Home Historical Novel Jala Deepam Part 2 Ch20 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 2 Ch20 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

56
0
Jala Deepam Ch20 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 2 Ch20 | Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 2 Ch20 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் –20 கடலே, நீ சொல்!

Jala Deepam Part 2 Ch20 | Jala Deepam | TamilNovel.in

கற்கும் கலைக்கு அழிவு கிடையாது. உடனடியாக: அது பலனளிக்காவிட்டாலும் என்றோ ஒருநாள் பலனை அளிக்கத்தான் செய்கிறது. அத்தகைய ஒரு பலன் கிடைக்கவே செய்தது ஜன்ஜீராவை நோக்கி, அதாவது அபாயத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த இதயசந்திரனுக்கும். கொங்கணிக் கரையில் தான் ஒதுக்கப்பட்ட நாளன்று பிரும்மேந்திரஸ்வாமி வலம்புரிச் சங்கெடுத்துக்கிறீச்சென்று பலமாக ஊதி பானுதேவியை அழைத்ததையும் அந்த சிறு சங்கு இன்பமாகப் பெரு ஓசை கிளப்பியதையும் மறக்கவேயில்லை தமிழகத்தின் வாலிப வீரன். தமக்கு வேண்டியவர்களை அழைக்கத் தபோநிதி கையாளும் வழி அதுதானென்பதை அறிந்த இதயசந்திரன் உபதளபதியாயிருந்த இரண்டரை ஆண்டுகளில் பல சங்குகளைத் தானும் சேர்த்து அவற்றில் சிறந்த ஒன்றைப் பொறுக்கிப் பத்திரமாக வைத்துக் கொண்டுமிருந்தான். சங்கு பொறுக்கும் அவன் வழக்கத்தைப்பற்றி இரண்டொரு முறை மஞ்சுவும் அவனைக் கேலி செய்திருக்கிறாள். “குழந்தைகள் கிளிஞ்சல் பொறுக்கும், நீங்கள் சங்கு பொறுக்குகிறீர்கள்” என்று சொல்லிச் சிரித்துமிருக்கிறாள். ”பிரும்மேந்திரஸ்வாமி மட்டும் பொறுக்குகிறாரே, அவரென்ன குழைந்தையா?” என்று பதில் கேள்வி கேட்டிருக்கிறான் அவன். “அவர் துறவி. சங்காபிஷேகம் செய்யச் சங்கு பொறுக்குகிறார். நீங்கள் ஆண்டவனுக்கு என்ன அபிஷேகம் செய்வீர்கள்?” என்று அவள் தொடர்ந்திருக்கிறாள்.

“கீதாபிஷேகம் செய்தேன்’ இது அவன் பதில் அவளுக்கு.

“கீதாபிஷேகமா?”

”ஆம். சங்கீதாபிஷேகம்.”

“செய்யுங்கள் பார்ப்போம்.”

அவன் சங்கெடுத்துக் கீழ் ஸ்தாயியில் இன்பமான நாதம் கிளப்புவான். அதில் மெய் மறந்திருப்பாள் மஞ்சு. அதில் ஓங்கார நாதம் கிளப்புவான். அவள் சொக்கிச் சுருண்டு விழுவாள். “நீங்கள் பெரிய சுவாமிதான். ஒப்புக் கொள்கிறேன்” என்று அவன்மீது சாய்வாள். “சுவாமிக்குப் பெண்வாடை உதவாது. தள்ளிப்போ” என்று அவளைத் தள்ளுவான் அவன். அவள் நகைத்துக்கொண்டே அவன் மடியில் விழுவாள்.

இத்தகைய வேடிக்கை விநோதங்கள் நிகழ்ந்திருக் கின்றன அந்தச் சங்கால் முன்பு. இப்பொழுது வேடிக்கையு மில்லை, விநோதமுமில்லை. பெரும் ஆபத்தை நோக்கிச் செல்கையில் அந்தச் சங்கை எடுத்து ஊதினான். இன்பக் கீழ் ஸ்தாயி இசை ஒலி அல்ல அது; ஓங்காரநாதமுமல்ல. வேண்டியவரை அழைக்க பிரும்மேந்திரஸ்வாமி கிளப்பி வந்த கிறீச்சொலி அது. அந்த ஒலி பலனளிக்குமென்பது அவனுக்குத் தெரியும். ஒரே ஒரு கப்பலான ஜல தீபத்தைக் கொண்டு ஸித்திகளை எதிர்க்க முயலுவதைப்போல் பைத்தியக்காரத்தனம் வேறெதுவுமில்லை என்பதையும் அவர்களிடத்திலிருந்து தப்பிச் செல்வதைத் தவிர வேறு வழி கிடையாதென்றும் உணர்ந்துகொண்ட இதயசந்திரன் பாய்களை இறக்கச் சொன்னதற்கும் சிவப்புக்கொடி ஏற்றச் சொன்னதற்கும் காரணங்கள் உண்டு.

