Home Historical Novel Jala Deepam Part 2 Ch18 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 2 Ch18 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

67
0
Jala Deepam Ch18 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 2 Ch18 | Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 2 Ch18 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் –18 காதலும் மோதலும்

Jala Deepam Part 2 Ch18 | Jala Deepam | TamilNovel.in

உடைந்து தொங்கிய பூட்டில் சாவியைப் பொருத்தி விட்டு உள்ளே நேர்ந்துவிட்ட விபரீதத்தை எண்ணிப் பார்க்கவும் விரும்பாதவனாய், உடைந்த உள்ளத்துடன் அங்கிருந்து அகன்றுவிட்ட ஹர்கோவிந்தின் நிலையிலேயே இருந்த இப்ரஹீமும், பர்னாண்டோவும் அவனுடன் செல்லாமல் அந்த அறை முன்பாகவே சில விநாடிகள் நின்றனர். பிறகு தளத்தில் தங்கள் அலுவல்களைப் பார்க்கச் சென்றனர். அப்படிப் போகும்போது இப்ரஹீம், “சுக்கானை வடமேற்கு நோக்கி நன்றாகத் திருப்பி விடுகிறேன். அப்பொழுது தான் ஜல தீபம் ஜன்ஜீராவை விட்டு நன்கு விலகிச் செல்லும்” என்று கூறிக்கொண்டே சென்றான். ஜன்ஜீராவின் பெயரைக் கேட்டதுமே பர்னாண்டோ, “யார் உத்தரவின் மேல் சுக்கானைத் திருப்புகிறாய்?” என்று வினவினான்.

“என் உத்தரவின் மேல்” என்றான் இப்ரஹீம் வெறுப்புடன்.

“நீ என்ன கப்பல் தலைவனா உத்தரவிட?” என்று சீறினான் பர்னாண்டோ.

“இப்பொழுது நாம் எல்லோருமே தலைவர்கள். சுக்கானுக்கு நான் தலைவன். பீரங்கிகளுக்கு நீ தலைவன். துடுப்புக்களுக்கு ஹர்கோவிந்த் தலைவன். யார் யார் இந்தக் கப்பலில் என்ன வேலை செய்கிறார்களோ அந்தந்த வேலைக்கு அவர்கள் தலைவர்கள்” என்று விளக்கினான் இப்ரஹீம் எரிச்சலுடன்.

“நீ இப்பொழுது வடமேற்கில் ஜல தீபம் செல்லும்படி. சுக்கானைத் திருப்பப் போகிறாய்?”

“ஆம்.”

“அப்படியும் ஸித்தி பார்த்துவிட்டால்?”

“நீ பீரங்கியால் சுடு.”

“நான் பீரங்கியால் சுட அது போதுமா?”

“போதாது. மற்ற பீரங்கிகளை இயக்க மற்றவர்களுக்குக் கட்டளையிடு.”

“அவரவர் பீரங்கிகளுக்கு அவரவர்கள் தலைவர்களாகி விட்டால்?”

“சுட்டால் சுடட்டும். சுடாமற் போனால் போகட்டும்.”

இப்ரஹீம் இப்படிச் சொல்லிவிட்டுத் திசை திருப்பு வதற்கான முயற்சிகளைச் செய்யலானான். அதே சமயத்தில் ஜன்ஜீராவின் முன்புற மலைப்பகுதி லேசாகக் கண்ணுக்குத் தெரிந்தது. அந்த மலைமீது அணையாமல் எரிந்து கொண்டிருந்த ஒரே ஒரு சிவப்பு விளக்கு ஜலதீபத்தைத் தூரத்தில் பார்த்ததுமே தீ விழி விழித்தது. அது மட்டுமல்ல, ஜலதீபத்தின் தளபதி அறைக்குள்ளேயிருந்த அழகி காதரைனும் தீ விழி விழித்துக் கொண் டிருந்தாள். பஞ்சணையில் கிடந்த இதயசந்திரனை எரித்து விடுவது போல் பார்த்து, “நீ ஆண்பிள்ளை தானா?” என்றும் சீறினாள்.

