Home Historical Novel Jala Deepam Part 2 Ch12 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 2 Ch12 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

52
0
Jala Deepam Ch12 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 2 Ch12 | Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 2 Ch12 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் –12 கஹினாவின் கடிதம்

Jala Deepam Part 2 Ch12 | Jala Deepam | TamilNovel.in

விஜயதுர்க்கத்தின் நட்ட நடுவில் வட்ட ஸ்தூபியுடன் அரபிக்கடலை அலட்சியத்துடன் நோக்கிக் கொண்டிருந்த கனோஜியின் மாளிகையிலிருந்து உணர்ச்சிகள் அரபிக் கடலின் அலைகளைவிடப் பயங்கரமாக எழுந்து சித்தத்தில் மோதிச் சிதற, கண்கள் கனவு கண்டவைபோல் குழம்பி நோக்க, கால்கள் இஷ்டப்படி இழுத்துச் செல்ல வெளிப் போந்து நடந்த இதயசந்திரன் போகிற இடம் தெரியாமல் நடந்து சென்றான்.

அப்பொழுது மாலைவேளை நெருங்கிக்கொண்டிருந்த தால் விஜயதுர்க்கம் பெரும் உல்லாசத்தில் இருந்தது. பல நாட்டு வணிகர்களும், பிரயாணிகளும் கடைத்தெருவில் பல மொழிகளில் பேசி வியாபாரம் செய்துகொண்டி ருந்தனர். பல நாட்டுப் பெண்கள் நாட்டு வழக்கங்களுக்குத் தக்கபடி பலபடி ஆடையணிந்து சிங்காரித்துக்கொண்டு கடைகளில் பேரம் செய்வோரும் கடலை நோக்கிச் செல் வோருமாக விஜயதுர்க்கத்துக்குப் பெரும் கவர்ச்சியை அளித்துக் கொண்டிருந்தனர். அந்தக் கவர்ச்சிக்குக் கம்பீர மெருகு கொடுக்கக் கிழக்கிலும், மேற்கிலும் ஸஹ்யாத்ரியும் நித்ய யாத்ரியான சூரியனும் முயன்று கொண்டிருந்ததால், ஒரு புறம் பச்சைப் பசேலென்ற பின்னணியையும் மறுபுறம் தங்க ஜோதியுடன் கூடிய முன்னணியையும் அம் மாபெரும் கோட்டை பெற்றுக்கொண்டிருந்தது. மகாராஷ்டிர கொங்கணியின் வடக்குக் காவலுக்குக் கொலாபாவைப் போல தெற்குக் காவலின் பேரரணாக விளங்கிய விஜயதுர்க்கத்தின் மகிமையையோ முக்கியத்தையோ அழகையோ ரசிக்கச் சக்தியற்றவனாகக் கடைத் தெருவில் நடந்து சென்றான்
பல நாட்டுக் கப்பல்களிலிருந்து கவரப்பட்ட பலப்பல பொருள்கள் கடைவீதியில் காட்சியளித்தன. சிறு துப்பாக்கிகள், சுழல் துப்பாக்கிகள், வெளிநாட்டு வாள்கள், குறுவாள்கள், கேடயங்கள் இவையும் விற்பனைக்குக் குவிந்து கிடந்தன. கலவரப்பட்ட ஆயுதங்களில் புதுமையானவையும் முக்கியமானவையும் கனோஜியின் கிடங்குக்குச் சென்று விட்டாலும், விற்பனைக்கு வந்த ஆயுதங்களும் அப்படிச் சாதாரணமானவையல்ல; கடைகளில் திரிந்து கொண்டிருந்த வெள்ளையர், பார்சிகள், அராபியர், மராட்டியர், தெலுங்கர், வங்கர் முதலிய பலரும் அந்த ஆயுதங்களைப் பார்த்துக் கொண்டும், வாங்கிக் கொண்டுமிருந்தார்கள். ஆபரணக் கடைகளில் தனிப் பெண்களும் காதலர்களுடனோ, கணவர்களுடனோ வந்த பெண்களும் கும்பல் கூடி நகைகளைக் கையிலெடுத்து நோக்கியும் அணிந்து அழகு பார்த்தும் விலை பேசியும் கூச்சலைக் கிளப்பிக் கொண் டிருந்தார்கள். இடையே மாலுமிகள் சிலர் அன்றைக்கு ஜோடி சேர்த்துக் கொண்ட பெண்களுக்கு வேண்டியதை வாங்கிக் கொடுக்க அப்பெண்களை பகிரங்கமாக அணைத்துக் கொண்டும் இழுத்துக் கொண்டும் சென்றனர்.

