Home Historical Novel Jala Deepam Part 1 Ch34 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 1 Ch34 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

55
0
Jala Deepam part 1 Ch34 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 1 Ch34 | Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 1 Ch34 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 34 மானுவல் டி காஸ்ட்ரோ

Jala Deepam Part 1 Ch34 | Jala Deepam | TamilNovel.in

சக்தியும் சாமர்த்தியமும் தங்களைவிடப் பெண் களுக்குக் குறைந்து தானிருக்க வேண்டும் என்ற சித்தப் பிரமை ஆண்களுக்கு உண்டு. இந்தப் பிரமையால் ஆண் மகன் காரணமில்லாத கலக்கத்துக்கு உள்ளாகிறான். அவசியமற்ற அலுவல்களிலும் ஈடுபடுகிறான். இதய சந்திரன் கடலில் குதித்து கனோஜியின் மகளிருந்த படகு நோக்கி வேகமாக நீந்திச் சென்றதற்கும் இந்தப் பிரமை தான் காரணம்.

“கன்னத்தில் முத்தமிடுங்கள்” எனக் கேட்ட பிறகு அந்தக் கன்னியைக் காணாததே அவனுக்கு ஏமாற்றமா யிருந்தது. உறங்கி விழித்துத் தளத்துக்கு வந்த பின்னும் அவள் தன்னைச் சந்திக்காததைப் பெரும் குற்றமென நினைத்தான் அந்த வாலிபன். கனோஜிதான் தன்னை அலட்சியம் செய்து படகிலேறிக் கரைக்குச் சென்று விட்டாரென்றால் அவர் மகளும் தன்னைப் புறக்கணித்துக் கடலில் குதித்தது ஏதோ செய்யத் தகாத செய்கை என அவன் நினைத்தான். ‘இவளுக்குத்தான் கடலில் குதிக்கத் தெரியும்! நீந்தத் தெரியும்! உம்?’ என்று மனம் கறுவியதால் தானும் குதித்தான் கடலுக்குள்.

புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை அவன் புரிந்து கொள்ளவில்லை. புரிந்து கொள்ள அவசிய மில்லாத விஷயங்களைப் புரிந்து கொண்டு வீணாக இம்சைப்பட்டான். மஞ்சுவின் மீது தனக்கு எந்த உரிமையும் கிடையாது என்பதை அவன் புரிந்து கொண்டிருக்க வேண்டும். அவள் தன்னிடம் எதற்கும் அனுமதி கேட்கத் தேவையில்லையென்பதையும் புரிந்து கொண்டிருக்க வேண்டும். அவள் தன் மீது கருணை வைத்திராவிட்டால் தன்னை மாலுமிகள் பந்தாடிவிடுவார்கள் என்பதையும்புரிந்து கொண்டிருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக எந்த மனிதனைத் தான் தேடித் தஞ்சையிலிருந்து வந்தானோ அந்த மனிதனை மீண்டும் சந்திக்க மஞ்சுவின் தயவு கண்டிப்பாய் வேண்டுமென்பதைப் புரிந்துகொண்டிருக்க வேண்டும். இதையெல்லாம் அவன் புரிந்து கொள்ளவில்லை.

புரிந்து கொண்டவைதானென்ன? என்ன இருந்தாலும் மஞ்சு ஒரு பெண். முந்திய இரவில் தன் முன் படுத்துக்கிடந்தவள் என்பதைப் புரிந்து கொண்டான். இருவரும் சேர்ந்து உடலோடு உடல் உராய வாசிஷ்டி நதியில் நீந்திக் கரையில் மல்லாந்து கிடந்ததால் தனக்கு அவளிடம் ஓரளவு உரிமை உண்டென்று நினைத்துக் கொண்டான். எப்பொழுது அத்தனை தூரம் தனக்கு இடங்கொடுத் தாளோ அவளுக்குத் தன்மீது கண்டிப்பாய் அன்பு இருக்க வேண்டுமென்பதைப் புரிந்து கொண்டான். அப்படி அன்பு ஏற்பட்ட பிறகு தன்னிடம் ஒரு வார்த்தை சொல்லாமல் அவள் கடலில் குதித்துச் சென்றுவிட்டது மிகத் தவறு என்று உள்ளூர உறுமிக்கொண்டான். இவையெல்லாம் தன் ஊகம் என்பதையும் அவன் புரிந்து கொண்டிருந்தால் அவன் வேகம் வேறு வழியில் சென்றிருக்கும்.

