Home Historical Novel Jala Deepam Part 1 Ch6 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 1 Ch6 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

126
0
Jala Deepam part 1 Ch6 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 1 Ch6 | Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 1 Ch6 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 6 புதுக் குரல்

Jala Deepam Part 1 Ch6 | Jala Deepam | TamilNovel.in

பதக்கத்தின் இரகசியத்துடன் ஒரு பாவையின் இரகசியமும் பிணைக்கப்பட்டிருப்பதாக இதயசந்திரன் இதயமுருகிப் பேசிய பேச்சு தேவிக்கு வியப்பை மட்டுமின்றி, சிறிது கசப்பையும் அளிக்கவே செய்ததால் அவள் மௌனமாகலே அமர்ந்திருந்தாள். அவள் அமர்ந் திருந்த இடம் அடர்த்தியான காடானாலும் இலைகளின் இடுக்குகள் வழியாக அவள் மேல் சிறுசிறு வட்டங்களாக விழுந்த நிலவு வெளிச்சம் அவளுக்கு வெள்ளி நாணயங்களால் நெய்யப்பட்ட ஆடையைப் போர்த்தியிருந்தது. அவள் தலையில் சிறிது நழுவியிருந்த முக்காட்டின் மேலும் முக்காடில்லாத இடத்தில் தெரிந்த குழல் வகிட்டின் மேலுங்கூட நிலவு நாணயங்கள் விழுந்து இயற்கை நகைகளை அவளுக்கு அணிவித்ததால் தேவி அப்பொழுது வனதேவதை போலவே விளங்கினாள். நல்ல ரசிகனாயிருப்பவன் அந்தத் தோற்றத்தை ரசிக்கத் தவறியிருக்க மாட்டான். இதயசந்திரனும் ரசிகனேயானாலும் அவன் மனநிலை ரசிகத் தன்மையை அறவே இழந்திருந்தது அந்தத் தருணத்தில். உணர்ச்சி புரண்டிருந்ததால் அவன் கனவுலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தான். பார்வையிழந்த புறக்கண்கள் தேவியைப் பார்த்தன. பார்வையுள்ள அகக்கண்களில் வேறொரு பெண் நடமாடிக் கொண்டிருந்தாள். அவளைத் தொடர்ந்த கண்கள் புறக்கண்களின் பார்வையின் சக்தியை உறிஞ்சிவிட்டதால் வெறித்த பார்வையுடன் அந்த வாலிபன் தேவியைப் பார்த்தான். அவன் வாயிலிருந்து உதிர்ந்த சொற்களில் அவன் கனவுலகம் விரிந்தது. ”தேவி நான் சொல்லப் போவது ஒரு சோகக் கதை. வரலாற்றுக் கதைதான் அது. வரலாற்றிலும் நாம் விரும்பாத கதைகள் எத்தனை எத்தனை தோன்றியிருக்கின்றன! அத்தகைய கதைகளில் இதுவும் ஒன்று தேவி! என்று அவன் போட்ட பூர்வ பீடிகை, அந்தப் பீடிகையில் ஒலித்த உணர்ச்சி, அவளையும் அவன் கனவுலகத்துக்குக் கூட்டிச் சென்றிருக்க வேண்டும். ஆகவே தேவி மௌனத்தைக் கலைத்து ஒரு ‘ஹூம்’ மாத்திரம் கொட்டினாள். அந்த ஹூங்காரத்தில்’ ஒரு சோகம் இருந்தது. ‘அழகில் நிகரற்றவள் என்று சொன்னாரே இவர்! அவள் யார் அத்தனை அழகி?’ என்ற கேள்வியும் அந்த ஹூங்காரத்தின் ஊடே ஒலித்தது. அந்தக் கேள்வியில் சோகத்துடன் கசப்பும் கலந்திருந்தது. “அத்துடன் அந்த அழகிக்கும் வரலாற்றுக்கும் என்ன சம்பந்தம்? அத்தனை பெரியவள் யார்? அரச குடும்பத் தினளாயிருந்தால் எனக்குத் தெரியவேண்டுமே!” என்றும் உள்ளத்தே கேட்டுக்கொண்டு ‘இது சுவாமிக்கும் தெரியாத வரலாறாமே!’ என்று வியப்பும் அடைந்தாள்.

