Home Historical Novel Jala Deepam Part 1 Ch7 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 1 Ch7 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

112
0
Jala Deepam part 1 Ch7 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 1 Ch7 | Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 1 Ch7 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 7 ஸார்கேல்

Jala Deepam Part 1 Ch7 | Jala Deepam | TamilNovel.in

இதயசந்திரனையும் தேவியையும் திகிலுற்றுத் துணுக்குற்று எழுந்திருக்கச் செய்த அந்தப் புதுக் குரல் எத்தனை பயங்கரமாயிருந்ததோ. அவன் சிரித்த சிரிப்பு எத்தனை அலட்சியமாயிருந்த தோ. அத்தனை பயங்கரமான தோற்றத்துடனும், வெகு அலட்சியமான பார்வையுடனும் அந்த மனிதனே அவர்கள் நின்றிருந்த இடத்திற்கு இரண்டடி தூரத்திலிருந்த ஒரு மரத்தின் மறைவிலிருந்து வெளிவந்தான். குறுக்கே தடை செய்து தொங்கிய இரண்டொரு சிறு கிளைகளைக் கையால் அனாயாசமாக உடைத்து எறிந்துவிட்டு. அந்த அலட்சியச் சிரிப்பின் மிகுதி உதடுகளில் உறைந்து நிற்க அந்த இருவரையும் நோக்கி, “காரிருளில் காதலர் இருவரைத் தடை செய்து விட்டேனா?” என்றொரு வினாவையும் வீசி மீண்டும் அனாயாசமாக நகைத்தான்.

அவன் முதல் தடவை சிரித்த சிரிப்பே காட்டைக் கடுமையாக ஊடுருவிவிட்டதால், காவலர் சிலர் பந்தங்களுடன் அந்தத் திசையை நோக்கி நகர முற்பட்டுவிட்டது தூரத்திலாடிய வெளிச்சத்திலிருந்து இதயசந்திரனுக்குத் தெரிந்துவிட்டதால் இரண்டாவது சிரிப்புக் கண்டிப்பாய் அவர்களைத் தங்களருகில் கொணர்ந்துவிடும் என்பதைத் திட்டவட்டமாகத் தெரிந்து கொண்டான் அவன். அப்படிக் காவலர் வந்தால் அவர்களும் இந்தப் பயங்கர மனிதனைப் போலவே தன்னையும் தேவியையும் தவறாகப் புரிந்து கொண்டால் என்ன செய்வது என்று ஏங்கினான் அந்த வாலிபன். அந்த ஏக்கம் சினத்தையும் விளைவிக்கவே வந்தவனை நோக்கி, ”உன் கற்பனைக்குச் சிறிது எல்லை கட்டிவிடு” என்று சீறவும் செய்தான்.
இதயசந்திரன் சினத்தைச் சிறிதளவும் லட்சியம் செய்யாத அந்த மனிதன், ”என் கற்பனையா? என்ன கற்பனை?” என்று வினவினான் கரகரத்த விஷமக் குரலில்.

”எங்களைக் காதலர் என்று குறிப்பிட்டது. காதல் புரிய இங்கு வரவில்லை நாங்கள்” என்று சினம் தலைக் கேறக் கூறினான் இதயசந்திரன்.

”அதற்காக வந்திருக்க முடியாது” என்று வந்த மனித னும் விஷமக் குரலில் ஒப்புக்கொண்டான்.

”இப்பொழுதாவது உன் மண்டையில் அந்த உண்மை ஏறுகிறதா?” இதயசந்திரன் குரலில் சினம் சற்றுக் குறைந்து ஏளனம் ஒலித்தது.

”ஏறிவிட்டது.” வந்தவன் குரல் இதயசந்திரன் குரலைவிடப் பன்மடங்கு அதிக ஏளனத்தைக் கொட்டியது.

”மகிழ்ச்சி.’’

”நீங்களிருவரும் இங்கு வந்த காரணமும் புரிந்து விட்டது.”

“என்ன காரணம்?”

“தவம் செய்ய வந்திருக்கிறீர்கள்.’

“தவமா?”

