Home Historical Novel Jala Deepam Part 1 Ch26 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 1 Ch26 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

67
0
Jala Deepam part 1 Ch26 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 1 Ch26 | Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 1 Ch26 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 26 உதய காலக் கழுகுகள்

Jala Deepam Part 1 Ch26 | Jala Deepam | TamilNovel.in

கொங்கணிக் குளிரால் உடல் விறைக்க, நா வறண்டு போக, கண்கள் பஞ்சடைய, மேலுலகத்தையே உயிர் எட்டிப் பார்க்கும் நிலையை எய்திவிட்ட இதயசந்திரனுக்கு, நீர் ஊற்றிய அந்த நிலவு முகம் பெரும் சக்தியை உடலில் ஊறவிட்டதென்றால், பந்தத்தின் வெளிச்சத்தில் பளிச்சிட்ட வெட்டுக் காயமுகம் அவன் சக்தி பூராவையும் உணர்ச்சி. அத்தனையையும் திரும்ப அளித்துவிடவே, மிகுந்த பிரமையுடனும் இணையிலாக் கோபத்துடனும் அவன் அந்த வீரன் முகத்தைப் பார்த்தது பார்த்தபடியே இருந்தான் பல விநாடிகள். தஞ்சை அரண்மனையில் ராஜாராமின் ராணி சொன்ன அடையாளங்கள் அப்படியே அந்த வீரனுக்கு இருந்ததைப் பார்த்த இதய சந்திரன் காரணமாகத்தான் விதி நான் வந்த கப்பலை உடைத்து என்னைக் கொங்கணியின் கரையில் வீசியிருக்கிறது’ என்று உள்ளூரச் சொல்லிக் கொண்டான். முகத்தின் குறுக்கே வாள் காயத்தின் வடு நன்றாக விழுந்திருந்த தால் அந்த வீரன் முகம் மிகப் பயங்கரமாகக் காட்சியளித்தது மட்டுமல்லாமல், அவன் நீண்ட கைகளும், கூர்வேல்கள் போல் பளிச்சிட்ட கண்களும் அவன் சிறந்த வீரன் என் பதைப் பறைசாற்றின. அவன் அபிஸீனியரைப்போல் உடையணிந்திருந்தாலும் அவன் கழுத்தில் கறுப்பு முடிக் கயிற்றின் முனையில் ஊசலாடிய பவானிப் பதக்கமொன்று அவன் மகாராஷ்டிரனென்பதைச் சந்தேகமற நிரூபித்தது.

அவன் எப்படி எதற்காக ஸாத் ஸித்தியின் கோட்டைக்கு வந்து தங்கியிருக்கிறான்? அங்கு அதிகாரம் செய்ய அவனுக்கு என்ன பதவி இருக்கிறது? அவன் அங்கிருந்ததால் அவன் தூக்கி வந்த அரசகுமாரனும் அதே கோட்டையில் தானிருக்கிறானா? என்ற பல கேள்விகள் இதயசந்திரன் இதயத்தே எழுந்ததானாலும் அது ஒன்றுக்குக்கூட விடை கிடைக்கவில்லை தமிழகத்தின் வாலிபனுக்கு. இப்படிப் பல கேள்விகள் சித்தத்தில் எழுந்து சுழன்றதால் பிரமித்து அந்த வீரனை நோக்கிக் கொண்டேயிருந்தான். அவன் அப்படி உற்றுப் பார்த் ததை அந்த வீரனும் பார்த்திருக்க வேண்டும். ஆகவே, அவன் தன் காலைக் கம்பீரமாக வீசிப் போட்டு நடந்து இதயசந்திரனுக்கு முன்னால் வந்து நின்று, “தமிழா எதற்கு நீ நாடு விட்டு நாடு வந்தாய்?” என்று வினவினான்.

