Home Historical Novel Jala Deepam Part 1 Ch27 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 1 Ch27 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

61
0
Jala Deepam part 1 Ch27 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 1 Ch27 | Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 1 Ch27 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 27 நீங்களிருப்பது ஜலதீபம்

Jala Deepam Part 1 Ch27 | Jala Deepam | TamilNovel.in

உதயகாலம் நெருங்கிக் கொண்டிருந்ததால் வானத்துச் சந்திரன் அடியோடு ஒளியிழந்து வெற்றுக் காதிதம்போல் ஆகாச யாத்திரை செய்து கொண்டிருந்தான். காலை நேரக் கடல் பறவைகளின் கிரீச் கிரீச்சென்ற சத்தமும் படபடவென்று சிறகடிக்கும் ஒலியும் இதயசந்திரன் காதுகளில் விழுந்து கொண்டிருந்தன. அவன் கிடந்த பாறை இரவுப் பனியில் நனைந்திருந்ததால் அக் கருங்கல் பனிக் கல்லாக மாறி முதுகைச் சுரணையற்று மரக்க அடித்திருந்தது. அவன் கைகள் கூட உறைந்து போய்ச் சஞ்சரிக்கும் சக்தியை இழந்து கிடந்தனவென்றால் கால்களின் நிலையை என் சொல்ல? இத்தனைக்கும் மரத்துப் போகாத பாகமும் ஒன்றிருந்தது. நிலவு முகத்தாளின் கைத்துப்பாக்கியால் நன்றாக அடிபட்ட மண்டை விண்விண்னென்று தெரித்துக் கொண்டு உதையும் அடியும் உடலுக்கு எத்தனை கரணையைக் கொடுக்க முடியும் என்பதை நிரூபித்துக் கொண்டிருந்தது. அந்தக் கைத்துப்பாக்கியின் பயங்கர அடிகூட அவன் கண்களை அன்று காலை மங்கச் செய்யாததால் தன்னை விண்ணிலிருந்து உண்ணவந்த கழுகை அவன் மிக நன்றாகப் பார்த்தான். மேலிருந்து இறங்கிய பருந்து எந்த நேரத்திலும் தன் கண்களைக் கொத்திவிடலா மென்பதையும், பிறகு தான் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்காமலே இறந்துவிட முடியுமென்பதையும் புரிந்து கொண்ட தமிழகத்தின் அந்த வாலிபன் மிக ஆபத்தான அந்த நிலையிலும் தன் கதியை நினைத்து மெள்ளச் சிரித்துக் கொண்டான்.. மேலிருந்து இறங்கிய கழுகு தன் கண்களைக் கொத்திவிட்ட பிறகு என்ன செய்யும் என்பதை யும் ஆரயா முற்பட்டான். அந்த நிலையில் அந்தக் கழுகும்

ஜிவ்வென்று பாய்ந்து அவன் பாறையின் பக்கத்திலிருந்த மற்றொரு பாறையில் உட்கார்ந்து கொண்டது.

ஏற்கெனவே உட்கார்ந்து அவனைக் கவனித்துக் கொண்டிருந்த கழுகுகள் அவனை விட்டு வானத்திலிருந்து வந்த சகாவைக் கவனிக்கத் தொடங்கின, அந்த வானச் கழுகும் அவற்றைப் பார்த்தது. அவை மூன்றுக்கும் ஏதோ நயன சம்பாஷணை நடந்து கொண்டிருந்தது: போலிருந்தது இதயசந்திரனுக்கு. அந்தச் சம்பாஷணை முடிவதற்குள் தான் ஏதாவது நடவடிக்கை எடுக்காவிட்டால் தன் கதி அதோகதிதானென்பதைப் புரிந்து கொண்ட தமிழன் மெல்ல மெல்லத் தன் கையை அசைத் தான். கால்களையும் அசைக்க முயன்றான். கைகளும் கால்களும் எத்தனைக் கனமாயிருந்தன. இரத்த ஓட்டம் இல்லாவிட்டால் ஏன் மனித அவயங்கள் கனத்து விடுகின்றன! இதனால் தான் பிணங்கள் அதிகமாகக் கனக்கின்றனவா? கை கால்கள் அந்தச் சமயத்தில் பிணர் தானே! இல்லாவிட்டால் ஏன் அத்தனை கனம்!

