Home Historical Novel Jala Deepam Part 2 Ch2 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 2 Ch2 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

58
0
Jala Deepam Ch2 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 2 Ch2 | Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 2 Ch2 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 2 காத்திருந்தவன் கதி

Jala Deepam Part 2 Ch2 | Jala Deepam | TamilNovel.in

அங்கத்துடன் அங்கம் உராய, பாயின் அடிமரத் தண்டில் அலட்சியமாகச் சாய்ந்து அண்டையில் நெருங்கி அமர்ந்து, அனங்கனின் கணைகளை அள்ளிச் சொரிந்த அந்த அழகியின் உடல் கூறுகளாலும், அழைப்பு விடுத்த சொற்களின் திறத்தாலும், அலைந்த மனத்தினனாகிய இதயசந்திரன் அவள் இடையை அணைத்த அந்த நேரத்தில் உலகத்தையே மறந்து விட்டான். அப்படி மறந்ததன் விளைவாக ஜல தீபத்தில் மாலுமிகள் ஆங்காங்கு அலைந்து விளக்குகளை ஏற்றத் தொடங்கிவிட்டதையோ, தன்னையும் மஞ்சுவையும் நெருங்கா விட்டாலும் தூரத்திலிருந்தே அரைப்பார்வையாகப் பார்த்துக் கொண்டு, சென்றதையோ அவன் உணரவில்லை. தவிர இரண்டரை ஆண்டுகளாக மஞ்சுவும் அவனுக்குப் புரியாத பெரும் புதிராகவே இருந்தாள்.

கடந்த இரண்டரை ஆண்டுகளில் தொடர்ச்சியாக அவளுடன் பழகும் வாய்ப்புக் கிடைத்ததும் அவனுக்கு அவள் எட்டும் கனியாகவும் இருந்தாள், எட்டாக் கனியாக வும் இருந்தாள். இதேபோல் பலமுறை அவனுடன் தனித்து இணைந்து உட்கார்ந்து சரச வார்த்தைகள் பேசியிருக்கிறாள். திடீரென சில நாட்கள் அவனுடன் பேசாமலும் அவனை அருகில் நெருங்கவொட்டாமலும் எட்ட நிற்க வைத்துமிருக்கிறாள். இரண்டொருமுறை கடற்போரில் அவளுக்குக் காயம்பட்டபொழுது அவளைத் தன் தோளின் மேல் தூக்கிப் போட்டுக்கொண்டு போய் சிகிச்சை செய்திருக்கிறான் அவன். சிகிச்சையை முன்னிட்டு மார்புச் சட்டையைக் கிழித்துக் காயம்பட்ட இடத்தில் கட்டும் போட்டிருக்கிறான். இன்னும் சில சமயங்களில் அவளே ஆயாசப்பட்டு அவனை அறைக்கு அழைத்துப்போய், “முழங்கால் பிடித்துக் கொண்டிருக்கிறது, சற்றுப் பாருங்கள்,” என்று கால் சராயை முழங்கால் வரை தூக்கிப் பரீட்சிக்கவும் அனுமதித்திருக்கிறாள். ஆனால் அப்படிச் சலுகை கிடைத்ததே என்று மனத்தை அலைய விட்ட சமயத்தில் அவனைப் புறக்கணித்து வெளியே அனுப்பியும் இருக்கிறாள். அவள் அவனை நோக்கிச் சினந்த சமயங்கள் உண்டு. நெருங்கி வரம்பு மீறாத அணைப்புக்கு இடங்கொடுத்த சமயங்களும் உண்டு. ஆகவே அவள் தனக்கு எட்ட இருக்கிறாளா. கிட்டே இருக்கிறாளா என்பதை இதயசந்திரனால் அந்த இரண்டரை ஆண்டுகளில் புரிந்துகொள்ள முடியவில்லை. இருப்பினும் ஒவ்வொரு முறை அவள் இடம் கொடுத்த போதும் அவன் பலவீனம் அதிகப்படவே செய்தது. மனம் அதிக செயலுக்கு முயலத் தூண்டவே செய்தது.

