Home Historical Novel Jala Deepam Part 1 Ch22 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 1 Ch22 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

61
0
Jala Deepam part 1 Ch22 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 1 Ch22 | Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 1 Ch22 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 22 இசைத்தது குரல்! அசைத்தது மலர்!

Jala Deepam Part 1 Ch22 | Jala Deepam | TamilNovel.in

கண்கள் முன்பு காட்சியளித்த கைத்துப்பாக்கியின் குழல்வாயை வெறித்து அசைவற்றுப் பார்த்த ஸாத் ஸித்தியின் பெரு விழிகளில் சீற்றம் மிதமிஞ்சித் தெரிந்தது. பெருத்துத் தடித்திருந்த பயங்கர உதடுகள் மீசையுடன் மிகப் பயங்கரமாக ஒருமுறை அசைந்தன. முகவாய்க் கட்டையில் கத்தரித்து விடப்பட்டிருந்த குச்சுத் தாடிகூட முகவாய் அசைவில் சற்று எழுந்து நிலைத்தது. உதடுகள் அகன்றதால் புடைத்த கன்னக் கதுப்புக்கள் கசாப்புக் கடை மாமிசத் துண்டங்களைப் போல ரத்தச் சிவப்புப் பெற்றன. அசையாத நிலையிலும் இறுகிவிட்ட அவன் உடல் எந்த விநாடியிலும் செயலுக்குத் தயாராயிருந்தது. அவன் அங்க லட்சணங்களை. இறுகிவிட்ட இரும்புக் கைகால்களை, நிமிர்ந்துவிட்ட உடற்கூற்றை இதயசந்திரனும் கண்டு விட்டானாகையால், அவன் எச்சரிக்கைக் குரல் மிகப் பயங்கரமாக ஒலித்தது ஸித்தியின் வலது காதுக்கருகில். ”இம்மியளவும் அசைய வேண்டாம். அசைந்தால் அஞ்சன்வேல் கோட்டைக்கு வேறு தலைவனைத் தேடவேண்டியிருக்கும். நாலைந்து பேரைச் சுடுவதற்கு வேண்டிய சரக்கு துப்பாக்கிக்குள் இருக்கிறது. கிளம்பும்போதே துப்பாக்கிக் குதிரையையும் இழுத்துத் தயார் செய்து கொண்டுதான் வந்தேன். என் கட்டைவிரல் அசைந்தால் உங்கள் உயிர் உடல் பந்தத்தை உடனடியாக அறுத்துக் கொள்ளும்” என்று கூறினான்.

ஸாத் ஸித்தி பதிலேதும் கூறாமல் இதயசந்திரனின் கைத்துப்பாக்கிக் குழலிலிருந்து கண்களைச் சற்றுப் புரட்டி எதிரேயிருந்த மஹாலின் வாயிற்படியைக் கவனித்தான். அறைக் கதவு நன்றாகச் சாத்தியிருந்தது. இதய சந்திரனைத் தான் அழைத்து வந்தபோது அவன் தனக்குப் பின்னால் மிக மரியாதையாகக் கதவைச் சாத்தியதன் காரணம் நன்றாக ஸாத் ஸித்திக்குப் புரிந்ததால், ”மிகுந்த முன் யோசனையுடன் வேலை நடந்திருக்கிறது” என்று சிலாகிக்கவே செய்தான்.

அத்தனை அபாயமான நிலையிலும் அச்சத்தை அணுவளவும் காட்டாமல் அஞ்சன்வேல் தலைவன் தன்னைப் பாராட்டுவதைப் பார்த்த இதயசந்திரன் உள்ளூர அவன் துணிவை வியந்து கொண்டான். ‘சிங்கத்தின் குகைக்குள் முன்யோசனையில்லாமல் வருவது விவேகமாகுமா?” என்று இதயசந்திரனும் வைரியைப் பாராட்டி விட்டு மஞ்சத்தைவிட்டு எழுந்திருந்து கைத்துப்பாக்கியை ஸித்தியின் முகத்துக்குக் குறிவைத்த வண்ணம் மெல்லப் பின்னடைந்து சாத்தியிருந்த கதவைத் தாழிடவும் செய்தான். பிறகு கைத்துப்பாக்கியைக் கச்சையில் செருகிக்கொண்டு கதவில் சாய்ந்து எதிரே மஞ்சத்திலிருந்த ஸாத் ஸித்தியை நோக்கிய வண்ணம் கூறினான்: ”அஞ்சன் வேல் தலைவரே? என் வார்த்தையை நிலைநிறுத்துவதற்காக இவ்விடம் வந்தேன், உம்மிடம் சொன்னபடி நான் கனோஜி ஆங்கரேயைச் சந்திக்கவுமில்லை. எச்சரிக்கவுமில்லை. சுவாமியிடமும் பேசவில்லை. சந்தித்தது ஷாஹுவின் மருமகளை மட்டும்தான். அவளுக்கும் நான் இங்கு வரப்போவது தெரியுமேயொழிய, என் மனப் பாங்கு இன்னதென்று தெரியாது. உங்களிடம் கனோஜியைக் காட்டிக் கொடுக்கச் சொன்னாள். அதைச் செய்யும் உத்தேசம் எனக்கில்லை.” இதைச் சொன்ன இதயசந்திரன் ஸாத் ஸித்தியை விட்டுக் கண்களை அகற்றாமலும் சொற்களில் அவசியமான அளவுக்கு மட்டும் ஒலியிருக்கும்படியாகவும் பேசினான்.

