Home Historical Novel Jala Deepam Part 1 Ch24 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 1 Ch24 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

91
0
Jala Deepam part 1 Ch24 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 1 Ch24 | Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 1 Ch24 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 24 தமிழ்ப் புலி

Jala Deepam Part 1 Ch24 | Jala Deepam | TamilNovel.in

கொங்கணிப் பகுதியில் இதயசந்திரனுக்கு நீந்தக் கிடைத்த இரண்டாவது வாய்ப்பு அது. கடலில் நீந்தக் கிடைத்தது முதல் வாய்ப்பு. கடலை நோக்கிக் கனவேகத்தில் விரைந்த வாசிஷ்டி நதியில் நீந்தக் கிடைத்தது இரண்டாவது வாய்ப்பு. இரண்டு வாய்ப்பும் ஆபத்தை முன்னிட்டே கிடைத்தன. ஆனால் இரண்டுக்கும் ஒரு வேறுபாடும் இருந்தது. முதல் வாய்ப்பில் காயம்பட்டுத் தன்னந்தனியே நீந்தினான். இரண்டாவது வாய்ப்பில் அவன் காயம் களிப்பில் ஆழ்ந்திருந்தது, காரிகையொருத்தியின் துணையும் இருந்தது.

அந்தத் துணையுடன் நீரில் விழுந்து மூழ்கிவிட்ட இதய சந்திரன், வாசிஷ்டி நதி மலையிலிருந்து இறங்குவதன் காரணமாக சமாளிக்க முடியாத வேகத்தைப் பெற்றிருந் ததையும் கடலிலிருந்து வந்த எதிர் அலைப் பிரவாகம்கூட அதன் வேகத்தை அதிகமாகக் குறைக்க முடியவில்லையென் பதையும் உணர்ந்ததால், வடகரைக்கு நேர் குறுக்கே நீந்த முடியாமல் பிரவாகத்தை அனுசரித்தும் குறுக்கே மெல்ல மெல்லச் செல்ல முயன்றுமே நீந்தினான். சோணாட்டைச் சேர்ந்தவனாதலால் நீச்சலில் வல்லமை பெற்றிருந்த அவன், திருச்சியின் பெருங்காவிரியிலும் தூத்துக்குடியின் முத்துக்குளிக்கும் கடல் பகுதியிலுங்கூட நீந்திப் பழக்க முடையவனாதலால் நீருக்குள் கைகளை துடுப்புகளெனத் துழாவி வெகு லாகவமாக நீந்தினான். அவன் லாகவத்தை விட அவனுக்கு அருகில் நீந்திய பெண்ணின் நீச்சு மிக அற்புதமாயிருந்தது.

கைகளை நீருக்குள் துழாவியபோது ஓரிருமுறை அவள் மேல்பட்ட தனது இடது கையிலிருந்து அவள் உடல் மீன் போல் வளைந்து வேகத்துடன் செல்வதைப் புரிந்து கொண்டான் தமிழன். சில சமயங்களில் அவள் சரீரமே அவன் சரீரத்துடன் உராய்ந்தது. உராய்ந்து விலகியும் சென்றது. உராய்ந்து அது விலகிய முறையிலிருந்து அந்தப் பெண்ணிடம் வாளை மீனின் வழவழப்பும் வளைவும் இருந்ததை அறிந்த இதயசந்திரன் நீருக்குள்ளும் ஒரு மோகனாஸ்திரம் தன்மீது பாய்ந்து விட்டதை உணர்ந்தான். அந்த மகிழ்ச்சியில் அவனும் வேகமாக நீந்தினான். இப்படிப் பல விநாடிகள் நீந்திச் செல்லுகை யில் மூச்சுத் திணறவே, தலையை மேலே தூக்க முயன்ற இதயசந்திரனின் தலையை அவள் வேகமாகப் பிடித்து நீருக்குள் அழுத்தினாள். கொஞ்சமிருந்த மூச்சைத் தொடர்ந்து பிடித்து நாலைந்து கைமாறு போட்ட பிறகு அவன் கால்கள் கரையில் உதைத்தன. கைகளில் மணல் தட்டியது. கரையை அடைந்துவிட்ட உற்சாகத்தில் நீரில் புரண்டு, மணலில் புரண்டு கரையேறிய தமிழன் அவள் தனக்கு முன்பே கரையில் படுத்திருப்பதைக் கவனித்தான். நிலவு நன்றாக ஏறிவிட்டதையும் உணர்ந்தான்.

