Home Historical Novel Jala Deepam Part 2 Ch19 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 2 Ch19 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

64
0
Jala Deepam Ch19 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 2 Ch19 | Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 2 Ch19 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் –19 நயவஞ்சகம்

Jala Deepam Part 2 Ch19 | Jala Deepam | TamilNovel.in

திக்பிரமை பிடித்த பர்னாண்டோ கேட்டான் “எப்படித் தெரியும் உங்களுக்கு?” என்று. இதயசந்திரன் பதில் ஏதும் சொல்லாமல் தூரதிருஷ்டிக் கண்ணாடியைக் கண்களில் பொருத்தி ஜன்ஜீரா துறைமுகத் துவாரத்தை நீண்டநேரம் கவனித்தான்.

ஜன்ஜீரா வடமேற்கில் மலையை உடைத்துக் கடல் உட்புகுந்திருந்ததால் வாயைத் திறந்து கொண்டிருந்த அந்தப் பயங்கர நீர்க் கணவாய், வரும் கப்பல்களை விழுங்கக் காத்திருக்கும் எமனுடைய வாயைப் போல் பயங்கரமாகக் காட்சியளித்தது. அதற்கு அப்புறமிருந்த ஜன்ஜீரா தீவுக் கோட்டை தூரதிருஷ்டிக் கண்ணாடிக்குக் கூடத் தெரியவில்லையென்றாலும் அது எங்கிருக்கிறது என்பதை இதயசந்திரன் அறிந்திருந்தான். சென்ற இரண்டரை ஆண்டுகளில் ஜன்ஜீராவின் அந்தக் கடல் மார்க்கத்தில் அவன் பலமுறை சென்றிருக்கிறான். பல முறை அதன் வலுவையும் யாரும் அணுக முடியாத அதன் இயற்கை அமைப்பையும் பலர் சொல்லக் கேட்டிருக்கிறான். கனோஜியே பலமுறை அதைப் பாராட்டிப் பரவசப்பட்டு அவனிடம் பேசியிருக்கிறார். “இப்படி யொரு இடமிருப்பதை நமது பாரதக் கடலோடிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை. எங்கிருந்தோ வந்த அபிஸீனியர் கண்டுபிடித்திருக்கிறார்கள். இல்லையேல் ஸித்திகள் மேலைக்கடலை நானூறு ஆண்டுகளாக ஆள முடியுமா’ என்று பெருமூச்சும் விட்டிருக்கிறார். சிவாஜியால் கூடப் பிடிக்க முடியாத மேலைக் கடலோர ஒரே ஒரு கோட்டை ஜன்ஜீராத் தீவுக் கோட்டை என்பது பரம பிரசித்தமாயிருந்ததை எண்ணிப் பார்த்த இதய சந்திரனும் அன்று பெருமூச்சு விட்டான் தூரதிருஷ்டிக் கண்ணாடி மூலம் அந்த முகத்துவாரத்தைப் பார்த்துக் கொண்டே.

கடற்பாதையில் வந்தால் பம்பாயிலிருந்து முப்பதாவது மைலில் உள்ள ஜன்ஜீராவை, தரைப் பாதையில் அடைய வேண்டுமானால் சுமார் இருபத்தியொரு மலைகளையும் பயங்கரக் காடுகளையும் தாண்டி அடைய வேண்டு மாதலால் நிலப் பகுதியிலிருந்து அதை அடைவதோடு தாண்டுவதோ பிரும்மப் பிரயத்தனமாதலால் நிலத்தின் மூலம் அதை யாரும் தாக்க முடியாதிருந்தது. மேலைக் கரையோரத்தில் இப்பொழுது முருடு என்றழைக்கப்படும் தண்டா ராஜபூர் என்ற சிறு நகரத்திலிருந்து கடலரசன் கரத்தால் நிலம் வெட்டி விடப்பட்டதால் நகர்புறமும் கடல் ஏரி போல சூழ, அந்த ஏரியை முப்புறத்தில் மலைத் தொடர் பாதுகாக்க, மலைகளின் முகப்பு நண்டுவாக்கிளியின் நீள் கரங்களைப் போல் நீண்டு கௌவும் நிலையில் அமைந்திருந்ததால், இரு மலை முகப்புக்களுக்குமிடையில் நுழையும் எந்தக் கப்பலும் அரை வினாடியில் ஸித்திகளால் அழிக்கப்படும் சக்தியைப் பெற்றிருந்தது ஜன்ஜீராத் தீவு.

