Home Historical Novel Jala Deepam Part 1 Ch2 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 1 Ch2 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

101
0
Jala Deepam Ch2 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 1 Ch2 | Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 1 Ch2 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 2 சுவாமியும் சுந்தரியும்

Jala Deepam Part 1 Ch2 | Jala Deepam | TamilNovel.in

விதியென்பது ஆண்டவனின் விசித்திர தண்டம்… மனித அறிவுக்குச் சிறிதும் புலப்படாத ஒரு மர்மம். அஞ்ஞானி அதை அறிவீனத்தால் அசட்டை செய்கிறான். விஞ்ஞானி அதை விவேகத்துக்கு ஒவ்வாதது என்று புறக்கணிக்கிறான். மெய்ஞ்ஞானி அதை ஆண்டவன் கட்டளை, கர்மத்தின் கரம் என்று உணர்ந்து அதன் விளைவுகளுக்குச் சிரம் தாழ்த்துகிறான். ஆனால் அந்த மெய்ஞ்ஞானிகூட விதி எதை விளைவிக்கிறது என்பதை அறியாமல் திகைக்கிறான்.

வலைஞன் எப்படி ஒரு நூலிழையை எடுத்துப் பின்னத் துவங்கி முடிவில் பெரும் வலையைச் சிருஷ்டித்து விடுகிறானோ, அப்படியே விதியும் வாழ்வின் ஒரு நூலிழையை எங்கோ துவக்கி, எப்படியோ பின்னிப் பெரும் வலையைச் சிருஷ்டித்துவிடுகிறது. அதில் சிக்க வேண்டியவர்கள் சிக்கிக்கொள்கிறார்கள். அதை நாடி வருபவர்கள் தானே வருகிறார்கள். அப்படி வருவதை ‘சந்தர்ப்பம்’ ‘தற்செயல்’ என்ற சொற்களால் குறிப்பிடு கிறார்கள். உலக பந்தத்தில் உழலும் மனிதன் வைத்த பெயர்கள் அவை. சாஸ்திரம் வைத்த பெயர் விதி.

அத்தகைய விதியின் இச்சையாலோ சந்தர்ப்ப விசேஷத்தாலோ அலைக்கருகே கூடி நின்ற அந்தச் சிறு கூட்டத்தில் மற்ற அனைவரும் வியப்பின் எல்லையை அடைந்திருந்தாலும், கம்பீரமாக நின்ற அந்தத் துறவி மட்டும் எவ்வித வியப்பையும் காட்டாமல் அலைக் கரையில் கிடந்த அந்த வாலிபனைத் தலை முதல் கால் வரையில் கண்களை ஓட்டிக் கவனித்தார். மணலில் சுமார் ஆறடி நீளத்துக்கு நார் நாராகப் பலவிடங்களில் கிழிந்த மகாராஷ்டிர உடையுடன் கிடந்த அந்த வாலிபனின் உடலில் சதைப்பற்று அதிகமில்லாததை. கைகளின் திறந்த இடங்களும் மார்பும் அறிவித்தாலும் உடல் நன்றாக உரம் பாய்ந்திருந்ததையும், அவன் மேனி அதிகச் சிவப்போ கறுப்போ இல்லாமல் சற்றே அருணோதயச் சிவப்பா யிருந்ததையும் கவனித்த துறவி, அவன் நல்ல வலிமை உள்ளவனென்பதையும் வெய்யிலிலும், மழையிலும் அதிகம் அடிபட்டவனென்பதையும் புரிந்து கொண்டார். அவன் விசாலமான மார்பு மூச்சால் திடமாக எழுந்து தாழ்ந்ததிலிருந்து அவன் இதயத்தின் திண்மையும் அவருக்குத் தெள்ளென விளங்கியது. அத்தனையையும் திருப்தியுடன் கவனித்த துறவிக்கு அவன் கண்கள் மட்டும் திருப்தியை அளிக்காததால் அவனைச் சிறிது கவலையுடனேயே கவனித்தார். கண்களில் சதா துள்ளிக் கொண்டிருந்த ஓர் ஒளி, திடீரென ஈட்டி போல் கூர்ந்துவிடும் ஒரு சாயை, அவரைச் சற்று சிந்திக்க வைத்தது. அவன் முகத்தில் அழகுமிருந்தது, கம்பீரமுமிருந்தது. நன்றாக வெட்டப்பட்டிருந்தாலும் அலை நீரால் முகத்தில் ஒட்டி வைக்கப்பட்டிருந்த பட்டை மயிர்க்கொத்து அந்தக் கம்பீரத்தை அதிகப்படுத்தியது. அத்தனை கம்பீரத்தையும், அழகையும், உடலுறுதியையும் துறவி கவனித்தும் திருப்தியடையாதவராய் அவனை நோக்கி, “தமிழா! சற்று இடது புறமாகத் திரும்பு’ என்று நின்றபடியே தூய தமிழில் உத்தரவிட்டார்.