அந்த இருவர் உறவையும் மாலுமிகளும் கவனிக்கத் தவறவில்லை. இதைப்பற்றித் தலைவியும் உபதளபதியும் இல்லாத சமயங்களில் மாலுமிகள் கேலியாகவும் பேசினார்கள். இதை ஒரு சமயம் துடுப்புத் தள்ளும் ஹர்கோவிந்த் கனோஜி-காதிலும் போட்டான். பதிலுக்குக் கனோஜி இடி இடியென நகைத்தார். “ஏன் நகைக்கிறீர்கள்?’ என்று கேட்டான் ஹர்கோவிந்த்.

“தமிழனை அனுப்பு” என்று பதிலுக்குக் கூறினார் கனோஜி. அதன்படி வந்த இதயசந்திரனை முதுகில் தட்டிக்கொடுத்த கனோஜி, “தமிழா! உ.ன் ஜபம் பலிக்க வில்லைபோலிருக்கிறது” என்று வினவினார்.

“யாரிடம்?” என்று வினவினான் இதயசந்திரன்.

“உன் கப்பல் தலைவியிடம்” என்று கூறிச் சிரித்தார்.

அவர் எதைக் குறிப்பிடுகிறார் என்பது தெரிந்ததால், “நீங்கள் மஞ்சுவைப்பற்றி இப்படிப் பேசுவது தகுதியல்ல” என்று அவன் சினத்துடன் கூறினான்.

“நான் மஞ்சுவைப் பற்றிக் கூறவில்லை தமிழா!”

“பின் யாரைப் பற்றிக் கூறுகிறீர்கள்?”

“உன்னைப் பற்றி. கடலில் ஒரு பெண் தனித்து அகப் பட்டுக் கொள்கிறாள். அப்படியும் உன் கையால் ஆகவில்லை . நானாயிருந்தால்…”

“உங்கள் குணம் எனக்குத் தெரியும்.”

”தெரிந்தும் படிப்பினை உனக்குப் பயனளிக்கவில்லையே!”

“மாதர்கள் மதிக்கத் தக்கவர்கள், தலைவரே.” “ஆம் ஆம். நாம் அவர்களை மதிக்க வேண்டும். அவர்கள் நம்மை வதைக்க வேண்டும். போ தமிழா போ, நீசுத்த துப்புக் கெட்டவன்” என்று கூறி அவனை முதுகில் பேயறையாக அறைந்து நகைத்து அனுப்பினார்.

வளர்ப்புப் பெண்ணைப்பற்றி இப்படி அவர் பேசியது அவனுக்குப் பெரும் விந்தையாயிருந்தது. வெறுப்பாகவும் கூட இருந்தது. அவர் கண்ணியமுள்ளவரா என்பதில் கூடச் சந்தேகம் ஏற்பட்டது அவனுக்கு. ஆனால் அவருடன் சென்று போர் புரிந்த சமயங்களில் அவருடைய திறமையைக் கண்டு அவன் மயங்கினான். கப்பலை எப்படி நடத்தி, எப்படி வளைத்து, எப்படித் தாக்கினால் வெற்றி கிடைக்கும் என்பதைப் பல சமயங்களில் பல கோணங்களில் அவன் கண்டிருந்ததால் அவர் எதைச் சொன்னாலும் மறுக்கும் சக்தியை மற்றவர் போலவே அவனும் இழந்து கிடந்தான். ஆகவே அவர் மஞ்சுவைப்பற்றி அப்படிப் பேசிய போதும் ஏதும் அவன் மறுத்துப் பேசவில்லை. கோபத்தை வெளிக்குக் காட்டாமல் ஜல தீபத்துக்கு வந்து சேர்ந்தான். அப்படிக் கோபாக்கினியுடன் வந்த சமயத்தில் ஜல தீபத்தில் அந்த அக்னியை அணைக்க மஞ்சுவின் குளிர் விழிகள் காத்துக் கொண்டிருந்தன.