எழுந்து அவன் கழுத்தை இறுகப் பிடித்து நொறுக்கி, ”எங்கே நீ தூக்கிவந்த அரசமகன்?’ என்று கேட்க வேண்டும்போல் இதயசந்திரன் இதயம் துடித்ததானாலும் அப்பொழுதிருந்த நிர்க்கதியான நிலையில் ஏதும் செய்ய முடியாததால், “எந்த நாட்டை விட்டும் எந்த நாட்டுக்கும் வரவில்லை” என்று பதில் கூறினான் நா வறண்ட நிலையிலும்.

துணிவு மிகுந்த குரலில் வெளிவந்த அந்தப் பதிலைக் கேட்டு அசந்துபோன அந்த வீரன், “நீ தமிழ் நாட்டவன் தானே?” என்று வினவினான்.

“ஆம்.” இதயசந்திரன் பதில் பெருமிதத்துடன் வெளிவந்தது.

“இது மகாராஷ்டிரர் நாடு.”

”ஆம்.”
“அங்கு விட்டு இங்கு வந்தால் நாட்டைவிட்டு நாடு வந்ததுதானே?”

இதயசந்திரன் இதழ்கள் புன்முறுவல் கொண்டன. “இன்னொரு நாடும் உண்டு” என்று உதிர்ந்தன சொற்கள் உதடுகளிலிருந்து.

“இன்னொரு நாடா?”

“ஆம்.”

“எதுவோ?”

”பாரதநாடு என்று ஒன்று உண்டு. அதிலுள்ள மக்கள் ஒரே மக்கள். அந்த நாட்டுக்குள் உலாவுபவர்கள் நாடு விட்டு நாடு செல்வதாக அர்த்தமில்லை.”

இதயசந்திரன் சொற்களை அழுத்திச் சொன்னான். இதைக் கேட்ட அந்த வீரன் முகத்தில் சற்றே சந்தேகம் படர்ந்தது. ‘அப்படி இது ஒரே நாடானால் நடை உடை பாவனைகள் பல இடங்களில் ஏன் வித்தியாசமாயிருக் கின்றன?” என்று வினவினான் அந்த வீரன்.

”நடை உடை பாவனைகள் நாட்டையோ, மனிதர் களையோ நிர்ணயிப்பதில்லை.”

”அப்படியா?”

“ஆம். உதாரணம்கூடக் காட்ட முடியும்.”
”காட்டு பார்க்கலாம்.”

”நீ போட்டிருப்பது அபிஸீனிய உடை. ஆனால் உன் முகம் கூறுகிறது நீ மகாராஷ்டிரன் என்று” என உதாரணம் காட்டிய இதயசந்திரனைச் சந்தேகம் பூர்ணமாகிவிட்ட கண்களுடன் நோக்கிய அந்த வீரன், “தமிழா! உன்னைப் பற்றி எனக்கு அதிக சிரத்தை. உண்டாகிறது; சந்தேகமும் உண்டாகிறது” என்று கூறினான் கவலை பாய்ந்த குரலில்.

“உன்னிடம் எனக்குச் சிரத்தையிருக்கிறது” என்று சுட்டிக்காட்டினான் இதயசந்திரன்.

”நாம் தனிமையில் பேசவேண்டும்” என்றான் அந்த வீரன்.

”இன்னும் ஒரு வார்த்தை பேச வேண்டுமானாலும் தண்ணீர் வேண்டும்” என்று தட்டுத்தடுமாறிச் சொன்னான் தமிழன் அதுவரையில் தாக்குப் பிடித்த சக்தி சற்றுத் தளர்ந்து விடவே.

அந்த வீரன் கருணையுடன் தலையசைத்து, சற்று முன்பு நீருற்றிய அந்தப் பெண்ணைப் பார்த்து குவளையில் நீர் கொண்டு வரும்படி சைகை செய்தான். மீண்டும் நீரை மொண்டு வந்த அவள் அவனிடம் அபிஸீனிய மொழியில் ஏதோ கூறினாள். அவன் இரைந்து ஏதோ மறுமொழி கூறினான். இருவருக்கும் சற்றுத் தடிப்பாகவே சில விநாடிகள் தர்க்கம் நடந்ததும் வேண்டா வெறுப்பாக அவள் இதயசந்திரன் வாயில் நீரை ஊற்றிவிட்டுச் சென்றாள்.

