Home Historical Novel Jala Deepam Part 1 Ch23 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 1 Ch23 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

61
0
Jala Deepam part 1 Ch23 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 1 Ch23 | Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 1 Ch23 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 23 பேச்சில் வந்த ஆபத்து

Jala Deepam Part 1 Ch23 | Jala Deepam | TamilNovel.in

பாறைக்கு அப்புறம் வாசிஷ்டியின் அலைகள் மோதிப் பளக் பளக்கென்று தாளம் போட, பாறைக்கு இப்புறம்படு இருட்டு பரந்து கவிழ்ந்திருந்த சூழ்நிலையில் இன்பக் குரலொன்று இசைக்க, நதியின் நீர்ப் பரப்புக்கு மேல் வீசிய காற்று ‘அம்’ என்று தொடர்ந்து சுருதி கூட்ட, தன் கையை ஒரு மலர்க்கரம் பிடித்து அழுத்தியபோது. செய்வதென்னவென்றறியாமல் ஒரு விநாடி திகைத்தான் இதயசந்திரன். தன் பக்கத்தில் இருட்டில் வந்தமர்ந்து கொண்டது ஒரு பெண்ணென்பது அவனுக்கு நன்றாகப் புரிந்திருந்தாலும் அவள் வேறு யாரையோ எதிர்பார்த்து அங்கு வந்திருக்கிறாளென்பதையும் பாறை மறைவிலிருந்து எழுந்துவிட்டால் தன் குட்டு அம்பலமாகி விடுமென்பதையும் உணர்ந்து கொண்ட இதயசந்திரன். “நீ முன்னால் போ! நான் வருகிறேன்.” என்று கூறினான் மிக மெதுவாகக் குரலை மாற்றி. என்ன தான் குரலை மாற்றினாலும் வந்த பெண் எதிர்பார்த்த குரலாக அது இருக்க முடியாதாகையால் அந்தப் பெண் கண்டிப்பாகத் தன்னைச் சந்தேகிப்பாளென்பதும், எந்த விநாடியிலும் அவளுடைய அதிர்ச்சியையும் ஆவேசத்தையும் தான் அனுபவிக்க வேண்டியிருக்குமென்பதும் தெரிந்திருந்தாலும் வேறு வழியின்றிப் பதிலைச் சொன்னான் தமிழகத்தின் வாலிபன். ஆனால் அந்தப் பெண் அவன் குரலைக் கவனித்ததாகத் தெரியவில்லை. அவன் சொற்படி பாறையின் மறைவிலிருந்து எழுந்து பாறையைச் சுற்றி வளைத்துச் சென்றாள். இதய சந்திரனும் எழுந்திருந்து அவளை மெல்லத் தொடர்ந்து சென்றான். அந்தப் பாறையிலிருந்த பகுதியில் பரசுராம பட்டணத்தின் தீப ஸ்தம்பத்தின் ஜோதிகூட விழாவிட்டாலும், பாறையின் சூழ்நிலைகூட இருண்டு கிடந்தாலும் பாறையின் மறைவிலிருந்த மையிருட்டு வெளியே இல்லாததால் எதிரே சென்ற பெண்ணைக் காண முடிந்தது அந்த வாலிப வீரனால்.

