Home Historical Novel Jala Deepam Part 2 Ch15 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 2 Ch15 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

59
0
Jala Deepam Ch15 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 2 Ch15 | Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 2 Ch15 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் –15 பருவத்தின் கூச்சல்

Jala Deepam Part 2 Ch15 | Jala Deepam | TamilNovel.in

அவள் உரைத்த சொற்களால் உணர்ச்சிகள் உறைய அசைவற்றுப் பல விநாடிகள் நின்றுவிட்டான் இதய சந்திரன். கல்லாய்ச் சமைந்துவிட்ட அந்தக் கப்பல் தலைவனை நோக்கி, களுக்கென்று ஒருமுறை நகைக்கவும் செய்தாள் அந்த அல்லி மலர். அவள் நகைப்பு அவனுக்கு நாராசமாயிருந்ததால் அவன் ஒருமுறை முகத்தைச் சுளித்தான். ஆனால் நகைத்தது அவள் மட்டுமல்லவே! பேரிரைச்சலுடன் எழுந்த அலைகள் ஓவென்று நகைத்தன. கதவின் மூலம் ஊடுருவி வந்த ஊதல் காற்றும் ஊவென்று ஊதிப் பரிகசித்தது அவனை. அறை விளக்குகூடச் சுடர் முகத்தைக் காற்றில் குலுக்கி நகைத்தது. உலகமே தன்னைப் பார்த்து நகைப்பதுபோன்ற நினைப்பால் பிரமை பிடித்து நின்ற இதயசந்திரன் ஆத்திரத்திற்கு இலக்காகித் திடீரெனக் கூவினான்: “உனக்கென்ன பைத்தியமா?” என்று.

அந்தக் கூச்சல் அவள் மந்தகாசத்தை அதிகமாக முகத்தில் படரவிட்டன. அவள் கண்கள் சிரித்தன அவனை உற்று நோக்கி. உதடுகள் உரைத்தன, “யாருக்கும் பைத்தியமில்லை ?” என்று .

இதயசந்திரன் குனிந்து கட்டிலின் பக்கத்தை இரு கைகளாலும் பிடித்துக்கொண்டு சுட்டுவிடுபவன் போல் அவளைப் பார்த்தான். “உன்னைத் தவிர வேறு யாருக்கும் பைத்தியமில்லை” என்று சீறினான்.

“தவறு காதலரே தவறு” என்றாள் காதரைன் சிரித்து.

“என்னை அப்படி அழைக்காதே இன்னொரு முறை” என்று சுடச்சுடச் சொன்னான் இதயசந்திரன்.

“எப்படி?”

“இப்பொழுது அழைத்தாயே அப்படி.”

“எப்படி அழைத்தேன்?”

“அதுதான்…. காதலரே…” என்று அந்த வார்த்தை யைச் சொல்லமுடியாமல் தத்தளித்தான் தமிழக வீரன்.

காதரைனின் நீலவிழிகள் அவனை மீண்டும் நிமிர்ந்து நோக்கின. “ஒரு சொல்லைச் சொல்ல இத்தனை பயமா?” என்று வினவவும் செய்தாள் விஷமப் புன்முறுவல் காட்டி.

“பயமொன்றுமில்லை” என்ற இதயசந்திரன் குரலில் தைரியமில்லை, வெறும் வியப்பு இருந்தது.

“பயமிருக்கிறது. அதற்குக் காரணமிருக்கிறது” என்றாள் அவள்.

“என்ன காரணம்?”

“நான் உங்களைக் காதலிக்கும் அளவுக்கு நீங்கள் என்னைக் காதலிக்கிறீர்கள்.”

“இல்லை, இல்லை, பொய்.”