சொற்களில் ஒலி குறைந்து உறுதி மிகுந்திருந்ததை ஸாத் ஸித்தியும் கண்டான். ஆனால் ஸாத் ஸித்தி அதைப் பற்றிச் சிறிதும் பதட்டப்படவோ சினத்தால் சொற்களை உதிர்க்கவோ இல்லை. ”கனோஜிக்கு உதவ உத்தேசிக்கிறாயா?” என்ற கேள்வியை வீசினான் ஸாத் ஸித்தி சர்வ சாதாரணமாக.

“உதவவும் போவதில்லை.” திட்டமாக வந்தது இதயசந்திரன் பதில்.

“கனோஜியைக் காட்டிக் கொடுக்கவும் இஷ்டமில்லை. அவருக்கு உதவவும் இஷ்டமில்லை. வேறென்ன செய்ய உத்தேசம்?” என்று மீண்டும் கேட்டான் ஸாத் ஸித்தி.

“இங்கிருந்து சென்றுவிட உத்தேசம்?” ”எந்த இடத்திற்கு?”

“குறிப்பாக எந்த இடமும் இல்லை. அரசியல் சூழ்ச்சி களும் போர்களும் நிறைந்த இந்த இடத்திலிருந்து வெளி யேறி, தனியே என் அலுவலைத் தொடர்ந்து கவனிக்கப் போகிறேன். கனோஜியிடமோ உங்களிடமோ பணிபுரிய இஷ்டமில்லை எனக்கு. எனக்கும் மகாராஷ்டிரப் போர்களுக்கும் ஒரே ஒரு தொடர்புதான். அந்தத் தொடர்பின் மூலகாரணம் தஞ்சையிலிருக்கும் ஓர் அனாதை ராணி. அந்தப் பெருமாட்டியின் துயர் துடைக்க வந்திருக்கிறேன். அவள் கொடுத்த புலி நகப் பதக்கமிருந்தால் மகாராஷ்டிரத்தில் உதவி கிடைக்கும். ஆனால் அதுவும் என் வசமில்லை இப்போது. இப்பொழுதிருப்பதெல்லாம் இந்த வாளும் கைத்துப்பாக்கியும் தான். இவை துணை போதும் எனக்கு. இவற்றின் துணை கொண்டு என் பணிமீது செல்கின்றேன்.”
ஸாத் ஸித்தி இதயசந்திரனைக் கூர்ந்து நோக்கினான் பல வினாடிகள். பிறகு இடியிடியெனப் பெரிதாக நகைத்து விட்டுக் கூறினான்: ”தமிழா! உன்னைவிடப் பெரிய முட்டாளை நான் கண்டதில்லை. கொங்கணியின் கடற்பகுதியில் நீ நாடி வந்தவனைத் தேட முயல்கிறாய். அந்தப் பகுதியில் கனோஜியின் கண்களில் படாமல் எறும்புகூட அசைய முடியாது. பிரிட்டிஷ் போர்ச்சுக்கீசிய ஒற்றர்களே அவர் கண்களிலிருந்து தப்பமுடிவதில்லை. மொகலாய ஒற்றர்களுக்கு அவர் எப்பொழுது தரைக்கு வருகிறார் எப்பொழுது கடலுக்குச் செல்கிறார் என்பது புரியவில்லை. பாம்பின் கால் பாம்பறியும் என்ற பழமொழிகூட அவர் விஷயத்தில் பொய்த்துவிட்டது. அவரைப் பிடிக்க மகா ராஷ்டிர மன்னன் ஷாஹு செய்து வரும் முயற்சிகள் எதுவும் இன்றுவரை கைகூடவில்லை. அப்பேர்ப்பட்ட வரிடமிருந்தா நீ தப்பிவிடப் போகிறாய்!” என்று மிக இகழ்ச்சியுடன் சொற்களைக் கொட்டினான் ஸாத் ஸித்தி.