இப்படியெல்லாம் யோசித்து, புத்தியின் சக்தி கொண்டு மெள்ள மெள்ளக் கை கால்களை அசைத்த இதயசந்திரன் தனது இடுப்பில் கட்டியிருந்த கயிற்றை மெள்ள மெள்ள இழுத்துச் சுருட்டிக் கொண்டான். அதில் மார்பளவு தூரம் கையில் பிடித்துப் படுத்தபடியே பக்கப் பாறையில் உட்கார்ந்திருந்த கழுகை நோக்கி வீசினான். கயிறு கழுகு இருந்த இடத்திற்கு வெகு அருகில் சென்று விழுந்தும் கழுகு அசையவில்லை. பதிலுக்குக் ‘க்ராச்’ சென்று பயங்கரமாக அலகு திறந்து கத்தியது அப்பருந்து. தூரத்தேயிருந்த இரு கழுகுகளும் பதிலுக்குக் கத்தின. பிறகு அந்தப் பயங்கரக் கூச்சலை மாறி மாறிப் போட்டன. கழுகுகளின் ஒலி காதைப் பிளந்தது. அவை தனக்குப் பாடும் மரண கீதமா அது என்று நினைத்துப் பார்த்த இதயசந்திரன் மீண்டும் ஒருமுறை கயிற்றை இழுத்து வீசினான். இம்முறை அக்கழுகு கத்தலுடன் சிறகையும் இரு முறை ஏற்றி இறக்கிப் பட்பட்டென்று அடித்தது. மற்ற கழுகுகளும் சிறகடித்தன, கத்தின. ஆனால் எக்கழுகும் பறக்கவில்லை. பதிலுக்கு அவற்றின் கூச்சல் கேட்டு வேறு கழுகுகள் வந்து சேர்ந்தன. வேறு சில பட்சிகளும் பறந்து ஆகாயத்திலிருந்தே கீழே நடப்பவற்றை வேடிக்கை பார்த்தன. எல்லாவற்றுக்கும் மேலாக அவன் சடலத்தை விழுங்க ஆசைப்படுவது போல் கடல் அலைகள் பேரிரைச்சல் போட்டன.

உதயகாலத்திலும் ஓரளவு எங்கும் பனி சூழ்ந்திருந்ததால் அவன் கண்ணும் கழுகுகளை விட்டு அதிக தூரம் பார்க்க முடியவில்லை. மல்லாந்து கிடந்ததாலும் தலையை ஓரளவே அசைக்க முடிந்ததாலும் அப்புறமும் இப்புறமும் வானத்தையும் பார்க்க முடிந்ததே தவிர, அவனால் வேறெதையும் பார்க்க முடியவில்லை. சுரணை மெல்ல வந்துவிட்ட கை கால்கள் கூட அதிக செயலுக்குப் பயனற்றவையாயிருந்ததால் எப்படியும் தன் உயிர் அதிக நேரம் கழுகுகளிடமிருந்து தப்பாது என்ற முடிவுக்கு வந்தான் இதயசந்திரன். அந்த நேரத்தில் கூட அவன் இதயக்கண் முன்பு அவன் கடமை எழுந்து நின்றது. மகாராஷ்டிர வாரிசைக் களவாடி வந்தவனை நேருக்கு நேர் சந்தித்தும் தனது கடமையை நிறைவேற்ற முடியாத நிர்ப்பந்த நிலையில் தானிருந்ததை உணர்ந்தான் அவ்வீரன். விதி தன்னிடம் எதற்காக அப்படி விளையாட வேண்டும் என்பதும் புரியவில்லை அவனுக்கு. ‘என் கைகால்கள் சுதந்திரமாயிருந்து அவனை நான் சந்தித் திருந்தால் நிலைமை எத்தனை மாறுபட்டிருக்கும்? வந்த வேலை முடிந்து இத்தனை நேரம் நான் தமிழகத்தை நோக்கிச் சென்றிருப்பேனே’ என்று தனக்குள் சொல்லிக் கொண்ட இதயசந்திரன் மெள்ள மெள்ள உடலையும் அசைக்கத் தொடங்கினான். தன் உடல் அத்தனை பளுவாயிருக்க முடியும் என்று அன்று தான் தெரிந்தது அவனுக்கு. மெல்ல மெல்ல உடலை அசைத்து எழுந்து உட்கார முயன்று முடியாமல் பாறை மேல் மீண்டும் மல்லாந்து விழுந்தான். முந்தி தலையில் துப்பாக்கிக் காயமிருந்த இடத்தில் மீண்டும் பாறை தாக்கவே மறுபடியும் மூர்ச்சையானான்.

