Home Historical Novel Jala Deepam Part 1 Ch35 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 1 Ch35 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

53
0
Jala Deepam part 1 Ch35 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 1 Ch35 | Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 1 Ch35 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 35 உலகத்தின் நாக்கு

Jala Deepam Part 1 Ch35 | Jala Deepam | TamilNovel.in

கங்கெய்ட். பராஸ்ஸில் என்ற இரு பெரும் சரித்திர ஆசிரியர்கள் மகாராஷ்டிர மக்கள் வரலாறு’ என்ற தங்கள் நூலில் மானுவல் டி காஸ்ட்ரோ என்ற போர்ச்சுக்கிஸியன் ஆதியில் கிறிஸ்தவனாகவும், இடையில் முஸல்மானாகவு மிருந்து கடைசியில் கிறிஸ்தவ மதத்துக்குத் திரும்பியதாகக் கூறுகிறார்கள். மற்றும் பல சரித்திர ஆசிரியர்கள் அவன் போர்ச்சுக்கீஸியரிடமிருந்து ஆங்கரேயிடமும் ஆங்கரேயிடமிருந்து பிரிட்டிஷ்காரர்களிடமும் இப்படிப் பல இடங்களுக்குத் தாவியிருக்கிறானென்றும், அவனைவிடத் தந்திரசாலி வேறு யாருமே கிடையாதென்றும் எழுதுகிறார்கள். இப்படிச் சரித்திரப் பிரசித்தி பெற்றுவிட்ட மானுவல் டி காஸ்ட்ரோவைப் பற்றி ஏதுமே அறியாத இதயசந்திரன் மஞ்சுவின் எச்சரிக்கையைக் கேட்டதும் முதலில் வியப்பை அடைந்தான். ஆனால் அவள் முகத்தி லும் குரலிலும் விரிந்த கவலையையும், கொலை, களவு, சதி எதற்கும் மானுவல் டி காஸ்ட்ரோ துணிந்தவனென்று அவள் தெரியப்படுத்தியதையும் கண்டும் கேட்டும் பிரமை தட்டிய இதயசந்திரன், அவள் கடைசியாகச் சொன்ன ரகசியத்தைக் கேட்டதும் உண்மையாகவே திகிலடைந் தான். ‘மானுவல் டி காஸ்ட்ரோ பல பெண்களைக் கொன்றிருப்பதாகவும் பல பெண்களைச் சீரழித்திருப்ப தாகவும் பெரும் வதந்தி இருக்கிறது’ என்று அவள் சுட்டிக்காட்டியபோது, ‘அப்படியா!” என்று அதிர்ச்சி யுடன் கேட்டான் இதயசந்திரன்.

“ஆம்” என்றாள் மஞ்சு.

“அப்பேர்ப்பட்டவனை எதற்காகக் கனோஜி இங்கு வைத்துக் கொண்டிருக்கிறார்?’ என்று வினவினான் இதய சந்திரன் கோபத்துடன்.

அவள் அக் கேள்விக்கு நேரடியாகப் பதில் சொல்ல வில்லை. மற்றொரு கேள்வி மூலம் இதயசந்திரனைப் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கிவிட்ட அந்த ரகசியத்தைச் சொன்னாள்: “இப்பேர்ப்பட்டவனைத் தந்தை எதற்காக இங்கு வைத்துக் கொண்டிருக்கிறார் என்று கேட்கிறீர்களல்லவா?” என்று ஆரம்பித்தாள் அவள்.

“ஆம்” ”அதைவிட அவனை என்னுடன் அழைத்துச் செல்ல ஏன் உத்தரவிட்டார் என்பதைக் கேட்பது உத்தமமல்லவா?” இந்தக் கேள்வியை விடுத்த மஞ்சு குழப்பமும், கவலையும் நிறைந்த விழிகளை இதயசந்திரன் மீது திருப்பினாள்.

இதயசந்திரன் கல்லெனச் சமைந்து கிடந்தான். அந்தக் கேள்வி அவனுடைய இதயத்தை அம்பெனப் பிளந்து சென்றதால் வேதனை உடல் பூராவும் பரவியது. புத்தி மட்டும் உணர்ச்சியின்றி ஸ்தம்பித்துக் கிடந்தது. நீண்ட நேரம் அப்படியே உட்கார்ந்திருந்த இதயசந்திரன் மெல்லக் கேட்டான், “உன் தந்தைக்குப் புத்திமாறாட்டம் எதுவு மில்லையே’ என்று.

