Home Historical Novel Jala Deepam Part 1 Ch3 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 1 Ch3 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

125
0
Jala Deepam part 1 Ch3 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 1 Ch3 | Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 1 Ch3 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 3 கடலரசன் காணிக்கை

Jala Deepam Part 1 Ch3 | Jala Deepam | TamilNovel.in

காயங்கள் கவனிக்கப்பட்டுக் காய்ச்சிய பாலும் குடித்த பிறகு களைப்பின் மிகுதியாலோ திராவகத்தின் மகிமையாலோ கும்பகர்ண உறக்கத்தில் ஆழ்ந்துவிட்ட அந்தக் கட்டிளங்காளையுடன் தனித்து விடப்பட்ட கட்டழகி அவனை நன்றாகக் கூர்ந்து கவனித்தாள். பருவப் பெண்ணொருத்தி பரபுருஷனொருவனை அப்படி ஊன்றிப் பார்ப்பது அத்தனை சரியில்லை என்பதை அந்தச் சுந்தரி உணர்ந்திருந்தாலும், தனிமையளித்த துணிவும், அவனைப் பற்றி சுவாமிகள் இதயத்தில் எழுப்பிவிட்ட சந்தேகமும், அவள் வெட்கத் திரையைச் சற்று விலக்கியிருந்ததால் அவள் அவனை நன்றாகப் பார்க்கவே செய்தாள். நூற்றுக்குத் தொண்ணூறு பேர் விஷயத்தில் முகத்துக்கு நித்திரையளித்து விடும் விகாரம் அவன் வதனத்தில் சிறிதும் ஏற்படாததையும், உறக்கத்திலும் அவன் முகச்சாந்தியுடனும் அழகுடனும் விளங்கியதையும், பெண்களின் உதடுகளைப்போலவே மென்மையாயிருந்த அந்த உதடுகளின் ஓரத்தில் சிறு நகையொன்று தவழ்ந்திருந்ததையும் கவனித்த அந்தக் கட்டழகி, அவன் உள்ளக் களங்கம் ஏதும் அற்றவனென்று நிர்ணயித்தாள். அப்படி அவள் நிர்ணயித்த சமயத்திலேயே திடீரென அவன் இதழ்களில் சிறுநகை மறைந்து இதழ்கள் இரும்புப்பட்டயங்களாக மாறியதன்றி, அவன் முகத்தில் ஏதோ ஒரு கலக்கம் மேகம்போல் படர்ந்துவிட்டதையும் கண்ட அந்தக் காரிகை, தான் அந்தக் காளையை எடை போட்டதில் தவறிருக்குமோ என்று ஒரு விநாடி யோசித்தாள். அந்த வினாடிக்குள் வாலிபன் முகம் பழைய முகமாயிற்று. கடையிதழ்ச் சிறு நகை சற்று அதிகமாகவே துலங்கியது. இதழ்களிலும் கடுமை நீங்கிப் பழைய மென்மை தென்பட்டது.

இந்தத் திடீர் மாற்றம் அந்தக் கட்டழகிக்குப் பெரும் விசித்திரமாயிருந்தது ஏதோ அந்த வாலிபன் இதயத்தில் அவனுக்குச் சினமூட்டக்கூடிய பெரும் ரகசியம் புதைந்து கிடக்கிறதென்பதைப் புரிந்து கொண்டாள். ஆனால் அது எதுவாயிருக்கும், எப்படிப்பட்டதாயிருக்கும், இந்த வாலிப வயதுக்குள் அத்தகைய துக்கத்தையோ வெறுப்பையோ சினத்தையோ விளைவிக்கக்கூடிய என்ன விபரீதம் அந்த வீர வாலிபன் வாழ்க்கையில் ஏற்பட்டிருக்க முடியும் என்பதையும் சிந்திக்கத் தொடங்கிய அந்த அழகி, ‘இந்த வீண் யோசனை எனக்கு எதற்கு? இவர் யார், நான் யார்?’ என்று தனக்குள் கேள்வியும் எழுப்பிக்கொண்டாள். அந்தக் கேள்வியைக் கேட்டுக் கொண்டாலும், எண்ணங்களை அந்த வாலிபனிடமிருந்து பிரிக்க முயன்றாலும், முடியாத தால் மீண்டும் அவன் அழகிய வதனத்தைத் திரும்பத் திரும்பப் பார்த்தாள். அவன் வாள் நுதலும், அடர்ந்த வளைந்த புருவங்களும் கண்களை மூடி நின்ற நீள் இமைகளும் பெண்களின் அழகையும் தோற்கடிக்கும் வண்ணம் அமைந்திருப்பதைக் கவனித்த கட்டழகி அவன் மேலுதட்டில் லேசாகத் துளிர்த்துக் கருத்திருந்த மெல்லிய ரோமத்தொடர் மட்டுமில்லாதிருந்தால் அவனை பெண்ணென்று கூறிவிடலாமென்று நினைத்தாள். ஆனால் அந்த அழகிய முகத்தில் உறக்கத்திலும் தெரிந்த ஓர் உறுதி. கம்பீரம், மென்மையிலும் ஆண்மை சொட்டிக்கொண் டிருந்த இதழ்களின் அமைப்பு, இவை பெண்மைக்கும் அந்த முகத்துக்கும் சம்பந்தமில்லை என்பதைப் பறைசாற்றின. அது மட்டுமல்ல கடற்கரையில் சற்று முன்பு நாராகக் கிழிந்த உடையில் இருந்து வெளிப்பட்டுக் கிடந்த மார்பும், நீண்ட கைகளும் கால்களும். அவள் அகக்கண் முன்பு எழுந்து தாண்டவமாடவே, அவள் கண் களை அவன் முகத்தைவிட்டு நீக்கவும் செய்தாள் முகத்தை விட்டு நீங்கிய கண்கள் அந்த அறை மூலையில் எறியப் பட்டிருந்த அந்த உடைகளின் மீதும நிலைத்து மறுபடியும். போர்த்தப்பட்ட கம்பளியின் மீதும் நிலைத்தன.

