Home Historical Novel Jala Deepam Part 1 Ch8 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 1 Ch8 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

70
0
Jala Deepam part 1 Ch8 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 1 Ch8 | Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 1 Ch8 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 8 அதிர்ச்சி, ஆசை, மகிழ்ச்சி!

Jala Deepam Part 1 Ch8 | Jala Deepam | TamilNovel.in

வந்த மனிதன் பெயரை எந்தக் கணத்தில் பிரும்மேந்திர ஸ்வாமி உச்சரித்தாரோ அந்தக் கணத்திலிருந்து பல கணங்கள் வரை பிரமித்து அசைவற்று வந்தவனை நோக்கியது நோக்கியபடி நின்றுவிட்ட இதயசந்திரன் சித்தம், பிரமிப்பிலிருந்து விடுபட்ட பின்பும் பல விஷயங்களைச் சிந்திக்கவே செய்ததால், தமிழகத்தின் அந்த வாலிப வீரன் உதடுகளைத் திறந்து சொற்கள் எதையும் கொட்டவில்லை. வந்தவனை நோக்கி வணக்க உரைகளோ வாழ்த்துரைகளோ சொல்லவும் முற்பட வில்லை. பிரும்மேந்திர ஸ்வாமியைத் தவிர அந்த மனிதனுக்குக் கட்டளையிடக் கூடிய யாரும் மகாராஷ்டிரத் தில் இல்லையென்றும், அந்த மனிதனின் கட்டளையை மீறினால் தான் நீர்மேல் வாழ நேரிடுமென்றும், துடுப்புத் தள்ள வேண்டியிருக்குமென்றும் தன்னை சுவாமி கூடாரத்துக்கு அழைத்து வந்த காவலன் கூறியதெல்லாம் இதய சந்திரன் எண்ணத்தில் எழுந்து சுழலவே அவற்றின் உட்பொருளெல்லாம் மெள்ள மெள்ள விளங்கலாயிற்று அவனுக்கு.

வந்தவன் பெயர் கனோஜி ஆங்கரே என்று பிரும்மேந்திர ஸ்வாமி கூறியதுமே மின்னலால் தாக்குண்டது போல் பெரும் வெளிச்சம் சித்தத்தில் பளிச்சிடப் பிரமித்து உறைந்துவிட்ட இதயசந்திரன் சித்தம், அந்த மின்னல் மறைந்ததும் உறைந்த நிலையிலிருந்து மீண்டது. உண்மையை உணரவும் அந்த உண்மை நிலையில் சுயநிலையை ஆராயவும் சக்தி பெற்றது ஆகலே கனோஜி. ஆங்கரேயை மீண்டும் இதயசந்திரன் கவனித்தான். ராட்சதன் போல் இரக்கமற்ற கரிய கூரிய கண்களுடன் நின்ற கனோஜி ஆங்கரேயின் முகம் பயங்கரத் திலும். ஒரு அழகையும் கவர்ச்சியையும் பெற்றிருந்ததைச் கண்டான் அந்த வாலிபன். ஒவ்வொரு சமயம் அந்த இரக்கமற்ற முகத்தில் சிறிது கனிவும் விஷமமும் கலந்து காணப்பட்டன அவன் கண்களுக்கு. உண்மையில் மகாராஷ்டிரக் கடல் வீரனான கனோஜி ஆங்கரே புரியாத பெரும் புதிராயிருந்தார் இதயசந்திரன் இதயத்துக்கு.

பதினேழு பதினெட்டாவது நூற்றாண்டுகளில் கனோஜி ஆங்கரே பலருக்கும் புரியாத புதிராகவே இருந்தார். பிரிட்டிஷ் வர்த்தகர்கள் அவரை, ‘கடற் கொள்ளைக்காரன் ஆங்கரே’ என்றே அழைத்தார்கள். கடலில் அவர்கள் கப்பலகளைப் பிடித்து கப்பம் விதித்த தால். மொகலாயர் அவரை ‘நிலச்சுறா’ என்றழைத்தார்கள், அவர் தரைக்கும் வந்து அவர்கள் பிராந்தியங்களையும் சொத்து சுதந்திரங்களையும் விழுங்கியதால். மகாராஷ்டிரர்கள் அவரை ஸார்கேல் (கடற்படைத் தளபதி) என்றும் தெய்வமென்றும் தொழுதார்கள். மொகலாயர் போர்ச்சுக்கீஸியர் கொடுமைகளிலிருந்து தங்களை நீரிலும் நிலத்திலும் காத்ததால்.