முழு மூர்ச்சையாயிருந்தாலும் ஒரு நிம்மதியாயிருந்திருக்கும். ஆனால் மூர்ச்சை அரை மூர்ச்சையாயிருக்கவே அவன் காதுகளில் ஏதேதோ ஒலிகள் கேட்டன. பஞ்சடைந்த கண்களில் ஏதேதோ காட்சிகள் தெரிந்தன. தெரிந்ததெல்லாம் பிரமையா உண்மையா என்று நிர்ணயிக்க முடியாத அரைகுறை நிலை அது. கழுகுகளில் ஒன்று அவன் மார்பில் உட்கார்ந்தது போல் தோன்றியது. பிறகு ஏதோ கலவரம் கேட்டது. தனக்கு இருபுறத்திலும் யாரோ இருவர் உஷ்ணமாகத் தர்க்கம் செய்யும் சொற்கள் காதில் விழுந்தன. தர்க்கம் வர வரப் பலமாகியது. பிறகு ஒருவர் தன்னைத் தூக்குவது போன்ற ஒரு பிரமை. திடீரென ஒரு துப்பாக்கி வெடித்த சத்தம்! சரசரவெனத் தன் உடல் எங்கோ உருண்டு செல்வதுபோன்ற நினைப்பு! எங்கு உருண்டு போகிறேன்! எங்கு? எங்கு? மனம் துடிக்கும் நிலை! பிறகு அலைகளின் பேரிரைச்சல்! திடீரென சகல ஒலிகளும் அடங்கி விடுகின்றன உடலுக்கு ஏதோ இதமான இடம். காதுக்கு இதமான சொற்கள்! பிறகு மறதி மயக்கம்! மயக்கத்தைத் தொடர்ந்து படகுக் கன்னியின் மதிமுகம். அவள் கை ஓங்கித் துப்பாக்கிக் கொண்டு தாக்கிய போதிருந்த சுந்தரத் தோற்றம்! தன் பக்கத்தில் வாசிஷ்டி கரையில் மல்லாந்து கிடந்த மோகனக் காட்சி! இப்படி எத்தனையோ கற்பனைகள். கற்பனைகளா கனவுகளா!

