Home Historical Novel Jala Deepam Part 1 Ch28 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 1 Ch28 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

52
0
Jala Deepam part 1 Ch28 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 1 Ch28 | Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 1 Ch28 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 28 இந்திர போகம்

Jala Deepam Part 1 Ch28 | Jala Deepam | TamilNovel.in

கடகடவென நகைத்த கனோஜி ஆங்கரேயைக் கண்ட இதயசந்திரன் அதுவரை பிடித்திருந்த அழகுக் கையை விட்டு வியப்பு நிரம்பிய கண்களை அவர்மீது திருப்பி, “நீங்களா!” என்று வினவினான்.

கனோஜி ஆங்கரேயின் பெரு விழிகளில் விஷமம் தாண்டவமாடிக் கொண்டிருந்தது. “நானே தான். மீண்டும் உனக்குத் தடையாக வந்து சேர்ந்துவிட்டேன்” என்று அவர் சொன்ன பதிலிலும் விஷமம் தோய்ந்து கிடந்தது.

படுத்த நிலையிலும் பதைபதைத்த உள்ளத்துடன் ஆங்கரேயை நோக்கிய இதயசந்திரன், ”உங்களுக்கு இந்த மாதிரி பேச்சுதான் பழக்கம் போலிருக்கிறது?” என்று சற்றுச் சினத்துடன் வினவினான்.

”என் பழக்கம் மாற்றவர் பழக்கத்தைப் பொறுத்தது” என்று சுட்டிக் காட்டிப் புன்முறுவல் கோட்டினார் மகாராஷ்டிர ஸார்கேல்.

அவர் எதைச் சுட்டிக்காட்டுகிறார் என்பது புரிந்தும் புரியாததைப்போல் நடித்த இதயசந்திரன், ‘மற்றவர் பழக்கமா?” என்று வினவினான்.

“ஆம்.”

“மற்றவர் என்பது என்னைச் சுட்டும் போலிருக்கிறது.”
“யார் மனச்சாட்சி குத்துகிறதோ அவரைச் சுட்டும்.”

”என் மனச்சாட்சி…” என்று ஏதோ சொல்லப்போன இதயசந்திரனைப் பட்டென்று மடக்கிய கனோஜி, “கை சாட்சியைவிட உயர்ந்ததா? தாழ்ந்ததா?” என்று கேட்டு நகைத்தார் பெரிதாக.

“கைசாட்சியா!” என்று கோபத்துடன் கேட்டான் தமிழன்.

‘ஆம் தமிழா! என் கண்முன்னாலேயே என் பெண்ணின் கையைப் பிடித்து இழுக்கிறாயே. ஆகையால் உன் கைசாட்சி எப்பேர்ப்பட்டது? அப்பேர்ப்பட்ட கையைத் தூண்டும் மனச்சாட்சி எப்பேர்ப்பட்டது?” என்று விளக்கிய ஸார் கேல் தமது நகைச்சுவையைத் தாமே ரசித்துப் பயங்கரமாக அந்த அறையே அதிரும்படியாக நகைத்தார்.

அதுவரை வாளாவிருந்த அப்பெண், “அப்பா! என்ன தாறுமாறாகப் பேசுகிறீர்கள்?” என்று ஆங்கரேயைக் கடிந்து கொண்டாள். அவரைப் பார்த்த அந்த அழகிய விழிகளில் கோபம் மண்டி நின்றது. அத்துடன் சிறிது. வெட்கமும் கலந்திருந்தது.

ஆங்கரே அவள் கோபத்தையும் கவனிக்கவில்லை. அவள் வெட்கத்தையும் சட்டை செய்யவில்லை. ”மஞ்சு! இந்தத் தமிழன் தாறுமாறாக நடப்பதைப்பற்றி நீ கோபிக்கவில்லை. நான் பேசுவதை மட்டும் ஆட்சேபிக்கிறாய்” என்று கேட்டார் தமது பேச்சின் தோரணையைச் சிறிதும் மாற்றாமல்.