இதயசந்திரன் நீரை மடக்கு மடக்கு என்று அருந்தி, சற்றுச் சுரணையை வரவழைத்துக் கொண்டதும் அந்த வீரன் கூறினான். “தமிழா! அந்தப் பெண் இல்லாத ஆட்சேபணையெல்லாம் செய்கிறாள். முதலில் நீர் ஊற்ற வேண்டாமென்ற நீ இப்பொழுது ஏன் ஊற்றச் செய்கிறாய் என்று வினவுகிறாள். விக்கல் எடுக்காதபோது நீர் ஊற்ற உத்தரவில்லையென்கிறாள். இனி நான் இங்கிருந்தால் உனக்குப் பக்கத்துத் தளையில் நானும் இருக்க நேரிடும். ஆகையால் நான் போகிறேன்.. உன்னிடம் முக்கியமாகப் பேசவேண்டியிருக்கிறது” என்று கூறி, பிறகு அங்கிருந்த காவலருக்கு ஏதேதோ கூறிவிட்டு நடந்து சென்று விட்டான்.

அவன் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் அந்தப் பெண் மீண்டும் குவளையில் நீர் கொணர்ந்து அவனை நோக்கிக் குனிந்து, “நான் நன்றாகக் குனிகிறேன். இந்த அபிஸீனிய ஆடை உங்கள் கைகளை மூடும். ஆடையின் உட்புறத்தில் ஒரு பையில் கத்தி இருக்கிறது. எடுத்துக் கொள்ளுங்கள்” என்றாள்.

தளையில் கைகள் இறுகி நரம்புகள் வெடித்துவிடும் நிலையிலிருந்த சமயத்திலும் இதயசந்திரன் உணர்ச்சிகள் பெரிதும் கலங்கின. அவள் அதிக ஆடையின்றித் தன் பக்கத்தில் ஆற்றோரத்தில் மல்லாந்து கிடந்த சமயத்தில் கூடக் கிளறாத பல உணர்ச்சிகள் அபிஸீனிய ஆடை முழுக்க முழுக்க அவளை மூடியிருந்த நிலையில் கிளம்பி அவனை நிலைகுலையச் செய்தன. எப்படித் தைரியமாக ஆடைக்குள் கை விடுவது. கத்தியை எடுப்பது என்று எண்ணித் திகைத்தான். பிறகு பல்லைக் கடித்துக்கொண்டு தைரியமாக அவன் கை அவள் ஆடைக்குள் புகுந்து உட்பை ஒன்றிலிருந்த கத்தியை எடுத்துக் கொண்டது. நீரை ஊற்றிக்கொண்டே சொன்னாள் அவள், ”அந்தக் கத்தியை உங்கள் தொடைக்குக் கீழே மறைத்துவிடுங்கள்” என்று. அப்படிக் கூறிக்கொண்டே குனிந்து இறுகிய தளையொன்றைத் தளரவிட்டு அவன் கையொன்றை விடுவித்தாள். அவள் சொன்னபடி அவன் கத்தியை மறைத்த பின்பு. ‘மீண்டும் கைகளை முன்போல் வைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறி, தளையை மெல்லச் செருகினாள். மேலும் துரிதமாகக் கூறினாள்: “நான் அடுத்த முறை வரும்போது உங்களை விடுவிப்பேன். நீங்கள் எழுந்து ஓடக்கூடாது. ஏதும் பேசாமல் சாதாரணமாகத் தள்ளாடி நடந்து கோட்டைச் சுவரை நோக்கிச் செல்லுங்கள். ஆனால் கத்தி உங்களிடம் இடை மறைவில் இருக்கட்டும்” என்று. அத்துடன் அவள் சென்று மீண்டும் பீப்பாயிருக்குமிடத்தில் நின்று கொண்டாள் குவளையுடன்.