இரவு இரண்டாம் ஜாமத்தைச் சற்றே தாண்டியிருந்த சமயம் அது. அவள் கண்கள் அவள் லேசாகக் குடித்திருந்த தால் சிவந்து கிடந்தன. மேலாடை நழுவிக் கட்டிலில் கிடந்ததால் அதன் முனையில் உட்கார்ந்திருந்த அவளுடைய அழகிய மேனியின் முன்புற பகுதிகள் இழுத்து விடப்பட்டிருந்த அறை விளக்கின் மங்கலான ஒளியிலும் அழகை அள்ளிக் கொட்டின. அவிழ்ந்துவிட்ட பொன்னிறக் குழல்கள் தாறுமாறாகத் தொங்கின. அவள் அழகிய முகத்துக்குக் கோபம் அதிக அழகைக் கொடுத்தது. அவள் கேள்வியிலிருந்த சீற்றங்கூடச் சொற்களை அழகுடன் ஒலிக்கச் செய்தது. அவள் கேள்விக்குப் பதில் சொல்லாமலே கிடந்தான் இதயசந்திரன்.

“தமிழா” என்றாள் காதரைன் கடுமையுடன் மீண்டும். “ஏன் கேட்டி?” என்றான் அவன் செல்லமாக.

அந்தப் பதில் அவளுக்குச் சிறிது ஆறுதலை அளித் திருக்கவேண்டும். “நீ அழைப்பது அழகாயிருக்கிறது” என்றாள் அவள் சீற்றத்தை தணித்துக்கொண்டு.

“வேறு எது அழகாயில்லை?”

“நீ இப்படிக் கட்டிலில் கட்டைமாதிரிப்படுத் திருப்பது.”

“நீதானே படுக்கச் சொன்னாய்?”

“ஆம். சொன்னேன்.”
“சொன்னபடி செய்தேன்.”

“இப்படிப் படுத்துக் கிடக்கவா பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தாய்?”

” அதுவும் ஒரு காரணம்.”

மீண்டும் காதரைன் வதனத்தில் சீற்றம் அதிகமாகச் சுடர்விட்டது. “வேறு காரணமும் இருக்கிறதா?” என்று வினவினாள் அவள் பல்லைக் கடித்துக்கொண்டு.

“இருக்கிறது கேட்டி” என்றான் தளபதி. “என்ன காரணமோ?” என்று அவள் வினவினாள்.

நன்றாகப் படுக்கையில் கால்களை நீட்டி, கைகளையும் பக்கவாட்டில் போட்டுக்கொண்டு சவாசனம் துவங்கும் யோகி போல் அவளை நோக்கிக் கொண்டே கூறினான்.. “ஹர்கோவிந்த், இப்ரஹீம், பர்னாண்டோ மூவரும் உன் கதவைப் பூட்டி என்னை, உள்ளே நுழைய விடாமல் அடித், தார்கள் சென்ற இரண்டு இரவுகளும்” என்று சிறிது

தாமதித்து விட்டு “கேட்டி! எனக்கு ஒரு சுபாவமுண்டு…” என்றும் சொன்னான்.

காதரைன் அவனிடம் நெருங்கி உட்கார்ந்து கொண்டாள். கையொன்றை அவன் மார்மீது போட்டாள். “என்ன சுபாவம்?” என்று வினவினாள் கோபத்தைச் சற்றே மறைத்து.

“என் இஷ்ட விரோதமாக யார் என்னைக் கட்டுப் படுத்த முயன்றாலும் அதற்குப் பணிவதில்லை” என்றான் தளபதி.

“அதனால்?” “இரண்டு நாள் ஆறப்போட்டுப் பூட்டை உடைத் தேன்.”

“இரண்டு நாள் தாமதிக்க வேண்டிய அவசியம்?”

“எப்பொழுதும் முதல் இரண்டு நாள் தான் எந்த அதிகாரமும் மும்முரமாயிருக்கும். மூன்றாவது நாள் அசிரத்தை அதிகமிருக்கும் கண்காணிப்பு அதிகமிருக்காது. ஆகையால் நள்ளிரவு நெருங்கியதும் குறுவாளை எடுத்து வந்து தாழ்ப்பாளைப் பெயர்த்துப் பூட்டையும் உடைத்தேன்.”