பாய் இறக்கிக் சிவப்புக்கொடி ஏற்றிவரும் கப்பல் வேகம் சிறிதுமின்றி நொண்டிக் கப்பலாகத் தட்டுத் தடுமாறித் துறைமுகம் நோக்கிச் செல்லுமாகையால் உடனடியாக அதன்மீது எதிரிகள் போர் தொடுக்கமாட்டார்கள். ஆகையால் ஜல தீபம் சிறிது ஆசுவாசப் படுத்திக்கொள்ள அவகாசம் கிடைக்கும். தான் சங்கையும் ஊதிவிட்டதால் அந்தச் சங்கொலி வரும் மரக்கலத்தில் பிரும்மேந்திரஸ்வாமியிருக்கிறார் என்ற பொய்யையும் வலியுறுத்துமாகையால் உதவிக்கு வருவது கப்பலாயிராது,

படகுகளாகத்தானிருக்க முடியுமென்பதையும், ஒருவேளை எதிரிக் கப்பல்கள் நங்கூரமெடுத்திருந்தாலும், மறுபடியும் அவை நங்கூரத்தைப் பாய்ச்சிவிடுமென்பதையும் உணர்ந்த இதயசந்திரன் கண்ணிலிருந்த தூரதிருஷ்டிக் கண்ணாடி மூலம் எதிரியின் ஒவ்வோர் அசைவையும் கவனித்துக் கொண்டே ஜல தீபத்தைச் செலுத்தினான்.

அவன் எதிர்பார்த்தது மிகவும் சரியாயிருந்தது. முகத் துவாரத்துக்கு வந்த ஸித்திகளின் இரு போர்க் கப்பல்கள் மீண்டும் மெள்ள மெள்ளக் கோட்டையை நோக்கிப் பின் வாங்கின. துறைமுகப்பிலிருந்த இரண்டு படகுகளுடன் இன்னுமிரு படகுகளும் சேர்ந்து கொண்டு முகத்துவாரத்தில் வரிசையாய் நின்றன. அந்த நான்கு படகுகளின் தலைவர்கள் பரஸ்பரம் ஏதோ விடுவிடுவென்று பேசிக் கொள்வதையும் கவனித்த இதயசந்திரன், எத்தப் பக்கத்தில் யார் வந்து எப்படி ஜல தீபத்துக்கு உதவலாமென்று யோசனை நடப்பதாகத் தீர்மானித்தான். அப்படி அவர்கள் யோசனை செய்து கொண்டிருக்கையில் பர்னாண்டோவை அழைத்த அவன், “பர்னாண்டோ! தளத்து பீரங்கிகளை, அது நான்கு படகுகளையும் நோக்கிக் குறி வைத்து அவை நகருமுன்பு சுட்டுவிடு” என்று உத்தரவிட்டான். பிறகு இப்ரஹீமிடம் சென்று, ”பர்னாண்டோவின் பீரங்கிகள் முழங்கியதும் நான்கு நிமிடங்கள் இடைவேளை கொடு. பிறகு சுக்கானை வேகமாகத் திருப்பு, ஜலதீபம் மேற்கு நோக்கி ஓட வேண்டும்” என்று கூறிவிட்டுக் கீழ்த்தளம் செல்லும் வாயிலுக்குச் சென்று “ஹர்கோவிந்த்! ஹர்கோவிந்த்!” என்று கூவினான். தளத்துக்கு ஓடிவந்த ஹர்கோவிந்திடம், ”பர்னாண்டோ பீரங்கிகளை முழங்கியதும் நான்கு நிமிடங்கள் இடைவேளை கொடுத்து, ”கீழ்த் துடுப்புக்கள் வெகு வேகமாகத் துழாவட்டும். அதற்கு ஏற்பாடு செய்து மேல்தளம் வந்து இந்தப் பாய்களனைத்தையும் ஏற்றிவிடு” என்று கூறினான். ஹர்கோவிந்த் ஒரு விநாடி விழித்தான், உத்தரவிற்குக் காரணம் புரியாமல். பிறகு வேகமாக இறங்கி ஓடினான் கீழ்த்தளத்துக்கு.

