Home Historical Novel Jala Deepam Part 1 Ch5 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 1 Ch5 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

114
0
Jala Deepam part 1 Ch5 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 1 Ch5 | Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 1 Ch5 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 5 இதயசந்திரனின் இரகசியம்

Jala Deepam Part 1 Ch5 | Jala Deepam | TamilNovel.in

இதயசந்திரனின் இனிய இதழ்களிலிருந்து இதயத் தைத்துடிக்கவைக்கும் அத்தனை பயங்கரச் சொற்கள் வெளிப்படுமென்று மட்டும் அந்த இளங்கிளி முன்னதாக அறிந்திருந்தால், அவள் அவனைத் தொடர்ந்து வந்தும் இருக்கமாட்டாள். வந்தாலும் அவன் வாயைக் கிளறியும் இருக்கமாட்டாள். இத்தனைக்கும் அவள் ‘பேசுங்களேன்’ என்று தூண்டிய பிறகும் அவன் உடனடியாகப் பேச்சுக் கொடுக்காமல் அவளைச் சில வினாடிகள் இருந்த இடத்தி லிருந்து ஆராயவே செய்தான். அவன் சாய்ந்திருந்த மரத்திலிருந்து சற்றுத் தள்ளியிருந்த மரத்தில் கட்டப்பட்டிருந்த மண்ணெண்ணெய் விளக்கின் ஒளி அவள் வதனத்தில் பட்டதால் அந்த முகத்தின் அழகைக் கண்டு அவன் பெரிதும் பிரமிப்படைந்து நின்றான் அவளை முழு உணர்ச்சிகளுடன் முதன் முதலாக அப்பொழுதுதான் பார்த்தானாகையால் அவள் மதி முகத்தின் முழு லாவண்யமும் அவன் கண்கள் மூலமாகச் சித்தத்துள் பாய்ந்து அவனை ஏதோ செய்து கொண்டிருந்தது.

நேரம் நள்ளிரவை எட்டிவிட்டதால் அந்தக் காட்டின் தொலை மூலைகளிலிருந்து துஷ்ட மிருகங்கள் உறுமும் ஒலிகள் காதுகளுக்குப் பயங்கரமாக எட்டிக்கொண்டிருந்தன. அவள் நின்றிருந்த இடத்திலிருந்து வெகுதூரம் கள்ளி வீரர்கள் இருவர் மூட்டிய நெருப்பில் சுள்ளிகள் வெடித்தது கூட அந்த இரவின் கடுமையையும் சூழ்நிலைகளின் கொடுமையையும் அதிகப்படுத்திக் காட்டியது. ஆகாயமளாவி நின்ற காட்டு மரங்களின் கிளைப் பொந்துகளில் நல்ல சப்தம் செய்யும் பறவை இனங்கள் உறங்கிவிட்டாலும் உறங்காத ஆந்தைகள் மட்டும் “ஹும், ஹும்” என்ற தங்கள் விபரீத. ஹூங்காரத்தைக் கிளப்பிக் கொண்டிருந்ததால். கண்ணுக்கோ காதுக்கோ இன்பமற்ற சூழ்நிலையே எங்கும் நிலவிக்கிடந்தது. அத்தகைய சூழ்நிலையில் இன்பம் இரக்கம் இரண்டையும் அள்ளிக் கொட்டிய தேவியின் அழகிய வதனம் எத்தனை மாறுபட்ட அமுதத்தைத் தன கண்களில் பாய்ச்சிவிட்டது என்பதை எண்ணி வியந்தான் இதயசந்திரன். உக்கிரமான சூழ்நிலையில் அவள் மோனைத் தோற்றம் எத்தனை மிகைப்பட்டுத் தெரிந்தது என்பதை நினைத்துப் பார்த்த இதயசந்திரன் உக்கிரத்துக்கும் சிருங்காரத்துக்கும் பெருத்த சம்பந்தமிருப்பதைப் புரிந்துகொண்டான் அந்தச் சில வினாடிகளில். ‘அழகிய மின்னலைத் தொடர்ந்து தான் திகிலை விளைவிக்கும் இடி இடிக்கிறது. உக்கிரமான கடலலைகள் தானே அழகிய சங்குகளையும் கிளிஞ்சல்களையும் புரட்டிக்கொண்டு கரையில் தள்ளுகின்றன? அசுரரும் தேவரும் மலையிட்டுக் கடலை உக்கிரமாகக் கடைந்த பின்புதானே அமுதம எழுந்தது. சந்திரன் எழுந்தான், திருவும் எழுந்தாள்’ என்று சிந்தித்த இதயசந்திரன், ‘முரட்டு மரங்கள் சூழ்ந்த இந்தக் காட்டின் நடுவில் இவள் புஷ்பக் கொடி போல் நிற்பது எத்தனை இன்பமாயிருக்கிறது?’ என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டான். துஷ்ட மிருகங்களின் உறுமலுக்கிடையில், “பேசுங்களேன்,” என்று அவள் கேட்டது இசையின் நாதத்தைத் தோற்கடித்ததையும் எண்ணிப்பார்த்தான்.

