Home Historical Novel Jala Deepam Part 2 Ch21 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 2 Ch21 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

53
0
Jala Deepam Ch21 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 2 Ch21 | Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 2 Ch21 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் –21 இனம், காதல், கடமை

Jala Deepam Part 2 Ch21 | Jala Deepam | TamilNovel.in

கப்பலின் தளத்தில் காதரைனைக் கட்டிப் பிடித்து அவள் காதில் ஓதிய அந்த முடிவைக் கேட்டதும் வெள்ளைக்காரி தனது கொள்ளை ஆசையெல்லாம் விர்ரென்று அடித்த கடற்காற்றில் பறந்து போக அவன் அணைப்பிலிருந்து, திமிறி விலகியதுமல்லாமல் அதெப்படி முடியும் முட்டாள்!’ என்று சீற்றம் மிகுந்த சொற்களையும் கொட்டினாள். கொட்டியதோடு நில்லாமல், விடுவிடு என்று அந்த இடத்திலிருந்து நடந்து செல்லவும் இரண்டடி எடுத்து வைத்தாள். ஆனால் இதயசந்திரனின் இரும்புக் கைகள் அவள் கையொன்றை இறுகப் பிடித்து மீண்டும் தன்னை நோக்கி இழுத்தன. “இதில் முட்டாள் தனம் என்ன இருக்கிறது? ஏன். முடியாது அது?” என்ற சொற்களும் கடுமையுடன் உதிர்ந்தன அவன் வாயிலிருந்து.

அவன் கடுமைச் சொற்களையோ கைப்பிடித்த உறுதி யையோ அவள் லட்சியம் செய்யாமல் சுதந்திரமாயிருந்த கையால் முகத்தில் புரண்ட தலைக்குழல்களைப் பின்னுக்குத் தள்ளி நிமிர்ந்து பார்த்தாள் அவனை. “என்னைத் திருமணம் செய்து கொள்ளக் கேட்கிறாய் நீ” என்று அதிர்ச்சி ஒலித்த குரலில் கூறினாள் அவள்.

இதயசந்திரன் அவள் சீற்றக் கண்களை உற்று நோக்கினான். அதிர்ச்சி பரந்து நின்ற வதனத்தையும் நோக்கி னான். “ஆம் திருமணம் செய்து கொள்ளத்தான் தீர்மானித்து இருக்கிறேன். அதுதான் என் முடிவு” என்று திட்டவட்டமாகக் கூறவும் செய்தான் தமிழன்.

காதரைன் ஏதோ நம்பத்தகாததைக் கேட்டுவிட்டது போல் அவனைப் பார்த்தாள். ”தமிழா, உனக்குப் புத்திப் பிசகு ஏதுமில்லையே!” என்று வினவினாள் இறுதியில்

“இல்லையென்று நிச்சயமாகச் சொல்ல முடியாது” என்று இதயசந்திரன் இதழ்களில் இளநகை தவழ்ந்தது.

“நான் நிச்சயமாகச் சொல்ல முடியும்” என்றாள் அந்த அல்லி மலர்.

”எனக்குப் புத்தி பிசகு என்றா?”

”ஆம்.”

”உன் கட்டழகைக் கண்ட பிறகு, உன் பல நாள் அழைப்பை ஏற்றுக் கொண்ட பிறகு, எவனுக்குத்தான் புத்தி பிசகாமலிருக்கும்.”

”அதைச் சொல்லவில்லை நான்.”

“வேறு எதைச் சொல்லுகிறாய்?”

“ஒரு பிரிட்டிஷ் பெண்ணை இந்தியன் ஒருவன் திருமணம் செய்து கொள்ள எத்தனிப்பதைச் சொல்லுகிறேன்.”