கடை வீதியை விட்டுத் தன் மாளிகையை நோக்கிச் ‘சென்ற இதயசந்திரனைத் தாண்டி அரபுப் புரவிகள் பல பாய்ந்து சென்றன. அவற்றைப் பழக்கும் வீரர்கள் அவற்றின் இடக்கை ஆங்காங்கு சமாளித்தும், கதியை நிதானப்படுத்தியும் சென்று கொண்டிருந்தனர். இக் காட்சியைச் சாதாரண காலத்தில் பார்த்து மனத்தைப் பறிகொடுக்கக் கூடிய இதயசந்திரன் அன்று அவற்றைப் பார்க்காமலே நடந்தான். விஜயதுர்க்கத்தின் மகிழ்ச்சியில் அவன் பங்கு கொள்ள முடியவில்லை. இதயத்தின் சிக்கலுக்கு அத்தனை தூரம் பலியாகியிருந்தான். விஜயதுர்க்கத்தின் இரண்டு அரண்களையும் இவ் வண்ணமே கடந்து கடலை அணைத்திருந்த மூன்றாவது அரணிலிருந்த தனது மாளிகைக்கு வந்து நேராகத் தனது அறைக்குச் சென்று பஞ்சணையில் தடாலென்று வீழ்ந்து மோட்டுவளையைப் பார்த்தவண்ணமிருந்தான்.

அவன் சிந்தனை சிதைந்து கிடந்தது, உள்ளம் உடைந்து கிடந்தது, மஞ்சு கிடைக்கவில்லையே என்ற ஏமாற்றம் அவனைச் சித்திரவதை செய்தது. காதரை னுடன் தனித்துச் செல்ல வேண்டுமே என்ற திகில் அவனை உலுக்கு உலுக்கு என்று உலுக்கியது. ஒரு கணம் அவன் நினைத்தான், ‘ஆங்கரேக்கு எத்தனையோ ஆசை நாயகிகளிருக்கிறார்களே, இந்த ஒரு வெள்ளைக்காரியை நான் ஏற்றுக்கொண்டால் என்ன?’ என்று. பிறகு ‘சீச்சீ! என் மதி என்ன இப்படிக் கெட்டுவிட்டது! மஞ்சு அப்புறம் என்னை விழித்தும் பார்க்க மாட்டாளே!’ என்று சரிப்படுத்திக் கொண்டான். ‘ஆங்கரேயின் மூன்று மனைவிகள் மதுரா, லஷ்மி, கஹினா இம்மூவரும் அவரைக் கட்டுப்படுத்த முடியவில்லையே, என்னை மட்டும் இந்த ஒரே ஒரு மஞ்சு கட்டுப்படுத்த முடியுமா?” என்று கேட்டுக் கொண்டு பிறகு அது வீண் வீம்பே தவிர வேறொன்றுமில்லை என்பதைப் புரிந்து கொண்டான்.

‘இந்த 1712-வது டிஸம்பர் என்னை எதற்காக இப்படி அலைக்கழிக்க வேண்டும்? எனக்கும் மஞ்சுவுக்கும் குறுக்கே இந்த வெள்ளைக்காரியை ஏன் கொண்டு வந்து விட வேண்டும்? டிஸம்பர் மாதமே ஒரு சனியன்’ என்று டிஸம்பரைத் தூற்றினான். ஏற்கனவே சிரித்த சிரிப்பை டிஸம்பர் அடக்கவில்லை. அது முடியும் தருவாயிலிருந்ததாலும் கடைசியாக அவனைப் பார்த்து நகைத்துவிட்டுச் செல்லவே தீர்மானித்தபடியால் பெரும் பிரச்சினைகளைக் கிளப்பி வைத்தது.

