Home Historical Novel Jala Deepam Part 2 Ch11 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 2 Ch11 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

63
0
Jala Deepam Ch11 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 2 Ch11 | Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 2 Ch11 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் –11 பாரதத்தைப் பார்! அதன் வாழ்வைப் பார்!

Jala Deepam Part 2 Ch11 | Jala Deepam | TamilNovel.in

பிரிட்டிஷ் பூகோள நிபுணனொருவனால் வரையப் பட்ட இந்திய மேலைக் கடற்கரையின் படமொன்று பெரிய மேசை மீது விரிந்து கிடக்க, அதன்மீது கொலாபா வைக் காட்டியவண்ணம் குறுவாளைப் பிடித்த கை ஊன்றி நிற்க சுவர்களிலெங்கும் துறைமுகப் படங்களும் கோட்டை களை விளக்கும் படங்களும் கத்தி கேடயங்கள் துப்பாக்கி களும் பொருத்திக் கிடக்க, அவற்றின் முன்னணியில் எழுந்த திடகாத்திர உருவம், கம்பீரத்துக்கும் பௌருஷத் துக்தும் வீரத்துக்கும் எடுத்துக்காட்டாக விளங்க, இதய சந்திரனை உற்று நோக்கிய கனோஜி ஆங்கரே, “தமிழா, உனக்குத் திருமண ஆசை எப்பொழுது வந்தது?” என்று வினவினார்.

இதயசந்திரன் கண்கள் அவர் கண்களைத் தைரியத் துடன் சந்தித்தன. இதழ்கள் உறுதியுடன் சொற்களை உதிர்த்தன. “திடீரென உண்டான தல்ல, நீண்ட நாளாகவே இருந்துவருகின்றது” என்றான் இதயசந்திரன் உறுதி மிகுந்த குரலில், அவரை எப்படியும் தனது இஷ்டத்துக்கு இணங்க வைக்கும் எண்ணத்துடன்.

கனோஜி ஆங்கரேயின் பெருவிழிகள் விஷமச் சிரிப்பைக் கக்கின. “இந்த அவசரம் இத்தனை நாள் இல்லை போலிருக்கிறது?” என்றார் ஏளனம் ஒலித்த குரலில்.

“இல்லை” என்றான் இதயசந்திரன் சற்றுச் சினத்துடன்.

“இப்பொழுது அவசரத்துக்குக் காரணம்?” அவரது இதழ்கள் ஒரு கோடிக்கு இகழ்ச்சியுடன் இழுபட்டதால் பயங்கர மீசையும் இழுபட்டது.

“காரணம் திட்டமாக ஏதுமில்லை” என்றான் தமிழன் உண்மையை மறைத்து.

“இருக்கிறது” ஆங்கரே இதைச் சொல்லிப் புன்முறுவல் காட்டினார்.

“என்ன காரணமோ?” தமிழன் குரலில் வெறுப்பு தொனித்தது.

“காதரைன்.”

“காதரைனா?”

“ஆம். அந்த இளம் விதவை?”

“அவளுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?”

“அதைத்தான் நானும் அறிந்துகொள்ளப் பார்க்கிறேன்”. என்ற கனோஜி ஆங்கரே கலகலவென நகைத்தார்.

இதயசந்திரன் கோபம் பன்மடங்கு அதிகப்படவே, “ஸார்கேல்! இதில் நகைப்பதற்கு என்ன இருக்கிறது?” என்று வினவினான்.

“பலவீனமாயிருக்கிறது.”

”பலவீனமா?”

“ஆம். உன் பலவீனம்’ என்ற ஆங்கரே அதைப் பற்றித் தெளிவாகவே விளக்கினார். “தமிழா! நீயும் இரண்டரை ஆண்டுகளாக மாலுமியாயிருக்கிறாய். உ.ன்னுடன் மஞ்சுவை அனுப்பினேன். இன்னும் அவள் கன்னியாயிருக்கிறாள். நீயும் பிரம்மசாரியாயிருக்கிறாய். சென்ற இரண்டரை ஆண்டுகளில் பல கப்பல்களைப் பிடித்திருக்கிறாய். பல துறைமுகங்களில் இறங்கியிருக்கிறாய். பல பெண்களைப் பார்த்திருக்கிறாய். இருப்பினும் உன்மேல் எந்தப் பழுதும் சொல்ல முடியாது. மாலுமிகளின் குணம் ஏதும் உன்னிடமில்லை. எதற்கும் பயப்படுகிறாய். மற்ற மாலுமிகள் கரைக்குச் செல்லும் போதெல்லாம் நீ மஞ்சுவுடன் கப்பலில் தங்கிவிடுவதாக மாலுமிகள் கூறியிருக்கிறார்கள். ஆனால் நீயும் திருமணத்தைப் பற்றிக் கேட்கவில்லை, அவளும் ஏதும் சொல்லவில்லை. ஆனால் இப்போது வந்துவிட்டது திடீரென ஞானோதயம். திருமணம் முடித்துத் தரக் கேட்கிறாய். காரணம் எனக்குத் தெரியும். அந்த வெள்ளைக்காரி அளித்த மயக்கத்தைக் கண்டு பயப்படுகிறாய். அவள் அழகு உன் நெஞ்சை, உன் உறுதியை, உன் சீரிய எண்ணங்களைப் பலவீனப்படுத்தி விட்டது. தாமதித்தால் அவள் அழகுக்குப் பலியாகி விட்டால் என்ன செய்வதென்று பயப்படுகிறாய்” என்று விளக்கிய கனோஜி ஆங்கரே அவனை உற்றுப் பார்த்தார்.

