Home Historical Novel Jala Deepam Part 1 Ch38 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 1 Ch38 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

60
0
Jala Deepam part 1 Ch38 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 1 Ch38 | Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 1 Ch38 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 38 காஸ்ட்ரோவின் காதல்

Jala Deepam Part 1 Ch38 | Jala Deepam | TamilNovel.in

கனோஜி ஆங்கரேயிடமிருந்து விலையுயர்ந்த கைத் துப்பாக்கியையும், காஸ்ட்ரோவைப் பற்றிய எச்சரிக்கையையும் மஞ்சுவின் காவலன் எனும் பதவியையும் பெற்று அவரது மாளிகையிலிருந்து வெளியேறிய இதயசந்திரனின் எண்ணங்கள் புயலில் அகப்பட்ட கப்பலைப்போல திக்குத் திசையற்றுத் திரிந்து கொண்டிருந்தன. காஸ்ட்ரோவின் குணத்தையறிந்திருந்தும் ஜலதீபத்தின் உபதளபதியாக அவனை நியமிக்க வேண்டு மானால் அவனது கப்பலோட்டும் திறமையிலும் போரிடும் சக்தியிலும் கனோஜிக்கு எத்தனை மதிப்பிருக்க வேண்டு மென்பதைப்பற்றி நினைத்துப் பார்த்தான் தமிழக வாலிபன். அத்தகைய ஒருவனிடமிருந்து பெண்ணைக் காப்பாற்றத் தன்னை நியமிக்க வேண்டுமானால் தனது கண்ணியத்திலும் கடமையிலும் பராக்கிரமத்திலும் எத்தனை நம்பிக்கையை அவர் கொண்டிருக்கவேண்டும் என்று சிந்தித்தான். அத்துடன், தான் மகாராஷ்டிரத் துக்கு வந்த காரணமென்ன, கொண்டுள்ள வேலையென்ன என்பதைப் பற்றியும் எண்ணிப் பார்த்தான். மகாராஷ்டிர ராணியொருத்தியின் பிள்ளையைத் தேடி, பிள்ளையைக் தூக்கிச் சென்றவனைத் தேடித் தான் வந்திருக்க, மாலுமித் தொழிலும் மற்றொரு பெண்ணைக் காக்கும் பணியும் கிடைப்பதைப் பற்றி எண்ணி, தனது வாழ்க்கை தன்னையும் மீறி எங்கோ செலுத்தப்படுவதை உணர்ந்தான். இத்தனையிலும் ஓர் ஆறுதல் மட்டுமிருந்தது அவன் உள்ளத்துக்கு. அஞ்சன்வேல் கோட்டைவழியில் ஜலதீபம் செல்லுமானால் அந்தக் கோட்டையில் தான் கண்ட முகவெட்டு வீரனைத் தான் சந்திக்க முயலலாமென்றும், அப்படிச் சந்தித்தால் தான் வந்த வேலைக்கு முற்றுப்புள்ளி ஏற்படுமென்றும் எண்ணி அதன் விளைவாகச் சிறிது மன ஆறுதலும் அடைந்தான். அஞ்சன் வேல் கோட்டை சிந்தனையில் எழுந்ததால் வாசிஷ்டி நதி எழுந்தது. பரசுராமன் கோயில் எழுந்தது. பானுதேவியின் அழகிய வதனமும் எழுந்தது. அடர்ந்த மலைத்தோப்பில் அவள் கால் விரல்கள் தன் கைவிரல்களை நெறித்த இன்பச் சூழ்நிலையும் எழுந்தது. அந்தக் காட்சிகள் எழுந்ததால் வாசிஷ்டி நதிக்கரையில் மஞ்சு தனக்கருகில் நனைந்த உடையுடன் படுத்துக் கொண்டிருந்த காட்சியும் கூடவே எழுந்தது. இரண்டு பெண்களும் அவன் சித்தத்தில் மாறி மாறியும் கூடியும் எழுந்து அதை அலைக்கழித்தனர். இடையே பிரும்மேந்திர சுவாமியின் அருள் முகமும் கனோஜியின் கடகடவென்று நகைக்கும் வதனமும் எழுந்து சிந்தையைக் குழப்பின.