தங்களைப்பற்றி கனோஜி ஆங்கரே அறிந்து கொண்டிருக்கிறாரென்று மஞ்சுவுக்கு அவனே எடுத்துச் . சொன்னபோது அவள் நகைக்கவே செய்தாள். “இதில் என்ன வியப்பு?” என்று கப்பலில் தனது பஞ்சணையில் சாய்ந்த வண்ணம் வினவினாள் மஞ்சு.

“நானும் நீயும் பழகுவதை யாரோ சொல்லியிருக்கி றார்கள்” என்று கோபத்துடன் கூறினான் அவன்.

“இருக்கலாம்” என்றாள் அவள் அலட்சியமாக நகைத்து.

“யார் அப்படி நம்மைப் பார்த்திருக்கிறார்கள்?”

அவன் சொற்களில் கோபம் மிதமிஞ்சித் துளிர்த்தது. “எல்லா மாலுமிகளும் பார்த்திருக்கிறார்கள்.”

“எல்லோருமா?”

“ஆம். நீங்கள் பார்க்கிற பார்வையிலிருந்து விவர மறியாத குழந்தை கூடப் புரிந்து கொள்ளும்.”

”அப்படியா!”

“ஆம், பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் அஸ்தமித்து விட்டதாக நினைக்கிறது. உலகம் அஸ்தமிக்கவில்லை. விழித்துக் கொண்டுதான் இருக்கிறது.” இதைச் சொன்ன அவள் பஞ்சணையில் நன்றாகக் கால்களை நீட்டிக் கொண்டாள். அவளை அவன் முறைத்துப் பார்த்துவிட்டு அறையைவிட்டு வெளியேறி விட்டான்.

இப்படிப் பல விஷயங்கள் பலமுறை நடந்தும் அவனுக்கு மட்டும் அவளை நெருங்கப் பூரண தைரியம் வராததாலும், திடீர் திடீரென்று மாறும் அவள் மனப் போக்கை முழுதும் புரிந்துகொள்ள முடியாததாலும் அவன் இரண்டரை ஆண்டுகளைச் சஞ்சலத்திலேயே கழித்தான். சிறந்த மாலுமியென்றும் காஸ்ட்ரோவைப் போல் கடற்போர் புரியும் திறமைசாலியென்றும் பெரும் பெயர் வாங்கியதுகூட அவன் சஞ்சலத்தைப் போக்கவுமில்லை, மனத்திற்குச் சாந்தியை அளிக்கவுமில்லை.

அன்றும் இன்றும் அதே நிலைதான் என்ற நினைப்பில் அவளருகில் அமர்ந்திருந்தான் அவன். அவள் அணுகும் போதெல்லாம் உடலில் அபரிமிதமாக எழுந்த காமத்தின் துடிப்பு அன்றும் அவனை அலைக்கழித்தது. அவள் பசியைப் பற்றிக் குறிப்பிட்டது அவனை எந்த உலகத்துக்கோ இழுத்துச் சென்றது. ‘ஓகோ’வை மறுமுறை திருப்பிச் சொல்லி அவள் சிரித்தது அவன் காதில் இன்ப மணிகள் கலகலவென்று சப்திப்பது போன்ற பிரமையை ஏற்படுத்தியது. அந்த வேளையில் ஒரு முடிவு செய்து கொண்டான். ‘இவளை இன்று லேசில் விடுவதில்லை. ஆங்கரே முன்பு சொல்லிக் கொடுத்த பாடம் இருக்கிறது’ என்று உள்ளே சொல்லிக்கொண்டான். வெளியிலும் கூறினான் சிறிது பலமாக “இருக்கிறது” என்று. அதைச் சொன்ன சமயத்தில் அவள் இடையில் பாய்ந்திருந்த அவன் கை இடையில் இறுகவும் செய்தது.

சூசகங்களை அவள் கவனித்தாள். “என்ன இருக் கிறது?’ என்றும் வினவினாள் மஞ்சு.