இதயசந்திரனுக்கு மட்டும் கையில் அந்தக் காயமும் காயத்தின் வலியும், புண்களின் மணல் எரிச்சலும் இல்லதிருந்தால் தானிருப்பது கனவுலகம் என்றே தீர்மானித்திருப்பான். கப்பல் போரின் சத்தம்கூட யாரையும் கரைக்குக் கொண்டுவராத அந்த மனித சஞ்சாரமற்ற கடற்கரைக்குத் துறவி வந்ததே அவனுக்கு வியப்பாயிருந்தது. அவர் சங்க நாதத்துக்குப் பெண்கள் சிலர் ஓடி வந்தது அதிக வியப்பை அளித்தது. அவர்களின் முகப்பில் வானச்சந்திரனைப் பழிக்கும் வாள் விழியாளொருத்தி வந்ததும் தன் கைக்குக் கட்டுப் போட்டதும் அதைவிட விந்தையாயிருந்தது அவனுக்கு. தவிர தான் மகாராஷ்டிர மொழியில். கேட்ட கேள்விக்குத் துறவியும் அந்தக் கட்டழகியும் தமிழில் பதில் சொன்னது வியப்பைத் தாண்டி குழப்பத்தைத் தந்திருந்தது. கட்டுப்போட்ட பின்பு தன்னை எழுப்பிவிட முயலாத துறவி தன்னைக் கூர்ந்து நோக்கி எடை போட்டதையும், முடிவில், “தமிழா!” என்று அழைத்து இடது புறம் திரும்பும்படி தூய தமிழில் உத்தரவிட்டதையும் எண்ணிய இதயசந்திரன் பேசும் சக்தியை அறவே இழந்து மிரள மிரள விழித்தான்.

அவன் மிரள விழிப்பதைக் கண்ட துறவி தன் பக்கத்தில் நின்ற மீன் விழியாளைப் பார்த்து, ”தேவி! தமிழன் விழிக்கிறான் பார்த்தாயா?” என்று கூறி மெல்ல நகைத்தார்.

இதயசந்திரன் கண்களில் திடீரென சினம் துளிர்த்தது. அதைக் கண்ட துறவி அதை ஆமோதிப்பதற்கறிகுறியாகத் தலையை அசைத்து, “நினைத்தேன், அப்பொழுதே” என்றார்.

இதயசந்திரன் கண்கள் ஈட்டிகளாயின. “என்ன நினைத்தீர்கள்?’ என்ற சொல்லில் மிகுந்த பலவீனத்திலும் சினம் நன்றாகத் துளிர்த்தது.

துறவி சர்வசாதாரணமாகப் பதில் சொன்னார், “நீ முன்கோபி என்பதை’ என்று.

“நீர் என்ன முற்றும் அறிந்தவரா?” என்று வினவிய இதயசந்திரன் குரலில் அப்பொழுதும் உஷ்ணம் இருந்தது.

“முற்றும் அறிந்தவன் எவனும் இதுவரை உலகத்தில் பிறந்தது கிடையாது” என்றார் துறவி புன்முறுவல் உதடுகளில் தவழ.