இப்படிக் கசப்பும் வியப்பும் மாறிமாறி எழுந்த உணர்ச்சிகளுடன் ஹூங்காரத் தொனியைத் தவிர வேறு ஒலி எழுப்பாத தேவியை நோக்கிய இதயசந்திரன் மேலும் சொன்னான், “தேவி! சுவாமிகள் கூரிய அறிவுடையவர். அவர் கண்ணிலிருந்து எதுவும் தப்பாது என்பதைப் புரிந்து கொண்டேன். என் மேலுடைப் பட்டையின் மடிப்பிலிருந்து நான் வாளணிந்திருக்க வேண்டும் என்று ஊகித்து அவர் எனக்குத் தூக்க மருந்து கொடுத்து வாளையும் கச்சையையும் தேடிக்கொணர்ந்தது வியக்கத்தக்க விஷயந் தான். கச்சையை உங்களிடம் கொடுத்து மறைத்ததும், அவர் நிலையில் இருந்தால் யாரும் செய்யக்கூடிய காரியந் தான். ஆனால் அந்தக் கச்சையிலிருந்தோ பதக்கத்திலிருந்தோ அவர் தெரிந்து கொள்ளக்கூடியது அதிகமல்ல. அவருக்குத் தெரிந்ததெல்லாம் பதக்கம் சத்ரபதியி னுடையது. அவர் முதல் மகன் சாம்பாஜிக்குக் கொடுக்கப்பட்டது. பிறகு இரண்டாம் மகனான ராஜா ராமிடம் சேர்ந்தது, இத்தனை தான். அத்துடன் அவர் அறிந்த வரலாறு நின்றுவிடுகிறது. அதாவது மகாராஷ் டிரத்துடன் அவர் ஆராய்ச்சி நின்றுவிடுகிறது. ஆனால் நான் சொல்லும் வரலாறு துவங்குவது மகாராஷ்டிரத்தி லல்ல; தமிழகத்திலிருந்து துவங்குகிறது அதுவும் பெரும் சாம்ராஜ்யங்களை நிறுவிய சோழப் பெரு மன்னர்களின் தலைநகரமான தஞ்சையிலிருந்து துவங்குகிறது.”

இந்த இடத்தில் சற்று நிதானித்த இதயசந்திரன். “ஆம் தேவி! தஞ்சையிலிருந்துதான் துவங்குகிறது. ஏற்கெனவே ஒரு சந்தேகம் கிளப்பினார் சுவாமிகள், தஞ்சையிலிருந்து இங்கு வந்த நான் ஏன் கப்பல் மார்க்கமாக வந்தேன் என்று. வந்ததற்குக் காரணமுண்டு. ஒருவனைத் தேடி வந்தேன். ஒரு பெண்ணை நிர்க்கதியாக்கிய ஓர் அயோக்கியனைத் தேடி வந்தேன். அவன் கேரளத்திலிருப்ப தாகப் புலன் கிடைத்தது. தஞ்சையிலிருந்து கேரளம் வந்தேன். அங்கிருந்து அவன் கார்வார் துறைமுகம் போய்விட்டதாகச் சொன்னார்கள். கார்வார் சென்று கடல் வழி வந்தேன். நான் வந்த கப்பல் கொள்ளைக் காரரால் தாக்கப்பட்டது. கடலில் விழுந்தேன். பிறகு நீங்கள் சொல்லியபடி பரசுராமன் திருவடியில் விழுந்தேன். ஆனால் இன்னும் அவனை நான் காணவில்லை. காணும் வரையில் விடப்போவதில்லை. கண்ட பின் எங்கள் இருவரில் யார் உயிருடன் இருப்போமோ சொல்லமுடியாது. என் உயிர் போகலாம். ஆனால் அவன் உயிர் போவதற்கு முன்பு என் உயிர் நிச்சயமாகப் போகாது…” என்று கூறினான். உணர்ச்சிப் பெருக்கால் அவன் உதடுகள் துடித்தன.

தேவி அவன் முகத்தைச் சற்று ஏறெடுத்து நோக்கினாள். முகம் கடுங்கோபத்தால் சிவந்து கிடந்தது. உதடுகளில் தெரிந்த கடுமை சொல்லத் தரமற்றிருந்தது: கண்கள் நன்றாக நெருப்பில் காய்ந்த இரும்புத் துண்டங்கள் போல் இருந்தன. இதயசந்திரன் ஒரு விநாடி தான் உணர்ச்சிக் கொந்தளிப்புக்கு இடங்கொடுத்தான். மறுவிநாடி தன்னை அடக்கிக்கொண்டு மேலும் கதையைச் சொல்லத் துவங்கி, ”தேவி! மகாராஷ்டிரத்தில் இன்று இரண்டு அரசர்கள் இருக்கிறார்கள். அதாவது இரண்டு சிவாஜிகள் இருக்கிறார்கள். ஒரு சிவாஜி இருந்த காலத்தில் ஹிந்து சாம்ராஜ்யம் உருவாயிற்று. இரண்டு சிவாஜி களின் காலத்தில் சாம்ராஜ்யம் உடைந்து நிற்கிறது. ஆனால் இந்த மகாராஷ்டிர மகுடத்துக்கு வாரிசு இருவர் மட்டுமல்ல தேவி! இன்னும் ஒருவரும் உண்டு…” என்று கூறிய இதயசந்திரனை. “என்ன! என்ன! இன்னும் ஓர் அரசனா!” என்று துடிப்புடன் இடைமறித்துக் கேட்டாள் தேவி.