அந்தப் பெண் பானுதேவியைவிட வயதில் சிறியவளாயிருக்க வேண்டுமென்று அவள் தோற்றத்திலிருந்தே ஊகித்த இதயசந்திரன், கொங்கணிப் பெண்களுக்கு இயற்கையாக அமையும் அங்க லாவண்யங்கள் அந்தப் பெண்ணுக்கும் அமைந்திருந்ததைக் கவனித்தான். மெல்லிய அவள் தேகம் வளைய வேண்டிய இடங்களில் நன்றாக வளைந்திருந்ததால் எழுச்சியடைந்த இடங்களும் நன்றாக எழுச்சியடைந்ததைக் கண்ட இதயசந்திரன், அவள் திட்டமான நடையிலிருந்து அந்த மெல்லிய தேகத்தில் உறுதி அதிகமென்பதைப் புரிந்து கொண்டான். மலைப் பகுதியின் முரட்டுக் கற்கள் மீது பாதரட்சையற்ற அவள் பாதங்கள் அலட்சியமாக நடந்ததைப் பார்த்த இதய சந்திரன், அந்த மலைப் பகுதிக்கு அவள் புதிதல்லவென்பதையும் புரிந்து கொண்டான். முரட்டுக் கற்கள் மீது பாவிப் பாவி நடந்து சென்ற கால்கள் உடலின் மேல் பகுதி களை அசைத்து அசைத்து, பல இடங்களை ஏற்றி இறக்கவே, அவள் ஏதோ நடனம் செய்து கொண்டு செல்வது போலிருந்ததே யொழிய ஆபத்துக் காலத்தில் தப்பும் வசதி நோக்கித் துரிதப்பட்டுச் செல்வதாகத் தோன்றாதிருக்கவே அவள் அழகோடு மிகுந்த நிதானமும். துணிவும் கலந்திருக்கிறதென்பதைப் புரிந்து கொள்வது ஒரு பிரமாதமாயில்லை இதயசந்திரனுக்கு. அவள் அழகிய கழுத்துக்கு மேலிருந்த தலையில் அவள் சின்னஞ்சிறு துணியைக் குறுக்கே சுற்றிக் குழல்கள் காற்றில் பறக்காமல் முடிந்திருந்தாள். அரபு மாலுமிகள் கட்டும் அந்தக் கட்டைக் கண்ட இதயசந்திரன் அவள் யாரோ மாலுமியின் பெண்ணாக இருக்க வேண்டுமென்று ஊகித்தான். அவன் ஊகம் சரியென்று நிரூபணமாவதற்கு வேண்டிய நிகழ்ச்சிகள் அடுத்த சில விநாடிகளுக்குள் ஏற்பட்டன.

பாறை மறைவிலிருந்து எழுந்த அந்தப் பாவை வாசிஷ்டி நதியின் கரையோரமாக இருந்த கரடு முரடான பாதையில் இருபது முப்பது அடி தூரம் நடந்ததும் பாறகளுக்கருகே நதி புகுந்ததால் பிளவு விட்டு மணல் அடித்திருந்த ஒரு பகுதிக்குள் இறங்கினாள். அங்கிருந்த தளையொன்றில் இரு பக்கமும் இருந்த பாறைகளின் நடுவில் கட்டப்பட்டிருந்த சிறு படகொன்றை அணுகியதும் திரும்பி இதயசந்திரனை நோக்கிப் படகில் ஏறிக்கொள்ளும்படி சைகை செய்தாள். அவள் திரும்பிப் பார்த்ததுமே தனது நிலை விபரீதமாகி விடுமென்று நினைத்த இதய சந்திரன் சட்டென்று நின்ற, இடத்தில் நின்றான். கவலையும் குழப்பமும் நிரம்பிய கண்களால் அவளை நன்றாக நோக்கினான். அவளும் அவனை ஏறெடுத்து நோக்கினாளானாலும் அவள் முகத்தில் எந்தவித மாறு தலும் இல்லாதிருந்ததே வியப்பாயிருந்தது வாலிபனுக்கு. அவள் தன்னை நோக்கி, ”உம், நேரமாகிறது. இன்னும் சில விநாடிகளில் நிலவு புறப்பட்டுவிடும்,” என்று சர்வ சாதாரணமாக எச்சரித்தது அவன் வியப்பை உச்சிக்குக் கொண்டு சென்றது.

அவன் நாலைந்து அடிகளில் வேகமாக அவள்’ நின்றிருந்த இடத்தை அணுகினான். “நான் யாரென்பது தெரியுமா உனக்கு?” என்று வினவவும் செய்தான்.