இதயசந்திரன் கண்ணில் பொருந்திḥய கண்ணாடியைக் கீழே இறக்கவேயில்லை. பர்னாண்டோவின் பீரங்கிகள் பயங்கரமாக டுமில் டுமில் என்று ஒன்றன்பின் ஒன்றாக அடுத்தடுத்து இடைவெளியின்றி அலறியதும் முகத்துவாரப் படகுகள் ஒவ்வொன்றாக மூழ்கின. அதே சமயத்தில் ஜல தீபம் மேல்திசை நோக்கித் திரும்பியது. ஜன்ஜீராத் துறை முகப்பில் மலைப் பகுதியிலிருந்த வீரர்கள் பலவிதமாக ஒலி கிளப்பினார்கள். முதலில் வந்த இரு மரக்கலங்கள் துறைமுக வாயிலுக்கு வந்து நின்றன. பெரும் பீரங்கிகளிரண்டையும் வெடித்தன. அதற்குள், ஜலதீபம் முழுக் காற்றில் மூன்று பாய்களையும் விரித்து மேற்கு நோக்கி ஓடிக் கொண்டிருந்ததால் அந்த பீரங்கி வீச்சு அதைத் தொடவில்லை. திடீரென ஜன்ஜீராவின் விளக்குகள் பிரகாசமாக எரிந்தன. மலைமீது ஒரு பெரிய பீரங்கியில் மருந்து திணித்து வீரர்கள் பீரங்கியை அலறவிட்டனர். ஜன்ஜீராவிலிருந்து நூறு கஜ தூரத்தில் மட்டும் ஜலதீப மிருந்தால் இந்த அத்தனை வெடி வீச்சுக்கும் அர்த்தமிருந் திருக்கும். ஆனால் பீரங்கி வீச்சு எல்லைவிட்டு ஓடிவிட்ட ஜல தீபம் அலட்சியமாகப் பாய்ந்து சென்றது. மேலைக் கடலில் மேல் திசை நோக்கி இரண்டு நாழிகை நேரம் கழித்துக் கண்ணிலிருந்து தூரதிருஷ்டிக் கண்ணாடியை அகற்றிய இதயசந்திரன் பர்னாண்டோவின் முதுகில் மகிழ்ச்சியுடன் தட்டிக்கொடுத்து, “பர்னாண்டோ ! சரியாகக் குறி வைத்தாய். ஒரு குண்டு கூட வியர்த்தமாக. வில்லை” என்று பாராட்டினான்.

ஆனால் பர்னாண்டோ அந்தப் பாராட்டுதலை ஒப்புக் கொள்ளவில்லை. ”பருந்து குருவியின்மீது பாய்வதில் வீரமென்ன இருக்கிறது தளபதி” என்று வினவினான் அலுப்புடன்.

அவன் கூறியது புரிந்தது தளபதிக்கு. ஆகவே அவன் உவமையிலேயே பதில் கூற முற்பட்டு, பருந்துகளை அடக்கக் குருவி தேவையானால் குருவிக்குப் பருந்துகளை விட முக்கியத்துவம் ஏற்படுகிறது” என்று பதில் சொன்னான்.

குருவிகளா, முக்கியமா!” என்றான் பர்னாண்டோ.

“ஆம், பர்னாண்டோ! துறைமுகத்துக்குள்ளிருந்து இரு பெரும் கப்பல்கள் நம்மைத் தாக்கத் தலை நீட்டின வல்லவா?”

“ஆம்.”

‘அவை வெளியே வந்து நம்மைத் தாக்கியிருந்தால்?”

”ஜலதீபம் பிடிபட்டிருக்கும்.”

“நாம்?”

“ஸித்திகளிடம் கைதிகளாயிருப்போம்.”