”என்னைத் தமிழனென்று எப்படி அழைத்தீர்? என் நெற்றியில் எழுதி ஒட்டியிருக்கிறதா?”

“நெற்றியில் மட்டுமல்ல, நாவிலும் ஒட்டியிருக்கிறது.”

“நாவிலுமா!”

”ஆம் வீரனே! உன் முகம் உன்னைத் தமிழனென்று திட்டவட்டமாக அறிவிக்கிறது. நீ முதலில் பேசிய மகாராஷ்டிரமும் நீ தமிழனென்பதைத் தெளிவுபடுத்துகிறது. உன்னைக் காட்டிக் கொடுக்க உன் முகமே போதும்; அந்தக் கொச்சை மகாராஷ்டிரத்தில் நீ கேள்வி கேட்டிருக்க வேண்டாம்’ என்ற துறவி அத்துடன் நில்லா மல், “தஞ்சையிலிருந்து வருபவன் எதற்காகக் கப்பல் மூலம் வரவேண்டும் என்பது மட்டும் எனக்குப் புரியவில்லை” என்று மற்றுமொரு அதிர்வேட்டையும் எடுத்து வீசினார். மேற்கொண்டு ஏதும் பேசாமல் அவனருகில் உட்கார்ந்து அவன் உடலைத் தானே எதிர்ப்பக்கமாகப் புரட்டி முதுகைக் கவனித்தார். தோள் புறத்தில் அகன்று கீழே லேசான முக்கோணமாக இறங்கிய அந்த முதுகின் நாலைந்து இடங்களிலும் சிலாம்புகள் சட்டையைப் பிய்த்துக் கொண்டு பாய்ந்திருப்பதைக் கண்ட துறவி சற்றுப் பின்னால் நின்ற கட்டழகியைப் பார்த்து, ”முதுகிலும் சிலாம்புகள் இருக்கின்றன. இந்த வாலிபனைப் பிடித்துத்தான் அழைத்துச் செல்லவேண்டும். கூடாரத்திற்குச் சென்றபின்பு இந்தச் சிலாம்புகளை எடுப்போம். அந்த மந்திர தண்டத்தை எடு” என்று உட்கார்ந்தபொழுது அப்புறத்தில் போட்ட தங்கப் பூண் தடியைக் காட்டினார். கட்டழகி அந்தத் தடியை எடுத்துக் கொடுத்ததும் இதயசந்திரனின் காயம்படாத இடது கை பக்கத்தில் தனது வலது கையைக் கொடுத்து சிறு குழந்தையைத் தூக்குவதுபோல் அவனைத் தூக்கி நிறுத்தி அவன் இடது கையில் அந்தப் பெரும் கோலைக் கொடுத்து, ”நன்றாக ஊன்றிப் பிடி’ என்றார்.

இதயசந்திரன் ஏதும் சொல்லாமல் அவர் சொன்ன படி செய்தான். அந்தத் துறவியின் தெய்வீக முகமும் மித மிஞ்சிய பலமும், அவர் முதலில் தன்னைத் தமிழா என்றும் பிறகு வீரனே என்றும் விளித்ததும், கடைசியில் தஞ்சை யிலிருந்து வந்தவன் கப்பலில் ஏன் வந்தாயென்று வினா எழுப்பியதும், பல விஷயங்களை அடுக்கித் தன்னை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்துவிட்டதும், அவன் சித்தத்தில் ஆயிரமாயிரம் யோசனைகளையும் எல்லையற்ற பிரமிப்பையும் விளைவித்திருந்ததால் அவன் ஏதும் பேசும் நிலையில் இல்லை. இதெல்லாம் கிடக்க அலை உருட்டித் தரையில் நிர்க்கதியாகக் கிடந்த தன்னை முன்கோபி என்று கூறி, குணத்தையும் வரையறுத்துவிட்டதையும் எண்ணி எண்ணி நிலைகுலைந்தும் கிடந்தான். அது மட்டுமன்றி அவர் எதைச் சொன்னாலும் அவர் ‘தேவி’ என்று அழைத்த கட்டழகி புன்முறுவல் கோட்டியது பெரும் கோபத்தை அளித்தது அவனுக்கு. ஆனால் நிர்க் கதியான நிலையில் கிடந்த தனக்குக் கதியாய் வந்து சேர்ந்த அவர்களைப்பற்றி ஏது நினைத்தும் ஏது சினந்தும் பயனில்லை என்ற காரணத்தால் துறவியும் அந்தப் பெண்களும் சொன்னபடி நடந்து கொண்டான் இதயசந்திரன்.