மலைகளுக்கிடையே ஏரிபோலிருந்த கடல் பகுதிக்கு நடுவில் ஏதோ ஒரு கருமாணிக்கக் கல்லால் செதுக்கப்பட்ட சிறு மேரு போல விளங்கும் ஜன்ஜீரா இன்றுகூடப் பார்ப்பவர் கண்ணைப் பறிக்கிறது. முருடு நகரத்திலிருந்து இறங்கியோடும் மலைச்சரிவில் சென்று, சிறிது சுழன்று பயணம் செய்ததும் தோன்றும் படகுத் துறையிலிருந்து ஜன்ஜீராவைப் பார்த்தால் அழகும் பயங்கரமும் ஒரு தீவில் எப்படி இணைய முடியும் என்பதைப் புரிந்துகொள்ள லாம். கடல் பிராந்தியத்திலிருந்து கண்ணுக்குத் தெரியாத வண்ணம் அமைந்துள்ள ஜன்ஜீராவையும் பார்த்து அதை மறைத்துள்ள மலையையும் பார்த்தால், மலை மறைவில் பதுங்கி இரை மீது பாயத் தயாராயுள்ள புலி போல் அது காட்சியளிப்பது தெரியும். அது அப்படி மறைந்திருந்தாலும் அதன் துறைமுகம் அதன் வடமேற்கில்

வாயைத் திறந்து கடலலைகளை உள்ளே வாங்கி வாங்கி நிரப்பி, கோட்டைக்குக் கடலகழி அமைத்திருப்பதாலும் ஜன்ஜீரா யாரும்’ அணுக முடியாத பயங்கரக் கோட்டையாகவே இருந்து வருகிறது.

சுமார் ஒரு மைல் அகலமுள்ள ஜன்ஜீரா தீவுக் கோட்டையின் திடமதிள்கள் பேரலைகள் தாக்கும் சமயங்களில் கூட அலை வட்டத்திலிருந்து நாற்பது அடிக்கு மேலே தெரிவதாயிருப்பதால் கடல் கொந்தளிப்புக் காலங் களில் தவறி உள்ளே நுழையும் படகுகளும் சிறு கலங்களும் அதன் சுவர்களில் தாக்குண்டு சிதறிப் போய்விடும். அத்தகைய பலத்த சுவர்களிடையில் வீடுகள் அதிக நெருக்கமாகவும் படிப்படியாக உயர்ந்து கொண்டும் நின்றன. இப்படி உயர்ந்த கட்டிடங்களுக்கு அதிகமாக மேலே தெரிவது பலேகில்லா என்ற பெரும் பீரங்கி. இந்த பீரங்கி ஒரு பெண் பிரதிமையின் மீது அமைக்கப்பட்டு நேரே துறைமுகக் கடல் துவாரத்தை நோக்கிக் கொண்டிருக் கிறது. அந்தப் பீரங்கியின் வாயில் விழாமல் அந்தக் கடல் வாயில் யாரும் நுழைய முடியாதென்பது பிரசித்தம்.

இதையெல்லாம் கண்ணாடியில் பார்க்கையில் சிந்தித்த தால் ஜன்ஜீராவின் அழகை நினைத்து மயங்கிய இதயசந்திரன், “என்ன தளபதி! பார்த்துக் கொண்டே யிருக்கிறீர்களே?” என்று பர்னாண்டோ கேட்ட பிறகு தான் சுய நினைவை அடைந்தான். அடைந்த பிறகுகூட அவன் பர்னாண்டோவுக்குப் பதில் சொல்லவில்லை. பர்னாண்டோவிடம் தூரதிருஷ்டிக் கண்ணாடியைக் கொடுத்து, “நீயே பார்” என்று கூறினான்.