நிலைத்த கண்களில் சங்கடமும், வெட்கமும், கலக்கமும் பீதியும் கலந்து தாண்டவமாடின. கழுத்து மட்டும் போர்த்தப்பட்டிருந்த அந்தக் கம்பளிக்குள் அந்தக் கட்டிளங்காளை பிறந்த மேனியில் படுத்திருந்தானென்பதும் அவன் உடை பூராவையும் துறவிகளைந்து விட்டாரென்பதும் அப்பொழுதுதான் நினைவிற்கு வரவே, அவள் உட்கார்ந்திருந்த நிலையில் அதிர்ச்சியுற்றுத் தரை மீது கண்களை நிலைக்கவிட்டாள். இப்படி ஒரு நிலையிலுள்ள ஆடவனுடன் சுவாமி எப்படித் தன்னைத் தனியாக விட்டுச் செல்லலாம் என்று கோபத்துடன் கேட்டுக் கொள்ளவும் செய்தாள். இந்த எண்ணத்துடன் ‘உறக்கத்தில் இவர் கம்பளி விலகி விட்டால்?’ என்ற மற்றொரு கேள்வியும் எழுந்து பெரும் பீதியை அவள் இதயத்தில் எழுப்பி விடவே அவள் உடல் ஒரு முறை இலேசாக நடுங்கியது அவனைத் தனியாக விட்டுத் தன் கூடாரத்துக்குச் சென்று விட்டாலென்ன என்று ஒரு முறை நினைக்கவும் செய்தாள். ஆனால் அவள் எழுந்திருக்கவும் இல்லை. ஓட முயற்சிக்கவும் இல்லை. ‘சுவாமியின் கட்டளையை மீற முடியாது. அரசர்களாலேயே அவர் கட்டளையை மீற முடியாமலிருக்க அபலை யான நான் எப்படி மீறமுடியும்?’ என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டாள் ஆனால் அவள் உள்ளம் கேட்டது. ‘ஏனடி! நீ சுவாமியின் கட்டளைக்காகவா உட்கார்ந்திருக்கிறாய்? நடுக்கத்திலும் திகைப்பிலும் லேசான இன்பமும் உன் இதயத்தில் ஏன் ஊடுருவுகிறது?’ என்று. அந்த ஆடவனின் ஆடையற்ற உடல் ஏதேதோ விகார எண்ணங்களைத் தன் மனத்துள் விரவி விடுவதை அவள் உணர்ந்தாள் மனிதப் பிறவியில் சமுதாயக் கட்டுப்பாடுகள். நாகரிக வலைகள், எத்தனை கோட்பாடுகளை ஏற்படுத்தினாலும் ,சிருஷ்டியின் அடிப்படை இச்சைகளை யாரும் வெற்றி கொள்ள முடியா தென்பதை அவள் சந்தேகமற உணர்ந்து கொண்டாள். எல்லாமறிந்த சுவாமி தன்னை எதற்காக இவருக்குக் காவலாக உட்கார வைத்துப் போனார் என்று துறவியைக் கடிந்தும் கொண்டாள். பிறகு அந்த வாலிபனைப் பார்க்காதிருக்கக் கண்களையும் மூடிக்கொண்டாள்.