ஸாத் ஸித்தியின் சொற்கள் இதயசந்திரன் இதயத் தைக்கூட ஓர் அசக்கு அசக்கியது கனோஜி ஆங்கரேயிடம் அவன் வைத்திருந்த மதிப்பைக் கண்ட தமிழக வீரன் பெரிதும் பிரமித்துப் போனான். மேலும் ஸாத் ஸித்தியின் மனத்தை அறிய, “கனோஜி ஆங்கரேயின். கண்கள் சர்வேசுவரன் கண்களா?” என்று வினவினான்.

“அதில் சந்தேகம் வேண்டாம் தமிழா! ஆண்டவனை நான் கண்டதில்லை ஆனால் ஆங்கரேயைக் கண்டிருக்கிறேன். கொங்கணியின் கடற்கரை முக்கால்வாசி மலைக் கரை. நூற்றுக்கணக்கான நதிகளும் அருவிகளும் ஓடைகளும் மலைகளைக் குடைந்து கடலில் பிரவேசிப்பதால் நீரோடிக் குகைகளும் காடுகளும் புதர்களும் கொங்கணியில் உண்டு ஆனால் அத்தனை குகைகளும் புதர்களும் காடுகளும் ஆங்கரேயிடமிருந்து உனக்குப் பாதுகாப்பளிக்கா. ஆங்கரே உன்னைப் பிடிக்க இஷ்டப்பட்டால் அவர் கையிலிருந்து தப்பமுடியாது’ என்று திட்டவட்டமாக அறிவித் தான் ஸாத் ஸித்தி

கனோஜி ஆங்கரே திறமையான மாலுமி! பெருவீரர் என்பதையெல்லாம் இதயசந்திரன் கேள்விப்பட்டிருந் தாலும், நூற்றுக்கணக்கான குகைகளையும் நதிகளையும் அவர் சதா கவனித்துக் கொள்வாரென்பது வீண் பிரமை என்று எண்ணியதால், ”அஞ்சன்வேல் தலைவரே! அப்படி என்னைப் பிடிக்க முடிந்தால் கனோஜி பிடிக்கட்டும். ஆனால் நான் இந்த மகாராஷ்டிரப் போட்டியிலிருந்தும் உங்களுக்குள்ளிருக்கும் பூசலிலிருந்தும் விலகிச்செல்ல முடிவு செய்து விட்டேன்” என்று கூறியதன்றிச் செயலிலும்

இசைத்தது குரல்! அசைத்தது மலர்! இறங்க முற்பட்டு, “தலைவரே! இப்பொழுது இந்தக் கதவைத் திறந்துகொண்டு வெளியேறுகிறேன். நான் கதவைத் திறந்ததும் நீர் கூவ முற்பட்டாலும் சரி; அசைய முற்பட்டாலும் சரி, திரும்பிச் சுடத்தவற மாட்டேன். ஒரு சிறந்த வீரனை அழிக்க எனக்கு இஷ்டமில்லை. அழிக்கும் அவசியத்தை நீங்கள் ஏற்படுத்த மாட்டீர்களென்று நினைக்கிறேன்’ என்று கூறிவிட்டுக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்து கதவை ஓசைப்படாமல் சாத்தினான். பிறகு கைத்துப்பாக்கியைக் கச்சையில் செருகிக்கொண்டு சற்று எட்ட நின்றிருந்த அபிஸீனியக் காவலரில் ஒருவனை விளித்து, ”அவசர வேலையாகத் தலைவர் அனுப்பியிருக்கிறார் என்னை. நான் திரும்பும் வரையில் யாரும் அவரைத் தொந்தரவு செய்யாதிருக்கக் கட்டளையிட்டிருக்கிறார்” என்று எச்சரித்து விட்டு விடுவிடு என நடந்து வாயிலில் வந்து புரவியில் தாவியேறி அதை ஸாத் ஸித்தியின் மாளிகையின் பின்புற வாயிலாக வெகு வேகமாகச் செலுத்தினான்.

