Home Historical Novel Jala Deepam Part 2 Ch1 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 2 Ch1 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

63
0
Jala Deepam Ch1 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 2 Ch1 | Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 2 Ch1 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 1 கொங்கணியின் மடி

Jala Deepam Part 2 Ch1 | Jala Deepam | TamilNovel.in

டிசம்பர் 1712
காற்றில் பூரணமாகப் புடைத்துக் கப்பலைக் கடலில் கடுகியோடச் செய்துகொண்டிருந்த ஜல தீபத்தின் பாய்களைக் கண்ணெடுத்து ஒருமுறை நோக்கிக் கடலையும் நோக்கிய இதயசந்திரன் இதயத்தில் திருப்தியின் பூர்த்தி யிருந்தது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் தனது கடல் வாழ்க்கையில் ஏற்பட்ட துரிதமான முன்னேற்றத்துக்கும் மாறுபாட்டுக்கும் புடைத்த அந்தப் பாய்களுக்கும் எத்தனை ஒற்றுமையென்பதை எண்ணிப் பார்த்த இதய சந்திரன், பாய்களைப் புடைத்துக் கப்பலை ஓடச் செய்த காற்றைப் போலவே விதியெனும் காற்றும் தனது முன் னேற்றத்தை மிகமிகத் துரிதப்படுத்தியிருக்கிறதென்பதை யும் புரிந்து கொண்டதாலோ என்னவோ, உள்ளத்தின் திருப்தி அவன் முகத்திலும் நன்றாக விரிந்து அதற்கு ஒரு தனிப் பொலிவையும் அளித்தது. அந்தப் பொலிவை அதிகப்படுத்தும் யோசனையுடன் அரபிக் கடலில் குளிக்கத் தொடங்கிய கதிரவன் தன் சிவந்த கிரணங்களை அவன் முகத்திலும் வீசி அதை நன்றாகத் தேய்க்கப்பட்ட செப்பு போல் ஒளிவிடச் செய்தான். கதிரவனுக்குப் போட்டியாக ரத்தச் சிவப்பைப் பெற்ற தமிழக வாலிபன் அந்த முகத்தைக் கண்டு அச்சப்பட்டதால், ஜல தீபத்தின் பாய்களில் உட்கார்ந்திருந்த அந்தி அன்றில்கள் இரண்டு ஜிவ்வெனப் பறந்து தரையை நோக்கிச் சென்றன.

மேலே செவ்வானமும் கீழே கருங்கடலும் அணைப்புக் கொடுக்க, இடையே நீரைக் கிழித்துக்கொண்டு ஓடிய ஜல தீபம் அந்தக் கடலே தனக்குச் சொந்தம் போல் அனாயாச மாகச் சென்றுகொண்டிருந்ததாலும் தன்னையும் அடக்கி ஒரு தமிழன் தளத்தில் நிற்கிறானென்ற அச்சத்தால் அடிக்கடி தலையை மட்டும் லேசாக நீர்மட்டத்தை நோக்கித் தாழ்த்திக் கொண்டிருந்தது. இரண்டரை ஆண்டுகளில் தனக்கு இணையிலாப் பெயரை அரபிக்கடல் பகுதியில் ஏற்படுத்திக் கொடுத்த அந்த ஆண்மகனிடம் தனக்குள்ள அன்பைக் காட்ட, தலை உச்சியில் நடுப்பாய் மரத்தில் பூட்டப்பட்டிருந்த கொடியைப் படபடவென அடிக்கவிட்டுக் கொண்டிருந்தது ஜலதீபம். இரண்டரை ஆண்டுகளில் அதற்குக் கிடைத்த பெரிய பெயருக்கும் வெற்றிக்கும் அளிக்கப்பட்ட வெகுமதிச் சின்னங்களைப் போல், ஜலதீபத்தின் நடுப் பாயிலிருந்த இரண்டொரு குறுக்குத் தையல்களும், பக்கக் கைப்பிடி மரங்களில் காணப்பட்ட நாலைந்து விரிசல்களும் அதற்கு அழகையே கொடுத் தன. பல போர் விருதுகளை உடலில் அணிந்து கொண்ட பெரும் வீர மாதாவைப் போல் ஜலதீபம் கடலில் ஓடிக் கொண்டிருந்ததைப்போலவே இதயசந்திரனின் இருதயமும் இரண்டரை ஆண்டு சரிதத்தின் ஏடுகளைப் புரட்டிக் கொண்டிருந்தது.