மஞ்சுவின் நினைப்பில் அவன் உள்ளம் பிரமை தட்டிக் கிடந்ததால் நினைப்பெல்லாம் தவறாக, உரிமையெல்லாம் வெறும் ஊகமாக, கோபமெல்லாம் வீண் பதட்டமாகத் திரும்பவே கடலில் அவன் குதித்தான். அவளுக்குத் தான் சளைத்தவனல்லவென்பதைக் காட்டக் கடுவேகமாக நீந்தி யும் சென்றான். மஞ்சு அவன் குதித்ததையும் பார்த்தாள். நீருக்குள் மூழ்கியதையும் பார்த்தாள். அதைக் கண்டு நகைத்து வேகமாகப் படகைச் செலுத்தும்படி மாலுமிகளுக்குக் கட்டளையும் இட்டாள். மாலுமிகள் அவள் உத்தரவுக்குப் பணிந்து துடுப்புகளை வேகமாகத் துழாவியதாலும் கரை கிட்டக் கிட்ட அலைகளும் வேகமாக உருண்டதாலும் படகு அம்பு போல் சென்றது. நீரில்

மூழ்கிய இதயசந்திரன் தலையைத் தூக்கியபோது படகு வெகு வேகமாகச் செல்வதையும், மாலுமி கொடுத்த கம்பளி ஒன்றைப் போர்த்திப் பிடித்துக்கொண்டு மஞ்சு தன்னை நோக்கி நகைப்பதையும் பார்த்தான். அவன் மனம் அரபிக் கருங்கடலின் நீரைவிட அதிகமாகக் கறுத்தது. அலைகளை விட அதிகமாகக் கொந்தளித்தது. போதாக் குறைக்கு அவனை நோக்கிப் படகைச் செலுத்திக் கொண்டு வந்த சுவர்ண துர்க்க வீரன், ”ஏறிக் கொள்கிறீர்களா?” என்று வினவினான். அரபிக்கடல் நீர் மட்டும் எண்ணெயாயிருந்தால் இதயசந்திரன் மனத்தீயில் அக்கடலே குபீரென்று எரிந்திருக்கும்.

இதயசந்திரன் அவனைப் போகச் சொல்லிக் கை காட்டி விட்டு மீண்டும் நீரில் மூழ்கி நீந்தினான். முதன் முதலாகக் கடலில் நீந்திக் கொங்கணியின் கரைக்கு வந்த பழைய சம்பவமும் அந்தச் சமயத்தில் அவன் நினைப்புக்கு வரவே’ அந்தக் கடல், அதே கொங்கணி. அன்றும் நீந்தினேன் இன்றும் நீந்துகிறேன். ஆனால் எத்தனை மாற்றம்!’ என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டான். ‘அன்று உடற்காயம் அதிகம். இன்று மனக்காயம் அதிகம். கரையை அணுகும்போது சுரணை தப்பினேன், இன்று சுரணை அளவுக்கு அதிகமாக இருக்கிறது. அன்றொரு துறவியும், அழகியும் என்னை நோக்கி ஓடி வந்தார்கள். இன்று ஒரு ராட்சசனும் ஊர் பேர் தெரியாத அவன் மகளும் என்னை விட்டு ஓடுகிறார்கள். என்ன கால வித்தியாசம்! இடத்துக்கு இடம் இந்தக் கொங்கணியில் எத்தனை மாறுபாடு!’ என்று இப்படி எண்ணி நீந்தி சுவர்ண துர்க்கத்தின் கரையை அடைந்து வாயிலை நோக்கி எழுந்து நின்று பார்த்தான்.

