Home Historical Novel Jala Deepam Part 2 Ch23 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 2 Ch23 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

58
0
Jala Deepam Ch23 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 2 Ch23 | Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 2 Ch23 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் –23 கவர்னரின் தூதுவன்

Jala Deepam Part 2 Ch23 | Jala Deepam | TamilNovel.in

பம்பாய் கவர்னரிடமிருந்து தூதுவனொருவன் வந்திருக்கிறானென்பதையும் அவன் முப்பதினாயிரம் ரூபாயையும் கொண்டு வந்திருக்கிறானென்பதையும் கேட்ட மாத்திரத்தில் இதயசந்திரன் அதிர்ச்சியுற்று அசைவற்றுச் சில வினாடிகள் நின்றுவிட்டானென்றால் அதற்குக் காரணங்கள் பல இருந்தன.

கொலாபாவைத் தான் அடையுமுன்பாகவே கவர்ன ருக்குத் தன் வருகை தெரிந்ததோடு கொடுக்க வேண்டிய ஈட்டுப் பணமும் தெரிந்திருந்தது பெரும் வியப்பைத் தந்தது அவனுக்கு. நான் வந்து சிலமணி நேரங்களுக்குள் கவர்னர் தூதனும் வர முடிந்தது அகஸ்மாத்தாக நேர்ந்ததா, முன்பாகவே கணக்கிட்டுத் தீர்மானிக்கப்பட்டதா? முன்பே தீர்மானிக்கப்பட்டதென்றால் யாரால் அது தீர்மானிக்கப்பட்டது?’ என்ற கேள்விகளை அவன் உள்ளத்தே எழுப்பிக் கொண்டாலும் அவற்றுக்கெல்லாம் விடை காணாமல் நின்ற இடத்தைவிட்டு ஏதும் பேசாமலே நடக்கத் தொடங்கி வந்த வீரனைப் பின்பற்றி தோர்லாவாடாவிற்குச் சென்றான். அந்தப் பெரிய அரண்மனையின் ஆஸ்தான மண்டபத்தின் நட்ட நடுவி லிருந்த பெரு மஞ்சத்தில் அமர்ந்து கொண்டதும் இரு வீரர்களை அழைத்துக் கவர்னரின் தூதரை அழைத்துவரக் கட்டளையிட்டான். வீரர்கள் சென்றதும் நாலைந்து வீரர்களுடன் உள்ளே நுழைந்த கோட்டைக் காவலன், வீரர்களை மஞ்சத்திலிருந்து எட்டக் காவல் வைத்து, “தளபதி, தூதருடன் தாங்களே நேரில் பேசுகிறீர்களா அல்லது *பரஸ்னிஸை அழைக்கட்டுமா?” என்று பணிவுடன் வினவினான்.

பரஸ்னிஸ் என்பவர்கள் மொழிபெயர்ப்பாளர்கள். மற்ற மொழியாளருடன் பேச்சு வார்த்தை நடத்த மகாராஷ்டிரர்கள் இவர்களை நியமித்திருக்கிறார்கள்.

“தேவையில்லை. நானே பேசுகிறேன். தூதரை அனுப்புங்கள்” என்று உத்தரவிட்டான் கோட்டைக் காவலனிடம் தளபதி.

அடுத்த நாலைந்து நிமிடங்களில் இரண்டு வெள்ளைக் காரர் ராணுவ உ.டையில் காவல் புரிந்துவர, ஆஜானுபாகு வான ஓர் ஆங்கிலேயன் ஆஸ்தான மண்டபத்துக்குள் நுழைந்தான். அவன் முகம் வெகு அழகாயிருந்ததையும், ராணுவ உடையில் அவன் வராது போனாலும் இடையில் ஒரு கைத்துப்பாக்கி செருகப்பட்டிருந்ததையும் அவன் கண்களில் கோபமோ தாபமோ சிறிதுமின்றி அவை வெகு நிதானத்துடன் தன்னை ஏறெடுத்து நோக்கியதையும் கண்ட இதயசந்திரன், எதையும் விழுங்கிவிடக் கூடிய ஒரு நுழைநரியிடம் தான் சிக்கிக்கொண்டிருப்பதை உணர்ந் தான். வந்த தூதன் இதயசந்திரனிருந்த மஞ்சத்துக்கு நாலடி தள்ளியே நின்று தலை வணங்கிவிட்டு சம்பிரதாய மெதற்கும் காத்திராமல் கூறினான் மிக இன்பமான குரலில், “ஈட்டுப் பணம் கொண்டு வந்திருக்கிறேன்” என்று. அத்துடன் பக்கத்திலிருந்த வெள்ளை வீரர்கள் ஆளுக்கிரண்டாக வைத்திருந்த உரமான முரட்டுப் பைகள் நான்கையும் சுட்டிக் காட்டினான்.