இரண்டரை ஆண்டுகள், அவன் உடலின் உறுதியை முன்னைவிடப் பன்மடங்கு அதிகமாக அடித்திருந்ததன்றி, கடற்காற்றிலும் வெளியிலும் பிரளயம் போன்ற மழையி லும் அது அடிபட்டிருந்ததால் அதன் நிறமும் சிறிது மங்கி முன்பிருந்த வெண்மை நிறத்தை மாற்றிக் காய்ச்சின செம்பாக அடித்திருந்தது. அதன் காரணமாகச் சிறிது கடுமை ஏறி விட்டதுபோல் தெரிந்த முகம் முன்னைவிட அதிகம் கம்பீரத்தையும் அதிகாரத் தோரணையையும் பெற்றிருந்தது. அவன் கால்கள் இரும்பாக மாறியிருந்ததால், சுவர்ண துர்க்கத்தில் காஸ்ட்ரோவுடன் படகிலேறிய போது சட்டென்று அலைமோதிப் படகில் விழுந்த அந்தத் தடுமாற்ற நிலை மாறி, கப்பலே கவிழ்ந்தாலும் அசையாத நிலையில் கால்கள் திடத்துடன் நின்றிருந்தன. இடுப்பில் ஊன்றியிருந்த ஒரு கை சிறிதும் வளையாமல் இரும்புத் துண்டெனக் காட்சியளித்தது. அவனுடைய இன்னொரு கை இடைக் கச்சையிலிருந்த அதே பெரும் கைத்துப்பாக்கியில் பதிந்திருந்தது. காஸ்ட்ரோவுடன் ஜல தீபத்திற்கு வந்தபோதும் பிறகும் ஏற்பட்ட சோதனைகளை அவன் நினைத்துப் பெருமிதமே அடைந்தான்.

மானுவல் டி காஸ்ட்ரோ தனக்கு எத்தனையோ தீமை களைச் செய்தாலும் அத்தனை தீமைகளும் தனக்கு எத்தனை நன்மைகளை விளைவித்தன என்பதை எண்ணியதால், ‘நான் இருவருக்குக் கடமைப்பட்டிருக்கிறேன். எனக்கு மாலுமித் தொழில் வாய்ப்பளித்த ஸார்கேல், கஷ்டமான அலுவல்களையே அளித்து என்னை இணையற்ற மாலுமியாக்கி விட்ட காஸ்ட்ரோ இருவரையும் நான் மறக்க முடியாது’ என்று மனத்துக்குள் சொல்லிக் கொண்டான். முதல் நாள் காஸ்ட்ரோவின் அதிகாரத்தின் விளைவாகத் தான் துடுப்புத்தள்ள நியமிக்கப்பட்டதையும், அதை மஞ்சு ஆட்சேபித்ததையும் எண்ணிப் பார்த்தான். இன்று நின்ற அதே தளத்தில் அவன் அன்றும் நின்று கொண்டிருந்தான். எதிரே டி காஸ்ட்ரோவும் மஞ்சுவும் நின்று கொண்டிருந்தார்கள். “இவர் என் தந்தையின் அன்புக்குப் பாத்திரமானவர். இவரை எப்படித் துடுப்புத் தள்ள நியமிக்கலாம்?” என்று மஞ்சு சீறினாள்.

“கப்பலில் யாருக்கு யார் வேண்டியவர் என்பது! கிடையாது. யார் எதற்குத் தகுதி என்பது தான் உண்டு” என்று சர்வசாதாரணமாகக் கப்பல் தலைவியைச் சிறிதும் லட்சியம் செய்யாமல் கூறினான் காஸ்ட்ரோ.

“இவர் துடுப்புத் தள்ளத்தான் தகுதியென்பது உனக்கு. எப்படித் தெரியும்?” என்று மீண்டும் சீறினாள் மஞ்சு..

“அதுவும் தெரியாது. மாலுமி தொழிலுக்கு முதலில் வருபவர்களுக்குக் கொடுக்கப்படும் வேலையை இவருக்குக் கொடுத்திருக்கிறேன்” என்று கடமை உணர்ச்சியைக் காட்டினான் காஸ்ட்ரோ.

“நான் இஷ்டப்பட்டால்…” மஞ்சு வார்த்தையை முடிக்கவில்லை.

