Home Historical Novel Jala Deepam Part 1 Ch33 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 1 Ch33 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

61
0
Jala Deepam part 1 Ch33 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 1 Ch33 | Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 1 Ch33 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 33 மீனும் முதலையும்

Jala Deepam Part 1 Ch33 | Jala Deepam | TamilNovel.in

மஞ்சுவைப் பற்றி மகாராஷ்டிரக் கடற்படைத் தலைவர் கனோஜி ஆங்கரே விடுத்த எச்சரிக்கையால் மனம் பலவித போராட்டங்களுக்குள்ளாகவே அப்போராட்டங் களுக்கு அமைதி காணக் கீழேயிருந்த அறைக்கு சென்று பஞ்சணையில் விழுந்த இதயசந்திரன் அங்கும் அமைதியைக் கண்டானில்லை. அந்த இலவம் பஞ்சணை அவனுக்கு அமைதியை அளிப்பதற்குப் பதிலாக, ‘எனக்கும் உனக்கும் சம்பந்தம் உண்டு. நீ இலவு காத்த கிளிதானே’ என்று நகைப்பது போன்ற பிரமை ஏற்படவே இதயசந்திரன் தலையணையைத் தலையால் நன்றாக முட்டிக் கொண்டு பஞ்சணையில் குப்புறத் திரும்பிக் கண்களை மூடிக்கொண்டான். பூனை கண்களை மூடிக் கொண்டால் உலகம் அஸ்தமித்துவிடுமோ என்பது பழமொழியேயானாலும், எப்பொழுதோ சூரியன் அஸ்தமித்து நடுநிசி தாண்டிவிட்ட இந்த இரவின் கருமையையும் கிழித்துக் கொண்டு அவன் புத்தியில் பலவித மின்னல்கள் பளிச் பளிச்சென்று பாயவே, கண்ணை மூடியும் உணர்ச்சி வெளிச்சம் தன்னைத் தாக்கத் தவறவில்லையென்பதையும், தனது சிந்தனை அஸ்தமிக்க மறுக்கிறதென்பதையும், புரிந்து கொண்ட தமிழன் தலையணையில் தலையைப் புரட்டி முகத்தை அழுத்தி உறங்க முயன்றான்.

முகம் அழுந்தினாலும் மனம் அழுந்தாததாலும், உணர்ச்சிகள் பேரலைகளாக எழுந்து தாக்கியபடியாலும் உறக்கம் அவன் பக்கம் வர மறுத்தது. பதிலுக்கு அவன் இரு பக்கத்திலும் கனோஜி ஆங்கரேயும் மஞ்சுவும் நின்றிருந்தார்கள்.

“என் கன்னத்தில் முத்தமிடுங்கள்” என்றாள் மஞ்சு.

“தமிழா! மூவர் அவளை முத்தமிட்டிருக்கிறார்கள். இருவரை அவள் குத்தி கொன்றுவிட்டாள்” என்றார் கனோஜி ஆங்கரே.

“வீரரே! முத்தமிடுங்கள்! அது ஒரு சோதனை. உங்களைக் காக்கவா கொல்லவா என்பதை நான் முடிவு செய்யவேண்டும்” என்றாள் மஞ்சு.

“தமிழா! அவள் சுவர்ண துர்க்கம் மாதிரி. அத்துமீறி நுழையாதே. அதில் ஆபத்திருக்கிறது” என்றார் கனோஜி ஆங்கரே. இப்படித் தந்தையும் மகளும் மாறி மாறிக் கூறிய மொழிகளால் அதிர்ச்சியடைந்து பஞ்சணையில் எழுந்து உட்கார்ந்தான் இதயசந்திரன் திடீரென்று. பஞ்சணையின் இரு பக்கம் வெறிச்சென்றிருந்ததால் தன் பிரமைக்குத் தன்னை நொந்து கொண்ட தமிழக வீரன் மீண்டும் பஞ்சணையில் தொப்பென்று விழுந்தான். அவன் கண்கள் கூரையை நாடின. மனம் கூரையையும் பிய்த்துக் கொண்டு ஜலதீபத்தின் மரத்தளத்தைத் தகர்த்துக்கொண்டு வானை நோக்கிச் சென்றது. இதயசந்திரன் இதயவானில் ஏதேதோ மின்னல், இடிகள், உரையாடல்கள். இவற்றுக்கிடையே மேகக்கூட்டம் ஒன்றும் வந்தது. மேகம் மெள்ள மின்னலை மறைக்க எங்கும் கருமை தட்டியது. இந்தக் கருமை அவன் மனத்துக்கும் மனத்தின் மூலம் கண்களுக்கும் திரையிட்டது.