அன்றிரவு அவனுக்கு மீண்டும் கனோஜி ஆங்கரேயின் மாளிகையிலிருந்து அழைப்பு வந்தது. ஆனால் ஆங்கரேயிடமிருந்து வரவில்லை, அந்த அழைப்பு யார் அழைத் தார்கள் என்பதைச் சொல்லவும் மறுத்தான் அழைக்க வந்த வீரன். எதைப்பற்றியும் அதிகமாக ஆராயும் நிலையில் இல்லாத இதயசந்திரன் வீரனிடம் கேள்விகள் ஏதும் கேட்காமலே அவனைத் தொடர்ந்து சென்றான். கனோஜி மாளிகையை அடைந்ததும் அவர் பேட்டி கொடுக்கும் அறைப் பக்கம் செல்லாமல் மாளிகையைச் சுற்றிச் சென்ற காவலன், பின்புற வாயிலாக அவனை அழைத்துச் சென்று ஒரு பெரும் அறையின் முன்பு நிறுத்தி அங்கிருந்த காவல னிடம், “உபதளபதி வந்துவிட்டாரென்று சொல்” என்று கூறினான். அதை அறிவிக்கச் சென்ற காவலன் அரை விநாடியில் திரும்பி வந்து அறையை மறைத்திருந்த சீலையை விலக்கித் தலை வணங்கி உபதளபதியை உள்ளே செல்லச் சைகை காட்டினான்.

உள்ளே சென்ற உபதளபதி ஒரு விநாடி அந்த அறை யைக் கண்டு பிரமித்தான். ஒரு சயன அறையின் உல்லாசத் துக்கு எத்தனை உபகரணங்கள் தேவையோ அத்தனையும் இருந்தது அவ்வறையில். நடுவில் பெரும் பஞ்சணையும், சுற்றிலும் பெரும் நிலைக்கண்ணாடிகளும், அழகிய சீலை களும், சிலைகளும், கீழே விரிப்புக் கம்பளமும், ஒரு சித்திர வேலை மேஜையும், சாய்வு ஆசனங்கள் இரண்டும் இன்னும் பல அனுகூலங்களும் இருந்தன. மேலேயிருந்து தொங்கிய லஸ்தர் விளக்கு, அறையை மிக ரம்மியமாக அடித்திருந்தது. அந்த அறையிலிருந்த அத்தனை அழகு களுக்கும் சிகரம் வைத்தது போல் சிலையொன்று நடுப் பஞ்சணையில் அமர்ந்திருந்தது. அது சற்று அசைந்து புன்முறுவல் கொண்ட பிறகுதான் அது சிலையல்லவென்ப தைத் தமிழன் புரிந்து கொண்டான். புரிந்து கொண்டதும் நிலம் நோக்கித் தலை தாழ வணங்கினான்.

கனோஜி ஆங்கரேயின் மூன்றாவது மனைவியும் அவரால் அதிகம் விரும்பப்பட்டவளுமான கஹினா, இதய சந்திரனை ஓர் ஆசனத்தில் அமருமாறு கை காட்டினாள். அவளது திருமேனியில் பக்கவாட்டிலிருந்து எழுந்து ஆசனத்தைச் சுட்டிக் காட்டியது கையா, யானைத் தந்தத் தால் கடையப்பட்ட அழகுப் பொருளா என்று.

மலைத்தான் தமிழன். அவன் பார்வையைக் கண்டு நகைத்த கஹினா, “கொள்ளைக்காரத் தலைவருக்குத் தகுந்த சீடன் தான் நீ” என்று கூறினாள்.

“கொள்ளைக்காரரா!” என்று பிரமிப்புடன் சொற்களை உதிர்த்தான் தமிழன்.

“ஆம். என் கணவர். மகாராஷ்டிர ஸார்கேல்” என்றாள் கஹினா.

“கணவரைப் பற்றி இப்படிக் கூறலாமா தாங்கள்!” என்று குழறினான் இதயசந்திரன்.

“எனக்கு மாத்திரமல்ல கணவர் அவர். இன்னும் பல பேர் இருக்கிறார்கள் அவருக்கு. அந்தப் பெண் பித்து அரசியலிலும் விடவில்லை அவரை” என்றாள் கஹினா வெறுப்புடன். “என்ன சொல்கிறீர்கள் தாயே!”

கஹினா பஞ்சனையைவிட்டு எழுந்திருந்தாள். “இவர் யாருக்கு ஸார்கேல்? ஸார்கேலாக யார் நியமித்தது இவரை?” என்று வினவினாள்.

