Home Historical Novel Jala Deepam Part 2 Ch10 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 2 Ch10 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

74
0
Jala Deepam Ch10 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 2 Ch10 | Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 2 Ch10 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் –10 விஜயதுர்க்கம்

Jala Deepam Part 2 Ch10 | Jala Deepam | TamilNovel.in

பம்பாயிலிருந்து தென்கிழக்கில் நூற்று எழுபது மைல் தூரத்திலுள்ளதும், மகாராஜா சிவாஜியால் கண்ணைப் போல் பாதுகாக்கப்பட்டதும் பிரிட்டிஷ் போர்ச்சுகீஸ் டச்சு வெள்ளைக்காரர்களையும் மொகலாயரையும் அணுக முடியாமல் அடித்ததும் எப்பொழுதும் வெற்றி கொண்டு நிமிர்ந்து நின்றதால், விஜயதுர்க்கம் எனப் பெயர் பெற்றதுமான கேரியா துறைமுகத்தைச் சென்ற ஆண்டுகளில் அடைந்தபோதெல்லாம் இதயசந்திரன் ஜல தீபத்தின் தளத்தில் நின்று அதைப் பார்த்து ஆனந்தித்த வண்ணமே துறைமுகத்தில் கப்பலைச் செலுத்துவான். கண்ணுக்கு விஜயதுர்க்கத்தைவிட, அதிக விருந்தளிக்கும் துறைமுகம் எதுவும் மேலைக் கடற்கரையில் கிடையாது மட்டுமென்பதல்ல, அதில் எந்தக் கப்பலும் பிரவேசித்துப் பாதுகாப்புப் பெறலாம் என்ற உண்மையும் அக் கோட்டையின் திண்மையும் அமைப்புங்கூட இதயசந்திரன் இதய ஆனந்தத்துக்குக் காரணமாயிருந்தன.

துறைமுகத் தென்கிழக்கில் எழுந்துள்ள ஸஹ்யாத்ரி தொடரின் பெரும் பாறையின் கழுத்தில் நிர்மாணிக்கப் பட்ட விஜயதுர்க்கத்தின் கம்பீரமான கோட்டை வாகோத்தன் நதியின் நீர்மட்டத்திலிருந்து 100 அடி உயரத்தில் பிரும்மாண்டமான மதிள் சுவர்களுடன் இருபத்து ஏழு பாதுகாப்பு அரண்களுடனும் பீரங்கி முனைகளுடனும் காட்சியளிப்பதைப் பார்த்துத் தமிழக வீரன் பரவசப்படாத நாளில்லை.

கோட்டைக்கு மேற்கே கடல் உடைத்துவிட்ட பல பாறை நிலங்களில் மரங்களும், புதர்களும் பெருங்கொடிகளும் வளர்ந்து கோட்டைக்குக் கடலரசன் சூட்ட வந்த ஆரம் போல் காட்சியளித்ததும், விஜயதுர்க்கக் கோட்டைக்குள்ளே மூவரிசைக் கொத்தளங்களும் பல மாளிகை மகுடங்களும் அவற்றின் நடுவே ஆகாயமளாவி எழுந்த வட்டமான ஸ்தூபியும் தமிழக வீரனுக்கு என்றும் ஒரு பெருமிதத்தையும் வெற்றி வேட்கையையும் அளித்து வந்தன. ஒவ்வொரு முறையும் அவன் அந்தத் துறைமுகத்தில் நுழையும் போதெல்லாம் ஸஹ்யாத்ரிமலை உச்சிகளையும் கோட்டை மகுடங்களையும், பாறைப் புதர்ச் செடிகளையும், பார்த்து மகிழாமலோ, ஸஹ்யாத்ரியின் மூலிகைக் காற்றை இழுத்து முகர்ந்து திருப்தியடையா மலோ இருந்ததில்லை. இந்த இயற்கை அழகுகள் தவிர விஜயதுர்க்கத்தைச் சதா பாதுகாத்துக் கொண்டு துறை முகத்தில் நிற்கும் குராப், மஞ்ச்வா காலிவாத் முதலிய பல்வகைப் போர்க் கப்பல்களையும் அவன் பார்த்துப் பேரானந்தமடைவான்.

