Home Historical Novel Jala Deepam Part 2 Ch22 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 2 Ch22 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

62
0
Jala Deepam Ch22 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 2 Ch22 | Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 2 Ch22 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் –22 குலாபி

Jala Deepam Part 2 Ch22 | Jala Deepam | TamilNovel.in

அன்றும் மறு நாளும் கழிந்து மூன்றாவது நாள் விடியற் காலையில் ஜல தீபம் கொலாபாவை நெருங்கிய போது இதயசந்திரன் ஒருவனைத் தவிர, மற்ற அனைவர் உள்ளங்களும் நொறுங்கித்தான் கிடந்தன. கடற் கோட்டையான கொலாபா கண்ணுக்குப் பட்டதுமே தாரையொன்று பல மாக ஊதப்படவே கோட்டைப் பகுதியில் துரிதமான நடவடிக்கைகள் காணப்பட்டன. தாரை ஊதிய பின்பே அறையை விட்டு வெளியே வந்த காதரைனைப் பார்த்த இதயசந்திரன், “காதரைன்! அதோ பார், நீர் மேல் ஒரு மலர்’ என்று குதூகலத்துடன் கூவினான்.

அவனுக்குக் கொலாபாவைக் கண்டால் எப்பொழு துமே ஒரு தனி குதூகலம் இருந்தது. மகாராஷ்டிரர் களின் மிகச் சிறந்த மிக வலுவான கடற் கோட்டைகளில் ஒன்றான கொலாபா பார்ப்பதற்கு மிக அழகாயிருந்ததால் அதை அணுகு முன்பாக தளத்திலிருந்தே அதைப் பார்த்துப் பார்த்து இதயசந்திரன் மகிழ்வது வழக்கம். பம்பாய்க்குத் தெற்கே பத்தொன்பது மைல் தூரத்திலிருந்தது கொலாபா. ஆலிபாக்கிலிருந்து உட்புகுந்த கடலால் வெட்டி விடப்பட்டதால் தீவாகிவிட்டதும் சுற்றிலும் கடலலைகள் மோதப் பல கோவில்களுடனும் – மாளிகைகளுடனும், உயர்ந்த ஸ்தூபிகள் மூன்றுடனும், தாழ்ந்த கோட்டைச் சுவர்களுடனும், தென்னை மரங்களுடனும் காட்சியளித்த கடற்கோட்டையான கொலாபாவை அன்றும் அவன் பார்த்துப் பார்த்து இன்பமடைந்து நின்றான். அதைப் பார்த்ததாலேயே அவன் மாலுமி மனம் அதுவரை நடந்த நிகழ்ச்சிகளை மட்டுமின்றித் திருமணத்தையும்கூட மறந்து கொலாபாவின் மனோகர எழிலில் ஈடுபட்டதால் அவன் கூறினான் காதரைனைப் பார்த்து, “அதோ பார், நீர்மேல் ஒரு மலர்” என்று .

கொலாபாவைப் பற்றிய மட்டற்ற அவன் மகிழ்ச்சி யைப் பார்த்து அதில் பங்கு கொள்ள விரும்பாத அந்த வெள்ளை மகள் அவனுக்குப் பதிலேதும் சொல்லாமலே திரும்பிச் செல்ல முயன்றாள். ஆனால் ஒரே எட்டில் அவளைத் தாவிப் பிடித்த இதயசந்திரன், “வெள்ளைக் காரி! நீ என்னை மணம் புரியு முன்பு என்னிடம் பணியக் கற்றுக் கொள்ள வேண்டும். நான் சொல்வதைச் செவி மடுக்கப் பழகிக் கொள்ள வேண்டும்” என்று சீற்றத்துடன் சொற்களை உதிர்த்து அவள் கையைப் பிடித்துச் சரசரவென்று இழுத்துக் கொண்டு வந்து தளத்தின் முகப்பில் நிற்க வைத்து, “சரியாகப் பார். உனது பிற்கால இருப்பிடத்தைச் சரியாகப் பார்த்துக் கொள். என்ன அழகாயிருக்கிறது பார். இதற்குக் கொலாபா என்று ஏன் பெயர் தெரியுமா?” என்றும் வினவினான்.