அவள் பதில் தயக்கமின்றி வந்தது. ”தெரிய வேண்டிய அவசியமில்லை” என்றாள் அவள். இதைச் சொன்ன அவள் இதழ்களில் அலட்சிய சிரிப்பு தவழ்ந்து கிடந்தது. இதழ்களின் அழகை அந்தச் சிரிப்புப் பன்மடங்கு அதிகப்படுத்திக் காட்டியது. அப்படிச் சிரித்தபோது அவள் பெருங்கண்களும் நகைத்ததாகத் தோன்றியது இதயசந்திரனுக்கு. காட்டுப் புஷ்பம் போல் செழித்து ஒளிவிட்ட கன்னங்களுக்கு உவமை சொல்ல யாராலும் முடியாதென்று நினைத்தான் தமிழன். அவள் அரபு மாலுமிகள் உடையை அணிந்திருந்ததால் காலில் போட்டிருந்த சராய் முழங்காலை விட்டுச் சற்றே இறங்கிப் பிடித்திருந்ததன் விளைவாக அவள் கால்களின் ஆடு சதையை ஆற்றின் அலைகள் அவ்வப்போது அடித்து நனைத்திருந்ததைக் கண்ட இதயசந்திரன் தன் புத்தி பெரிதும் சபலிப்பதை நினைத்து வியந்தான். முன் இரவில் பானுதேவியிடம் லயித்த தன் மனம் அந்த மாலுமிப் பெண்ணிடம் பாய்வதை நினைத்து, ‘இது என் பலவீனமா அல்லது கொங்கணிப் பெண்களின் இணையிலா வசீகர சக்தியா?’ என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டான். அவள் இருந்த தோரணையிலிருந்து, அவள் அணிந்திருந்த உடையிலிருந்து, அவள் எந்த இனத்தவள் என்பது விளங்காதிருக்கவே, ”பெண்ணே, நீ யார்? உன் பெயர் என்ன?” என்று வினவினான்.

அவள் அவனை விநோதமாக உற்று நோக்கினாள். “என் முகத்தை ரசிக்க, என் கால்களைக் கண்டு பல்லையிளிக்க, உங்களை அழைத்து வரவில்லை நான். என் பெயரைப் பற்றி நீங்கள் அறிய வேண்டிய அவசியமில்லை’ என்று கூறினாள் அவள் திடமான, உஷ்ணமான குரலில்.

”பெயரைக் கேட்கக் கூடாதா?” என்று வினவினான் இதயசந்திரனும் வியப்பு ஒலித்த குரலில்.

“உங்கள் பெயரை நான் கேட்டேனா?’ என்று வினவினாள் அவள்.

“இல்லை. கேட்கவில்லை.”

”நீங்கள் மட்டும் என் பெயரைக் கேட்பானேன்?”

”அதற்குக் காரணம் இருக்கிறது.”

“என்ன காரணம்?”

“நான் யாருடன் செல்கிறேன் என்பதை அறிய வேண்டும்.”

“இல்லாவிட்டால்?”

“உங்களுடன் வருவதோ வர மறுப்பதோ என் இஷ்ட ம்.”

அந்தப் பெண் முகத்திலிருந்த உஷ்ணம் மறைந்து மீண்டும் புன்முறுவல் விரிந்தது. ”உங்களிஷ்டம் இல்லையென்று நினைக்கிறேன்.”

“ஏன்?” என்று வினவினான் இதயசந்திரன்.

”கச்சையைப் பாருங்கள்” என்றாள் அந்தப் பெண்.

இதயசந்திரன் சட்டென்று தலைகுனிந்து தன் கச்சையை நோக்கினான். அதில் தனது கைத்துப்பாக்கி இல்லாதது அதிர்ச்சியைத் தந்தது அவனுக்கு. மறுவிநாடி அவன் தலை நிமிர்ந்தபோது அவன் கைத்துப்பாக்கி அந்தப் பெண்ணின் கையிலிருந்தது. அதன் வாய் அவனைப் பயங்கரமாக நோக்கிக் கொண்டிருந்தது.

அவள் அந்தக் கைத்துப்பாக்கியைத் தனது இடது கையில் தான் ஏந்தியிருந்தாள். ஆனால் அந்த இடதுகையும் கைத்துப்பாக்கியை ஏந்த வேண்டிய முறையில் ஏந்தியிருந்தது. அவள் ஆள்காட்டி விரல் அந்தக் கைத்துப்பாக்கியின் குதிரையில் திட்டமாகப் பதிந்திருந்தது. அந்தத் தோரணையிலிருந்தே இதயசந்திரன் புரிந்து கொண்டான் அவளால் அந்தக் கைத்துப்பாக்கியைப் பிரயோகிக்க முடியுமென்று. ஆனால் அவள் ஏன் இடதுகையில் அதை ஏந்தியிருக்கிறாள் என்றும் எண்ணினான் அவன்.

