Home Historical Novel Jala Deepam Part 1 Ch31 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 1 Ch31 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

63
0
Jala Deepam part 1 Ch31 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 1 Ch31 | Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 1 Ch31 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 31 மனம் தீட்டிய மடல்

Jala Deepam Part 1 Ch31 | Jala Deepam | TamilNovel.in

‘ஆசை எனும் அளவிட முடியாத ஜலம், மன்மதன் எனும் காற்றில் ஏவப்பட்ட மோகமாகிற அலைகள், இவற்றை உடையதால் மனித வாழ்வும் பெரும் கடலுக்கு ஒப்பாகிறது” என்பது தமிழக அரச கவியொருவரின் மணி வாக்கு. அந்த மணிவாக்கின் உண்மையை அந்த இரவில் அரபிக் கடலில் ஊர்ந்து சென்ற ஜலதீபத்தின் தளத்தில் முழுக்க முழுக்க உணர்ந்தான் தமிழகத்தின் வாலிபன். அந்த மணிவாக்கும் தமிழக மன்னர் ஒருவரின் பக்தி வாக்கு தான். மனித வாழ்வுக்காகத் தமிழக மேதைகள் உதிர்த்து விட்டுப் போயிருக்கும் பல மணிமொழிகளில் அம்மொழியும் ஒன்று. அதன் பொருள். அதன் வேகம், அதன் சத்தியம் எத்தன்மையது என்பதை அவன் அன்று பரிபூர்ணமாக உணர்ந்து கொண்டான்.

அரபிக் கடலின் அகண்டமான ஜலம் அவனையும் அவளையும் சுற்றிக் கிடந்தது. அந்த ஜலத்தை விர் விர் என்று காற்று பெரும் அலைகளாகக் கிளப்பியதால் கப்பல் பெரிதும் ஆடிக்கொண்டிருந்தது, கலவியில் ஆடும் கட்டிலைப் போல. வானம் நட்சத்திரப் பட்டாடையணிந்து மரக்கலத்திலிருந்த மோகினியைப் போலவே மேலே மல்லாந்து கிடந்தது. இதயசந்திரன் கையைப் போலவே கடலின் கோடிக் கரங்கள் அதைத் தொட்டுக் கொண்டிருந்தது. தமிழன் கைக்கடியிலிருந்த அந்தக் கடல் மோகினியின் உடலைப் போலவே தொடுவானம் தொடுவது போலும் தொடாதது போலுமிருந்தது. முழுவதும் தொடுவதிலுள்ள பயம் எத்தனை ஆசையை உந்துகிறது! மனம் எத்தனை திண்டாடுகிறது! ஆசையும் வேதனையும் திண்டாட்டமும் கலந்த இந்த நிலைக்குப் பெயர் தான் காதலா?

இப்படித் தன்னைத்தானே கேட்டுக்கொண்ட இதய சந்திரன் மஞ்சுவின் உடலுக்குக் குறுக்கே தனது கையைப் போட்டுக் கொண்டே பல விநாடிகள் உட்கார்ந்து கொண் டிருந்தான். அவன் தன் பக்கத்தில் உட்கார்ந்ததையோ தன் உடலுக்குக் குறுக்கே கையைப் போட்டதையோ லட்சியம் செய்யாமலே அவள் படுத்துக் கிடந்தாள். மல்லாந்து கிடந்த நிலையில் தனது உடலுக்குக் குறுக்கே பாய்ந்த அவன் கரம் அப்பாலிருந்த மரத்தரையில் ஊன்றி யிருந்தாலும் முழங்கைக்கும் கணுக்கைக்கும் இடையி லிருந்த பகுதி தனது பக்கவாட்டில் அழுந்துவதை அவள் உணர்ந்தாள். அதுவரை இரும்பாயிருந்த அவள் உள்ளமும் மெல்ல நெகிழ ஆரம்பித்தது.