இதயசந்திரன் அவனைச் சற்று எட்ட இருந்த ஆசனத் தில் அமரச் சொல்லிவிட்டு அவனமர்ந்ததும் ஈட்டுப் பணம் யார் கேட்டது? யாருக்காகக் கேட்டது?” என்று வினவினான்.

கவர்னரின் தூதன் சிரிக்கும் விழிகளை அவன்மீது நிலைக்கவிட்டான் ஒரு விநாடி. பிறகு கடையிதழில் புன்முறுவலொன்றை லேசாகப் படரவிட்டுக் கொண்டு, “பிரிட்டிஷ் பெண்மணியொருத்தி உங்களிடம் கைதியா யிருக்கிறாள். அவளுக்காகவும் நீங்கள் கொள்ளையடித்துப் பிடித்த இரு கப்பல்களுக்காகவும் ஈட்டுப் பணம் கொண்டு வந்திருக்கிறேன். பிரிட்டிஷ் ரூபாய் முப்பதினாயிரம் அப்படியொன்றும் லேசில் கிடைக்கக்கூடிய தொகையல்ல” என்று கூறினான் தூதுவன்.

இதயசந்திரன் கண்கள் தூதுவனைக் கூர்ந்து கவனித்தன. “அந்தத் தொகையை நான் ஏற்காவிட்டால்?” என்று வினவினான் இதயசந்திரன், தூதுவன் கடையிதழில் தெரிந்த புன்முறுவலுக்குக் காரணம் புரியாமல்.

“ஏற்காதிருக்க முடியாதென்று நினைக்கிறேன்” என்றான் தூதுவன்.

“யார் என்னைக் கட்டாயப்படுத்த முடியும்?” என்று மீண்டும் வினவினான் தளபதி.

“நான்.”

“நீங்களா?”

“ஆம்.” தூதன் பதில் திட்டமாக இருந்தது.

இதயசந்திரன் அந்தப் பதிலைக் கேட்டு மெல்ல நகைத் தான். அந்தச் சிரிப்பைச் சிறிதும் லட்சியம் செய்யாத தூதுவன் கூறினான், “என் பெயர் வில்லியம் கிப்போர்ட்” என்று .

அந்தப் பெயரைக் கேட்டதும் சிறிது அசந்து போன இதயசந்திரன், “அஞ்சன்கோடு மிளகு ராணியின் நண்பரா’ என்று வியப்புடன் வினவினான்.

அரபிக் கடல் பிராந்தியத்தில் மிகவும் பிரசித்தி பெற்றிருந்த ஆங்கிலேயரின் பெயர்களில் முதன்மை ஸ்தானம் வகித்தது வில்லியம் கிப்போர்ட்டின் பெயர். அவனும் கடற்போரை நன்கு அறிந்தவன். கவர்னரிடமும் உத்தியோகம் பார்த்தவன். சொத்தக் கப்பல் வைத்து வியாபாரமும் செய்து வந்தான். அஞ்சன்கோடு ராணியிடம் மிளகு வாங்கி வெளிநாடுகளுக்கு அனுப்பி ஈஸ்ட் இந்தியா கம்பெனிக்குத் தெரிந்தும் தெரியாமலும் நிரம்பப் பணம் சேர்த்திருந்தான். இந்திய மக்களிடம் நெருங்கிப் பழகக் கூடியவனென்றும், காரியம் எதுவானாலும் திட்டத்துடன் நிறைவேற்றக் கூடியவனென்றும் பிரசித்தி பெற்றவன். அவனைப்பற்றிப் பெரிதும் கேள்விப்பட்டிருந்ததால் இதயசந்திரன் அவனைப் பார்த்ததும் பெரு வியப்பெய்தினான். ஏனென்றால் வந்தவன் தன்னைவிடப் பெரியவனென்றாலும், அவனுக்குச் சுமார் முப்பத்தைந்து! வயதுக்குள்ளேயே இருக்குமென்று கணக்குப் போட்டதால் இத்தனைச் சிறிய வயதில் அனுபவம் முதிர்ந்த வயோதிக, பிரிட்டிஷ் வர்த்தகர்கள்கூடச் செய்யமுடியாத எத்தனை வியாபாரங்களை கிப்போர்ட் செய்திருக்கிறானென்று தன்னைத்தானே வினவிக்கொண்ட தளபதி சற்று நிதானித்துக் கொண்டு கூறினான்: “தூதுவரே! இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தால் இந்தத் தொகையை நான் ஏற்றுக் கொண்டிருப்பேன். காதரைனையும் அனுப்பி யிருப்பேன். ஆனால் இன்றைய நிலைமை வேறு. காதரைனை நான் அனுப்ப முடியாது மற்ற கைதிகளை வேண்டுமானாலும் அனுப்புகிறேன். நாங்கள் பிடித்த கெட்ச், ஆன், கவர்னர் ஆயுதக் கப்பல் இரண்டையும் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்” என்று.