துறவி தனது ஒரு கையால் அவனைத் தூக்கி அவன் இடது கையில் அந்தப் பெரும் கோலைக் கொடுத்து. “தமிழா! உன் முதுகில் சிலாம்புகளிருப்பதால் நடக்கும் போது வலி எடுக்கத்தான் செய்யும். பொறுத்துக் கொள்; மெல்ல நட” என்று கூறி, கட்டுப் போட்ட இடத்துக்கு மேல் அவன் வலது கையைத் தன் கையால் உறுதியாகப் பிடித்துக் கொண்டார். பிறகு கட்டுப் போட்ட கட்டழகிக்குப் பின்னிருந்த இரு பெண்களை விளித்து, “மந்திர தண்டம் ஊன்றிய கைக்குச் சிறிது ஆதரவு கொடுங்கள்” என்று மகாராஷ்டிரத்தில் கூறினார். அது வரையில் தமிழில் நடந்த உரையாடல்களைக் கேட்டு ஏதும் புரியாமல் நின்ற அந்தப் பெண்களில் இருவர் இதய சந்திரன் இடதுகையை மெள்ளத் தாங்கினர். இப்படி ஒருபுறம் துறவியும் மற்றொருபுறம் இரு பெண்களும் தாங்கிக் கொடுக்க ஊன்றுகோல் பிடித்து மெல்ல மெல்ல கரைப்புறம் நோக்கி நடந்தான் இதயசந்திரன். எதிரே மேற்குத் தொடர்ச்சி மலையில் பெரும் பாறை களும், புதர்களும் அடியில் தெரிந்தன. அந்தக் காட்டின் முகப்புக்கு வெகு முன்பாகவே, அதாவது கரையிலிருந்து கூப்பிடு தூரத்திலேயே சில கூடாரங்களும் விளக்குகளும் தெரிந்தன.

‘இத்தனை அருகில் கூடாரமடித்துத் தங்கியிருக்கும் இந்த சுவாமியும் சுந்தரிகளும் பெரும் கப்பல் போர் அருகே நடக்கையில் எப்படி அமைதியாகக் கூடாரங்களில் தங்கி யிருந்தார்கள்? ஒன்று கூடாரங்களை விட்டுக் காட்டுக்குள் ஓடியிருக்க வேண்டும். அல்லது கூச்சல் போட்டுப் பக்கத்திலிருக்கும் ஊரைக் கூட்டியிருக்க வேண்டும். எதையும் செய்யாமல் இடித்த புளி மாதிரி உட்கார்ந்திருக்கிறார்கள்! சமுத்திரக் கரையில் சுவாமி நள்ளிரவில் வருகிறார், எதையோ பொறுக்குகிறார். சங்கு ஊதுகிறார். பெண்கள் ஓடிவருகிறார்கள்! எனக்கு ஏதும் புரியவில்லையே!’ என்று தனக்குள்ளேயே பலபடி கேட்டுக் கொண்ட இதயசந்திரன் துறவியைத் திரும்பிப் பார்த்தான். அவர் மடி நிறைய எதையோ கட்டி முடிந்து கொண்டிருந்தார். சமுத்திரக் கரையில் அவர் பொறுக்கக் கூடியது கிளிஞ்சல்தானாகையால், ‘எதற்காக இவர் கிளிஞ்சல் பொறுக்குகிறார்? இவரென்ன குழந்தையா?’ என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்ட இதயசந்திரன் மற்றவர்களிடம் ஏதும் கேட்காமல் மௌனமாக நடந்து சென்றான். பத்துப் பதினைந்தடி நடந்ததும், “சுவாமி! இந்தப் பெண்கள் விட்டுவிடலாம்” என்று கூறித் தன் கையை அவர்களிட மிருந்து விடுவித்துக் கொண்டு கோலூன்றி நடந்தான். துறவி அவனைப் பக்கவாட்டில் கவனித்தார். “நன்று நன்று! தமிழா! நன்று!” என்று உள்ளூர சிலாகித்தும் கொண்டார். அத்துடன் பக்கத்தில் வந்துகொண்டிருந்த தேவியை நோக்கி, “நீயும் உன் தோழிகளும் போய் இவனுக்குப் படுக்கை தயார் செய்யுங்கள். சிறிது நீரும் காய்ச்சி வையுங்கள். இவன் அருந்த பானம் ஏதாவதிருந் தாலும் பாருங்கள்” என்று உத்தரவிட்டார்.