மூடிய கண்கள் அதிக விபரீதத்தை இதயத்தில் விளை வித்தன. சுவாமியின் சங்கநாதம் கேட்டுத் தான் தோழிகளுடன் கடற்கரைக்கு ஓடி அங்கு அந்த வாலிபனைக் கண்டது முதல் கூடாரத்தில் காவலிருக்கும் இந்த விநாடி வரையில் நடந்த சகலமும் அவள் கண்முன்பு எழுந்தன. விதி வீசிய தேவபுருஷன்போல் அந்த வாலிபன் கடற்கரையில் கிடந்தது, கப்பல் மரச்சிலாம்புகள் முதுகின் பல இடங்களில் ஆழப் பாய்ந்திருந்துங்கூட அவன் முகத்தில் சிறிதும் துன்பச்சாயை காட்டாமல் மணலில் நடந்தது. கூடாரத்தில் சிலாம்புகள் பிடுங்கப்பட்டபோது ஒரு ஹுங்காரமோ வேறுவித முனகலோ இல்லாமல் சகித்தது, இத்தனையும் அவள் மனக்கண்ணில் வலம் வந்தன. அத்துடன் கம்பளியைப் போர்த்திக் கம்பளிக்குள் கையை விட்டு சுவாமி அவன் உடைகளைலாவகமாக உருவி வெளியிலெடுத்ததும் நினைவுக்கு வரவே, அதனால் ஏற்பட்ட துர் எண்ணத்திலிருந்து மீள அவள் சரேலெனக் கண்களைத் திறந்தாள் கண்களைத் திறந்தாலும் மூடினாலும் கூடாரத்தில் இருக்கும் வரை தனது நிலை ஒரே விதமே என்பதைப் புரிந்து கொண்ட அந்தக் கட்டழகி சரேலென எழுந்திருந்து கூடாரத் திரையை விலக்கி வெளியே வந்து கடற்புறம் நோக்கி ஆகாயத்தையும் நோக்கினாள்.

சந்திரனிருந்த சாய்விலிருந்து உச்சிவேளை தாண்டி ஒரு ஜாமம் ஓடி விட்டதை அறிந்த கட்டழகி, ‘அப்பொழுதே சென்ற சுவாமி ஏன் இன்னும் வரவில்லை? கடலோரத்தில் இன்னும் என்ன செய்து கொண்டிருக்கிறார்?’ என்று தன்னைத்தானே வினவிக்கொண்டாள். சுவாமி வருகிறாரா என்பதைப் பார்க்க நீண்ட தூரம் கடலோரத்துக்காகக் கண்களை ஓட்டியும் பார்த்தாள். சுவாமி வரவில்லை. வருவதற்கான அறிகுறி எதுவும்
தென்படவும் இல்லை. சுமார் ஒரு நாழிகைக்கு மேல் வாயிற் சீலைக்கருகிலேயே நின்று கொண்டிருந்த கட்டழகி ஒரு விநாடி பக்கத்துக் கூடாரத்துக்குச் சென்று தன் தோழிகளை அழைக்கலாமாவென்று யோசித்தாள். இல்லாவிட்டால் அதற்கும் அடுத்திருந்த இரண்டு கூடாரங்களிலிருந்து பல்லக்குத் தூக்குவோரையோ அல்லது காவல் வீரர்களையோ அழைத்து விட்டாலென்ன என்றும் யோசித்தாள். என்ன காரணத்தாலோ இரண்டையும் செய்யாமல் மீண்டும் கூடாரத்துக்குள் சென்றாள். சென்றவள் பழைய இடத்தில் பேசாமல் உட்காராமல் கூடாரத்துக்குள் அங்கும் இங்கும் உலாவினாள். கூடாரத்தை மீண்டும் ஒரு முறை சுற்றி நோக்கவும் செய்தாள்.