”ஆம். இது தாமினிக் காடல்லவா?” என்ற அந்த மனிதன் மீண்டும் அந்தக் காடு அதிரும்படியாக நகைத்தான்.

இதயசந்திரன் அவன் தன்னுடன் விளையாடுகிறானென்பதைப் புரிந்து கொண்டான். ஏளனம் செய்து நகைக்கிறானென்பதும் நன்றாகப் புரிந்தது தமிழனுக்கு. தேவியின் நிலை பரிதாபமாயிருந்தது. அவள் தலைகுனிந்து வெட்கி நின்றிருந்தாள். அவன் தாமினிக் காட்டைப் பற்றிப் பிரஸ்தாபித்த பின்பு சட்டென்று தலையைத் தூக்கி, “இதுவாதாமினிக் காடு! ஒரு நாள் பயணத்தில் கடற்கரையிலிருந்து இதை அடைந்துவிட்டோமா”’ என்று வியப்பும் அதிர்ச்சியும் நிறைந்த குரலில் வினவினாள் தேவி.

“ஆம் பெண்ணே, இதுதான் தாமினிக் காடு! இங்கு தான் நான் பிரும்மேந்திர சுவாமியைச் சந்திப்பதாகக் கூறினேன்” என்றான் அந்த மனிதன்.

பிரும்மேந்திர சுவாமி என்ற பெயரைக் கேட்டதும் பெரும் பிரமிப்படைந்தான் இதயசந்திரன். பல விஷயங்களுக்குத் திடீரென அவன் மனத்துக்கு விளக்கம் கிடைத்தது. ‘பிரும்மேந்திர ஸ்வாமி! பிரும்மேந்திர ஸ்வாமி!’ என்று இருமுறை தனது மனத்திற்குள் ஜபம் செய்து கொண்டான். அப்பொழுதும் சந்தேகம நிவர்த்தி யாகாதிருக்கவே, “எந்த பிரும்மேந்திர ஸ்வாமி?” என்றொரு கேள்வியையும் தொடுத்தான் புதிதாக முளைத்த மனிதனை நோக்கி.

”தமிழா! எங்கிருந்து வருகிறாய்? வானிலிருந்தா அல்லது இந்த நாட்டில் எங்கிருந்தாவதிருந்தா?” வந்த வீரன் கேள்வியில் நகைப்பொலி மண்டிக் கிடந்தது.
“தஞ்சையிலிருந்து.” ”இந்த நாட்டவனாயிருந்தாலும் சரி, பிற நாட்டவனாயிருந்தாலும்கூட பிரும்மேந்திர ஸ்வாமி என்று இரண்டாமவர் கிடையாதென்பது உனக்குத் தெரிந்திருக்க வேண்டுமே. பிரும்மேந்திர ஸ்வாமி ஒருவர் கான், தாமினிக் காடும் ஒன்று தான். இந்த இரண்டு பெயர்களும் இந்துக்களுக்குத் தெரியும், மொகலாயருக்குத் தெரியும், வெள்ளைக்காரர்களுக்கும் தெரியும். மனித வர்க்கம் அனைத்துக்குமே தெரியும். உனக்குத் தெரியாவிட்டால் நீ எந்த வர்க்கமென்பதைத் தீர்மானிப்பது சிறிது கஷ்டம்” என்று சொல்லி இதயசந்திரனை நெருங்கி அவன் முதுகில் தட்டியும் கொடுத்தான்.