“மனத்தைத் தொட்டுப் பாருங்கள். காதல் பலவித பயங்களை உற்பத்தி செய்கிறது. பல பொய்களைச் சிருஷ்டிக்கிறது. ஓரளவு ஆண்களை உளறவும் வைக்கிறது” என்ற காதரைன் மேலும் சொன்னாள். “தாங்கள் என்னைக் காதலிப்பதில் தவறில்லை. காதலிப்பது இயற்கை. அது இல்லையென்றால் தான் வியப்படைவேன். இயற்கைக்கு விரோதமானவர் நீங்கள் என்று நினைப்பேன். இது ஒருவித பைத்தியம். ஆனால் இன்பமான பைத்தியம்.”

ஜலதீபம் “பைத்தியமென்பது புரிகிறது” என்றான் இதய சந்திரன் அவளைக் குத்திக் காட்டும் பாவனையில்.

“மெள்ள ஒரு விஷயம் ஒப்புக் கொண்டீர்களா? இன்னொரு விஷயத்தையும் கவனியுங்கள். பைத்தியம் நாமிருவர் மட்டுமல்ல. அந்த மஞ்சு, அந்தக் கொள்ளைக்கார கனோஜி, எல்லோருமே பைத்தியங்கள்” என்றாள்.

இதயசந்திரன் அவளைக் கூர்ந்து நோக்கினான். “உலகத்தில் உன்னைத் தவிர எல்லோருமே பைத்தியக்காரர்கள் போலிருக்கிறது?’ என்று வினவினான் எரிச்சல். குறைந்த, குழப்பம் மிகுந்த குரலில்.

அவள் தனது விழிகளை அவனது விழிகளுடன் கலக்க விட்டாள். பிறகு மெல்லச் சொன்னாள்: “தளபதி! நான் மட்டும் மஞ்சுவாயிருந்து என்னைப் போன்ற ஒரு பெண் உங்களுடன் தனித்துக் கப்பலில் செல்வதானால் அதை. நான் ஒருநாளும் ஒப்பமாட்டேன். நிலத்தில், சமுதாயத்தின் பல கட்டுப்பாடுகளுக்கிடையில், ஏராளமான மனிதர் களுக்கிடையிலேயே ஆணையும் பெண்ணையும் நெருங்க விடாதிருப்பது கஷ்டமாயிருக்கிறது. சில மாலுமிகளுள்ள கப்பலில் இஷ்டப்படி எதையும் செய்ய அதிகாரம் படைத்த தலைவனுடன் வயதுப் பெண் ஒருத்தியைத் துணிந்து அனுப்பலாமா? அதற்கு ஒப்புக்கொண்ட மஞ்சு பைத்தியமல்லவா? தன் மகளின் காதலன் கையில் இன்னொரு பெண்ணைத் தனித்து அழைத்துச் செல்ல உத்தரவிட்ட ஆங்கரேயைப் பைத்தியமென்று சொல்ல லாம். இல்லை போக்கிரியென்று சொல்லலாம். எதைச் சொல்ல விரும்புகிறீர்கள்?”

இதயசந்திரனுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. நிற்க முடியாமல் அவன் கட்டிலின் முகப்பில் உட்கார்ந்தான். படுத்திருந்த அந்தப் பைங்கிளி சற்றே நகர்த்து இடம்விட்டு, ”நன்றாக நகர்ந்து உட்கார்ந்து கொள்ளுங்கள்” என்று கூறவும் செய்தாள்.

இதயசந்திரன் ஏதோ மந்திரத்தால் கட்டுண்டவனைப் போல நகர்ந்து உட்கார்ந்து கொண்டான். அவள் வீசிய மோகனாஸ்திரங்கள் அவனைச் சுற்றிச் சுற்றி வந்தன. அவன் எண்ணங்களைக் குழப்பின. அவனை ஈர்த்தன அவள் பக்கம். இந்த எண்ணங்களுடன் உள்ளூர ஓடிக் கொண்டிருந்த நல்லுணர்ச்சியும் போரிட்டது. ஒரு கையை மடியில் போட்டுக்கொண்டு ஒரு கையைப் பஞ்சணையில் ஊன்றி அவன் உட்கார்ந்திருந்ததால் அவன் கையை நாடிய அவள் கை அவன் கைமீது பதிந்தது. அவள் உடலுக்கு முதுகைக் காட்டிக்கொண்டு கதவுக்கு வெளியே நோக்கிக்கொண்டிருந்த அவன், “இது முறையல்ல” என்று மெல்லச் சொன்னான்.

