Home Historical Novel Jala Deepam Part 1 Ch25 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 1 Ch25 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

60
0
Jala Deepam part 1 Ch25 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 1 Ch25 | Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 1 Ch25 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 25 நீர் ஊற்றிய நிலவு

Jala Deepam Part 1 Ch25 | Jala Deepam | TamilNovel.in

ஸாத் ஸித்தியின் வீரர் தன்னை அவ்விடத்தில் எதிர் பார்த்துப் பிடித்துவிட்டது பெருவியப்பைத் தரவே சுற்றும் முற்றும் நோக்கினான் இதயசந்திரன். தனது படகைக் குறுக்கே மறித்த அந்தச் சிறு கப்பல் அப்பொழுதும் இருந்த இடத்தை விட்டு நகராமல் நங்கூரம் பாய்ச்சி நின்றிருந்ததையும் அதன் மீது நின்றிருந்த வீரர்கள் மட்டும் விளக்குகளை உயரத் தூக்கி ஆட்டிக் கரைக்கு சைகை செய்து கொண்டிருந்ததையும், தன்னைத் துரத்தி வந்த படகுகள் அக்கப்பலுக்கு முன்னும் பின்னும் சஞ்சரித்துக் கொண்டிருந்ததையும் கண்ட இதயசந்திரன், இந்தக் கூட்டு முயற்சியால்தான் தரையிலிருந்த வீரர்கள் தன்னைப் பிடிக்க முடிந்ததென்பதைப் புரிந்து கொண்டான். அவனுக்குப் புரியாததும் ஒன்றிருந்தது. ‘அந்தப் பெண் என்னைக் காக்க வருவாளென்பது’ ஸாத் ஸித்திக்கு எப்படித் தெரியும்? தவிர நான் ஸாத் ஸித்தியின் வீரர் களிடமிருந்து தப்பியதற்கும் இங்கு சிக்கியதற்கும் ஒரு ஜாமமே கடந்திருக்க, இந்தக் குறைந்த அவகாசத்தில் படகைத் துரத்த நாலைந்து படகுகள், வழி மறிக்க ஒரு மஞ்சூரா, கரையில் வந்தால் பிடிக்கச் சுழல் கயிறு தாங்கிய வீரர்கள், இத்தனை ஏற்பாடுகளை ஸாத் ஸித்தி எப்படிச் செய்ய முடிந்தது?’ என்று எண்ணிப் பார்த்தான், விடை கிடைப்பது அவனுக்குப் பெரும் கஷ்டமாயில்லை. சதா போரிலிருக்கும் கொங்கணியின் ஸித்திகளின் தரைப் படைத் தலைவனான ஸாத் கரையோரத்திலும் நதியிலும் காவற்படைகளை எப்பொழுதும் நிறுத்தி வைப்பது அசாதாரணமல்லவென்று தீர்மானித்தான். படகைக் காவற்படகுகள் துரத்தும் போது நட்டாற்றில் நின்றிருந்த மஞ்சூரா தரைக்கும் விளக்கு எச்சரிக்கை செய்ததும் புதிராயில்லை அவனுக்கு. ஆனால் தமிழ்ப் புலி என்று வீரனொருவன் தன்னை அழைத்தது தன்னை எப்படி அங்கு எதிர்பார்த்தார்கள்? எப்படி அத்தனை துரிதத்தில் ஸாத் ஸித்தி அவர்களுக்குத் தன்னைப் பற்றி எச்சரித்தான் என்ற விஷயங்கள் விளங்காததால், அவ்வீரர்கள் கயிற்றை இழுக்க எதிர்ப்பு ஏதும் காட்டாமலும் கயிற்றிலிருந்து விடுவித்துக் கொள்ள முயலாமலும் நடந்து சென்றான். வாசிஷ்டியின் வடக்குக் கரையிலிருந்த மலைப்பகுதியில் சிறிது தூரம் அழைத்துச் சென்ற பிறகு அவன் உடலை இறுக்கியிருந்த முறுக்குக் கயிற்றை அவிழ்த்துவிட்ட வீரர்கள் அவன் கைகளை மட்டும் முன்புறம் பிணைத்து ஒரு ‘புரவியில் ஏற்றினார்கள். மற்றவர்களும் புரவிமீது. ஏறிக்கொள்ள வீரர்கள் தலைவன் கையிலிருந்த ஒரு. விளக்கைத் தூக்கி மஞ்சூராவை நோக்கி ஆட்டிவிட்டுப் புரவி மீது ஏறிக்கொண்டான். முன்புறமாகவே பிணைக்கப்பட்ட இதயசந்திரன் கைகளில் சேணத்தைக் கொடுக்கக் கட்டளையிட்ட வீரர்கள் தலைவன் தனது புரவியை நடத்த முற்பட்டான். தலைவன் முன்பு செல்ல வீரர்கள் பின்பு வர, பயணம் துவங்கியது மேற்கு நோக்கி.