இதைக் கேட்ட அவள் மெல்ல அவனை நோக்கிக் குனிந்து, “நன்றே செய்தீர்கள்” என்றாள்.

இதயசந்திரன், குனிந்த அவள் தலையிலிருந்து தொங்கிய குழல்களைக் கண்டான். சிவந்த கண்களைக் கண்டான். வெண்மைக் கழுத்தைக் கண்டான், அந்தக் கழுத்தில் அவள் தடவியிருந்த ரோஜா அத்தரை முகர்ந் தான். இத்தனையும் அனுபவித்தான். பதில் மட்டும் சொல்லவில்லை அவளுக்கு.
அவளே கேட்டாள் : “உங்கள் மீது மாலுமிகள் ஏற்படுத்திய கட்டுப்பாட்டை உதறத்தானே இத்தனையும் செய்தீர்கள்!” என்று.
காதலும் மோதலும் “ஆம்.” மெள்ள அவன் பதில் சொன்னான். அவளைப் பார்த்த கண்கள் மெல்ல மூடிக்கொண்டன.

காதரைன் அவனை நோக்கி நன்றாகக் குனிந்தாள். “நீங்கள் தலைவராகப் பதவி வகிக்கவே பிறந்தவர்கள்” என்று காதுக்கருகில் சொல்லவும் செய்தாள். காதின் நுனியை லேசாக இதழ்களால் தொடவும் தொட்டாள்.

‘’உம்” என்ற ஒலி மட்டும் எழுந்தது தமிழன் இதழ்களிலிருந்து.

“மாலுமிகளின் எண்ணத்திற்கு நேரெதிராக நடப்பது நமது கடமை. அது நமது உரிமை.”

இதற்கு அவன் பதில் சொல்லவில்லை.

காதரைன் அவனிடம் குழைந்தாள். ”தளபதி, உங்களை என்னிடம் அணுகாமல் ஹர்கோவிந்தும் பர்னாண்டோவும் அந்த இப்ரஹீமும் தடுத்தார்களே. அதற்கும் நீங்கள் பதில் சொல்ல வேண்டாமா?’ என்று.

“என்ன பதில் சொல்ல வேண்டும் கேட்டி?” என்று கேட்டான் அவன்.

“பூட்டினார்களில்லையா இதயசந்திரா!” காம வெள்ளத்தில் மிதந்த காதரைன் ஆசையால் அவனிடம் செல்லமாகக் கெஞ்சினாள்.

”ஆமாம் கேட்டி’ என்று முணுமுணுத்தான் அவன்.

”சந்திரா!” என்றாள் அவள் செல்லப் பேச்சை உயர்த்தி மரியாதையைக் கைவிட்டு, அவன் பெயரையும் பாதியாக்கி.
“ஏன் கேட்டி?”

“உன்னை நான் இனிமேல் சந்திரா என்றுதான் அழைப்பேன்.”

“அழையேன்.”

“என்னை அறையில் வைத்துப் பூட்டினான் ஹர்கோவிந்த். நீ பூட்டை உடைத்தாய்.”

“ஆம்.”

“என்னிடம் அணுகக் கூடாதென்றானோ?”

“ஆம்.”

“அதையும் உடைக்க வேண்டியது தானே?”

“இங்கு நான் படுத்திருப்பதற்கு என்ன அர்த்தம்?”

காதரைன் அவன் கழுத்தில் தன் நிலையைப் புதைத்துக் கொண்டாள். “இது போதுமா…” என்ற அவள் உடலில் உணர்ச்சி அலைகள் பாய்ந்து சென்றன.

“ஏன் போதாது? பூட்டு உடைந்து கிடக்கிறது. தாழ்ப் பாள் போடப்பட்டிருக்கிறது. அம்மூவரில் யார் பார்த்தாலும் என்ன நினைப்பார்கள்?’