ஸாத் ஸித்தியின் காவலர் யாரும் அவனைத் தடை செய்யவோ தொடரலோ முடியவில்லை. ஸாத் ஸித்தியின் உத்தரவுப்படி அவன் வந்து சென்றதாலும் ஸாத் ஸித்தியின் கட்டளையை நிறைவேற்றச் செல்லுவதாக அவன் அறை முகப்புக் காவலனிடம் இரைந்து அறிவித்திருந்ததாலும், அவனைத் தடை செய்யாதது மட்டுமின்றி அவன் புரவியின் சேணத்தை முகப்பு மண்டபத் தூணிலிருந்து அவிழ்த்துக் கொடுக்கவும் செய்தனர்.

ஆனால் அவன் புரவியேறிய மறுவினாடி ஸாத் ஸித்தியின் மாளிகை அமர்க்களப்பட்டது. ஸாத் ஸித்தி ஒரே பாய்ச்சலாக மஞ்சத்திலிருந்து பாய்ந்து, மஹாலின் கதவைத் தடதடவெனத் தட்டித் திறக்க வைத்து வெளியே ஓடி வருவதற்கும் மாளிகைப் பின்புறப் பாதையில் இதயசந்திரன் புரவி பாய்ந்து இறங்குவதற்கும் நேரம் சரியாயிருந்தது.

முதல் ஜாமம் அப்பொழுது முடியும் தருவாயிலிருந்தாலும் பரசுராமன் சன்னிதி வீதிக் கடைகளில் வாணிபக் கூச்சலும் மற்ற இடங்களில் வேறு பேச்சொலிகளும், மக்கள் நடமாடும் அரவமும் நிரம்பிக் கிடந்தன. ஆனால் படகுத் துறையை நோக்கி வளைந்து வளைந்து சென்ற அந்த மலைப் பாதையில் மட்டும் மனித நடமாட்டம் இல்லாமலிருந்தது. பாதையின் இருபுறங்களிலும் இடம் விட்டுவிட்டு வளர்ந்திருந்த பெரும் புதர்களிலிருந்த பட்சிகள், அணில்கள் இவற்றின் சத்தமும் வாசிஷ்டி நதியின் பிரவாக சப்தமும் அலையோசையும் தவிர, வேறெந்த சத்தமும் அங்கில்லை. வாசிஷ்டியின் பல இடங்களில் தீபங்கள் எரிந்து கொண்டிருந்ததால், கரை யோரத்தில் மட்டும் வெளிச்சமிருந்தது. இடையே பேரிருட்டும் இருந்ததை நோக்கிய இதயசந்திரன், அந்த இருட்டை நோக்கி வெகு வேகமாகப் புரவியைச் செலுத்தினான். அவன் புரவி இருட்டடித்த இடத்தை எட்டுவதற்கு முன்பாகவே ஸாத் ஸித்தியின் அபிஸீனிய வீரர்கள் அவனைத் தொடர்ந்து வந்தனர். அவர்கள் புரவிகளின் காலடிகள் மலைச்சரிவில் தடதடவெனச் சப்தித்தன. காலடிகளில் இடறி உருண்ட கற்குழவிகள் சரிவில் தாண்டித் தாண்டி எழுந்து படீர் படீரெனத் தூரத்தில் ஓசையுடன் விழுந்தன. இதயசந்திரனுக்கு. மலைச் சவாரி அத்தனை பழக்கமில்லாவிட்டாலும் அவன் கூடியவரை எச்சரிக்கையுடனும் வேகத்துடனும் புரவியைச் செலுத்தினான். ஓரிரு முறை திரும்பிப் பார்த்தபோது அபிஸீனிய வீரர்கள் இருட்டில் பெரும் பிசாசுகளைப் போல் வந்து கொண்டிருந்ததையும் அவர்கள் வேகம் கிட்டத்தட்ட தன் புரவியின் வேகத்தளவே இருந்ததையும் கவனித்தான். மகாராஷ்டிரர்களைத் தவிர மற்றவர்களுக்கு அதிக வேகமாக மலைச்சவாரி சாத்தியமில்லை யென்பதைப் புரிந்து கொண்டதால் சிறிது மன நிம்மதி யுடன் புரவியை நடத்தினான்.