தூதுவன் அனாவசியமாகப் பேச்சை வளர்த்தவில்லை. தனது ஆசனத்திலிருந்து எழுந்து இதயசந்திரனுக்கு அருகில் வந்து மடியிலிருந்து ஒரு சீலைச் சுருளை எடுத்து, “இதைப் படியுங்கள்” என்று அவனிடம் நீட்டினான்.

சீலையை பிரித்துப் பார்த்த இதயசந்திரன் கண்கள் நீண்ட நேரம் சீலையிலே மலைத்து நின்றுவிட்டதால் அவன் பேசச் சக்தியற்றவனானான். அந்தச் சீலையிலிருந்தது கனோஜி ஆங்கரே பம்பாய் கவர்னருக்கு எழுதிய கடிதம். “கார்வாரிலிருந்து கிளம்பி எனது தஸ்தக்கின்றி மேலைக் கடலில் பயணம் செய்ததால் உங்கள் ஆயுதக் கப்பலும் ஆன் என்ற கப்பலும் எனது போர்க் கப்பலொன்றால் கைப்பற்றப்பட்டன. பிடிபட்ட கப்பலையும் அதிலிருந்த பிரிட்டிஷ் பெண் காதரைன், மற்றுமுள்ள மாலுமிகள் ஆகியோரையும் நீங்கள் முப்பதினாயிரம் ரூபாய் கொடுத்துத் திரும்பிப் பெற வேண்டியது. இந்தத் தொகையைக் கொலாபாவிலுள்ள எனது உபதளபதி இதயசந்திரனிடம் கொடுத்தால் உடனடியாகக் காதரைனையும், மற்ற கைதிகளையும் உங்களிடம் ஒப்படைக்க அவருக்கு உத்தரவிருக்கிறதுகனோஜி” என்றிருந்த அந்தக் கடிதத்தின் வாசகத்தைப் படித்த இதயசந்திரன் கல்லென சில விநாடிகள் உட்கார்ந்து விட்டான். முடிவில் கூறினான், “இதைப் பற்றிச் சிந்திக்க எனக்கு அவகாசம் கொடுக்க வேண்டும்” என்று .
வில்லியம் கிப்போர்ட்டின் விழிகளில் இகழ்ச்சிச் சிரிப்பு உலாவியது. “கனோஜி ஆங்கரேயிடம் உள்ள ஒரே ஒரு தமிழ்த் தளபதி நீங்கள் தானே?” என்று வினவினான் கிப்போர்ட்.

இதை எதற்காகக் கேட்கிறான் கிப்போர்ட் என்பதை அறியாத இதயசந்திரன், ‘ஆம், அதற்கென்ன?” என்று பதிலுக்கு ஒரு கேள்வியை வீசினான்.

“நீங்கள் அறிவாளியென்று கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றான் கிப்போர்ட் இகழ்ச்சி மிகுந்த குரலில்.

“அப்படியா!’ என்ற இதயசந்திரன் குரலிலும் இகழ்ச்சி ஒலித்தது. கிப்போர்ட் தன்னைப்பற்றி இகழ்ச்சி யாகப் பேசியதுமே சுரணைகள் பூராவையும் திரும்பப் பெற்று விட்ட இதயசந்திரன் கிப்போர்ட்டை மிகுந்த அலட்சியத்துடன் நோக்கவும் செய்தான்.

இதயசந்திரன் குரலில் ஒலித்த இகழ்ச்சியையும் அவனது கண்கள் திடீரெனப் பளிச்சிடத் தொடங்கி விட்ட தையும் கண்ட கிப்போர்ட் சற்று எச்சரிக்கையடைந்து மிகத் தந்திரமாகப் பேச்சைத் தொடர முற்பட்டு, “நீங்கள் கண்ணியவானென்றும் கேள்விப் பட்டிருக்கிறேன்” என்றான்.

“மகிழ்ச்சி.” இதயசந்திரனின் ஒற்றைச் சொல் மிகுந்த இகழ்ச்சியுடன் ஒலித்தது.