அந்த அழகியின் பெயரை முதன் முதலாகக் காதில் வாங்கிய இதயசந்திரன், ‘மஞ்சு! மஞ்சு! என்ன அழகான மிருதுவான பெயர்’ என்று எண்ணியதன்றி உதட்டில் மஞ்சு மஞ்சு என்று முணுமுணுக்கவும் செய்தான்.

அதைக் கவனித்த ஆங்கரே, “பார்த்தாயா பெண்ணே! உன் பெயரைத் தமிழன் ஜபம் செய்கிறான், உனக்குப் பக்தனாகி விட்டான். இருந்தாலும் இவனை நம்பாதே. பெண்களை மயக்குவதில் இவன் இணையற்றவன்” என்று கூறியதன்றி, பொய்க் கவலையை முகத்திலும் படரவிட்டுக் கொண்டார்.

“அப்பா! நீங்கள் தளத்துக்குச் செல்லுங்கள். நான் வருகிறேன்” என்று உத்தரவிட்டாள் மஞ்சு.

“இவனுடன் உன்னைத் தனியாக விட்டா?” என்று வினவினார் கனோஜி.

“ஆம். என்னைக் கடித்துத் தின்றுவிடமாட்டார் போங்கள்” என்று அதட்டினாள் மஞ்சு.

”அப்படி நிச்சயமாகச் சொல்ல முடியாது” என்று கூறிவிட்டு வாயிற்படியைவிட்டு அகன்று அப்பாலிருந்த படிகளில் ஏறிச் சென்றார் கனோஜி ஆங்கரே. அவர் காலடிகள் மரப் பலகையில் திம் திம்மென்று சப்திக்கவே தானிருக்குமிடம் அந்த மரக்கலத்தின் அடிப்பகுதியென்பதைப் புரிந்துகொண்டான் இதயசந்திரன். அடிப் பகுதியில் அறையிருக்கும்படியான இடமிருக்குமானால் கப்பல் பெருங்கப்பலாக இருக்க வேண்டுமென்ற முடிவுக்கும் வந்தான். அத்தகைய பெரிய கப்பலைத் தன் கப்பல் என்று அப்பெண் கூறியதால் ஒருவேளை ஆங்கரேயின் மகளென்ற முறையில் அவள் அந்த உரிமை கொண்டாடுகிறாளோ என்றும் எண்ணினான் இதய சந்திரன். உண்மையில் அக்கப்பல் மஞ்சுவுக்குச் சொந்த மென்பதும் அதற்கு அவளே. தலைவியென்பதும் அன்று மாலையில் புரிந்துகொண்டான் தமிழக வீரன். ஆனால் பகலுணவு அருந்த வேண்டிய அந்தச் சமயத்தில் மஞ்சுவுக்கும் கப்பலுக்கும் கனோஜி ஆங்கரேயுக்குமிருந்த சம்பந்தம் சரியாக விளங்காது போகவே அவன் கேட்டான். ”பெண்ணே, உனக்குத் தந்தை இல்லையென்றாயே?” என்று.

“ஆம். சொன்னேன்” என்ற அவள் படுக்கையில் பக்கத்தில் நின்ற வண்ணம் கேட்டாள். “ஏன் பெண்ணே யென்று அழைக்கிறீர்கள்? இப்பொழுது என் பெயர் தெரிந்து விட்டதல்லவா?”

”ஒரு பகுதி தெரிந்தது’ என்றான் அவன்.

“ஒரு பகுதியென்றால்?” என்று அவள் வினவினாள் தன் அழகிய பெருவிழிகளை அவன் முகத்தில் நிறைக்க விட்டு.

”மஞ்சு என்று அவர் அழைத்தார்” என்றான் அவன்.

“ஆம். மஞ்சுளா என்பதன் சுருக்கம் அது.”

“அதைத்தான் சொன்னேன்.”

‘’எதை?”

“மஞ்சு என்ற சொல்லில் பெயர் பூர்த்தியாக வில்லையே என்று.”
“இப்பொழுது பூர்த்தியாகிவிட்டதல்லவா?”

“பெயர் சம்பந்தப்பட்டவரையில் பூர்த்தியாகி விட்ட து.”