“நாம் இந்த வெள்ளைக்காரிக்கு ஈட்டுப்பணம் கேட்பதற்குப் பதிலாக நமக்கு ஸித்தி ஈட்டுப் பணம் கேட்பான்’ என்று பதில் கூறிய இதயசந்திரன், “பர்னாண்டோ! ஹர்கோவிந்த் விவரம் தெரியாமல் ஜலதீபத்தைப் போகிற வழியில் விட்டு ஜன்ஜீராவிடம் கொண்டு வந்து விட்டதைக் காலங்கடந்த பின்புதான் அறிந்தேன். ஜன்ஜீரா காவலர் நம்மைப் பார்த்து விட்டதையும் உணர்ந்தேன். அதற்கு மேல் என் சொந்தச் சச்சரவுகளை நினைப்பது நியாயமில்லையென்று உணர்ந்தே மீண்டும் தளபதிக்கு உண்டான கடமைகளை ஏற்றேன். அந்தச் சமயத்தில் எதிரித் துறைமுக முகப்புப் படகுக் காவலர் கோட்டைக்கு விளக்குகள் கொண்டு சைகை செய்ததைப் பார்த்தேன். இரு கப்பல்கள் நம்மை நோக்கி நகருவதையும் கவனித்தேன். அந்தச் சந்தர்ப்பத் தில் எதிரியை ஏமாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை யாதலால் சேதமடையும் கப்பல்கள் உயர்த்தும் அபாய அறிவிப்புக் கொடியை உயர்த்தச் செய்தேன். பாய்களையும் அவிழ்க்கச் சொன்னேன். எதிரி தொலைவிலிருந்து ஜலதீபத்தைப் பார்க்கும் போது பாயின்றி, அபாயக் கொடி பறக்க அலைமீது அசைந்து வரும் கப்பல்தான் தெரியும். தவிர பிரும்மேந்திர ஸ்வாமி ஊதும் சங்கையும் ஊதினேன்” என்று சொல்லிக்கொண்டு போன இதய சந்திரனை இடைமறித்த பர்னாண்டோ, “தெரியும். அது பெரிய நயவஞ்சகம். இந்தக் கப்பலில் பிரும்மேந்திர ஸ்வாமி வருகிறார் என்று ஸித்திகள் நினைப்பார்கள். ஸித்திகளோ பிரும்மேந்திர ஸ்வாமியின் சீடர்கள்” என்றான்.

“ஆம் பர்னாண்டோ, பிரும்மேந்திர ஸ்வாமி வரும் கப்பலெதற்கும் ஸித்திகள் தீங்கு விளைவிக்க மாட்டார்கள். உதவவும்.முன்வருவார்கள்” என்று ஒப்புக் கொண்ட தளபதி, “அப்படித்தான் அவர்களை நம்ப வைத்தேன். நம்பவும் நம்பினார்கள். தாக்க வந்த கப்பல்கள் பின் சென்று நங்கூரம் பாய்ச்சின.. உதவ இரு படகுகளுக்கு நான்கு படகுகளாக முகப்பில் வந்தன. முகத்துவாரத்தை அடைத்து நின்று கொண்டன. படகுகள் கிட்டத்தட்ட சிறு கப்பல்கள் முகத்துவாரத்தை அடைந்திருந்தன. அவற்றை மூழ்கடித்து விட்டால்…” என்றான்.

அவன் வாசகத்தை முடிக்கவில்லை. இருப்பினும் பர்னாண்டோ புரிந்து கொண்டான். “அந்தப் படகுகள் முகத்துவாரத்தில் மூழ்கிவிட்டன. ஆகையால் முகத் துவாரம் அடைபட்டு விட்டது. எதிரிக் கப்பல்கள்…” என்றான் அவன்.

“துறைமுகத்தில் சிறையிருக்கின்றன. தற்சமயம் மூழ்கிய படகுகளை அவர்கள் சங்கிலி கொண்டு அகற்றி வெளிவருமுன்பு ஜல தீபம் அவர்கள் கைக்கெட்டாத தூரத்திலிருக்கும். சரியான போரில்லைதான். வேறு வழியில்லை” என்று தளபதி மீண்டும் தனது அறையை நோக்கி நடந்தான்.

பர்னாண்டோ அவன் போவதைப் பார்த்துக் கொண்டே நின்றான். கீழ்த்தளத்தில் துடுப்புகள் துழாவ ஏற்பாடு செய்துவிட்டு அங்கு வந்த ஹர்கோவிந்திடம் எரிந்து விழுந்தான் பர்னாண்டோ, “எல்லாம் உன்னால் வந்தது ஹர்கோவிந்த்” என்று.

“எனனால் மட்டுமா?” என்று கேட்டான் ஹர்கோவிந்த்.