“எனக்கும் மகிழ்ச்சிதான். எனக்கென்ன, கவர்னருக்கும் மகிழ்ச்சிதான்” என்றான் கிப்போர்ட்.

“எதற்கு உங்களுக்கு மகிழ்ச்சி?”

“காதரைன் உங்களிடம் சிக்கியதற்காக, உங்கள் பாதுகாப்பில் அனுப்பப்பட்டதற்காக.”

“அதிலென்ன விசேஷம்?”

“உங்களுக்கிருக்கும் நற்பெயர் உண்மையானால் காதரைன் சீரழிக்கப்படாமல் எங்களிடம் சேருவாளென்ற நம்பிக்கையிருக்கிறது.”

“நீங்கள் கூறியதில் ஒரு பாதி சரி. ஒரு பாதி தவறு” என்று மெல்லக் கூறினான் இதயசந்திரன்.

கிப்போர்ட்டின் கண்கள் சற்றே உயர்ந்தன. அதுவரை அவற்றிலிருந்த விஷமச் சிரிப்பு மறைந்து கவலை லேசாகத் தெரிந்தது. “எந்தப் பாதி சரி, எந்தப் பாதி தவறு?” என்று வினவிய குரலிலும் கவலை தெரிந்தது.

“என் காவலில் வரும் காதரைன் சீரழிக்கப்பட மாட்டாள் என்ற பகுதி சரி. உங்களிடம் அவள் சேரப் போகிறாள் என்ற பகுதி தவறு” என்று விளக்கினான் இதயசந்திரன்.

கிப்போர்ட்டின் கண்களில் கவலையுடன் குழப்பமும் தெரிந்தது. “இரண்டுக்கும் வேறுபாடு எப்படி இருக்க முடியும்? பாதுகாத்துக் கண்ணியத்துடன் அழைத்து வரப் பட்ட காதரைன் எப்படி எங்களிடம் சேராதிருக்க முடியும்? அவளை அனுப்பச் சொல்லி கனோஜியின் உத்தரவும் இருக்கிறதே” என்றான் கிப்போர்ட்.
இதயசந்திரன் சர்வ சாதாரணமாகச் சொன்னான், ”உத்தரவை மாற்ற அவசியமிருக்கிறது” என்று.

“என்ன! மாற்ற அவசியமிருக்கிறதா?” இதைக் கேட்ட கிப்போர்ட்டின் குரலில் பிரமிப்பு தெரிந்தது. “கனோஜி யின் உத்தரவை யார் மாற்ற முடியும்” என்ற இரண்டாவது கேள்வியும் அவனிடம் தொடர்ந்தது.

“சந்தர்ப்பங்கள் மாற்ற முடியும்” என்று பதில் கூறினான் இதயசந்திரன்.

“சந்தர்ப்பங்களா?”

“ஆம்.”

“என்ன அப்பேர்ப்பட்ட சந்தர்ப்பங்கள்?”

“காதலைப் பற்றியவை.”

”யாருக்குக் காதல்?”

”எங்களுக்குத்தான்.”

”எங்களுக்கென்றால்?”

“எனக்கும் காதரைனுக்கும்.”

இதைக் கேட்ட கிப்போர்ட் சில விநாடிகள் மிதமிஞ்சிய திகைப்பால் அசைவற்று உட்கார்ந்து விட்டான். பறகு மெல்ல உறுதி மிகுந்த குரலில் கேட்டான், “நீ காதரைனைக் காதலிக்கிறாயா?” என்று.

“ஆம்.”

“அவள்?”

“பூர்ணமாகக் காதலிக்கிறாள்.”

“அப்படியானால் அவளை மணம் செய்து கொள்வாயா?”

“செய்து கொள்ளத் தீர்மானித்து விட்டேன்.”

“அப்படியானால் முப்பதினாயிர ரூபாய்!”

“கடற்படைத் தலைவருக்கு நான் தந்துவிடத் தீர்மானித்திருக்கிறேன்.”

கிப்போர்ட் பல விநாடிகள் மௌனமாக உட்கார்ந்து விட்டான். பிறகு கேட்டான்: “உன் திருமணத்துக்குப் பிறகு பிரிட்டிஷ் சமுதாயத்தில் அவள் நிலை என்ன தெரியுமா?”

“தெரியும். அவளை உங்கள் சமுதாயம் பகிஷ்கரித்து விடும்” என்றான் இதயசந்திரன்.