நிலவு நன்றாக ஏறிவிட்ட சமயம் அது. எங்கும் மலைக் காட்சியும் நதிக் காட்சியும் ரமணியமாயிருந்தது. இரு கரையிலும் காட்டுப் பகுதியும் மலை மேட்டுப் பகுதியுமிருந்ததால் காற்றிலலைந்த மரக் கூட்டங்களால் ஏற்பட்ட சலசலப்புடன் தூரத்தே ஒன்றரைக் காதத்திலிருந்த கடலிரைச்சலும் சேர்ந்து கொள்ளவே இயற்கையின் பேராட்சி அந்த இரவில் பயங்கர ஆட்சி யாகவும் கண் கொள்ளாக் காட்சியாகவுமிருந்தது. பயணமும் அலுப்பில்லாமலிருந்தது. இதயசந்திரன் மனத்தில் அலுப்புமில்லை, சலிப்புமில்லை. சந்துஷ்டி நிரவிக் கிடந்தது. அந்தப் பெண் இவர்களிடமிருந்து தப்பிவிட்டாள் என்ற எண்ணம் அவனுக்குப் பெரும் பூரிப்பையும் இதயசாந்தியையும் அளித்ததால் பயணத் தைப் பற்றியோ பயணத்தின் முடிவில் காத்திருந்த முடிவைப் பற்றியோ அவன் சிறிதும் எண்ணாமல் குதிரை மீது அமர்ந்து!சென்றான். சுமார் அரை ஜாமம் இப்படிப் பயணம் நடந்ததும் தூரத்தே கடலும், கடலில் வாசிஷ்டி புகுவதும், அதன் தென்கரையில் ஒரு நகரமும் நகரத்துக்கு அப்பால் முப்புறம் கடல் சூழ்ந்த ஒரு கோட்டையும் அவன் கண்களுக்குப் புலனாகவே “அந்த நகரத்தின் பெயர் என்ன?” என்று வினவினான் இதயசந்திரன் முன் சென்ற தலைவனுக்குக் காதில் விழும்படியாக.

”அஞ்சன்வேல் நகரம்” என்று திரும்பியே பார்க்காமல் சொன்னான் காவலர் தலைவன்.

”அந்தக் கோட்டை?” என்று மீண்டும் கேட்டான் இதயசந்திரன்.

“உன் உயிரை வேட்டையாடக் காத்திருக்கும் இடம்!” ஏளனத்துடன் வந்தது அந்த அபிஸீனியன் பதில். இதைக் கேட்ட மற்ற அபிஸீனியக் காவலர் நகைத்தனர் இரைந்து, பயங்கரமாக.

”அந்தக் கோட்டையின் பெயர் புரிந்துவிட்டது” என்றான் இதயசந்திரனும்.

“என்ன பெயரோ” காவலர் தலைவன் கேள்வியில். நகைப்பு தெரிந்தது.

“உயிர் வாங்கி” என்றான் இதயசந்திரன்.
”தமிழா! உண்மை உண்மை !” என்ற தலைவன், “அதற்கு அஞ்சன்வேல் கோட்டை என்றும் பெயர் உண்டு’ என்றும் குறிப்பிட்டான்.

“கோட்டை நகரத்தோடு ஒட்டவில்லையே!” என்று இதயசந்திரன் வியப்பைக் காட்டினான்.