ஆனால் இம்முறை அவன் விஜயதுர்க்கத்தில் நுழைந்த போது இயற்கைக் காட்சிகளை அனுபவிக்கவுமில்லை, கோட்டை மகத்துவத்தை நினைத்து மகிழவுமில்லை; ஸஹ்யாத்ரியின் மூலிகைக் காற்றை மூச்சிழுத்து மெய் மறந்து நிற்கவுமில்லை. ஜலதீபம், கனோஜியின் மிகப் பிரசித்தியான அந்தத் துறைமுகத்தில் நுழைந்தபோது அதன் தளத்தில் நின்ற உபதளபதியின் கண்கள் அதன் அழகைப் பார்க்கச் சக்தியற்றுக் கிடந்தன. அவன் இதயம் மகிழும் தன்மையை இழந்து கிடந்தது. மூக்கு மலைக் காற்றை இழுப்பதற்குப் பதில் கவலைப் பெருமூச்சை வெளியில் விட்டது.

உபதளபதியின் நிலை மட்டுமல்ல இப்படி, தளபதி யின் நிலை அதைவிட மோசமாயிருந்தது. வளர்ப்புத் தந்தையின் இருப்பிடத்துக்கு அவள் வரும்போதெல்லாம் அவளுக்காகப் படகு கட்டுமிடத்தில் நிற்கும் தந்தைக்கு ஜல தீபத்தின் தளத்திலிருந்தே கைளை ஆட்டுவாள். சில வேளைகளில் நீரில் குதித்து நீந்திச் சென்று நனைந்த உடையுடன் கடற்படைத் தளபதியைக் கட்டிக் கொள்ளவும் செய்வாள். இன்று அவள் ஜல தீபம் நங்கூரம் பாய்ச்சிய பிறகு தளத்துக்கு வந்தாள்.

கயிறுகள் கொண்டு தழைத்து நீரில் இறக்கப்பட்ட படகில் ஏறித் துறையை நோக்கிச் சென்றுவிட்டாள். ஜல தீபத்தின் மாலுமிகளிடம்கூட இம்முறை அதிக உற்சாகம் காணப்படவில்லை. கடைசி இரண்டு நாட்களில் தளபதிக்கும், உபதளபதிக்கும் இடையே இருந்த மௌனத்தாலும், துயரத்தாலும் ஏற்பட்ட சூழ்நிலை காரணமாக, ஏதோ இயங்கும் இயந்திரங்கள் போல் மாலுமிகள் வேலைகளைக் கவனித்தார்கள்.

துறைமுகத்தை நெருங்கும்போது ஊதப்பட்ட சங்கும், அடிக்கப்பட்டடமாரங்களும், உள்ளே வரலாம் என்று துறைமுகத்திலிருந்து உத்தரவுச் சைகை கிடைத்ததும் பாய்கள் இறக்கப்பட்டுத் துடுப்புகள் துழாவப்பட்டதும், எல்லாம் வழக்கம்போல் நன்றாக நடக்கவே செய்தாலும், மாலுமிகளின் வழக்கமான கூச்சல் எக்காளம் இவை ஏது மில்லை அன்று.

தளத்தில் நின்ற இதயசந்திரன் பிடிப்பட்ட இரு கப்பல் களையும் ஜல தீபத்தைப் பின்தொடர்ந்து இழுத்து வர குராப்புகளுக்கு உத்தரவிட்டு, ஜலதீபம் நங்கூரம் பாய்ச்சி யதும் காதரைனை அழைத்து வரச்சொல்லி அவளுடன் தானும் ஒரு படகில் துறைமுகக் கரையோரத்துக்குச் சென்றான்.

