Home Historical Novel Jala Deepam Part 1 Ch20 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 1 Ch20 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

58
0
Jala Deepam part 1 Ch20 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 1 Ch20 | Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 1 Ch20 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 20 இன்று போய் நாளை வா

Jala Deepam Part 1 Ch20 | Jala Deepam | TamilNovel.in

ஜன்ஜீரா ஸித்திகளின் பரம வைரியான கனோஜி ஆங்கரேயைத் தன்னிடம் காட்டிக் கொடுக்க பானுதேவி முடிவு கட்டிவிட்டாள் என்பதைக் கேட்டுப் பரவசப்பட்டதால், இதயசந்திரன் முந்திய நாள் மாலை தன்னைப் புரவி யிலிருந்து உருட்டியதைக் கூட அறவே மறந்து. அவன் இனி, தனது வீரனென்று உரிமை கொண்டாடிய ஸாத் ஸித்தி “அடுத்து என்ன செய்ய உத்தேசம்?” என்று கேட்ட போது அவன் எதிர்பார்த்த பதில் வேறு. கிடைத்த பதில் வேறு. எங்கிருந்தோ திடீரென்று கொங்கணியில் வந்து முளைத்த அந்தத் தமிழ் வீரனிடம் பானுதேவி அதிக அன்பு வைக்காவிட்டால் அவளுடன் வந்த காவலரை விட்டு அவனை மட்டும் தனித்து அழைத்துச் செல்லவோ, அத்தகைய அபாயமான தூதை விடுக்கவோ அவள் தீர்மானித்திருக்க மாட்டாளென்று ஊகித்துக்கொண்ட ஸாத் ஸித்தி, அத்தகைய ஒரு பெண்ணின் கண் அசக்கலுக்கு எந்த ஆடவனும் அடிமையாகாதிருக்க முடியாதென்ற தீர்மானத்துக்கு வந்தானாகையால், இதயசந்திரன் இனித் தன் கைப்பாவைதான் என்று மனப்பால் குடித்தே அவனை அன்புடன் நடத்தியதன்றி, கனோ,ஜியைக் கைப்பற்று வதற்கு அடுத்தபடியாகச் செய்ய வேண்டிய முயற்சியை உட்பொருளாக வைத்து உவகையுடன் அந்தக் கேள்வியை வீசவும் செய்தான். பதில், உவகையை உடைத்தது. சினத்தைக் கிளறியது. ஸாத் ஸித்தியை வெகு அலட்சியத் துடன் ஏறெடுத்துப் பார்த்த இதயசந்திரன். ”மகாராஷ் டிரர் கடற்படைத் தலைவரை எச்சரிக்க உத்தேசம்” என்று கூறியதன்றி இகழ்ச்சி நகை புரியவும் செய்தான். அந்தப் பதிலின் விளைவாகத்தான் வெடித்தது ஸாத் ஸித்தியின் இடிக்குரல். அஞ்சன்வேல் கோட்டைச் சிறையில் தமிழனை அழைத்துச் சென்று அடைக்கும்படி வீரர்களுக்கு உத்தரவு பிறந்தது காலாக்கினியைப் போல் உதிர்ந்த சொற்களில்.

ஸாத் ஸித்தியின் முகத்திலும் சொற்களிலும் சுடர் விட்ட காலாக்கினியைப் பற்றியோ, உருவிய வாட்களுடன் நெருங்கிய வீரர்களைப் பற்றியோ சிறிதும் லட்சியம் செய்யாத இதயசந்திரன் கூறினான். ‘அஞ்சன்வேல் தலைவருக்கு ஆத்திரம் சிறிது அதிகம்” என்று.

அந்தச் சொற்களில் ஏதோ பணிவிருந்ததாக நினைத்த ஸாத் ஸித்தி தனது பெரிய புருவங்களைச் சிறிது குறுக்கியும் மீசையை லேசாகக் குவியும்படி உதடுகளைச் சிறிது கூட்டியும் ஒரு விநாடி சிந்தித்துவிட்டு, “உன் எண்ணத்தில் மாறுதலிருந்தால் இப்பொழுதும் நீ தப்பலாம்’ என்று கூறி விட்டுத் தனது தீட்சண்யமான கண்களைத் தேக்கவிட்டான் தமிழன் மீது.

”தமிழன் முகம் சிலையெனக் கல்லாயிருந்தது. “மாறுதல் தங்கள் எண்ணத்தில் தான் ஏற்படவேண்டும்” என்ற சொற்கள் உணர்ச்சியற்று வரண்டு ஒலித்தன.