பர்னாண்டோ கண்ணாடியை வாங்கிக் கண்களில் பொருத்தி ஜன்ஜீரா துறைமுக வாயிலைக் கவனித்தான். திறந்த அந்த வாயிலில் இரண்டு படகுகள் இருந்தன. ஒன்றில் சிறு விளக்கு மின்னிக் கொண்டிருந்தது. ஆனால் இரு படகுகளும் இருந்த இடத்தில் நின்றிருந்தன. யாரும் அவற்றைத் துடுப்பு கொண்டு துழாவுவதாகவும் தெரிய வில்லை. துறைமுக வாயிலுக்குள் நுழைந்த கடலலைகள் அவற்றை அப்புறம் இப்புறம் அலைக்கழித்தனவேயொழிய வேறு சலனம் அவ்விரண்டுக்கும் இல்லை. இரண்டு படகு களிலுமிருந்த நாலைந்து ஸித்திகள்கூடக் கடற்புறம் பார்க்காமல் கடலுக்கு முதுகு காட்டித் திரும்பி ஜன்ஜீரா கோட்டையைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

இதையெல்லாம் கவனித்த பர்னாண்டோ கூறினான். “தளபதி! நம்மை அந்தப் படகிலுள்ள மாலுமிகள் யாரும் பார்க்கவில்லை” என்று:
“ஆம்” என்றான் தளபதி.

“அப்படியானால் அபாயம் எங்கிருந்து வருகிறது” என்று வினவினான் பர்னாண்டோ.

“பர்னாண்டோ? சரியாகப் பார்” என்றான் தளபதி .

“சரியாகத்தான் பார்க்கிறேன் தளபதி” என்றான் பர்னாண்டோ.

“பர்னாண்டோ, துறைமுகத் துவாரத்திலிருந்து ஜன்ஜீரா கோட்டை தெரியுமா?” என்று வினவினான் தளபதி.

“தெரியாது.”

“ஏன்?”

“தீவு உள்ளடங்கி இருக்கிறது.”

ஆனால் அந்தத் தீவின் தீபங்கள், முக்கியமாக பலே கில்லாவின் மீதுள்ள பெருவிளக்கு இவற்றின் வெளிச்சம் துறைமுகத் துவாரங்களில் விழுந்திருப்பது தெரியுமா?”

“தெரியும். இங்கிருந்து தூரதிருஷ்டிக் கண்ணாடி மூலம் பார்த்தால் கோட்டையின் பக்கவாட்டில் தீபங்களின் ஒளி தெரியும்?”

“தெரிகிறதா?”

“தெரியவில்லை. இல்லை இல்லை. அதோ ஒன்று மட்டும் தெரிகிறது. இல்லை இல்லை. அதுவும் மறைந்து விட்டது” என்ற பர்னாண்டோ கண்களிலிருந்து கண்ணாடியை எடுத்து விட்டுத் தளபதியைப் பார்த்தான்.

இதயசந்திரன் முகம் சுரணையற்றிருந்தது. “பர்னாண்டோ! நான் பார்க்க ஆரம்பித்தபோது வெளிச்சம் நாலைந்து இடங்களில் தெரிந்தது. பிறகு ஒவ்வொன்றாக மறைந்தது. நீ பார்த்தபோது கடைசி வெளிச்சமும் மறைந்துவிட்டது. இதற்கென்ன அர்த்தம்?” என்று வினவினான் தளபதி சுரணையற்ற குரலில்.

“புரியவில்லை தளபதி!” பர்னாண்டோ பிரமை பிடித்த குரலில் கூறினான்.

“கோட்டையின் விளக்குகள் ஒவ்வொன்றாக அணைக்கப்படுகிறதென்று அர்த்தம். ஏன் அணைக்கப்படுகிறது. என்பதை அறியத்தான் துறைமுகப்புப் படகுக் காவலர் கோட்டையைக் கவனிக்கிறார்கள்” என்றான் இதயசந்திரன்.