திரை மூடிய நேரம் தெரியாது தமிழகத்தின் அந்த வாலிப வீரனுக்கு. ஆனால் அது கிழிந்த நேரம் தெரிந்தது. திடீரென எங்கும் பெருங் கூச்சலும் தளத்தின்மீது பலர் ஒடும் சத்தமும் கேட்கவே கண் விழித்த இதயசந்திரன், தனது அறைப் பக்கத்திலிருந்த ஒரு துவாரத்தின் மூலம் அடித்த வெளிச்சத்திலிருந்து பொழுது விடிந்து பல நாழிகை நேரம் ஓடியிருக்க வேண்டுமென்று ஊகித்துக் கொண்டான். அந்த ஊகத்தின் விளைவாகச் சட்டென்று பஞ்சணையிலிருந்து எழுந்து குதித்து அந்தத் துவாரத்தின் மூலம் கடலை நோக்கினான். பக்கவாட்டில் நீர் விலகும் ஓசையிலிருந்து ஜலதீபம் அதிக வேகத்தில் செல்லுவதை உணர்ந்தான். மேலேயும் அக்கம்பக்கத்திலும் வந்த கூச்சலிலிருந்து ஜலதீபத்தைத் தவிர வேறு மரக்கலங்களும் அக்கம்பக்கத்தில் வந்து கொண்டிருக்க வேண்டுமென்றும் தீர்மானித்தான். இந்த நிலையில் எங்கிருந்தோ கிளம்பிய பீரங்கி வெடிச் சத்தமும், அதைத் தொடர்ந்து கடற் பறவைகள் சிறகடித்துக் கூச்சல் இட்டு எழுந்த ஒலிகளும், கப்பல் கரை அருகில் வந்து விட்டதை அறிவுறுத்தவே அறைக் கதவை திறந்து கொண்டு வெளியே செல்ல முற்பட்டான். கதவு திறந்ததும் அதைக் காத்து நின்ற மாலுமி, “தாங்கள் பல் துலக்கி முகம் கழுவ நீர் கொணர்ந்திருக்கிறேன்” என்று கூறிக் கீழே இருந்த பெரும் பாத்திரத்தையும் ஒரு குவளையையும் காட்டிய தன்றிப் பல் சூரணக் குப்பியொன்றையும் நீட்டினான். இதயசந்திரன் பல் துலக்கி முகம் கழுவி உடைகளை நன்றாகச் சீர் செய்துகொண்டு இடைக்கச்சையில் வாள் கட்டி, கைத்துப்பாக்கியைச் சொருகிக்கொண்டு தளத்துக்கு வந்தான். வந்தவன் வாயடைத்து நின்றான்.