அவர் சொன்னது அத்தனையும் சரியென்பதை உணர்ந்தான் தமிழன். ஒரு மனிதனைப் பார்த்தவுடனே அவனை எடை போட்டுவிடக்கூடிய அவரது நுண்ணிய அறிவை அவன் என்றோ உணர்ந்துகொண்டதால் அன்று ஏதும் பேசாமல் மௌனமே சாதித்தான்.
அவன் மௌனத்தைக் கண்ட கனோஜி, “தமிழா! நான் சிறு வயதில் கடலோடிய காலத்தில் எந்த அழகியைக் கண்டாலும் விடமாட்டேன். சதா அபாயமான மாலுமி வாழ்க்கையின் வழி அது. நிலம்போல் எப்படி நீர் திடம் இல்லாததோ அதேபோல்தான் நீரின்மீது வாழ்பவன் நிலைமையும். ஆகவே, அவன் நிலத்தைப் பார்க்கும் போது ஆசைகளை அனுபவித்துவிட எத்தனிக்கிறான். ஆனால் அதற்கு முற்றும் விலக்காக நீ இருந்திருக்கிறாய். நீ லட்சத்தில் ஒருவன். ஆனால் நீயும். திடமற்றவன். முதலில் பானுதேவியிடம் மையல் கொண்டாய். இரவில் காட்டில் தனித்து அவளிடம். நீ பேசிக் கொண்டிருந்த காலத்தில் உன்னைப் பார்த்தேன். பிறகு, பரசுராமபுரத் திலும் உன் போக்கைக் கவனித்தேன். பிறகு பானுவின் கரங்களிலிருந்து என் வளர்ப்பு மகள் கரங்களில் பாய்ந்தாய். இப்போது இந்த வெள்ளைக்காரியிடம் பாய்ந்திருக்கிறாய்…” என்று கூறினார்.

அவரை இடைமறித்த தமிழன், “தவறு, தவறு” என்று கூவினான் ஆத்திரத்துடன்.

“எது தவறு?”

“கடைசியில் சொன்னது.”

“வெள்ளைக்காரியைப்பற்றிச் சொன்னதா?”

“ஆம்.”

கனோஜி சிரித்தார். “தமிழா! முடிச்சவிழ்ப்பது நல்லதா கெடுதலா?” என்றும் கேட்டு, நகைப்பைப் பலப்படுத்தினார்.
இதயசந்திரன் அசைவற்று நின்றான். அவன் திகைப்பு எல்லை கடந்தது. ‘இருக்கிற ஆயிரம் போர்த் தொல்லைகளில் ஜலதீபத்தில் நடந்ததை எப்படி அறிந்தார்? யார் சொல்லியிருப்பார்கள்? மஞ்சுவா? இருக்காது, இருக்காது, மாலுமிகளாகத்தானிருக்க வேண்டும். ஆனால் அவர்களும் அதைப் பார்க்கவில்லையே’ என்று தனக்குள் கேட்டுக் கொண்டு பிரமித்து நின்றான்.

எதிரே நின்ற கனோஜி மேஜையைச் சுற்றி வந்து அவன் தோள்மீது கையை வைத்து, “முட்டாள்! விதவையான இரண்டாம் நாளே உன்னைத் தீண்டியவளை நீ ஏன் தீண்ட மறுக்கவேண்டும்? நமது அரசர்களைப் பார், எத்தனை சம்சாரங்கள்! எத்தனை ஆசை நாயகிகள்! அவர் களுக்காகப் பிராணனை விடும் நாம் மாத்திரம் எதற்காக வாழ்க்கையின் சுகங்களை மறுக்கவேண்டும், அவை தானாக வலுவில் வரும்போது?” என்று முதுகில் பேயறைவதுபோல் அவனைத் தட்டிக் கொடுத்தார்.