“நாம் கோட்டையை இங்கிருந்து பார்க்க முடியா தென்றால் கோட்டையிலிருந்து மட்டும் நம்மைப் பார்க்க முடியுமா?” என்று கேட்டான் பர்னாண்டோ .

“கோட்டையிலிருந்து பார்க்க முடியாது…” என்று இழுத்தான் பர்னாண்டோ.

“வேறு எங்கிருந்து பார்க்க முடியும்?” என்று வினவினான் பர்னாண்டோ.

“தண்டாராஜபூரிலிருந்து தண்டாராஜபூர் மலையின் உயரத்திலிருக்கிறது. அங்கிருந்து தூரதிருஷ்டிக் கண்ணாடி யால் ஜல தீபத்தைப் பார்க்கலாம். ஜல தீபத்தை யாரோ அங்கிருந்து பார்த்திருக்கிறார்கள். அங்கிருந்து தீபத்தின் மூலம் ஜன்ஜீராவுக்குச் சைகை செய்திருக்கிறார்கள் ஜன்ஜீரா எச்சரிக்கையடைந்து விளக்குகளை அணைத்துக் கொள்கிறது. இன்னும் சிறிது நேரத்திற்கெல்லாம் நம்மை நோக்கிப் போர்க் கப்பல்கள் வரும்’ என்று விளக்கிய இதயசந்திரன் கீழே ஹர்கோவிந்தையும், இப்ரஹீமையும் அழைத்து வரக் கட்டளையிட்டான். அவர்கள் வந்ததும் தளபதியின் உத்தரவுகள் சரசரவென்று பிறந்தன.

“ஹர்கோவிந்த்! இன்னும் ஒரு நாழிகைக்குள் ஸித்தி களின் போர்க்கப்பல்கள் அதோ அந்தக் கடல் ஏரியிலிருந்து வெளியே வந்து நம்மை எதிர்நோக்கி வரும், அப்படி வரும் போது நாம் அவற்றை எதிர்நோக்கிச் செல்வோம்…” என்ற இதயசந்திரனை இடைமறித்த ஹர்கோவிந்த், “என்ன, எதிர்நோக்கியா?” என்று கேட்டு வாயைப் பிளந்தான் வியப்பால்.

“ஆம். எதிர்நோக்கி” என்றான் தளபதி திட்டமாக.

“அதைவிட நாம் அவர்களிடம் சரணடைந்து விடுவது நல்லதாயிற்றே’. என்றான் ஹர்கோவிந்த், சிறிது வியப்புக் குறைந்து கோபம் துளிர்த்த குரலில்.

அவன் கோபத்தைக் கவனிக்கவே செய்தான் தளபதி. “நீ இந்தப் போரைச் சாமளிப்பதாயிருந்தால் என்ன செய்வாய்?” என்று வினவவும் செய்தான் இகழ்ச்சியுடன்.

“போருக்கு முதலில் இடம் கொடுக்கமாட்டேன்.”

“எப்படி இடம் கொடாதிருப்பாய்? அவர்கள் பீரங்கி மூலம் குண்டுகளை வீசினால்…”

“அந்த நிலை வராது.”

“ஏன்?”

“நான் பாய் விரித்து மேற்கே ஓடுவேன்.”

“உன் வேகம் எவ்வளவு?”

“இப்பொழுது நாழிகைக்குக் கால் காதம். மூன்று பாய்மரங்களையும் அவிழ்த்து விட்டால் அரை காதம் போகலாம்.”

“ஸித்திகளின் கப்பலின் வேகம் தெரியுமா உனக்கு?”

ஹர்கோவிந்த் பதில் கூறவில்லை, மௌம் சாதித்தான். ஜல தீபத்தைவிட ஒன்றரை மடங்கு வேகமுள்ளவை. ஒன்றரை மடங்கு அதிக பீரங்கிகளை உடையவை. நாம் ஓட முற்பட்டால் விடியுமுன்பு ஸித்திகளின் கப்பல்கள் நம்மை வளைத்துவிடும். வளைத்துக் கொண்டால் நாம் அழிவது திண்ணம். நமக்கிருப்பது ஒரு கப்பல். எதிரிகள் பல கப்பல்களைக் கொண்டு வரமுடியும்” என்று சுட்டிக் காட்டினான் தளபதி.