“எது?” என்று மெல்ல அவளும் வினவினாள்.
“நாமிப்படி பழகுவது.”

“ஏன்?”

“நீ விதவை.”

“ஆம்.”

”விதவையாகி முழுதாக ஒரு மாதங்கூட ஆகவில்ல.”

“ஆம்.”

“அதற்குள்… இது…” என்று குழறினான் இதய சந்திரன்.

அவள் “வீரரே’ என்று அழைத்தாள்.

   “சொல்."

    “உணர்ச்சிகளுக்கு ஒரு சுபாவம் உண்டு.''

    "என்ன அது?"

“நமது சுபாவத்தை அழித்துவிடுவது.”

”அழிக்க முடியுமா?”

“முடியும். சுபாவத்தை அழிக்க முடியும், காலத்தை மறக்க முடியும், விளைவுகளுக்கு நமது கண்களை மூடிவிட முடியும்.”

“அப்படியா!”

“ஆம். காதலுக்குக் காலமில்லை. புது விதவையா பழம் விதவையா என்ற கேள்வியில்லை. கேள்வியெல்லாம் பருவம் சரியானதுதானா என்பதுதான்” என்று தர்க்க ரீதியாகப் பேசினாள் காதரைன்.

இதயசந்திரன் அவள் தர்க்கத்தை நினைத்து வியந்தான். மனிதன் எந்த அநியாயத்தையும் தர்க்க ரீதியில் நியாயம்போல் காட்ட வல்லவன் என்பதை நினைத்ததால் பிரமிக்கவும் செய்தான். “அப்படியானால் மிஸ்டர் சௌன்…” என்று அவளது இறந்த கணவனைப் பற்றிப் பேச்செடுத்துத் திரும்பி அவளைத் தைரியத்துடன் நோக்கினான்.

காதரைன் முகத்தில் எந்த மாறுதலுமில்லை . “அவர் அழிக்கப்பட்டார்” என்ற குரலில் மட்டும் சிறிது வேதனை தெரிந்தது.

அதை அவன் கவனித்ததால் சொன்னான், “போரில் அழிக்கப்பட்டார்!” என்று.

காதரைன் அவன் கை மீதிருந்த தனது கையை நன்றாக அழுத்தினாள். “நான் இப்பொழுது அனாதையென்பது புரிகிறதா உங்களுக்கு” என்றும் மெல்லக் கேட்டாள்.

அனுதாபம் பூர்ணமாக ஆட்கொண்டது இதயச்சந்திரன் இதயத்தை. ”வருந்தாதே காதரைன். உனக்கு மீண்டும் நல்ல புருஷன் கிடைப்பான். உங்கள் ஜாதியில் தான் பெண்கள் மறு விவாகம் புரியலாமே?” என்று கூறிய அவன் தனது கையை அவள் நெற்றியில் ஆறுதலாக வைத்தான்.
அவன் பக்கவாட்டிலிருந்த தனது இரு கைகளையும் எடுத்த காதரைன் அவன் கையை இரு கைகளாலும் சேர்த்துப் பிடித்து நெற்றியிலிருந்து இழுத்துக் கன்னத்தில் அழுத்திக்கொண்டாள். “இன்னொரு புருஷன் எனக்குக் கிடைப்பானென்கிறீர்களா?” என்று வினவினாள் உதடுகளை வெகு அழகாக அசைத்து.

“நிச்சயமாகக் கிடைப்பான்’ என்றான் இதயசந்திரன் அவள் துயரத்தை உடைக்க.

