Home Historical Novel Jala Deepam Part 1 Ch36 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 1 Ch36 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

54
0
Jala Deepam part 1 Ch36 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 1 Ch36 | Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 1 Ch36 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 36 புது வாழ்வு

Jala Deepam Part 1 Ch36 | Jala Deepam | TamilNovel.in

மனிதர்களோ மற்ற உயிரினங்களோ வெளியே தலை காட்ட முடியாத கொங்கணியின் மழைக்காலத்தைத் தவிர மற்றக் காலங்களிலெல்லாம் மாலுமியாகவே காலங்கழித்து வந்ததன் விளைவாகத் திண்மை பெற்றிருந்த மஞ்சுவின் உடல் அந்த நேரத்தில் பஞ்சைவிட மென்மையாயிருந்தது. நடக்கும்போதும் திரும்பும்போதும் ஓர் ஆணவத்தையும் வேகத்தையும் காட்டும் அவள் வசீகர உடல் அந்த வேகத்தையெல்லாம் இழந்து தன் உடலில் இழைந்து கிடந்ததைக் கண்ட இதயசந்திரனின் பலம், வீரம் அனைத்துமே காற்றில் பறந்து மனம் குழைந்து கிடந்தது. அவள் உடலின் குழைவைப் போலவே, முள் உள்ள கொழு கொம்பைத் தொக்கி நிற்கும் கொடிபோல அவள் அவன் மீது தொற்றி நின்றாள். கொடியின் மெல்லிய சுருள் வங்கிகள் கொழுகொம்பின் முட்களைத் தாவிப் பிடித்து அவற்றிலேயே சுருண்டுகொள்வது போல மென்மையான அவள் உடல்கூறுகள் அவன் கடிய தேகத்தில் ஆங்காங்கு ஆர்வத்துடன் இழைந்து இழைந்து தங்கிக் கொண்டிருந்தன. அப்படி இழைய இழைய அவன் பலவீனம் அதிகரிக்கவே செய்தது. காமம் மனிதனுடைய பலவீனங் களில் ஒன்று எனத் தத்துவம் கூறுவதில் தவறில்லை யென்பதை நன்றாக உணர்ந்து கொண்டான் இதய சந்திரன்.

அவன் கைகள் ஓரிடத்தில் நிற்கும் சக்தியை இழந்திருந்தமையால் அவை அங்குமிங்குமாக அலைந்தன. அவன் கண்கள் மட்டும் அவளையும் தாண்டித் தூரத்தேயிருந்த துறைமுகத்தையும் துறைமுகத்தில் ஆடி நின்ற ஜலதீபத்தையும், படகுகளையும், மற்றும் பல கப்பல்களையும் பார்த்துக் கொண்டிருந்தன. பார்த்துப் பயனென்ன? அவை ஏதும் தெரியவில்லையே! அந்த ஜலதீபத்தின் தளத்தில்தான் மஞ்சு மல்லாந்து கிடந்தாளே? ஜலதீபமா அது? அல்ல அல்ல. வாசிஷ்டியின் கரையல்லவா அது?. அதை எப்படித் தளமென்று நினைத்தேன். வாசிஷ்டியில் நீந்தி இவள் உடையெல்லாம் நனைந்து உடலில் ஒட்டிக் கிடக்கிறதே. சே மஞ்சு! ஆடையைப் பிழிந்து கொள். இந்தா, இப்படிச் சரிப்படுத்திக்கொள் மஞ்சு. எதற்காகப் பதுங்குகிறாய் அப்பாறையில்? இரு இரு நீயா? இது அஞ்சன் வேல் கோட்டையாயிற்றே. இங்கு எப்படி வந்தாய்? எங்கே, முகத்திரையை விலக்கு!