அவன் கரையை அடைவதற்குச் சற்று முன்பே கரையை அடைந்த மஞ்சுவை மாலுமிகள் பலரும், மகளிர் பலரும் சூழ்ந்துகொண்டு. மஞ்சு மஞ்சு!” என்று காணாத யாரையோ கண்டுவிட்டதுபோல் கூச்சலிட்டார்கள். சிலர் அவள் தலைமீது மலர் தூவினார்கள். மஞ்சு தனது இடையிலிருந்த கைத்துப்பாக்கியை உயரத் தூக்கி ஆகாயத்தை நோக்கி இருமுறை சுட்டாள். இன்னும் கூட்டம் அக்கம்பக்கத்திலிருந்து ஓடிவந்தது. இரண்டு சக்கரப் புரவி ரத்தமொன்றும் வந்தது. அதில் ஏறி அவள் பெரும் ராணியைப் போல் சென்றாள். நனைந்த உடை தெரியாமல் கம்பளியைக் கழுத்து முதல் கால் வரையில் போர்த்தி மறைத்துக் கொண்டு, மறைக்கப்படாத முகமும் நனைந்த குழலும் சூரிய வெளிச்சத்தில் பளபளக்க, வசீகரத் தோற்றத்துடன் சென்றுவிட்ட அவளைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டு நின்ற இதயசந்திரன் பெருமூச்சு விட்டான். பிறகு கோட்டைக்குள் நுழையாமல் மதிலைச் சுற்றிச் சென்று அங்கிருந்த பாறையொன்றில் தனது மேலுடையைப் பிழிந்து உலர்த்தினான்.

அவன் கரையில் இறங்கியபோது எங்கும் பெருங் கூட்டமிருந்ததால் அவனையே பார்த்துக் கொண்டிருந்த சுவர்ண துர்க்க வீரனால் கூட அவனைக் கண்டுபிடிக்க முடியாததால் அந்த வீரன் பெரும் கிலி கொண்டான். தமிழனை அழைத்துவரச் சொல்லித் தனக்குக் கடற்படைத் தலைவன் அளித்த உத்தரவை நிறைவேற்றாததற்குத் தன் மீது கனோஜி பெரிதும் சீறுவார் என்று நினைத்ததால். அவன் பெரிதும் சங்கடப்பட்டுத் தமிழனைத் தேடியும் காணாததால், ‘அவனும் மஞ்சுவைப் பின்பற்றிச் சென்ற கூட்டத்தில் சென்றிருப்பான்’ என்று தீர்மானித்துக் கொண்டு கோட்டைக்குள் நுழைந்து விட்டானாகையால் இதயசந்திரனை யாரும் தேடவில்லை. ஆகவே இதயசந்திரன் ஒவ்வோர் உடையாக உலர்த்திக் கட்டிக் கொண்டு மிக நிதானமாகவே எழுந்து கோட்டைக் குள் நுழைந்தான். கோட்டைக் காவலர் அவனைக் கவனித்தும் தடுக்கவில்லை. அவனுக்கிருந்தமனோ நிலையில் எதையும் கவனிக்காமல் சுவர்ண துர்க்கத்துக்குள் நுழைந்த இதயசந்திரன் உள்ளேயிருந்த பெரும் அரண்மனைகளைக் கண்டு பிரமித்தான். கடைவீதி அத்தனை பெரியதல்லாவிட்டாலும் இருந்த ஏழெட்டுக் கடைகளில் பல: நாட்டுப் பொருள்களும் காணப்பட்டன. அவையனைத்தும் வர்த்தகத்தால் வந்திருக்க முடியா தென்பதை ஊகித்துக் கொண்ட இதயசந்திரன் கனோஜி யைக் கொள்ளைக்காரன் என்று மாற்றார் அழைத்ததில் சிறிது பொருளும் இருப்பதைப் புரிந்து கொண்டான்.