அது தெளிய அரை நாளாகியது தமிழனுக்கு. அவன் மெல்லக் கண் விழித்தபோது ஒரே ஒரு கழுகு மட்டும் அசைவற்று உட்கார்ந்திருந்தது. அதைச் சுடக் கைத் துப்பாக்கியைத் தேடினான் இடையில். கிடைக்கவில்லை. தனது ஆயுதங்களை வீரர்கள் பறித்துக் கொண்டது அப்பொழுதுதான் புரிந்தது அவனுக்கு. அவன் இடையில் அப்பொழுதும் ஒரு கத்தி கட்டியிருந்தது. அந்தக் கத்தியை அந்தப் பெண்ணுடையிலிருந்து ரகசியமாகத் தான் எடுத்துக் கொண்டது நினைப்பு வந்தது. அவனுக்கு. அந்தக் கத்தியைத் தான் வீசியும் தனக்குப் பயனில்லாது போய் விட்டதும் நினைப்புக்கு வரவே பெருமூச்செறிந்தான். அந்தப் பெருமூச்சைத் தொடர்ந்து பக்கத்தில் யாரோ நகைத்தார்கள். அந்த நகைப்பு வந்த திசையில் கண்களைத் திருப்பினான் வாலிபன். பக்கத்தில் நின்றிருந்தாள் முதலில் பாறையில் அவனுடன் பதுங்கிப் படகிலழைத்து வந்த அந்தப் பைங்கிளி. அன்றும் அவள் சராயும் மேலங்கியும் அணிந்திருந்தாள். தலையில் சிறு துணி அவள் குழலைத் தடுத்து ஒதுக்கி நின்றது. அவள் இதழ்கள் மட்டுமின்றி அவள் பெருங்கண்களும் அவனை நோக்கி நகைத்தன. அவள் இடைக்கச்சையிலிருந்த கைத்துப்பாக்கியும் அவனைப் பார்த்து நகைத்திருக்க வேண்டும். இல்லா விட்டால் அத்தனை வெறுப்புடன் கேட்டிருப்பானா அவன் அவளை நோக்கி, “அந்தத் துப்பாக்கிதானே அது?” என்று.

ஆமென்பதற்கு அறிகுறியாகத் தலையசைத்தாள் அவள். அந்தத் தலையசைப்பிலும் அவனைப் பார்த்த பெரும் விழிகளிலும்கூட பேரழகு இருந்தது. ஆனால் தன் அழகை அவள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. இடைவெளி கொடுத்த மேலங்கி விரிந்து மார்புகளின் விளிம்புகளைக் காட்டியதைக்கூட அவள் மறைக்க முயலவில்லை. ஏதோ கடமையைச் செய்யும் போர்வீரன் மற்றதை அசட்டை செய்வதைப் போல நடந்து கொண்டாள் அவள். “இப்பொழுது உடல் நிலை எப்படி யிருக்கிறது” என்று கேட்டு அவன் தலைமீது கை வைத்தாள்.

”பரவாயில்லை.” உஷ்ணத்துடன் வெளியிட்டான் ஒற்றைச் சொல்லை அந்த வாலிபன். சொல்லிச் சற்று அசைந்ததும் தான் படுத்திருந்தது ஒரு பஞ்சணை யென்பதை உணர்ந்தான்.

“ஆகாரம் ஏதாவது தேவையா?” என்று வினவிய அவள் இரண்டடி நடந்து பஞ்சணையை இடித்துக் கொண்டு நின்றாள்.

பஞ்சணைமீது அவள் திண்ணிய கால் அழுந்தியது தன் மீதே அழுந்தியது போலிருந்ததால் பெரும் சங்கடத்துக் குள்ளான இதயசந்திரன் ”தேவையில்லை” என்றான்.

”அதுவும் நல்லது தான்” என்று அவள் சிரித்தாள்.

“ஏன் நல்லது?” உஷ்ணம் இம்மியளவும் குறையாத நிலையில் வந்தது அவன் கேள்வி.

அவள் தன் பகுதியைச் சற்று ஏற்றிப் பஞ்சணை முகப்பில் நன்றாக உட்கார்ந்துகொண்டு அவன் கையை எடுத்து நாடியைப் பரிசோதித்தாள். பிறகு சொன்னாள்: “நல்லதுதான்’ என்று.
“சாப்பிடாததா?”

“ஆம்.”

“ஏன்?”

“இன்னும் நாடித் துடிப்பு அதிகமாயிருக்கிறது. பட்டினி கிடந்தால் இறங்கும்.”

”நீ என்ன மருத்துவச்சியா?”

“இல்லை.”