எண்ணங்கள் இப்படி ஓட, நீண்ட நேரம் அப்படியே இருவரும் பரஸ்பரப் பிணைப்பில் இருந்தார்கள். காலம் துரிதப்படும் சந்தர்ப்பம் அது. கால் ஜாமமும் கணமாகத் தெரியும் விந்தை அது. மாலுமிகள் போஜன வேளை மணி யொன்று அடித்த பிறகுதான் இருவரும் சுரணை அடைந் தார்கள். சுரணை வந்ததும் மஞ்சுவிடமிருந்து பெரு மூச்சும் வந்தது. “இத்தனை நேரமா ஆகிவிட்டது?” என்று கேட்கவும் செய்தாள் அந்தப் பெருமூச்சுக்கிடையே.

மணி ஏன் அடிக்கிறதென்பதைப்பற்றி ஏதும் அறியாத தாலும், மணி சத்தம்கூட உடைக்க முடியாத உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருந்தபடியாலும், “எத்தனை நேரம் மஞ்சு?” என்று மெல்லக் கேட்டான் இதயசந்திரன், கைகளின் பிணைப்பிலிருந்து அவளை விடுவிக்காமலே.

“மாலுமிகள் உணவருந்தும் நேரம்” என்றாள் மஞ்சு அவனிடமிருந்து விடுவித்துக் கொள்ள எந்த முயற்சியும் செய்யாமலே.
மாலுமிகள் உண”வருந்தும் நேரமா?”

”ஆம்.”

”அதெப்படி உனக்குத் தெரியும்?”

“மணியடித்ததே.”

“எப்பொழுது?”

மஞ்சு தலை நிமிர்ந்து அவன் முகத்தை நோக்கினாள். அவள் கண்கள் அவன் கண்களை நோக்கி நகைத்தன. செவ்விய உதடுகள் புன்முறுவலால் சற்றே விகசித்து இரண்டு முன் முத்துக்களை மட்டும் காட்டின. ”அதுகூடக் காதில் விழவில்லையா?” என்று அவள் கேட்டாள். அக் கேள்வியால் திறந்து மூடிய இதழ்கள் புஷ்பமொன்று திறந்து மூடியது போலிருந்தது.

”கேட்கவில்லையே மஞ்சு!” என்றான் இதயசந்திரன். மஞ்சுவின் இதழ்கள் மீண்டும் அசைந்தன. ‘பலமான யோசனை போலிருக்கிறது? மணிச்சத்தம்கூடக் காதில் விழவில்லை?” என்று இதழ்கள் அசைந்து சொற்களை உதிர்த்தன மெல்ல.

அப்பொழுதும் பலமான யோசனைதான் அந்த வாலிபனுக்கு. தன் கண்களுக்கு நேர் கீழே செவ்விய மலர் இதழ்கள் விரிந்து விரிந்து கூடுவது உலகத்தை மறக்கச் செய்தது. இதழ்கள் பேசுகின்றனவா, அழைக்கின்றனவா என்பது புரியாமல் திகைத்தான் அவன்.

”ஏன் பதிலில்லை?” என்றாள் அவள் மீண்டும்.

“பதிலா!” பிரமை பிடித்தவன் போல் கேட்டான் அவன்.

“ஆம் பதில்தான்.”

” என்ன பதில்?”

”எங்குதான் யோசிக்கிறீர்கள்! என்ன தான் யோசிக்கிறீர்கள்.”

“எனக்கே தெரியவில்லை.”

”எந்தக் கோட்டையைப் பிடிக்கப்போகிறீர்கள்?”

”இந்தக் கேள்வி அவனுக்கு மீண்டும் முழுச் சுரணையை அளித்து அவனைப் பழைய நிலைக்குக் கொண்டு வந்து விட்டது. கோட்டையைப் பிடிப்பதைப் பற்றி கனோஜி சொன்னது அவன் நினைப்புக்கு வந்தது. “இதயசந்திரா! பெண், கோட்டைக்குச் சமானம். வேகமாகத் தாக்கி முன்னேறுபவன் கோட்டையைப் பிடிக்கிறான்” என்று சொன்னதை நினைத்தான். “ஆனால் சுவர்ண துர்க்கத்தின் கதை வேறு. அந்தப் பெண் சுவர்ண துர்க்கம். அத்துமீறி நுழைய முயலாதே. ஆபத்திருக்கிறது” என்று சொன்னதையும் நினைத்துப் பார்த்தான். “கடற்படைத் தலைவரே! எந்த சுவர்ணமும் பொற்கொல்லனிடம் உறுதி குறைந்து இளகும்” என்று அவற்றுக்கு உள்ளுக்குள் பதிலும் கூறிக் கொண்டான்.