“நிச்சயமாகவா?”

“ஆம்.”

”அவன் வீரனாயிருப்பானா?”

”இருப்பான்.”

“பெரும் கொள்கைகளுக்குப் போராடுவானா?”

“போராடுவான். ஏன் இதையெல்லாம் கேட்கிறாய்?”

காதரைனின் நீலக்கண்கள் அவன் கண்களோடு கலந்தன, நிலைத்தன. செவ்விய உதடுகள் நீர் சொட்டும் கெம்பு போல் அசைந்தன, வேட்கையுடன் கூறவும் செய்தன, “அப்படியானால் கிடைத்துவிட்டான்” என்று. உதடுகள் இப்படிச் சொல்ல அவள் பட்டுகைகள் கன்னத்தில் அழுத்தியிருந்த அவன் கையை மெல்ல இழுத்துக் கழுத்துக்குக் கீழே இருத்திக்கொண்டன.

உணர்ச்சிகள் பயங்கரமாக அசைவதை உணர்ந்து கொண்டான் இதயசந்திரன். தவிர தனது சக்தி மெல்ல மெல்ல உணர்ச்சிகள் பக்கம் பாய்வதையும் புரிந்து கொண்டான். கழுத்துக்குக் கீழே இருந்த தனது கை மூலம் ஏதேதோ அலைகள் மின்சாரம் போல் உடலில் பரவிச் செல்வதை அறிந்தான். இதனால் ஏற்பட்ட குழப்பத்துடன், “கிடைத்துவிட்டானா!” என்றான்.

“கிடைத்துவிட்டான், அவன் கை இதோ” என்று கையை அழுத்தினாள் அவள்.

“நானா?”

“வேறு யார்?”

“நான் எப்படி?”

“இதற்கெல்லாம் காரணம் கிடையாதென்று முன்னமே சொன்னேனே?”

“சரி சரி.”

“இதோ பாருங்கள் என்னை.”

“ஊஹூம்.”

“ஏன்?’
“பார்க்கச் சக்தியில்லை எனக்கு” என்று கூறித் திணறினான் தமிழன்.

அவன் கையை விட்ட அவள் கைகள் அவன் முகத்தை மீண்டும் தன்னை நோக்கி நன்றாகத் திருப்பின. “இப்படிப் பார்” என்று மரியாதையைக் கைவிட்டு அழைத்தன அவள் உதடுகள்.

இதயசந்திரன் கண்கள் அவளை வெறித்து நோக்கின. அவள் குரலில் ஏதோ பெரும் சக்தியிருப்பதாகத் தோன்றியது அவனுக்கு. குரலை வெளிக்கொணர்ந்த உதடுகளின் அமுதச் சிவப்பு அவனை எங்கோ அழைத்துச் சென்றது. “வேண்டாம்’ என்றான் அவன் மெதுவாக.

“ஏன் வேண்டாம்? என்ன பயம் உனக்கு? கேட் என்ன கசக்கிறாளா உனக்கு?” என்று தழுதழுத்த அவள் குரல் அவன் காதில் சொர்க்க அலைபோல் நுழைந்தது.

   "கேட், கேட்டீ, வேண்டாம். இது சரியல்ல...'' என்றான் அவன்.

“இது தான் சரி. அந்த இரண்டு பேரைப் போல் என்னை நழுவவிட நான் பைத்தியமா?” என்று அவள் இதழ்கள் மெல்லச் சொற்களை வெளியிட்டன. அவள் கையொன்று முகத்திலிருந்து இறங்கியது.

இன்னொரு கை அவன் கழுத்தைச் சுற்றி இழுத்தது.

