Home Historical Novel Jala Deepam Part 2 Ch14 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 2 Ch14 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

58
0
Jala Deepam Ch14 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 2 Ch14 | Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 2 Ch14 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் –14 மூன்றாவது காதலி

Jala Deepam Part 2 Ch14 | Jala Deepam | TamilNovel.in

கட்டழகி காதரைனின் கையொன்று தன் கச்சையை நோக்கிச் சென்றதையோ, கச்சையிலிருந்து வெகு லாகவமாக எடுத்து விட்டதையோ காமக் கணைகளின் வசப்பட்டிருந்த கப்பல் தளபதி கவனித்தானில்லை. உற்ற தகப்பனையும் உடன் பிறந்தாளையும் தவிர காதலன் ஒருவனே ‘கிறிஸ்தவப் பெயர்’ எனப்படும் சொந்தப் ‘பெயரான’ காதரைன் என்ற சொல்லை உச்சரிக்க உரிமை பெற்றிருக்க அந்தப் பெயரைத் தன்னை அழைக்க அனுமதித்ததன்றி, கேட்டி என்றும் கேட் என்றும் அதைக் குறுக்கிச் செல்லமாக அழைக்க அழைப்பு விடுத்த அந்த ஆரணங்கின் துணிவைக் கண்டு பெரிதும் வியப்படைந்த நிலையில் எதையும் கவனிக்கும் திறனில்லாது போயிற்று ஜல தீபத்தின் தலைவனுக்கு. உள்ளேயிருந்த விளக்கொளி யில் தகதகவெனத் தங்கக் கம்பிகள் போல் பிரகாசித்த அவள் தலைக்குழல், நல்ல வெளுப்பில் உணர்ச்சிக் குருதி பாய்ந்துவிட்டதால் குங்குமச் சிவப்பாகச் சிவந்து ஒளி விட்ட கன்னக்கதுப்புகள், அரைப் பார்வையாகப் பார்த்த நீலக் கண்கள், கெம்பினும் சிவந்து நீர் துளிர்த்து அழைத்துக் கொண்டிருந்த பேருதடுகள் சற்றே இடை வெளி கொடுத்த உதடுகளின் உள்ளே மெல்லத் தலை காட்டிய இரு வெண்முத்துக்கள், வெண்சங்குக் கழுத்து, கழுத்துக்குக் கீழே முட்டி எழுந்த அழகுகள், அவற்றை ‘லேசாக வெளிப்படுத்திய வெண்ணிற இடை, இவை தொடுத்த ஒவ்வொரு கணைக்கும் இரையான இதய சந்திரன், அவள் தலையைப் பிடித்த வண்ணமே, அவள் மீது குனிந்த வண்ணமே கூறினான்: “மாட்டேன் காதரைன், மாட்டேன்” என்று.

காதரைன் அவனது இரு கன்னங்களையும் தனது இரு கைகளில் பிடித்து அவன் முகத்தைத் தனது முகத்தை நோக்கிச் சட்டென்று திருப்பினாள். நெற்றியைப் பிடித்திருந்ததால் உட்கார்ந்திருந்த நிலையிலிருந்த இதயசந்திரன் அந்த ஊன்றுகோலும் விலகிவிட்டதால் அவள்மீது சட்டென்று விழுந்தானானாலும், ஒரே விநாடியில் கையை அவளுக்கு மறுபுறத்தில் ஊன்றித் திடப்படுத்திக் கொண்டான். ஆனால் அந்தத் திடத்தை ஆயிரம் காமக் கணைகள் உடைத்தெறிந்தன. அவன் கன்னங்களைப் பிடித்த கைகள் அன்புடன் அழுந்தின. அவள் முகத்தின் இரு நீலாம்பரங்களும் அவனுடைய இரு கரு நெய்தல்களுடன் கலந்தன, ஈர்த்தன. “ஏன் மாட்டேன், எதை மாட்டேன்?” என்று முணுமுணுத்த அவள் உதடுகள் எதற்கோ ஏங்குவது போலிருந்தன. அந்த ஏக்கம் அவன் இதயத்தில் கிளம்பிய ஏக்கமும் தாபமும் இணையற்றதா யிருந்தன. “வேண்டாம் கேட்க வேண்டாம்” என்று அவன் உதடுகள் உதிர்த்த சொற்களில் உறுதி லவலேசம் கூட இல்லை.