“அவர்கள் நினைப்பது உண்மையாயிருக்க வேண்டாமா சந்திரா?” என்ற அவள் தன் கையொன்றை அவன் உடலுக்குக் குறுக்கே போட்டாள்.

“கேட்டி! நீ என்னைச் சரியாகப் புரிந்து கொள்ள வில்லை” என்றான் இதயசந்திரன் அவளைத் தடை செய்யாமல். அந்த விபரீத நிலையில் கூட அவன் கைகள் செயலற்றுக் கிடந்தன. “என்ன புரிந்துகொள்ள வேண்டும் சந்திரா?”

“அவர்கள் நினைப்பது எதையும் நான் செய்ய மாட்டேன். கதவைப் பூட்டி என்னைத் தடுக்கப் பார்த்தார்கள். பூட்டை உடைத்தேன். உன்னிடம் தற்சமயம் நான் சரசமாடுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அதற்கு மாறாக நடக்கப் போகிறேன்” என்ற அவன் வாசகத்தைப் பூர்த்தி செய்யவில்லை.

காதரைன் அவன் கழுத்திலிருந்து முகத்தை நிமிர்த்தி னாள். “அப்படியானால் நீ…” என்று விம்மினாள்.

”உன்னை இன்றிரவு தொடமாட்டேன்” என்றான் அவன்.

“எங்கே பார்ப்போம்?” என்றாள் அவள் பதிலுக்கு. அதைச் சொல்லி அவள் என்ன செய்யப் போகிறாள் என்பதை ஊகிக்கு முன்பாகத் திடீரென்று அவன் மீது விழுந்து அவனை இறுக அணைத்தாள்.

அடுத்த வினாடி செயலற்றுக் கிடந்த அவனுடை”| இரு கரங்களும் எழுந்தன. இரும்புப் பிடியாக அவளைப் பிடித்து விலக்கி மீண்டும் கட்டிலின் முனையில் உட்கார வைத்தன. சீறினாள் அவள், “நீ ஆண்பிள்ளை தானா?” என்று .

அதற்கும் அவன் அசையவில்லை. மெல்லப் படுக்கையை விட்டு எழுந்திருந்தான். அவளைத் தூக்கி நிறுத்திப் பளேரென்று கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டு , “இப்பொழுது புரியும் நான் யார் என்று. இன்னொன்றும் உனக்குச் சொல்கிறேன் பொழுது விடிந்ததும். அதுவரை காத்திரு. உன்னை விட கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் இருக்கிறது” என்று கூறிவிட்டுத் தாழ்ப்பாளைத் திறந்து கொண்டு வெளியே சென்றான்.

பஞ்சணையில் விழுந்த அந்த வெள்ளைக் கிளி அதிர்ச்சி நிறைந்த விழிகளை வாயிற்படியின் மீது நிலைக்க விட்டாள். தமிழன் வெளியே சென்று தடாலென்று கதவைச் சாத்தியதும், கன்னத்தை ஒரு கையால் மெள்ளத் தடவிக் கொண்டாள். கண்களில் நீர் வழிந்தது. ஆனால் அந்த நீரின் ஊடே ஆனந்தமும் வழிந்தது. “இவன் நூற்றுக்கு நூறு ஆண்மகன். என்ன உறுதியான கை!” என்று உடம்பெல்லாம் புல்லரிக்கச் சொல்லிக் கொண் டாள். ‘ஒரு பெண் உன்மீது விழுந்து அவள் அழகுகளைப் புதைக்கும் போது கட்டையாகக் கிடக்க உன்னால் எப்படி முடிகிறது தமிழா! நீ என்ன முனிவனா? இல்லை இல்லை பிடிவாதக்காரன். முனிவனாயிருந்தால் முந்திய நாள் என் கைகளில் சிக்கிக் கிடந்தாயே. இப்படி இதுவரை யாரும் என் கன்னத்தில் அறையவில்லை. ஆனால் இந்த அறை எத்தனை அழகாயிருக்கிறது! வேண்டியவர்கள் செய்தால் அடியோ அணைப்போ இரண்டும் இன்பம் தானே’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள் காதரைன்.