”இரண்டுக்கும் அதிக தூரமில்லை. அரைமைல் தூரந்தான்’ என்றான் தலைவன்.

இந்த மைல் கணக்கைக் கேட்டு இதயசந்திரன் அசந்து போவானென்று நினைத்த தலைவன் இவனைத் திரும்பிப்பார்த்தான்.. “பிரிட்டிஷ்காரர் கணக்கில் தூரத்தைச் சொல்கிறீர்கள்!” என்று சர்வசாதாரணமாகப் பதில் கூறிய இதயசந்திரன், ‘சென்னை வெள்ளைக்காரரிடம் இதை அடிக்கடி கேட்டிருக்கிறேன்” என்று கூறிவிட்டு அஞ்சன்வேல் நகரத்தையும் கோட்டையையும் நோக்கி, கோட்டையின் பலத்தைப் பார்த்துத் திகைத்தான். அதற்குள் போனால் தான் வெளிவருவது சந்தேக மென்பதைப் புரிந்து கொண்டான். ஆனால் அதைப் பற்றிச் சிறிதளவும் கவலைப்படாமலும் மேற்கொண்டு கேள்வி ஏதும் கேட்காமலும் பயணம் செய்தான்.

அடுத்த அரை ஜாமத்திற்குப் பிறகு, சந்திரன் ஒளி யிழந்து வானத்தில் சஞ்சரிக்க, அருணன் தலையைக் காட்டலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்க, காட்டுப் பறவைகள் உதயகால ஒலிகளை முன் கூட்டியே கிளப்ப, காலைப்பொழுது கண் திறக்க முயன்ற சமயத்தில் வாசிஷ்டியின் வடகரைத் துறையொன்றுக்கு வீரர்கள் அவனை அழைத்து வந்து படகொன்றில் ஏற்றி அதிலிருந்த காவலரிடம் ஒப்படைத்தனர். பிறகு அபி ஸீனிய மொழியில் அவனை அழைத்து வந்தவர்களுக்கும் படகிலிருந்த மாலுமிகளுக்கும் ஏதோ உரையாடல் நிகழ்ந்தது. மாலுமிகள் பதில் கூறிப் படகை வாசிஷ்டியின் தென்கரைக்குச் செலுத்தி அங்கிருந்த வீரர்களிடம் அவனை ஒப்படைத்தனர். பிறகு அவன் அங்கிருந்து ஒரு வண்டியில் ஏற்றப்பட்டு அஞ்சன்வேல் நகரத் தெருக்கள் வழியாகக் கடற்கரைக்குக் கொண்டு செல்லப்பட்டான். கரை வந்ததும் ”கீழே இறங்கு” என்று வீரனொருவன் அதட்ட வண்டியிலிருந்து இறங்கிய இதயசந்திரன் எதிரே வாசிஷ்டியின் தென்கரையிலிருந்த அஞ்சன்வேல் கோட்டையைக் கண்டு பிரமித்துப் போனான்.

கடலால் முப்புறமும் சூழப்பட்டுப் பெரும் மலைப் பகுதியின் மீது நிர்மாணிக்கப்பட்டிருந்த அஞ்சன்வேல் கோட்டை, வாசிஷ்டியை முகத்துவாரத்தில் தென்பகுதியில்காத்து நின்றது. *”கோபால்காட்’ என்ற பெயரை உடையதும் 16-வது நூற்றாண்டில் பீஜ்பூர் சுல்தான் களால் கட்டப்பட்டதும், 1660-வது ஆண்டில் சிவாஜியால் பலப்படுத்தப்பட்டதும், 1681-89-ல் காம்பாஜியால் அபிவிருத்தி செய்யப்பட்டதும், 1699-ல் ஜன்ஜீராவின் கைரத்கான் ஹபீஷியால் கைப்பற்றப்பட்டு ஸித்திகளிடமே தங்கிவிட்டதும், அரபிக் கடலின் சிறந்த கோட்டைகளில் ஒன்றுமான அஞ்சன் வேல் கோட்டையைக் கண்டு வீரனான இதயசந்திரன் பெரிதும் மகிழ்ந்தான். முப்புறத்திலும் அதற்குக் கடலிருந்ததன்றி நான்காவது புறத்திலும் அதற்கு அகழி வெட்டிக் கடல் ஜலத்தை உட்புகவிட்டிருந்த தால், அக்கோட்டை நிலத்தால் எப்புறமும் அணுக முடியாதிருந்தததைக் கவனித்தான் தமிழக வீரன். அந்தக் கோட்டையின் சுவர்கள் இருபதடி உயரமும் சுமார் எட்டடி கனமுமிருக்கலாமென்பதைப் பொதுப் பார்வையிலேயே நிர்ணயித்தான் அவன். அதற்கு வாயில்கள் இரண்டிருந்தன. ஒன்று கிழக்கு நோக்கி நகரத்தைப் பார்த்தும் இன்னொன்று மேற்கு நோக்கிக் கடலைப் பார்த்தும் இருந்தன. கிழக்கு வாயில் மட்டும் எதிரே தெரிந்தாலும் நன்றாக அமைக்கப்பட்ட அந்தக் கோட்டைக்குக் கடலைப் பார்த்தும் கதவிருக்குமென்பதை ஊகிப்பது கஷ்டமாயில்லை அந்த வீரனுக்கு.