“இதெல்லாம் எப்படிப் பழக்கம் உனக்கு?”

”உங்கள் மாதிரி ஆட்களை அடிக்கடி பார்த்துப் பழக்கம்.”

”பல பேரிடம் பழக்கமோ?” பண்பாடற்ற இந்தச் சொற்களைக் கடுப்புடன் உச்சரித்தான் தமிழன்.

அவள் அந்தக் கடுப்பைச் சிறிதும் கவனிக்க வில்லையோ, அல்லது கவனித்துத்தான் லட்சியம் செய்யவில்லையோ, ‘ஆம்” என்று சர்வ சாதாரணமாகப் பதில் சொன்னாள்.

இதயசந்திரன் கோபம் எல்லை கடந்தது. “எல்லோர் பக்கத்திலும் இப்படித்தான் உட்காருவாயோ?” என்று சீறினான் அவன்.

”ஆம். இதைவிட நெருங்கிக்கூட உட்காருவேன்.”

“தொடுவாயா?’

“நன்றாகத் தொடுவேன்.”

“இதை ஒப்புக்கொள்ள வெட்கமாயில்லை உனக்கு?”

“சிறிதும் இல்லை.”

“ஏன்?”

”நான் வெட்கப்பட வேண்டியது ஒரே ஒருவரிடம்.”

“யாரவர்?”

“என் கணவர்?”

தூக்கிவாரிப் போட்டது இதயசந்திரனுக்கு. ”உன் கணவரா விவாகமாகி விட்டதா உனக்கு?” என்றான் மனக் கஷ்டத்துடன்.

”இல்லை” என்று அவள் கூறி நகைத்தாள். ஏதோ பெரும் சுமை இறங்கியது போலிருந்தது இதயசந்திரனுக்கு.

“நல்ல வேளை” என்று தன்னையும் மீறிச் சொல்லி விட்டான் அவன்.

அவள் அவனைக் குழப்பத்துடன் நோக்கினாள். ”ஏன் நல்ல வேளை?” என்றும் கேட்டாள்.

அவன் பதில் சொல்லவில்லை. பெருமூச்செறிந்தான். உள்ளம் அவளிடம் மெள்ள மெள்ள பறிபோவதை உணர்ந்ததால் திகிலும் அடைந்தான். ஏற்கனவே பானு தேவியிடம் அடைக்கலமான உள்ளத்தில் இன்னொருத்திக்கு இடம் ஏது என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டும் விடை கிடைக்கவில்லை அவனுக்கு மனம் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டதால் மெள்ளக் கண்ணை மூடிக் கொண்டான். அவன் கை அவள் மடிமேல் விழுந்தது. அவள் அவனைப் பிடித்து உலுக்கினாள். ”வீரரே! வீரரே!” என்று அசைக்கவும் செய்தாள்.

அவன் கண் விழித்து அவளை நோக்கி, ‘ஏன்?” என்று கோபத்துடன் கேட்டான்.

“கையை எடுங்கள்” என்றாள் அவளும் கோபத்துடன் முறுவல் செய்து.

“ஏன் எடுக்க வேண்டும்?”

“இது அபிஸீனியப் பெண்கள் உடையல்ல. இதில் தேட வேண்டிய கத்தி உங்கள் கச்சையிலேயே இருக்கிறது.”

இதைக் கேட்ட அவன் கையை எடுத்துக்கொண்டான். முதல் நாளிரவு அலள் ஆடைக்குள் அவன் கத்தியை எடுத்தது அவனுக்கு நினைப்புக்கு வந்ததால் அவன் உள்ளம் உணர்ச்சி வசப்பட்டது. என்ன! நான் வரவரத் தமிழர் பண்பாட்டையே இழந்துவிட்டேனா என்று தன்னைத்தானே கேட்டுக்கொள்ளவும் செய்தான்!