அவர் கட்டளையைக் கேட்ட மற்ற பெண்கள் கூடாரங்களை நோக்கி ஓடினாலும், கட்டுப் போட்ட அந்தக் கட்டழகி மட்டும் ஓட இஷ்டப்படாமல் சற்று துரிதமாக நடந்தே சென்றாள். அவள் நடந்து சென்ற தோரணையையும் கண்டு அவளைத் தாண்டி உயர எழுந்த சையபருவத உச்சிகளையும் கண்ட இதயசந்திரன் இரண்டுக்குமுள்ள பொருத்தத்தையும் கண்டான். இரண்டுக்கும் கம்பீரம் மிக அதிகமாயிருந்ததையும் சையபருவத உச்சிகள் போலவே அவள் அழகும் நிலவில் பளபளத்ததையும் பார்த்த இதயசந்திரன், இரண்டுக்கும் உள்ள ஒரு வேறுபாட்டையும் நினைத்து இள நகை கோட்டினான். சையபருவத உச்சிகள் அசையவில்லை. ஆனால் அந்தக் கட்டழகியின் பின்னழகுகள் அசைந்து அசைந்து சென்றன. அவள் உட்கார்ந்து தனது வலக்கையைக் கட்டியபோது பக்கவாட்டில் அவளைப் பார்த்த சமயத்தில் கண்ணுக்குக் கிடைத்த அழகுப் பக்குவம் வேறு. இப்பொழுது கால்களை வீசி நுண்ணிடை இலங்க நடந்த அழகிய பிரமிப்பு வேறு. பக்கவாட்டில் அவள் ஒரு காலை மடித்து உட்கார்ந்தபோது அவள் இடை வெளேரென்று வாள் போல் மடிந்திருந்ததன்றி அதற்கு மேலே ஆடை அணிந்த இடைவெளியில் கண்ணைத் தாக்கிய ஒற்றைப் பிம்பம் அரபிக் கடலின் நடுத்தர வெண்சங்கைப் போல் பிரமை ஊட்டியது. தன் வலது கையைத் தூக்க அவள் அடியில் கொடுத்த கை ஏதோ மலர் உலாவுவது போருந்தாலும், இறுக அவள் காயத்தைக் கட்டியபோது அதே மலர்க்கை இரும்பாக மாறியது. மண்டியிட்ட ஒரு காலுக்கும் நிமிர்ந்திருந்த மற்றொரு காலுக்கும் இடையே பாய்ந்து ஒட்டிவிட்ட ஆடை அவன் மதிக்கு விஷத்தை ஊட்டியது.

இப்பொழுது அவள் ஏதோ கடலிலிருந்து எழுந்த தேவதை மலையுச்சியைத் தொடச் செல்வது போல் சென்று கொண்டிருந்தாள். பின்புறத்தில் சுருட்டிக் கட்டப்பட்டிருந்த குழல் பெரிதாக எழுந்து தலையில் சூடிய மலருக்கு மயக்கத்தக்க பின்னணியைச் சிருஷ்டித் திருந்தது. அவள் கைகள் அளவுடன் அசைந்தன. கால்கள் அளவுடன் நடந்தன. ஆகவே அவள் ஆடை மட்டும் அளவுக்கு மேல் விசிறவில்லை. இறுகப் போடப் பட்டிருந்த ரவிக்கை முதுகின் முக்கால் பாகத்தை மறைத்திருந்ததால், அதற்குக் கீழே மறையாத இடையும் இடைக்கு மேலேயிருந்த பகுதியும் வெளேரென்று அந்த வெண்ணிலவில் தெரிந்தன. ஆடையின் அடிப்பகுதி கணுக்காலுக்கு மேலிருந்ததால்காற்சிலம்புகளும் பளபளத்து ஒளிவிட்டன.