வாசிஷ்டியின் வடக்குக் கரையில், வளைவுகளெல்லாம் நிலவொளியில் தெரிந்து அவள் அழகுக்கு விளக்கம் தர. மல்லாந்து கிடந்த அந்தப் பட்டுப் பாவையை வைத்த கண்லாங்காமல் பார்த்து நின்றான் அந்த வாலிபன் பல விநாடிகள். அவனை நோக்கி முறுவல் கொண்ட அந்தப் பெண், “நிற்க வேண்டாம். நீங்களும் படுத்துக் கொள்ளுங்கள்” என்று தன் பக்கத்தில் இடத்தைக் காட்டினாள். இதயசந்திரன் மிகுந்த சங்கடத்துடன் ஆனால் மிகுந்த ஆவலுடன் அவள் பக்கத்தேபடுத்தான். இரவு நான்காம் ஜாமத்தை எட்டிக் கொண்டிருந்த அந்த நேரத்தில், கொங்கணியின் அபரிமிதக் குளிரினாலும் வாசிஷ்டி நதியின் பனிக்கட்டி போன்ற சீதள நீராலும் விறைத்துக் கொண்டிருந்த இதயசந்திரன் உடல் நடுங்க மெள்ள அவள் பக்கத்தில்படுத்தான். அவளுக்கும் அவனுக்கும் நல்ல இடைவெளியிருந்தும் அவன் மனம் வேகமான உணர்ச்சிகளால் அலைக்கழிக்கப்பட்டு,உடலைவிட உள்ளம் நடுக்கமுற்றிருந்தபடியால், அவள் அவனைத் திரும்பிப் பார்க்காமலே கூறினாள்: “அப்படியே படுத்திருங்கள் நான் கூறும்வரை’ என்று.

அந்தக் குரலில் எச்சரிக்கையிருந்ததைக் கவனித்த இதயசந்திரன், ”இன்னும் ஆபத்திருக்கிறதா?” என்று வினவினான் மெல்ல.

”ஆமாம்” என்று பதில் கூறினாள் அந்தப் பெண்.

“அப்படியானால் இந்த ஈர ஆடையுடன் எத்தனை நேரம் படுத்திருக்கவேண்டும்?” என்று வினவினான் இதய சந்திரன்.

”எத்தனை நேரம் படுத்திருந்தாலென்ன? உங்கள் ஆடை அலங்காரத்தைப் பார்த்து யார் மயங்கப் போகிறார்கள் இங்கே?” என்று கூறி மல்லாந்து ஆகாயத்தைப் பார்த்தபடி நகைத்தாள் அவள்.

”ஆடை ஈரமாயிருப்பதால் குளிருகிறது” என்றான் இதயசந்திரன்.

”சற்றுக் குளிரும். பிறகு சரியாகப் போய்விடும். ஆபத்தைப் போல் தான் குளிரும். முதலில் அச்சத்தைத் தரும், பழகினால் சகஜமாகிவிடும்” என்றாள் அவள்.

இதயசந்திரன் தமிழகத்தின் நகைச்சுவையைக் காட்டத் தொடங்கி, “உனக்குக் குளிர் விட்டுப் போயிற்றா?” என்று வினவினான்.

“ஆம்.”

“நான் சொன்னதன் பொருள் தெரியுமா உனக்கு?”

தூக்கிவாரிப் போடும்படியாகப் பதில் கூறினாள் அவள் ” நன்றாகத் தெரியும்” என்று.

“என்ன தெரியும்” இதயசந்திரன் கேள்வி வியப்புடன் எழுந்தது.

“குளிர் விட்டதென்றால் பயம் போய்விட்டதென்று பொருள்” என்றாள் அவள்.

“உனக்குத் தமிழ் தெரியுமா?”

“லேசாகத் தெரியும்”

“லேசாகத் தெரிந்தால் இந்த மாதிரி சொற்றொடரின் உட்பொருள் புரியாதே?”

“புரியாது. ஆனால் என் தந்தை இதை அடிக்கடி சொல்லுவார். சொல்லிச் சிரிப்பார்.”

“எதற்காகச் சிரிக்கவேண்டும்?”