அவன் எண்ணத்தை அவள் புரிந்து கொண்டிருக்க வேண்டும். “பாறை மறைவில் உங்கள் கையை என் வலக்கையால் பிடித்திருந்ததால் கைத்துப்பாக்கியைக் கைப்பற்ற இடது கையை ஏவவேண்டியிருந்தது. ஏவிய கையே தொடர்ந்து செயல் புரியட்டும் என்று எண்ணினேன். இடது. கை என்பதற்காக அலட்சியம் செய்ய வேண்டாம். இரண்டு கையாலும் நான் சுட முடியும்” என்றாள் அவள் சர்வ சாதாரணமாக.

கைத்துப்பாக்கியை ஏந்தி நின்றது மட்டும் ஓர் ஆண் மகனாயிருந்தால் இதயசந்திரன் நடந்து கொண்டிருக்கக் கூடிய முறையே வேறு. அவள் பெண் என்பதாலும் தானும், ஸாத் ஸித்தியிடமிருந்தும் பானுதேவியிடமிருந்தும் தப்ப வேண்டியிருந்ததாலும், மேற்கொண்டு ஏதும் பேசாமல் படகில் ஏறிக் கொண்டான். அவன் ஏறிக் கொண்டதும் அவன் மீது ஒரு கண்ணை வைத்தவண்ணமே தளையிலிருந்து அவிழ்த்துப் படகைச் சிறிது தள்ளி தண்ணீர் முழங்காலுக்கு வந்ததும் தாவி அவளும் படகில் குதித்தாள். படகின் ஒரு கோடியில் சுக்கானிருந்த இடத்தில் உட்கார்ந்து கொண்டு, “இந்தாருங்கள்” என்று கைத்துப்பாக்கியை அவன் மடியில் வீசினாள். “அந்தத் துடுப்புகளை எடுத்து நதி ஓடும் திசையில் படகைத் திருப்பித் துழாவுங்கள்” என்றும் உத்தரவிட்டாள்.

கைத்துப்பாக்கியை எடுத்து மீண்டும் கச்சையில் செருகிக்கொண்ட இதயசந்திரன் துடுப்புகளைத் துழாவினான். அவன் துழாவிய முறையிலிருந்தே அவன் படகு செலுத்தத் தெரியாதவனென்பதைப் புரிந்து கொண்ட அந்தப் பெண், ”அந்தத் துடுப்பை வளையத்துக்குள் சுழற்றுங்கள். அதோ அந்தப் பக்கத்துத் துடுப்பு செயலற்றிருக்கட்டும்” என்று அவனுக்கு வழிகாட்டி, படகு கடல் நோக்கித் திரும்பியதும் சுக்கானால் அதை நட்டாற்றுக்குக் கொண்டு வந்தாள். பிறகு படகு ஆற்றுவேகத்தில் ஓடத் துவங்கியது. கடலின் எதிரலைகள் அன்று அதிகமாயிருந்ததால் நதிவேகம் கடலை நோக்கி அனுகூலமாக இருக்கவே படகு வெகு துரிதமாகச் சென்றது.

ஆற்றின் இருகரைகளிலுமிருந்த பரசுராமபுரமும் சிப்ளன் நகரமும் அந்த இரவில் இன்பக் காட்சியளித்தன. பரசுராமன் கோவில் கோபுரமும் அதனருகே எழுந்து நின்ற ஜோதி ஸ்தம்பமும் அந்த இரவில் வெகு ரமணியமாயிருந்தன. சில இடங்களில் காடுகளும் சில இடங்களில் புதர்களும் சில இடங்களில் பெரும் கறுப்புப் பாறைகளுமாகக் காட்சியளித்த பரசுராம மலையின் உக்ரத்தை சாந்தப்படுத்துவதுபோல் மலையின் அடிவாரத்தை நதியின் அலைகள் தொட்டுக் கொண்டிருந்தன. சிப்ளன் நகர உப்பளத் தொழிற்சாலையின் காரியாலயம் கம்பீரமாக நதியின் தென் புறத்தில் எழுந்து நின்றது. அந்த நகர விளக்குகள் நன்றாக எரிந்துகொண்டிருந்த போதிலும் அவை நதிப்புறத்தை எட்டாததைக் கவனித்த இதய சந்திரன் யாரும் அந்த நதியில் ரகசியமாகச் சஞ்சரிக்க முடியும் என்பதை உணர்ந்து கொண்டான். யாருமறியாமல் அந்தப் பெண் தன்னைப் படகில் ஏற்றிச் செல்ல முடிந்ததன் காரணம் அவனுக்குத் தெரிந்தது.

