Home Historical Novel Jala Deepam Part 2 Ch25 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 2 Ch25 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

55
0
Jala Deepam Ch25 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 2 Ch25 | Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 2 Ch25 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் –25 கேலிக் கூத்து

Jala Deepam Part 2 Ch25 | Jala Deepam | TamilNovel.in

அமைதியைக் குலைக்கும் சக்திகள் சிருஷ்டியில் அனந்தம். அவற்றை வெற்றி கொள்கிறவனுக்கே சாந்தி கிடைக்கிறது. அவற்றின் வழி செல்பவனுக்குச் சித்தத்தில் சலனமும், வாழ்வில் ஏமாற்றமுமே கிடைக்கின்றன. அத்தகைய சலனத்தையும், ஏமாற்றத்தையும் மூன்று பெண்கள் மூலம் அடைந்த இதயசந்திரன், ஜல தீபத்தின் தளபதி பஞ்சணையில் ஏதேதோ நினைத்த வண்ணமே கிடந்தான். கண்ணை எத்தனையோ இறுக மூடியும் உறக்கம் வரவில்லை அவனுக்கு.

‘கண்ணை மூடுவதால் புலன்களை மூட முடிவதில்லை. புலன்கள் மூடினால் கண் தாமாகவே மூடும். அப்பொழுது தான் நித்திரை எனும் சாந்தி கிடைக்கும்’ என்ற தத்துவம்கூட அந்தச் சமயத்தில் அவன் புத்தியில் உலாவ லாயிற்று. இப்படிப் பெண்களையும் தத்துவங்களையும் அவன் நினைத்துப் படுத்துக் கிடந்தானே தவிர வில்லியம் கிப்போர்ட்டைப் பற்றியோ மறுநாள் ஏற்படவிருந்த சண்டையைப் பற்றியோ அவன் நினைக்கவில்லை. ஆகவே, விடியற்காலைக்குச் சற்று முன்பாகவே அவனையும் மீறி உறக்கம் ஆட்கொண்டபோது நன்றாகவே அயர்ந்து தூங்கினான். அவனை எழுப்பப் பலமுறை ஹர்கோவிந்த் கதவைத் தட்டவேண்டியதாயிற்று.

ஹர்கோவிந்த் மடமடவெனப் பலமுறை கதவைத் தட்டியதன் விளைவாக, எழுந்திருந்த இதயசந்திரன் பஞ்சணையில் உட்கார்ந்தபடியே கைகால்களை நன்றாக உதறி விட்டுக் கொண்டான். பிறகு வெளியில் வந்து அங்கு பூர்ணமாக ஆயுதங்களணிந்து நின்ற ஹர்கோவிந்த், இப்ரஹீம், பர்னாண்டோ மூவரையும் பார்த்துப்

புன்முறுவல் செய்துவிட்டு மாலுமியொருவனை விளித்து, பல் துலக்கவும் முகம் கழுவவும் நீர் கொண்டுவரச் சொல்லித் தன்னைத் தயார் செய்து கொண்டு புறப்படச் சித்தமாகவே, இப்ரஹீம் படகொன்றை இறக்கினான் நீர் மட்டத்துக்கு. நூலேணி மூலம் அதிலிறங்கிய நால்வரில் இப்ரஹீம் துடுப்புகளை எடுத்துத் துழாவவே படகு கோட்டையை நோக்கிச் சென்றது.

அன்று காலை மிக ரம்மியமாயிருந்தது. வெள்ளி மட்டுமே முளைத்த அந்த நேரத்தில், தும்பைப் பூவைப் போல் வெளிறிட்டுக் கிடந்த வெண்மதியின் நிலவும் குறைந்த அந்த நேரத்தில், கடல் நீர் கண்ணாடி போல் பளபளத்தது. காற்றும் மிகச் சுகமாக வீசிக் கொண்டிருந்தது. கோட்டைப் பாறையின் மீது தாக்கிய அலைகள் கூடப் பாறையைக் கண்ணாடியாக நினைத்து வெகு ஜாக்கிரதையாக மெல்லத் தாக்கிக் கொண்டிருந்தது. அந்த இன்பத்தையும் ஜில்லென்ற காற்றையும் அனுபவித்துக் கொண்டே படகில் உட்கார்ந்திருந்த இதயசந்திரனை நோக்கி மெல்லக் கேட்டான் ஹர்கோவிந்த், “கோட்டை யில் ஏதாவது தகராறை எதிர்பார்க்கிறீர்களா?” என்று.