“அந்த வெள்ளைக்காரி விஷயத்தில் நீ தலையிடாதிருந் தால் தளபதி உன்னிடம் கப்பல் தலைமையை ஒப்படைத் திருக்க மாட்டார். ஒப்படைத்திருக்காவிட்டால் ஜல தீபம் ஜன்ஜீராவுக்கு இத்தனை அருகில் வந்திராது. வந்திரா விட்டால் இத்தனை அதர்ம யுத்தத்தில் தளபதி ஈடுபட்டிருக்கமாட்டார்” என்றான் பர்னாண்டோ.

அந்தச் சமயம் சுக்கானை மாலுமியொருவனிடம் கொடுத்துவிட்டு அவர்களிடம் வந்த இப்ரஹீம், “ஆம் ஹர்கோவிந்த்! உண்மையில் இப்பொழுது எதிரியை ஏமாற்றித்தான் வந்திருக்கிறோம்” என்றான்.

“அதற்காக நான் என்ன செய்யட்டும்?” என்று வினவினான் ஹர்கோவிந்த்.

“நீதானே தலைமைப் பதவி ஏற்றாய்?” என்றான் இப்ரஹீம்.

“நான் எங்கே ஏற்றேன்? நீங்களும்தானே தளபதி நம் மீது பொறுப்பைச் சுமத்திய போது இருந்தீர்கள்?”

இருந்தோம். ஆனால் வெள்ளைக்காரியிடமிருந்து அவரைப் பிரிக்க நீதானே எங்களுக்கு யோசனை சொன்னாய்?”

“ஆம், சொன்னேன். மஞ்சுதானே தலைவரைக் கவனிக்கும்படி உத்தரவிட்டது. அதற்காக என்னை ஆணையிடச் செய்தாளே.”

“ஆம். பர்னாண்டோ! கேவலம் ஒரு பெண்ணின் காதலுக்காக நாம் கடமையை இழக்கலாமா?” என்று வினவினான் இப்ரஹீம்.

“யார் இழக்கச் சொன்னது! முதலிலேயே நீ தடுத்திருக்கலாமே வெள்ளைக்காரியிடம் நாம் தலையிட வேண்டாமென்று?” என்று சீறினான் ஹர்கோவிந்த்.

அம்மூவரும் இரைந்து பேசியதாலும் அவர்களிருந்த இடத்துக்கும் தளபதியின் அறைக்கும் அதிக தூரமில்லை யாகையாலும் அவர்கள் பேசியது நன்றாகக் கேட்டது இதயசந்திரனுக்கு. அவன் புரிந்து கொண்டான் காரணத்தை. இரண்டரை ஆண்டுகள் தன்னைச் சிறிதும் எதிர்க்காமல் பணியாற்றிய அந்தச் சிறந்த மாலுமிகள் மூவரும் சில நாட்களாகத் தன்னிடம் காட்டிய விபரீதப் போக்குக்குக் காரணம் நன்றாகப் புரிந்தது அவனுக்கு. தான் தனியாகக் காதரைனுடன் கப்பலில் செல்லுவதால் தான் அவளிடம் சிக்காமலிருப்பதற்காக மஞ்சு இட்ட கட்டளையே அந்த மூன்று பேர் என்ன, எல்லா மாலுமிகளின் போக்குக்கும் காரணமென்பதையும், அதனாலேயே அவர்கள் தனது நடவடிக்கை ஒவ்வொன்றையும் கவனித் திருக்கிறார்களென்பதையும் புரிந்துகொண்ட இதய சந்திரன் மஞ்சுவின் காதல் வன்மையையும் அதற்காக அவள் தன்னைக் கண்காணிக்கவும் தயாராயிருந்த துணிவையும் எண்ணிப் பார்த்தான். அப்படி எண்ணிப் பார்த்ததால் அவள் காதலின் உறுதி அவனுக்குப் பெரும் சாந்தியை அளித்தது. அடுத்து அவன் இதயத்தில் தோன்றினாள் காதரைன் விரிந்த குழலுடன். திறந்த எழிலுடன் அடுத்து தான் பம்பாயில் சந்திக்கவிருந்த பானுதேவியையும் மனக் கண்ணில் எழுப்பிக் கொண்டான் தளபதி. அவனை மூன்று பெண்களும் அழைத்தார்கள், ஆனால் ஒவ்வொருத்தியும் இருந்த நிலை வேறு. அதிகார ஆணவத்துடன் இணையிலா அழகையும் பெற்ற பானுதேவியின் கண்களில் காதலுமிருந்தது, கட்டளையுமிருந்தது. முத்தமிட்ட இருவரை வெட்டி விட்ட மஞ்சுவின் அழகுக் கண்களில் வீரமிருந்தது! அசட்டையுமிருந்தது. காதரைன் அப்பா! அந்த நீலக் கண் களில் விரிந்த காமக் கடல்! அதில் அழுந்தாமலிருக்க யாரால் முடியும்! எழில்களை ஒருமுறை அசைத்தாள் அந்த அல்லி மலர். அல்லி இதழ்கள் வழவழத்து மனமுகத்தின் மீது தடவின. இப்படி ஏற்பட்ட கனவிலிருந்து மெள்ளத் தன்னை மீட்டுக் கொள்ள முயன்ற இதயசந்திரன் அறையைவிட்டு ஜல தீபத்தின் பக்கப் பலகையை நாடினான். எதிரில் இருளோவென்று விரிந்த ஆழ்கடலைக் கேட்டான் சற்று உரக்க, “ஆழ்கடலே! நீ சொல், இம்மூவரில் யார் சிறந்தவர்?” என்று.