“எது வேண்டாம்!” என்று அவள் கேட்டு அவன் முகத்தை உற்றுப் பார்த்தாள்.

“இதுதான்…’ என்று அவன் தடுமாறினான், அசைந்தான் பஞ்சணையில்.

“இதுதானென்றால்?” அவள் சொற்கள் குழைந்தன. அவளுடைய ஒரு கால் பஞ்சணையில் உதைத்துக் கிளப்பிய தால் சீராக இருந்த படுக்கை விரிப்புக் கலைந்தது, ஆடையும் குலைந்தது.

அவன் உடல் நடுங்கியது. “இது சரியல்ல, முறை யல்ல…” என்று அவன் கெஞ்சி அவள் கைகளைக் கன்னத்திலிருந்து எடுத்தான்.

“ஏனிப்படி நடுங்குகிறீர்கள்?’ என்று அவள் வினவினாள்.

“இல்லை. நடுங்கவில்லை. நடுக்கமெதற்கு எனக்கு? என்ன குற்றம் செய்துவிட்டேன்?” என்று தளபதி தடுமாறித் தடுமாறிப் பேசினான்.

“அதைத்தான் நானும் கேட்கிறேன்….” “எதை, எதைப்பற்றி?”

” இதைப்பற்றி…”

“இல்லை, இல்லை. ஒன்றுமில்லை” என்று கூறி, “சரி, நான் வருகிறேன்” என்று எழுந்திருக்க முயன்றான் அவன்.

அவள் இடது கை அவன் கழுத்தைச் சுற்றியது. “ஏன் அவசரமா?” என்றாள் மெள்ள..

“ஆம்.”

“என்ன அவசரமோ?”

“கப்பல் வேலை.”

”ஏன்? போர் வந்துவிட்டதா?”

“போரா?”
“ஆம்.”

“அது வராவிட்டாலென்ன?”

“வேறென்ன வரும்?”

“பேர் வரும். போரைவிடப் பேருக்கு அஞ்சுகிறேன்.”

காதரைன் தனது இளமை அஸ்திரங்கள் நெகிழ ஒரு முறை அசைந்து படுத்தாள். நகைத்தாள் மெல்ல.

“ஏன் நகைக்கிறாய்?’ என்று செல்லமாகச் சீறினான் தமிழன்.

“நீ சொன்னது சிரிப்பு வந்தது.”

“நீயென்று பேசுகிறாயே?”

“காதல் ஆட்சியில் மரியாதை கிடையாது.”

“சரி சரி. நகைத்ததற்குக் காரணம்?”

“நீ பெயரைப் பற்றிப் பயப்படுகிறாயே.”

“வேறெதைப் பற்றிப் பயப்பட வேண்டும்?”

“செயலைப் பற்றி.”

”விளங்கவில்லை.”
”விளங்காததற்கு என்ன இருக்கிறது தமிழா? என்னுடன் இருப்பதில் உனக்கு ஆட்சேபணையில்லை. ஆனால் அது தெரிந்து மாலுமிகள் பெயர் கட்டிவிட்டால் என்ன செய்கிறதென்று பயப்படுகிறாய்? அதாவது…’

“அதாவது?”

“உன் திருட்டுத்தனம் யாருக்கும் தெரியக்கூடாதெனகிறாய்…?”

இதைக் கேட்ட இதயசந்திரன், “காதரைன்…” என்று சீறினான்.