“அதுமட்டுமல்ல தளபதி! அவளை பிரிட்டிஷ்காரர் மட்டுமல்ல, வெள்ளைக்காரர் அனைவரும் வெறுப்பார் கள். உங்களிடம் பிடிபட்டதால் இப்பொழுதே அவள் பிரிட்டிஷ் வரலாற்றில் இடம் பெற்றுவிட்டாள். உன்னைத் திருமணம் செய்து கொண்டால் வரலாற்றில் இன்னும் நிரந்தரமான இடம் பெறுவாள். மிகவும் கேவலமான பிற்கால சந்ததிகளும் காறித் துப்பும்படியான இடத்தைப் பெறுவாள். இது உங்களுக்குச் சம்மதமா?” என்றும் கேட்டான் கிப்போர்ட் உணர்ச்சியுடன்.

“இதையெல்லாம் கேட்டியே சொன்னாள்” என்றான் இதயசந்திரன் பதிலுக்கு.

காதரைன் பெயரைச் செல்லமாக இதயசந்திரன் உச்சரித்ததைக் கேட்டதால் முகஞ் சுளித்தான் கிப்போர்ட்.

இத்தனை தூரத்துக்கு காதரைனுக்கும் இவனுக்கும் உறவு. முற்றியிருக்கக் கூடுமா என்று தன்னைத்தானே ஒருமுறை கேட்டுக் கொண்டான். இருப்பினும் தனது சந்தேகத்தை வெளிக்குக் காட்டாமல் சற்று மரியாதையாகவே கேட்டான், “தளபதி! இதை அறிந்தும் அந்தப் பெண்ணை மணக்க விரும்புகிறீரா?” என்று.

“ஆம்.”

“இதில் அவள் தியாகம் எத்தனை தெரியுமா?” “தெரியுமென்பதைத்தான் முன்பே கூறினேனே.”

“இத்தகைய தியாகத்தை வீரனான நீங்கள் ஏற்கப் போகிறீர்களா?” என்று கேட்டான் கிப்போர்ட்.

“கிப்போர்ட்!” என்றழைத்த இதயசந்திரன், “தியாகம் அவளுடையது மட்டுமல்ல, எனது தியாகமும் இதில் கலந்திருக்கிறது” என்று கூறினான்.

“ஆடவனுக்கு இதில் என்ன தியாகமிருக்க முடியும்?” என்று சற்று முகத்தை அதிகமாகவே சுளித்துக்கொண்டு கேட்டான் கிப்போர்ட்.

“கறுப்பனை மணந்தால் காதரைன் எப்படி உங்கள் சனாகத்திலிருந்து பகிஷ்கரிக்கப்படுவாளோ அப்படி வெள்ளைக்காரியை மணந்தால் என் சமுதாயம் என்னை பகிஷ்கரிக்கும். என்னுடன் மற்ற இந்துக்கள் உணவருந்த மாட்டார்கள். எங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுடன் சம்பந்தம் செய்து கொள்ள மாட்டார்கள். ஆகவே எங்கள் இருவர் நிலையும் ஒன்றுதான்” என்று விளக்கினான் தளபதி.

கிப்போர்ட் சிந்தித்தான். “இன்னும் ஒரு கேள்வி தளபதி! காதரைன் உங்களைத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதிக்கிறாளா?” என்று வினவினான் கிப்போர்ட்.

 “இல்லை!''

  இதயசந்திரன் திட்டமாகக் கூறினான். உண்மையை.

“உன்னைக் காதலிக்கிறாளா காதரைன்?” என்று வீசினான் கிப்போர்ட் இன்னுமொரு கேள்வியை.

“ஆம்.” இதயசந்திரன் பதில் தடங்கலின்றி வந்தது.

கிப்போர்ட் இதயசந்திரனுக்கு வெகு அருகில் வந்து நின்றுகொண்டான். “காதலிப்பவள் உன்னை மணக்க. ஏன் மறுக்கிறாள்?” என்று வினவவும் செய்தான் நிதானத்துடன்.

“சமுதாயத்திற்கு அஞ்சுகிறாள்.” “ஆனால் மணமின்றி உன்னைக் காதலிக்க இஷ்டப்படுகிறாள்?” வெகு இரைந்து சீறினான் கிப்போர்ட்.

“ஆம்.”

இதைச் சொல்லி முடிக்கவில்லை இதயசந்திரன். மிகப் பயங்கர நிகழ்ச்சி நேர்ந்துவிட்டது அந்த ஆஸ்தான மண்டபத்தில். நிகழ்ச்சியைக் கண்டவர் சிலையெனச் சமைந்து நின்றனர்.

Previous articleJala Deepam Part 2 Ch22 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 2 Ch24 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here