முதுகில் அவன் தட்டியது பேய் தட்டியது போலிருந்தது. ஆனால் அந்தத் தட்டுக்கும் அசையவில்லை இதயசந்திரன். அவன் மனம் பிரமிப்பில் ஆழ்ந்திருந்தது. பார தம்ம தலை வணங்கும் பிரும்மேந்திர சுவாமியே தன்னைக் காத்தவர் என்ற உண்மை ஏதேதோ விவரங்களை அவனது சிந்தனையில் துளிர்க்கவிட்டிருந்தது. பிரும்மேந்திர ஸ்வாமியின் சரித்திரம் நாடறிந்தது. அதைத் தமிழகத்திலேயே பலர் சொல்லக் கேட்டிருக்கிறான் இதயசந்திரன். கடற் கொள்ளைக்காரர்களும், மகாராஷ்டிர மன்னர்களும், மொகலாயரும், ஜன் ஜீரா தீவின் அபிஸீனிய ஸித்திகளும், சகலருமே வணங்கிய பிரும்மேந்திர ஸ்வாமி பரசுராம கிராமத்துக்குப் புத்துயிர் அளித்ததும், பரசுராமன் கோயிலைக் கட்டியதும், அந்தக் கோயில் விழாக்களுக்கு முஸ்லீம்கள். இந்துக்கள் இரு சாராருமே வருவது வழக்கமென்பதும் உலகமறிந்திருந்த தால் அப்பேர்ப்பட்ட மகானிடம் தான் வந்து சேர்ந்ததைப் பெரும் பாக்கியமாகக் கருதிய இதயசந்திரன் பல விநாடிகள் ஏதும் பேசாமல் மௌனமே சாதித்தான். அந்தச் சில விநாடிகளில் பந்தங்களுடனும் விளக்குகளுடனும் காவலர்கள் அந்த இடத்துக்கு வந்து சேரவே, நல்ல வெளிச்சத்தில் வந்த மனிதனை இதயசந்திரன் பார்த்தான். காவலர்கள் அந்த மனிதனைக் கண்டதும் தலை வணங்கி அச்சத்துடன் நோக்கியதைக் கண்ட இதய சந்திரன், வந்த மனிதன் யாரோ பிரமுகனாயிருக்க வேண்டுமென்ற முடிவுக்கு வந்தான். அவன் யார் என்னவென்பதை விசாரிக்கு முன்னமேயே அந்த மனிதன் காவலரை நோக்கி, “இவர்களை அழைத்து வாருங்கள்” என்று உத்தரவிட்டுத் துறவியிருந்த கூடாரத்தை நோக்கி நடந்தான்.

இதயசந்திரன் இதயத்தில் பிரமிப்புச் சூழ்ந்திருந்த தால் சில வினாடிகள் அசைவற்று நின்ற இடத்தில் நின்ற அவன் தேவியை நோக்கினான். வந்த மனிதன் நகர்ந்ததும் கவிழ்ந்த தலையைத் தூக்கிய தேவி அவனை ஒரு வினாடி பார்த்தாள். பிறகு பக்கத்திலிருந்த காவலன் கையிலிருந்த விளக்கொன்றைப் பிடுங்கிக்கொண்டு தனது கூடாரத்தை நோக்கி நடந்தாள்! அவள் சென்ற பிறகும் இருந்த இடத்தைவிட்டு இதயசந்திரன் நகரவில்லை. பிறகு விளக்குடன் நின்ற ஒரு காவலனை நோக்கி, ” நீ போ. நான் வருகிறேன்” என்றான்.

“உங்களை அழைத்துவரக் கட்டளையிட்டு அவர் செல்லவில்லை?” என்று காவலன் வினவினான்.

இதயசந்திரன் இகழ்ச்சியுடன் காவலனை நோக்கினான். ”அவர் கட்டளையிட்டாரா!” என்று இகழ்ச்சி குரலில் ஒலிக்க வினவவும் செய்தான்.

காவலன் அவனை வியப்புடன் நோக்கினான். “ஏன்? அவர் கட்டளையிடக் கூடாதா?” என்று பதில் கேள்வி கேட்டான் காவலனும் இகழ்ச்சி ததும்பிய குரலில்.

”எனக்கு இடமுடியாது!” என்று திட்டமாக அறிவித்தான் இதயசந்திரன்.

”அப்படியானால் தாங்கள் பிரும்மேந்திர ஸ்வாமி யாகத்தான் இருக்க வேண்டும்.”

“என்ன உளறுகிறாய்?”

“பிரும்மேந்திர ஸ்வாமிக்கு அடுத்தபடி அவர் கட்டளை தான் மகாராஷ்டிரத்தில் செல்லும். ஆகையால் உளறுவது யாரென்று நீங்களே தீர்மானித்துக் கொள்ளலாம்” என்றான் காவலன் இதயசந்திரனை இம்மியளவும் லட்சியம் செய்யாமல்.