இப்படிப் பலர் பலவிதமாக கனோஜி ஆங்கரேயை அழைத்ததற்குக் காரணமும் உண்டு. அரபிக்கடல் பிராந்தி யத்தில் தனது அனுமதியில்லாமல் சௌதாய் கொடுக்காமல் எந்தக் கப்பலும் உலாவக் கூடாதென கனோஜி ஆங்கரே தடை விதித்திருந்தார். அனுமதியில்லாமல் உலாவிய கப்பல்கள் தாக்கப்பட்டுச் சூறையாடப்பட்டன. சில கப்பல்கள் பிடிக்கப்பட்டு அவருடைய தளங்களான சுவர்ண துர்க்கத்துக்கும் விஜய துர்க்கத்துக்கும் கொண்டு செல்லப்பட்டன. அந்தக் கப்பல்களிலிருந்து அத்தனை சரக்குகளும் கப்பம் என்ற பெயரில் கைப்பற்றப் பட்டன. நிலத்தின் பகுதிகளுக்கு அவர் ஸர்தேஷ் முகி விதித்தார். இது. நிலச்சுவான்கள் கட்டவேண்டிய கப்பம். அந்த முக்கியஸ்தர் செலுத்த வேண்டிய வரி ஸர்தேஷ் முகியாயிற்று. இப்படி நீரிலும் நிலத்திலும் இஷ்டப்படி ஆண்டு வந்த கனோஜி ஆங்கரேயின் பெயரைக் கேட்ட மாத்திரத்தில் சகலரும் நடுங்கினார்கள். ஆனால் அவரை ஆராய்ந்த அந்தச் சில விநாடிகளில் இதயசந்திரனுக்கு நடுக்கம் ஏதும் ஏற்படவில்லை. மிகுந்த மரியாதையும் பணிவும் அவன் இதயத்தில் ஏற்பட்டன.

மெள்ளத் தரையில் மண்டியிட்டு அவன் ஆங்கரேயை யும் சுவாமியையும் வணங்கினான். “இந்த சமுதாயத்தைக் காக்க வந்த இரு பெரும் மகான் களைக்’ கண்டது என் பாக்கியம்” என்றும் கூறினான். அதுவரை, அவனை ஆராயவிட்டு ஏதும் பேசாமலிருந்த கனோஜி ஆங்கரே ஓர் அடி எடுத்து வைத்து அவனைத் தன் இரு கைகளாலும் குழந்தை போல் தூக்கினார். ”தமிழா! உன்னைக் கண்டதும் எனது பாக்கியம். அதிக வீரர்களை, அதுவும் கர்ம வீரர்களை ஹிந்து சமுதாயத்தில் இந்த நாட்களில் காண்பது அரிதாகிவிட்டது” என்று பாராட்டவும் செய்தார். கரகரத்த அந்தக் குரலில் சற்றுக் குழைவும் காணப்பட்டது பெரும் விந்தையாயிருந்தது இதயசந்திரனுக்கு.

இதயசந்திரன் தன் கண்களை உயரத் தூக்கிச் சொன்னான்: ”கடல் வீரரே! ஹிந்துக்கள் மானங்காத்த தங்களைவிடக் கர்ம வீரர் யார் இருக்க முடியும்? அபிஸீனியர்களும் மொகலாயர் கடல்வழித் தலைவர் களுமான ஸித்திகளின் பிராந்தியத்தில் பரசுராமன் கோவில் கட்டிய பிரும்மேந்திர சுவாமியைவிட மகான் யார் இருக்க முடியும்? உங்கள் இருவருக்கும் முன்பு நான் துரும்பல்லவா?”
கனோஜி ஆங்கரேயின் கண்கள் ஒரு விநாடி கருணை காட்டின. ”வீரனே! பெரும் காரியங்களைச் சாதிப்பவன் மட்டுமல்ல கர்ம வீரன். எவன் ஒரு கடமையைக் கைப்பற்றி அத்துறையில் அசையாத சித்தத்துடன் உழைக்க முன் வருகிறானோ அவனும் கர்மவீரன் தான். காரியத்தின் மிகுதியல்ல குணத்தை சித்தரிப்பது. காரியத் தின் தகுதிதான் ஒருவன் குணத்தை நிர்ணயிக்கிறது ஒரு பெண்ணின் துயர் தீர்க்க நீ வந்திருக்கிறாய் தமிழ்நாட்டிலிருந்து அதுவும் மகாராஷ்டிரத்தின் மகுடச் சண்டையைத் தவிர்க்கத் தொலை தூரம் வந்திருக்கிறாய். இதில் உன் பங்கு சிறியதாயிருக்கலாம். ஆனால் சிறிய காரியங்கள் சில சமயங்களில் பெரிய காரியங்களைச் சாதிப்பதற்குக் காரணமாயிருக்கின்றன” என்று கூறிய கனோஜி ஆங்கரே. ”இப்பொழுது சுவாமியிடம் சொல் உன் கதையை!” என்றும் உத்தரவிட்டார்.