அவள் பதிலேதும் சொல்லவில்லை. அவன் பிடி யினின்று திமிறவுமில்லை. கொலாபாவை வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றாள். அவனே மேற்கொண்டு ஒரு கையால் அவளை இறுகப் பிடித்தவண்ணம் இன்னொரு கையால் அந்தத் தீவைச் சுட்டிக்காட்டி, “காதரைன்! குல் என்றால் மலர், ஆப் என்றால் நீர். நீரில் இது ஒரு மலர்போல் துலங்குவதால் இதற்குக் குலாபா என்று பெயர். அதிலிருந்து மருவி வந்த சொல் கொலாபா. இந்தக் குலாபாவை ஆட்சி புரியும் தெய்வம் உண்டு. அவள் பராசக்தி. அவள் பெயர் குலாபி. மகிஷேசுவரி என்ற பெயரும் அவளுக்கு உ.ண்டு. மகிஷத்தின் நாக்கைக் கீழ் இடதுக் கரம் இழுத்துப் பிடிக்க, வலது கீழ்க் கரம் அதன் வாள் கொண்டு கொல்ல, மேல் இடது வலது கரங்கள் ஒன்று கேடயம் தாங்க, இன்னொன்று மகிஷத்தின் வாலைப் பிடித்து முறுக்க, நான்கு கரங்களுடனும் பயங்கர கரமும் அழகும் ஒன்று சேர்ந்த திருமுக மண்டலத்துடனும் விளங்கும் மகாசக்தியை இன்றிரவு விளக்கேற்றும்போது நாமிரு வரும் வணங்கி அவளருளைப் பெறலாம். தவிர…” என்று கூறிக்கொண்டே போனவனைச் சட்டென்று தடுத்தாள் காதரைன், ” நிறுத்து கறுப்பனே, நிறுத்து!” என்று கூறி.

அவளைத் திரும்பி நோக்கிய இதயசந்திரன் கேட்டான்: “நான் கறுப்பென்று யார் சொன்னது உனக்கு? நல்ல சிவப்பாயிற்றே நான்?” என்று.

“இந்தியர்களுக்கு நீ சிவப்பாயிருக்கலாம். ஆனால் வெள்ளைக்காரர்களுக்கு நீ கறுப்புதான். எப்படி இருந்தாலென்ன, உன் துணிவு மிக அதிகம்” என்று மேலும் கூறினாள் காதரைன்.

“கத்தாதே!” சுள்ளென்று எரிந்து விழுந்தான் தமிழன்.

“கத்துவேன். காதரைனை மணக்கக் கனவு காணும் கறுப்பனே, கத்துவேன். அந்தக் கல்லுருவத்திடம் என்னை வணங்க வைக்கக் கனவு காணும் உன்னைக் கொன்று விடுவேன்” என்று கூவினாள் காதரைன் மீண்டும் பதற்றத்துடன்.

இதயசந்திரன் அவள் கூச்சலையும் முகத்தில் விரிந்த கிலியையும் வெறுப்பையும் பார்த்து ஒரு விபரீதப் புன்முறுவல் கொண்டான். “கல்லுருவமா?” என்று கேட்டான் மெதுவாக.

“ஆம். கல்லுருவம். நீ ஏதோ தெய்வமென்றாயே, அது” என்று மேலும் சீறினாள் அவள்.

“குலாபியா! பராசக்தியா! அவள் கல்லா?”

“ஆம். கல், கல், கல்.”

“அது வெறும் கல்? சக்தி கிடையாது?”

“கிடையாது.”

“கல்லாகையால் சக்தி கிடையாதென்கிறாயா?”

“ஆம்.”

இதயசந்திரன் சற்று நிதானித்துவிட்டுச் சொன்னான். “கொலாபாவில் பாறையொன்றிருக்கிறது…” என்று.
“இருக்கட்டும்.”

”அது வெட்டுப் பாறை. குற்றவாளிகளை வெட்டுவார்கள்.’’

“அதனால்?”

“அந்த வெட்டுப் பாறையில் உன் தலையை மோதி உடைத்துவிடுகிறேன். அதுவும் கல்தான்!” என்று இதய சந்திரன் ராட்சதக் கண்களுடன் அவளைப் பார்த்தான். அன்று வரை அத்தனை பயங்கரத்தை அந்தக் கண்களில் அவள் பார்க்கவில்லை.

“இது அநீதி!”

“இல்லை, எங்கள் தெய்வத்தை நிந்தித்ததற்காக உனக்கு தரப்படும் தண்டனை.”