மஞ்சுவின் பதில் சந்தேகமின்றி வந்தது. ‘தந்தையை விட புத்தித் தெளிவுள்ளவர்கள் மகாராஷ்டிரத்தில் யாரும் கிடையாது” என்று.

”அப்படியானால் இத்தகைய அயோக்கியனை எதற்காக இங்கிருக்க அனுமதிக்கிறார்?” என்று வினவி னான் இதயசந்திரன்.

”எந்தச் சிறையும். அவனை வைத்திருக்க முடியாது. பல சிறைகளிலிருந்து அவன் ஏற்கனவே தப்பியிருக்கிறான் என்று என் தந்தை கூறுகிறார்’ என்றாள் அவள்.

” அவன் பெண்களைக் கொன்றதாகவும் சீரழித்த தாகவும் சொன்னாயே. அதைப்பற்றித் தந்தை என்ன சொல்கிறாரோ?” மிகுந்த ஏளனம் ஒலித்த குரலில் இதய சந்திரன் இக் கேள்வியைக் கேட்டான்.

“அதெல்லாம் வதந்தியே தவிர ருசு ஏதுமில்லையென்று சொல்கிறார். வதந்தியைக்கொண்டு யாரையும் கண்டிக்கவோ விலக்கவோ முடியாதென்று கூறுகிறார்” என்றாள் மஞ்சு. அவன் குரலிலிருந்த ஏளனத்தைக் கவனிக்காமலோ அல்லது மதிக்காமலோ.

இதயசந்திரன் ஒரு வினாடி சிந்தித்துவிட்டுக் கேட்டான், ‘காஸ்ட்ரோவுக்கு இங்கு என்ன வேலை?” என்று.

மஞ்சுவின் பதில் அவனை மேலும் திகைக்க வைத்தது. “தண்டேல்” என்றாள் மஞ்சு.

“அப்படியென்றால்?”

“கப்பலின் உபதளபதி?”

“கப்பல் தலைவனை எப்படி அழைக்கிறீர்கள்?”
“நகோடா.”

”நகோடாவுக்கு அடுத்தபடி தண்டேல் தானோ?”

”ஆம்”

”அப்படியானால் இவன் செல்லும் கப்பலின் நகோடா யார்?”

“இதுவரை தந்தை. இனிமேல் நான்.’

இதயசந்திரன் ஆசனத்தை விட்டு எழுந்திருந்தான். நீண்ட நேரம் அகண்டமாகக் கிடந்த அரபிக் கடலை நோக்கினான். பிறகு அவளை நோக்கித் திரும்பி, “மஞ்சு. இவன் ஜல தீபத்தில் உபதளபதியாக வரப்போகிறானா?” என்று வருத்தம் தோய்ந்த குரலில் கேட்டான். ”ஆம்” என்றாள் மஞ்சு.

“உனக்கு அது அபாயம் என்று உன் தந்தை நினைக்கவில்லையா?”

“இல்லை. என் சக்தியில் அளவுக்கு மீறிய நம்பிக்கை வைத்திருக்கிறார். என்னை யாரும் இஷ்ட விரோதமாக அணுக முடியாதென்று கூறுகிறார்.

அவர் நம்பிக்கை தவறல்லவென்பதை இதயசந்திரனே சென்ற இரண்டு தினங்களில் உணர்ந்து கொண்டிருந்தானாதலால் அவனுக்கு அதை மறுத்து ஏதும் சொல்ல இயலவில்லை. ஆகவே, வேறு விதத்தில் பிரச்சினையை எழுப்பி, “ஆனால் இவன் மற்றவர்களைப் போலல்லவே? எந்த அநீதிக்கும் துணிந்தவனாயிற்றே? இதைப் புரிந்து கொள்ள வில்லையா உன் தந்தை?’ என்று வினவினான்.

“புரிந்து கொள்ளாமல் தந்தை எதையும் செய்வதில்லை. கப்பல் போர்களில் தனக்கும் ஜன்ஜீரா ஸித்தி ரஸூல் யாகூத்கானுக்கும் அடுத்தபடி மானுவல் டி காஸ்ட்ரோ ஈடு இணையற்றவன் என்று கருதுகிறார். இன்னும் பெரும் போர்களில் நான் ஈடுபடாததாலும் அரபிக் கடலில் போர்ச்சுக்கீஸ், டச்சு. பிரிட்டிஷ், ‘மொகலாயக் கப்பல்களின் கெடுபிடி அதிகமாயிருப்பதாலும் எனக்கு மானுவல் டி காஸ்ட்ரோவைப் போன்று ஓர் உபதளபதி அவசியமென்று நினைக்கிறார் தந்தை” என்று விளக்கினாள் மஞ்சு.