ஸாத் ஸித்தியின் கோபம் வந்த வேகத்தில் மறைந்த தால் அவன் உள்ளத்தில் வியப்பு மேலிட்டதை முகம் நன்றாக உணர்த்தியது. ”உன்னிடம் எனக்குப் பொறாமை ஏற்படுகிறது” என்று கூறினான் ஸாத் ஸித்தி வியப்பு குரலிலும் ஒலிக்க.

“என்னிடமா! யாரும் பொறாமை படக்கூடிய நிலையில் நான் தற்சமயம் இல்லையே!” என்றான் இதயசந்திரன்.

”சாதாரண மனிதர்கள் பொறாமைப்படக்கூடிய நிலைமையில் நீ இல்லையென்பது உண்மை. ஆனால் வீரர்கள் பொறாமைப்படக்கூடிய நிலைமையில் இருக் கிறாய்” என்றான் ஸாத் ஸித்தி.

“புரியவில்லை தளபதி.’

புரியாதது இதில் ஏதுமில்லை வீரரே! என் கையில் நீ சிக்கியிருக்கிறாய் நிதானமாக இருக்கவேண்டியவன் நான். பதட்டப்பட்டுக் கூச்சல் போட வேண்டியவன் நீ. வேடன் வலையில் சிக்கும் புறாக்கள் தான் கூச்சலிடும் அச்சத்தால். வேடன் கூச்சலிடுவதில்லை. இங்கு நிலைமை மாறியிருக்கிறது” என்று சுட்டிக்காட்டினான் ஸாத் ஸித்தி.

அஞ்சன்வேல் தலைவன் சுட்டிக்காட்டியது எதை என்பது நன்றாகத் தெரிந்தது இதயசந்திரனுக்கு. அப்பொழுது தன்னைச் சுற்றி வீரர்கள் வாட்களை உருவிக் காவல் நிற்க, அக்கம் பக்க அறைகளில் ஆயுதந்தரித்த வீரர்கள் பலர் உதவிக்கிருக்க, அவர்கள் அதிபனான தான் வேகத்தில் கூவி விட்டதை நினைத்து அந்தப் பெருவீரன் வெட்கப்படுகிறானென்பதைப் புரிந்து கொண்டதால், அவனிடமிருந்த மதிப்புப் பன்மடங்காகியது இதய சந்திரனுக்கு. அப்பேர்ப்பட்ட வீரனின் மனம் வேதனைப்படுவது தகாதென நினைத்த இதயசந்திரன், “உங்கள் உவமையில் தவறிருக்கிறது” என்றான் பணிவு துளிர்த்த குரலில். ” என்ன தவறு?”

“சிக்குவது புறாவாயிருந்தால் உவமை சரிதான். சிக்குவது ராஜாளியானால் உவமை தவறாகும். ராஜாளி கூவாது. கம்பீரமாகச் சுற்றுமுற்றும் நோக்கும்; சிறகை மட்டும் ஒருமுறை அடிக்கும். பிறகு அடுத்து நடப்பது என்ன என்பதைக் கவனிக்கும்.”

அந்த உவமையைக் கேட்ட ஸாத் ஸித்தி, ”நன்று நன்று!” எனக் கூறித் தலையசைத்துப் புன்முறுவலும் செய்தான். “தமிழா! உன் உவமைதான் சரி. புறாவென நினைத்து வேடன் ராஜாளியைப் பிடித்துவிட்டான். ஆனால் ராஜாளி ஏன் புறவாக வேண்டும்? ராஜாளியாகவே ஏன் இருக்கக்கூடாது?” என்று கேட்கவும் செய்தான்.

இதயசந்திரனின் கல் முகத்திலும் உணர்ச்சி சிறிது படர்ந்தது. “ராஜாளி புறாவானதாக யார் சொன்னது!” என்று வினவினான்.

”ராஜாளியை யாரும் தூது விடுவதில்லை. புறாவைத் தான் தூது விடுவார்கள்.”

“உண்மை.”

“ராஜாளி வலிமையுள்ளது. புறாவென்று அது தன்னை நினைத்துக் கொண்டதுதான் தவறு.”

”உண்மை.”

“ராஜாளி சுதந்திரப் பறவை.”

“ஆம்.”