இதயசந்திரன் நிலை சொல்லத் தரமற்றதாயிருந்தது. தூரத்தே கப்பல் முகத்தில் கட்டப்பட்டிருந்த விளக்கின் மங்கலான வெளிச்சம் அதிலிருந்து இரண்டடி தூரம் மட்டும் விழுந்து கிடந்ததால், வெளிச்சம் என்பது பூரணமாயில்லாமலும் இருட்டு என்பது பூர்ணமாயில்லாமலும் இரண்டுங்கெட்டானான சோபையொன்று அவள் உடலைத் தெரிந்தும் தெரியாமலும் அடித்திருந்ததாலும், மெள்ளத் தாழ்ந்த அவன் உடலில் அவள் உடல் கூர்ப்புகள் பட்டதாலும் அவன் ஏதோ , பிரமை பிடித்தவன் போலிருந்தான். துணிவுடன் உடலை நன்றாகத் தணித்து விடத் திராணியில்லாத மனம், வேண்டாமென்று அறவே அகற்றி விடவும் சக்தியில்லாத சிந்தை. இவையிரண்டும் அவனை ஆட்டிய விந்தை அவனையே குழப்பித் திண்டாட வைத்தது. அவள் உடலுக்குக் குறுக்கே பாய்ந்து நதியின் மேல் பாலம் போல் அப்புறப் பலகையைத் தொட்டுக் கொண்டிருந்த கை விலாவிலும் பிறகு அவள் இடைக்குக் கீழே எழுந்திருந்த உடற்பகுதியிலும் வேண்டுமென்றே பட்டுவிட்டதா அல்லது அது தற்செயலாக நேர்ந்துவிட்ட ஒரு நிகழ்ச்சியா என்பதுகூட அவனுக்குப் புரியவில்லை. இத்தனைக்கும் அவன் இதயம் ஏன் அப்படிப் பயத்தால் அடித்துக் கொள்கின்றது?

வீரனுக்குப் பயம் உதவுமா? இப்படியும் அவன் தன்னைக் கேட்டுக் கொண்டான். இன்னும் ஓரிழை மட்டும் அவன் உடல் தாழ்ந்தால் அவன் மார்பும் அவள் மார்பும் இணைந்துவிடும். அந்த ஓரிழை இடைவெளி மட்டும் குறையவில்லை. ஆகையால் ஆசை நிறைவு பெறவில்லை. ஆசை நிறைவு பெறாததால் மன ஓசை அதிகமாயிருந்தது.

இப்படி அவன் திண்டாடிக் கொண்டிருந்தபோது அவள் ஏதும் பேசாமல் படுத்துக் கிடந்தாள். தன் உடலை லேசாகத் தடவுவது போலும் தடவாதது போலும் அவன் உடலிருந்த நிலையில் அவள் கலங்கிக் கிடந்தாள். தான் அசைந்தாலும், அல்லது ஆடும் ஜலதீபத்தின் ஆட்டம் சற்று அதிகப்பட்டுத் தன்னை அசைத்தாலும் அவன் உடலுடன் தனது உடல் மோதிவிடுமென்பதைப் புரிந்து கொண்டதால் அவள் வெறும் மரக்கட்டை போல் கிடந்தாள். பார்வைக்கு மரக்கட்டை போலிருந்த அவள் உடலில் உள்ளூர உணர்ச்சிகள் ஊடுருவிச் சென்று கொண்டிருந்தன. நீரின் மேல் மிதக்கும் ஜலதீபம் எண்ணெயைப் போல் ஒளி விடும் தனது உணர்ச்சிகளை எந்த விநாடியிலும் பற்ற வைத்துப் பெரும் பிரளய ஜ்வாலையாக அடித்துவிட முடியும் என்பதை அவள் உணர்ந்தேயிருந்தாள். ஓரிரவு ஒரு பகலுக்குள் இந்த ஆடவனிடம் தனது மனம் ஏன் இத்தனை பணிந்துவிட்டது என்பதை அலசிப் பார்க்க முயன்று தோல்வியே அடைந்தாள். காரண காரியங்களை எண்ணிப் பார்க்க முடியாத வேளை அது. காற்றில் உராயும் மாவிலைத் தோரணங்களைப் போல் உணர்ச்சிகள் சலசலப்பு எழுப்பும் நிதானமற்ற நிலை அது. அந்த நிலையில் காரணத்துக்கு அப்பாற்பட்ட சிந்தனைகளே எழுந்தன அவள் சித்தத்தில். அவற்றால் திண்டாடிய நிலையில் அவள் திடீரென அவன் மார்பைத் தனது கையொன்றால் சற்றுத் தடுத்து மேலே நிமிர்த்தினாள் அவன் உடலை.