“வேறு எது பூர்த்தியாகவில்லை?”

“பல சந்தேகங்களுக்கு விடைகள்?”

“அதற்குக் காத்திருக்கலாம்.”

“என்னால் முடியாது.”

“நீங்கள் ரொம்ப அவசரக்காரர்.’’

“நானா!”

“ஆமாம். பெண்ணைக் கண்டதும் கையைப் பிடிக்கிறீர்கள். பிறகு விளக்கம் கேட்கிறீர்கள். கொஞ்சம் அவசரத்தை எதிலும் குறைத்துக் கொள்ள வேண்டும். எது பலிக்கும் எது பலிக்காது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்” என்று உபதேசம் செய்துவிட்டு, குழந்தையைத் தட்டுவது போல் அவன் முதுகில் ஒரு தட்டும் தட்டிவிட்டு அறையை விட்டு வெளியேறினாள் மஞ்சு.

அவள் திரும்பிச் சென்றபோது உறுதி கலந்த அவள் நடையழகைத் கண்டான் அவன். பக்கவாட்டிலும் மேலும் கீழும் நடைக்குத் தக்கபடி அசைந்த பெரும் அழகு உயர்வுகள் அவனை உன்மத்தம் செய்து கொள்ளச் செய்தன. அவள் சராய் அணிந்திருந்ததால் அளவுக்கு மீறித் தெரிந்த கால் கட்டும் மற்றக் கட்டுகளும் அவனை வெறி கொள்ளச் செய்தன. அந்த நிலையில் இருமுறை படுக்கையிலேயே, அசைந்த இதயசந்திரன் தனது மனம் பேதலிப்பதை நினைத்துத் தன்னைப் பெரிதும் நொந்து கொண்டான். ‘பானுதேவியிடம் உறவாடினேன் அன்றிரவு! இன்று காலை இவளிடம் உன்மத்தம் கொள்கிறேன். இதென்ன, பண்பாட்டை அடியோடு இழந்து விட்டேனா’ என்று தன்னைத்தானே கண்டித்துக்கொண்டான்.

அத்தனைக் கண்டனத்தையும் மனம் லட்சியம் செய்யாமல் அவனையும் மீறி அவள் அழகுகளையும், அழகின் முக்கிய இடங்களையும் நினைத்து நினைத்துத் திண்டாடிக் கொண்டிருந்தது. அவற்றின் ஊடே தான் பாறையருகில் பதுங்கியிருந்தபோது அவள் பக்கத்தில் உட்கார்ந்து ஜலதீபத்தைப் பற்றிப் பிரஸ்தாபித்த கூட்டத்திலிருந்து அந்த வேளையில் ஜலதீபத்தில் பயணம் செய்யும் வரை நடந்த நிகழ்ச்சிகள் எல்லாம் திரும்பத் திரும்ப அவன் மனத்தில் வலம் வந்தன. போதாக்குறைக்கு அவன் மனம் திரும்பத் திரும்பக் கேள்வி மீது கேள்வியாகத் தொடுத்துக் கொண்டிருந்தது உள்ளூர. ‘பாறையில் நான் மறைந்திருந்தது இவளுக்கு எப்படித் தெரியும்? என்னுடன் ஆற்றங் கரையில் படுத்திருந்தவள் வாசிஷ்டிப் பிரவாகத்தில் அவ்வளவு லாவகமாக எப்படித் தப்பிச் செல்ல முடிந்தது? சென்றவள் அஞ்சன்வேல் கோட்டைக்குள் எப்படி நுழைந்தாள்? எப்படி நீர் கொடுக்க வந்தாள்? நான் தேடி வந்த அந்தப் பாதகனுடன் பேசியதை அவன் எப்படி ஒப்புக்கொண்டான்? என்னைத் தலையிலடித்துக் கயிற்றில் கட்டிக் கீழே விட்டபிறகு பாறையிலிருந்தும் கழுகுகளிடமிருந்தும் இவள் என்னைக் காப்பாற்ற அவன் ஏன் ஒப்புக் கொண்டான்?’ என்று இப்படிச் சரமாரியாக அவன் தன்னைக் கேள்விகள் கேட்டுக்கொண்டான். இத்தனைக்கும் அடிப்படையில், ‘மஞ்சு எப்பொழுது வருவாள்?’ என்ற திருட்டுக் கேள்வியும் இருந்தது.