காஸ்ட்ரோவே வாசகத்தை முடித்தான், “இவரை எந்த வேலைக்கும் நியமிக்கலாம். தங்கள் பதவியைக்கூட ஒப்படைக்கலாம். தந்தைக்கு இருப்பதாகச் சொன்னீர்களே. அந்த அன்பு தங்களுக்கும் இவரிடமிருந்தால்” என்று.

காஸ்ட்ரோ தன்னைப் பார்த்து நகைக்கிறா னென்பதைப் புரிந்துகொண்ட மஞ்சு, “அப்படியானால் இவர் பீரங்கி இயக்கட்டும்” என்று கூறித் திரும்பித் தன் அறையை நோக்கிச் செல்ல முயன்றாள்.

“சற்று நில்லுங்கள்” என்றான் காஸ்ட்ரோ கடுமையுடன்.

அவள் திரும்பி காஸ்ட்ரோவை நோக்கினாள். “என்ன காஸ்ட்ரோ?” என்று அலட்சியத்துடன் கேட்கவும் செய்தாள்.

காஸ்ட்ரோவின் கண்கள் அவள் கண்களை மிக. அலட்சியத்துடன் சந்தித்தன. “என் உபதளபதிப் பதவிக்கு வேறு யாரையாவது நியமித்துக் கொள்ளுங்கள்” என்ற சொற்கள் திடமாக அவனிடமிருந்து உதிர்ந்தன.

மஞ்சுவின் முகத்தில் குழப்பம் தெரிந்தது. “ஏன் உபதள பதிப் பதவி பிடிக்கவில்லையா?” என்று; வினவினாள் அவள்.

“பெயருக்கு உபதளபதியாயிருக்க இஷ்டமில்லை, புத்தம் புதிதாக வரும் மாலுமிக்கு வேலை நிர்ணயிக்கக்கூட ஓர் உபதளபதிக்கு அதிகாரமில்லையென்றால் அந்தப் பதவியை வகிப்பதில் அர்த்தமில்லை, ஆபத்திருக்கிறது” என்ற காஸ்ட்ரோ, மேலும் சொன்னான். “இந்தத் தொழிலுக்கு இவன் போகாவிட்டால், உங்கள் சலுகையால் வேலையை மாற்றிக் கொள்ளலாம் என்ற துணிவு மற்ற மாலுமிகளுக்கும் ஏற்படும். பிறகு எல்லோரும் உங்களிடம் சலுகைக்கு வருவார்கள் கட்டுப் பாடு குறைந்துவிடும். பிறகு இந்தக் கப்பலின் கதி என்ன ‘வாகுமென்று சொல்ல முடியாது” என்று.

அவன் சொல்லுவதில் அர்த்தமிருப்பதை மஞ்சு புரிந்து கொண்டதால் என்ன செய்வதென்று தெரியாமல் திணறினாள். உண்மையில் காஸ்ட்ரோவுக்குக் கட்டுப்பாட்டில் கவலையில்லை என்பதையும் தன்னைத் துன்புறுத்தவே இல்லாத கஷ்டங்களைக்கொண்டு வந்து முன் நிறுத்துகிறா னென்பதையும் மஞ்சு புரிந்துகொண்டாலும், கப்பலின் உபதளபதியை விரோதித்துக் கொள்வது பெரும் உபத்திர மென்பதையும் புரிந்து கொண்டாள். புரிந்து கொண்டும் இதயசந்திரனைத் துடுப்புத் தள்ள அனுமதிக்க இஷ்ட மில்லாததால் தயங்கினாள். அந்தத் தயக்கத்தை இதய சந்திரனே அப்பொழுது தீர்த்தான். “தலைவி! எனக்குத் துடுப்புத் தள்ளத்தான் ஆசையாயிருக்கிறது” என்று குறுக்கே புகுந்து தனது கருத்தைத் தெரிவித்தான் தமிழன். அதற்கு மேல் ஏதும் சொல்ல மஞ்சுவால் முடியவில்லை. மௌனமே சாதித்தாள் அவள். விடுவிடு என்று துடுப்புத் தள்ளும் அடி அறைக்குச் சென்றுவிட்டான் இதயசந்திரன்.