அதே சமயத்தில் எதையோ நினைத்துக்கொண்டு சரேலென்று அவன் பிடியிலிருந்து விலகிய மஞ்சு, ”வீரரே! மாலுமிகள் உணவு நேரந்தான் நமக்கு உணவு நேரம். வாருங்கள் போவோம்” என்று அழைத்து அவன் வருவதற்குக் காத்திராமல் விடுவிடுவென்று தளத்திற்குக் குறுக்கே நடந்து கீழே செல்லும் படிகளில் இறங்கிச் சென்றாள். இதயசந்திரன் மட்டும் இருந்த இடத்தை விட்டு நகரவில்லை. அவள் போவதைப் பார்த்துக் கொண்டே நின்றான். போன பின்பும் அவன் மட்டும் தளத்தில் நின்று சுவர்ண துர்க்கத்தையும், கடலையும், கப்பல்களையும் பார்த்தான் மீண்டும் மீண்டும். மஞ்சுவின் குணத்தைப்பற்றி ஒரு முடிவுக்கு வர அவனால் இயலவில்லை. திடீர் திடீரென அவள் உணர்ச்சிகள் மாறுவதும், சில சமயம் அதிகப் பெண்மையும், சில சமயம் அதிக ஆண்மைக் குணமும் தோன்றுவதையும், அந்த மாற்றங்கள் கனவேகத்திலிருப்பதையும் கண்டு, “என்ன பெண் ணிவள்?’ என்று தனக்குள் கேட்டுக் கொள்ளவும் செய்தான்.

அத்துடன் மானுவல் டி காஸ்ட்ரோ தனக்கு மாலுமித் தொழில் பழக்கி வைக்கப் போவதாகக் கூறிச் சென்றது வேறு அவன் மனத்தில் சிறிது கசப்பை அளித்துக் கொண்டிருந்தது. ஆனால் அந்தப் பயிற்சி தனக்கு ஜல தீபத்தில் கிடைக்கப் போகிறதென்பதால் சிறிது இனிப்பும் இருந்தாலும், ‘ஜலதீபத்தில் மஞ்சு என்னை எப்படி நடத்துவாள்? சாதாரண மாலுமியைப்போல நடத்துவாளா அல்லது எனக்கும் அவளுக்குமுள்ள உறவு காரணமாகச் சிறிது உயர்வாக நடத்துவாளா? எப்படி அழைப்பாள்? ‘மாலுமி! இங்கே வா’ என்று கெடுபிடியுடன் கூப்பிடுவாளா? அல்லது ‘வீரரே! இப்படி வாருங்கள்’ என்று விளிப்பாளா?” என்று பல கேள்வி களைக் கேட்டுக் கொண்டான். இந்தக் கேள்விகளைக் கேட்டுக் கொண்டும் பலபடி சிந்தனையை அலையவிட்டுக் கொண்டும் நின்ற இதயசந்திரனை சுமார் அரை ஜாமத் திற்குப் பிறகு தளத்தில் சந்தித்த மானுவல் டி காஸ்ட்ரோ , “தமிழா! இன்றைக்கு என்ன உபவாசமா உனக்கு?” என்று விசாரித்தான்.

”இல்லை” என்றான் இதயசந்திரன் கடலைப் பார்த்துக் கொண்டு.

“பின் ஏன் உணவருந்த வரவில்லை?” என்று கேட்டு நகைத்தான் காஸ்ட்ரோ.

“சிறிது நேரமாகட்டும் என்றிருந்தேன்” என்றான் இதயசந்திரன் காஸ்ட்ரோவின் நகைப்பை ரசிக்காத குரலில்.

சிறிது நேரமாகட்டுமா?” காஸ்ட்ரோவின் குரலில் ஏளனமிருந்தது.