அவள் முகத்துக்குத் தூரத்திலிருந்த விளக்கொளி மெருகு கொடுத்ததா அல்லது விளக்கொளிக்கு அவள் முகம் மெருகு கொடுத்ததா என்பது புரியவில்லை அவனுக்கு. அவள் இதழ்களிலிருந்த புன்னகையைவிட ஒரு பெரிய மோகனாஸ்திரம் இருக்கமுடியாதென்பதை அவன் ஊர்ஜிதம் செய்துகொண்டாலும் அந்தப் புன்னகையில் ஏதோ அதிகாரத் தோரணையிருப்பது மட்டும் புரிந்தது அவனுக்கு. அவள் நின்ற தோரணையிலும் அந்த அதிகாரம் நன்றாகத் தெரிந்தது. ஒரு ஆண் மகனைத் தனிமையில் சந்திக்க வந்த நேரத்திலும் அவள் கால்கள் மிக உறுதியுடன் நிலத்தில் நின்றதையும் சிற்றிடை ஒய்யாரமாக வளைந்திருந்தாலும் அதிலும் ஒரு பெருந்தோரணையே புலப்பட்டதைக் கண்ட இதயசந்திரன், அந்தத் தோரணையைச் சற்று உடைக்கத் தீர்மானித்தான். அதன் விளைவாக உதிர்த்தான் அந்த இரக்கமற்ற சொற்களை, ‘தேவி! எனக்கு ஒரு விஷயம் மிக்க மகிழ்ச்சியளிக்கிறது” என்று துவங்கிய இதயசந்திரன் இதழ்கள் இள நகை கொண்டன.

தேவியின் இதழ்களில் புன்னகை நன்றாக விரிந்தது. “எந்த விஷயம் வீரரே?” என்று வினவினாள் தேவி இன்பம் சொட்டும் குரலில்.

”பதக்கம் உங்களிடமிருப்பது’ என்ற இதயசந்திரன் தனது இதழ்களில் புன்னகையைச் சற்று அதிகமாகவே படரவிட்டான்.

ஆனால் தேவியின் இதழ்களில் புன்னகை மறைந்தது. இதழ்கள் இறுகி மெல்லத்துடிக்கவே செய்தன. “அப்படி யானால்… நீங்கள்…’ என்று ஏதும் தொடர்ச்சியாகச் சொல்லமுடியாமல் குழறினாள்.

இதயசந்திரன் மரத்தில் நன்றாகச் சாய்ந்து கொண்டு கேட்டான், ‘நான்… என்ன?” என்று.

“நீங்கள் விழித்துக் கொண்டுதானிருந்தீர்களா?’ என்று வினவினாள் தேவி. – ”எப்பொழுது?” இதயசந்திரன் கேள்வி சர்வசகஜமாக எழுந்தது.

“சுவாமி என்னிடம்…” என்று துவங்கிய தேவி பேச்சைப் பூர்த்தி செய்யவில்லை. ‘ஒருவேளை இவர் ஊகததால் ஏதாவது கேட்டால் நான் எதற்காக உளற வேண்டும்?’ என்ற எண்ணத்தால் பேச்சை அடக்கிக் கொண்டாள்.

இதயசந்திரன் அதைப் பூர்த்தி செய்தான். “ஆமாம் தேவி! சுவாமி உங்களிடம் பதக்கத்தைப் பாதுகாக்கச் சொன்னது எனக்குத் தெரியும். சத்ரபதியின் வரலாற்றை சுவாமி உங்களுக்கு விளக்கிய போதே நான் விழித்துக் கொண்டேன்” என்று கூறினான் இதயசந்திரன்.