ஆனால் ‘இவள் யார்? யார் இவளை அனுப்பியது? நான் அந்தப் பாறையில் தான் மறைந்திருப்பேனென்பது இவளுக்கெப்படித் தெரியும்? என்னை எங்கு அழைத்துச் செல்கிறாள்?’ என்ற கேள்விகளுக்கு விடை காணாததால் இதயசந்திரன் பல கேள்விகளைக் கேட்க இஷ்டப்பட்டான். ஆனால் கேள்விகளுக்கு நேரடியான பதில் ஏதும் வரவில்லை. கிடைத்த பதில்களும் ஊகத்துக்கு எந்த இடத்தையும் அளிக்கவில்லை.

”பெண்ணே!” என்று துவங்கியதுமே அவள் வெட்டினாள் அவன் உரையாடலை. ”இனத்தைப் பற்றி என்ன இப்பொழுது?” என்ற சொற்களால்.

”பெண்ணே என்றழைக்காமல் எப்படி அழைப்பது உன்னை?” என்று வெறுப்புடன் கேட்டான் இதயசந்திரன்.

”அழைக்கவே அவசியமில்லை. ஆகையால் எப்படி அழைக்கவேண்டுமென்ற கேள்வியும் எழவில்லை” என்று வந்தது பதில்.

“நான் அந்தப் பாறையில் மறைந்திருப்பேனென்பது உனக்கெப்படித் தெரியும்?” என்று வினவினான் இதய சந்திரன்.
”எங்காவது ஓரிடத்தில் மறைந்து தானே ஆக வேண்டும்?’ என்றாள் அவள் நதிப்புறத்தை நோக்கி.

”உன்னை அனுப்பியது கனோஜி ஆங்கரேயா?” ”இருக்கலாம்.”

“சுவாமியா?”

”அப்படியுமிருக்கலாம்.”

இதைக் கேட்டதும் எரிச்சல் அதிகமாகவே, “ஸாத் ஸித்தியாகக்கூட இருக்கலாமோ?” என்று வினவினான் தமிழன்.

“ஏனிருக்கக்கூடாது?” என்று பதில் கேள்வி கேட்டாள் அவள்.

”இவர்கள் யாருமில்லையென்று நினைக்கிறேன் நான்” என்றான் அவன் குத்தலாக.

”நினைப்பதை யார் தடுத்தது?’ அவள் குரலில் ஏளனம் ஒலித்தது.

”உன்னை அனுப்பியது…” என்று ஏதோ சொல்லப் போன இதயசந்திரனை, “ஷாஹுவாயிருக்கலாம், தாராபாய் தேவியாயிருக்கலாம், பீஜபூர் நவாபாயிருக்கலாம்…” என்று இடைபுகுந்து நகைத்தாள் அவள்.

“இவர்கள் யாருமில்லை” என்ற இதயசந்திரன் குரல் கடுகடுத்தது.

“நல்லது.” அசட்டையுடன் வந்தது அவள் பதில்.

“உன்னை அனுப்பியது பானுதேவி’ என்று இதய சந்திரன் திட்டவட்டமாகக் கூறினான்.

இம்முறை அவள் பதில் சட்டென்று வரவில்லை. ஒரு விநாடி நிதானித்துவிட்டுக் கேட்டாள். “யாரது! பானுதேவியா?” என்று.

“ஆம்! பானுதேவி” என்றான் இதயசந்திரன் பெண் மனத்தை இன்னொரு பெண்ணைப் பற்றிப் பேசித்தான் அசைக்க முடியுமென்ற காரணத்தால்.

“அவள் உங்கள் காதலி போலிருக்கிறது” என்றாள் அவள். அவள் குரலில் ஏற்கனவே ஒலித்த அசட்டை மறைந்திருந்தது.