“இது தண்டனையா? இல்லை! இல்லை. குரூரம்! கொலை…”

இதைக் கேட்ட இதயசந்திரன் அவளைக் கூர்ந்து நோக்கினான். “காதரைன்! சென்னை வெள்ளைக்காரர்களுடன் நான் நெருங்கிப் பழகியிருக்கிறேன். உங்கள் மத சம்பந்தமான கதைகளைக் கேட்டிருக்கிறேன். ஸ்பானிஷ் இங்க்விசிஷன் என்ற விசாரணை முறையையும் தண்டனை முறைகளையும் கேட்டிருக்கிறேன். அந்தத் தண்டனை முறைகளையும் நான் கூறும் தண்டனையையும் இணைத்துப் பார். என் தண்டனை உனக்குப் பெரும் வரப் பிரசாதம் என்று தெரியும்” என்று கூறி மேலும் சொன்னான்: “உண்மையில் தத்துவங்கள் எல்லா மதங்களிலும்

ஒன்றுதான். அவற்றைக் கையாளும் இனத்தின் வெறிதான் தத்துவங்களை அர்த்தமற்றதாக்குகின்றன. ஆகவே, காதரைன்! குலாபியைப் பற்றிப் பேசும்போது யோசித்துப் பேசு” என்று கூறவும் செய்தான். மேலும் அவளை நோக்கி, “காதரைன்! நீ இஷ்டப்பட்டாலும் சரி, படாவிட்டாலும் சரி, உனக்குச் சீக்கிரம் தாலி கட்டப் போகிறேன். கொலாபாவில் கனோஜியின் மாளிகையில் என் மனைவியாக அதிக அதிகாரத்துடன் நீ விளங்கு வாய்!” என்று சொல்லிவிட்டு அவள் கையை விடுவித்தான். மிகுந்த எரிச்சலாலும் பயத்தாலும் கலங்கிய கண்களுடனும் தனது அறையை அடைந்த காதரைன் கட்டிலில் விழுந்து விம்மி விம்மி அழுதாள்.

தமிழனைத் தான் அப்பொழுதும் காதலிப்பதை உணர்ந்தாள். ‘காதல் வேறு, திருமணம் வேறு. இது புரியவில்லையே தமிழனுக்கு’ என்று மனத்துள் சொல்லியும் கொண்டாள். அவன் மணம் புரிவதற்குள் ஏதாவது ஒரு வழியும் கிடைக்குமென்று எண்ணினாள். ஏதேதோ எண்ணிக் கட்டிலில் புரண்டாள். கோட்டைக்கு வெகு அருகில் சென்று நங்கூரம் பாய்ச்சத் தொடங்கியதால் அலைகளில் பெரிதாக ஆடிய கப்பல் அவள் கட்டிலையும் சேர்த்து ஆட்டவே சிறிது அயர்ந்தும் விட்டாள் அவள்.

நங்கூரம் பாய்ச்சி, படகுகளை நீரில் இறக்கு வதற்கும், கோட்டையிலிருந்து வந்த படகுகளும் வீரர்களும் ஜல தீபத்தில் ஏறி வந்து இதயசந்திரனை வணங்கிக் கட்டளைக்கு எதிர்பார்த்து நிற்பதற்கும் சுமார் அரை ஜாமத்திற்கு மேல் ஆகிவிட்டதால் கைதிகளையும் ஜல தீபத் தில் தங்கிவிட்ட இப்ரஹீம், பர்னாண்டோ, ஹர்கோவிந்த் இன்னும் சில மாலுமிகள் இவர்களையும் தவிர அனை வரும் கோட்டையை அடைவதற்கு. உச்சிவேளை ஆகிவிட்டது. இதயசந்திரன் கா’தரைனைக் கோட்டை நடுவிலுள்ள தோர்லாவாடாவின் அறையொன்றில் தங்கியிருக்க உத்தரவிட்டு, தனது அலுவல்களைக் கவனிக்கச் சென்றான். அந்தக் கோட்டையின் காவலனிடம் கோட்டைக் காவல் விவகாரங்களைப் பற்றி விசாரித்துவிட்டு, காதரைனுக்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுக்கப் பணித்துவிட்டு, ஜல தீபத்திலுள்ள மாலுமிகளுக்கு உணவு. அனுப்பித் தேவையானதைக் கவனிக்குமாறும் உத்தரவிட்டுவிட்டுக் கடலில் நீராடச் சென்றான். நீண்டநேரம் கடலில் நீந்தித் துளைந்துவிட்டுத் தோர்லாவாடாவுக்குத் திரும்பி, புத்தாடை அணிந்து உண்டு களைப்பாறினான். பிற்பகலில் ஒருமுறை கோட்டைக் காவலனையும் அழைத்துக்கொண்டு காவலைச் சுற்றிப் பார்த்தான்.