“ஆனால் என்ன?” வெறுப்புடன் கேட்டான் இதய சந்திரன்.

“ஆனால் என்னவா? உனக்கு யார் உணவளிப்பார்கள் இனிமேல்?”

”ஏன் அளிக்கமாட்டார்கள்? உணவுக்கென்ன பஞ்சமா இங்கு”

இந்தப் பதிலைக் கேட்ட காஸ்ட்ரோ அவனைப் பரிதாபத்துடன் பார்த்தான். ”தமிழா! இங்கு பஞ்சம் ஏதுமில்லை. ஆனால் இது தீவு. தவிர முக்கிய கடற்படைத் தளங்களில் ஒன்று. திடீரென எதிரிக் கப்பல்கள் இதை முற்றுகையிட்டால் வெளியிலிருந்து உணவு வர முடியாது. ஆகையால் இங்கு தேவையான உணவே ஒவ்வொரு வருக்கும் அளிக்கப்படும். மற்ற உணவுத் தானியங்கள் முதலியன காப்பாற்றப்படும். இங்கு திடீர் முற்றுகையை எப்பொழுதும் எதிர்பார்க்கலாம். ஆகவே மாலுமிகளின் போஜன சாலைக்கும் மற்ற இடங்களுக்கும் உணவு அளவிட்டுத்தான் கொடுக்கப்படும்” என்று விளக்கினான் காஸ்ட்ரோ .

”அப்படியானால் உணவு கிடைக்காதா?” என்று வினவினான்.

“சாதாரணமாகக் கிடைக்காது?” என்றான் காஸ்ட்ரோ.

” அசாதாரணம் வேறு இருக்கிறதா இதில்?”

“இருக்கிறது.”

”எங்கே இருக்கிறது?”

“இதோ, இங்கேயிருக்கிறது” என்று காஸ்ட்ரோ தன் மார்பில் தட்டிக் காட்டி மேலும் கூறினான், “தமிழா! தனிப்பட எப்பொழுதும் நான் உணவு வைத்திருப்பேன். உனக்கு அதில் கொஞ்சம் தருவதில் ஆட்சேபணையில்லை” என்று.

இதயசந்திரன் அவனை ஒரு விநாடி கூர்ந்து நோக்கி, ”இது திருட்டுத்தனமல்லவா?” என்று வினவினான்.

பதிலுக்கு காஸ்ட்ரோவின் பழுப்பு நிறக் கண்கள் தமிழனை நோக்கி நகைத்தன. ”இங்கு எது திருட்டுத் தனம் இல்லை?” என்று விசாரித்தான் அவன். “நீ சொல்வது விளங்கவில்லை.”

”ஜலதீபத்தில் என்னிடம் வேலை செய்யும்போது புரிந்து கொள்வாய். நம்மை ஏதும் செய்யாமல் விலகிச் செல்லும் கப்பல்களை மடக்குவோம். அவற்றிலுள்ள பொருள்களைச் சூறையாடுவோம். எதிர்ப்பவர்களை ஒன்று சுட்டுத் தள்ளுவோம்; அல்லது வெட்டித் தள்ளுவோம்.”

“போரைச் சொல்கிறாயா?”

“போர்க் கப்பலுடன் நடப்பது போர். வர்த்தகக் கப்பலுடன் நடப்பதைப் போர் என்று சொல்வதில்லை. அவற்றை மடக்குபவனை பைரேட் என்று சொல்கிறார்கள்.”

“பைரேட்டா!”

”ஆம். கொள்ளைக்காரன் என்பதற்கு ஆங்கிலப் பெயர். இந்தப் பட்டத்தை நமது தளபதிக்கு மேல் நாட்டார் எல்லோரும் சூட்டியிருக்கிறார்கள்” என்ற காஸ்ட்ரோ பெரிதும் நகைத்து. ”தமிழா! இதில் தவறேதுமில்லை நீ ஆங்கிலேயரை கொள்ளையிடாவிட்டால் அவர்கள் உன்னைக் கொள்ளையிடுவார்கள். கொள்ளைக்குப் பல நாகரிகப் பெயர்களைச் சூட்டுவார்கள். ஆகவே எல்லாமே கொள்ளைக் கும்பல் அதிலிருந்து விலகி நிற்பவன் முட்டாள் . அகப்பட்டதை அவ்வப்பொழுது சுருட்டுவது நல்லது! வீண் தர்க்கம் எதற்கு? வா என்னுடன்” என்று கூறிப் படிகளை நோக்கி நடந்தான்.