எதிரே மேற்குக் கடற்கரை தெரிந்தது. ஸஹ்யாத்ரி தெரிந்தது. அந்த ஸஹ்யாத்ரியிலிருந்து கடல் என்றோ பிரித்துவிட்ட, ஒரு பெரும் தீவும் கோட்டையும் தெரிந்தன. அந்தக் கோட்டையை நோக்கித் திருப்பப்பட்டிருந்த ஜல தீபம் கரை அருகாமைக்கு வந்துவிட்டதால் அதிகமாகச் சீறிய அலைகளில் எழுந்து எழுந்து தாழ்ந்து அந்தத் தீவுக் கோட்டையை முகப்பால் பார்த்துக்கொண்டு அணுகத் தொடங்கியது. பாய்கள் அனைத்தும் அவிழ்த்து விடப் பட்டிருந்தமையாலும் துடுப்புகளும் சீராகத் துழாவப் பட்டதாலும் ஜல தீபம் வேகத்திலும் ஓர் ஒழுங்கைக் காட்டி ஓடிக் கொண்டிருந்தது. ஜலதீபம் வருவதைப் பார்த்துவிட்டதாலோ என்னவோ கடலை நோக்கிக் கொண்டிருந்த கோட்டையின் பின் வாயிற் கதவுகள் திறந் திருந்தன. அந்தக் கதவுகளுக்கு இருபுறத்திலுமிருந்த வாயில் தூண்களுக்கு மேலும் கோட்டையின் பல பகுதிகளிலும் பெரும் பீரங்கிகள் வாயை நீட்டிக் கொண்டிருந்ததைக் கவனித்த இதயசந்திரன் அக்கோட்டையைப் பிடிப்பது எளிதில் முடியாதென்பதை உணர்ந்து கொண் டான். அவன் ஊகத்தை ஆமோதிப்பது போல் ஜலதீபத்தைச் சுற்றிலும் எட்ட ஆங்காங்கிருந்த மீன்பிடி நாவாய்கள் அலையில் தலைகளை ஆட்டின.

அந்த நாவாய்களில் மீன் பிடிப்பவர்கள்கூட ஜலதீபத் தைக் கண்டதும் கைகளை உயரத் தூக்கிப் பெருங்கூச்சல் போட்டார்கள். இன்னும் சில நாவாய்களிலிருந்தவர்கள் கைத்துப்பாக்கிகளால் ஆகாயத்தில் சுட்டார்கள். அருகாமை வந்து கொண்டிருந்த கோட்டைச் சுவர்களில் மாலுமிகள் பலர் ஏறி ஜலதீபம் வருவதைப் பார்த்துக் கொடிகளை வீசினார்கள். மக்கள் வேறு மாலுமிகளுடன் கலந்துகொண்டு கைகளை வீசினார்கள். கூச்சலிட்டார்கள். அந்தக் கோட்டைச் சுவரின் பின் வாயில் பகுதி ஆண் பெண் குழந்தைகள் பலரால் நிரப்பப்பட்டிருந்தது. ஏதோ பெரும் மகாராஜாவை வரவேற்பது போல ஜல தீபத்தை வரவேற்ற மக்கள் கூட்டத்தையும் நாவாய்க் கூட்டத்தையும் கண்டு வியப்படைந்து நின்ற இதயசந்திரனின் பக்கத்தில் வந்து நின்று கொண்ட கனோஜி. “இதய சந்திரா! நீ பார்ப்பது சுவர்ண துர்க்கம்” என்று பெரு மகிழ்ச்சி ஒலித்த தமது கரகரத்த குரலில் கூறினார்.

இதயசந்திரன் அவரை நோக்கித் திரும்பினான். அவர் தோற்றம் அவனுக்குப் பிரமிப்பை அளித்தது. அவரது பெரும் உடல் மகாராஷ்டிர மாலுமி உடையால் மூடப் பட்டு இருந்தாலும், அவர் கச்சையில் பதிந்து கிடந்தன இரு பிரிட்டிஷ் கைத்துப்பாக்கிகள். இடையில் தொங்கிய மகாராஷ்டிர வளைவு வாள் அந்தக் கைத்துப்பாக்கிகளுடன் அவ்வளவு பொருந்தவில்லையானாலும் ஆங்கரே யின் இடையில் அதுவும் பயங்கரமாகவே காட்சியளித்தது. அவரது தலையில் மகாராஷ்டிரத் தலைப்பாகை அதற்குப் பதிலாக வெள்ளைக்காரக் கப்பல் தலைவர்கள் அணியும் குறுக்குக் குல்லாயொன்றை அணிந்திருந்தாலும், அவருடைய வீர முகத்துக்கு மேலிருந்ததால் அதிலும் ஒரு பெரும் கம்பீரம் இருக்கத்தான் செய்தது. அவர் போருக்குப் போகும் முழு ஆடையும் கழுத்தில் ஒரு பெரும் தங்கச் சங்கிலியும் காதில் குண்டலங்களும் அணிந்திருந்தார். ஏதோ பெரும் கடலரசன் கோட்டைப் பிரவேசம் செய்யும் தோரணை தோற்றம் எல்லாமிருந்தது அவரிடத்தில்.