”ஆம்” என்றான் தமிழன்.

”அவள் அனுப்பவில்லை தூது. நான் எந்தப் பெண்ணின் தோழியுமல்ல” என்றாள் அவள்.

”இருக்கமுடியாது” என்றான் இதயசந்திரன் குரலில் சற்றே புகழ்ச்சியைக் காட்டி.

அவள் அவனை உற்று நோக்கினாள். ‘’என்ன அப்படித் திட்டமாகக் கூறுகிறீர்கள்?”

”உனக்குத்தான் தோழிகளிருப்பார்கள்.”

“நீங்கள் சொல்வது புரியவில்லை.”

”எனக்குப் புரிகிறது.”

”எது?”

“அழகு.”

“உம்.”

”கம்பீரம்.’’

”உம்…”

“துணிவு.”

”அப்படியா?”

“இத்தனைக் குணங்களும் தலைவிக்குத்தான் பொருந்தும். பணிப் பெண்ணுக்குப் பொருந்தாது” என்று பாராட்டினான் இதயசந்திரன்.

இதைக் கேட்ட அவள் சற்று லேசாகவே நகைத்தாள். “வீரரே! நீர் கெட்டிக்காரர்’ என்றும் கூறினாள் நகைப்புக்கிடையே.

”எதில் கெட்டிக்காரன்? சிறைப்படுவதிலா?”

“இல்லை. சிறைப்படுத்துவதில்”

“யாரை?”

“பெண்களை. அந்த வித்தை உங்களுக்கு நன்றாகத் தெரிகிறது.”

”எப்படித் தெரிகிறது?”

”நீங்கள் வீசும் சொல் வலையிலிருந்து.”

”ஆனால் ஒரு விலக்கும் இருக்கிறது.”

“என்ன சொல்கிறீர்கள்?”

என்று அவள் நகைத்து விட்டு நதியைப் பின்னோக்கிப் பார்த்தாள். திரும்பி அவனை நோக்கிய அவள் முகத்தில் கவலை தெரிந்தது. “என்ன முட்டாள் தனம்?” என்ற சொற்கள் அவளிடமிருந்து கிளம்பின. “என்ன சொல்கிறாய்?”

அவள் அப்பொழுது அவனை நோக்கி உட்கார்ந்திருந் தாள். அவள் கை சுக்கானைப் பிடித்துக் கொண்டிருந்தது. சீறும் சொற்கள் அவள் உதடுகளிலிருந்து வந்தன. “எனக்குப் பின்னால் பாருங்கள்” என்றாள் அவள் கோபம் துளிர்த்த குரலில்.

இதயசந்திரன் அவளுக்கு அப்பாலிருந்த நதிப்புறத்தை நோக்கினான். நான்கு படகுகள் அந்தப் படகை நோக்கி வெகு துரிதமாக வந்து கொண்டிருந்தன. அதைக் கண்ட அவன் ஏதோ கேட்க முற்பட்டான். “அனாவசியமாகப் பேசாதீர்கள். உங்கள் நச்சுப் பேச்சினால் தான் நான் பரசுராமபுரத்தின் படகுத் துறையைக் கவனிக்காமலிருந்து விட்டேன். இப்படி வாருங்கள்’ என்று தானிருந்த இடத்துக்கு அவனை வரச் சொல்லி வெகு லாகவமாக அவனிருந்த இடத்துக்குத் தான் சென்று துடுப்புகளை எடுத்துக் கொண்டாள். “சுக்கானை சிறிது இடதுபுறம் திருப்பிப் பிடியுங்கள்’ என்று உத்தரவிட்டு, படகின் போக்கை நதியின் பிரவாகம் அதிகமாயிருந்த இடத்துக்குத் திருப்பினாள். துடுப்புகளை வெகு வேகமாக, வெகு அனாயாசமாகத் துழாவினாள்.