அறைக்கு வெளியே சென்ற இதயசந்திரனின் நிலை சொல்லத் தரமில்லாததாயிருந்தது. அதுவரை மிகுந்த சிரமப்பட்டுக் கட்டுப்படுத்திய உணர்ச்சிகள் பெரும் பிரவாகமாகப் புறப்பட்டு அவனை ஓர் உலுக்கு உலுக்கின. அவள் முகத்தை புதைப்பது போலும், மேலே நெகிழ்வது போலும், காதைச் சுவைப்பது போலும் பிரமை அவன் இதயத்தைச் சூழ்ந்து கிடந்தது. வெளியே தளத்தில் நின்றுவிட்ட அந்தச் சமயத்தில் கூட; அரபிக்கடலின் இன்பக் காற்று அவன் குழல்களைப் பிய்த்து உடலையும் தழுவிய அந்தச் சமயத்தில் கூடப் பக்கத்தில் காதரைன் நிற்பது போன்ற பிரமை அவனுக்கு இருந்து கொண்டே! யிருந்தது. ஜன்ஜீரா முகப்பு மலையின் சிகப்பு விளக்கு மட்டும் அவன் கண்களில் படாதிருந்தால் அவன் அந்தக் கட்டழகியைப்பற்றிய எண்ணங்களிலிருந்து விடுபட்டிருக்க மாட்டான்.

ஆனால் காதரைனின் விழிகளைப் போலவே சிவந்து விழித்த அந்த விளக்கையும் பார்த்து ஜல தீபம் போகும் திசையையும் பார்த்தான். பிறகு தனது அறைக்குச் சென்று தூரதிருஷ்டிக் கண்ணாடியை எடுத்து வந்து ஜன் ஜீராவின் துறைமுகப் பிரவேசத் துவாரத்தை நோக்கினான். அதில் இரண்டு படகுகள் அசைந்து கொண்டிருந்தன. ஒன்றில் சிறு விளக்கு மினுக்மினுக்கென்று பளிச்சிட்டுக் கொண் டிருந்தது. அடுத்த விநாடி வெகு வேகமாகத் தளத்தில் ஓடிய தளபதி, “இப்ரஹீம்” என்று கூவினான்.

“என்ன தளபதி?” என்று ஓடி வந்தான் இப்ரஹீம்.

“ஜல தீபத்தின் விளக்குகள் அனைத்தையும் அணைத்துவிடு.’’

“அணைத்து விட்டோமே ஏற்கெனவே” என்றான் இப்ரஹீம்,

“கீழ்த்தளத்திலுள்ள விளக்குகளையும் அணைத்துவிடு. பீரங்கி துவாரங்கள் வழியாகக்கூட விளக்கொளி தெரியக் கூடாது” என்று கூறிவிட்டு அவன் திடுதிடுவென்று காதரைனிருந்த அறையை நோக்கி ஓடி அங்கிருந்த விளக்கையும் ஊதி அணைத்தான். விளக்கு அணைந்தது. அவனைப் பின்புறமிருந்து காதரைனின் கைகளும் அணைத்தன.

“காதலுக்கு நேரமில்லை, இப்பொழுது” என்றான் தளபதி.

“வேறு எதற்கு நேரம்?”

“மோதலுக்கு.”

“காதலிலும் மோதல் உண்டு.”

“நேரமில்லை இப்பொழுது.”

”எப்பொழுது கிடைக்கும் நேரம்?”

“போரில்லாத போழ்து சிறிது காதலுக்கும் ஈயப் படும்” என்று கூறிய இதயசந்திரன் அவள் கைகளையும் பிரித்து விடுவித்துக் கொண்டு தளத்திற்குச் சென்றான். சென்றதும் பர்னாண்டோவை அழைத்து,”பர்னாண்டோ! ஜன்ஜீரா காவலர் நம்மைப் பார்த்துவிட்டார்கள்?” என்று அறிவித்தான். திக்பிரமை பிடித்து நின்றான் பர்னாண்டோ

Previous articleJala Deepam Part 2 Ch17 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 2 Ch19 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here