ஹர்கோவிந்த் தாழ்த்திய தலையை நிமிர்த்தவில்லை. அவன் மேற்கொண்டு பேசுவதற்குக்கூட அவகாசம் கொடுக்காமல் கூறினான் இதயசந்திரன்: “ஹர்கோவிந்த்! கீழறைக்குச் செல். மாலுமிகளைக் கொண்டு துடுப்பு களைத் துழாவு மெதுவாக. இப்ரஹீம், சுக்கானைச் சுழற்றி ஜன்ஜீராவை நோக்கி ஜல தீபத்தைத் திருப்பு. பர்னாண்டோ, பாய்களை அவிழ்த்து இறக்கிவிடு. கப்பல் அபாயத்தில் சிக்கியிருப்பதை அறிவிக்கச் சிவப்புக் கொடியொன்றை ஏற்றி விடு கொடிமரத்தின்மீது” என்று உத்தரவுகளைப் பிறப்பித்த இதயசந்திரன், ” யாரும் கப்பலில் பேச வேண்டாம். இப்பொழுது இதோ எரியும் முகப்பு விளக்கு எரியட்டும். வேறு விளக்குகள் தேவை யில்லை. அந்த வெள்ளைக்காரியை என் அறையில் அடைத்துப் பூட்டிவிடு” என்றும் கட்டளையிட்டான்.

அவன் கட்டளைகளை நிறைவேற்ற அவரவர் பறந்தனர். ஜலதீபம் பாய்களை அவிழ்த்துத் தளத்தில் போட்டுக் கொண்டு மெதுவாக நகர்ந்தது ஜன்ஜீராவை நோக்கி. முகத்துவாரத்தில் தெரிந்த சிறு விளக்கு நகர்ந்தது ஜல தீபத்தை நோக்கி. ஜல தீபம் ஜன்ஜீராவை நோக்கி நகர முற்பட்டதும் முகப்பு மலையிலுள்ள சிவப்பு விளக்கு அணைந்தது. திடீரென்று பலே கில்லா பெரிதாகச் சப்தித்தது. இரு போர்க்கலங்கள் தலை காட்டின துறைமுக வாயிலில். இதயசந்திரன் மூச்சைப் பிடித்துக்கொண்டு நின்றான் தளத்தில். அவன் இரு கைகளும் தூரதிருஷ்டிக் கண்ணாடயைக் கண்களில் பொருத்திக் கொண்டிருந்தன. கண்கள் ஜன் ஜீரா துறைமுக வாயிலைத் துருவி ஆராய்ந்தன. போர்க் கலங்கள் மெள்ள மெள்ள முழுப் பார்வைக்கு வந்தன. போர் நிகழக்கூடிய நிலை பயங்கரமாக உருவாகிக் கொண்டிருந்தது. இதயசந்திரன் திடீரென மடியிலிருந்து எதையோ எடுத்தான். வாயில் வைத்து பலங்கொண்ட மட்டும் ஊதினான். அதைக் கேட்ட ஜல தீபத்தின் மாலுமிகள் அனைவரும் உயிர்த் துடிப்படைந்தனர். “இது நயவஞ்சகம்” என்றான் ஹர்கோவிந்த் கீழ்தளத்தில். மேல் தளத்திலிருந்த மாலுமி களுக்கும் அதே நினைப்புத்தான். அதையேதும் லட்சியம் செய்யாத இதயசந்திரன் இன்னொரு முறை பெரிதாக ஊதினான். அந்த ஊதலிலிருந்து கிறீச்சென்ற ஒலி கடலை வெகுவேகமாக ஊடுருவிச் சென்றது. அதன் விளைவும் மெள்ள மெள்ளத் துவங்கலாயிற்று. “நயவஞ்சகத்திற்குப் பரிசு இருக்கத்தான் இருக்கிறது” என்று பர்னாண்டோவும் முணுமுணுத்தான்.

Previous articleJala Deepam Part 2 Ch18 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 2 Ch20 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here