இதயசந்திரன் காவலனை உற்று நோக்கினான். பிறகு வினவினான். “அவர் கட்டளைக்கு நான் கீழ்ப்படியாவிட்டால் என்ன ஆகும்?” என்று.

“மண்ணில் வசிக்க முடியாது” என்றான் காவலன்.

”அப்படியானால்?” என்று வினவினான் இதய சந்திரன் சற்றுக் குழப்பத்துடன்.

“நீர் மேல் வசிக்கலாம்” என்றான் காவலன்.

”நீ சொல்வது புரியவில்லை.”

” அவரிடம் அகப்பட்டுக் கொண்டால் புரியும்.” –

”என்ன புரியும்?”

“துடுப்புத் தள்ளுவது எவ்வளவு கஷ்டமென்பது” என்று கூறிய காவலன் மேற்கொண்டு பேச இஷ்டப்படாமல், ”மீதி ஏதாவது கேட்க வேண்டியிருந்தால் சுவாமியிடம் கேளுங்கள். இல்லையேல் அவரிடமே கேளுங்கள், அவரும் சுவாமி கூடாரத்தில் இருப்பார்” என்று கூறி மெல்ல நகைத்த காவலன் சுவாமியின் கூடாரத்தை நோக்கி விளக்கைக் காட்டிக்கொண்டு சென்றான்.

இதயசந்திரன் மௌனமாக அவனைப் பின்பற்றிச் சென்றான். சுவாமியின் கூடார வாயிலுக்கு வந்ததும் வெளியிலேயே காவலன் நின்றுவிட இதயசந்திரன் மட்டும் உள்ளே நுழைந்தான்.

அங்கிருந்த காட்சியைக் கண்டு அசைவற்று நின்றான் இதயசந்திரன். பார்ப்பதற்கு ராட்சதன் போலிருந்த அந்த மனிதன் பசுங்கன்றுபோல் அடங்கி ஒடுங்கி, நெற்றி ஸ்வாமியின் திருவடிகளில் படும்படி மண்டியிட்டு வணங்கியிருந்தான். பிரும்மேந்திர சுவாமி அவனுக்கு ஆசி மந்திரங்களை வாயில் முணுமுணுத்துக்கொண்டார். பிறகு அவனை எழுந்திருக்கச் சொல்லித் தாம் மட்டும் ஆசனத்திலமர்ந்தார். பிறகு இதயசந்திரன் மீது கண்களை ஓட்டிய பிரும்மேந்திர ஸ்வாமி, ”தமிழா! நீ தேவியுடன் தனித்துப் பேசியதாகக் கேள்விப்பட்டேன்” என்றார் சர்வ சாதாரணமாக.

”ஆம்” என்றான் இதயசந்திரன் மெதுவாக.
”நீ ஏதோ வரலாறு சொன்னதாகவும் இவர் சொன்னார்!” என்றார் . அந்த மனிதனைச் சுட்டிக் காட்டிய சுவாமி.

“ஆம்.” ”அந்த வரலாற்றை மீண்டுமொருமுறை சொல்.”