ஆனால் அந்த இரும்பு உடல் அதிகமாக அகல மறுத்தது. அவள் கை அவன் உடலுக்கும் தன் உடலுக்கும் குறுக்கே அகப்பட்டுக் கொண்டதால் மிக வேதனையா யிருந்தது அவளுக்கு. ”உம்…” என்ற எச்சரிக்கை ஓசை அவளிடமிருந்து எழுந்தது.

“மஞ்…” மிருதுவாக அவன் அழைத்தான்.

“கை…” என்றாள் அவள். ஆனால் கையை விடுவித்துக் கொள்ளவில்லை.

“ஆம்” என்றான் அவன். அவள் எதைக் குறிப்பிடுகிறாள் என்பதை அறியாமலே.

” அகப்பட்டுக் கொண்டிருக்கிறது…”

”நீயுந்தான்.’’

“நானா?”

“ஆம்.”

“நான்…”

“உம்?”

“யாரிடமும் அகப்பட்டதில்லை.”

“மஞ்சு.”

“உம்.”

” என்றாவது ஒரு நாள்….’’

“ஊம்.’’

“நீயும் ஒருவனிடம் அகப்பட்டுத்தான் ஆகவேண்டும்.”

இதைக் கேட்ட அவள் மெல்ல நகைத்தாள். நகைத்த போது லேசாகச் சிலிர்த்த உடலால் குறுக்கே அகப்பட்டுக் கொண்டிருந்த அவள் கை விடுபடச் சுழன்றது. இந்த முயற்சியை அவன் கண்டான். “மஞ்சு” என்று மீண்டும் அழைத்தான்.

‘ஏன்?” என்றாள் அவள்.

”கையை எடுத்துக் கொள்ள வேண்டுமா?” என்று வினவினான் அவன்.

”ஆம்.”

“எடுத்துக் கொள்ளேன்.”

“இடமில்லையே!”

“அப்படியே எடுத்துக் கொள்ளேன்?”

“ஊஹும்?”

“ஏன் மஞ்சு?”

“அது ஆபத்து.”

“என்ன ஆபத்து?”

“இடையிலிருப்பது அந்தத் தடைதான்.”

இதயசந்திரன் அவள் காதுக்கருகில் குனிந்து கேட்டான்: “அது ஒன்றுதானா மஞ்சு?” என்று.

அவள் உணர்ச்சிகள் கொந்தளித்தன. ”எது?” என்ற கேள்வி குழைந்து உறுதி குலைந்து வந்தது.

“தடை.”

“ஆம்.’’

“நான் நீக்கி விடட்டுமா அந்தத் தடையை?”

அவள் இதற்கு மறு மொழி சொல்லவில்லை. மெல்ல புன்னகை புரிந்தாள். என்ன ஆத்திரம் இந்த ஆடவனுக்கு என நினைத்தாள். அந்த நினைப்பினால் மௌனமே சாதித்தாள் “ஏன் மௌனம் மஞ்சு?” என்றான் அவன். வினவியபோது அவன் இதழ்கள் காதைத் தடவியது போலிருந்தது அவளுக்கு. அதனால் உடல் சிலிர்த்தது அவளுக்கு. பெரும் வியப்பும் ஏற்பட்டது அவள் உள்ளத்தில் இந்த அனுபவம் அவளுக்கு மிகப் புதிதாயிருந்தது. எத்தனையோ கடற்போர்களில் அவள் ஈடுபட்டிருக்கிறாள். அவளைப் பிடித்துக் கீழே தள்ளிய ஆடவர்களும் பலர் உண்டு அப்பொழுதெல்லாம் துளிர்த் தது பெரும் சினம். எழுந்த உணர்ச்சிகளில் வேகமிருந் தாலும் அவை கோபமளித்த வேகம் அவற்றுக்கு முற்றும் மாறான உணர்ச்சிகள் காதில் மெல்ல அசைப்பில் பட்ட அவன் இதழ்கள் தனது உடலில் அலை பாய்ச்சியதை உணர்ந்த அவள் பிரமித்தாள். கோபத்தால் எழுந்த வேகமல்ல அது. கொந்தளிப்பு இருந்தது. கடல் கொந்தளிப்பு இதயத்துக்கு விடுத்த மடலில் வரையப் பட்டிருந்த சொல்லோவியம் மாறுபட்டதாயிருந்தது. மயக்கம் தருவதாயுமிருந்தது.