இந்த நிலையில் தெருக்களைத் தாண்டி காஸ்ட்ரோ வின் அறைக்கு வந்த இதயசந்திரன், அங்கிருந்த நிலையைக் கண்டதும் பெரு வியப்படைந்தான். பயணத்துக்கு சர்வ சித்தமாகக் காஸ்ட்ரோ மஞ்சத்தில் உட்கார்ந்து கொண் டிருந்தான். மாலுமிகள் அணியும் சராயையும், உடலைப் பிடிக்கும் முரட்டுச் சொக்காயையும், தலையில் வட்டமான மாலுமிக் குல்லாயையும் அணிந்திருந்த காஸ்ரோவின் காலில் தடித்த தோல் காலணியிருந்தது. இடையில் சுற்றி ஓடிய தோற் பட்டையில் வயிற்றுக்கு அக்கம் பக்கங்களில் இரண்டு கைத்துப்பாக்கிகள் காட்சியளித்தன. நீளமான பெரிய வாளொன்றும் இடையில் கட்டப்பட்டு மஞ்சத்துக்கு அப்பால் நீட்டிக் கொண்டிருந்தது. அவன் தோளிலிருந்து தொங்கிய துணிப்பை புடைத்துக் கிடந்த முறையிலிருந்து உள்ளே அவன் ஆடைகள் தவிர இரண்டு குடிப் புட்டிகளாவது இருக்குமென்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தது. உட்கார்ந்திருந்த முறையிலும் அவன் பெரும் கடல் வீரன் என்ற தோரணை சந்தேகத்துக்கிட மின்றி இருந்தது.

அவனைப் பார்த்து மலைத்து நின்ற இதயசந்திரனைக் கண்ணிமைக்கும் நேரத்தில் ஏற இறங்கப் பார்த்துவிட்ட காஸ்ட்ரோ. ”உனக்குப் பதினைந்து நிமிடங்கள் தருகிறேன்” என்று உத்தரவிடும் தோரணையில் கூறினான்.

அவன் தோரணையும் குரலிலிருந்த கடுமையும் இதய சந்திரனுக்குப் பிடிக்கவில்லையானாலும் அதை வெளிக்குக் காட்டாமல், “நான் கிளம்பியாகிவிட்டது” என்று பதில் கூறினான்.

”உன் ஆடைகள், ஆயுதங்கள்…” என்று கேட்டான் காஸ்ட்ரோ.

“இங்கு கொடுக்கப்பட்ட ஆடையைத் தவிர வேறு ஆடை இல்லை. இருப்பது வாள் ஒன்றுதான்” என்று கூறி மூலையிலிருந்த வாளை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டான்.

காஸ்ட்ரோ அவனிடம் ஏதும் பேசாமல் எழுந்திருந்து, “கதவைப் பூட்டிக் கொண்டு வா” என்று கூறி அவனிடம் தன் தோற்பட்டையிலிருந்த சாவியை எடுத்துக் கொடுத்து விட்டு வெளியே நடந்தான். இதயசந்திரனும் ஏதும் பேசாமல் கதவைப் பூட்டிக்கொண்டு அவனைப் பின் தொடர்ந்தான். முந்திய நாள் காஸ்ட்ரோவுக்கும் அன்றைய காஸ்ட்ரோவுக்குமிருந்த வேறுபாடு அவனுக்கு நன்றாகத் தெரிந்தது. கனோஜியின் மாளிகையிலிருந்து திரும்பியது முதல் தன்னை ஒரு வேலைக்காரன் போல் காஸ்ட்ரோ நடத்தியதைக் கண்டதால் முதலில் வியப்பை அடைந்தாலும் தன்னைக் கனோஜி அழைத்ததன் காரணத்தை அவன் புரிந்து கொண்டிருக்க வேண்டுமென்று பிறகு ஊகித்துக்கொண்ட இதயசந்திரனின் உள்ளம் மெல்லத் தீப்பிடிக்க ஆரம்பித்ததும் அதை மிகக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டான். முன் கோபியான தனக்கு அத்தனைப் பொறுமை எப்படி வந்தது என்பது புரியாமல் திணறினான். அடுத்த சில மாதங்களில் தன் பொறுமை . மிக மிக அதிகமாகப் போவதை அந்த நேரத்தில் உணராமலே காஸ்ட்ரோவைப் பின்பற்றிச் சென்றான் இதயசந்திரன்.