“ஆம் தேவி! இன்னும் ஓர் அரசன் இருக்கிறான். இப்பொழுது அவன் இருப்பிடம் தெரியவில்லை. அப்படி யொருவன் உண்டு என்பதே யாருக்கும் தெரியாது. ராஜாராம் மகாராஜாவின் கடைசி மனைவியின் மகன் அவன்” என்று மற்றுமொரு திடுக்கிடும் செய்தியை எடுத்து வீசினான் இதயசந்திரன்.

‘இரண்டாவது மனைவியின் மகன் என்று சொல்லுங்கள். கடைசி மனைவி அம்பிகாபாய்க்குப் பெண்தானே. மகன் ஏது?” என்று கேட்டாள் தேவி. “இரண்டாவது மனைவியைச் சொல்லவில்லை. தாராபாயையும் ராஜஸாபாயையும் அம்பிகாபாயையும் தவிர செஞ்சிக் கோட்டையில் மணந்த வேறு ஒரு மனைவியும் ராஜாராம் மகாராஜாவுக்கு உண்டு” என்றான் இதய சந்திரன்.
தேவிக்கு அவன் கூறியது பெரும் விந்தையாயிருந்தது “சத்ரபதியின் இரண்டாவது மகனுக்கு அப்படியொரு ரகசிய மனைவியும் உண்டு என்பது விசித்திரமான செய்தி வீரரே” என்றாள் குரலில் பெருவியப்பைக் காட்டி.

“விசித்திரமாயிருந்தாலும் மறுக்க முடியாத சத்தியம் தேவி. ராஜாராம் செஞ்சியில் மணந்தார். செஞ்சிக் கோட்டையை அவுரங்கசீப்பின் தளபதி ஜுல்பிகார்கான் முற்றுகையிட்ட சமயத்தில் யாரும் அறியாமல் மணந்தார். அங்கிருந்து தப்பிய வேளையில் மனைவியை அழைத்துச் செல்ல வசதியில்லாததால் கோட்டையில் விட்டுச் சென்றார். கோட்டை மொகலாயர் வசமாகு முன்பு ராஜாராம் மகாராஜின் இந்த ரகசிய மனைவியும் அவருடைய குழந்தையும் கோட்டையிலிருந்து தப்பித் தஞ்சைக்குச் சென்றார்கள். இரண்டு பேருக்குத்தான் அவள் திருமண விஷயம் தெரியும். அவர்கள் இருவரும் அந்தப் பெண்னை அழைத்துக் கொண்டு தஞ்சை சென்றார்கள், அவர்களில் ஒருவன் என்ன ஆனானென்று தெரியவில்லை. இன்னொருவன் கொல்லப்பட்டான் கோடாரியால். தஞ்சை அரண்மனையிலிருந்து அந்த அரச மகன் மறைந்தான்” என்று இதயசந்திரன் பெருமூச்சு விட்டான்.

இந்த விரோதக் கதையைக் கேட்ட தேவியும் பெருமூச்செறிந்தாள். ”பிறகு?” என்று ஒரு கேள்வியையும் கேட்டாள்.