அதுவரை என்றும் யாரிடமும் மயங்காத மங்கை அவள். எவர் கைபட்டாலும் அசட்டையாகச் செல்லும் ஆணவம் படைத்தவள் அவள். எவரையும் தூக்கி எறியும் சொற்களை வீசவல்ல துணிவுள்ள இதயம் படைத்தவள். அலட்சியப் பார்வையுள்ளவள். அந்த இரவில் அந்த நேரத்தில் அவள் ஆணவம், துணிவு, அலட்சியம் மூன்றையும் இழந்து கிடந்தாள். காரணமில்லாத. அடக்கம், பயம், மயக்கம் மூன்றும் அவளைப் பிடித்துக் கொண்டிருந்தன. ஏதோ பேரதிர்ச்சி ஆட்கொண்டது போல் தோன்றியது அவளுக்கு. அந்த அதிர்ச்சியில், ”வீரரே!” என்று அழைத்தாள் குழைந்த நிலையில்.

”ஏன் மஞ்சு?” என்று அவள் காதுக்குள் கேள்வி விடுத்தான்.

“எழுந்திருங்கள்.”

“ஏன் மஞ்சு?’

“இது சரியல்ல.”

”எது?’

“இப்படியிருப்பது?”

“எப்படியிருப்பது?”

“கேள்வி கேட்காதீர்கள். என்னால் முடியவில்லை.”

“என்ன நடந்துவிட்டது? முன்பு நாமிருவரும் வாசிஷ்டி கரையில் படுத்துக் கிடக்கவில்லையா?”

”அது வேறு.”

“எப்படி வேறு?”

“அங்கு நாம் மூன்றாவது மனிதர்களைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தோம்.”

“இப்பொழுது?”

”நம்மைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம்.”

“அது தவறா?”

“தவறோ சரியோ தெரியாது. குழப்பமாயிருக்கிறது எனக்கு.”

அவன் சற்று நிமிர்ந்து உட்கார்ந்து அவள் கை யொன்றை எடுத்துத் தன் கையில் வைத்துக்கொண்டு, “மஞ்சு! எனக்கும் குழப்பமாகத்தானிருக்கிறது” என்று கூறினான்.

அவள் கையை விடுவித்துக் கொள்ளவில்லை. அவன் உடல் தன் உடலின் அருகிலிருந்து எழுந்துவிட்டதால் ஆசுவாசப் பெருமூச்சு விட்டாள். ”உங்களுக்குமா?” என்று கேட்கவும் செய்தாள்.

”ஆம் மஞ்சு” என்றான் அவன்.

“வீரரே! இத்தகைய குழப்பம் எனக்கு முதல் தடவை’ என்றாள் அவள்.

“எனக்கும் தான் மஞ்சு” என்று கூறினான் அவன்.

“பொய் வீரரே! பொய்!’ அவள் சொல் முன்னைய சக்தியைப் பெற்றுத் திடமாக வந்தது.

”பொய்யா!”

“தந்தை சொல்வது உண்மையாயிருந்தால் பானுதேவியிடமும். இந்தக் குழப்பம் உங்களுக்கு ஏற்பட்டிருக்க வேண்டும். அதற்கு முன்பு எத்தனை தடவையோ யார் கண்ட து?”

அவன் கோபத்தில் விவரம் தெரியாமல் கேட்டான், ”பானுதேவிக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?” என்று.

“அதைத்தான் தந்தை சொன்னாரே?”. என்றாள் அவள்.

”அவர் ஒரு முரடர். நாகரிகமற்றவர்’ என்று கூறினான், இதயசந்திரன்.

அவள் மெல்ல நகைத்தாள். “மஞ்சு! நான் பானுதேவியைச் சந்தித்து இப்பொழுது நான்கு இரவுகளே ஆகின்றன’ என்றான் இதயசந்திரன்.

”ஆகையால்?” அவள் கேள்வி எழுப்பினாள்.