இந்தப் பதிலைக் கேட்ட ஸாத் ஸித்தி பஞ்சணை மஞ்சத்திலிருந்து கீழே இறங்கி இதயசந்திரனுக்கு வெகு அருகில் வந்து அவன் தோள் மீது தனது பெரும் கைகளில் ஒன்றை வைத்து, ”உன் சுதந்திரத்தை ஏன் போக்கடித்துக் கொள்ள வேண்டும்?” என்று வினவினான். “போக்கடித்துக் கொண்டதாக யார் சொன்னது?”

ஒலியிலிருந்து தமிழன் உள்ளத்தை ஊகித்த ஸாத் ஸித்தி, “ தமிழா! நான் இதயம் திறந்து பேசுவது போல் நீயும் பேசு. கனோஜி ஆங்கரே எங்கள் எதிரி. அவரை அழிப்பது எங்கள் கடமை. இங்கு நடப்பது மொகலாய சாம்ராஜ்யத்துக்கும் மகாராஷ்டிர சாம்ராஜ்யத்துக்கும் நடக்கும் போர். நானும் கனோஜியும் அந்தப் போரின் இரு கட்சிகளைச் சேர்ந்தவர்கள். ஆனால் இந்தப் போரில் தமிழனான உனக்கென்ன சம்பந்தம்? சம்பந்தமில்லாத உனக்கு யார் கட்சி வெற்றி பெற்றாலென்ன, தோற்றாலென்ன? எங்கு லாபம் அதிகமிருக்கிறதோ அங்கு சேர்ந் தால் தவறென்ன?” என்று வினவினான்.

இதயசந்திரன் இதழ்களில் புன்முறுவல் படர்ந்தது. “வீரரே! என்னை உங்கள் பக்கம் இழுக்கும் ஆவலில் முன் பின் முரணாகப் பேசுகிறீர்கள். ஒன்று உங்களுக்குச் சொல்ல இஷ்டப்படுகிறேன். சுதந்திரத்தைத் தற்சமயம் நான் விரும்பவில்லை” என்று கூறினான்.

”ஏன்?”

”என் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.”

”தெரியும். காதலால்.”

“மீண்டும் தவறு செய்கிறீர்கள். காதல் என்னைக் கட்டுப்படுத்துவதாயிருந்தால் பானுதேவி சொன்னபடி நான் உங்கள் பக்கம் சேர்ந்திருக்க வேண்டும். ஆங்கரேயைப் பிடித்துக் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.”

ஸாத் ஸித்தி தமிழன் அருகாமையிலிருந்து பின்னடைந்து மஞ்சத்தின் முனையில் உட்கார்ந்து அவனை ஏறிட்டு நோக்கினான்.

”ஆகையால் மூன்று நாட்களுக்கு முன்பே சந்தித்த பானுதேவியை நான் காதலிப்பதாகக் கனவு கண்டாலும் அந்தக் காதல் என்னைக் கட்டுப்படுத்தவில்லையென்பதை நீங்கள் உணர்ந்து கொண்டிருக்கலாம். அப்படி ஒருவேளை கட்டுப்படுத்தியிருந்தாலும் அந்தக் கட்டு உடைந்துவிட்ட தென்பதையும் உணர்ந்து கொண்டிருக்கலாம். காதல் என்னைக் கட்டுப்படுத்தவில்லை. இங்குள்ள போர் பூசல் எதுவும் கட்டுப்படுத்தவில்லை. என் உயிரைக் காப்பாற்றியதால் பிரும்மேந்திர ஸ்வாமியிடம் இருக்கும் நன்றிகூட தற்சமயம் என்னைக் கட்டுப்படுத்தவில்லை. என்னைக் கட்டுப்படுத்துவது கடமை ஒன்று தான்.” ”என்ன கடமை தமிழா?”

”தமிழகத்திலிருந்து நான் ஒருவனைத் தேடி வந்திருக்கிறேன்.”

”யார் அவன்?”

“பெயர் தெரியாது. ஆனால் பார்த்தால் அடையாளம் கண்டு கொள்வேன்.’’

”அப்படியா!”

என்ன அடையாளம் என்று ஒருவேளை அவன் கேட்டிருந்தால் இக்கதைப் போக்கு மாறியிருக்கலாம். ஆனால் கனோஜி ஆங்கரேயைப் பிடிக்கும் மும்முரத்திலிருந்த ஸாத் ஸித்தி, “கனோஜி ஆங்கரேயைப் பாதுகாப்பதால் உனக்கு அந்த மனிதன் கிடைத்து விடுவானென்பது நிச்சயமா?” என்று வினவினான்.