இத்தனைக் கேள்விகளுக்கும் அன்று பகல் பூராவும் அவனுக்கு விடை கிடைக்கவில்லை. மஞ்சுவை அவன் திரும்பப் பார்க்கவுமில்லை. உணவைக்கூட ஒரு மராட்டிய மாலுமி கொண்டுவந்து கொடுத்தான். அவனைக் கேட்ட கேள்விக்குப் பதிலேதும் கிடைக்கவில்லை மாலுமி ஏதும் பேச மறுத்தான். உஷ்ணத்துடன் ‘’பதில் சொல்கிறாயா இல்லையா?” என்ற இதயசந்திரன் சீறியபோது. “உங்களுக்குக் கப்பல் பழக்கம் இல்லை. போகப் போகப் புரிந்து கொள்வீர்கள்” என்று கூறிவிட்டுச் சென்றான்.

இதயசந்திரன் அரைகுறையாக உணவருந்தினான். உணவருந்திய பின்பு ஒரு மாலுமி தட்டை எடுத்துச் சென்றான். மற்றொரு மாலுமி வந்து அவன் தலைக் காயத்தைப் பரிசோதித்து அதற்கு ஒரு திராவகத்தை ஊற்றிப் பஞ்சுவைத்து அழுத்திவிட்டுப் போனான். மாலை ஏதோ ஒரு கஷாயம் அவனுக்குக் கொடுக்கப்பட்டது. அந்தக் காரக் கஷாயம் அவன் தெம்பைத் திரும்பக் கொணரவே படுக்கையில் எழுந்து உட்கார்ந்துகொண்ட இதயசந்திரன் சராயைத் தவிர தனது உடம்பில் உடை ஏதுமில்லையென்பதைப் புரிந்து கொண்டு தனது மேலங்கியைத் தேடினான். அது எங்கும் கிடையாது போகவே சராயுடன் படிகளில் ஏறித் தளத்துக்கு வந்து சேர்ந்தான்.

அவன் வந்தபோது கப்பலின் நடுப் பாய்மரத்தின் அடியில் மஞ்சு நின்று கொண்டு சுற்றிலுமிருந்த மாலுமிகளுக்கு ஏதேதோ பணிகளை இட்டுக்கொண்டிருந்தாள் அங்கிருந்த பீரங்கியொன்றின் வாயைத் துண்டால் துடைத்துவிட்டு கீழே சராயைத் தவிர வேறெந்த உடையும் தரிக்காமலும் முகத்திலும் கையிலும் கரியைத் தீற்றிக் கொண்டும், அடர்த்தியான மார்பு மயிருடனும், பெரும் காது வளையங்களுடனும் முகத்தில் தொங்கிய முரட்டு மயிர்களுடனும் ராட்சதனைப் போல் வந்து கொண்டிருந்த கனோஜி ஆங்கரே, “மஞ்சு! இதோ வந்து விட்டார் தமிழக மன்மதன்!” என்று இரைந்து கூவினார். அவர் அப்படிக் கூவியதும் தளத்தில் பல அலுவல்களிலிருந்த மாலுமிகள் அவனைத் திரும்பி நோக்கினர்.

அந்தச் சூழ்நிலை, வீரனான இதயசந்திரனுக்குப் பெரும் திருப்தியாயிருந்தது. தளங்களைச் சில மாலுமிகள் சுத்தம் செய்ய, சிலர் பாய்க் கயிறுகளைப் பரிசோதிக்க இன்னும் சிலர் வில்லும் அம்பும் வேலும் தாங்கி நிற்க, மற்றும் சிலர் துப்பாக்கிகளைத் துடைத்து மருந்தும் இரும்புக் குண்டுகளும் திணிக்க, மனத்துக்கு மிகத் திருப்தியாயிருந்த சூழ்நிலையைக் கவனித்த இதயசந்திரன், கனோஜி ஆங்கரேயிடமும் அந்த மகாராஷ்டிர மாலுமிகளிடமும் பெரும் மதிப்புக் கொண்டான். எல்லோரையும் விட ஆங்கரேயிடம் அவன் மதிப்பு ஆயிரம் மடங்கு உயர்ந்தது.