”ஒரு காவலன் உயிரை உறிஞ்சிய கோடாரி, மறைந்த காவலனுடையது என்று தெரிய வந்தது. அவனைக் கண்டு பிடிக்கத் தஞ்சை ஒற்றர்கள் செய்த முயற்சி பலிக்கவில்லை. ஆகவே ராஜாராமின் ராணி எனக்கு அழைப்பு விடுத்தார். சங்கீத மஹாலில் என்னைச் சந்தித்தார். • இதயசந்திரா! ஒரு நாட்டின் நலன் உன் கையிலிருக்கிறது. நீ என் மகனைக் கொணர்ந்து என்னிடம் சேர்த்துவிடு. அவனைக் களவாடிச் சென்றவனை அழித்து விடு. அவனை அழிக்க முடியாவிட்டால் என் மகனைக் கண்டுபிடித்து அவனையாவது அழித்துவிடு!’ என்று கண்களில் நீர் ததும்பக் கூறினார். முகத்திரையின்றி முக்காடின்றி அந்த மகாராஷ்டிர புஷ்பத்தை அன்று தான் பார்த்தேன். அழகுக்கு இலக்கணம் தஞ்சையில் அரண்மனை மறைவில் உறைந்திருந்த விஷயம் அன்றுவரை எனக்குத் தெரியாது. அந்தப் பேரழகை, ராஜ கம்பீரத்தை நான் பார்த்துக் கொண்டு நீண்ட நேரம் நின்றேன். பிறகு மெள்ளக் கேட்டேன், ‘அம்மணி! அந்த அதர்மனை அழிக்கச் சொன்னீர்கள். சரி, ஆனால் அரசகுமாரனை ஏன் அழிக்கச் சொல்கிறீர்கள்?’ என்று.

ராணியின் கம்பீர விழிகள் கலங்கி நின்றன அவர் முகம் தியாகச் சுடர்விட்டது. ராணி துக்கம் ததும்பிய குரலில், ‘இதயசந்திரா! ஹிந்து சாம்ராஜ்யம் பல தலை முறைகளுக்கு ஒரு முறைதான் ஏற்படுகிறது. அது இரண்டு தலைமுறைகளுக்காவது இருக்கட்டும். என் மகனுக்கு ஆட்சி வேண்டாம் இதயசந்திரா! ஒரு குடைக்கீழ் ஹிந்துக்களின் பெருமையாவது ஓங்கட்டும், இரண்டு நூற்றாண்டுகளுக்காவது. எனது மகன் இருப்பது தெரிந்தால் பட்டத்துக்கு வீண் போட்டி ஏற்படும். போட்டி தான் மிஞ்சும், சாம்ராஜ்யம் உடைந்து போகும்! வேண்டாம் இதயசந்திரா. என் மகனுக்கு அரசு வேண்டாம், ஹிந்து சாம்ராஜ்யம் பிழைக்கட்டும்’ என்றார்.

என் சித்தம் குழம்பி நின்றது. ராணியின் தியாக அக்னி என் இதயத்தைச் சுட்டெரித்தது. நான் பேசச் சக்தியில்லாமல் தலை வணங்கினேன். ராணி தன் மடி யிலிருந்த பதக்கத்தை எடுத்துக் கொடுத்தார். ‘இதை என் கணவர் கொடுத்தார். மகாராஷ்டிரத்தில் இதை நீ யாரிடம் காட்டினாலும் உனக்கு வேண்டிய ககல வசதியும் கிடைக்கும்’ என்று கூறிய ராணி தனது மகனைக் கடத்திச் சென்றவன் அங்க அடையாளங்களையும் சொன்னார். ‘அவன் இடுப்பில் தொங்கவிட்டுள்ள கத்தியைவிட அகலமுள்ள கத்தியை நீ பார்க்க முடியாது. அவன் முகத்தின் நடுவில் குறுக்கே ஆழமான வெட்டுக் காயம் இருக்கும். முகத்தில் கொலைக்களை சுடர்விடும். மிக மெல்லிய தோற்றமுள்ளவன். ஆனால் போரில் நிகரற்றவன். அவனை வாட்போரில் சமாளிக்க முடியாது. நீ அவனைக் கண்டுபிடித்தால் என் மகனிருக்குமிடம் தெரியும்’ என்று விவரித்தார் ராணி.”

”அவன் பெயர்?” என்று தேவி கேட்டாள்.

“தனக்குத் தெரியாது என்றார் ராணி. சேவக் என்று மட்டும் சொன்னார்” என்று கூறிய இதயசந்திரன். “ராணி சொன்னது இதுதான். இரவில் திடீரென செஞ்சிக் கோட்டைச் சுரங்க வழியாகச் செல்ல அமாத்யர் உத்தரவிட்டார். அரசர் மெய்க்காவலர் என்று இருவரை என்னுடன் அனுப்பினார். பெயர் ஏதும் சொல்லவில்லை. சுரங்க வழியாக வெளிவந்து சிறிது தூரத்தில் எதிர் வீரர் இருவரால் மடக்கப்பட்டோம். கண்மூடிக் கண் திறப் பதற்குள் அவர்களை வெட்டிப் போட்டான் மறைந்த இந்த மனிதன். காற்றின் வேகத்தில் புரவிகளை விட்டு என்னைத் தஞ்சைக்குக் கொண்டு வந்தான். பயங்கரப் பயணம் அது. ஆனால் வெகு சாமர்த்தியமாக என்னை அழைத்து வந்தான். அரண்மனையில் வசித்தான். குழந்தையைக் கண்போல் பாதுகாத்தான். இன்னொரு காவலனும் அவனும் ஒன்றாகவே தங்கியிருந்தார்கள். ஆனால் திடீரெனக் குழந்தை மறைந்தான். ஒரு காவலன் இறந்தான், இன்னொருவன் மறைந்தான்” என்று ராணியின் வார்த்தைகளிலேயே விஷயத்தை விளக்கினான். ”பிறகு?” என்றாள் தேவி.