அப்படியானால் நீ மீண்டும் பயணமாகப் போகிறாயா?” என்று வினவினான் இதயசந்திரன்.

“ஆம்.”

“எப்பொழுது?”

“தெரியாது. தந்தை எந்த விநாடியில் உத்தரவிட்டாலும் ஜலதீபம் நங்கூரம் எடுத்துப் பாய் விரித்து விடும்.”

இதைச் சொன்ன மஞ்சு மெல்லப் பெருமூச்சுவிட்டாள். இதயசந்திரன் தனது ஆசனத்திலிருந்து எழுந்து அவளை நோக்கி இரண்டடி எடுத்து வைத்து அவளைத் தன் இருகைகளாலும் தூக்கி நிறுத்தி மாளிகைத் தளத்தின் கைப்பிடிச் சுவருக்காக நடத்தி அழைத்து வந்து நிறுத்தி னான். அவள் இடையில் தனது வலது கையைச் சுழல விட்டு இறுக்கிய வண்ணம் தூரத்தே முதுகு காட்டிக்கொண்டிருந்த கடலாமையையும், அப்பால் அலையில் ஆடிக்கொண்டு நின்ற ஜலதீபத்தையும் கவனித்தான். பிறகு அவள் காதுக்கருகில் குனிந்து, “மஞ்சு! கவலைப் படாதே! உன்னைக் காக்க நானிருக்கிறேன்” என்று கூறினான்.

”நீங்கள் எப்படி என்னைக் காக்க முடியும்?” என்று வினவினாள் அவள்.

“அந்த விஷயத்தை எனக்கு விட்டுவிடு. என் உயிர் இருக்கும் வரையில் ஆயிரம் டி காஸ்ட்ரோக்கள் இருந்தாலும் உண்னைத் தொட முடியாது” என்று உறுதி மிகுந்த குரலில் அறிவித்தான்.

அந்த உறுதி, அவன் குரலிலிருந்த தெளிவு இத்தனையும் அவளுக்குச் சாந்தியளிக்கவில்லை. கவலையை போக்கிக் கொள்ளவோ, வேறு ஆதரவு தேடவோ அவள் தலையை அவன் மார்புமீது மெல்லச் சாய்த்தாள். அவன் உணர்ச்சிகள் மெல்லப் புரண்டன. இடையை வளைத்த கை கீழ்ப்புறம் இறங்கியது. இன்னொரு கை அவளைத் தன்னை நோக்கித் திருப்பியது. “என்னைப் பார் மஞ்சு” என்று அழைத்தான் இதயசந்திரன் மெல்ல.

அவள் தலை நிமிர்ந்து அவனை நோக்கினாள். கண்கள் கண்களைச் சந்தித்த அந்த நிலையில், உணர்ச்சிகள் உந்திய அந்தச் சமயத்தில் வெகு சிரமப்பட்டுத் தனது கொந்தளிபபை அடக்கிக் கொண்ட இதயசந்திரன், “மஞ்சு…” என்று மிக இன்பமாக அழைத்தான்.

“உம்.”
”என்னை நம்புகிறாயல்லவா.”

“நம்புகிறேன்”

“முழுதும்.”

“ஆம். முழுதும்.”

”முன்பு நீ கேட்டதை இப்பொழுது நான் செய்தால் கொன்றுவிடுவாயா?”

“என்ன கேட்டேன்?”

”உன் கன்னத்தில் முத்தமிடச் சொன்னாயே ஜலதீபத்தின் தளத்தில்.’’

“சொன்னேன்.”

”எதற்காக?”

“சோதிக்க என்று அப்பொழுதே சொன்னேனே.” ”இன்னும் அதே சோதனை அவசியமா மஞ்சு?”

மஞ்சுவின் கண்கள் அவனை நோக்கி நகைத்தன. “நீங்கள் கேட்பது விசித்திரமாயிருக்கிறது” என்று உதடுகள் முணுமுணுத்தன.

”என்ன விசித்திரம் இதில்? கன்னத்தில் என் இதழ் களைப் பதிக்காமல் உன் உணர்ச்சிகள் இயங்காவா?” என்று கேட்டான் அவனும் மிக மெல்ல.

“இயங்கத்தான் வைத்திருக்கிறீர்களே!” என்று துணிவுடன் சொன்ன மஞ்சு தன் மலருடலை அவன் மீது சற்று அதிகமாகவே பதியவிட்டாள்.

”இந்த நிலையில் உன் மனம் ஏதும் சொல்லவில்லையா?” என்று வினவினான் அவன்.