“பாடம் இருக்கிறது மஞ்சு” என்றான் அவன்.

“என்ன பாடமோ?”

”உன் தந்தை சொல்லிக் கொடுத்த பாடம்.”

“தந்தை இதற்கும் பாடம் சொல்லிக் கொடுத்திருக்கிறாரா?”

இதயசந்திரன் அவள் தோளில் முகத்தைப் புதைத் தான். அவன் தலை அவள் மலர்க் கன்னத்தில் இழைந்தது. “இதற்கும் என்றால்?” என்று கழுத்துக்கருகில் புதைந்த உதடுகளால் கேட்டான் அவன். அப்படி அவன் கேட்டதால் அவன் கழுத்தில் இதழ்கள் திறந்து மூடின.

அவள் கண்கள் கடலை நோக்கிக் கொண்டிருந்தன. கழுத்தில் அவன் உதடுகள் திறந்து மூடியதால் ஏற்பட்ட நெகிழ்ச்சி உடல் பூராவும் பரவியது. கடலைப் பார்த்த வண்ணம், “ இதற்குத்தானா!” என்றாள் மெதுவாக.

“இதற்குச் சொல்லிக் கொடுக்கக் கூடாதா அவர்?” அவன் உதடுகள் திறந்து மூடின.

“இதற்கு…” என்று இழுத்தாள் அவள்.

“என்ன மஞ்சு?”

”பாடம் சொல்லிக் கொடுக்க அவர் தகுந்தவர் தான்.”

“யார்?”

“தந்தை.”

“அவரும்…”

“உம் உம்…”

“மஞ்சு? மஞ்சு” என்ற அவன் தனது இடது கையை இடையிலிருந்து எடுத்து அவள் தலையைப் பிடித்துத் தனக்காகத் திருப்பி அழுத்தினான்.

அவள் விலகவில்லை. “வீரரே!” என்றாள் அவள் மெதுவாக.

“என்ன மஞ்சு?”

“உங்கள் உபாத்தியாயர்…”
“உம்.”

“பாடத்தை எப்படிச் சொல்லிக் கொடுத்தார்?”

“எப்படியென்றால்?”

“அனுபவத்தில் தெரியும்படி…’

“ஊம்?”

“யாரையாவது…”

“யாரையாவதா?”

“ஆம். அவருக்கென்ன, பெண்களுக்குக் குறைச்சலா? இறங்குகிற துறைமுகங்களிலெல்லாம் பெண்கள்.”

“அதனால்…”

“அதிலொருத்தியை…”

“சே சே ….” என்று அவள் வாயைப் பொத்திய இதய சந்திரன் அவளை இழுத்தான் தன் பக்கமாக.

அவள் உணர்ச்சிகள் கொந்தளித்தன. அவள் சரே லென்று அவனை உதறினாள். திடீரென எழுந்து தனது அறையை நோக்கி வேகமாக நடந்தாள். “அதே பழைய முறைதான். கிட்டே நெருங்குவது பிறகு வெட்டிப் போவது” என்று சீற்றங் கொண்ட இதயசந்திரனும் எழுந் திருந்து அவளைத் தொடர்ந்தான். மானைப்போல் கடுகி யோடிய அவள் தனது அறைக்குள் சென்று கதவைத் தாளிட்டுக் கொண்டாள்.

அறைக் கதவின் முன்பு நின்றுகொண்ட இதயசந்திரன் “மஞ்சு! மஞ்சு!” என்று கதவைத் தட்டினான்.

“என்ன?” என்று உள்ளிருந்து வந்தது அவள் குரல்.

“கதவைத் திற.”

“எதற்கு?”

“திற சொல்கிறேன்.”

“முடியாது.”

“திற.”

“முடியாது.”

“கதவை உடைத்து விடுவேன்.”

“மாலுமிகள் பார்க்கப் போகிறார்கள்?”

“பார்க்கட்டும். இனிமேல் நான் பூனையல்ல. திறக்கா விட்டால் உன் தந்தை கூறியதுபோல் கோட்டையை உடைத்து உள்ளே புகுந்து விடுவேன்.”