ஜல தீபத்தில் தளபதி, உபதளபதி, மாலுமிகளிருந்த நிலையில் விஜயதுர்க்கக் கோட்டைவாசிகள் இல்லாமை யால் பிடிபட்ட இரு கப்பல்களைக் கண்டதும் பெரும் கோஷம் ஏற்பட்டது. கோட்டையில் கோட்டையின் பிரதானக் கதவைத் திறந்ததும் ஆண் பெண் குழந்தைகள் பலர் கரை நோக்கி ஓடிவந்தார்கள். விஜயதுர்க்கத்தின் வெற்றி முரசு கொட்டப்பட்டது. வெற்றிக்கு அடையாளமாக இரண்டு பீரங்கிகள் சம்பிரதாயத்துக்குச் சப்தித்தன. இரண்டு கொம்புகள் பலமாக ஊதப்பட்டன. கோட்டை பாதுகாப்பு வீரர்களும், மாலுமிகளும் தங்கள் அலுவல் இடங்களிலிருந்து எட்டிப் பார்த்தனர். அன்று ஓய்வு உள்ள வீரர்கள் மக்களுடன் கரைக்கு வந்தார்கள். எல்லோருக்கும் முன்பாக மக்களோடு மக்களாக கனோஜி ஆங்கரே ஆயுதம் ஏதுமின்றித் திறந்த சட்டையில் மார்பின் முரட்டுக் கேசங்கள் தெரிய, வாரப்படாத தலைமுடி இதழ்கள் இங்கும் அங்குமாக முரடு முரடாகத் தொங்க, காலில் மாலுமிச் சராயணிந்து கச்சையில் வழக்கமான இரு கைத் துப்பாக்கிகள் காட்சியளிக்க நின்றிருந்தார். முதல் படகில் வந்த மஞ்சுவைப் படகுக் கரையில் கை தூக்கி விட்டுத் தமது பக்கத்தில் நிறுத்திக் கொண்டார். பிறகு அவரது பெரு விழிகள் நங்கூரம் பாய்ச்சிய ஜலதீபத்தையும் அதற்குப் பின்னால் குராப்புகளால் இழுத்து வரப்பட்ட இரண்டு பிரிட்டிஷ் கப்பல்களையும் பார்த்தன. அவற்றைப் பார்த்ததால் பெருவியப்போ பெரு மகிழ்ச்சியோ தெரியவில்லை. மஞ்சுவை ஒரு கையால் கட்டியவண்ணம், “மஞ்சு, கவர்னர் கப்பலையே பிடித்து விட்டாயே” என்று சிலாகிக்க மட்டும் செய்தார்.

மஞ்சு அவரை ஏறெடுத்துப் பார்த்தாள். “அது கவர்னர் கப்பலென்று உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று வினவினாள்.
“அதோ அதன் முகப்பில் பார் பிரிட்டிஷ் கொடி. அதில் இரண்டு மூன்று ராணுவ அடையாளங்கள் இருக்கின்றன பார். தவிர பக்கப் பலகையில் திட்டமாக எழுதியேயிருக்கிறார்களே” என்றார் ஆங்கரே.

அவர் கழுகுப் பார்வையும், நுண்ணிய அறிவும் மஞ்சு வுக்குத் தெரிந்தேயிருந்தாலும் விநாடி நேரத்தில் பிடித்த கப்பல்களை எடை போட்டு விடுவார் என்று அவள் நினைக்கவில்லை. ஆகவே அவர் கேட்பதற்கு முன்பு

அவளே சொன்னாள், “இன்னொன்று வணிகக் கப்பல்’” என்று.

“ஆம். சிறு கப்பல். கெட்ச் வகையைச் சேர்ந்தது” என்று அலட்சியமாகச் சொன்ன கனோஜி ஆங்கரேயின் கண்களில் திடீரென புத்தொளி தெரிந்தது. “மஞ்சு” என்று அழைத்த அவர், “அதோ கப்பலிலிருந்து படகில் இறங்குகிறாளே அவள் யார்?’ என்று வினவினார்.

“அவள் ஒரு வெள்ளைக்காரி” என்றாள் மஞ்சு.

“பணக்காரியா?” என்று வினவினார் கனோஜி ஆங்கரே.

”அப்படித்தான் தெரிகிறது” என்றாள் மஞ்சு எரிச்சலுடன்.

“பலே பலே! அந்த வணிகக் கப்பலைவிட இவள் முக்கியம்” என்று குதூகலப்பட்டார் ஆங்கரே.