“வெள்ளைக்காரியை இந்தியன் தழுவலாம். அவளுடன் சரசமாடலாம். ஆனால் திருமணத்திற்கு மட்டும் தடை போலிருக்கிறது” என்று கூறிய இதயசந்திரன் அவளை லேசாகத் தன்னை நோக்கி இழுத்தான். அவள் திமிறினாள். திமிறிக் கொண்டு அவனைத் தளத்தில் விட்டுத் தனது அறை நோக்கி நடக்கவும் செய்தாள். அவள் போவ தைப் பார்த்துக்கொண்டே நின்ற தமிழன் அவள் பின்னழகுகளில் தனது பார்வையை நிலைக்க விட்டான். மனத்தைத் திருமணத்தில் நிலைக்கவிட்டான். அவன் முடிவில் சந்தேகத்துக்குச் சிறிதும் இடமில்லாதிருந்தது. மறுநாள் ஹர்கோவிந்த், இப்ரஹீம், பர்னாண்டோ இம்மூவரையும் அழைத்து அவர்களிடம் மெள்ளத் தனது முடிவைக் கூறினான். அவன் கூறிய முறை மிகவும் கள்ளத் தனமானதாக இருந்ததால், ஆரம்பத்தில் அம்மூவரும் விஷயத்தைப் புரிந்து கொள்ளவில்லை. தனது அறையில் மஞ்சத்தில் அமர்ந்த வண்ணம் அம்மூவரையும் நோக்கிய இதயசந்திரன், “ஹர்கோவிந்த்! இப்ரஹீம்! பர்னாண்டோ ! கப்பலின் தலைவன் காமக் கேளிக்கைகளுக்கு இடங்கொடுப்பது தவறு என்று உணர்ந்து கொண்டேன். அதற்கு உங்கள் மன்னிப்பைக் கேட்கிறேன்” என்றான் மெள்ள.

மூன்று மாலுமிகளும் இதற்குப் பதில் சொல்ல முடியா மல் தவித்து ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். கடைசியில் ஹர்கோவிந்த் மெல்லக் கூறினான்: “தளபதி யைப் போன்றவர்கள் கெட முடியாது. சில பலவீனங்களில் சிக்கினாலும் முடிவில் சரியான வழிக்கே வந்துவிடுவார்கள்” என்று.

“வந்து விட்டேன் ஹர்கோவிந்த்!” என்றான் இதய சந்திரன் தழுதழுத்த பரிதாபக் குரலில்.

“மிக்க மகிழ்ச்சி தளபதி, உங்களைப் போன்ற விவேகிகள் வேறு முடிவுக்கு வரமுடியாது” என்றான் இப்ரஹீம்.

“ஒப்புக் கொள்கிறாயா இப்ரஹீம்?”

“ஒப்புக் கொள்கிறேன் தளபதி, முழுமனத்துடன் ஒப்புக் கொள்ளுகிறேன்.”

“நீ பர்னாண்டோ?” என்று பர்னாண்டோவை நோக்கினான் இதயசந்திரன்.

“நான் மாத்திரம் விலக்கா தளபதி! தங்களை எங்க ளுக்குத் தெரியாதா? ஏதோ சூழ்நிலை தாங்கள் இந்த பிரிட்டிஷ்காரியிடம் சிக்கினீர்கள். அதுவும் அவள் பெரும் சாகசக்காரி. இரு கணவன்மாரைப் பறிகொடுத்தவள். மூன்றாமவர் கண்ணுக்குப் பட்டதும் அவரை வளைக்கப் பார்க்கிறவள்…” என்றான் பர்னாண்டோ.

“நீ சொல்வது தவறு பர்னாண்டோ” என்றான் இதயசந்திரன்.

“என்ன தவறு தளபதி?” பர்னாண்டோவின் கேள்வியில் வியப்பு இருந்தது.

“இதில் குற்றவாளி காதரைன் மட்டுமல்ல…” என்று இழுத்தான் இதயசந்திரன்.

“என்ன சொல்கிறீர்கள் தளபதி?”

“பர்னாண்டோ…”

“தளபதி!”

“அவள் கணவனைப் போரில் இழந்தவள். நம்மிடம் அகப்பட்டுக் கொண்டாள்…”

“உம்.”

“துயரத்தின் மிகுதியில் என் ஆதரவைத் தேடினாள்.”

“உம்!”

“ஆதரவளித்தேன். அத்துடன் நான் நின்றிருக்க. வேண்டும். அடிக்கடி அவள் அறைக்கு நான் ஏன் போனேன்; அவளுக்கு வசதிகள் அளிக்க வேண்டுமானால் உங்களில் ஒருவரை அனுப்பியிருக்கலாம். செய்யவில்லை நான். நானே போனேன். என் மனத்தின் பலவீனத்தால் அவள் அழகில் ஈடுபட்டேன். திரும்பத் திரும்ப அவள் அறைக்குப் போனேன். திரும்பத் திரும்ப எந்தப் பெண் தான் எதிர்த்து நிற்க முடியும்? என் வலையில் மெள்ள வீழ்ந்தாள்….”