“சொல்கிறது.” “என்ன சொல்கிறது மஞ்சு?” “ஏதேதோ சொல்கிறது.” ”என்னைப்பற்றி எச்சரிக்கிறதா?” “ஆம்.” ”கொடியவன் அணுகாதே என்றா?”

“அப்படியானால் நான் கொடியவனா?”

“மிகக் கொடியவர்.”

“காஸ்ட்ரோவை விடவா?” “அவன் ஒரு விதம். நீங்கள் ஒரு விதம்.” ” அவன் என்ன விதமோ ?”

அவள் மனோகரமாக முறுவல் கொண்டாள். அவனை நிமிர்ந்து நோக்கிக் கொண்டிருந்த கண்களும் நகைத்தன. அவன் சூறாவளி. இத்தனை நேரம் ஒரு பெண்ணைப் பயந்து தொட்டுத் திணறிக் கொண்டு நிற்க மாட்டான்” என்று கனோஜியின் மகளின் பேச்சைக் கேட்ட இதய சந்திரன். ”மஞ்சு, மஞ்சு” என்று அதட்டினான்.

மஞ்சு மீண்டும் மிக மெதுவாகச் சொன்னாள்: “நீங்கள் மந்தமாருதம்; அவன் சூறாவளி” என்று.
“இல்லை, நானும் சூறாவளிதான் மஞ்சு” என்று கூறி அவளைத் தன் இரு கைகளாலும் இறுக்கப்போன சமயத்தில் பின்னால் யாரோ கனைக்கவே இதயசந்திரன் மஞ்சுவை விட்டு விலகித் திரும்பி நோக்கினான்.

மானுவல் டி காஸ்ட்ரோ தனது பழுப்பு நிறக் கண்களிலும் சிவந்த உதடுகளிலும் சிரிப்பை உதிர்த்துக் கொண்டு நின்றான். “இடைபுகுந்ததற்கு மன்னிக்க வேண்டும்” என்றும் கூறித் தலை வணங்கினான் மஞ்சுவை நோக்கி.

”இங்கு எதற்கு வந்தாய்” என்று சீறினாள் மஞ்சு அவனைப் பார்த்து.

”இனிமேல் தாங்கள் தான் நகோடா என்று தளபதி சொன்னார்…” என்று இழுத்தான்.
?” என்
”அதற்கென்ன ற மஞ்சுவின் கேள்வியிலும் அபரிமித சீற்றமிருந்தது.

‘தளபதி உத்தரவைத் தெரியப்படுத்த வந்தேன். தளம் இப்படி இருப்பது தெரியாது” என்றான் காஸ்ட்ரோ . அவன் குரல் சர்வ சாதாரணமாக இருந்தாலும் அவன்

தங்களைப் பார்த்து நகைக்கிறானென்பதை மஞ்சு புரிந்து கொண்டாள்.

”உத்தரவைத் தெரிவித்தாகிவிட்டதல்லவா?” என்றும் கேட்டாள் வறண்ட குரலில்.

”ஓர் உத்தரவைத் தெரிவித்து விட்டேன்” என்றான் போர்ச்சுக்கீஸியன்.

“இன்னோர் உத்தரவும் இருக்கிறதா?’ என்று மஞ்சு கேட்டாள்.

” இருக்கிறது.”

“என்ன அது?”

“இந்தத் தமிழனை என்னிடம் ஒப்படைத்திருக்கிறார் தளபதி.”

”உன்னிடமா?” ”ஆம்.” ”எதற்கு?” ”மாலுமிப் பயிற்சி அளிக்க.”

இதைக் கேட்ட மஞ்சு இதயசந்திரனையும் நோக்கி போர்ச்சுகீஸியனையும் நோக்கினாள். ‘அப்படியானால் இவர் நம்முடன் வருகிறாரா?” என்றும் வினவினாள்.

அவள் குரலில் ஆறுதலிருந்ததைக் கவனித்தான் காஸ்ட்ரோ . ஆகவே மேலும் சொன்னான்: ”ஆம், மஞ்சு! இவரும் நம்முடன் வருகிறார் ஜலதீபத்தில். அதில்தான் இவருக்குப் பயிற்சியளிக்கப் போகிறேன் கப்பலோட்டுல்தில்” என்று.

மஞ்சு அவனை நோக்கினாள். ”பயிற்சி பெற இவருக்கு இஷ்டமா இல்லையா என்பதைத் தந்தை அறிந்து கொண்டாரா?” என்று கேட்டாள் கனோஜியின் மகள்
.
“அவர் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை” என்றான் போர்ச்சுக்கீஸியன். ”இருந்தாலும் நானே கூறி விட்டேன்.”