“யார்?” “தாராபாய்’ என்று முடித்தாள் கஹினா. ” இவரை ஸார்கேலாக்க தாராபாய்க்கு என்ன உரிமையிருக்கிறது? யார் மகாராஷ்டிரத்தின் அதிபதி? சத்ரபதியின் நேர்வழியில் வந்த பேரன் ஷாஹுவா அல்லது நாட்டுப் பெண் தாராபாயா?” என்றும் வினவினாள்.

கஹினா அரசியல் பேசுகிறாளென்பதைப் புரிந்து கொண்ட இதயசந்திரன் அதற்குக் காரணத்தை ஊகிக்க முடியாததால், “இதெல்லாம் பெரிய இடத்து விஷயம், நமக்கென்ன தாயே?” என்றான்.

கஹினா கோபத்துடன் ராணிபோல் நிமிர்ந்து நின்றாள். “நான் என்ன சிறிய இடமா தமிழா! அரபிக்கடல் அரசனின் மனைவி. யாருக்குக் குறைந்தவள் அந்தஸ்தில்” என்றாள்.

அரபிக்கடல் அரசனைப்பற்றிக் குறிப்பிட்ட போது அவள் சொற்களில் ஒலித்த கம்பீரமும், பெருமையும் கனோஜியை அவள் பெரிதும் நேசிக்கிறாளென்பதைப் புலப்படுத்தவே இதயசந்திரன் சற்றுக் குழப்பத்துடன், “உண்மை தாயே, அப்படியிருக்கத் தாராபாயைப்பற்றி நீங்கள் ஏன் கஷ்டப்படுகிறீர்கள்!” என்று வினவினான்.

“அவள் நாட்டை இருகூறாக உடைத்துவிட்டதால், மகனுக்கு முடிசூட்ட மகாராஷ்டிரத்தையே பிளவுபடுத்தி நாசம் செய்ய துணிவதால், இந்த நாட்டு அரியணையில் சிவாஜியின் சந்ததியும், ஸம்பாஜியின் மகனுமான ஷாஹு தான் உட்காரலாம். அதற்குத்தான் நாம் முயல வேண்டும்” என்றாள் கஹினா.

“நாமா!” ‘

”ஆம். நீயும் நானும்” என்றாள் கஹினா.

“தாயே! நான் கனோஜியின் அடிமை என்பது உங்களுக்குத் தெரியாதா?”

“உன்னைவிட அவருக்கு ஆயிரம் மடங்கு அதிக அடிமை அவர் மனைவியான நான். தவிர அவருக்காக என் உயிரையே அர்ப்பணிக்கும் உறுதி கொண்டவள்” என்று சுட்டிக் காட்டினாள் கஹினா.

”அவருக்கெதிராக….”

“எதிராக எதுவும் செய்யவில்லை தமிழா. நாட்டுக்கு என் கடமையைச் செய்ய முற்படுகிறேன்.”

“எப்படி?’

”உன் துணை கொண்டு.”

இதயசந்திரனின் ஆச்சரியம் பன்மடங்கு அதிகப் பட்டது. “என் துணை கவைக்கு உதவாது தாயே” என்றான் வியப்பு தொனித்த குரலில்.
“அதைத் தீர்மானிக்க வேண்டியவள் நான்” என்று கஹினா கூறினாள். “உன்னை அந்த வெள்ளைக்காரி யுடன் தலைவர் கொலாபாவுக்கு அனுப்பப் போகிறார் அல்லவா?” என்று வினவினாள்.

இதயசந்திரன் பிரமிப்பு அளவுக்கு மீறி அதிகப் பட்டது. – தனித்துத் தலைவர் தன்னிடம் இட்ட உத்தரவு அதற்குள் மாளிகையில் எப்படிப் பரவியது என்று எண்ணினான். அவன் எண்ணத்தைப் புரிந்து கொண்ட கஹினா கூறினாள், “தமிழா! என் கணவரை என்னால் புரிந்து கொள்ள முடியாதா? அல்லது அவர் உத்தரவுகளை அறியத்தான் எனக்கு வழியில்லையா! அவருடன் உடலும் உயிருமாகப் பழகியவளுக்கு அவர் யுக்திகளில் ஓரளவாவது இருக்காதா?”