கூடாரத்தின் ஒரு மூலையில் கயிற்றுக்கொடியில் சுவாமியின் காஷாயங்கள் மடிக்கப்பட்டு வரிசையாகப் போடப்பட்டிருந்தன. மற்றொரு மூலையில் கிழக்கு நோக்கிப் போடப்பட்டிருந்த வியாக்கிராசனத்தில், எடுப்பான மஞ்சத்தின் மேல்சிக்குப் பலகையில். அவருடைய பாராயணச் சுவடிகள் இருந்தன. இந்தப் பாராயணச் சுவடிகளுக்கு மேலிருந்த தாமரை மணி ஆரமும், பட்டுப் பவித்திர மாலைகளும் சர்வ லட்சணமாக மாலைகளாகச் சாத்தப்பட்டிருந்தன. அந்தச் சுவடிகளின் மேலேயிருந்த ஒரு செம்புச் சம்புடம் விளக்கொளியில் நெருப்புத் துண்டம்போல் சுடர்விட்டுக் கொண்டிருந்தது. அந்த ஓலைச் சுவடியும், சம்புடமும், சலனப்பட்ட மனத்துக்குச் சிறிது சாந்தியை அளித்தன. அவள் ஆசுவாசப் பெருமூச்சுவிட்டு மீண்டும் வாசலுக்குச் சென்று திரும்பி வந்தாள். நாழிகைகள் ஓடின. சுவாமி திரும்பவில்லை. இரவின் கடைசி ஜாமமும் முடிந்தது. வானச் சந்திரன் வெண்சல்லாத் துணிபோலும் கர்ப்ப ஸ்திரீகளின் முகம்போலும் சோபையிழந்து பலவீனப் பட்டு வெளுத்தான். அடுத்திருந்த காட்டிலிருந்து பட்சி ஜாலங்கள் கூவின. சில ஆகாயத்தில் பறக்கவும் முற்பட்டன. இதையெல்லாம் கண்டு உள்ளே வந்த கட்டழகி கொடியிலிருந்த பெரும் காவி ஆடையொன்றை எடுத்து அந்த வாலிபனை மூடியிருந்த கம்பளிமேல் பூராவாகப் போர்த்திவிட்டு, ”இனி இவர் புரண்டாலும் பயமில்லை’ என்று சற்று இரைந்தே சொன்னாள்.

இதைக் கேட்டு வாயிற்திரைச் சீலையருகிலிருந்து யாரோ களுக்கென்று சிரித்தார்கள். திரும்பிப் பார்த்த கட்டழகி. தன் தோழிகளிருவர் தன்னைப் பார்த்து நகைத்துக்கொண்டு நிற்பதைப் பார்த்ததும் அவர்களை வெகுண்டு நோக்கி, ”நகைப்பதற்கு என்ன இருக்கிறது. இங்கே?” என்று சீற்றத்துடன் வினவினாள்.

“சுவாமிக்கு ஒரு சீடரையும் சிருஷ்டித்து விட்டீர்களே தேவி” என்று கூறிய ஒரு தோழி மறுபடியும் நகைத்தாள்.

‘சீடரையாவது சிருஷ்டிப்பதாவது?” என்று மீண்டும் சீறினாள் கட்டழகி.

“அதோ, அதைச் சொல்கிறோம் தேவி” என்று கூறிய மற்றொரு தோழி வாலிபன் மீது போர்த்தப்பட்டிருந்த காவி உடையைக் கைவிரலால் சுட்டிக் காட்டினாள்.

”இவருக்கு நீங்கள் ஏன் துறவறம் அளிக்கிறீர்கள்? வேண்டுமானால் சுவாமியே அளிப்பாரே’ என்று கூறிச் சிரித்தாள் இன்னொரு தோழி.

“காவி உடை போர்த்தியவர் எல்லாரும் துறவிகளாகி விடுவார்களா?” என்று கேட்டாள் தேவி மீண்டும் கோபத்துடன்.

“ஆகமாட்டார்கள் தேவி. அப்படியிருக்க ஏன் காவி உடை போர்த்தினீர்கள்?” என்றாள் முதலில் சிரித்தவள்.

“சுவாமி கூடாரத்தில் போர்த்த வேறு என்ன இருக் கிறது?” இதைக் கேட்ட தேவியின் குரலில் முன்னைவிடக் கோபம் பன்மடங்கு அதிகமாகி இருந்தது.

”சுவாமிதான் கம்பளி போர்த்தி விட்டாரே?” என்று சுட்டிக் காட்டினாள் இரண்டாமவள்

“கம்பளி போதாவிட்டால்?”. இதற்கு மேல் சொல்ல தேவியிச்ன் நா எழவில்லை .

இரு தோழிகளுக்கும் நிலைமை புரியவே இருவர் முகத்திலும் திக்பிரமை சூழ்ந்தது. “அப்படியானால் ‘தேவி…’ என்று திகிலின் ஊடே ஒருத்தி இழுத்தாள்.

”உறக்கத்தில் அவர் புரண்டு ஏதாவது…’ என்ற இரண்டாமவளும் வாசகத்தை முடிக்காமல் குழம்பினாள்.