”நிச்சயமில்லை” என்று ஒப்புக்கொண்டான் இதய சந்திரன்.

“பின் அவரை நீ பாதுகாக்க வேண்டிய அவசியம்?”

”கனோஜி ஆங்கரே பெயருக்குத்தான் மகாராஷ்டிர கடற்படைத் தலைவர்…” என்று துவங்கிய இதய சந்திரனை குதூகலத்துடன் இடைமறித்த ஸாத் ஸித்தி, “உண்மை தமிழா உண்மை ” என்று கூறினான் குரலிலும் குதூகலம் கோட்டி.

“அவர் உண்மையில் கொள்ளைக்காரர் ……’.

“பலே பலே.”

”அவர் கப்பலில் பல துறைமுகங்களுக்குச் செல்கிறார்…”

“ஆம் ஆம்.”

”நான் அவருடன் சென்றால் அந்தத் துறைமுகங்களுக்கும் செல்லலாம். பல இடங்களில் நான் நாடி வந்தவனைத் தேடலாம்.”

நிறுத்து என்பதற்கு அடையாளமாகக் கையை அமர்த்திய ஸாத் ஸித்தி பல விநாடிகள் சிந்தனையில் ஆழ்ந்து விட்டுக் கேட்டான், “தமிழா! நீ சொல்ல தெல்லாம் உண்மையா?” என்று.

“என் வாளைக் கொடுங்கள். அதன்மேல் ஆணையிடு கிறேன்” என்றான் இதயசந்திரன்.

“தேவையில்லை. உன் சொல்லே போதும்’ என்ற ஸாத் ஸித்தி, “தமிழா! உனக்கொரு மாற்றுத்திட்டம் தருகிறேன். யோசித்துப் பார்” என்று கூறியதன்றி, “நீ ஒருவனை நாடி வந்திருக்கிறாய். அவனைப் பிடிக்கக் கனோஜியிடம் சேர்ந்து மரக்கலப் பயணம் செய்ய நினைக்கிறாய். அத்தகைய பயணத்திற்கும் உன் பகைவனைக் கண்டுபிடிப்பதற்கும் நான் சகல வசதிகளும் அளித்தால் என்னுடன் சேர உனக்கு என்ன தடை” என்று கேட்கவும் செய்தான்.

சில விநாடிகள் இதயசந்திரனும் சிந்தனையில் இறங்கி னான். “அஞ்சன்வேல் தலைவரே! உங்கள் உதவி கனோஜியின் உதவியை விடச் சிறந்ததாக இருக்கும் என்பது என்ன நிச்சயம்?” என்று வினவினான்.

“கொங்கணிக் கடற்கரையின் கோட்டைகளில் முக்கால்வாசி துறைமுகங்களில் நூற்றுக்கு எண்பது ஸித்திகளிடம் இருக்கின்றன. கனோஜி திறமையுள்ள கடற்படை வீரர். ஆனால் துறைமுகங்கள் முழுவதையும் பிடிக்க இன்னும் அவரிடம் போதிய பலமில்லை” என்றான் ஸாத் ஸித்தி.

கொங்கணிப் பிரதேசத்தில் ஸித்தியின் பலத்தைப் பற்றிப் பெரிதும் கேட்டிருக்கிறான் இதயசந்திரன். ஆகவே ஸாத் ஸித்தி கூறியது உண்மையென்பது அவனுக்குத் தெரிந்திருக்கிறது. இருப்பினும் என்ன காரணத்தாலோ ஸாத் ஸித்தியிடம் சேர அவன் மனம் ஒப்பவில்லை. அப்படி ஒப்பவில்லையென்பதை உடனடியாகக் கூறாமல், “இதை யோசிக்க எனக்கு அவகாசம் வேண்டும்” என்றான்.

ஸாத் ஸித்தி அறிவிற் சிறந்தவன். மனிதர்களை எடை போடுவதில் ஈடு இணையற்றவன். ஆகையால் சற்று யோசித்துவிட்டு, ”நீ கேட்பதில் நியாயமிருக்கிறது” என்று கூறினான்.