இதயசந்திரன் பதில் சொல்லவில்லை. தலைகுனிந்து நின்றான் பல நிமிடங்கள். “காதரைனிடம் நான் மயங்கியது உண்மை. அதற்காகத் திருமணத்தை நாடுவதும் உண்மை. காலாகாலத்தில் கால் கட்டுப் போட வேண்டும் என்று எங்கள் ஊரில் சொல்வார்கள். மனைவி என்று ஒருத்தியிருந்துவிட்டால், புருஷன் நெஞ்சில் பயமிருக்கும், நெறி தவற அஞ்சுவான் என்பது எங்கள் வழக்கு” என்று மெல்லக் கூறவும் செய்தான்.

“அத்தகைய வலுக்கட்டாயம் நெறியே அல்ல. தவிர, ஒரு மனைவி நம்மை நெறியில் நிறுத்தவும் முடியாது தமிழா! எனக்கு மூன்று மனைவிகள் இருக்கிறார்கள் என்பது உனக்குத் தெரியும். அவர்களில் ஒருத்திகூட என்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவர்களைத் தவிர என்னைப் பல அழகிகள்…” என்ற ஸார்கேஸ் இடிபோல் நகைத்தார்.

அதற்குமேல் அந்தச் சம்பாஷணையை வளர்த்த இஷ்டப்படாத இதயசந்திரன் கேட்டான். “ஸார்கேல், இந்த விஷயத்தில் நமக்குள் கருத்து ஒற்றுமை ஏற்படாது! நான் கேட்டதற்கு என்ன சொல்கிறீர்கள்?” என்று.

“முடியாது என்றுதான் முன்பே கூறிவிட்டேன்” என்றார் ஸார்கேலும்.

“காரணம் சொல்லலாமா?”

என் மகளல்ல“சொல்லலாம். முதலில் அவள்.”

“இருந்தாலென்ன? வளர்ப்பு மகள் மகளுக்குச் சமானந்தானே?”

“ஆம். அவள் தந்தை இறந்திருந்தால்…” இதைச் சொன்ன ஸார்கேலின் முகத்தில் நகைப்பு மறைந்து சிந்தனை குடிகொண்டது.

இதயசந்திரன் இதயத்தில் அந்தக் கடைசிச் சொற்கள் விளைவித்த உணர்ச்சிகள் எத்தன்மையானவை என்பது விவரணத்துக்கு அப்பாற்பட்டதாயிருந்தது. பல விநாடி கள் அவன் அவரைப் பார்த்துக் கொண்டேயிருந்தான். “அவளுக்குத் தாய் தந்தையரில்லை, அனாதை என்று இது வரை நம்ப வைத்தீர்களே!” என்று வினவவும் செய்தான் இறுதியில்.

“நானும் அப்படித்தான் நினைத்தேன். ஆனால் ஒரு தந்தை இப்பொழுது முளைத்திருக்கிறார்” என்றார் ஸார்கேல்.

“எப்பொழுது?”

“சென்ற இரண்டு மாதங்களில்.”

” எங்கிருக்கிறார் அவர்?”

”ஜன்ஜீராவில்”

“ஜன்ஜீராவிலா! ஸித்தியிடமா?”

”ஆம். ஸித்திரஸுல் யாகூத்கானிடம். யாகூத்கானே எனக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறான் மஞ்சுவை அங்கு அனுப்பி வைக்கும்படி.”

”ஒரு வேளை அது சூதாயிருந்தால்?”

“இருக்காது. ரஸுல் யாகூத்கான் ஒரு நாளும் பொய் சொல்லமாட்டான்… தவிர சில்லறைத் தந்திரங்களால் யாரையும் பிடிக்கவோ தொந்தரவு செய்யவோ மாட்டான். அவன் வழி நேர்வழி. சிறந்த வீரன். இணையற்ற மாலுமி, அவன் கடிதம் என்ன சொல்கிறது பார்” என்று மேஜை மீது விரிந்து கிடந்த படத்திற்கடியிலிருந்து ஒரு கடிதத்தை எடுத்து நீட்டினார் ஆங்கரே.

இதயசந்திரன் கடிதத்தைப் படித்தான். “என்னிடம் அலுவல் புரியும் ஒரு மாலுமி தங்கள் வளர்ப்பு மகளைத் தன் மகள் என்று கூறுகிறான். அதற்கான அடையாளங் களையும் கூறுகிறான். முக்கியமாக அவளது இடது மார்பில் பெரு மச்சம் குழந்தையிலிருந்து இருப்பதாகத் தெரிவிக்கிறான். தவிர அவளுக்குக் குழந்தைப் பருவத்தில் பட்ட நீண்ட வெட்டுக் காயமொன்று தொடையில் இருப்பதாகவும் சொல்கிறான். அவள் குழந்தையாயிருந்த சிறு படத்தையும் கொடுத்திருக்கிறான். அதையும் இதோ அனுப்பியிருக்கிறேன். இவை சரியாயிருந்தால் மஞ்சுவை ஜன்ஜீராவுக்குத் தகுந்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கவும். இப்படிக்கு ரஸுல்” என்று எழுதப்பட்டிருந்தது கடிதத்தில்.