இப்படிச் சொல்லிக் கொண்டுபோன தளபதியை மூவரும் ஏக காலத்தில் ஒரே சமயத்தில் தடுத்து, “தவறு தவறு. இல்லாத குற்றங்களை உங்கள் மீது சுமத்திக் கொள்கிறீர்கள்” என்றார்கள்.

தளபதி அம்மூவர் மீதும் தனது கண்களை நன்றாக நிலைக்க விட்டான். “இல்லாத குற்றமா?” என்றும் வினவினான் கடுமையான குரலில்.

“ஆம்” என்றான் பர்னாண்டோ.

“எப்படி?” இதயசந்திரனின் கேள்வி எழுந்தது: கடுமையாக.

” அவள் சாகசம், அவள் நடத்தை இவைதான் உங்களை அழைத்தன. எது நடந்திருந்தாலும் அவள் தான் காரணம்” என்றான் இப்ரஹீம்.

“சந்தேகமில்லை” என்று பர்னாண்டோவும் ஒத்துப் பாடினான்.

தமிழனின் கண்கள் களித்தன. குரல் குழைந்து “என்னிடமுள்ள அன்பினால் பேசுகிறீர்கள் மாலுமிகளே, குற்றத்தை அவள் துவங்கியிருந்தாலும் நான் ஏன் அதற்கு இடங்கொடுக்க வேண்டும்! நமது கைதி நீங்கள் ஏற்கெனவே சுட்டிக் காட்டியபடி முப்பத்தினாயிர ரூபாய் ஈட்டுப் பணம் கொண்டு வரக்கூடியவள். அவளுக்கு அவள் நலனுக்கு வேலியாயிருக்க வேண்டிய நான் அவளறைக்குச் சென்றதும் கதவைத் தாழிட்டு அவளுடன் தங்கிவிட்டதும் எப்படிச் சரியாகும்! சுத்தத் தவறு, சந்தேகமில்லை” என்று அறிவித்த இதயசந்திரன் பல விநாடிகள் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டான். கடைசியில் நிமிர்ந்து அவர்களை நோக்கி, “இதற்குப் பரிகாரம் செய்ய முடிவு! செய்துவிட்டேன்” என்று கூறினான் உறுதியுடன்.

“என்ன பரிகாரம் தளபதி?” என்று வினவினான் பர்னாண்டோ.

பர்னாண்டோவை உற்று நோக்கிய இதயசந்திரன், “நீ கிறிஸ்தவன் தானே பர்னாண்டோ ?” என்று வினவினான்.

”ஆம் தளபதி.”

“நீ ஒரு பெண்ணைக் கெடுத்து விடுகிறாய். அல்லது அவளுக்கு மாசு வரும்படி நடந்து கொள்கிறாய். அந்தக் கெடுதலை நிவர்த்திக்க- மாசை அகற்ற என்ன செய்ய வேண்டும்?”

இதைக் கேட்ட பர்னாண்டோவின் விழிகள் அச்சத் தாலும், வியப்பினாலும் அகன்றன. மற்ற இருவரும் அவன் அச்சத்துக்கும் வியப்புக்கும் காரணமறியாமல் திகைத்தார்கள்.

இதயசந்திரன் முடிவில் கூறினான், “ஆம் பர்னாண்டோ ! அந்தப் பரிகாரத்தைச் செய்யத் தீர்மானித்து விட்டேன். காதரைனைத் திருமணம் புரிந்து கொள்ள முடிவு செய்துவிட்டேன்” என்று.

அவன் குரலில் இருந்த உறுதியிலிருந்து முடிவு அழிக்க முடியாதென்பதை மூவரும் உணர்ந்தனர். தாங்க முடியாத அதிர்ச்சியால் திகைத்துப் பல விநாடிகள் நின்றுவிட்டனர். கடைசியில் இரைந்தான் ஹர்கோவிந்த், “அப்படியானால் மஞ்சுவின் கதி?” என்று.