“என்ன கூறிவிட்டாய்?” என்று வினவினாள் மஞ்சு. ‘ஜலதீபத்தில் அலுவல் புரிய இவருக்கு இஷ்டமிருக்கும் என்று’ எனத் தெரிவித்து காஸ்ட்ரோ இதயசந்திரனை ஏறிட்டு நோக்கி ஏதோ கேள்வி கேட்க முற்பட்டான்.

அவன் வாயிலிருந்து கேள்வி பிறக்கு முன்பே மஞ்சு முந்திக்கொண்டு, ”இவரிஷ்டத்தை எப்படி அறிந்தாய்?” என்று வினவினாள் கோபத்துடன்.

“கோபிக்காதிருந்தால் சொல்கிறேன்”

என்று தாழ்மையுடன் விண்ணப்பித்துக் கொண்ட காஸ்ட்ரோ , அவள் பதிலுக்குக் காத்திராமலே. “கப்பலிலிருந்து இவர் படகில் வரவில்லை. நீங்கள் நீரில் குதித்ததும் இவரும் குதித்து நீந்தி வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். உங்களை எந்த நிலையிலும் தொடர, உங்களுடன் எந்த ஆபத்து சம்பத்துக்கும் உட்பட இவருக்கு இஷ்டமிருக்கும் என்று நினைத்தேன்” என்று கூறினான்.

“இவர் கடலில் குதித்து வந்ததை யார் சொன்னார்கள் உனக்கு?” என்று கேட்டாள் மஞ்சு கோபம் குரலில் குறையாமலே.

“இக் கோட்டையிலுள்ள மாலுமிகள் எல்லாருமே பேசிக்கொள்கிறார்கள்” என்று தெரிவித்தான் காஸ்ட்ரோ.

“வேறென்ன பேசிக் கொள்கிறார்கள்” என்ற மஞ்சுவின் கேள்வியில் சற்றே கவலையிருந்தது.

”பலர் பலவிதமாகப் பேசுவார்கள். அதைப்பற்றி நாம் கவலைப்பட முடியுமா? உலகத்தின் நாக்கு நீண்டது. பொல்லாதது” என்றான் காஸ்ட்ரோ . ”எதுவாயிருந்தாலும் சொல் காஸ்ட்ரோ.”

”இவர் நீரில் குதித்ததால் உங்களிடம் மனத்தைப் பறிகொடுத்து விட்டாராம்…”

”அப்புறம்….’

“உங்களுக்கும் சிறிது இவர் மீது அன்பிருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். அது புரட்டென்று நமக்குத் தெரியாதா?”‘, என்ற காஸ்ட்ரோ, “இதைப்பற்றி ஏன் கவலைப்படுகிறீர்கள்? இவரிடம் பேசியதும் என்னிடம் அனுப்பி வையுங்கள்” என்று கூறிவிட்டுத் திரும்பி வெகு வேகமாகச் சென்று விட்டான்.

அவன் சென்றதும் மஞ்சு. ”பார்த்தீர்களா இவனை” என்று கேட்டாள்.

“வடிகட்டின அயோக்கியன்” என்றான் தமிழன்.

“உலகத்தின் நாக்கு நீண்டது என்கிறான். இவன் நாக்கு?”

“அதைவிட நீண்டது; கொடியது.”

“ஆம் வீரரே! மிக எச்சரிக்கையாயிருங்கள் அவனிடம்”

என்றாள் மஞ்சு. “அவன் எத்தனை கிருத்திரமமாக நம்மைப்பற்றிப் பேசினான்!”

“ஆம், பேசினான். அடுத்த முறை பேசட்டும் அவனைக் கொன்று விடுகிறேன்” என்று சீறினான் தமிழன்.

மஞ்சு சற்று இரைந்து நகைத்தாள். ”உண்மை சொல் பலனைக் கொன்றதால் உண்மை மடிந்துவிடுமா வீரரே?” என்று கூறிவிட்டு அவனை நோக்கி மீண்டும் நெருங்கினாள்.

“இதென்ன மஞ்சு” என்ற இதயசந்திரன் கைகள் அவளைச் சுற்றின.

“அவன் சொன்னதற்கு நிரூபணம்” என்றாள் மஞ்சு. தன் உடலைச் சுற்றியோடி இழுத்து இறுக்கிய கைகளுக்கு எத்தடையும் விதிக்காமலே.

Previous articleJala Deepam Part 1 Ch34 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 1 Ch36 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here