அவன் தன்னைப் பிரமித்துப் பார்ப்பதைக் கண்ட ஆங்கரே மெல்லப் புன்முறுவல் கொண்டு. “இதயசந்திரா! என்னைப் பார்ப்பதைவிட சுவர்ண துர்க்கத்தைப் பார்” என்று கூறினார். அவர் குரலில் பெருமை ஒலிப்பதைக் கண்ட இதயசந்திரன் அந்தப் பெருமை காரணமற்றதல்ல என்று புரிந்து கொண்டதால், ‘பார்த்துக் கொண்டு தானிருந்தேன் நீங்கள் வரும்வரையில்” என்று கூறிவிட்டு மீண்டும் கோட்டையை நோக்கிக் கண்களைத் திருப்பினான்.

“நன்றாகப் பார்த்தாயா?” என்று மீண்டும் வினவினார் கனோஜி.

”இங்கிருந்து கண்ணுக்கு எட்டியவரை பார்த்தேன்” என்றான் இதயசந்திரன்.

“பார்த்து என்ன புரிந்து கொண்டாய்?” என்று வினவினார் கனோஜி.

“சுவர்ண துர்க்கம் ஒரு தீவு. அதுவும் நிலப்பரப்பு ஒழுங்கற்றுச் சில இடங்களில் நீண்டும் சில இடங்களில் குறுகியும் தாறுமாறாக வளைந்து கிடக்கிறது” என்று கூறினான் இதயசந்திரன்.

”வேறு என்ன புரிந்து கொண்டாய்?” என்று வினவினார் ஆங்கரே.

”நான் பார்ப்பதை அப்படியே சொல்கிறேன் கேளுங்கள். சுவர்ண துர்க்கம் பிரிட்டிஷ் கணக்குப்படிசுமார் எட்டு ஏக்கர் விஸ்தீரணமிருக்கும். அதோ அந்தக் கோட்டைச் சுவர் ஐம்பது அடி உயரமிருப்பதால் தாக்கும் படை எதுவும் எளிதில் அதில் ஏற முடியாது. வாயிற்கதவைப் பீரங்கி கொண்டு பிளந்தால் உள்ளே நுழையலாம். கோட்டைச் சுவரின் சில பகுதிகள் தீவின் பாறை யிலேயே குடையப்பட்டிருந்தாலும் சில இடங்களில் கருங் கற்கள் கொண்டு செயற்கையாகக் கட்டப்பட்டவை. கோட்டை மதிள்களில் இருக்கும் இடைவெளியைக் கொண்டு ஊகித்தால் சுமார் நாற்பது ஐம்பது பீரங்கி களாவது கோட்டைச்சுவர் தள வரிசையிலிருக்கும். இப்பொழுது எனக்கு அதோ நீங்கள் சொன்ன அந்தக் கடலாமையும் தெரிகிறது. அதன் இடப்புறத்திலுள்ள வாயிலின் உயரே மாருதியின் உருவமுள்ள கற்சிலையும் தெரிகிறது…’ இப்படிச் சொல்லிக்கொண்டே போன இதயசந்திரன் ஆங்கரே பதிலேதும் பேசாததைக் கண்டு சரேலென அவரை நோக்கித் திரும்பினான்.

ஆங்கரேயின் முகம் பிரமிப்பிலாழ்ந்திருந்தது. “நல்லது தமிழா! நல்லது!” என்று ஆமோதித்த அவர் குரலில் பழைய கேலியில்லை. கரகரப்பில்லை, அலட்சியமில்லை. “தமிழா! உன்னை எதிரியிடம் சிக்கவிடாதிருப்பது என் கடமை” என்று கூறினார் ஆங்கரே முதல் பாராட்டுதலைத் தொடர்ந்து.