கொலாபாவின் கோட்டைக் காவல் ஆங்கரேயின் திட்டப்படி இருந்ததால் சரியான கெடுபிடியுடனேயே இருந்தது. வடக்குத் தெற்காக சுமார் 900 அடி நீளமேயிருந்த அந்தக் கற்கோட்டையில் வடகிழக்கில் இருந்து மகா தர்வாஜாவும் (பெரிய வாயிலும்) தெற்கிலிருந்த சிறு வாயிலும் நன்றாகக் காக்கப்பட்டிருந்ததன்றி மொத்தமிருந்த பதினேழு ஸ்தூபிகளில் பழுதில்லாமலிருந்த மூன்று ஸ்தூபிகளும் சரியாகக் காவல் செய்யப்பட்டிருந்ததையும் அவற்றின் மீதிருந்த காவலர் நாலா பக்கங்களிலும் கண் களைச் செலுத்தி உஷாராயிருந்ததையும் கவனித்துத் திருப்தி அடைந்தான் இதயசந்திரன். பிறகு அங்கிருந்த கணபதி, மாருதி, பத்மாவதி ஆகிய தெய்வங்களைத் தரிசித்துக் கொண்டு குலாபியின் கோவிலுக்குச் செல்லாமல் அதற்குப் பின்னிருந்த கட்டிடங்களை நோக்கிச் சென்றான்.

”குலாபியைத் தரிசிக்கவில்லையே நீங்கள்?” என்று கோட்டைத் தலைவன் நினைவுபடுத்தினான்.

“இரவு தரிசிக்கிறேன்” என்றான் இதயசந்திரன்.

“ஏன்?”

“அவளும் வருவாள் என்னுடன்.”

“யார் அது?”

“அந்த வெள்ளைக்காரி.”

“கைதியா?”

“ஆம்.”

காவலன் மலைத்து நின்றான் சில வினாடிகள். “அவளை நாம் கோயிலுக்குள் அனுமதிக்க முடியாது” என்றான் திடமாக.

“ஏன்?”

“அவள் பிற மதத்தவள்.”

“பராசக்திக்கு மத வேற்றுமை உண்டா?”

“இல்லை. ஆனால் பார்ப்பவர்கள் பராசக்தியிடம் பக்தியால் வரவில்லை. வேடிக்கை பார்க்க வருகிறார்கள். நமது தெய்வங்கள் கண்காட்சிப் பொருள்கள் அல்ல.”

இதைக் கேட்ட இதயசந்திரன் சற்று இரைந்து நகைத்துவிட்டுக் குலாபி கோயிலுக்குப் பின்னாலிருந்த கட்டிடங்களை நோக்கிச் சென்றான். அதைக் கண்ட கோட்டைக் காவலன் பெரிதும் வெறுப்புடன் “அங்கு சண்டையிடும் ஆடுகள், மான்கள், கோழிகள் இவற்றைத் தான் வைத்திருக்கிறோம்” என்று சுட்டிக் காட்டினான்.

” எனக்குத் தெரியும் அது” என்றான் இதயசந்திரன்.

“குலாபியைத் தரிசிக்க வேண்டாம், அவற்றைத் தரிசிக்க வேண்டுமா?” என்று சீறினான் காவலன்.

காவலன் சீற்றத்தைக் கண்டு சீற்றம் கொள்ளவில்லை ஜலதீபத்தின் தளபதி. கோட்டையின் நிர்வாகி சாதாரணத் தலைவன், தன்னை எதிர்த்துப் பேச என்ன உரிமை இருக்கிறதென்று நினைக்ககூட இல்லை. அவன் நேரிடை யாக அந்தக் கட்டிடங்களுக்குச் சென்று அங்கிருந்த சண்டையிடும் விலங்குகளை நீண்ட நேரம் பார்த்தான். தடவிக் கொடுத்தான். உணவும் அவற்றுக்குத் தன் கையால் கொடுத்தான். பிறகு மீண்டும் வந்தான் தோர்லாவாடாவுக்கு.