“அப்படியானால் உறங்குவதாகப் பாசாங்கு செய்தீர்களா?”

”பாசாங்கு என்று அதைச் சொல்ல முடியாது.”

“வேறு எப்படிச் சொல்வது?”

பிறர் ரகசியம் பேசும்போது கண்ணியமானவன் செய்யக் கூடியது என்று சொல்லலாம்.”

”அதாவது…’

“காதில் விழுந்தாலும் விழாதது போல் இருந்து விடுவது.”

இதற்கு என்ன பதில் சொல்வதென்று தேவிக்குத் தெரியவில்லை. கடைசியில் சிறிது தைரியத்துடன் கேட்டாள், வேறு என்ன விழுந்தது காதில்?” என்று.

”கத்தியில்லாமல் வீரனில்லை, கச்சையில்லாமல் கத்தியில்லை” என்று சுவாமி அன்று காலையில் அவளிடம் சொன்ன வார்த்தைகளை அப்படியே திருப்பிச் சொன்னான் இதயசந்திரன்.

தேவிக்கு அதுவரையில் சந்தேகம் ஏதாவதிருந்தால் அது அடியோடு அகன்றுவிட்டது. சுவாமி தங்களிடம் பேசியதில் ஒரு பகுதியை அதுவும் முக்கிய பகுதியை அவன் கேட்டுவிட்டான் என்று நன்றாக விளங்கியது. அவள் திடமாகக் கேட்டாள். ”அடுத்து நீங்கள் என்ன செய்ய உத்தேசம்?” என்று.

“எதுவும் செய்ய உத்தேசமில்லை” என்றான் இதயசந்திரன்.

”பதக்கத்தைத் திருப்பிப் பெற உத்தேசமில்லையா?” என்று அவள் மீண்டும் கேட்டாள்.

“இல்லை.”

“அப்படியானால் அது என்னிடம்…?”

”பத்திரமாயிருக்கட்டும்.”

“அது உங்களுக்குத் தேவையில்லையா?”

”தேவையிருந்தால் கொடுப்பீர்களா?”

“சுவாமி உத்தரவிட்டால் கொடுத்து விடுகிறேன்.”

இதயசந்திரன் மெல்ல நகைத்தான். ”சுவாமி உத்திர விடமாட்டார்” என்றான் அந்த நகைப்பைத் தொடர்ந்து.

தேவியின் முகத்தில் குழப்பம் தெரிந்தது. “அதெப்படி அத்தனை திட்டமாகத் தெரியும் உங்களுக்கு?” என்று வினவிய அவள் குரலிலும் சற்று குழப்பம் தெரிந்தது.

அந்தக் கேள்விக்கு அவன் உடனடியாகப் பதில் சொல்லவில்லை. ”தேவி! இந்தக் காட்டின் சூழ்நிலை உங்களுக்குப் பயத்தை அளிக்கிறதா?” என்று வினவினான் சம்பந்தமில்லாமல்.

“அடவியைக் கண்டு நான் என்றுமே பயந்ததில்லை” என்றாள்.

“அப்படியானால் என்னுடன் சிறிது தூரம் வருகிறீர்களா?” என்று வினவினான் இதயசந்திரன்.

இந்த அழைப்பு தேவியைச் சற்று அயரவைத்தது. எதற்காக அவன் தன்னைக் காட்டுக்குள் அழைக்கிறான் என்று எண்ணி, சற்று பயங்கூட அடைந்தாள் அவள். அவள் அலட்சியத்தையும் முகத்தில் கண்டபோது தோன்றி மறைந்த அச்சத்தையும் அவன் கூரிய விழிகள் கவனிக்கத் தவறாததால், “தேவி! தனிமையிலிருக்கும் பெண்களுக்குத் தீங்கிழைக்கும் கயவர் குலத்தில் இதயசந்திரன் பிறக்கவில்லை” என்று சற்று அழுத்தியே கூறிய இதயசந்திரன், “உங்களுக்கு இஷ்டமில்லையேல் திரும்பவும் கூடாரத் துக்குச் செல்லுங்கள்’ என்றும் தெரிவித்தான்.

தேவி ஒரு வினாடி அசைவற்று நின்றாள். ‘இதயசந்திரன், இதயசந்திரன்…” என்று இருமுறை அந்தப் பெயரை அவள் வாய் முணுமுணுத்தது. ‘அப்பா! என்ன அழகான பெயர்!” என்று அவள் சிந்தையும் சிலாகித்தது.