மூன்று பெண்களின் முகத்திலும் அசடு வழிந்தது. கடைசியில் தேவி மெதுவாகச் சொன்னாள். ” அப்படியெல்லாம் ஒன்றுமில்லையடி…’ என்று.

”இல்லையே.” ஒரு தோழி கேட்டாள்.

“இல்லை.” என்றாள் தேவி.

”நல்லவேளை’ என்றாள் இன்னொருத்தி.

“இப்படி சுவாமி உங்களைத் தனிமையில் விட்டு விட்டுப் போகக் கூடாது தேவி” என்று கண்டித்தாள் ஒரு தோழி.

“எங்களையாவது நீங்கள் துணைக்குக் கூப்பிட்டிருக்கலாமே தேவி” என்று அங்கலாய்த்தாள் மற்றொரு தோழி.

”நீங்கள் வந்து மட்டும் என்ன செய்துவிட முடியும்?” என்று கேட்டாள்.

இரு தோழிகளுக்கும் புரிந்தது தேவியின் நிலைதான் தங்களுக்குமென்பது. ஆகவே இருவரும் வெட்க நகை கோட்டினார்கள். ‘சே. கேவலம், ஆனாலும் கேவலம்” என்று சொல்லிய தோழியொருத்தி நகைத்தாள். தேவியும் மற்ற தோழியும் அவளுடன் சேர்ந்து நகைத்தார்கள். அவர்கள் நகைத்துக் கொண்டிருந்த அதே சமயத்தில் சுவாமியும் கூடாரத்துக்குள் நுழைந்தார். அவர்கள் சிரிப்பை அவர் கவனிக்கவில்லை . அவர் முகத்தில் கவலை பெரிதும் மண்டிக் கிடந்தது. கையிலிருந்த ஒரு வாளைக் கூடாரத்தின் மூலையில் சாத்திவிட்டு, மடியிலிருந்த ஓர் உருட்டிய இடைக் கச்சையை எடுத்துத் தேவியிடம் நீட்டி, “தேவி! இதில் என்ன இருக்கிறது பார்” என்று கூறினார். தேவி அந்தக் கச்சையைப் பிரித்துப் பார்த்ததல்லாமல் மூலையில் சுவாமிகள் சாத்திய வாளையும் பார்த்தாள். அந்த வாளை இடுப்பில் கட்ட ஏற்பட்ட கச்சைதான் அது. என்பது அவளுக்குச் சந்தேகமறத் தெரிந்தாலும், கச்சையை வாளிலிருந்து ஏன் பிரித்தார் அவர் என்பதை அறியாமல் தயங்கினாள். அவள் தயக்கத்தைப் புரிந்து கொண்ட சுவாமி, ”சரியாகக் கச்சையை சோதித்துப் பார்” என்று: மீண்டும் கூறினார். கடுமை நிரம்பிய குரலில்.

தேவி கச்சையை தடவிப் பார்த்தாள். அதன் நடு மையத்தில் தைக்கப்பட்டிருந்த பையில் ஏதோ கடின வஸ்து அவள் கைகளுக்குத் தென்படவே அந்த இடத்தில் தனது இரு விரல்களை விட்டு அந்த வஸ்துவை எடுத்துப் பார்த்தாள். அறை விளக்கின் காலை நேர மங்கலான பிரகாசத்திலும் அந்தப் பொருள் பெரும் சுடர் விட்டது. அதைக் கண்ட தேவி மட்டுமன்றி, தோழிகளும் முகத்தில் எல்லையில்லா அச்சம் படர பேச்சிழந்து பிரமைபிடித்து. நின்றனர்.

“இது…?” என்று தேவி ஒற்றைச் சொல்லில் கேள்வி எழுப்பித் தன் பங்கய விழிகளைத் துறவியை நோக்கி எழுப்பினாள்.

“கடலரசன் காணிக்கை… மகாராஷ்டிர சாம்ராஜ்யத் துக்கு” என்றார் துறவி. அவர் பதிலில் பணிவிருந்தது. மரியாதையிருந்தது. மட்டற்ற கவலையுமிருந்தது. அத்துடன் சொன்னார் துறவி, ”தேவி! இதை உன் உயிர் போல் பாதுகாக்க வேண்டும். எக் காரணத்தைக் கொண்டும் இந்த வாலிபன் கையில் இது கிடைக்காமல் பார்த்துக்கொள்’ என்று.

Previous articleJala Deepam Part 1 Ch2 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 1 Ch4 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here