இதயசந்திரன் ஒரு விநாடி சுவாமியை ஏறெடுத்து நோக்கினான். அவர் முகத்தில் எந்தவித உணர்ச்சியும் இல்லை முகம் மிக சாந்தமாக இருந்தது. ”சொல்…” என்ற ஒரே ஒரு சொல்லைச் சொல்லிய சுவாமி அவன் பெயர் தெரியாததால் சிறிது தயங்கினார்.

“இதயசந்திரன்” என்று சுவாமியின் வாக்கியத்தைப் பூர்த்தி செய்தான் வாலிபன்.

“சொல் இதயசந்திரா! ஆங்கரே சொன்னதிலிருந்து உன் கதை விசித்திரமாயிருக்கிறது” என்று மீண்டும் கட்டளையிட்டார் பிரும்மேந்திர ஸ்வாமி.

”உத்தரவு.” என்று கூறி வணங்கிய இதயசந்திரன் சற்று முன்பு தேவியிடம் கூறிய கதையை நிதானமாகவும் தெளிவாகவும் திரும்பவும் கூறினான்.

மிகுந்த ஊக்கத்துடனும் சிரத்தையுடனும் வாலிபன் சொன்ன கதையைக் கேட்ட பிரும்மேந்திர சுவாமியின் சாந்த முகத்தில் சிறிது கவலையும் தோய்ந்தது. ஆகவே அவர் கேட்டார் சற்றுக் கவலை தொனித்த குரலில் . “எங்களுக்கும் தெரியாத ஒரு மனைவி மகாராஷ்டிர மன்னனான ராஜாராமுக்கு உண்டு என்கிறாயா இதயசந்திரா?” என்று.

“ஆம் சுவாமி,” என்றான் இதயசந்திரன்.

“இதயசந்திரா! நான் சொல்வதை உற்றுக் கேள், ராஜாராமுக்கு மொத்தம் மனைவிகள் நான்கு பேர் உண்டு. ஜானகிபாய், சீதாபாய், ராஜஸ்பாய், அம்பிகாபாய். இவர்கள் தவிர அவரால் மனைவி போல் நடத்தப் பட்டவளும் பலராலும் மனைவியென்றே நினைக்கப் பட்டவளுமான சகுணாபாய் என்ற ஆசைநாயகியும் உண்டு இவர்களில் ஜானகிபாய் முன்பே இறந்து போனாள் இரண்டாவது மனைவியான சீதாபாய் புக்ககத்தில் தாராபாய் என்ற பெயருடன் விளங்கினாள். அவள் மகன் தான் சிவாஜி. ராஜஸ்பாய்க்கு ஒரு மகன் சாம்பாஜி என்ற பெயரில் இருக்கிறான். அம்பிகாபாய்க்கு மகனில்லை, மகள் தான் உண்டு. சகுணாபாய்க்குக் கர்ணன் என்ற மகனிருக்கிறான்…” என்ற சுவாமி, “நான் சொல்வது விளங்குகிறதா?’ என்று இதயசந்திரனைக் கேட்டார்.

”விளங்குகிறது” என்றான் இதயசந்திரன்.

“மகாராஷ்டிர சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்த சத்ரபதி சிவாஜியின் இரு பிள்ளைகளில் மூத்த மகன் சாம்பாஜிக்கு ஒரு மகன் சிவாஜி இவன் அவுரங்கசீப்பிடம் சிறையிருந்து அன்புடன் வளர்க்கப்பட்டு, ஷாஹு என்ற பெயருடன் மகாராஷ்டிரத்தின் ஒரு பகுதிக்கு அரசனாயிருக்கிறான். இளைய மகன் ராஜாராமின் நேர்வழிப் புதல்வர்களில் தாராபாயின் மகன் சிவாஜி இன்னொரு பகுதியின் அரசனாயிருக்கிறான். ராஜஸ்பாயின் மகன் சாம்பாஜி இளவரசனாயிருக்கிறான். இப்பொழுது மகாராஷ்டிரத் தின் இன்னொரு இரண்டு அரசர்கள் இருக்கிறார்கள். நீ சொல்வது உண்மையாயிருந்தால் அரியணைப் போட்டிக்கு மூன்றாவது வாரிசும் இருப்பான்’ என்றார் சுவாமி.