”ஏன்?” என்று ஏதோ கேட்க வேண்டுமென்பதற்காகக் கேட்டான் இதயசந்திரன்.

பல வேவுகாரர்கள் கோட்டைக்குள் உறைந்து தான் விவரமறிய முடியும். வெளியில் தூரத்திலிருந்து ஒரு முறை பார்க்கும்போதே ஒரு கப்பல் தளத்தை இத்தனை எடை போடக் கூடியவர்கள் யாருமில்லை” என்ற கனோஜி. “உனக்கு ஏற்கனவே கப்பல் தளங்களில் வேலை செய்து, பழக்கமுண்டா?” என்று வினவவும் செய்தார்.

”இல்லை” என்றான் இதயசந்திரன்.

”அப்படியானால் இந்தத் தளத்தை எப்படி அத்தனை சரியாக எடை போட்டாய்?’ என்று வினவினார்.

“கோட்டை நிர்மாண இயல் படித்திருக்கிறேன். புதுச்சேரி பிரெஞ்சுக்காரர்களிடம் இரண்டு வருஷம் இருந்திருக்கிறேன். தவிர அந்த அனுபவம் அவசியமில்லை. கோட்டையைப் பார்க்கும்போதே அதன் பலாபலத்தை எடைபோட முடியாதவன் அதைத் தாக்க முடியாதல்லவா? தவிர சாதாரணக் கோட்டைக்கும் தீவிலுள்ள கோட்டைக் கும் அதிக வித்தியாசமிருக்க முடியாதல்லவா!” என்று கேள்விகளைத் தொடுப்பான் முகத்து பதிலையும் அளித்தான் தமிழன்.

கனோஜி ஆங்கரேயின் கை அவன் முதுகில் பலமாக அறைந்தது. முதுகெலும்பை முறித்துவிடும் வேகத்தில்.

”பலே இதயசந்திரா! உன்னை மாலுமியாகப் பழக்கி விட்டால் கனோஜியின் திறமை வாய்ந்த உபதளபதிகளில் நீயும் ஒருவனாகிவிடுவாய்” என்று பாராட்டிவிட்டு அவன் பிற்காலத்தையும் நிர்ணயித்துவிட்டு அவ்விடத்திலிருந்து அகன்றார். ஜலதீபமும் அடுத்த இரண்டு நாழிகைக்குள் சுவர்ண துர்க்கத்தின் துறைமுக எல்லையில் நுழைந்து விட்டதால் கோட்டைப் பகுதியிலிருந்து ஒரு படகு பல வீரர்களுடன் வேகமாக வந்தது அக்கப்பலை நோக்கி. மீண்டும் இரண்டு துப்பாக்கிகள் ஆகாயத்கில் சுடப் பட்டதும் ஜலதீபத்தின் நங்கூரம் திடீரென வெளியே வீசப்பட்டுக் கயிறு உருளைகள் உருட்டப்பட்டன. நங்கூரம் அடியில் சென்று உறுதிப்படவே இரண்டு மூன்று முறை அப்படியும் இப்படியும் ஆடி ஜலதீபம் நின்றது. கோட்டையிலிருந்து வந்த படகும் அதன் அருகினில் நிற்க. அதிலிருந்த ஒரு வீரன் நூலேணியில் ஏறி தளத்துக்கு வந்து கனோஜி ஆங்கரேயை வணங்கினான். தனது தலையசைப்பினாலேயே அவன் வணக்கத்தை ஆமோதித்த ஆங்கரே இதயசந்திரனை அந்த வீரனிடம் காட்டி ஏதோ இரண்டு வார்த்தைகள் கூறிவிட்டு நூலேணியில் இறங்கி அந்தப் படகில் ஏறிச் சென்று விட்டார்.