“தமிழ் நாட்டின் அற்ப குளிருக்கே பயந்து தமிழர் ஒரு பழமொழியும் சிருஷ்டித்திருக்கிறார்களே, கொங்கணி குளிரைப் பார்த்தால் என்ன சொல்வார்கள் என்று கூறிச் சிரிப்பார்.”

“யார் உன் தந்தை?”

“எந்தத் தந்தை?”

இதயசந்திரன் சினத்துடன் ஒருக்களித்து ஒரு கையைத் தலைக்கு ஊன்றுகோலாகக் கொடுத்துக் கேட்டான். ”என்னோடு விளையாடுகிறாயா பெண்ணே?” என்று.

”ஆம். உங்களோடு விளையாட ஆசையாயிருக்கிறது” என்று சிரித்தாள் அவளும் அவனை நோக்கி ஒருக்களித்து.

”தந்தை சொன்னாரென்கிறாய், எந்தத் தந்தையென்கிறாய்?” என்று சீறினான் இதயசந்திரன்.

‘பெற்றெடுத்த தந்தையில்லை. எடுத்து வளர்த்த தந்தையிருக்கிறார்” என்று கூறி மீண்டும் நகைத்தாள் அவள்.

”வளர்ப்புத் தந்தையின் பெயரைத்தான் சொல்லேன்” என்று கேட்டான் இதயசந்திரன்.

அவளும் ஒரு கேள்வி கேட்டாள் பதிலுக்கு. அது அவனைத் திக்குமுக்காட வைத்தது. ”என்னைக் கல்யாணம் செய்துகொள்ளப் போகிறீர்களா?” என்று கேட்டு ஒருக்களித்த நிலையிலும் சற்று அதிகமாக நகைத் தாள் அவள்.

இதயசந்திரன் பெரிதும் குழப்பத்திலிருந்தான். அவன் முகம் குழப்பத்தாலும் வெட்கத்தாலும் பலப் பல மாற்றங்களை அடைந்தது. கண்கள் கூடச் சற்று அவள் கண்களை விட்டு அகன்றது. ‘இதென்ன கேள்வி பெண்ணே” என்று கேட்டான் குரலிலும் குழப்பம் தெரிய.

”என்னுடைய தந்தையின் பெயர். குலம், கோத்திரம் அனைத்தையும் விசாரிப்பதைப் பார்த்தால் அந்த எண்ணம் இருக்குமோ என்று நினைத்தேன்?” என்றாள் அவள்.

இதயசந்திரன் அவள் கண்களை மீண்டும் நோக்கினான். அந்தப் பெரும் கண்களில் ஒலி ஜொலித்துக் கொண்டிருந்தது. வெளேரென்ற அவள் கழுத்தை. நோக்கினான். மடிந்திறங்கிய பக்குவ வயிற்றையும், வளைந்து இளைத்துக் கிடந்த இடையையும், பட்டுசுற்றிய வாழை மரத் தண்டுகளைப்போல் சராய் உள் பாய்ந்த கால்களையும் பார்த்தான். இத்தனையும் பார்த்துப் பெருமூச்சு விட்டான்.

”என்ன, பெண் பிடித்துவிட்டதா?” என்றாள் அவள்.

”உன்னைப் பிடிக்கப் பற்பல ஆண்டுகள் தவமிருக்க வேண்டும்” என்று உள்ளுக்குள் சொல்லிக்கொண்டாலும் முந்திய இரவில் இன்னொருத்தியிடம் தன் மனம் பறிபோய் விட்டதை எண்ணிப் பார்த்தான். இருவரில் யார் அதிக அழகு என்று எடைபோடவும் செய்தான். எடை போட அவனால் முடியவில்லை. இருவரும் துணிவுள்ளவர்கள், கம்பீரமுள்ளவர்கள், இரு அழகிகளும் கம்பீரத்தையும் திடீரெனத் துணிவையும் மறைத்து மென்மையை யும் மயக்கத்தையும் அளிக்கவல்லவர்கள்’ என்று தனக்குள் சொல்லிக்கொண்ட இதயசந்திரன் பானுதேவியை நினைத்ததால் பக்கத்தில் ஒருக்களித்துத் தன்னை நோக்கி நகைத்த பாவையைச் சிந்தையிலிருந்து அகற்றினான். ஆகவே அவனும் ஏளனமாகச் சொன்னான்: “சம்பிரதாய மாகப் பெண் பார்க்கும்போது முடிவு சொல்கிறேன்” என்று .