குலாபியின் கோயில் மணியும் அந்தி பூஜை துவங்கி விட்டதைக் கணீர் கணீர்’ என்று அறிவித்தது. அதைக் காதில் வாங்கிக்கொண்டு கனோஜியின் பெரிய அரண்மனையில் கனோஜியின் பெரிய அறையில் பிரிட்டிஷாரிடமிருந்து கைப்பற்ற ஆசனமொன்றில் அமர்ந்திருந்த இதயசந்திரன் சிந்தனையில் ஆழ்ந்து கிடந்தான். குலாபி கோயிலின் அர்ச்சகர் காத்திருக்கிறார் என்ற செய்தியைக் கொண்டு வந்த வீரனை வெறித்து நோக்கிய தமிழன் திடீரென்று எழுந்து, ”சரி, போகலாம் வா” என்று வெளியே சென்றான்.

அவன் வேகத்தைக் கவனித்த வீரன் கேட்டான்: “அந்த வெள்ளைக்காரியை அழைத்துப் போக வேண்டாமா?” என்று. “இன்று வேண்டாம், நாளை அழைத்துப் போகலாம்.”

அவனைப் பின்பற்றிச் சென்ற வீரன், “நாளைக்கு என்ன விசேஷம்?” என்று வினவினான்.

“இன்று அவள் கிறிஸ்துவ மதம், நாளை ஹிந்து மதம்.”

“மன்னிக்க வேண்டும். ஏழை தலைவருக்குச் சுட்டிக் காட்டுவது தவறு. நமது மதத்தில் மதம் மாற முடியாது” என்றான் காவலன் திட்டமாக.

“ஏன்?”

“நமது மதம் எல்லா மதங்களையும் உயர்ந்த மதங் களாக ஒப்புக் கொள்கிறது. ஆகையால் அங்கிருந்து யாரையும் இங்கு இழுக்கத் தேவையில்லை. தவிர…”

“என்ன?”

“இங்கிருப்பவர்களுக்கே மத நம்பிக்கை அதிகம் இல்லை. அங்கு நம்பிக்கையுடனிருப்பவர்களை இங்கு இழுத்து அவர்களையும் நாத்திகர்களாக அடிப்பானேன்?”

வீரன் பேச்சு திட்டமாக இருந்தது. அதைப் பெரிதும் ரசித்தான் இதயசந்திரன். இருப்பினும் மேற்கொண்டு மத தர்க்கத்தை வளர்த்தாமல் குலாபியின் கோயிலுக்குள் நுழைந்தான். குலாபியின் உக்கிர சொரூபம் அவன் உள்ளத்தில் பக்தி, பயம் இரண்டையும் தோற்றுவித்தது. அந்தப் பயத்திலும் பக்தியிலும் நீண்ட நேரம் தோய்ந்து நின்ற தமிழன் தாயின் அடியிணைகளைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொண்டான். ” காப்பாற்று தாயே” என்று மண்டியிட்டு வணங்கவும் செய்தான்.

குலாபியின் அருளும் உக்கிரமும் நிறைந்த பார்வை அவன்மீது பூரணமாக விழுந்தது. அவன் மனச் சிக்கல் களை அது மட்டும் உடைக்கவில்லை. அவள் அருளால் எதிர்பாராது ஏற்பட்ட நிகழ்ச்சியும் சிக்கலை உடைத்தது. கோயிலிலிருந்து அவன் வெளியே வந்ததும் ஒரு வீரன் காத்திருந்தான் அவனுக்காக.

“என்ன விசேஷம்?” என்று வினவினான் தளபதி அவனை நோக்கி. “தூதர் வந்திருக்கிறார்.”

“யாரிடமிருந்து?”

“பம்பாய் கவர்னரிடமிருந்து.”

இதயசந்திரன் சற்றுச் சிந்தித்துவிட்டு, “ஒரு விடுதியில் அவரையும் அவருடன் வந்திருப்பவரையும் தங்க வை. நாளை பார்க்கிறேனென்று சொல்” என்று உத்தரவிட்டான்.

வீரன் நகரவில்லை. “தங்களை உடனடியாகப் பார்க்க வேண்டுமாம். விஷயம் மிக அவசரமாம்” என்றான்.

“என்ன அப்பேர்ப்பட்ட அவசரமாம்?” என்று வினவினான் தமிழன்.

“கையில் ஒரு சிறு மூட்டை கொண்டு வந்திருப்பதாகச் சொன்னார்.”

“என்ன அந்த மூட்டையின் விசேஷம்?”

“அதில் முப்பதினாயிரம் ரூபாய்கள் இருக்கின்றனவாம்.”
இதைக் கேட்ட இதயசந்திரன் அசைவற்று நின்றான்

Previous articleJala Deepam Part 2 Ch21 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 2 Ch23 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here