வெகு துரிதமாகவும் ஒரே சீராகவும் மாலுமி நடை போட்டுக் கோட்டையின் பிர்தான வாயிலைக் கடந்த காஸ்ட்ரோ அலை மோதும் துறைமுகப் படகுத் தளைக்கு வந்ததும் ஒருமுறை திரும்பிக் கோட்டையைப் பார்த்தான். கோட்டையின் மீது ஒருபுறமிருந்த ஆமையையும் இன்னொரு புறமிருந்த மாருதியையும் தலை தாழ்த்தி வணங்கினான். இதயசந்திரனும் அவனைப் போலவே வணங்கினாலும் அதைத் திரும்பிக்கூடப் பார்க்காத காஸ்ட்ரோ படகுகள் கட்டப்பட்டிருந்த முகப்பை நோக்கிச் சென்றான். காஸ்ட்ரோவின் ஒவ்வொரு செய்கையிலும் விசித்திரமிருந்தது. அலட்சியமிருந்தது. பெரும் தோரணையுமிருந்தது. கிறிஸ்தவனான அவன் கூர் மாவதாரத்தையும் ஆஞ்சநேயரையும் வணங்கியது விசித்திரமாயிருந்தது இதயசந்திரனுக்கு. அவன் தன்னிடம் காட்டிய அலட்சியம் கோபத்தைத் தந்தது. அவன் தோரணை அவனிடம் மதிப்பைத் தந்தது. விசித்திரம், கோபம், மதிப்பு ஆகிய மாறுபட்ட உணர்ச்சிகளுடன் அவனைத் தொடர்ந்து சென்ற இதயசந்திரன் அவனுடன் படகுத் தளைக்குச் சென்று அவன் குதித்த படகுக்குள் தானும் குதித்து மீண்டும் கோட்டை வாசலையும் துறைமுக முன் பகுதியையும் நோக்கினான்.

துறைமுகத்தில் கூட்டமிருந்தது. மாலுமிகள் பலரைத் தவிர மீன் பிடிப்போரும் தங்கள் படகுகளில் சென்று கொண்டிருந்தார்கள். அந்த இயற்கைத் துறைமுகம் பூராக விடியாத அந்தச் சமயத்திலும் பெரும் உயிர்த் துடிப்பைப் பெற்றிருந்தது. சற்று தூரத்தில் ஒரு புறத்தில் பெரிதாக எழுந்த ஸஹ்யாத்ரியின் பெரும் மகுடங்களும் சரிவுகளும் அந்தத் துறைமுகத்துக்கு இணையற்ற ஒரு கம்பீரத்தை அளித்தன. துறைமுகத்தில் நடமாடிய மக்களும் மாலுமிகளும், பயணமாகும் மக்களுக்குத் தின்பண்டங்கள் விற்கும் சிறு வணிகரும் ஸஹ்யாதரியின் அந்தப் பின்னணியில் விளையாட்டுக் குழந்தைகளைப் போல் தோன்றினார்கள். இந்த அழகைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டதால், தானும் காஸ்ட்ரோவுமிருந்த படகுத்தளை அவிழ்க்கப் பட்டதையோ, படகு நகர்ந்து விட்டதையோ இதயசந்திரன் உணராததால் திடீரென வந்த ஓர் அலையில் எழுந்த படகு அவனைக் கீழே தள்ளி விட்டது! அப்படிப் படகில் விழுந்தவன் மெள்ளச் சமாளித்துக் கொண்டதும் காஸ்ட்ரோ கூறினான்: “மாலுமியின் கண்கள் எங்கும் பார்க்க வேண்டிய கண்கள் தான்! ஆனால் பராக்குப் பார்க்கும் வேலை அவற்றுக் கில்லை” என்று. அதற்குப் பதிலேதும் சொல்லவில்லை தமிழன்!