“ஆம்.”

“நீ கூறும் திருமணம் செஞ்சிக்கோட்டையில் நடந்த. தாகக் கூறுகிறாய்.”

”ஆம்.”

இதய சந்திரா! ராஜாராம் அவுரங்கசீப்பால் துரத்தப்பட்டு செஞ்சிக்கு ஓடியபோது அங்கு அவரது அமாத்யர் அவரைக் குடியிலும் கூத்திலும் திளைக்கவிட்ட தாகக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அவர் யாரையும் மணந்ததாகக் கேள்விப்பட்டதில்லை.”

“மகாராஷ்டிரத்திலிருந்து ராஜாராமின் மனைவிகள் செஞ்சிக்கு வருமுன்பே இத் திருமணம் நடந்தது.”

”உனக்கெப்படித் தெரியும்?”
“தஞ்சை அரண்மனையிலுள்ள பெண்மணி கூறினாள். கழுத்திலிருந்த மங்கல சூத்திரத்தையும் காட்டினாள்” என்ற இதயசந்திரன், “மனைவியைத் தவிர வேறு யாரிடமாவது நீங்கள் எனது கச்சையிலிருந்து எடுத்த பதக்கத்தை ராஜாராம் கொடுத்திருப்பாரா?” என்றும் வினவினான்.

பிரும்மேந்திர ஸ்வாமி சிறிது சிந்தனையில் இறங்கி னார். ”மாட்டார். ராஜாராம் மற்ற விஷயங்களில் சீரழிந்திருக்கலாம். மகாராஷ்டிர கௌரவத்தை அவர் என்றும் கைவிட்டதில்லை. ஆகவே அந்தக் கௌரவச் சின்னத்தைக் கண்டவரிடம் கொடுக்கமாட்டார். ஆனால் தமிழா! நாம் இந்த விஷயத்தை ராஜாராம் மகாராஜா இறந்த எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு பேசுகிறோம் என்பதையும் நினைவில் வைத்துக் கொள். இந்தச் சமயத்தில் மகாராஷ்டிரம் திரும்ப இணைய முடியாதபடி பிளவுபட்டுக் கிடக்கிறது. இதுவே எனக்குப் பெருங் கவலை. இப்பொழுது நீ மூன்றாவது வாரிசையும் கொண்டு வந்திருக்கிறாய்!” என்று சலித்துக் கொண்டார் பிரும்மேந்திர ஸ்வாமி

சுவாமி சொன்னது இதயசந்திரனுக்குப் பெரும் விந்தையாயிருந்தது. முற்றுந் துறந்தவரான சுவாமிக்கு அரசியல் விஷயத்தில் எதற்கு இத்தனை அக்கறை என்று எண்ணினான். அவன் இதயத்திலோடிய எண்ணங்களை சுவாமி புரிந்து கொண்டிருக்கவேண்டும். ஆகவே, அவர் இதயசந்திரனை நோக்கி, ”இதயசந்திரா! அரசியலுக்கும் துறவிகளுக்கும் சம்பந்தம் தேவையில்லை. ஆனால் துறவிக்கும் தர்மத்துக்கும், தத்துவத்துக்கும் வேதாந்தத் துக்கும் சம்பந்தமுண்டு. இந்நாட்டில் எவ்வளவு மதஸ்தர்கள் வேண்டுமானாலும் வாழலாம், ஒரு மதத்தினரை இன்னொருவர் அழிக்க முயலாதிருந்தால். தர்மங்கள் அழியும்போது. கோவில்கள் இடிபடும் போது. பிரார்த்தனை ஸ்தலங்கள் நாசமாகும்போது துறவி பாதிக்கப்படுகிறான் அவன் விரும்பாமலே அரசியல் அவனைப் பாதிக்கிறது” என்று சொன்னார். அத்துடன் மேலும் விளக்கத் தொடங்கி, ”நாளை பகல் நாம் பரசுராம பட்டணத்தில் இருப்போம். அங்கு பார்; மொகலாயரும் ஸித்திகளும், ஹிந்துக்களும் சண்டை சச்சரவின்றி வாழ்கிறார்கள். விழாக்களில் பங்கெடுத்துக் கொள்கிறார்கள். பரசுராம பட்டணத்திலிருப்பது நாட்டிலிருந்து விட்டால் எனக்குக் கவலையில்லை. ஆனால் நாட்டு நிலைமை பயங்கரமாயிருக்கிறது. அந்தப் பயங்கரத்தில் நீயும் ஒரு புதுச் செய்தியுடன் தலையிடுகிறாய்” என்றும் கூறினார்.