“அதை அவள் தான் முடிவு செய்ய வேண்டும். விஜய துர்க்கத்தை அடைந்தவுடன் அவளைத் திருமணம் செய்து கொள்ளக் கேட்டேன் அவள் தந்தையை. மறுத்துவிட்டார் அவர். அதற்கு நானென்ன செய்யமுடியும்? மஞ்சு கிடைக்காததால் நான் துறவியாகிவிட முடியுமா? மொட்டையடித்துக் கொண்டு பிரும்மேந்திர ஸ்வாமி மடத்திலே சேர முடியுமா?” என்று கேட்ட இதயசந்திரன் அவர்கள் போகலாமென்பதற்கு அறிகுறியாகக் கையை அசைத்தான்.

அதிர்ச்சி விவரிக்க இயலாதிருந்ததால் மூவரும் பேசச் சக்தியின்றி வெளியே வந்தனர். வெளியே சென்ற விநாடியிலிருந்து அவர்கள் சுயநிலையில் இல்லை. பீதியும் குழப்பமும் அவர்கள் உள்ளங்களை ஆட்டிப் படைத்ததல் சிலைகள் போல நடமாடிக் கொண்டிருந்தனர். அம் மூவரும் நினைத்துப் பார்க்கவும் முடியாத தமிழனின் முடிவு அவர்கள் மகிழ்ச்சிக்கு முடிவு கட்டிவிட்டது. மஞ்சுவை சொந்தக் குழந்தைபோல் பாவித்ததால் பெரும் கோபமும் அவர்கள் உள்ளங்களில் தாண்டவமாடிக் கொண்டிருந்தது.

அவர்கள் நிலை மட்டுமல்ல அப்படி. முதல் நாளிரவு அறைக்குச் சென்ற விநாடியிலிருந்து காதரைனின் நிலையும் அப்படித்தானிருந்தது. அந்த மூன்று மாலுமிகளுக்கிருந்த கோபம் அதிர்ச்சி பீதி அத்தனையும், அவள் உள்ளத்தை உலுக்கிக் கொண்டிருந்தன. தமிழன் இத்தனை பெரிய கல்லை எடுத்துத் தலைமேல் போடுவானென்று தினையளவும் நினைக்கவில்லை அந்த வெள்ளைக்கார மகள். காரணம் அவள் நிறம், அவள் இனம்.

வெள்ளையர் இந்தியனை மணப்பது மாபெரும் கேவலம் எனக் கருதப்பட்ட காலம் அது. யாராவது வெள்ளைக்காரி இந்தியனை மணந்தால் தீண்டத்தகாத வளைப்போல் அவள் மற்ற வெள்ளைக்காரர்களால் நடத்தப்பட்ட காலம் அது. இந்தியனுடன் திருமணம் அவளை அவள் ஜாதியினின்று விரட்டியது. அவள் சகோதரிகள் கூட அவளைக் கேவலமாகப் பார்ப்பார்கள். தந்தைகூட அவளைத் தன் மகளென்று சொல்லிக் கொள்ளத் தயங்குவார். இந்த நிலையை நினைத்து நினைத்து அஞ்சினாள் அந்த ‘அல்லிமலர். தமிழனிடம் உண்மையில் அவள் இதயத்தைப் பறிகொடுத்திருந்தாள். உடலையும் அர்ப்பணிக்கத் தயாராயிருந்தாள். ஆனால் திருமணம்? நினைக்கவும் அஞ்சினாள் அதைப்பற்றி. ஆகவே மறுநாள் மாலை இதயசந்திரன் அவள் அறைக்கு வந்தபோது அவள் அவனுடன் பேசவுமில்லை. அவனை வரவேற்க எந்தவித சைகையும் செய்யவுமில்லை. இதய சந்திரனே மெள்ளப் பேசத் துவங்கி, ”கேட்டி…” என்று மிக மிருதுவாக அழைத்து அவள் உட்கார்ந்திருந்த கட்டிலில் அவளுக்கருகில் தானும் உட்கார்ந்து கொண்டான்.

“ஏன்?” என்ற அவள் கேள்வி முரட்டுத்தனமாயிருந்தது.

“என் மேல் கோபம் போலிருக்கிறது…” என்றான் இதயசந்திரன் அவள் தோள்மீது இடது கையைப் போட்டு.

அந்தக் கையைத் தள்ளினாள் அவள் வெறுப்புடன். “என்னைத் தொடவேண்டாம்” என்றும் சீறினாள்.

“ஏன்? இப்பொழுது என்ன நடந்துவிட்டது?” என்று கேட்டான் அவன்.

“ஏதும் நடக்கவில்லை.”

“அப்படியானால் எதைப் பற்றிக் கோபம்?”