” அவளுக்கும் எனக்கும் என்ன சம்பந்தமிருக்க முடியும்?” என்று பதில் கேள்வி கேட்டான் அவன்.

அவள் புன்முறுவல் கொண்டாள். “வீரரே?” என்று அழைத்தாள் மெல்ல.

“என்ன மஞ்சு?”

“என்னைச் சந்தித்து எத்தனை இரவுகளாகின்றன?”

“இது இரண்டாவது இரவு.’’

‘ஆகையால் உங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்த மிருக்க முடியும்?” என்று கேட்டு நகைத்த அவள் திடீரென எழுந்து உட்கார்ந்தாள்.. “வீரரே! மகாராஷ்டிர மாலுமி களுக்கு ஒரு பாடம் உண்டு” என்று கூறவும் செய்தாள்.

”என்ன பாடம் அது?” என்று கேட்டான் இதய சந்திரன் ஏதும் அறியாமல்.

“சுவர்ண துர்க்கத்தின் தேவதை எங்களுக்கு கற்பித்த பாடம்” என்றாள். அவள்.

”எது அந்தத் தேவதை?” என்று கேட்டான் தமிழன். “கடல் ஆமை” என்று பதில் கூறினாள் அவள்.

வியப்பு மண்டியது வீரன் இதயத்தில். “ஆமையா” என்று இகழ்ச்சியுடன் வினவினான்.

அந்த இகழ்ச்சியை அவள் லட்சியம் செய்யவில்லை. “ஆமைதான் வீரரே! அது கற்றுக் கொடுத்த பாடத்தால் தான் இன்று தந்தை மகாராஷ்டிர கடற்படையின் தலைவர். உலகத்தின் சிறந்த மாலுமி, யாரும் கண்டு அஞ்சும் கடற்போர் வீரர்’ என்று அவள் சொற்கள் வந்தன. கண்களின் பிரகாசம் நட்சத்திரங்களின் பிரகாசங் களைத் தோற்கடித்தது. இதைச் சொன்ன அவள் திடீரென அவனை நோக்கி, ”வீரரே! ஒன்று செய்வீர்களா?” என்று வினவினாள்.

‘சொல் மஞ்சு!” என்றான். அவள் சொன்ன பதில் அவனைத் தூக்கிவாரிப் போட்டது. “என் கன்னத்தில் முத்தமிடுங்கள்” என்றாள் அவள்.
மலைத்துப் போனான் இதயசந்திரன்; அவன் உணர்ச்சிகள் வறண்டுவிட்டன. ‘மஞ்சு! மஞ்சு!” என்று உளறினான். ”இது…” என்று துவங்கினான்.

”சோதனை’ என்றாள் அவள் கடுப்புடன்.

”என்ன சோதனை?”

“நான் ஒரு முடிவுக்கு வர சோதனை” என்றாள் அவள்.

”என்ன முடிவுக்கு வர நினைக்கிறாய்?” என்று அதிர்ச்சியுடன் வினவினான் அவன்.

“உங்களைக் காக்க வேண்டுமா, கொல்ல வேண்டுமா என்ற முடிவுக்கு வர’ இதைச் சர்வசாதாரணமாகச் சொன்ன அவள் திடீரென எழுந்து சென்றுவிட்டாள் தளத்தின் மற்றொரு புறத்தை நோக்கி.

அவள் சொன்னதற்கு விளக்கம் கொடுத்தார் அவன் பின்னால் மெதுவாக வந்த கனோஜி ஆங்கரே. “வாலிபனே! இதுவரை அவளை மூவர் முத்தமிட்டிருக் கிறார்கள். இருவரை அவள் கொன்றுவிட்டாள். கொல்லப்படாமல் ஒருவன் இருக்கிறான்” என்ற கனோஜி ஆங்கரே அவனை முதுகில் தட்டினார்.

அது தட்டலா, அறையா என்பது புரியவில்லை இதய சந்திரனுக்கு. அவளை முத்தமிட்ட இன்னொருவன் உயிருடன் இருக்கிறான் என்ற செய்தி அவனைத்திக்கு முக்காட வைத்தது. அவன் யார் என்ற கேள்வி இதயத்தில் அரபிக்கடல் அலை உயரத்துக்கு எழுந்தது.

Previous articleJala Deepam Part 1 Ch30 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 1 Ch32 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here