அரண்மனைகளும், கடைகளும், ஆங்காங்கு வீடுகள் சிலவும் இருந்தபோதிலும் சுவர்ண துர்க்கம் பெரும்பாலும் ஒரு போர்க் கோட்டையாகவே விளங்கியது. சுவர்ண துர்க்கத்தைச் சுற்றி ஐம்பது அடி உயரத்துக்கும் எட்டடி அகலத்துக்கும் திண்மையாக காட்சியளித்த சுவர்களும், ஆங்காங்கு இடைவெளியில் வெளியே எட்டிப் பார்த்த ஐம்பதுக்கு மேற்பட்ட பீரங்கிகளும், அதன் பலத்துக்கு அத்தாட்சி கூறின. அந்தச் சுவரின் கீழே அதிக உயரமில்லாமலிருந்த குடியிருப்புகள் பீரங்கி இயக்குவோரின் விடுதிகளாயிருக்க வேண்டுமென்று உணர்ந்துகொண்ட இதயசந்திரன், ‘ஏழெட்டு விடுதிகளுக்கு இடையே சுவரின் தளத்தை நோக்கி ஓடும் படிகள் பீரங்கி வீரர்களைக் கண் திறப்பதற்குள் தளத்துக்குக் கொண்டு போய்விட வாய்ப்பளிக்கும்’ என்று நினைத்தான்.

இப்படி அந்தப் பலமான கோட்டையைப் பார்வை யிட்டுக்கொண்டு வந்த இதயசந்திரனைப் பின்னால் யாரோ தட்டினார்கள் மெல்ல. திரும்பிப் பார்த்த இதய சந்திரன் கண்களில் வியப்பு மண்டிக் கிடந்தது. அப்படித் தட்டியவன் ஒரு வெள்ளைக்காரன். எந்த நாட்டானென்று திட்டவட்டமாகச் சொல்ல முடியாவிட்டாலும் மேல் நாட்டானென்பது மட்டும் தெரிந்ததால், “யார் நீ?

உனக்கென்ன வேண்டும்?’ என்று மகாராஷ்டிரத்தில் வினவினான் இதயசந்திரன் சற்று உஷ்ணத்துடன்.

வெள்ளைக்காரன் தனது பழுப்பு நிறக் கண்மணி களைத் தமிழன் மீது நிலைக்கவிட்டுச் சிரித்துக்கொண்டு, ”நீ வேண்டும்” என்றான் நல்ல மகாராஷ்டிரத்தில்.

அவன் தன்னைவிட நன்றாக மகாராஷ்டிரம் பேசுவ தைக் கண்ட இதயசந்திரன் மேலும் பிரமை தட்டிய பார்வையை அவன் மீது திருப்பி, ”நானா! எதற்கு வேண்டும் உனக்கு?” என்று வினவினான்.

”எனக்கு வேண்டாம். அவளுக்கு வேண்டும்” என்று மீண்டும் நகைத்தான் அவன் பதிலுக்கு.

மேல் நாட்டு மாலுமிகள் உடையில் நின்றிருந்த வெள்ளைக்காரனை நோக்கி, ”அவள் என்றால் யார்?” என்று வினவினான் கோபத்துடன்.
“மஞ்சு!” சர்வ சாதாரணமாகப் பெயரை உச்சரித் தான் வெள்ளைக்காரன்.

“நீ மஞ்சுவின் காவலனா?” என்று கேட்டான் இதய சந்திரன்.

“இங்கு எல்லோரும் மஞ்சுவின் காவலர் தான். அவளை மக்கள் அழைத்துச் சென்ற கோலாகலத்தை நீ பார்க்கவில்லையா?’ என்று வினவினான் மேல்நாட்டான்.

“பார்த்தேன்.”

”பார்த்தால் புரிந்து கொண்டிருக்க வேண்டுமே.”

”உம், உம். புரிந்து கொண்டேன்!” என்று உறுமினான் இதயசந்திரன்.

”சரி வா. போகலாம்” என்றான் வெள்ளைக்காரன்.

”எங்கு?” உஷ்ணத்துடன் கேட்டான் இதயசந்திரன்.

“தலைவர் மாளிகைக்கு.”

“எதற்கு?”

”நீ எங்காவது சாப்பிட வேண்டுமல்லவா?”

“ஆம்.”