கோட்டையைப் பல விநாடி பார்த்துப் பார்த்து வியந்திருந்த இதயசந்திரனை. “உம் நட! கோட்டையை உள்ளே பார்த்தே மலைக்கலாம்” என்று ஒரு வீரன் எச்சரித்து அகழிக்காக அவனை அழைத்துச் சென்று அங்கொரு படகில் ஏற்றி, கோட்டை அடிவாரத்துக்குக் கொணர்ந்தான். பிறகு மலையேறிக் கோட்டை வாயிலுக்கு வந்து சேர்ந்த இதயசந்திரன் அதன் வழி நெடுக வீரர்கள் காவலிருந்ததையும் கோட்டைச் சுவர்கள் மீதும் கடல் நோக்கியும் நதி நோக்கியும் பீரங்கிகள் பொருத்தப் பட்டிருந்ததையும் கண்டு அதைத் தாக்குப் பிடிப்பது அத்தனை சுலபமல்லவென்பதைப் புரிந்து கொண்டான். பிறகு அவனை வீரர் கோட்டைக்குள் அழைத்துச் சென்ற போது அங்கிருந்த பயங்கரத்தைக் கண்டு எதற்கும் கலங்காத இதயசந்திரன் மனமும் சிறிது கலங்கிற்று. அங்கிருந்த இரண்டு மூன்று தெருக்கள் வட்டமாக அமைக்கப்பட்டு நடுவிலிருந்தது ஒரு பெரு மாளிகை. அதுதான் ஸாத் ஸித்தியின் மாளிகையாயிருக்க வேண்டு மென்பதை ஊகித்த இதயசந்திரன், அந்த வட்ட வீதிகளுக் கிடையில் ஒரு திறந்தவெளியும், அதில் பல மரத்தளை களும் இருந்ததையும் பலபேர் அத் தளைகளில் காலிலும் கையிலும் கிட்டி கட்டப்பட்டு, பனிக் குளிரில் சுருண்டு கிடந்ததையும் கண்டான். அவர்களில் சிலர் முதுகுகளில் சாட்டை வார்க் காயங்களுமிருந்ததையும் கண்டு. உபசாரங்கள் தனக்கும் நடக்குமென்பதைப் புரிந்து கொண்டானானாலும் அதைப்பற்றி லட்சியம் செய்யாமல் வீரர்களிடையே நடந்து சென்றான். வீரர்கள் கோட்டையின் வடக்குப் புறத்திலிருந்த ஒரு சிறையில் அவனை அடைத்துச் சென்றனர்.