இத்துடன் விடவில்லை காஸ்ட்ரோ. துடுப்புத்தள்ளாத சமயங்களில் மேல் தளத்துக்கு வருவதையும் தடுத்தான். அப்படி வராதிருப்பதற்கு வேண்டிய அலுவல்களையும் கொடுத்தான். ஆனால் இரண்டு நாட்கள் கழித்து மஞ்சுவே அந்த அடித்தளம் வந்து மாலுமிகளுக்குப் பாடினாள். திரும்பிச் செல்லும்போது இதயசந்திரனையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு மேல்தளம் வந்தாள். இரவு நேரம் அப்பொழுது, பெரும் பாய்மரத்தின்கீழ் இருவரும் உட்கார்ந்திருந்தார்கள். மஞ்சுவின் கை அவன் கையில் தவழ்ந்தது. அவன் கை அந்தக் கையை இறுகப் பிடித்தது. “இது துடுப்பு அல்ல வீரரே!” என்றாள் மஞ்சு மெல்ல நகைத்து.

“துடுப்புதான் மஞ்சு’ என்ற இதயசந்திரன் குரல் குழைந்தது.

“அத்தனைக் கடினமா!” அவள் குரலில் போலிக் கோபம் இருந்தது.

“இல்லை. மிருதுதான். என் வாழ்வை உந்துகிறதே இது!” என்றான் தமிழன்.

“அப்பா! கை தேர்ந்தவர்” என்று சொல்லி நகைத் தாள் மஞ்சு.

அப்பொழுது கேட்டது காஸ்ட்ரோவின் குரல் “தமிழா! தமிழா!” என்று.

இதயசந்திரன் இருப்பிடத்திலிருந்து எழுந்ததற்கும் காஸ்ட்ரோ அங்கு வருவதற்கும் சமயம் சரியாயிருந்தது. “இங்கு என்ன செய்கிறாய்!” என்று வினவினான் காஸ்ட்ரோ கடுமையான குரலில்.

“உட்கார்ந்திருக்கிறேன்” என்றான் இதயசந்திரன் கடுமையாக.

“உட்கார்ந்திருக்க உனக்கு வேலை கொடுக்கவில்லை” என்ற காஸ்ட்ரோ அப்பொழுது தான் மஞ்சுவைப் பார்ப்பதுபோல் பாசாங்கு செய்து, “ஓ! நீங்கள் அழைத்து வந்தீர்களா! புரிகிறது புரிகிறது” என்று நகைத்தான்.

இதயசந்திரன் சட்டையின் கையை மடக்கினான். மஞ்சு அவன் கையைப்பிடித்து அடக்கிவிட்டு, “நீங்கள் கீழே செல்லுங்கள்” என்றாள். இதயசந்திரன் காஸ்ட்ரோவை ஒருமுறை முறைத்துவிட்டுச் சென்றான். தடதடவென்று தளத்தில் நடந்த காஸ்ட்ரோவும் கேலிநகை நகைத்து விட்டு நடந்தான் எதிர்ப்புறமாக.

இப்படிப் பலமுறை இருவரும் மோதினார்கள் அடுத்த மூன்று மாதங்களில். அந்த மூன்று மாதங்களில் துடுப்புத் தள்ளுவதிலும் சுக்கானைப் பிடித்து மரக்கலத்தை திருப்பு வதிலும் பெரும் திறமையைப் பெற்ற இதயசந்திரனுக்கு, பீரங்கி இயக்கும் திறமையைக் காஸ்ட்ரோ உணரும்படி செய்யும் தருணமும் வந்தது. பம்பாய்க்கு வந்து கொண்டிருந்த வணிகக் கப்பலொன்று ஜல தீபத்தைக் கண்டதும் எதிர்த்துப் போரிடத் தொடங்கித் தனது பக்கவாட்டுப் பீரங்கிகளை ஜலதீபத்தை நோக்கித் திருப்பியது. “கப்பலின் இடப்பக்கத்தை எதிரிக்கப்பலை நோக்கித் திருப்பு!” என்று உத்தரவிட்டான் காஸ்ட்ரோ சுக்கானிலிருந்த தமிழனை நோக்கி.

இதயசந்திரன் கண்கள் வியப்பைக் காட்டின. பிரிட்டிஷ் வணிகக் கப்பல்களில் பக்கமொன்றுக்குப் பதினான்கு பீரங்கிகளிருந்ததைப் பார்த்த இதயசந்திரன், ஜலதீபத்தின் இடப்பக்கத்தை அதை நோக்கித் திருப்பினால் அதன் குண்டுகளுக்கு முன்பு ஜல தீபம் என்ன செய்ய முடியும் என்று நினைத்ததால் சுக்கானை வேறொரு மாலுமியிடம் கொடுத்துவிட்டுக் காஸ்ட்ரோவின் அருகில் வந்து, “அந்தக் கப்பலில் பதினான்கு பீரங்கிகள் இருக்கின்றன” என்று சுட்டிக் காட்டினான்.