”அதற்கு மற்ற இடங்களைவிடத் தலைவர் மாளிகை சிறந்த இடமல்லவா?” என்ற வெள்ளைக்காரன், “தமிழா! அதிர்ஷ்டம் உன்னைத் தேடி வருகிறது. ஆங்கரே ஒருவனைத் தேடுவதானால், மஞ்சு யாரைப் பற்றியாவது விசாரிப்பதானால், ஒன்று அவனைக் கொல்ல இருக்கும். அல்லது உயர்த்த இருக்கும். மஞ்சுவும் ஆங்கரேயும் உன்னை அழைத்து வருமாறு வீரர்களுக்குக் கட்டளையிட்டபோது அவர்கள் குரலைக் கவனித்தேன். உன்னைக் கொல்ல அவர்கள் தேடவில்லையென்பதைப் புரிந்து கொண்டேன்” என்றும் கூறினான்.

”ஆகவே என்னைத் தேடி வந்தாய்?” என்றான் இதய சந்திரன்.

“ஆம் தமிழா! உயர்வு கிடைக்க இருப்பவனைத் தேடுவதில்தான் லாபமிருக்கிறது. சாகப் போகிறவனைத் தேடுவதால் என்ன பலன்?” என்று வினவினான் வெள்ளைக்காரன்.

”அவனுடன் சேர்ந்து சாகலாம்” என்று கூறிய இதய சந்திரன் புன்முறுவல் கொண்டான்.

இதைக் கேட்ட வெள்ளைக்காரன் பலமாக நகைத் தான் ‘தமிழா! நான் சாக இன்னும் அநேக வருஷங்கள் இருக்கின்றன. உனக்குப் பிறகுதான் நான் சாவேன்” என்று நகைப்புக்கிடையே கூறினான்.

இதயசந்திரன் அவனை விநோதமாக நோக்கினான். அந்த விசித்திர வெள்ளைக்காரனின். போக்கு அவனுக்கு வேடிக்கையாயிருந்தது. பிரும்மேந்திர ஸ்வாமி போன்ற ஓர் அரசியல் துறவி, பானுதேவி போன்ற ஓர் அரசியல் அழகி, கனோஜி போன்ற ஒரு கொள்ளைக்காரர் கடற்படைத் தலைவர். இரவிலும் எதிரிகள் பகுதிகளில் உலாவும் மஞ்சு போன்ற ஒரு கடல் மலர். கொலையைப் பெரிதாக மதிக்காத ஸாத் ஸித்தி, கடைசியாகத் தன் வாழ்க்கைக் காலத்தைத் தானே நிர்ணயித்துக் கொள்ளும் ஒரு வெள்ளைக்கார மாலுமி, இப்படிப் பலவகை மனிதர்களைச் சந்தித்த இதயசந்திரன், ‘இன்னும் எத்தனை விசித்திர மனிதர்களைத் தமிழகம் திரும்பு முன்பு சந்திக்கப் போகிறேனோ’ என உள்ளூர நினைத்தான். அவன் நினைப்பு வெள்ளைக்காரனுக்கும் புரிந்திருக்க வேண்டும். ”கவலைப்படாதே தமிழா! கனோஜியுடன் சில வருஷங்கள் இருந்தால் இன்னும் பல விநோத மனிதர்களைச் சந்திப் பாய். ஆனால் ஒன்று நினைவில் வைத்துக்கொள். நான் உனக்கு எப்பொழுதும் தேவைப்படுவேன். என்னிடம் நட்புக் கொள்வது உனக்கு நல்லது” என்று கூறினான் வெள்ளையன்.