அந்த’ மலைப்பாதை சில இடங்களில் மிகுந்த சரிவுடனும் பெரும் குத்துக் கற்களுடனுமிருந்தது. சில இடங்களில் புதர்கள் அதிகமாக வளர்ந்துவிட்ட தால் பாதையை அணுகிக் கொண்டிருந்தன. ஓரோர் இடத்தில் மரக்கூட்டமொன்றும் பாதையை அணைத்து நின்றது. அந்தத் திக்கை நோக்கிப் புரவியைச் செலுத்திய இதய சந்திரன் மரக் கூட்டத்தில் புகுந்துவிடத் திருப்பினான் புரவியை. ஆனால் மரக்கூட்டத்தின் கிளைகள் மிகத் தாழ இருந்ததால் புரவியில் அமர்ந்தவண்ணம் உள்ளே நுழைய முடியவில்லை. அவனால்.உட்சென்ற புரவியைச் சட்டென்று பின்னுக்கிழுத்து மறுபடியும் பாதைக்குக் கொணர்ந்தான். இந்தச் சிறு அவகாசத்தைப் பயன்படுத்திக் கொண்ட ஸித்தியின் வீரர்கள் அவனை அணுகி விட்டதால் இரு பெரும் வாள்கள் அவன் கழுத்தை நோக்கிப் பின்புறத்தில் நெருங்கின. சட்டென்று புரவியைத் திருப்பிய இதயசந்திரன் கையில் இடைக் கச்சையிலிருந்த அவன் வாள் பளிச்சிட்டது. மகாராஷ்டிரர் வாள்கள் போல வளைந்திருந்த அந்த வாள் கண்ணிமைக்கும் நேரத்தில் இரு வாள்களைத் தடுத்ததன்றி. மீண்டும் ஒரு முறை பின்னுக்குச் சென்று திரும்பி ஒரு காவலன் கையிலும் பாய்ந்து மீண்டது. சண்டை துவங்கி நாலைந்து வினாடிகளுக்குள் இரு அபிஸீனிய வீரர்களின் கைகளில் தமிழன் வாள் பாய்ந்துவிட்ட தன்றி அவன் கையிலும் இரண்டு மூன்று கீறல்களால் ரத்தம் லேசாகத் துளிர்த்திருந்தது. ஆழ்ந்த காயத்தையும் லட்சியம் செய்யாமல் ஒழுகிய ரத்தத்துடன் அவர்கள் தன்னை மீண்டும் மீண்டும் சுற்றிக் கொண்டதைக் கண்ட இதயசந்திரன், அவர்களிடம் கைத்துப்பாக்கிகளிருந்தும் அவர்கள் அவற்றை உபயோகிக்காததைக் கவனித்தான். கைத் துப்பாக்கி சத்தத்தால் பரசுராம பட்டணவாசிகளையோ, ஆசிரமவாசிகளையோ எழுப்பக் கூடாதென்ற உத்தேசத் தில் அபிஸீனியர் போரிடுவதை உணர்ந்த இதயசந்திரன் அதுவரையில் தனக்குப் பாதுகாப்பு என்பதை அறிந்தான்.

அத்தகைய பாதுகாப்பு இருப்பினும் அதிக நேரம் போராட இஷ்டப்படாத அவன் தன் புரவியைக் காலால் விலாவில் ஓங்கி உதைத்துச் சரேலென்று முன்னுக்குச் செலுத்தி அபிஸீனியரை ஊடுருவிச் சென்று மீண்டும் திரும்பி மலைச்சரிவில் வெகு வேகமாக வந்தான். அவன் நோக்கத்தைப் புரிந்து கொண்ட புரவியும் காற்று வேகத்தில் சரிவிலிறங்கி அபிஸீனிய வீரர்களின் அணிக்குள் பாய்ந்தது. அது பாய்ந்த வேகத்தாலும் இதயசந்திரன் வாள்முனையி லிருந்து தப்பி, பக்கவாட்டில் தாக்க முனைந்த அபிஸீனியரின் புரவிகள் சற்று விலகியதாலும் அவர்களைத் தாண்டிச் சரிவில் பறந்து விட்ட இதயசந்திரனின் புரவி பாதையில் தடதடவென்ற ஒலி கிளப்பிக்கொண்டு வெகு வேகமாகச் சென்றது.

