deepam Part 1 Ch18 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 1 Ch20 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here