“அப்பா! உண்மையைச் சொன்னால் என்ன கோபம் வருகிறது!” என்று மீண்டும் நகைத்தாள். அவள் கை அப்பொழுதும் அவன் கழுத்தைச் சுற்றியிருந்தது. இடது கை அந்தக் கடிதத்தை வெகு ஜாக்கிரதையாகக் கலைந்து விட்ட படுக்கை விரிப்பின் கீழ் மறைத்துவிட்டது.

உணர்ச்சிகளை அடியோடு காற்றில் பறக்கவிட்டு இதயம் படக்படக்கென அடித்துக் கொள்ள, காமத்தாலும் அது கிளப்பிவிட்ட அச்சத்தின் விளைவாலும் நிலைகுலைந் திருந்த இதயசந்திரனுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. அவள் சொன்னது அத்தனையும் உண்மை யென்பதை அவன் உணர்ந்திருந்தான். கழுத்தைச் சுற்றியிருந்த அவள் இடது கையின் வழவழப்பும், அழுத்தமும் அவன் புத்தியை அழுத்தியிருந்தாலும், அவன் திடத்தை உடைத்திருந்தாலும் அவன் மனத்தில் எங்கோ பதுங்கியிருந்த அறிவின் ஒரு சிறு பொறிமட்டும், ‘நீ செய்வது தவறு’ என்று உறுத்திக் கொண்டிருந்தது. அந்த உறுத்தல் அவள் மோகனாஸ்திரங்களில் அடிக்கடி மறைந்து தலையை நீட்டிக்கொண்டிருந்தது.

வெள்ளத்தைத் துரும்பு எதிர்க்குமா? அலையைச் சிறு இலை எதிர்க்குமா? காற்றைப் பஞ்சு எதிர்க்குமா? மிஞ்சும் உணர்ச்சியை நெஞ்சும் எதிர்க்குமா? எதிர்க்காது எதிர்க்காது என்று அறிவுறுத்தியது அவன் புத்தி. புத்தி மேம்படும் நிலை புருஷனுக்கு ஏது, பெண்ணின் கண் வலையில் அவன் சிக்கும்போது? ஆகவே அதிலிருந்து விடுபட முடியாமலே கிடந்தான் இதயசந்திரன். எந்த நிலைக்கும் ஓர் இடையூறு உண்டு. அந்த இடையூறு அந்த நிலையிலும் வந்தது. திடீரெனப் பலமாக எழுந்த காற்று அந்த அறைக்கதவைப் படேரெனத் திறந்து பக்கப் பலகையில் மோத வைத்துப் பேரொலியைக் கிளப்பவே உணர்ச்சிகளை உதறிக் கொண்டு சரேலென எழுந்தான் இதயசந்திரன்.

அவன் எழுந்த வேகத்தில் அவன் கழுத்தைச் சுற்றிய, அவள் கை படுவேகத்தில் பிரிந்தது. அதனால் ஏற்பட்ட வலியால், “ஓ.ஓ” என்று கூவினாள் காதரைன்.

அவள் கூவுவதை அவன் காதில் வாங்காமல் கதவை நோக்கி நடந்து வெளியே சென்றுவிட்டான். தளத்தில் வேகமாக நடந்து அந்த அறைக்கு நேர் எதிரேயிருந்த முனைக்கு நடந்தான் ஓடினான் என்று சொல்ல முடியாத நிலையில் சென்று கடலைப் பார்த்துக்கொண்டு நின்றான். அரபிக்கடல் எங்கும் கறுத்துக் கிடந்தது. வானத் தாரைகள் அழகாக மின்னிக் கொண்டிருந்தன. பெருங்காற்று பெரிய அலைகளைக் கிளப்பி அலைகளையும் தொட்டு அவனை யும் தொட்டது. “அப்பாடா” என்று ஏதோ ஆபத்தி லிருந்து விடுபட்டவன் போல் ஆசுவாசப் பெருமூச்சு விட்டான். அறையிலிருந்து இயற்கை அழுத்திய அழுத்தத் தையும் வெளியிலிருந்த பரந்த இயற்கை அகற்றிவிட்ட படியால் இரு கைகளையும் பக்கவாட்டில் நீட்டி மடக்கி உதறிக்கொண்டான் தமிழன். அந்த உதறலால் காதரைனை உதறிவிட்டதாக நினைத்ததால் ஏமாந்தே போனான்.