இதயசந்திரன் இஷ்டப்படி புரவியை ஓடவிட்டான் பாதையில். புதர்களையும் கற்களையும் தாண்டிப் பாய்ந்து சென்றது புரவி படகுத்துறை நோக்கி. இடையே மற்றொரு பகுதியில் குறுக்கிட்ட ஒரு மரக்கூட்டத்தில் திடீரெனத் திரும்பிக் குறுக்கு வழியில் ஓட ஆரம்பித்தது. குறுக்கு வழி புரவி பாதையல்ல. சாதாரணமாகக் கால் நடையாகச் செல்லும் வேடர்கள் செல்லும் ஒற்றையடிப் பாதை அந்த செப்பனிடாத வழியில் மரக்கூட்டங்களின் நடுவில் சென்றுவிட்ட புரவியிலிருந்து திடீரெனக் கீழே குதித்த இதயசந்திரன் புரவியை மட்டும் ஓடவிட்டான் அந்தப் பாதையில் பிறகு, பக்கத்திலிருந்த மரத்தின் மேலேறி அதன் பெருங்கிளையொன்றில் அடர்ந்த இலைகளுக்கு மத்தியில் பதுங்கிப்படுத்துக் கொண்டான்.

துரத்தி வந்த காவலர் மரக் கூட்டத்துக்குள் புகுந்து வெகு வேகமாகத் தாண்டிச் சென்றனர். மரக் கூட்டத்தின் மறைவைத் தாண்டியதும் புரவி வெகு தூரத்தில் தனித்து ஓடுவதைக் கண்டு மீண்டும் திரும்பி, தோப்புக்குள் வந்து தோப்புப் புறத்தையும் புதர்களையும் ஆராய்ந்தும் பலனில்லாததால் அந்த மரத்தின் கீழ் நின்ற ஓர் அபிஸீனியன் மற்றவர்களைப் பார்த்துச் சொன்னான்: “எப்படியும்

அவன் படகுத் துறைக்கு வருவான். அங்கு வாருங்கள்.” என்று. அடுத்த வினாடி காவலர் படகுத்துறை நோக்கிப் பறந்தனர்.

அபிஸீனியர் புரவிக் காலடிகள் சற்று மட்டுப்பட்டதும் மரத்திலிருந்து இறங்கிய இதயசந்திரன் மீண்டும் பாதைக்கு வந்து திரும்பி, புதர்ப் பகுதிகளில் மறைந்து மறைந்து ஸாத் ஸித்தியின் மாளிகைப் பக்கம் சென்றான். மாளிகையின் பின்புற வாயிலுக்குப் பல அடிகள் முன்பாகவே இருந்த புதரொன்றில் மறைந்து மண்டியிட்டு உட்கார்ந்து கனோஜி ஆங்கரேயின் வரவை எதிர்பார்த் திருந்தான். நடுநிசி ஆகியும் ஆங்கரே வரவில்லை. நடுநிசி துவங்கிச் சிறிது நேரத்திற்கெல்லாம் இதயசந்திரன் பாதையில் இறங்காமல் வேறு திசை வழியே காட்டுப் பகுதியில் நுழைந்து வாசிஷ்டி நதியை நோக்கி மெல்ல மெல்ல இறங்கிச் சென்றான். அரைகாத தூரம் பதுங்கிப் பதுங்கி நடந்து நதி மலையில் மோதிய பாறையொன்றின் அருகில் வந்து பாறையளித்த மறைவில் மண்டியிட்டு உட்கார்ந்து கொண்டான்.

”உட்கார்ந்த ஒரு நாழிகைக்குப் பிறகு அந்தப் பாறையை நோக்கி வந்தது ஓர் உருவம். இதயசந்திரன் உட்கார்ந்திருந்த பாறை இருட்டில் வந்து அதுவும் அவனுக்கருகில் பதுங்கிக் கொண்டது. “இதுதான் சமயம். நிலவு வந்துவிட்டால் தப்புவது கஷ்டம்!” என்று அவனைத் தொட்டுக் கூறவும் செய்தது அவன் முகத்தைத் தொங்கப் போட்டு உட்கார்ந்திருந்தான்.

”எழுந்திருங்கள்” என்று தூண்டியது அந்தக்கரம்.

“எதற்கு!” குரலை மாற்றிக்கொண்டு கேட்டான் தமிழன்.

”ஜலதீபம் தயார்’ என்றது தரல். அந்த உருவத்தின் கை அவன் கையின் மேல்பாகத்தை அழுத்திக் கொடுத்தது. இசைத்தது குரல். அவன் கையை அசைத்தது மலர்.

Previous articleJala Deepam Part 1 Ch21 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 1 Ch23 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here