அன்று பகல் முழுவதும் அவன் அந்தச் சிறையிலேயே அடைந்து கிடந்தான். ஒரே ஒரு முறை அதாவது நடுப்பகலில் அவனுக்கு உணவு அளிக்கப்பட்டது. அந்த அறை யின் மூலையில் ஒரு பாத்திரத்தில் குடி நீர் மட்டும் வைக்கப் பட்டிருந்ததால் வேறு உணவைப்பற்றிக் கவலைப்படாமல் இதயசந்திரன் நீரைக் குடித்தே அன்றைய பொழுதைக் கழித்தான். சிறைக்காவலன் அவன் விஷயமாகக் காட்டிய அசிரத்தையிலிருந்து ஸாத் ஸித்தி வந்த பிறகே தனது தலைவிதி நிர்ணயமாகுமென்பதைப் புரிந்து கொண்ட இதயசந்திரன் எது வந்தாலும் வரட்டுமென்ற துணிவில் சிறையறையில் படுத்துக் கிடந்தான். ஸாத் ஸித்தியின் பேட்டி அன்றிரவில் அவனுக்குக் கிடைக்கவில்லை.

மறு நாள் பகலவன் உச்சிக்கு வந்து அரை ஜாமம் கழித்து இரு காவலர் வந்து அவனை ஸாத் ஸித்தியின் மாளிகைக்கு அழைத்துச் சென்று ஸாத் ஸித்தியின் முன்பு நிறுத்தினர். ஸாத் ஸித்தி அவனை ஒரு மஞ்சத்தில் உட்காரச் சொல்லி, “நாம் மீண்டும் சந்திக்கிறோம்” என்று அறிவித்தான் புன்முறுவலுடன்.

“ஆம்.” தலைநிமிர்ந்தவண்ணம் கூறினான் இதய சந்திரன்.

“சிறையில் உன்னை அதிகமாகத் துன்புறுத்தியிருக்க மாட்டார்கள்” என்றான் ஸாத் ஸித்தி.
“துன்புறுத்தவேயில்லை.”

“அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம். தேவை யானால் உனக்கு வேண்டிய இம்சை கிடைக்கும்.”

“வேறு எதையும் நான் எதிர் பார்க்கவில்லை.”

”எதிர்பார்ப்பதில் தவறில்லை. சிறிது குணத்தை மாற்றிக் கொண்டால், சிறிது இயற்கையின் வழிக்கு இணங்கினால்.’ இதைச் சொன்ன ஸாத் ஸித்தியின் உதடுகளில் புன்முறுவல் மறைந்தது.

அவன் சொல்வது ஓரளவுதான் புரிந்தது இதயசந்திரனுக்கு. இயற்கையைப்பற்றி அவன் கூறியது விளங்காது போகவே விசாரித்தான் தமிழன். “இயற்கையின் வழியா!” என்று.

‘ஆம். பெண்கள் பக்கம் சாய்வது ஆணின் இயற்கை. அவர்கள் இஷ்டத்திற்கு இணங்குவது ஆணின் கடமை. பானுதேவின் இஷ்ட விரோதமாக என்னை விரோதித்துக் கொண்டது முட்டாள் தனம், இப்பொழுதுகூடக் குடி முழுகிப் போய்விடவில்லை. நீ என் பக்கம் சேருகிறாயா?” என்று வினவினான் ஸாத் ஸித்தி.

“என்னால் இனி கனோஜியைப் பிடித்துக் கொடுக்க முடியாது. உனக்கு என்னால் எந்தப் பயமுமில்லை” என்றான் இதயசந்திரன்.

இதயசந்திரன் ‘உனக்கு’ என்று மரியாதையின்றிப் பேசியதை ஸாத் ஸித்தி கவனித்திருந்தாலும் அதை வெளிக்குக் காட்டாமலே சொன்னான். “அது தெரியும் எனக்கு. கனோஜியைப் பிடித்திருந்தால் நான் கடந்த இரவில் பிடித்திருக்கவேண்டும். அது நடக்கவில்லை. அதனால் பரவாயில்லை. உன்னை எனக்குப் பிடிக்கிறது” என்று.

“உன்னை எனக்குப் பிடிக்க வேண்டாமா?” என்று வினவினான் இதயசந்திரன்.

“உன் உயிரை உனக்குப் பிடித்தால் என்னையும் பிடிக்க வேண்டும்.’’

“இல்லையேல் உயிரை வாங்கிவிடுவாய்?”

“என் கையால் வாங்க மாட்டேன்.”