“உங்களுக்குச் சம்பிரதாயம் அதிகம் பிடிக்கும் போலிருக்கிறது” என்று அவளும் ஏளனமாகக் கேட்டாள்.

”பிடிக்கும்.”

“ஆனால் கொங்கணியில் அது சாத்தியமில்லை.’’

“ஏன்?”

“உங்களை ஸாத் ஸித்தி பிடித்துக் கொண்டால் சம்பிரதாயமாகக் கொல்லமாட்டான்.”

“கொலையில் சம்பிரதாயக் கொலை, அசம்பிரதாயக் கொலை என்று இரண்டா?”

”ஆம். சம்பிரதாயக் கொலை, விசாரணை நடத்திய பிறகு கைதியின் கடைசி வேண்டுகோளைக் கேட்டு, பிறகு கொல்வது. இது ஆங்கிலேயர் வழக்கம். ஸித்திகள் இத்தனைக் காலம் கடத்துவதில்லை.”

”சட்டென்று தீர்த்துவிடுவார்களோ?” “அப்படியும் தீர்க்கலாம்.” ”வேறு வழியும் உண்டு போலிருக்கிறது?”

“உண்டு முதலில் தளைகளில் பூட்டி இரண்டு மூன்று நாள் வைத்திருக்கலாம். அதில் சாகாவிட்டால் வெட்டிப் போடலாம்.”

இந்த விஷயங்களைச் சர்வசாதாரணமாகச் சொன்னாள் அப்பெண். அச்சத்தை அறியாத இதய சந்திரன் மனம் ஸித்திகளின் குரூரத்தை நினைத்து வியந்ததே தவிர, இம்மியளவும் கலங்கவில்லை. அடுத்த கேள்வி அவனிடமிருந்து யோசனையுடன் வெளிவந்தது. “இப்பொழுது நாம் எங்கிருக்கிறோம்?”

“பரசுராமபுரத்திலிருந்து காத தூரத்தில்.’’

”அத்தனை தூரமா வந்துவிட்டோம்?”

“ஆம். ஆற்று வேகம் அதிகம். அரை ஜாமம் பயணம் செய்திருக்கிறோம்.”

“இன்னும் நாம் எத்தனை தூரம் போக வேண்டும்?”

”ஒன்றரைக்காத தூரம்”

“போனால்?”

“முகத்துவாரத்தை அடைவோம்.”

“ஜலதீபம் தயார் என்று சொன்னாயே என்னைச் சந்தித்தவுடன்?” என்று வினவி அவளை உற்று நோக்கினான் இதயசந்திரன்.

“ஆம்.”

“அது கப்பல்தானே!”

”பெயரைப் பார்த்தால் அப்படித்தானிருக்கிறது.”

“நீ பார்த்ததில்லையா அதை?”

“இல்லை.”

“பிறகு எப்படிச் சொன்னாய்?”

“சொல்லச் சொன்னதைச் சொன்னேன்” என்றாள் அவள். பிறகு ஏதும் சொல்ல மறுத்தாள். அவன் கடைசிக் கேள்வியைக் கேட்டுக் கொண்டிருந்தபோதே திடீரென அவள் எதையோ உற்றுக் கேட்பதாகத் தோன்றியது இதய சந்திரனுக்கு. அவள், ”உஷ்! சும்மாயிருங்கள்” என்று அவன் கேள்விகளை அடக்கி, காதுகளை நன்றாகக் தீட்டிக் கொண்டு சில விநாடிகள் உற்றுக் கேட்டாள். பிறகு. “அப்படியே மல்லாந்து படுத்துவிடுங்கள்” உத்தரவிட்டுத் தானும் பழையபடி படுத்தாள். மெல்ல மெல்லப் பாதக் குறடுகளின் ஒலிகள் அவள் காதிலும் விழலாயின. பின்னால் சற்றுத் தூரத்தில் வீரர் பலர் இரைந்து பேசும் சத்தமும் கேட்டது.

“அவள் தான். சந்தேகமில்லை,” என்று ஒரு வீரன் இரைந்து கூறினான்.
“நமது பகுதியில் நுழைய அத்தனை துணிவா அவளுக்கு?” என்று இன்னொருவன் கேட்டான்.

“அவள் துணிவுக்கு எல்லை உண்டா?” என்று இன்னொருவன் கூறினான்.