காஸ்ட்ரோ அந்த மதில் சுவருக்கு அடியிலிருந்த பல அறைகளில் ஓர் அறைக்கு அழைத்து வந்தான். அந்த அறை சிறிதாயிருந்தாலும் அவற்றில் நானாவிதப் பொருள்களும் இருந்தன. பலவித விளக்குகள், பிரதிமைகள், கண்ணாடி பீங்கான் சாமான்கள், பற்பலவித கம்பளிகள் இவையனைத்துமிருந்தன. அங்கு வந்ததும் கம்பளம் ஒன்றை விரித்து அதில் இதயசந்திரனை உட்காரச்சொன்ன காஸ்ட்ரோ அங்கிருந்த ஒரு பெட்டியிலிருந்து பாதி ரொட்டியொன்றை எடுத்துக் கொடுத்து, ”தமிழா! இதைச் சாப்பிடு” என்றான்.

ரொட்டியைக் கையால் வாங்கக்கூட மறுத்த இதய சந்திரன். “எனக்குப் பசியில்லை ” என்று கூறினான்.

”எப்படிப் பசிக்கும்? விருந்து முடிந்துவிட்டது” என்று காஸ்ட்ரோ கூறிப் பலமாக நகைத்தான். அத்துடன் ஒரு கண்ணைச் சிமிட்டியும் காட்டினான்.

இதயசந்திரனுக்கு போர்ச்சுக்கீஸியன் பேச்சு. கண்ணடிப்பு எதுவுமே பிடிக்கவில்லையாதலால். ”விருந்தா! என்ன விருந்து!” என்று வினவினான் கோபத்துடன்.

“பார்ப்பதும் விருந்து.”

“எதைப் பார்த்தேன்?”

”அழகை.”

“எந்த அழகை? உன் அழகையா?”

மானுவல் டி காஸ்ட்ரோ மீண்டும் ஏளனச் சிரிப்புச் சிரித்துவிட்டு, ரொட்டியை எடுத்துப் பெட்டியில் வைத்துப் பூட்டினான். பிறகு அறை மூலையிலிருந்து ஒரு புட்டியையும் இரு கண்ணாடிக் குவளைகளையும் எடுத்து வந்து. “இதுவாவது வேண்டுமா வேண்டாமா?” என்று வினவிப் புட்டியைத் தூக்கிக் காட்டினான்.

“என்ன அது?”

“விஸ்கி.”

“குடியா”

ஆம்.”

”எனக்கு வேண்டாம்.”

”வேண்டாமா?”

”வேண்டாம்.’’

“ஏன்?”

“நான் குடிப்பதில்லை.”

காஸ்ட்ரோ வியப்புடன் அவனை நோக்கினான். “பின் எப்படி மாலுமியாக முடியும்?” என்று வினவினான்.

“குடித்தால்தான் மாலுமியாக முடியுமா?” என்று வெறுப்புடன் கேட்டான் இதயசந்திரன்.
“ஆம்.”

”சிறந்த மாலுமியாக வேண்டுமென்றால் அதிகம். குடிக்க வேண்டுமா?”