அந்த ஜாமம் முடிந்ததும் நீர் கொடுக்கும் மங்கையர் மாறினர். அவனைக் காத்த அந்த நிலவு முகத்தாளும் சென்றாள். மீண்டும் குளிரில் விறைத்த இதயசந்திரனுக்குக் குளிரைத் தாங்குவது அவ்வளவு கஷ்டமாயில்லை. சில நிமிஷங்களில் நடந்துவிட்ட உரையாடல்கள் அவனுக்குப் பெருந் தெம்பையும் நம்பிக்கையையும் அளித்திருந்தன. ஆகவே அடுத்து நடக்கவிருந்த நிகழ்ச்சிகளை எதிர்பார்த்திருந்தான் அந்த தமிழன். மூன்றாவது ஜாமம் ஓடிய இரண்டு நாழிகைக் கழித்து முக்காடிட்ட அந்தப் பெண் வந்து அங்கிருந்த காவலரிடம் ஏதோ சொன்னாள். அதைக் கேட்ட காவலர் இருவர் வந்து அவனைத் தளைகளிலிருந்து விடுவிக்க, தன்னைத் தொடர்ந்து வரும்படி செய்தாள் அந்தப் பெண். இதயசந்திரன் மெள்ள எழுந்த பிறகுதான் அஞ்சன்வேல் கோட்டைத் தளைகளின் மகாத்மியம் அவனுக்குத் தெரிந்தது. கால்கள் நிற்கவும் மறுத்தன. கணுக்கால்கள் தளைகள் இறுக்கத்தால் கன்றிக் கிடந்தன. இரத்த ஓட்டம் நீண்ட நேரம் அரைகுறையாயிருந்ததால் பாதங்கள் சிறிது வீங்கியும் இருந்தன. நிற்க முயன்ற இதய சந்திரன் தொப்பென்று நிலத்தில் மீண்டும் விழுந்தான்.

அதைக் கண்ட அந்தப் பெண் அபிஸீனிய மொழியில் காவலரிடம் ஏதோ சொன்னாள். உடனே காவலரிருவரும் உட்கார்ந்து அவன் கால்களைச் சூடு பிடிக்கத் தேய்த்தனர். “உம்…எழுந்திரு இப்பொழுது!” என்று அதட்டினாள் அப்பெண். மெள்ள மெள்ள எழுந்து நின்று அவள் முன் செல்லத் தள்ளாடித் தள்ளாடி அவளைப் பின் தொடர்ந்தான் இதயசந்திரன். கீழ்ப்புறக் கோட்டைச் சுவரை, நெருங்கியதும் அங்கிருந்த காவலரிடம் அவள் மீண்டும் ஏதோ கூறினாள். அவர்கள் ஆமோதிப்பதற் கறிகுறியாக தலையசைத்தார்கள். பிறகு அவனை மதில் சுவரை அடுத்திருந்த மூன்று வரிசைப்படிகளில் ஏறிச் செல்லுமாறு உத்தரவிட்டனர்.

சுற்றிலும் மூன்று வரிசை அரண் மேடைகளிலிருந்த அந்தக் கோட்டைப்படிகளில் மெள்ள மெள்ள ஏறிச் சென்று அப்புறம் நோக்கிய இதயசந்திரன் கண் முன்னே எழுந்திருந்தது பயங்கரக் காட்சி. கீழே அதளபாதாளத்தில் கடலலைகள் அக்கோட்டையிருந்த மலையடிவாரத்தின் மீது மிகப் பயங்கரமாக மோதிக் கொண்டிருந்தன. குளிர் காற்றுப் பெருவேகத்தில் வீசி மலைப்பாறைகளில் மோதிச் சீறி விர்ரென்று ஊதிச் சென்று கொண்டிருந்தது. கடல் கொந்தளிப்பு மிக அதிகமாயிருந்தது.

அவள் ஏறி வந்தாள் சற்று நேரத்திற்கெல்லாம் அதே இடத்துக்கு.