ஆனால் மஞ்சுவின் கருத்து வேறுவிதமாயிருந்ததை அன்றிரவு அறிந்தான் இதயசந்திரன். வெள்ளைக் காரனைத் தொடர்ந்து சென்று கனோஜி மாளிகையில் புகுந்த அவனை இரு வீரர்கள் வரவேற்று மாளிகையின் மூலையிலிருந்த ஓர் அறையில் தங்கவைத்தார்கள். பிற்பகல் உணவு அவனுக்கு அந்த அறையிலேயே பரிமாறப்பட்ட தன்றி. கனோஜி அவனை மறுநாள் சந்திப்பார் என்ற செய்தியும் தெரிவிக்கப்பட்டது. அவன் உடுத்துவதற்கு வேண்டிய நானாவித உடைகள் அவனுக்கு அளிக்கப்பட்டன. கைத்துப்பாக்கியில் கெட்டிக்க மருந்தும் குண்டுகளும் தேவையா என்றும் பணி மக்கள் விசாரித்தார்கள். அன்று முழுவதும் அவன் மஞ்சுவையும் பார்க்காததால் மனம் நொந்து உட்கார்ந்து கொண்டிருந்த சமயத்தில் மஞ்சு அவனை அழைப்பதாகச் செய்தி வரவே துள்ளி எழுந்த தமிழன் உடனே கிளம்பினான்.

கனோஜியின் மாளிகைத் தளத்தில் நின்றிருத்த மஞ்சு அவனை. ‘வாருங்கள்” என்று வரவேற்றாள். அவள் குரலில் அப்பொழுது மகிழ்ச்சியில்லை. முகத்திலும் கவலை அதிகமாக மண்டிக் கிடந்தது; எத்தனையோ ஆபத்துக் காலங்களில் கவலைப்படாத அவள் பங்கய முகம் அன்று ஏன் கூம்பிக் கிடக்கிறது என்பதை அறியாததால் திகைத்த இதயசந்திரன் ‘மஞ்சு!” என்று அழைத்துக்கொண்டு அவளை நெருங்கினான்.

அவள் அவனைத் தடுக்கவுமில்லை. வரவேற்கவுமில்லை “இப்படி அமருங்கள்” என்ற மஞ்சு ஓர் ஆசனத் தைச் சுட்டிக் காட்டித் தானும் எதிரேயிருந்த ஆசனத்தில் உட்கார்ந்து கொண்டாள். பிறகு மெல்லக் கேட்டாள். ”பணி மக்கள் உங்களைச் சரியாக உபசரித்தார்களா?” என்று.

அந்தக் கேள்வியல்ல அவள் கேட்க முற்பட்ட தென்பதை அவன் அறிந்தேயிருந்தான். வேறு கேள்விக்கு அது ஒரு முகப்பு என்பதும் அவனுக்குப் புரிந்ததால் அவன் நேரிடையாகக் கேள்வியை வீசினான், ”என்னை எதற்காக அழைத்தாய் மஞ்சு?” என்று.

மஞ்சுவின் பதில் திட்டமாக வந்தது, “உங்களை எச்சரிக்க’ என்று.

”எதைப் பற்றி?”

“நீங்கள் இன்று ஒரு வெள்ளைக்காரனைச் சந்தித்தீர்கள்…”

“ஆம்.”

” அவனிடமிருந்து விலகி நில்லுங்கள்.”

“ஏன்?”

“அவனைவிட அபாயமான மனிதன் கொங்கணியில், கிடையாது.”

”அப்படியா?”

” அவன் பெயர் மானுவல் டி காஸ்ட்ரோ ” என்ற மஞ்சு இதயசந்திரனை நோக்கி மேலும் சொன்னாள்: ”கடல் பிராந்தியத்தில் தந்தைக்கும், ஸித்தி ரஸுல் யாகூத் கானுக்கும் அடுத்தபடியாகச் சிறந்த மாலுமி அவன் தான். தந்தைகூட அவனிடம் “எச்சரிக்கையுடனிருக்கிறார்” என்று. அத்துடன் சொந்த லாபத்துக்கு அவன் எதையும் செய்வான்; யாரையும் விற்றுவிடுவான். கொலை, களவு. சதி எதற்கும் துணிந்தவன். ஜாக்கிரதை” என்றும் கூறினாள். அவன் நெஞ்சு திடுக்கிடக்கூடிய வேறொரு ரகசியத்தையும் அவிழ்த்தாள் மஞ்சு திகிலை அறவே அறியாத இதயசந்திரன் மனத்திலும் திகில் மூண்டது.

Previous articleJala Deepam Part 1 Ch33 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 1 Ch35 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here