“ஆம் ஆம். அதற்குத்தான் வேறு கொலைகாரர்கள் இருக்கிறார்களே?”

அவன் இகழ்வதைப் புரிந்து கொண்ட ஸாத் ஸித்தியின் கண்களில் வியப்பு படர்ந்தது. “என்னைக் கொலைகாரன் என்று குறிப்பிடுவதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால் என்னை வசை பாடுவதால் உனக்கு எப் பயனுமில்லை. உன்னை வெட்டவோ தூக்கிலிடவோ உத்தரவிட மாட்டேன்…’ என்ற ஸாத் ஸித்தி வேண்டுமென்றே பேச்சை இடையில் அறுத்தான்.

“வேறு சிறந்த வழியும் அஞ்சன்வேல் அதிபருக்குத் தெரியும் போலிருக்கிறது” என்றான் இதயசந்திரன் ஏளனத்துடன். – “சிறந்த வழிகள் என்று பன்மையில் சொல்வது பொருந்தும்” என்று ஒப்புக் கொண்டான் ஸாத் ஸித்தியும்.

“அந்த வழிகளில் ஒன்றை சீக்கிரம் சுட்டிக் காட்டினால். நல்லது” என்று இதயசந்திரன் கோரிக்கை விடுத்தான்.

ஸித்தி சற்று யோசித்தான். பிறகு கூறினான். ”தமிழனே! நீ பெருவீரன். உன்னைப்போல் சிறந்த வீரர் களில் சிலரையே நான் பார்த்திருக்கிறேன். ஆகையால் உன்னை அழிக்க என் மனம் ஒப்பவில்லை. முடிந்தால் என் பக்கம் அதாவது பானுதேவியின் பக்கம் உன்னை இணைத்துக் கொள்ள விரும்புகிறேன். இல்லையேல் உன்னை என் கையால் தண்டிக்க மாட்டேன்.”

“வேறு.?”

“இயற்கை தண்டிக்கும்.”

“இயற்கையா!”

“ஆம். கோட்டை மத்தியிலுள்ள தளைகளில் பூட்டப் படுவாய். இரவின் பனியிலும் பகலின் வெயிலிலும் நீ காய்ந்தும் குளிர்ந்தும் படிப்படியாகச் சாகவேண்டியிருக்கும். செத்த பிறகு கழுகுகளுக்கு இரையாகப் போடுவோம்.”

ஸாத் ஸித்தி முந்திய வாசகத்தை மிகத் திட்டமாகக் கூறினான். “உன் பதில்?” என்று கடைசியாகக் கேட்கவும் செய்தான்.

‘ஏற்கெனவே சொன்ன பதில். இந்த மகாராஷ்டிரத் தொல்லையில் நான் சேர இஷ்டப்படவில்லை. எனக்கு ஒரு கடமை இருக்கிறது. கடமையை நாடிச் செல்ல வேண்டும். நான் தேடி வந்தவனைத் தேட வேண்டும்” என்றான் இதயசந்திரன்.

“அப்படியானால் அவனை நகரத்தில் தேடு. இல்லை யானால் அங்கு காத்திரு. அவன் வரும்வரை” என்று சீறிய ஸாத் ஸித்தி காவலரை அழைத்து, ”இவனைத் தளையில் பூட்டுங்கள்” என்று உத்தரவிட்டான்.

காவலர் அவனை அழைத்துச் சென்று கோட்டை மத்தியிலிருந்த தளைகளிலொன்றில் பூட்டினார்கள். கைக்கும் காலுக்கும் தளை மாட்டி. குறுக்கே புள்ளடித்து நகர முடியாமல் இறுக்கினார்கள். கைகால் நரம்புகள் புடைத்து வெடித்து விடும் போலிருந்தது இதயசந்திரனுக்கு. அங்கு அவன் மட்டுமில்லை. பலர் தளைகளில் அடிக்கப்பட்டிருந்தார்கள். அவர்களில் ஆண்களுமிருந் தனர், பெண்களுமிருந்தார்கள். சிலர் துவண்டு கிடந்தார்கள். சிலர் ஆகாயத்தை நோக்கி விழித்துக் கிடந் தார்கள். சிலர் முனகினார்கள். சிலர் அழுதார்கள். சிலர் விக்கலெடுத்துத் திணறிக் கொண்டிருந்தார்கள்.