காதரைனின் அழகிய முகம் அவன் சித்தத்தைவிட்டு அகலவில்லை. மீண்டும் மீண்டும் பானுதேவி, மஞ்சு இருவர் முகங்களோடு அவள் முகமும் எழுந்து நின்றது. பானுதேவி யின் சீரிய அரசியல் முகத்தோடு, மஞ்சுவின் மந்தகாச மாலுமி முகத்தோடு, கணவனை இழந்த துயரம் சொட்டும் அந்தக் காரிகை முகமும் எழுந்து நின்றது. ‘இவர்களில் யார் என் மனதைக் கொள்ளை கொண்டது?’ என்று தன்னைத்தானே திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டான் இதயசந்திரன். ஆனால் அதற்கு விடை கண்டானில்லை. இத்தனைக்கும் காரணம் கனோஜி ஆங்கரேதானென்று அவரைக் கடிந்து கொண்டான். ‘ஆங்கரே மட்டும் பரசுராமபுரம் வராதிருந்தால் பானுதேவியோடு நான் அங்கிருந்து கொண்டே மகாராஷ்டிர வாரிசைத் தேடியிருப்பேன். ஆங்கரே வந்ததால் அவரைக் காட்டிக் கொடுக்க என்னை அனுப்பினாள் பானுதேவி. அதற்கு இஷ்டமில்லாததால் நான் ஸாத் ஸித்தியை எதிர்த்தேன்.. எதிர்த்ததால் அவன் வீரர்களிடம் சண்டையிட்டு ஓட வேண்டியதாயிற்று. ஓடியதால் மஞ்சுவைச் சந்தித்தேன். மஞ்சுவைச் சந்தித்ததால் மாலுமியானேன். பிறகு உ.பதளபதியுமானேன். மஞ்சுவை மணமுடித்திருந்தால் இந்த வெள்ளைக்காரியிடம் அகப்பட்டுக்கொண்டிருக்க மாட்டேன். அதுவும் தனியாக’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டான் தமிழன். அத்தனைக்கும் கனோஜிதான் காரணமென்று முடிவுகட்டி அவரை வெறுத்தான். ‘ஆனால், அவர் நிலைமட்டுமென்ன வாழ்ந்தது? அவர் மனைவியே அவருக்கு எதிரி. பானுதேவிக்குக் கடிதம் கொடுத்திருக்கிறாள்’ என்று உற்சாகப்பட்டுக் கச்சைக்குள் கைவிட்டான். ஒரு வினாடி அசந்துபோனான். அடுத்த வினாடி காதரைன் அறையை நாடி ஓடினான் வேகமாக.

அறைக்கதவு திறந்திருந்தது. அப்பொழுதும் காதரைன் பழையபடி பஞ்சணையில் மல்லாந்து படுத்துக் கிடந்தாள். அவள் கௌனும் படுக்கை விரிப்பும், குழல்களும் அப்பொழுதும் கலைந்து கிடந்தன. வேகமாக அறைக்குள் நுழைந்த தளபதியைப் புன்முறுவலுடன் நோக்கி, ”வாருங்கள் தளபதி!” என்றழைத்தாள்.

“நான் உன்னுடன் விளையாட வரவில்லை” என்று சுட்டிக் காட்டினான் தமிழன்.

“யார் அப்படிச் சொன்னது?” என்று நகைத்தாள் காதரைன்.

“சொல்ல வேண்டியதில்லை. செயலிலிருந்தே புரிந்து கொள்ளும் சக்தி எனக்குண்டு” என்று சினத்துடன் கூறிய இதயசந்திரன் பஞ்சணையை அணுகி அவளைப் புரட்டிப் பஞ்சணை விரிப்பை அலட்டி அலட்டிப் பார்த்தான்.