“நடக்கப் போவதாக நீங்கள் கனவு காண்பதைப் பற்றி.”
“திருமணத்தைப் பற்றியா?”

“ஆம்.”

“அது கனவா?”

“ஆம்.”

“ஏன்?”

“வெள்ளைக்காரி எப்படிக் கறுப்பு ஜாதியை மணந்து கொள்ள முடியும்?’

“மணந்து கொண்டாலென்ன. வெள்ளைக்காரியும் பெண்தான்; கறுப்பனும் ஆண்தான்.”

“பால் மாத்திரம் இதில் முக்கியமில்லை.” “வேறு எது முக்கியம்?” “ஜாதி, நிறம்.” “நிறத்தில் என்ன இருக்கிறது?”

“என்ன இருக்கிறதென்பதை பம்பாயில் புரிந்து கொள்வீர்கள்.”

“என்ன புரியும் பம்பாயில்!”

“உங்களைக் கொன்று போடுவார்கள்.”

“உன்னைத் திருமணம் செய்து கொள்வதற்காகவா?”

“ஆம்.”
“அத்தனைப் பயங்கரமா உன்னை மணம் புரிந்து கொள்வது!” என்று கூறிப் பலமாக நகைத்தான் இதய சந்திரன்.

காதரைன் கட்டிலிலிருந்து எழுந்து நின்றாள். “தளபதி! வீணாகப் பிடிவாதம் பிடிக்காதீர்கள். என்னைப் பலவந்தமாகத் திருமணம் புரிந்தால் கொள்ளைக்காரரால் கொல்லப்படுவீர்கள். கொள்ளைக்காரர்கள் தங்கள் பெண்களைக் கறுப்பர் மணம் புரிவதை விரும்பவில்லை. ஆகவே, அந்த எண்ணத்தை விட்டு விடுங்கள்” என்றாள்.

“என்னால் விடமுடியவில்லையே காதரைன்” என்று பரிதாபமாகக் கூறிப் பெருமூச்சு விட்டான் இதயசந்திரன்.

காதரைன் வெகு அருகில் வந்தாள். அவன் தலையைத் தன் இடுப்பில் அழுத்தி இரு கைகளாலும் அணைத்தாள். “இதயசந்திரா! நீ பெரு வீரன். உலமையில் உன்னை நான் நேசிக்கிறேன், மரணமடைந்த எனது இரு கணவர்களிடம் கூட எனக்கு இத்தனை நேசம் இருந்த தில்லை. ஆனால் நமது இனங்கள் வெவ்வேறு. இருவருக்கும் திருமணம் நடப்பது சமுதாய சம்மதமல்ல. இப்பொழுது என்ன குடி முழுகிப் போய்விட்டது? நான் உனக்கு எதை மறுக்கிறேன்?” என்று குழைய குழைய இன்பநாதம் கொட்டிக் கூறினாள் காதரைன்.

அவள் இடையை இறுக வளைத்தன இதயசந்திரன் கைகள். அவளைத் தன் இரு கைகளாலும் உயரத் தூக்கி ஒரு முறை பார்த்துக் கீழே இறக்கினான். இன்ப அலை

ஜலதீபம் பாயும் குரலில் கூறினான்: “காதரைன்! நீ எதையும் மறுக்க வில்லை எனக்கு. இதயசந்திரன் இந்தியனாயிருந்தாலும் பெண்களின் பலவீனத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் பண்பாடுள்ள இனத்தில் பிறக்கவில்லை அவன். நீ கொடுப் பதை நிச்சயம் பெற்றுக் கொள்கிறேன். ஆனால் இங்கல்ல …”

“வேறு எங்கு?” என்றாள் காதரைன். இதயசந்திரன் பதில் மிகத் தெளிவாக வெளி வந்தது. சொற்கள் மிகத் திடமாக உறுதியாக உதிர்ந்தன. “கொலாபாவில் திருமணம் செய்து கொண்ட பிறகு…” என்றான் இதயசந்திரன்.

காதரைன் விவரிக்க இயலாத நிலையில் இருந்தாள். இதயசந்திரனின் சொற்கள் ஒவ்வொன்றும் அவள் இதயத் தின்மீது காய்ச்சிய ஈயத் துளிகள் போல் விழுந்தன.

Previous articleJala Deepam Part 2 Ch20 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 2 Ch22 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here