மஞ்சு வெறுப்புடனும் சினத்துடனும் தந்தையைப் பார்த்தாள். கனோஜி அவள் வெறுப்பையோ சினத்தையோ லட்சியம் செய்யவில்லை. “மஞ்சு! உபதளபதி எப்படிக் கையைக் கொடுத்து அவளை இறக்குகிறான் பார். பலே கைக்காரன். பெண்களைக் கண்டால் விடமாட்டான்’ என்று கூறி மஞ்சுவின் முதுகில் தட்டினார்.

மஞ்சுவின் சினம் எல்லையைக் கடந்ததால், “நான் கோட்டைக்குப் போகிறேன்” என்று கூறிவிட்டு விடுவிடு வெனப் பாறைப் பாதையில் ஏறிச் சென்றுவிட்டாள்.

அவள் சென்றதைப்பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் நின்றிருந்த கனோஜி இதயசந்திரன் வந்ததும் அவனைப் பாராட்ட மக்களிட்ட கோஷத்தில் தானும் கலந்து கொண்டார். படகிலிருந்து அவன் இறங்கியது, அவனைத் தனது பக்கத்தில் இழுத்துவிட்டுக் காதரைன் இடுப்பை இருகைகளாலும் பிடித்துப் படகிலிருந்து ஒரே தூக்காகத் தூக்கிக் கரையில் நிறுத்தினார். இதைக் கண்ட மக்கள் பெரும் ஆரவாரம் செய்தார்கள். அவர்கள் ஆரவாரத்தைக் கனோஜியும் தமது கை உயர்த்தி ஏற்றுக்கொண்டார். அவரது இன்னொரு கை அந்த வெள்ளைக்காரி இடுப்பிலேயே நின்றுவிட்டது.

கறுப்பு உடையணிந்திருந்த காதரைன் முகத்தில் எந்தவித உணர்ச்சியும் இல்லை. பிரிட்டிஷார் முதல் போர்ச்சுகீஸ் வரை எந்த ஐரோப்பிய அரசுகளையும் அரபிக்கடலில் உலாவ விடாமல் அடித்தவரும், அரபிக் கடலைத் – தனியரசன் போல் ஆண்டுவந்தவரும், கொள்ளைக்காரனென மாற்றாராலும் ஸார்கேல் என மகாராஷ்டிரர்களாலும் அழைக்கப்பட்ட வருமான கனோஜி ஆங்கரேயை ஏறெடுத்து நோக்கினாள் காதரைன். சாட்சாத் கடல் ராட்சதன்போல் நின்றிருந்த கனோஜியின் முகத்தில் நிரம்பி வழிந்து கொண்டிருந்த வீரமும், கண்களில் ஒளியிட்ட அலட்சியம் கலந்த நகைப்பும் அவர் இணையற்ற வீரரென்பதை வலியுறுத்தவே, ”நீங்கள் தான் ஆங்கரே என்று நினைக்கிறேன்” என்றாள் காதரைன்.

“உன்னைப் போன்ற அழகி நினைப்பதில் தவறு எப்படி இருக்கமுடியும்?” என்று கூறிய ஆங்கரே தலையை அவளை நோக்கிக் குனிந்தார்.

“கனோஜி!” என்ற அவள் அதிகாரக் குரல் அவரை அடக்கியது.

“என்ன அழகி?” என்று கேட்டார் அவர்.

‘உம்மைக் கொள்ளைக்காரர் என்று நான் சொன்னால்…?” என்றாள் அவள்.

“அதிலும் தவறிருக்காது, உன் அழகிய உதடுகளி லிருந்து அந்தச் சொற்கள் உதிருவதால்…” என்று ஆங்கரே பெரிதாக நகைத்தார்.

காதரைன் முகம் சுளித்தாள். ”நீ ஒரு மிருகம்” என்று சீறினாள் காதரைன்.