படகில் விழுந்து சமாளித்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்த பிறகும் சுவர்ண துர்க்கத்தின் சூழ்நிலையையும் பலத்தையும் பார்த்துக் கொண்டேயிருந்தான். ஒரு முறை தூரத்தே துறைமுகக் கோடியில் ஆடிக்கொண் டிருந்த ஜல தீபத்தைப் பார்த்தான். அதன் மீது காற்றில் படபடத்துக் கொண்டிருந்த மகாராஷ்டிரர் அறக்கொடி அவனை எச்சரிப்பது போலிருந்தது. அலையில் தாழ்ந்து எழுந்துகொண்டிருந்த ஜலதீபத்தின் கூர்மையான முகப்பு அவனை. ‘வா வா’ என்று அழைத்துக் கொண்டிருந்தது. அக்கப்பலில் தனக்கு எச்சரிக்கை, வரவேற்பு இரண்டு மிருக்கும் என்பதைப் புரிந்து கொண்ட இதயசந்திரன் ஒரு முடிவுக்கு வந்துவிட்டானாதலால் கப்பலை அடைந்த போது சற்றுப் புன்முறுவலுடனேயே அதில் ஏறினான். கப்பலில் ஏறிப்படகை அனுப்பிவிட்ட காஸ்ட்ரோ, அதுவரை தமிழன் முகத்திலிருந்த குழப்பத்தையும் கவனிக்கத் தவறவில்லை. பிறகு ஏற்பட்ட முடிவையும் முறுவலையும் கவனிக்கத் தவறவில்லையாதலால் அவன் உதடுகளிலும் சிறிது புன்சிரிப்புப் படர்ந்தது.

அந்தப் புன்சிரிப்புடன் தன்னைத் தொடரச் சொல்லி இதயசந்திரனுக்குச் கைகை காட்டிச் சென்ற காஸ்ட்ரோ கப்பலின் கீழ்த்தளத்திலிருந்த ஒரு பெரிய அறைக்கு அழைத்துச் சென்று அங்கிருந்த நூறு நூற்றைம்பது மாலுமிகளிடம் அவனை அறிமுகப்படுத்தத் தொடங்கி, “இன்றிலிருந்து தமிழனும் இந்தக் கப்பலின் மாலுமி; உங்களுடனிருப்பான். இவன் வேலை என்னவென்பது பிறகு அறிவிக்கப்படும்” என்று கூறிச் சென்றான்.

அவன் சென்ற பிறகு மாலுமிகளும் அவனை நோக்கினர். அவனும் மாலுமிகளை நோக்கினான். அவர்களில் பலர் அவனுக்குப் புதிதல்ல. முந்திய பயணத்தில் வந்தவர்கள் தான் பெரும்பாலோர். பத்துப் பதினைந்து பேர் மட்டுமே புதியவர்களென்பதைப் புரிந்துகொண்ட இதயசந்திரன் தனக்கும் மாலுமிகளுக்கும் இடையேயிருந்த மௌனத் திரையைக் கிழிக்க முற்பட்டு, ”உங்களிடம் தொழில் பழக வந்திருக்கிறேன்” என்றான். மாலுமிகள் யாரும் பதில் கூறவில்லை, கொலைப் பார்வையாக அவனைப் பார்த்தார்கள். கடைசியில் ஒருவன் கேட்டான்: ”உன்னை ஏன் இங்கு அனுப்பிவிட்டார்கள்?” என்று.

‘மாலுமித் தொழில் பழக ஆசைப்பட்டேன். அனுப்பினார்கள்” என்றான் இதயசந்திரன் சர்வசாதாரணமாக.

”மாலுமித் தொழிலுக்கு வரும் எல்லோருமே இங்கு வருவது கிடையாது” என்றான் ஒரு மகாராஷ்டிரன்.

“வேறெங்கு போவார்கள்?” என்று வினவினான் இதயசந்திரன்.

”சிலர் பாய்மரத்தில் வேலை செய்வார்கள். இன்னும் சிலர் பீரங்கிகளை இயக்குவார்கள். சிலர் சுக்கான் பிடிக்கட் பழகுவார்கள். துடுப்புத் தள்ளும் வேலை அனேகமாகச் சிறை பிடிப்பவர்களுக்குக் கொடுக்கப்படுவது” என்றான் ஒரு டச்சுக்காரன்.

அவனை உற்று நோக்கிய இதயசந்திரன், “அப்படி யானால் நீங்களெல்லாருமே சிறை பிடிக்கப்பட்டவர்களா?” என்று கேட்டான்.

“இல்லை. இங்கு சாதாரண மாலுமிகளும் இருக் கிறார்கள். தவிர, இது உயர்ந்த வகுப்பினருக்கு அளிக்கப்படும் வேலையல்ல” என்றான் ஒரு கொங்கணி.

“வேலையிலும் வகுப்பு வேற்றுமை உண்டா!” என்று சற்றுக் கோபத்துடன் கேட்டான் தமிழன்.

“உண்டு” என்றான் டச்சுக்காரன். “கப்பலில் மிகக் கீழ்த்தர வேலை எது?’ என்று கேட்டான் தமிழன்.