அவள் வாய் தனது பெயரை முணுமுணுத்ததைக் கவனித்த இதயசந்திரன் இதயத்தில் அமுத வெள்ளம் பாய்ந்தது. தனது பெயரை சுவாமிகளின் பரிவாரத்தில் அவளே முதன் முதலில் அறிந்ததுகூட அவனுக்கு மகிழ்ச்சி யளித்தது. அந்த மகிழ்ச்சியுடன் கூறினான் அவன், “பெயர் அப்படியொன்றும் விகாரமில்லையென்று நினைக் கிறேன்” என்று.

”விகாரமா!” என்று அவனை ஏறெடுத்து நோக்கிய தேவி, “அழகான பெயர் வீரரே உங்கள்…’ என்று ஏதோ சொல்லப் போய் வாயை மூடிக்கொண்டாள். “உங்கள் உருவத்தைப் போலவே அழகானது” என்று தப்பிச் சொல்லிவிட இருந்தவள் சமயத்தில் தவறை உணர்ந்து வாயை மூடிக்கொண்டாலும் முகத்தில் நாணம் பிரதிபலித்ததால் மீதி வார்த்தைகளை இதயசந்திரன் ஊகித்துக் கொண்டான். அதற்குமேல் அவளைச் சங்கடத்துக்குள் ஆழ்த்த விருப்பப்படாத அந்த வாலிபன், “தேவி! நீங்கள் கூடாரத்துக்குச் செல்லுங்கள். நான் இந்தக் காட்டைச் சற்று சுற்றிப் பார்த்துவிட்டு வருகிறேன்” என்று கூறி விட்டுச் சாய்ந்திருந்த நிலையிலிருந்து அகன்று காட்டுக்குள் செல்லத் துவங்கினான்.

அவன் காலடி எடுத்து வைத்ததும், “இருங்கள்” என்ற தேவி அவனை நெருங்கினாள்.

“நீங்களும் வருகிறீர்களா?” என்று வினவினான் இதயசந்திரன்.

“ஆம்” என்றாள் தேவி. “நன்றி தேவி.”

”எதற்கு நன்றி?”

“என்னிடம் நம்பிக்கை வைத்ததற்கு.”

”என்ன நம்பிக்கை வைத்துவிட்டேன் உங்களிடம்?”

”என்னுடன் காட்டுக்குள் தனித்து வர ஒப்புக் கொண்டீர்களல்லவா?”

“அதனாலென்ன?”

”என் கண்ணியத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பதற்கு அது அடையாளம்’ என்று கூறிய இதயசந்திரன் காட்டின் ஊடே நடந்தான். அவளும் அவன் பக்கத்தில் நடந்தாள். அப்படி நடந்த அந்த இருவர் உள்ளத்திலும் ஏதேதோ எண்ணங்கள் உலாவிக் கொண்டிருந்தன. அந்த தமிழனுடன் தனிமையில் காட்டுக்குள் செல்லத் தனக்கேற்பட்ட துணிவை நினைத்து வியந்தாள் தேவி. தன்னைக் காணாமல் தனது தோழிகள் தேடினால் என்ன செய்வது என்ற பீதியும் அவள் சிந்தனையைப் பிடித்தது. நீண்ட நேரம் கழித்துக் கூடாரத்துக்குத் திரும்பினால், ‘எங்கு இத்தனை நேரம் போயிருந்தீர்கள்?’ என்று தோழிகள் வினவினால் என்ன சொல்வது என்றும் அவள் யோசித்தாள். சுவாமி காதுக்கு இது எட்டினால் என்ன ஆகும் என்ற நினைப்பும் அவள் இதயத்தைச் சற்றுக் கலக்கியது. இத்தனைக் கலக்கத்திலும் அவனருகே நடந்து சென்றது அவளுக்கு இன்பத்தையும் மகிழ்ச்சியையுமே அளித்தது. ‘இவரைக் கண்காணிக்க சுவாமி எனக்கு உத்தரவிட்டிருக்க, நான் இவரைத் தொடருவது எப்படித் தவறாகும்?’ என்றும் ஒரு கேள்வியைக் கேட்டுக்கொண்டு, தான் அவனுடன் செல்வ தற்கு ஒரு காரணமும் கற்பித்துக்கொண்டாள்.