இதயசந்திரன் மெல்ல கூடாரங்களின் அருகில் வந்து சேர்ந்தான். அங்கிருந்த நான்கு கூடாரங்களில் முகப்புக் கூடாரத்துக்குள் அவனை அழைத்துச் சென்ற துறவி கீழேயிருந்த மான் தோலொன்றில் அவனைப் படுக்கவைத்தார். பணிப்பெண்கள் கொண்டுவந்த சுடுநீரை மெள்ள ஒற்றி ஒற்றி முதுகுச் சிலாம்புகளை மிக லாவகமாகக் கழற்றினார். பிறகு கூடார மூலையிலிருந்த கம்பளி யொன்றை எடுத்து அவன் உடலைக் கழுத்து வரையில் போர்த்திவிட்டு உள்ளே கையைவிட்டு அவன் உடையை நீக்கினார். கம்பளியில் அவனைச் சுற்றிய வண்ணம் திருப்பி முதுகை மட்டும் திறந்து காயங்களை ஒற்றி அழுத்தியும், அந்தக் கூடாரத்து மூலையிலிருந்த பெட்டியிலிருந்து எடுத்த மெழுகைக் காயங்களில் அப்பியும் குருதி வரவொட்டாமல் நிறுத்தினார். பிறகு வலதுகைக் கட்டையும் அவிழ்த்து, தேவியை ஏதோ திராவகத்தையும் பஞ்சையும் கொண்டு வரச் சொல்லி, திராவகம் தடவி, பஞ்சு வைத்து நன்றாகக் கட்டினார். பிறகு பணிப்பெண் ஒருத்தி கொண்டு வந்த பாலில் ஏதோ இரண்டு சொட்டு திராவகம் ஊற்றி, “தமிழா வாயைத் திற!” என்று அவனை வாயைத் திறக்கச் சொல்லி ஊற்றினார்.

இதயசந்திரன் தனது உடலில் புது சக்தி பாய்வதை அறிந்தான். அத்துடன் அவன் கண்களும் மெல்ல மூடின. அடுத்த நாலைந்து விநாடிகளுக்குள் அவன் நன்றாக உறங்கிவிட்டதை அவன் சீரான மூச்சு தெளிவுபடுத்தியதும் சுவாமி மற்ற பெண்களை அவர்கள் கூடாரத்துக்குச் செல்லப் பணித்துவிட்டுத் தம்முடன் தனியே நின்ற தேவியைக் கவலையுடன் நோக்கினார். “இவனை நீ ஜாக்கிரதையாகக் கவனிக்கவேண்டும்” என்றார்.

தேவி சந்தேகம் நிரம்பிய விழிகளைத் துறவிமீது திருப்பினாள். “இவன் என்ன அத்தனை அபாயமானவனா?” என்று வினவிய குரலிலும் சந்தேகம் ஒலித்தது.

”அபாயமானவனோ என்னவோ தெரியாது. ஆனால் இந்தத் தமிழன் லேசுப்பட்டவனல்ல. காரணமில்லாமலும் இங்கு அவன் வரவில்லை” என்று திட்டவட்டமாகக் கூறினார் துறவி.

சுந்தரி சுவாமியை வியப்புடன் நோக்கினாள். சுவாமி ஏதும் சொல்லாமல் கூடாரத்தைவிட்டுக் கிளம்பி மறுபடியும் கடற்கரை நோக்கி வேகமாக நடந்தார்.

Previous articleJala Deepam Part 1 Ch1 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 1 Ch3 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here