கடல் பதில் கூறவில்லை. காற்று பதில் கூறிற்று. காற்றில் மெல்ல மிதந்து வந்தது அத்தர் வாசனை. அதைத் தாங்கிய மெல்லிய சல்லாவொன்று அவன் முகத்தை மறைத்தது. அதை விலக்கித் திரும்பிய இதயசந்திரனருகில் நின்றிருந்தாள் காதரைன்.

“என் மேலாடைக்கும் உங்கள் மீது ஆசை பார்த்தீர்களா?” என்று கொஞ்சி அவன்மீது சாய்ந்தாள்.

வழவழத்த அவள் உடல் அவன் உடலுடன் இழைந்தது. அவன் கை அவள் இடையை அணைத்தது. வாய் மட்டும் பதிலேதும் கூறவில்லை . “ஏன் பேசவில்லை? கோபமா?” என்று வினவினாள் அவள்.

அதற்கும் அவன் பதில் கூறவில்லை . அவன் உணர்ச்சி கள் பொங்கிக் கொண்டிருந்தன, பொங்கு அலைகள் போல. அவள் இன்பமான குரலில் கூறினாள், “உங்கள் போர்த் திறனைப் பார்த்தேன். பெரும் தந்திரம், வெள்ளைக்காரரும் வெட்கும் தந்திரம். இத்தனை தந்திரம் எங்கு கற்றீர்கள்? அப்பப்பா? மெய் சிலிர்த்தது எனக்கு?” என்று .

அதற்கும் பதில் வரவில்லை அவனிடமிருந்து. அந்த மௌனம் அவளுக்கு எரிச்சலை விளைவித்தது. “நான் இருக்கட்டுமா? போகட்டுமா?” என்று கேட்டாள் அவள் கோபத்துடன். திடீரென அவளை நோக்கித் திரும்பிய அவன் அவள் பூவுடலை நொறுங்கும்படி கட்டிப் பிடித்தான். “ஒரு தீர்மானத்துக்கு வந்துவிட்டேன்” என்று முரட்டுத்தனமாகக் கூறவும் செய்தான்.

“என்ன முடிவு?” என்று கேட்டாள் காதரைன். அவன் முரட்டுப் பிடி அவளுக்குப் பெரிதும் தேவையா யிருந்தது. இன்ப உணர்ச்சிகள் அவள் உடலை ஊடுருவிச் சென்றன. அவள் குரல் மிக ரகசியமாக, இன்பமாக, வேதனையும் கலந்ததாக உதிர்ந்தது.

முடிவை அவன் கூறினான்.

அவள் அதிர்ச்சியுற்றாள். இன்பம் திடீரென அறுந்து பயத்துக்கு இடங்கொடுக்கவே காதல் கண்ணில் அச்சம் உதயமாயிற்று. “அது எப்படி முடியும் முட்டாள்?”” என்று சீறினாள் காதரைன்.
காதரைன் என்ன, மறுநாள் அம்முடிவைக் கேட்ட ஹர்கோவிந்த், பர்னாண்டோ, இப்ரஹீம், இவர்களும் அதிர்ச்சியுற்றார்கள். எதையும் லட்சியம் செய்யவில்லை.

இதயசந்திரன். முடிவைப்பற்றி அவன் கடலைத்தான் கேட்டான், “கடலே சொல், முடிவு சரியா இல்லையா?” என்று.

Previous articleJala Deepam Part 2 Ch19 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 2 Ch21 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here