வந்ததும் மடியிலிருந்த கட்டளைக் கடிதமொன்றை அக்காவலரிடம் கொடுத்துவிட்டு இதயசந்திரனை நோக்கிக் கூறினாள் தமிழில், ”வீரரே! உம்மிடம் கருனை காட்ட ஸாத் ஸித்தி இணங்கிவிட்டார்” என்று.

இதயசந்திரன் வியப்பினால் வாயைப் பிளந்தான். ”நீ சொல்வது விளங்கவில்லை எனக்கு.”

”கவலை வேண்டாம். விளங்க வைக்கிறேன்” என்ற அவள் “உங்களைப் போன்ற வீரரைத் தளையில் சாசு விடுவது ஸாத்ஸித்தியின் கௌரவத்துக்குக் குறைவு என்று கூறினேன். அவர் முதலில் ஒப்புக் கொள்ளவில்லை. பிறகு உம்முடன் பேசிய காவலர் தலைவரும் என்னை ஆதரித்தார். பிறகுதான் ஒப்புக்கொண்டார் கோட்டைத் தலைவர்” என்றும் கூறினாள்.

”எதற்கு ஒப்புக்கொண்டார்? விடுதலை செய்யலா?”

”இல்லை. உமக்கு நல்ல மரணத்தை அளிக்க.”

“நல்ல மரணம் என்றால்?’

”வீரர்களுக்கான மரணம்.”

“எந்த விதமோ?”

“உமது தலையில் நான் கைத்துப்பாக்கியால் அடிப்பேன்.”

“உம்.” “உங்கள் பிரக்ஞை தவறிவிடும்.”

”’பிறகு?”

“கயிற்றில் உங்கள் உடலைக் கட்டி இங்கிருந்தே மலைச்சரிவில் கடலில் விடுவோம்.”

“நல்லது.”

“சில வேளைகளில் கயிறு அறுந்துவிட்டால் கஷ்டம்.”

“என்ன கஷ்டமோ?”

”பாறையில் உடல் தங்கிவிடும். அப்பொழுது கழுகுகளுக்கு உடல் இரையாகும்.”

“அவ்வளவுதானா?” என்று விஷமமாகக் கேட்டான் இதயசந்திரன்.

“ஆம்” என்ற அவள், அவன் துணிவைக் கண்டு அவனை வியப்புடன் நோக்கினாள். பிறகு ஏதும் பேசாமல் வீரர்களை நோக்கி அவன் இடுப்பில் கயிற்றைக் கட்டச் சொன்னாள். வீரர்கள் கயிற்றைக் கட்டியதும் தன் இடையிலிருந்த கைத்துப்பாக்கியை எடுத்து அவன் தலையில் ஓங்கி அடித்தாள். இதயசந்திரன் சுரணை பாதி பறந்தது. எங்கெங்கோ அவன் மனம் சஞ்சரித்தது. இடையிலிருந்த கத்தியை எடுத்து எதன் மீதோ வீசினான். பிறகு என்ன நடந்ததென்று அவனுக்குத் தெரியாது. கண் விழித்தபோது அவன் நிலை அவனுக்கே பரிதாபத்தை அளித்தது. மலைப்பாறையொன்றில் அவன் மல்லாந்து கிடந்தான். உதயகாலம் நெருங்கிக் கொண்டிருந்ததை வானம் நிரூபித்தது. சற்று எட்டக் கேட்ட பயங்கரக் கூச்சல் எது என்று பார்க்கத் தலையைத் திருப்பினான். சற்றுத் தூரத்தில் கழுகுகள் இரண்டு அவனை உற்றுப் பார்த்த வண்ணம் உட்கார்ந்திருந்தன. தன் உடலுக்கு விருந்தாளிகள் வந்துவிட்டதை உணர்ந்து கொண்ட இதய சந்திரன் பெருமூச்சு விட்டான். அதே சமயத்தில் பெரும் சிறகடித்து மேலே வட்டமிட்டுக்கொண்டிருந்த கழுகு ஒன்று அவனை நோக்கி ஜிவ்வென்று இறங்கி வந்தது.

Previous articleJala Deepam Part 1 Ch25 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 1 Ch27 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here