“சரியாகக் குடிக்கப் பழகிவிட்டால் எத்தனை குடித்தாலும் நிதானம் தவறாது. நான் இந்தப் பாட்டிலை அப்படியே குடிப்பேன். ஆனால் நான் குடித்ததாகத் தெரியாது. இதைப் போட்ட பின்பு எனக்கு ஏற்படும் சக்தி அபரிமிதம். எல்லாம் பழக்கத்தைப் பொறுத்தது. தமிழா” என்று காஸ்ட்ரோ இதயசந்திரன் எதிரிலேயே பாதிக் குப்பியைக் காலி செய்துவிட்டு அதை மீண்டும் அறை மூலையில் வைத்துவிட்டு வந்து கம்பளியில் காலை நீட்டிக் கொண்டு படுத்தான். படுத்துக் கூரையைப் பார்த்துக் கொண்டு பேசினான்: “தமிழா! மாலுமியின் வாழ்க்கை உலகத்துக்கு ஒவ்வாத வாழ்க்கை. தரையில் வசிப்பவன் சட்ட திட்டங்களுக்கும் ஜலத்தில் வசிப்பவன் சட்ட திட்டங்களுக்கும் ஒரு வித்தியாசமுண்டு. மாலுமியை எந்நேரமும் மரணம் நோக்கிக் கொண்டிருக்கிறது. அவன் கப்பலைப் புயல் கவிழ்க்கலாம். எதிரியின் கப்பல்கள் அழிக்கலாம், அவன் கடலில் விழலாம், அவனை சுறாக்கள் விழுங்கினாலும் விழுங்கலாம். என்ன ஏது என்று சொல்ல முடியாத வாழ்க்கை. ஆகவே கிடைத்தபோது சுகத்தை அனுபவிக்கிறான். சமய சந்தர்ப்பங்களை நிலத்தின் விதி களை எண்ணக்கூட அவனுக்கு வாய்ப்புக் கிடையாது. அத்தகைய வாழ்க்கையில் நீ புக முற்படுகிறாய். ஆகவே நிலத்தில் பேசப்படும் சத்தியம், தர்மம் இப் பாசாங்குகளை மறந்துவிடு. காற்றுள்ள போதே தூற்றிக்கொள். கிடைக்கும்போது சுகத்தை அனுபவி. இரக்கத்தை மனத்தி லிருந்து எறிந்துவிடு, உனக்கு யாரும் இரக்கம் காட்டமாட்டார்கள். நீயும் யாருக்கும் காட்டாதே” என்று.

இந்தப் பிரசங்கத்தைக் கேட்டு மலைத்தான் இதய சந்திரன். இத்தகைய விபரீத எண்ணங்களுள்ளவனிடம் தான் எப்படி சேவை புரிய முடியும் என்று எண்ணித் திகைத்தான் தமிழக வீரன்.

அவன் யோசனையைக் கண்டு நகைத்த காஸ்ட்ரோ . “படு தமிழா! நேரம் அதிகமில்லை ” என்றான்.

”எதற்கு” என்று வினவினான் இதயசந்திரன்.

அவன் பதில் அதிர்ச்சியை அளித்தது இதய சந்திரனுக்கு. ”பயணத்துக்கு, ஜலதீபம் அதிகாலையில் புறப்படுகிறது” என்ற காஸ்ட்ரோவின் சொற்கள் அவனுக்குப் பெரும் வேதனையை அளித்தன.

“இன்றைய காலையில் தானே வந்தோம்” என்றான் இதயசந்திரன்.

“எப்பொழுது வருவது எப்பொழுது புறப்படுவது. என்பதை நிர்ணயிப்பது ஆங்கரே ஒருவர் தான். அவர் சொல்வது கட்டளை. வைப்பது சட்டம். வேறு சட்டம் அரபுக் கடல் பகுதியில் செயல்படுவதில்லை. படு படு. அவர் உடனடியாகக் கிளம்பச் சொல்லக் காரணமிருக்கும்’ என்றான் காஸ்ட்ரோ. காரணம் இருக்கத்தான் செய்தது. அந்தக் காரணம் மகாராஷ்டிர சரித்திரத்தின் அடுத்த கட்டத்திற்கு அவனை அழைத்துச் சென்றது. அதுவரையிலிருந்த அவன் வாழ்வுக்கு முற்றும் புறம்பான வாழ்வுக்குள் அவன் புகுந்தான்.

Previous articleJala Deepam Part 1 Ch35 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 1 Ch37 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here