“துடுப்புத் தள்ளுவது, கீழ்த்தரம் மட்டுமல்ல மிகக் கடுமையானதும்கூட” என்று பதில் கூறினான் டச்சுக்காரன். ”உனக்கு மாலுமித் தொழில் புதிதா?” ”இல்லை. பரம்பரை மாலுமிதான்’ என்றான். “எப்பொழுதும் துடுப்புத்தான் தள்ளுவாயா?’

“இல்லை, எங்கள் நாட்டுக் கப்பலில் பீரங்கி இயக்கு பவனாயிருந்தேன். அதை ஆங்கரே பிடித்தபோது சிறைப்பட்டேன். துடுப்புத் தள்ள நியமிக்கப்பட்டேன்.”

இதயசந்திரன் சில நிமிடங்கள் சிந்தனையில் இறங்கினான். பிறகு கூறினான் அந்த மாலுமிகளை நோக்கி, “நான் இந்த வேலையைத்தான் செய்யப்போகிறேன்” என்று.

மாலுமிகள் வியப்பால் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டார்கள்.

“உங்கள் அந்தஸ்த்துக்கு…’ என்று ஒருவன் துவக்கினான்.

” அந்தஸ்து திறமையைப் பொறுத்தது. ஆகையால் இதை ஏற்க நான் முடிவு செய்துவிட்டேன்” என்ற இதயசந்திரன், அந்த அறையில் ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டான். ஒரு மகாராஷ்டிரன் அவனை நெருங்கி வந்து கேட்டான்: ”ஸார்கேலிடம் தவறாக நடந்து கொண்டாயா தமிழா?” என்று.

”இல்லை. ஏன் கேட்கிறாய்?” என்று வினவினான் தமிழன்.

“உன்னை இந்த வேலைக்கு அனுப்பியிருக்கிறாரே? அதுவும் காஸ்ட்ரோவிடம் பணிபுரிய அனுப்பியிருக்கிறாரே!” என்று சுட்டிக் காட்டினான் மகாராஷ்டிரன்.

“அதனாலென்ன?” “காஸ்ட்ரோ கொடியவன்.” “இருந்தாலென்ன செய்ய முடியும்?”

“உப தளபதியென்ற முறையில் எதையும் செய்ய முடியும். உன்னைச் சுட்டுவிடக்கூட முடியும்?” ”என்னை எதற்காகச் சுடவேண்டும்?”

“காரணம் தெரியாது. முடிந்தால் உன்னைச் சுடத் தவறமாட்டான்.” “அதெப்படி உனக்குத் தெரியும்?” “அவன் சென்றபோது உன்னைப் பார்த்தான்.”

”பார்த்தாலென்ன?”

“பார்வையில் குரூரமிருந்தது. சாதாரணமாக அவன் பார்வையில் சிரிப்புத்தானிருக்கும். பெரும் நயவஞ்சகன்! ஆனால் உன்னைப் பார்த்தபோது உள்ளத்திலிருப்பதைக் காட்டிவிட்டான்.”

”அப்படியா!”

“தமிழா! நீ மிக எச்சரிக்கையுடனிருக்க வேண்டும். இல்லையேல், அடுத்த துறைமுகத்தை ஜல தீபம் அடைவதற்குள் உன் உயிர் ஆகாயத்தை நோக்கிப் பறந்துவிடும்.”

இதயசந்திரன் இரு வினாடிகள் மௌனம் சாதித்தான். பிறகு கலகலவென நகைத்தான். “ஏன் நகைக்கிறாய் தமிழா?” என்று வினவினான் இத்தனை நேரம் பேசிய மாலுமி.

”என் நெஞ்சில் கூட நீ அச்சத்தைப் புகுத்துகிறாயே என்று நகைத்தேன்; சரி, உன் பெயரென்ன?” என்று கேட்டான் இதயசந்திரன்.

“ஹர்கோவிந்த்” என்றான் மாலுமி.

“ஹர் கோவிந்த்….” என்று மெல்ல அழைத்தான் இதயசந்திரன்.

“ஏன் தமிழா!”

“உபதளபதிக்கு நான் படியாவிட்டால் என்ன தண்டனை?”

”வெட்டிக் கடலில் எறிந்து விடுவார்கள்.”

“நான் சுட்டுக் கொன்றுவிட்டால்?”

”அதற்கும் அதே தண்டனைதான்.”

“சரி.”