“அதனாலென்ன?”

“அந்தப் பீரங்கிகள் நமது பீரங்கிகளைவிடப் பெரியவை!”

“இருந்தாலென்ன?”

“நமது குண்டுகள். அதைத் தொடுமுன்பு அதன் குண்டுகள் ஜல தீபத்தைத் தூள் தூளாக்கிவிடும்.”

இதைக் கேட்ட காஸ்ட்ரோ இதயசந்திரனை நோக்கிக் கோபவிழி விழித்தான். ஆனால் இதயசந்திரன் அவனைச் சிறிதும் லட்சியம் செய்யாமல் பிரிட்டிஷ் கப்பலை உற்று நோக்கினான். பெரும் பருந்து போல் பாய்ந்துவந்த அதன் வேகத்தைக் கண்டதும் சுக்கானுக்குச் சென்று ஜல தீபத்தை வேறு திசையில் திருப்பினான்.

“கப்பலை அப்படித் திருப்பாதே!” என்று காஸ்ட்ரோ கத்தினான்.

இதயசந்திரன் அதைக் காதில் வாங்காமல் ஜலதீபத்தை சற்றுத் தள்ளித் திருப்பி அதன் நடுவிலிருந்த பெரும் பீரங்கியை நோக்கி ஓடிவந்து அதைச் சுழற்றி எதிரிக் கப்பலின் கொடி மரத்தைக் குறிவைத்துச் சுட்டான். கொடிமரம் முறிந்தது. தீப்பிடித்தது. பிறகு காஸ்ட்ரோவைப் பார்த்து, “எதிரி கப்பலின் வேகம் குறைந்துவிட்டது. இனி நடத்துங்கள் போரை!” என்று கூறிவிட்டுச் சுக்கானைப் பிடித்துக்கொண்டான்.

காஸ்ட்ரோ திறமையுடன் போரை நடத்தி எதிரி கப்பலைப் பிடித்தான். ஆனால் இதயசந்திரனை அவனால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. உள்ளூரப் புகைந்த வஞ்சக எண்ணங்களைப் புன்சிரிப்பால் மறைத்தான். இதய சந்திரனை எல்லா மாலுமிகளுக்கும் எதிரில் பாராட்டி அவனைப் பீரங்கி இயக்கும் வேலைக்கு உயர்த்தினான். ஆனால் உள்ளூர பல திட்டங்களை வகுத்துக் கொண்ட காஸ்ட்ரோ ஒரு முடிவுக்கு வந்தான்.

மஞ்சுவைச் சரிப்படுத்தாமல் தான் எதுவும் செய்ய முடியாதென்ற முடிவுக்கு வந்ததாலும், அவளிடம் அவனுக்குக் காமவிகாரம் நிரம்ப இருந்ததாலும் அவளுடன் மிக நெருங்கிப் பழக ஆரம்பித்தான். ஏதேதோ சந்தேகம் கேட்பதுபோல் அவள் அறைக்கு அடிக்கடி சென்றான். ஒருநாள் தளத்தில் துணிவுடன் அவள் கையையும் பிடித்தான். ஜல தீபத்தில் அவன் வாழ்வுக்கு அது முடிவு கட்டிவிட்டன. இரும்புக் கரமொன்று அவன் கையைப் பிடித்துத் திருப்பியது. மற்றொரு கை முஷ்டியாக இயங்கி அவன் முகவாய்க் கட்டையில் தாக்க, காஸ்ட்ரோ தளத்தில் குப்புற விழுந்தான். குப்புற நிலையிலிருந்து மெள்ளத் திரும்பும் பாவனையில் கைத்துப்பாக்கியைச் சரேலென எடுக்கவும் செய்தான். அவன் கைத் துப்பாக்கியைக் கையில் எடுப்பதற்கும், அந்தக் கையில் ஒரு துப்பாக்கி ரவை பாய்வதற்கும் நேரம் சரியாயிருந்ததால் “ஐயோ!” என்றலறினான் காஸ்ட்ரோ . கனோஜி கொடுத்த கைத்துப்பாக்கி கையில் புகைய நின்று கொண்டிருந்தான் தமிழன். “இது ஸார்கேல் கொடுத்தது. உன்னிடமிருந்து மஞ்சுவைக் காப்பாற்ற. அவசியமானால் உன்னைச் சுட்டு ஒழித்துவிடவும் உத்தரவு இருக்கிறது” என்ற சொற்கள் பயங்கரமாக உதிர்த்தன தமிழன் வாயிலிருந்து.