கை அகன்றதும் அவள் புன்முறுவல் செய்து கூறினாள். “வீரரே! கத்தியை நான் எதிர்பார்த்தபடி உபயோகப் படுத்தினீர்கள். இல்லையேல் நான் உங்களை இங்கு கொணர்ந்திருக்க முடியாது” என்று.

இதயசந்திரன் வியப்பு விழிகள் கூர்ந்து நோக்கின. “நான் கத்தியை உபயோகப்படுத்தினனோ!” என்று வினவவும் செய்தான் அவன் வியப்பு குரலிலும் ஒலிக்க.

அவள் வினவினாள். “நான் உங்களை வேண்டுமென்றே தலையில் லேசாக அடித்தேன். இல்லையேல் உங்கள் முழு சுரணையும் தப்பியிருக்கும். தப்பியிருந்தால் வீரர்கள் உங்களை கயிறுகட்டிக் கடலுக்குள் இறக்கியிருப்பார்கள். கயிறு அறுந்தால் என்ன ஆகும் என்பதை முன்பாகவே விளக்கினேன் உங்களுக்கு. அதற்காகவே ரகசியமாகக் கத்தியைக் கொடுத்தேன். உங்களை வீரர்கள் கயிறுகட்டி இறக்கியபோது கயிறு திடீரென அறுக்கப்பட்டது. நீங்கள் பாறை நோக்கிச் சென்றீர்கள். புரிகிறதா இப்பொழுது?”

”இருக்கும். அப்படித்தானிருக்கும்” என்று பதில் கூறினான்.

அவள் தொடர்ந்தாள். ”உங்களைத் தேட நான் வாசல் வழியாக வந்து மலைப் பாதையில் நடந்தேன். எனக்கு நேர்ப்புறத்தில் உங்களுக்கு நீர் கொடுக்கக் கூடாதென்று கூறிய காவலர் தலைவனும் வந்தான்.

உங்களை யார் அழைத்துச் செல்வது என்று சண்டை வந்தது. கடைசியில் பிடிவாதத்துடன் நானே உங்களை அழைத்து வந்தேன்.”
“எப்படி?”

‘அரைச் சுரணையுடனிருந்த உங்களை என் மாலுமிகளை விட்டுத் தூக்கச் செய்தேன்.”

“யாரந்த மாலுமிகள்?”

‘இந்தக் கப்பலின் மாலுமிகள்.”

“இந்தக் கப்பல் யாருடையது?”

“என்னுடையது.”

“உன்னுடையதா!” என்று வியப்பால் வாயைப் பிளந்தான் இதயசந்திரன்.

“ஏன் எனக்குக் கப்பல் இருக்கக்கூடாதா?” என்று வினவினாள் மந்தகாசம் முகத்தில் விரிய.

“நீ பெண்…” என்று ஏதோ சொல்லத் துவங்கினான் அவன்.

”பெண் படகோட்டலாம். கப்பலோட்டக் கூடாதா?” என்று வினவினாள் அவள்.

”வீட்டை நிர்வகிக்கலாம், விளக்கேற்றலாம்…” என்று சொல்லிக் கொண்டு போன அவனைத் தடுத்து அவள் கூறினாள்: “அந்தப் பணிகளிலொன்றுக்கும் இந்தப் பணிக்கும் சம்பந்தமுண்டு” என்று.
”என்ன சம்பந்தம்?”

”விளக்குக்கும் பெண்ணுக்கும் சம்பந்தமுண்டல்லவா? அந்த சம்பந்தம். நீங்கள் அப்பொழுதிருப்பது எனது சொந்தக் கப்பல் ஜலதீபம்” என்று கூறிய அவள் பஞ்சனையிலிருந்து எழுந்திருந்தாள். அவள் கையைப் பிடித்து நிறுத்தினான் இதயசந்திரன். அதைக் கண்டு வாயிற்படியில் நின்ற கனோஜி ஆங்கரே கடகடவென நகைத்தார்.

Previous articleJala Deepam Part 1 Ch26 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 1 Ch28 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here