அவள் முகத்திடமிருந்து தப்ப தன் முகத்தை அவள் பக்கத்தில் தலையணையில் புதைத்தான். அப்படிப் புதைத்ததால் வளைந்த அவன் உடல் அவள் உடல்மீது சிறிதும் படாமலிருந்தாலும் அதன் வாளிப்பை அவளால் பார்க்க முடிந்தது. அதனால் காமம் தலைக்கேறிய அவள் பெருமூச்சு விட்டாள். முகத்தைத் திருப்பி அவன் காதுக் கருகில் “கதவு திறந்திருக்கிறது” என்றாள் மெதுவாக.

இதயசந்திரன் வெகு வேகமாக நடந்து சென்று கதவைச் சாத்தித் தாழிட்டுத் திரும்பினான் கட்டிலுக்கு. திரும்பியவன் உட்காரவில்லை அதில். வெள்ளைக்காரியை உற்றுப் பார்த்துக் கொண்டே நீண்ட நேரம் நின்றான். பிறகு, “இயற்கை உன்னை ஏன் இத்தனை அழகாகப் படைத்திருக்கிறது?” என்று கேட்டான் முரட்டுத்தனமாக.

“உனக்காகத்தான்.”

“எனக்காகவா?”

“ஆம்.”

“எப்படித் தெரியும் உனக்கு?”

“இல்லையேல் முதலிருவரை நான் இழக்க மூன்றாம் முறையாக உன்னிடம் தள்ளுவானேன் என்னை?”

“வேதாந்தம் பேசுகிறாயா?”

“ஏன் பேசக் கூடாது?”

“நமது நிலைக்கும் வேதாந்தத்துக்கும் என்ன சம்பந்தம்?”
“வேதாந்தம் சிருஷ்டி தத்துவம்”

“அதனால்?”

“காதலும் சிருஷ்டியைப் பற்றியது. ஆகவே அதுவும் ஒரு வேதாந்தம்தான்.”

இதயசந்திரன் அவள் பக்கத்தில் மீண்டும் உட்கார்ந்து அவள் உடல் குறுக்கே கையைப் போட்டுக் கொண்டான். “சென்னையில் ஒரு வெள்ளைக்காரர் எனக்குச் சொல்லியிருக்கிறார்…” என்று கூறினான்.

“என்ன சொல்லியிருக்கிறார்?”

“பிசாசும் வேதாந்தம் பேச முடியுமென்று.”

“நான் பிசாசு என்கிறாயா?”

“ஏதோ மோகினிப் பிசாசு என்று ஒன்று உண்டாம். அது அழகாயிருக்குமாமே. நான் பார்த்ததில்லை…இல்லை இல்லை… இப்பொழுது தான் பார்க்கிறேன்.”

அவள் கலகலவென நகைத்தாள். திடீரென வளைந்த அவள் தன்னிடம் அவனை இழுத்துக் கொண்டாள். “இதயசந்திரா! உனக்கு யார் இந்தப் பெயரை வைத்தார் கள்? பெண்களின் இதயங்களுக்குள் உன் நிலவு வெகு விரைவில் பாய்ந்து விடுகிறதே…” என்ற சொற்களைக் காதுக்கருகில் கூறினாள்.

அவள் சித்தத்தில் உணர்ச்சிகள் பேரிரைச்சலாக இரைந்தன. வெளியே அலைகள் இரைந்தன. பெருங்காற்று கூச்சலிட்டது. “அப்பா! என்ன இரைச்சல்! என்ன கூவல்!” என்று அவள் பற்களில் அழுந்திய உதடுகளிலிருந்து சொற்கள் வெளிவந்தன. அவள் கைகள் நன்றாக வளைத்தன அவனை. உதடுகள் காதுக்கருகில் புதைந்தன. “கூவுவது காற்று மட்டுமல்ல வேறு கூச்சலும் கேட்கிறது” என்றாள் மிக இரகசியமாக.

”என்ன அது?’ என்று அவனும் ரகசியமாகக் கேட்டான்.

“பருவத்தின் கூச்சல்” என்று அவள் உதடுகள் முணு முணுத்தன.

Previous articleJala Deepam Part 2 Ch14 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 2 Ch16 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here