அன்றே காஸ்ட்ரோ சிறையிடப்பட்டான். ஆனால் அந்தச் சிறையிலிருந்து வெகு சாமர்த்தியமாகத் தப்பிய காஸ்ட்ரோ பிறகு அந்தப் பிராந்தியத்தில் காணப்படவில்லை. பிரிட்டிஷ் கப்பலைப் பிடித்ததற்கு வெகுமதியாக இதயசந்திரனை ஜல தீபத்தின் உபதளபதியாக நியமித்தார் கனோஜி ஆங்கரே. நியமித்து இரண்டு ஆண்டுகள் ஓடி விட்டன.

பயிற்சிக் காலம் ஆறு மாதங்களும், பதவிக் காலம் இரண்டு ஆண்டுகளும், ஆக இரண்டரை ஆண்டுகளில் இதயசந்திரன் பெயர் கடல் பகுதிகளில் பெரும் கீர்த்தியைப் பெற்றது. ஜல தீபத்தின் பெயரைக் கேட்டு மாலுமிகள் நடுங்கினார்கள். கனோஜி தமிழகத்திலிருந்து ஓர் எமனைக் கொண்டு வந்திருக்கிறார் என்று துறைமுகங்களில் வதந்தி உலாவலாயிற்று. அந்த வதந்தியாலும், பல கப்பல்களைப் பிடித்ததாலும், பல துறைமுக நுட்பங்களை அறிந்து இடைவிடாது கடலோடியதாலும் பிரக்யாதியைப் பெற்ற இதயசந்திரன் மனத்தில் அந்தப் பழைய நிகழ்ச்சிக ளெல்லாம் திரும்பத் திரும்ப வலம் வந்தன. அந்தச் சமயத்தில் மாலுமி உடை அணிந்த மஞ்சுவும் தலைக்குழல் பறக்க, உடை நன்றாக ஒட்டியதால், உடலின் அழகுகள் பகிர்ந்து காட்ட, இரண்டு பாய்மரங்களை வலம் வந்து அவனை நெருங்கினாள். அந்தி வேளை தந்த மயக்கத்தை விட அதிக மயக்கம் தந்த அவளை அருகில் அழைத்தான் இதயசந்திரன். அடுத்து நடப்பதைப் பார்க்க வெட்கியவன் போல் வெங்கதிரோன் அலைகளுக்குள் மூழ்கி எங்கும் இருளைப் படரவிட்டான்.

மஞ்சுவும் அவன் பக்கத்தில் உராய்ந்து உட்கார்ந்து கொண்டு பாய் மரத்தில் சாய்ந்துகொண்டாள். “என்ன யோசிக்கிறீர்கள்?” என்றும் வினவினாள்.

அவன் கை அவள் பின்னால் சென்றது. “பழைய விஷயங்களை யோசிக்கிறேன்” என்றான் இதயசந்திரன்.

“பழங்கணக்குப் பார்க்கிறீர்களா?” என்று உதட்டை அவன் காதுக்கருகில் கொணர்ந்து கேட்டாள் அவள்.

“ஆம்.”

“பசித்தவனல்லவா பழங்கணக்குப் பார்ப்பான்?”

“ஆம்.”

“என்ன ஆம்?”

“எனக்குப் பசிக்கிறது.”

“எனக்குந்தான்.”
“உனக்கா?”

“ஆம்.”

“சாப்பிடுவது தானே?”

“நீங்களில்லாமல் எப்படி முடியும்?”

“நான் எதற்கு.”

“என்ன கேள்வி இது?”

“கேள்விக்கென்ன?”

“இருவர் பசிக்கும் என்ன வித்தியாசம்?”

“ஓகோ!”

“என்ன ஓகோ?”

இதைக் கேட்ட அவள் சிரித்தாள். அவள் மட்டுமல்ல சிரித்தது, 1712-ஆம் ஆண்டு டிஸம்பரும் சிரித்தது.

Previous articleJala Deepam Part 1 Ch38 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 2 Ch2 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here