விஜயதுர்க்கத்தில் யாரும் பேச முடியாத பேச்சு அது. அதைக் கேட்ட பக்கத்திலிருந்தவர்கள் திகைத்தார்கள். ஆனால் கனோஜி அதைக் கேட்டும் நகைத்தார். ” அழகான பெண்ணைப் பார்த்துவிட்டால் எந்த ஆண் மகனும் மிருகம்தான்” என்று கூறிய ஆங்கரே அவளை இடது கையால், இடுப்பைப் பிடித்துத் தூக்கி, “இந்தா உபதளபதி, நீ இவளைப் பிடித்தாய். நீயே இவளைக் கொண்டு போ” என்று அவனிடம் நீட்டினார்.

இதயசந்திரன் என்ன செய்வதென்று தெரியாமல் இரண்டு கைகளையும் நீட்டி அவளை வாங்கினான். கனோஜி பெரிதாக நகைத்தார். “பலே பலே!” என்று மற்றவர்களும் நகைத்தார்கள். “இப்பொழுது புரிகிறது! இப்பொழுது புரிகிறது” என்று கூவினான் கனோஜி.

இதயசந்திரன் குரல் பலமாக எழுந்தது. “தலைவரே!” என்று.

“என்ன உபதளபதி?”

“இதில் புரிவதற்கு ஏதுமில்லை. இவளைச் சிறை பிடித்தேன்.”

“நீயா! இவளையா?”

“ஆம்.”

“பிறகு இவள் உன்னைச் சிறை பிடித்தாளா?”

இதைக் கேட்ட இதயசந்திரன் சற்றுக் கோபத்துடன், “இவளைப்பற்றி அப்படிப் பேசுவது தவறு. இவள் விதவை” என்று சுட்டிக் காட்டினான்.

”நல்லதாகப் போய்விட்டது. தொந்தரவு ஏது மில்லை” என்ற கனோஜி அவனிடம் வேறு எதுவும் பேசாமல் படகிலேறி, பிடிபட்ட கப்பல்களைப் பார்க்கச் சென்றார். இதயசந்திரன் காதரைனை மஞ்சுவிடம் சேர்ப்பிக்கப் பக்கத்திலிருந்த வீரர்களுக்குக் கட்டளையிட்டுத் தானும் ஒரு படகிலேறி கனோஜியைப் பின் தொடர்ந்தான். இரு கப்பல்களிலும் தானும் அவரைத் தொடர்ந்து சென்று வணிகக் கப்பலிலிருந்த வர்த்தகச் சரக்குகளையும், பணப்பெட்டிகளையும் காட்டினான். கவர்னர் ஆயுதக் கப்பலையும் காட்டி அதன் பகுதிகளைச் சேதம் செய்ததற்கான காரணங்களையும் கூறினான். கனோஜி இரு கப்பல்களையும் மௌனமாகப் பார்வையிட்டார். பிறகு அக்கப்பல்களில் சிறைப்பட்டிருந்த மாலுமிகளைக் கோட்டைச் சிறையில் கொண்டு போய் அடைக்குமாறும், வணிகக் கப்பலிலிருந்த பொருள்களைக் கோட்டைக் கிடங்கில் சேர்க்குமாறும் உத்தரவிட்டார். பணப்பெட்டியைத் தமது படகில் ஏற்றுமாறும் பணித்து விட்டுக் கிளம்பினார். இதயசந்திரனும் தனது படகில் அவரைத் தொடர்ந்தான். இரு படகுகளும் துறைக்கு வந்ததும் துறையில் அனாயாசமாகத் தாவிக் – குதித்த ஆங்கரே இரு மாலுமிகளை விட்டு, “இந்தப் பணப் பெட்டியை எனது மாளிகைக்குக் கொண்டு செல்லுங்கள்” என்று ஆணையிட்டு, “உபதளபதி! நீ சென்று இளைப்பாறு. நாளை சந்திப்போம்” என்று இதயசந்திரனை நோக்கிக் கூறிவிட்டு அவன் பதிலுக்குக் காத்திராமல் சென்றுவிட்டார்.