யாருக்கும் அங்கு உணவு கிடையாதென்றாலும், தண்ணீர் மட்டும் உண்டென்பதைப் புரிந்து கொண்டான் இதயசந்திரன். தூரத்தில் மரப் பீப்பாய்களில் குடி நீர் வைக்கப்பட்டிருந்தது. அதை ஊற்ற இரண்டு அரபுப் பெண்கள் முக்காடிட்டு நின்றிருந்தார்கள். விக்கல் எடுப்ப வர்களுக்கு மட்டும் குவளைகளில் நீர் கொணர்ந்து அப்பெண்கள் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

நேரம் ஓடியது. பகல் ஓடி இரவு ஏறியதால் பந்தங் களும் விளக்குகளும் பளிச்சிட்டன: கடற்காற்று மிகக் குளிர்ச்சியுடன் உடல் விறைத்து விடும்படி அடிக்க ஆரம்பித்தது. ஒரு ஜாமம் முடிவதற்குள்ளாகவே இதய சந்திரன் உடல் நடுங்க ஆரம்பித்தது. இருப்பினும் பல்லை இறக்கிக் கடித்துக் கொண்டிருந்தான். இரண்டாவது ஜாமத்தில் தண்ணீர் கொடுக்கும் பெண்கள் மாறி, வேறு பெண்கள் பணியேற்றார்கள். இதயசந்திரன் நாக்கு வறளத் துவங்கியது. நீர் நீர் என்று கூவினான் அவன். பெண்கள் நீர் கொணரவில்லை. அப்பொழுதுதான் புரிந்தது அவனுக்கு விக்கல் எடுக்காவிட்டால் நீர் கொடுக்கமாட்டார்கள் என்பது. உடனே செயற்கையாகப் பெரு விக்கல் விக்கினான். பெண்ணொருத்தி நீர் கொணர்ந்தாள். இரண்டாம் ஜாமம் முடியும் தருவாயில் தொண்டையும் அவன் நாக்கும் அடியோடு வறண்டன. குளிர் உடலை வாட்டியது. கண்கள் எரிந்தன. தளைகளிலிருந்த கைகால் எலும்புகள் முறிந்து விட்டதாகத் தோன்றின. இந்த அனுபவம் அவனுக்குப் புதுமை. நாக்கு இத்தனை வறண்டு அவன் பார்த்ததில்லை. கொங்கணியின் சீதோஷ்ண ஸ்திதி அவனுக்குப் பெரும் துன்பத்தை விளை வித்தது. மூன்றாவது ஜாமம் முடிந்ததும் அவன் கண்கள் பஞ்சடையும் தருவாயிலிருந்தன. விக்கினான் மீண்டும். பெண்ணொருத்தி அவனுக்கு நீர் கொணர்ந்து வாயிலூற்றக் குனிந்தாள். குனிந்த சமயத்தில் அவனுக்கு மட்டும் முகம் தெரியும்படிச் சிறிது முக்காட்டைத் தூக்க வும் செய்தாள். நீர் ஊற்றிய அந்த நிலவு முகத்தைக் கண்டு அதிர்ச்சியுற்ற இதயசந்திரன், “நீயா!” என்றான். அவள் பதில் கூறவில்லை. நீரை ஊற்றிவிட்டுச் சென்றாள். கோட்டையின் வேறு புறத்திலிருந்து வந்த ஒரு பெரிய வீரன். “அவனுக்கு இனி நீர் கொடுக்காதே” என்று உத்தர விட்டான் அந்தப் பெண்ணை நோக்கி.
இதயசந்திரன் அவனை ஏறெடுத்து நோக்கினான். அந்த வீரன் முகத்தில் தீப்பந்த வெளிச்சம் நன்றாக விழுந் திருந்தது. அவன் முகத்தின் குறுக்கே ஒரு பெரிய வெட்டுக் காயம் தீப்பந்த ஒளியில் பளபளத்தது.

Previous articleJala Deepam Part 1 Ch24 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 1 Ch26 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here