அந்தப் படகு செல்வதை இதயசந்திரன் பார்த்துக் கொண்டே நின்றான் இதயத்தில் கோபம் கொந்தளிக்க, சுவர்ண துர்க்க வீரன் வந்ததும் அவர் தன்னிடம் காட்டிய அலட்சியம் அவன் கோபத்தை அளவுக்கு மீறிக் கிளறி விட்டதால் மஞ்சு எங்கே என்று தேடத் திரும்பினான் தளத்தில். சுவர்ண துர்க்க வீரன் கேட்டான் அவனை, ‘என்ன பார்க்கிறீர்கள்?” என்று.

“இக் கப்பலின் தலைவியைப் பார்க்கிறேன்” என்று கூறினான் இதயசந்திரன் குரலில் உஷ்ணம் தொனிக்க.

‘இந்தப் பக்கம் பாருங்கள்” என்று வீரன் ஜலதீபத்தின் பின்னாலிருந்த ஒரு படகைக் காட்டினான். அப்பொழுது தான் மஞ்சு நனைந்த உடையுடன் அதில் ஏறிக் கொண் டிருந்தாள்.

இதயசந்திரன் அதிக உஷ்ணத்தைக் காட்டினான் வீரனிடம். “எதற்காகக் கப்பல் தலைவி கடலில் குதித்து அப்படகில் போய் ஏற வேண்டும்?” என்று வினவினான் அதே உஷ்ணத்துடன்.

வீரன் சொன்ன பதில் இதயசந்திரனைத் தூக்கிவாரிப் போட்டது. ”மஞ்சுவை உங்களுக்குத் தெரியாது” என்றான் அந்த வீரன்.

அவளைப் பெயர் சொல்லி வீரன் அழைத்ததே அதிர்ச்சி யைத் தந்தது இதயசந்திரனுக்கு. அவளைத் தனக்குத் தெரியாதென்று கூறியதால் பெரும் சினத்தை அடைந்த தமிழக வீரன், ”உனக்கு நன்றாகத் தெரியுமாக்கும்?” என்று சீறினான்.
“எனக்கென்ன. மகாராஷ்டிரக் கடற்படை மாலுமிகள் எல்லோருக்கும் தெரியும்” என்றான் வீரன்.

இதனால் சிறிது சாந்தியடைந்த இதயசந்திரன் கேட்டான்: “இக்கப்பலில் படகுகள் இருக்கும்போது எதற்காகக் கடலில் குதித்து அப்படகுக்குப் போகிறாள் கப்பல் தலைவி” என்று.

”கடல் நீச்சலில் அவ்வளவு பைத்தியம். அவளைக் கடல்மீன் என்று சுவர்ண துர்க்கத்தில் அழைக்கிறார்கள் என்று கூறிய அந்த வீரன் மேற்கொண்டு தர்க்கத்தை வளர்த்த இஷ்டப்படாமல், ‘உங்களைக் கோட்டைக்கு அழைத்துவர உத்தரவாயிருக்கிறது வருகிறீர்களா?’ என்று வினவினான்.

இதயசந்திரன் இரண்டு விநாடிகள் ஏதோ யோசித் தான். பிறகு கூறினான்: “நீ கோட்டைக்குப் போ” என்று .

”நீங்கள்?” வியப்புடன் எழுந்தது வீரன் கேள்வி.

”உங்கள் தலைவி யார்? கடல் மீனா?” என்று வினவினான் இதயசந்திரன்.

”ஆம்.”

“கடலில் முதலை உண்டல்லவா?”

“உண்டு”

“அது நீந்துமா?”

“வேகமாக நீந்தும்.”

”அப்படியானால் நான் கடல் முதலை.”

”என்ன சொல்கிறீர்கள்?” என்று அச்சத்துடன் எழுந்தன வீரன் வினா.

“முதலை மீனை நாடிச் செல்கிறது” என்று கூறிய இதயசந்திரன் ஒரே பாய்ச்சலாகக் கப்பலின் பக்கப் பலகை மீது தாவிய வெகு வேகத்தில் கடலில் குதித்து நீரில் மறைந்து விட்டான்.

Previous articleJala Deepam Part 1 Ch32 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 1 Ch34 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here