சீற்றமும் பதட்டமும் அதட்டலும் நிறைந்த அவன் சொற்களைக் கேட்ட அவள் கதவைத் திறந்தாள். இதய சந்திரன் உள்ளே சென்று கதவைத் தாழிட்டான்.

மஞ்சுவின் விழிகள் அவனை வியப்புடனும் கோபத் துடனும் நோக்கின. இத்தனை நாளாக அவன் செய்யத் துணியாத செயலில் அவன் அன்று இறங்கிவிட்டதை உணர்ந்ததால் அவள் இதயத்திலும் லேசாகத் திகில் துளிர்த்தது. அந்தத் திகிலில் ஏதோ இன்பமிருப்பதும் அவளுக்குப் புரிந்தது. இருப்பினும் கேட்டாள் அவள், “பைத்தியமா உங்களுக்கு?” என்று.

“ஆம், பைத்தியந்தான். பைத்தியமாக அடித்தது நீதான்” என்ற அவன் அவளை ஒரு தூக்காகத் தூக்கிக் கைகளில் ஒரு விநாடி தாங்கினான்.

அந்த நிலையில் அவளை தொப்பெனப் பஞ்சணையில் போட்டு அவளருகில் உட்கார்ந்து அவள் கைகளிரண்டையும் அகல வைத்துத் தனது கைகளால் அவற்றை அழுத்திப் பிடித்து அவளை நோக்கி குனிந்தான். “இரண்டரை ஆண்டுகள் காத்திருந்தேன் மஞ்சு, இனி காத்திருக்கத் திறனில்லை” என்று அவள் கண்களை உற்று நோக்கிக் கூறவும் செய்தான்.

அவள் கண்கள் மெல்லச் சிரித்தன. இதழ்களில் இளநகை அரும்பியது. “யார் காத்திருக்கச் சொன்னது?” என்று மெல்ல உதடுகள் சொற்களைத் தொடுத்தன.

அவன் அவள் விழிகளுடன் விழிகளைக் கலந்து கேட்டான்: ” காத்திருந்தது தவறா!” என்று.

அவள் நகைத்தாள். “தமிழில் ஒரு பழமொழி கேட்டிருக்கிறேன், காத்திருந்தவன் பெண்டாட்டியைப் பற்றி’” என்றாள் நகைப்பின் ஊடே.

“உனக்குத் தமிழ்ப் பழமொழிகூடத் தெரியுமா மஞ்சு?” என்று அவன் உதடுகள் கேட்டன. கைகள் தழுவின. அவளை.

“ஒன்றிரண்டு தெரியும்.”

“நல்லது மஞ்சு! காத்திருந்தது தவறு என்று தெரிந்து கொண்டேன்.”

“அது மட்டுமல்ல…”

“வேறென்ன?”

“கோட்டையை அணுகியதும் வீரன் வெளியில் காத்திருப்பது.”

“காத்திருப்பது?”

“கோழைத்தனம்.”

“அப்படியா?”

“ஆமாம்.”

“அப்படியானால்…?”

“நான்…”

“உம்.”

“இத்தனை நாள்…”

“கோட்டையை உடைக்கட்டும் என்றிருந்தாயா?”

அவள் பதில் கூறவில்லை. அவனை ஒருமுறை நோக்கி விட்டு அவன் கைகளை அசைத்துப் பஞ்சணையில் புரண்டுபடுத்தாள். லேசாக நகைத்தாள். கோட்டையை அவன் பிடித்திருப்பான் அன்று, விதி மட்டும் மீண்டும் குறுக்கிடாதிருந்தால், டிஸம்பர் மட்டும் சிரிக்காதிருந்தால். கோட்டைக் கதவு திறக்க இருந்த சமயத்தில் கோவென அலறியது கப்பலின் சங்கு. அறைக் கதவும் தடதடவென இடிக்கப்பட்டது.

Previous articleJala Deepam Part 2 Ch1 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 2 Ch3 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here