சொல்லுமுன்பு அந்தப் புது மனிதனை உற்று நோக்கினான் இதயசந்திரன். அவன் பரந்த முகத்திலிருந்த வேல்களைப் போன்ற கரிய கண்கள் அலட்சிய சிரிப்பை அப்பொழுதும் கொட்டிக் கொண்டிருந்தன. விசாலமான உரத்த நெற்றியில் முரட்டு மயிர்கள் தொங்கிக் கொண்டிருந்தன. நடுவிலே வாரப்பட்டு ‘காகபட்சகம்’ (காக்கை இறகுகள்) போல் இரு புறமும் காட்சியளித்த மயிரும் சரியாக வாரப்படாததால் சில இடங்களில் எழுந்து நின்றிருந்தன. கறுத்து அடர்ந்து நாகரிகமாக வளைநதிருந்த மீசை நடுக்கத்தை அளிக்கும் வண்ணம் அமைந்திருந்தது. அவன் சதைப்பிடிப்புள்ள தடித்த கன்னங்களும் பருத்த கழுத்தும், கழுத்துக்குச் சற்றுக் கீழே அவிழ்ந்திருந்த மேலங்கிக்குள்ளிருந்து எட்டிப் பார்த்த மார்பின் முரட்டு ரோமமும் அவன் இணையற்ற ஆண்மைக்கும் வலுவுக்கும் சான்று கூறின. நல்ல உயரத்துடனும் அவசியமான பருமனுடனும் இருந்த அவன் உடலின் வலிமை அவன் நின்ற தோரணையிலேயே தெரிந்தது. அவன் இடைக் கச்சையில் தொங்கிய ஒரு வளைந்த வாளும், நெற்றியில் வளைந்து தீட்டப்பட்டிருந்த சந்தனத் திலகமும் அவன் மகாராஷ்டிரனென்பதை வலியுறுத்தின. இடைக்கச்சையில் நடுவில் அவன் செருகியிருந்த இரு கைத் துப்பாக்கிகள் அவனிடம் எச்சரிக்கையுடன் பழகவேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டின. காதிலிருந்த பெரும் தங்க வளையங்களும், இடது கையின் மூன்று விரல்களிலிருந்த கல் மோதிரங்களும் செல்வத்துக்கு அவனிடம் குறைவில்லை யென்பதைப் பறைசாற்றின.

இதயசந்திரன் இப்படி அந்த மனிதனை அணு அணுவாக ஆராய்ந்ததைக் கண்ட பிரும்மேந்திர ஸ்வாமி புன்முறுவல் கொண்டார். அவனைக் காணக் காண இதயசந்திரன் முகபாவங்கள் பலவிதமாக மாறியதையும் அவர் கண்டார். பிறகு சொன்னார்: ‘தமிழா! வரலாற்றின் மடியில் நீ வீழ்ந்துவிட்டதை நீ வந்த அன்றே நான் உணர்ந்து கொண்டேன். இன்று அது ஊர்ஜிதமாகிறது” என்று. அத்துடன், ”உன் முன் நிற்பவர் யார் தெரியுமா?” என்றும் வினவினார்.

”தெரியாது” என்றான் இதயசந்திரன்.

“அப்படியானால் தெரிந்து கொள்” என்று பிரும்மேந்திர ஸ்வாமி வந்த மனிதனின் பெயரை மெள்ளவும், ஆனால் ஸ்பஷ்டமாகவும் உச்சரித்தார்.

அந்தப் பெயரைக் கேட்ட இதயசந்திரன் அப்படியே மலைத்து நின்று விட்டான். அவன் சுயநிலைக்கு வர வெகு நேரம் ஆயிற்று. எந்தப் பெயரைக் கேட்ட மாத்திரத்தில் பதினேழாவது நூற்றாண்டின் இறுதியிலிருந்து பதினெட்டாவது நூற்றாண்டின் நடுக்காலம்வரை அரபிக் கடல் பிராந்தியமே நடுங்கியதோ அந்தப் பெயருக்குடைய வனை நோக்கிய இதயசந்திரன், உணர்ச்சிகள் அடியோடு உறைந்து போயின. மகாராஷ்டிரர்களால், ஸார்கேல் (கடற்படைத் தளபதி) என்றும் மாற்றாரால் கடற் கொள்ளைக்காரனென்றும் அழைக்கப்பட்ட அந்த மனிதனைக் கண்டதும், உணர்ச்சி உடல் இரண்டும் ஸ்தம்பிக்கச் சிலையென நின்றுவிட்டான் தமிழகத்தின் அந்த வாலிப வீரன். பாரத சரித்திரத்தின் மிகப்பெரிய இருபாத்திரங்களின் முன்பு தானிருப்பதை உணர்ந்ததால் எல்லையில்லா வியப்பு அவனுடைய சித்தத்தைப் பிரமிக்க வைத்திருந்தது.

Previous articleJala Deepam Part 1 Ch6 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 1 Ch8 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here