இதயசந்திரன் ஆங்கரேயை நிமிர்ந்து நோக்கினான். “இந்த அடையாளங்கள்…” என்று இழுத்து ஏதோ சொல்லவும் முயன்றான்.

“அப்படியே இருப்பதாக மஞ்சு கூறுகிறாள்” என்றார் கனோஜி.

இதயசந்திரன் சிந்தனையில் இறங்கினான். மேலே மெல்லக் கேட்டான், “இப்பொழுது என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று.

“மஞ்சுவை இங்கேயே இருத்திக் கொள்ளப் போகிறேன். அந்தத் தகப்பனை இங்கு அனுப்பும்படி ஸித்திக்குக் கடிதம் எழுதிவிட்டேன். அவன் வந்தபின், மேலே ஆக வேண்டியதைத் தீர்மானிப்பேன். இந்த நிலையில் அவளை நான் மணம் முடித்துக் கொடுத்தால் ஸித்திக்கும் எனக்குமுள்ள விரோதத்திற்கு இது இன்னொரு காரணமாகும். ஆகவே, உன் திருமணம் பிறகுதான். இப்பொழுது நீ காதரைனையும் சிறைப்பட்ட மாலுமி களையும் அழைத்துக் கொண்டு கொலாபாவுக்குச் செல். அங்கிருந்து இந்தக் கடிதத்தைப் பம்பாய் கவர்னருக்கு அனுப்பு” என்று தமது கச்சையிலிருந்து ஒரு கடிதத்தை எடுத்து அவனிடம் கொடுத்தார்.

”அனுப்பி விடுகிறேன். பிறகு என்ன செய்ய வேண்டும்?” “பம்பாய் கவர்னரின் பதிலுக்குக் காத்திரு.” ”பிறகு?”

“முப்பதினாயிரம் ரூபாய் அவர்கள் கொடுத்தால் காதரைனை அனுப்பிவிடு” என்ற கனோஜி, “அதாவது அவள் உன்னிடமிருந்து போக ஒப்புக் கொண்டால்” என்ற வாசகத்தையும் தொடுத்துப் புன்முறுவல் செய்தார்.

“நான் எப்பொழுது புறப்படவேண்டும்?” “நாளைக்கு” என்ற கனோஜி ஆங்கரே, ‘கொலாபா வுக்கு நீ ஜன்ஜீராவைத் தாண்டித்தான் செல்லவேண்டும். மிகுந்த எச்சரிக்கையுடன் தாண்டு. கரையிலிருந்து நீண்ட தூரம் விலகியே ஜலதீபத்தை நடத்து. ஜன்ஜீராவின் கண்களில் பட்டால் நீயோ ஜலதீபமோ, காதரைனோ கொலாபா போய்ச் சேரமுடியாது” என்றும் எச்சரித்தார்.

விதி தன் வாழ்வில் தீவிரமாக விளையாடுகிறதென் பதைப் புரிந்து கொண்ட இதயசந்திரன் பெருமூச்செறிந் தான். வழியிலுள்ள ஆபத்தைப்பற்றி ஜன்ஜீராவைப்பற்றி ஸித்திரஸுல் யாகூத்கானைப்பற்றி அவன் பயப்படவில்லை. அதன் காரணமாகப் பெருமூச்செறியவும் இல்லை. காதரைன் கூட வருகிறாளே தனித்து என்ற எண்ணம் அவன் சித்தத்தைப் பெரிதும் ஆட்டிப் படைத்தது.

கனோஜி ஆங்கரே. அவனை வெறுப்புடன் பார்த்தார். “தமிழா! சரித்திரப் பெரும் ஏடுகளில் தனி மனிதர்களின் ஆசாபாசங்கள், குற்றம் குறைகள் கருதப்படுவதில்லை. அவர்களின் வீரச் செயல்கள், அவற்றால் ஏற்படும் விளைவுகளே இடம் பெறுகின்றன. ஆகவே உன் பாச பந்தங்களை உதறி, பாரதத்தைப் பார், அதன் வாழ்வைப் பார். அதன் மக்களின் நலனைப் பார். உன் கடமை உனக்கு விளங்கும்” என்று கூறிவிட்டு, “செல் தமிழா! நாளைக்குப் புறப்பட்டு விடு’ என்று கட்டளையிட்டு அவனை வெளியே செல்லக் கைகாட்டினார். வேறெதுவும் சொல்லச் சக்தியற்ற இதயசந்திரன் கட்டளைக்குத் தலை வணங்கி அந்த அறையிலிருந்து வெளியேறினான்.

Previous articleJala Deepam Part 2 Ch10 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 2 Ch12 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here