மேலும் சொன்னாள் கஹினா, “தமிழா! வெள்ளைக் காரியை அழைத்துக் கொண்டு போகப் போவதும், பம்பாய் கவர்னரிடம் முப்பதாயிரம் ரூபாய் அவளுக்கு ஈடு கேட்கப் போவதும் எனக்குத் தெரியும். இதிலெல்லாம் அவர் உத்தரவுப்படி நட. ஆனால் ஈடு கேட்க ஆளை அனுப்பாதே. நீயே போ.”

“நானா? என்னையே பம்பாய்க்குப் போகச் சொல் கிறீர்களா?” என்று வினவினான் இதயசந்திரன்.

“ஆம்.”

“போய்?”

“அங்கு நான் ஒரு விலாசம் தருகிறேன்.”

“சரி.’

“அந்த விலாசத்திற்குச் சென்று நான் கொடுக்கும் கடிதத்தைக் கொடுத்துவிடு.”

இதயசந்திரன் சற்று சிந்தித்தான். ” அதற்கு நானே போக வேண்டுமா? வேறு நம்பிக்கையான யாரையும் அனுப்பக்கூடாதா?” என்று வினவினான்.

“உன்னைவிட நான் நம்பக் கூடியவர் இங்கு யாரு மில்லை” என்ற கஹினா, “போய் வா தமிழா! உன் கப்பல் புறப்படும் முன்பு கடிதம் என் முத்திரையுடன் உனக்கு வந்து சேரும்” என்று கூறி அவனுக்கு விடை. கொடுத்தாள்.

இதயசந்திரன் அறையை விட்டுச் செல்லச் சிறிது தயங்கினான். “என்ன தமிழா தயங்குகிறாய்? ஏதாவது சந்தேகமிருந்தால் கேள்” என்றாள் கனோஜியின் மனைவி.

“பம்பாயில் யாரிடம் கடிதத்தைக் கொடுக்கவேண்டு மென்று கூறவில்லையே தாங்கள்” என்றான் இதய சந்திரன்.

“கடிதத்தின் மீது பெயர் விலாசம் எல்லாம் தெளிவாக இருக்கும்” என்றாள் கஹினா.

இதயசந்திரன் மேற்கொண்டு அவளிடமிருந்து எந்தப் பதிலும் கிடைக்காதென்பதைப் புரிந்து கொண்டு வெளியேறினான். அறைக்கு வந்து உறங்காமலே இரவைப் போக்கினான்.
மறுநாள் முழுவதும் பயணத்துக்கு ஜல தீபத்தைத் தயார் செய்வதில் செலவழித்தான். நீண்ட பயணத்திற்குத் தேவையான குடிநீரைப் பீப்பாய்களில் நிரப்பவும், உணவுப் பொருள்களைச் சேகரித்துக் கப்பலில் சேர்க்கவும், பீரங்கிகள் முதலியவற்றுக்குத் தேவையான வாணப் பொடி, குண்டுகள் இவற்றைச் சேமிக்கவும் மாலுமி களுக்குக் கட்டளையிட்டான். இப்படிப் பிற்பகல்வரையில் விடாமல் ஏற்பாடு செய்து அஸ்தமனத்துக்கு நாலைந்து நாழிகைகளுக்கு முன்பே ஜல தீபத்தின் நங்கூர மெடுக்கத் தீர்மானித்துத் தளத்தில் நின்று கரையை நோக்கினான்.

அன்று பூராவும் அவன் மஞ்சுவை சந்திக்கவில்லை. அவள் வழியனுப்ப ஒரு வேளை வருவாளோ என்று பார்த்துப் பார்த்து ஏமாந்தான். கடைசியில் கஹினாவின் கடிதம் மட்டும் வந்தது. அதை எடுத்துக்கொண்டு படகில் வந்த மாலுமியொருவன் ஒரு முத்திரைக் கடிதத்தைத் தளத்தில் நின்றிருந்த இதயசந்திரனிடம் நீட்டினான.

அதை வாங்கிய இதயசந்திரன் கை அசைவற்று நின்றது. இதயங்கூட அசைவற்று நின்றுவிடும் போலி ருந்தது. விலாசத்திலிருந்த முதல் வரி, “பானுதேவி.”

Previous articleJala Deepam Part 2 Ch11 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 2 Ch13 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here