“நான் பதக்கத்துடன் ராணியிடம் விடைபெற்றுக் கிளம்பினேன். தஞ்சையிலேயே புலன் விசாரித்தேன். அப்படியொரு மனிதன் மேல்திசைக்குச் சென்ற பொதி வண்டியொன்றில் சென்றதாகத் தெரியவே அந்தத் திசையில் பயணம் செய்தேன். பல மாதங்கள் விசாரித்துக் கொண்டு சென்றதில் அவன் கேரளம் சென்றதை அறிந்து அங்கு சென்று, அங்கிருந்து கார்வார் சென்றேன். அங்கு திட்டமான புலன் கிடைத்தது. அதே அடையாளங்களுள்ள ஒரு வீரன் மகாராஷ்டிரம் சென்ற ஒரு போர்க் கப்பலில் சென்றதாகச் செய்தி கிடைத்தது. அன்று புறப்பட இருந்த மற்றொரு வர்த்தகக் கப்பலில் நானும் பயணமானேன். இங்கு வந்து சேர்ந்தேன்” என்று கதையை முடித்த இதயசந்திரன், ”தேவி! என் இரகசியத்தை உன்னிடம் கூறி விட்டேன் இனி அந்தப் பதக்கத்தை என்னிடம் கொடுத்து விடுங்கள். ஒரு பெண்ணின் வேண்டுகோள், மகாராஷ்டிரத்தின் பிற்காலம்,

நான் அந்தப் பெண்ணுக்குச் செய்து கொடுத்த ஆணை இத்தனையும் அதில் புதைந்து கிடக்கிறது” என்று கையை நீட்டினான்.

தேவி விழிகளை உயர்த்தி அவனை நோக்கி, “வீரரே! பதக்கத்தை எப்படிக் கொடுக்க முடியும்?” என்றாள்.

“நீங்களும் பெண்ணல்லவா? ஒரு பெண்ணின் கண்ணீரைத் துடைப்பது உங்கள் கடமையல்லவா?”

தேவியின் இதயத்தில் கருணை உணர்ச்சி பொங்கியது. தன் இடை முடிச்சில் பத்திரப்படுத்தியிருந்த பதக்கத்தை எடுத்துக் கொடுத்துவிடலாமா என்றுகூட ஒரு விநாடி நினைத்தாள்.

“கொடுத்து விடுங்கள் தேவி! சுவாமியைப்பற்றிக் கவலைப்படாதீர்கள். துறவிக்குப் பெண்ணின் இதயம் தெரியாது. அந்தப் பதக்கமில்லாவிட்டால் மகாராஷ்டிரத் தில் எனக்குச் செல்வாக்கில்லை. நான் ராணியின் கண்ணீரைத் துடைக்க முடியாது. லட்சியத்தைப் பூர்த்தி செய்யமுடியாது. பதக்கமில்லையேல் நான் சிறகொடிந்த பறவை” என்று வற்புறுத்தினான் இதயசந்திரன்.

”சிறகொடிந்திருப்பதே சில சமயங்களில் நல்லது” என்ற குரலைக் கேட்ட தேவி, இதயசந்திரன் இருவருமே திடுக்குற்று எழுந்தனர். இருவர் உள்ளத்திலும் பெரும் பிரமையும் குழப்பமும் ஏற்பட்டன. ஏனென்றால் அந்தக் குரல் சுவாமியின் குரலுமல்ல, தோழிகளின் குரலுமல்ல. இரக்கமற்ற பயங்கரப் புதுக் குரலாயிருந்தது அந்தப் புதுக்குரலில், சொற்களைத் தொடர்ந்து ஓர் அலட்சியச் சிரிப்பும் மெதுவாக உதிர்ந்தது.

Previous articleJala Deepam Part 1 Ch5 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 1 Ch7 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here