இதயசந்திரன் கண்களில் வியப்புத் தாண்டவமாடியது. “நியாயமிருப்பதாக நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். எதிரியான என்னிடம் நீங்கள் காட்டும் பரிவு அபரிமிதமானது. ஆனால் சிந்திக்க அவகாசம் கொடுத்தால் என் முடிவைத் தெரிவிப்பேன். நமக்குள் நடந்ததை யாரிடமும் தெரிவிப்பதில்லையென உறுதியும் கூறுவேன்” என்றான் வியப்பும் நன்றியும் கலந்து ஒலித்த குரலில்.

ஸாத் ஸித்தி சாமர்த்தியமாக மெள்ள தனது வலையை வீசினான். “அந்த உறுதி மட்டும் போதுமென்று தோன்ற வில்லை எனக்கு” என்றான் மெதுவாக.

“வேறெந்த உறுதி வேண்டுமானாலும் கேளுங்கள் தருகிறேன்” என்றான் இதயசந்திரன் பணிவுடன்.

ஸாத் ஸித்தி இதயசந்திரனை ஏறெடுத்துப் பாாக்காமல் தரையில் கண்களை ஓட்டிச் சொன்னான்: “வீரனே! உன்னை இப்போது நான் விட்டுவிட்டால் நீ கனோஜியை எச்சரிக்கலாம்!” என்று.

”எச்சரிக்கமாட்டேன் என்ற உறுதியும் கொடுக்க முடியும்” என்றான் இதயசந்திரன் உறுதியான குரலில்.

“பிரும்மேந்திர ஸ்வாமியின் யோசனையை கேட்கலாம்.”

”அவசியமில்லை.”

ஸாத் ஸித்தியின் முகத்தில் திருப்தி தெரிந்தது. இதயசந்திரனைச் சுற்றி நின்ற வீரர்களைப் போகும்படி சைகை செய்துவிட்டுக் கூறினான், “வீரனே! சிந்தித்து விடை கூற உனக்கு நாளை மாலைவரை அவகாசம் கொடுக்கிறேன்” என்று.

“நன்றி அஞ்சன்வேல் தலைவரே!” என்றான் இதய சந்திரன் தலை தாழ்த்தி.

அதுவரை இறுமாந்து நின்ற இதயசந்திரன் தனக்குத் தலை தாழ்த்தியது மிகத் திருப்தியாயிருந்தது ஸாத் ஸித்திக்கு. அந்தத் திருப்தியுடன் கூறினான் ஸாத் ஸித்தி, “ஆனால் இன்னோர் உறுதியும் வேண்டும்” என்று.

‘எது வேண்டுமானாலும் கேளுங்கள்.” இதயசந்திரன் பதில் உறுதியுடன் வெளிவந்தது.

“என்னிடம் சேர இஷ்டமில்லையேல் நாளை இரவின் ஆரம்பத்தில் நீயாகவே என்னிடம் வந்து சிறைப்பட வேண்டும்” என்றான் ஸாத் ஸித்தி.

”சம்மதிக்கிறேன் அதற்கும்.”

“அப்படியானால் இன்று போய் நாளை வா” என்றான் ஸாத் ஸித்தி.

மீண்டும் ஸாத் ஸித்தியிடம் தலை தாழ்த்திவிட்டு வெளியே செல்லத் திரும்பினான் இதயசந்திரன். அதே சமயத்தில் மஞ்சத்திலிருந்து இறங்கி வந்து இதயசந்திரன் தோளில் கைபோட்டுக்கொண்ட ஸாத் ஸித்தி தன் வீரர்கள் தலைவனை அழைத்து, இதயசந்திரன் வாளையும் கைத்துப்பாக்கியையும் திருப்பிக் கொடுக்கக் கட்டளையிட்டான்.

வாளைக் கச்சையில் கட்டி, கைத்துப்பாக்கியையும் செருகிக்கொண்டு புரவியேறச் சென்ற இதயசந்திரனைக் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டு நின்ற ஸாத் ஸித்தி “அந்த ராஜாளி நிச்சயம் நாளை திரும்பும். அதைப் புறாவாக அடிக்க நீண்ட நேரம் பிடிக்காது” என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். ஆனால் மறுநாள் இரவு நடந்தது? ஸாத் ஸித்தி முற்றும் எதிர்பாராதது நடந்தது. என்ன செய்வது ஏது செய்வதென்று அறியாமல் அவன் திக்கு முக்காடித் திகைத்துப் போகும்படியான நிகழ்ச்சி விளைந்தது.

Previous articleJala Deepam Part 1 Ch19 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 1 Ch21 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here