“என்ன பார்க்கிறீர்கள்?” என்று கேட்டாள் காதரைனும் படுக்கையில் புரண்டு கட்டிலின் ஓரத்தில் குனிந்து.

“ஒரு கடிதம்.” இதயசந்திரன் பதிலில் அவசரமிருந்தது. ஆத்திரமுமிருந்தது.

“எதையும் பார்க்கிற இடத்தில் பார்க்க வேண்டும் தளபதி” என்றாள் காதரைன்.

“எங்கு பார்க்கச் சொல்கிறாய்?” என்று கேட்டான் இதயசந்திரன் கட்டிலுக்கு அடியிலிருந்து நிமிர்ந்து.

“இங்கு” என்று தனது தலையணையைச் சுட்டிக் காட்டித் தலையையும் தூக்கினாள் காதரைன்.

தலையணைக்கடியிலிருந்த கடிதத்தை எடுத்துக் கொண்ட இதயசந்திரன் அதன் முத்திரைகளை ஒருமுறைக் கிருமுறை பார்த்துக் கச்சையில் செருகிக் கொண்டான். “நன்றி” என்றும் அவளை நோக்கிக் கூறினான்.

“எதற்கு நன்றி? முத்திரைகளை உடைக்காததற்கா?” என்று வினவினாள் காதரைன் குறும்பாக.

“ஆம்.”

“வேண்டாம். நன்றியைத் திரும்ப எடுத்துக் கொள்ளுங்கள்.”

“ஏன்?”

“விலாசத்தைப் படித்துவிட்டேன்.”

“ஏன் படித்தாய்?”

“கண்ணிருந்ததால்.”

“கண்ணில் காண்பதையெல்லாம் பார்த்துத்தான் ஆக வேண்டுமா?”

“கண்ணின் வேலை அது. ஆனால் நான் பார்த்ததைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்.”

இதைக் கேட்ட இதயசந்திரன் அவளை வியப்புடன் நோக்கினான். பரம ரகசியமாக இருக்கவேண்டிய விலாசத்தைப் பார்த்துவிட்டு அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்று கூறிய காதரனைப்பற்றி என்ன நினைப்பதென்று அவனுக்குப் புரியவில்லை. “நீ பார்த்ததில் என்ன விசேஷம்?” என்று வினவினான் அவன்.

“உங்களுக்கு லாபமுண்டு” என்றாள் காதரைன். “என்ன லாபம்?”

“உங்கள் காதலி தற்சமயம் தங்கியிருக்கும் விலாசம் எனக்குத் தெரியும்!”

“என் காதலியா?”

“ஆம். பானுதேவி, ஷாஹுவின் மருமகள்.”

“அவள் என் காதலியென்று யார் சொன்னது உனக்கு?”

“உபதளபதி.”

”என்ன!”

“ஆம். உங்கள் இரண்டாவது காதலி” என்றாள் காதரைன்.

“என் காதல் கதையில் உனக்கு ரொம்ப அக்கறை போலிருக்கிறது?” என்று இகழ்ச்சியுடன் வினவினான் இதயசந்திரன்.

“ஆம்” என்று திட்டமாகக் கூறினாள் அவள்.

“என்ன அக்கறை உனக்கு?” என்று கேட்டான் சினத்துடன் தளபதி .

“இருக்கவேண்டிய அக்கறை’ என்று குறிப்பிட்டாள் காதரைன்.

இதயசந்திரன் கோபம் எல்லை கடந்தது. “என்னைப் பற்றி அக்கறை காட்ட, என் காதல் விவகாரங்களை அலச நீ யார்?’ என்று சீறினான் தமிழன்.

அவள் சர்வ சாதாரணமாகப் பதில் சொன்னாள். “உங்கள் மூன்றாவது காதலி” என்ற சொற்கள் புன்னகை பூத்த உதடுகளிலிருந்து மிக இன்பமாக உதிர்ந்தன.

Previous articleJala Deepam Part 2 Ch13 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 2 Ch15 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here