இதயசந்திரனுக்கு அவர் சொன்னதெல்லாம் வியப்பாயிருந்தது. இருப்பினும் அவன் பதில் கூறவில்லை. சுவாமியே மீண்டும் கேட்டார். ‘இந்தப் புது இளவரச னுக்கு வயது என்ன இருக்கும்?” என்று.

”ஒன்பது” என்றான் இதயசந்திரன்.

”அவன் செஞ்சியிலிருந்து கிளம்பும்போது?”

”ஒரு வயது.”

“எட்டு ஆண்டுகள் தஞ்சை அரண்மனையில் வளர்ந் திருக்கிறான்.”

”ஆம்.’

“எட்டு ஆண்டுகள் முகம் வெட்டப்பட்ட காவலனும் அவனுடன் இருந்திருக்கிறான்?’

“ஆம்.”

“எட்டு ஆண்டுகளாக அவன் பெயரை யாரிடமும் சொல்லவில்லையா?”

“இல்லை. கேட்டதற்கு சேவக் என்றழைத்தால் போதுமென்று கூறிவிட்டதாக ராணி சொன்னார்கள்.”

“தஞ்சை அரண்மனையிலிருக்கும் ராணியா?”

”ஆம்.”

”அந்த ராணி தஞ்சை அரண்மனையிலிருப்பது யாருக்காவது தெரியுமா?”

”வதந்தி உண்டு. தெரியாது.”

”நீ தஞ்சையிலிருந்து கிளம்பி எத்தனை நாளாயிற்று?”

“நான்கு மாதங்களாயின. பல இடங்களில் இந்த வாரிசைத் தேட வேண்டியிருந்ததல்லவா?”

இதைக் கேட்ட பிரும்மேந்திர ஸ்வாமி, ”ஆம் ஆம்”’ என்று தலையசைத்து ஆமோதித்தார். பிறகு கேட்டார் கனோஜி ஆங்கரேயை நோக்கி, ”இதைப்பற்றி நீ என்ன நினைக்கிறாய் கனோஜி?” என்று.
கனோஜி ஆங்கரே கடகடவென நகைத்தார். “மகாராஷ்டிரத்துக்கு வாரிசுகள் பெருகிவிட்டார்கள். ராஜ்யம் தான் பெருகக் காணோம்” என்று கூறினார் நகைப்புக்கிடையே

சுவாமியின் முகத்தில் கவலையிருந்தது. அவர் தீவிர யோசனையிலிருந்தார். ”இந்தச் சிக்கலை பரசுராமன் தான் அவிழ்க்க வேண்டும்” என்ற சுவாமி, போதாக் குறைக்கு இந்தச் சமயத்தில் ஷாஹுவின் வார்த்தையைக் கேட்டு பானுதேவியையும் அழைத்து வந்திருக்கிறேன்” என்றார்.

பானு தேவியென்ற பெயரைக் கேட்டதும் இதய சந்திரன் சித்தம் பேரதிர்ச்சியுற்றது. எதற்கும் அசையாத கனோஜி ஆங்கரேயின் புருவங்கூடச் சற்று உயர்ந்தது. அந்தக் கடல் வீரன் கண்கள் இதயசந்திரனை மிகுந்த பரிதாபத்துடன் நோக்கின. “பாவம்!” என்ற சொல்லொன்றும் ஸார்கேலின் உதடுகளிலிருந்து உதிர்ந்தது. அன்றிரவு இரண்டாம் முறையாக இதயசந்திரன் இடிந்து நின்றான். “பானுதேவி! பானுதேவி!” என்று இதயம் முணுமுணுத்தது. அதிர்ச்சி, ஆசை, மகிழ்ச்சி ஆகிய மூன்றுவித உணர்ச்சிகள் அவன் உள்ளத்தில் வலம் வந்தன.

Previous articleJala Deepam Part 1 Ch7 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 1 Ch9 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here