படகின் திருப்பத்தைக் கண்ட மற்றப் படகுகளும் சற்றுத் திரும்பி நீரோட்டம் அதிகரித்திருந்த இடத்தை அடைந்தன. அந்தப் படகிலிருந்த வீரர்களில் இருவர் எழுந்து இதயசந்திரனை நோக்கிக் கைத்துப்பாக்கியால் சுடவும் செய்தார்கள். அந்தப் பெண் படகைத் திரும்பத் திரும்பத் துடுப்புகளைத் துழாவி, திசை மாற்றி மாற்றி ஓடச் செய்ததால் கைத்துப்பாக்கிகளின் சூடு பயனற்றுப் போயிற்று. துரத்திய படகுகளிலிருந்து கிளம்பிய துப்பாக்கிச் சத்தம் நின்றது. படகுகள் வெகு வேகமாக இதயசந்திரனும் அப்பெண்ணுமிருந்த படகைத் துரத்தின.

ஆனால் என்ன செய்தும் அப்பெண்ணின் கைலாகவமும் வாசிஷ்டி நதியின் வேகமும் மற்றப் படகுகளை அணுக வொட்டாமல் அடித்தன.

இப்படி சுமார் இரண்டு நாழிகைகள் கூட ஓட்டமும் பிடியுமாகப் படகுப்போட்டி நடந்தும் துரத்தியவர்கள் எண்ணம் பயனற்றுப் போகவே இதயசந்திரன் மகிழ்ச்சியடைந்தான். “உன்னால் நான் பிழைத்தேன்” என்றான்.

“வாயை மூடுங்கள். பேசிப் பிராணனை வாங்காதீர்கள். அபாயம் அதிகமாகிறது’ என்றாள் அந்தப் பெண்.

அவள் வீணாகப் பயப்படுகிறாளென்று நினைத்தான் இதயசந்திரன். பயம் வீணல்லவென்பதை வெகு சீக்கிரம் புரிந்து கொண்டான். அந்தப் படகுக்கு நேர் எதிரில் ஒரு கப்பல் நின்று கொண்டிருந்தது. அதனருகே நாலைந்து படகுகளும் இருந்தன.

அவற்றைத் தாண்டிச் செல்வது கஷ்டமென்பதை உணர்ந்து கொண்டான் இதயசந்திரன். ஆனால் அந்தக் கப்பல் சற்றுப் பெரும் படகைப் போலவே இருக்கவே, ”இதைத் தாண்டுவது கஷ்டமா?” என்றான்.

“அது மஞ்சூரா” என்றாள் அந்தப் பெண்.

”பெயரைப் பார்த்தால் மகாராஷ்டிரப் பெயராகத் தெரிகிறது” என்றான் இதயசந்திரன்.

“ஆம். ஆனால் அதை மகாராஷ்டிரர் தான் செலுத்த வேண்டுமென்ற அவசியமில்லை” என்ற அந்தப் பெண், ”வாயை மூடுங்கள். தொணதொணவென்று பேசிப் பிராணனை வாங்காதீர்கள். உங்கள் பேச்சினால் வந்த ஆபத்துதான் இது” என்று எரிந்து விழுந்து அந்த மரக் கலத்தை நோக்கிப் படகைச் செலுத்தினாள். மரக்கலம் அரை நாழிகைப் பயணம் இருக்கையில், ”படகில் தலை தெரியாமல் படுத்துக் கொள்ளுங்கள்” என்று உத்தரவிட்டாள். அந்த மரக்கலம் கிட்டே வரவரக் கூறினாள்: “அந்த மரக்கலத்தைத் தாண்ட முடியாவிட்டால் படகை நான் கவிழ்த்துவிடுவேன். நீங்கள் நீரில் மூழ்கி நீந்தி வடக்குக் கரையைச் சேருங்கள். நான் பிறகு தொடருகிறேன்” என்று.

மரக்கலம் நெருங்கி வந்தது. திடீரென விளக்குகள் அதில் எழுந்து ஆடின. ”எதிரிகள்! ஜாக்கிரதை! சொன்னது நினைவிருக்கட்டும்” என்று கூறித் திடீரெனப் படகின் ஒரு பக்கத்துக்கு வந்து அவனையும் வரச்சொல்லிச் சுக்கானைப் ‘பலமாகத் திருகினாள். படகு புரண்டது. நீரின் வேகத்தில் இருவரும் மறைந்தனர்.

Previous articleJala Deepam Part 1 Ch22 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 1 Ch24 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here