அவனுடன் நடந்த அவள் தான் அவனைப்பற்றி நினைத்துக்கொண்டு நடந்தாளே தவிர, இதயசந்திரன் மனத்தில் அவளைப் பற்றிய நினைப்பு ஏதுமேயில்லை. மரத்தடியில் நின்றபோது அவள் லாவண்யத்தில் மயங்கிய இதயசந்திரன் இதயத்திலிருந்து அந்த முகம் அடியோடு மறைந்திருந்தது. ஆகவே மௌனமாகவே அவன் நடந்தான். “என்ன மறுபடியும் மௌன சுவாமியாகி விட்டீர்கள்?” என்று தேவி வினவிய பின்புதான் அவன் சிந்தனைக் கனவிலிருந்து மீண்டான். மீண்டதும் திரும்பி அவளைக் கவனித்த அவன் கண்களில் சோகம் படர்ந்து கிடந்தது. ”தேவி! இப்படி உட்காருங்கள்” என்று கீழே ஓர் இடத்தைச் சுட்டிக்காட்டினான். அவள் உட்கார்ந்ததும் தானும் எதிரே உட்கார்ந்துகொண்டு, “தேவி! உங்களை நான் இங்கு ஏன் அழைத்து வந்தேன் என்பது உங்களுக்கு வியப்பாயிருக்கலாம். ஆனால் வேறு வழியில்லை தேவி. நான் உங்களிடம் சொல்லப் போவதை வேறு யாரும் கேட்பதற்கில்லை. கூடாரத்துக்கு அருகிலிருக்கக்கூடிய வீரர்களோ, உங்களை அங்கு தேடி வரக்கூடிய தோழி களோ என்னைக் கண்காணித்து வரும் சுவாமிகளோ, யாரும் இதைக் கேட்பதற்கில்லை’ என்ற இதயசந்திரன் அவளை உற்று நோக்கினான்.

தேவி பதில் சொல்லவில்லை. அவள் மனம் திக் திக்கென்று அடித்துக்கொண்டது. இதயசந்திரனே பேசினான். “தேவி! உங்களிடம் பதக்கமிருக்கிறதல்லவா…” என்று துவங்கினான் குரலில் உணர்ச்சி பொங்க.

“ஆம்” என்றாள் தேவியும் உணர்ச்சி நிரம்பிய குரலில்.

“அத்துடன் வரலாறு பிணைக்கப்பட்டிருக்கிறது என்று சுவாமி கூறினார் உங்களுக்கு…” என்றும் தொடர்ந்தான் தமிழன்.

“ஆம்.”

“அவர் கூறிய வரலாறு அனைவருக்கும் தெரியும். அவர் அறியாத வரலாறும் இருக்கிறது தேவி” என்றான் தமிழன்.

தேவியின் கண்கள் அவளை ஏறெடுத்து நோக்கின. அவன் முகம் உணர்ச்சிப் பிழம்பாயிருந்தது. அதில் பெரும் பிரமிப்பும் பக்தியும் கவலையும் காணப்பட்டது. அந்தக் கவலையுடன் சொற்களும் உதிர்ந்தன அவன் வாயிலிருந்து. “அந்தப் பதக்கம் ஒரு பெண்ணுடையது. அவள் வாழ்க்கை அந்தப் பதக்கத்துடன் பிணைக்கப்பட்டிருக்கிறது” என்ற இதயசந்திரன் குரல் நடுங்கியது.

“அவள்…” என்று தயங்கிக் கேள்வி எழுப்பினாள் தேவி.

“அழகில் நிகரற்றவள்” என்ற இதயசந்திரன் தனது இதயத்தையே திறந்து கொட்டுவதுபோல் சொற்களைத் திறந்து கொட்டினான்.

உட்கார்ந்த நிலையில் தேவி ஸ்தம்பித்துவிட்டாள். பதக்கத்தின் இரகசியத்தை மெள்ள விவரிக்கத் தொடங் கினான் இதயசந்திரன். பதக்கத்தின் இரகசியத்தில் ஒரு பெண்ணின் இரகசியம் மட்டுமல்ல, இதயசந்திரன் இரகசியமும் அதில் பிணைந்து கிடப்பதை தேவி அறிந்தாள்.

Previous articleJala Deepam Part 1 Ch4 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 1 Ch6 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here