“கிடையாது கிடையாது. அகப்படட்டும் அவள். என்ன நடக்கிறது பார்” என்று கூறினான் இன்னொருவன்.

“என்ன நடக்குமோ?”

‘ஸாத் ஸித்தியின் அந்தப்புரத்துக்குள் செல்வது நிச்சயம்.”

”அது பெரிய ஆபத்து?”

“மறு நாள் அஞ்சன்வேல் கோட்டையும் ஸாத் ஸித்தியும் மண்ணோடு மண்ணாகி விட நேரிடுமே.’’

”இம்முறை ஸாத் ஸித்தி எதற்கும் தயாராயிருக்கிறார்.’’

இப்படிக் காதில் விழுந்த பேச்சிலிருந்து தங்களைத் தேடுபவர்கள் ஸாத் ஸித்தியின் வீரர்களென்பதைப் புரிந்து கொண்ட இதயசந்திரன் அந்தப் பெண் விஷயமாகக் கவலை கொண்டதன்றி ஆத்திரமும் வரவே, “பெண்ணே! என் கைத்துப்பாக்கி உன்னிடமிருக்கிறதா?” என்று வினவினான்.

“இருக்கிறது” என்றாள் அவள்.

”அதைக் கொடு என்னிடம்” என்று கையைப் பக்கவாட்டில் நீட்டினான்.

”அது பயனில்லை இப்பொழுது” என்றாள் அவள்.

“ஏன்?”

“எதிரி வீரர்கள் இப்பக்கம் வந்து கொண்டிருக் கிறார்கள். உற்றுக் கேளுங்கள்.”

இதயசந்திரன் உற்றுக் கேட்டான். வீரர்கள் பாதக் குறடுகளின் ஓசை நெருங்கி வந்தது. ”இப்பொழுது என்ன செய்யவேண்டும்?” என்று வினவினான்.

பதிலுக்கு அவள் வானத்தை உற்று நோக்கினாள். ”வாசிஷ்டி நீர் கடலின் எதிரலைகளால் உயரும் நேரம் வந்துவிட்டது. இன்னும் இரண்டு விநாடிகளில் அன்னை ‘வாசிஷ்டி நம்மை மூடி மறைப்பாள். அந்த நீருக்குள் முதலில் நகர்ந்து ஆழத்தில் செல்வோம். பிறகு நீந்துவோம்” என்று கூறினாள்.

அவள் கூறிக்கொண்டிருக்கும் போதே நீரின் ஒரு பகுதி அவன் காலை மறைத்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் மார்பளவு நீரில் உடல் அழுந்திவிட்டது. இன்னோர் எழுச்சி இருவரையும் மறைத்தது. அவள் சொன்னபடி மல்லாந்தபடியே நீருக்குள் நகர்ந்தான் இதயசந்திரன். பழக்கமில்லாத காரணத்தால் அவனால் நகர முடியாது போகவே எழுந்து நின்று குப்புற நீரில் விழ முயன்றான். எழுந்த அந்த ஒரு விநாடியில் பலமான கயிறு ஒன்று அவன் உடலுக்குக் குறுக்கே விழுந்து இறுக்கியது தரைக்குப் பலமாக இழுக்கவும் பட்டான் இதயசந்திரன். வீரர்கள் பலர் ஓடிவந்து அவனைச் சூழ்ந்து கொண்டார்கள். கயிறு வீசி அவனைப் பிடித்த இரு வீரர்கள் கயிற்றைக் கெட்டியாகப் பற்றி சற்று எட்ட நின்றிருந்தனர்
.
சுற்றுமுற்றும் நோக்கினான் இதயசந்திரன். அந்தப் பெண்ணை எங்கும் காணவில்லை. “அவள் தப்பி விட்டாள்” என்ற கோபக்கூச்சல் வீரர்களிடமிருந்து எழுந்தது. அந்தக் கோபத்துடன் கோபமாக, ‘சரி. அந்தப் பெண் புலி கிடைக்காவிட்டாலும் இந்தத் தமிழ்ப் புலியாவது கிடைத்தது. இழுத்துச் செல்லுங்கள் இதை” என்றான் வீரர்களின் தலைவன்.

கயிறு இழுக்கப்பட்டது பலமாக. கட்டுண்டபடியே தடுமாறித் தடுமாறி நடந்தான் இதயசந்திரன்.

Previous articleJala Deepam Part 1 Ch23 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 1 Ch25 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here