”எதற்குக் கேட்கிறாய்?”
“டி காஸ்ட்ரோவை எதிர்ப்பதா, சுட்டு விடுவதா என்று யோசித்தேன்.”

“முடிவு?”

”சுட்டுவிடுகிறேன்” என்றான் இதயசந்திரன் முடிவாக.

மகாராஷ்டிரன் மெல்ல அவன் பக்கம் சாய்ந்து, “சுட்டுவிடு தமிழா” என்றான்.

இதயசந்திரன் வியப்புடன் அவனை நோக்கி, “ஏன்?” என்று வினவினான்.

”உனக்குக் காரணமிருக்கிறது.”

” என்ன காரணம்?”

”அருகில் வா. குனி” என்ற ஹர் கோவிந்த். ”நீ மஞ்சுவிடம் மையல் கொண்டிருப்பது எனக்குத் தெரியும்” என்றான் காதோடுகாதாக.

”எப்படித் தெரியம்?” இதயசந்திரன் குரல் வறண்டு கிடந்தது.

”உன்னை மஞ்சு முன்பு துடுப்புத் தள்ளுமிடத்திற்கு அழைத்து வந்தபோது உன் கண்களைப் பார்த்தேன்” என்றான் ஹர்கோவிந்த்.

“உம் உம். அதற்கும் காஸ்ட்ரோவைக் கொல்வதற்கும் என்ன சம்பந்தம்?”

சம்பந்தத்தை மெல்லத்தான் சொன்னான் ஹர் கோவிந்த். தமிழன் தலையில் அந்தச் சொற்கள் பல துப்பாக்கிக் குண்டுகளைப் போல் பாய்ந்தன. அப்படியே மலைத்துப் பிரமித்துக் கல்லாய்ச் சமைந்து உட்கார்ந்து விட்டான் இதயசந்திரன். ‘மஞ்சுவிடம் காஸ்ட்ரோ தீராத காதல் கொண்டிருக்கிறான். அவளை அடைய எதையும் செய்யத் தயங்கமாட்டான்’ என்றான் அந்த மகாராஷ்டிர மாலுமி.

இதயசந்திரன் புரிந்து கொண்டான் அந்தப் பயணம் எத்தனை அபாயமென்பதை. எவ்வளவு பெரிய பொறுப்புச் சுமை தன் தலையில் கட்டப்பட்டிருக்கிறதென்பதையும் புரிந்து கொண்டான். அந்தப் புது வாழ்விலும் தனது வாழ்க்கையில் பல புயல்கள் அடிக்கும் என்பதையும் உணர்ந்து கொண்டான். அந்தச் சமயத்தில் கப்பல் தளத்தில் கேட்டது பெரிய இரைச்சல். தளபதி வந்து விட்டதும், நங்கூரம் எடுக்கப்பட்டதும், பாய்கள் ஏற்றப் பட்டதும், அந்த இரைச்சலிலிருந்தே தெரிந்தது. துடுப்புத் தள்ள விரைந்தனர் அந்த அறையிலிருந்த மாலுமிகள்.

இதயசந்திரனும் விரைந்தான் அடித்தளத்தை நோக்கி, துடுப்புகளைத் துழாவ. பாய்கள் விரிந்து புடைக்க. ஜலதீபம் நகர்ந்தது. இதயசந்திரன் வாழ்வும் நகர்ந்தது இன்னொரு பகுதிக்கு. பெரும் போர்களும், ஆபத்தும், இடையிடையே மகிழ்ச்சியும் கலந்த, தரைக்குச் சிறிதும் சம்பந்தப்படாத. அவன் அதுவரை கண்டிராத புது வாழ்வில் அடியெடுத்து வைத்தான்.

அந்தப் பகுதியின் ஆரம்பமே அவனுக்கு அதிர்ச்சியைத் தந்திருந்தது. காஸ்ட்ரோவும் மஞ்சுவைக் காதலிக்கிறான் என்ற அதிர்ச்சிதான். அந்த அதிர்ச்சியும் அதிர்ச்சியால் ஏற்பட்ட வேகமும் அவனைப் பலமுறை காஸ்ட்ரோவுடன் மோத வைத்தது. அந்த மோதல்கள் அவன் தலைவிதியை மட்டுமல்ல, மகாராஷ்டிரத்தின் தலைவிதியையும் நிர்ணயித்தது.

முதல் பாகம் முற்றும்

Previous articleJala Deepam Part 1 Ch37 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 2 Ch1 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here