அவரை அணுகி, “இக் கப்பல் மிக அழகாயிருக்கிறது கடற்படைத் தலைவரே!” என்று பாராட்டினான்.

பதிலுக்குக் கனோஜி ஆங்கரே மஞ்சுவை அழைத்தார். “மஞ்சு! மஞ்சு! இங்கே. வா! மன்மதன் வேறொன்றைக் காதலிக்க ஆரம்பித்துவிட்டார்!”

அவர் அழைத்தவுடன் பாய்மரத்து அடியிலிருந்து கப்பலின் ஆட்டத்திலும் மிகத் திடமாக அவர் இருப்பிடத்திற்கு வந்த மஞ்சு, ”வேறொன்றையுமா, வேறொருத்தியையுமா?” என்று வினவிவிட்டு நகைத்தாள்.

”மஞ்சு! முதலில் இவன் பானுதேவியைக் காதலித் தான்…” என்று துவங்கியதும் அதை ஆட்சேபிக்கப் போன இதயசந்திரனை, ”உஸ்! சும்மாயிரு!’ என்று அடக்கி விட்டு, ”அடுத்தபடி உன்னைக் கைதொட்டு இழுத்தான். அதை நானே பார்த்தேன். நீங்களிருவருமே மகாராஷ் டிரத்தின் வீரப் பெண்மணிகள். இப்பொழுது மூன்றாவது பெண்மணி அழகாயிருக்கிறாள் என்று ஆரம்பிக்கிறான்” என்று கூறி நகைத்தார் கப்பலும் கடலும் அதிரும்படி.

அவருடைய பொக்கரிப்பில் மஞ்சுவும் கலந்து கொண்டாள். “மூன்றாவது யாரப்பா? அவள் பெயர்?” என்று கேட்கவும் செய்தாள்.

‘மகாலஷ்மி” என்ற கனோஜி ஆங்கரே மேலே எதுவும் சொல்லு முன்பு, ”பொய் பொய்!” என்று கூவினான் இதயசந்திரன்.

”பொய்யல்ல மஞ்சு. கடலைக் கடைந்தபோது கடலில் தோன்றிய ஜோதி யார்?” என்று வினவினார் கனோஜி.

”மகாலஷ்மி.”

“அவள் ஜலதீபம் தானே?”

“ஆம் ஆம்.”
“அவளை அழகு என்று என்னிடமே உன் தந்தை யிடமே கூறுகிறான் இந்தத் தமிழன்.”

”ஐயோ! நான் இக் கப்பலைச் சொன்னேன்” என்றான் இதயசந்திரன்.

”அப்படியானால் கப்பலை இவன் கழுத்தில் கட்டு” என்று கூறிய கனோஜி ஆங்கரே சரேலென்று திரும்பி வேறொரு பீரங்கியைச் சுத்தம் செய்யச் சென்றார்.

மஞ்சு அவனை நோக்கித் திரும்பினாள். ”தமிழரே” என்று அழைத்தாள் கடுமையுடன்.

”மஞ்சு….” என்று அழைத்தான் பணிவுடன் தமிழன்.

“பெயர் சொல்லி அழைக்கிறீர்களா? சொந்தம் கொண்டாட ஆரம்பித்து விட்டீர்களா? இதோ அழைக்கிறேன் தந்தையை” என்ற மஞ்சு, ”அப்பா! அப்பா!” என்று கூவினாள்.

மஞ்சுவின் கொஞ்சுங் குரல் இனிய சங்கீதம் போல் கடல் காற்றில் கலந்தது. அது கலந்த காற்று இதயசந்திரன் உடலைத் தடவிச் சென்றது. இந்திரபோகத்திலிருந்தான் இதயசந்திரன்.

Previous articleJala Deepam Part 1 Ch27 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 1 Ch29 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here