இதயசந்திரன் நீண்ட நேரம் நீர்க் கரையில் நின்று கொண்டிருந்தான். சிந்தனை. உள்ளத்தில் அலைபாய பிறகு கோட்டைக்குள் நுழைந்த உபதளபதிகள் தங்கும் மாளிகைக்குச் சென்றான். உபதளபதிக்கு மாலுமிக ளிருவர் சகல ஏற்பாடுகளையும் செய்திருந்தபடியால் நீராடிச் சிற்றுண்டி அருந்திப் பஞ்சணையில் சாய்ந்தான். அவன் கனோஜியை அன்றும் பார்க்க முடியவில்லை. இந்த இரண்டு நாட்களும் இரண்டு யுகமாயிருந்தது அவனுக்கு. காதரைனைக் கனோஜி எங்கே வைத்திருக்கிறார் என்ற கேள்வி அவன் மனத்தில் எழுந்தது. கனோஜி பெண்களிடம் ஏதாவது விளையாடுவாரே தவிர அவர்கள் கௌரவத்திற்கு எந்தக் குறையும் வராதென்பதை அவன் உணர்ந்திருந்தபடியால் அதைப்பற்றி அவன் கவலைப்படவில்லை யென்றாலும், ஜலதீபத்தின் நிகழ்ச்சிகள் அவன் மனக் கண்ணில் திரும்பத் திரும்பத் தோன்றிக்கொண்டிருக்கின்றன. அவள் அழகிய உடலின் கவர்ச்சிகள் அவனை அலைக்கழிக்கவே செய்தன. அதற்கு ஒரு முடிவு கட்ட மஞ்சுவை மணந்து அவளை மறப்பதே வழியென்று தீர்மானித்த தமிழன் மூன்றாவது நாள் தானாகவே சென்று கனோஜி ஆங்கரேயைச் சந்தித்தான்.

கனோஜி அப்பொழுது மகாராஷ்டிரக் கடற்புறப் பகுதிகளை விளக்கும் படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார். இன்னும் சில உபதளபதிகளும் அவரைச் சுற்றி நின்றிருந்தார்கள். நீண்ட நேரம் அவனைக் கவனிக்காமலேயிருந்த கனோஜி திடீரெனத் தலையைத் தூக்கி, “வா தமிழா. உனக்கு நானே சொல்லியனுப்ப நினைத்தேன். வா இப்படி, இதைப் பார்” என்று தமது கையிலிருந்த குறுவாளின் நுனியை ஒரு படத்தின் இடத்தில் சுட்டிக் காட்டினார். ”அது கொலாபாவல்லவா?” என்றான் தமிழன். ”ஆம். அங்குதான் நீ போகவேண்டும்” என்றார் ஆங்கரே.

“அதற்குமுன் தங்களிடம் ஒரு முக்கிய விஷயம் பேச வேண்டும்” என்றான் இதயசந்திரன்.

“அந்தப் பெண்ணைப் பற்றித்தானே! பயப்படாதே. அவளும் உன்னுடன் வருகிறாள். அதுவும் தனித்து வருகிறாள்” என்று ஆங்கரே மற்ற உபதளபதிகளைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டினார்.

இதயசந்திரன் முகம் கல்லாயிருந்தது. “நான் தங்க ளிடம் தனிமையில் பேச வேண்டும்” என்று விண்ணப்பித் கண்ணைக் காட்ட மற்ற உபதளபதிகள் வெளியே சென்றதும் ஒளிவு மறைவின்றிக் கூறினான் இதய சந்திரன், ”நான் போகுமுன்பு எனக்கு முக்கியமாக ஒன்று தேவை” என்று.

“என்ன?”

“மனைவி.”

”அடைவதை யார் தடுத்தது?”

“மஞ்சு வேண்டும் எனக்கு. உடனே நீங்கள் மண முடித்துத் தரவேண்டும்.”

கனோஜி அவனை வினோதமாகப் பார்த்தார். “அது முடியாது” என்று கூறி அதற்கான காரணங்களையும் கூறினார்.

காரணங்கள் இதயசந்திரனுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்தன. அவன் இதயத்தைச் சுட்டெரிக்கவும் செய்தன..

Previous articleJala Deepam Part 2 Ch9 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 2 Ch11 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here