இதயசந்திரன் அவனை நோக்கிப் புன்முறுவல் செய் தான். பிறகு கூறினான், “இல்லை. எந்தத் தகராறையும் நான் எதிர்பார்க்கவில்லை” என்று.

“அப்படியானால் எதற்காக எங்களை ஆயுதமணிந்து வரச் சொன்னீர்கள்?” என்று வினவினான் பர்னாண்டோ.

“சாட்சியம் வேண்டும். அதற்காகத்தான்” என்று சர்வ சாதாரணமாகக் கூறினான் தளபதி.

அதுவரை ஏதும் பேசாமல் துடுப்புகளைத் துழாவிக் கரையை நோக்கிப் படகைச் செலுத்திக் கொண்டிருந்த இப்ரஹீம் கேட்டான், ”எதற்கு சாட்சி தளபதி?” என்று.

“இன்னும் சிறிது நேரத்தில் ஒருவனுடன் சண்டையிட வேண்டும்…” என்ற இதயசந்திரனை மேற்கொண்டு பேச விடாத அம்மூவரும் ஏககாலத்தில் மிகுந்த உற்சாகத்துடன், “சண்டையா? யாருடன்?” என்று வினவினார்கள்.

“ஒரு வெள்ளைக்காரனுடன்” என்று கூறினான் தளபதி.

“எதற்காகத் தளபதி?” என்று வினவினான் பர்னாண்டோ.

“என்னிடம் முறை தவறி நடந்து கொண்டான்…”

“அதற்கு அவனுடன் சண்டையிடுவானேன்? காவலரை விட்டு வெட்டிப் போடுவது தானே?”

“வெட்டிப் போடுவதற்கில்லை.”

“ஏன்?”

“அவன் உண்மையறியாதவன்.”

“அப்படியானால் கொல்ல வேண்டாம், சிறையில் தள்ளுவதுதானே?”
“அதுவும் முடியாது.”

“ஏன்?”

“அவன் பம்பாய் கவர்னரின் தூதன். தவிர, நமது ஸார்கேலிடமிருந்து கடிதத்துடன் வந்திருக்கிறான்.”

இந்தப் பதிலைக் கேட்டதும் அதுவரை கேள்வி கேட்ட பர்னாண்டோ மட்டுமல்ல மற்ற இருவரும்கூடப் பிரமிப் படைந்தார்கள். அந்தப் பிரமிப்புடன் கலந்த அச்சத்தின் விளைவாகவும் இதயசந்திரனிடமிருந்த அன்பின் விளைவாகவும் மெள்ளக் கூறினான் பர்னாண்டோ , “தளபதி! அவன் கவர்னரிடமிருந்தென்ன, பிரிட்டிஷ் மன்னரிடமிருந்தே தூது வந்திருந்தாலும் கவலையில்லை. ஆனால் ஸார்கேலிடமிருந்து வந்துள்ள கடிதத்தை நீங்கள் புறக்கணித்தால் ஆபத்தாயிற்றே?” என்று.

பர்னாண்டோவின் அச்சம் ஹர்கோவிந்துக்குமிருந்த தால், “இது விஷயத்தில் நீங்கள் ஆலோசித்து எதுவும் செய்வது நல்லது” என்று எச்சரித்தான்.

அவ்விருவரையும் நோக்கி இதயசந்திரன் கூறினான், “பர்னாண்டோ ! ஹர்கோவிந்த்! நீங்கள் நினைக்கிற அத்துணை ஆபத்தில்லை இதில். ஸார்கேலிடமிருந்து நேர்ப்பட எனக்குக் கடிதமில்லை; கவர்னருக்கும் அவர் எழுதிய கடிதத்தைக் கொண்டு வந்திருக்கிறான் தூதன். அதை நான் ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை. ஆனால் கடிதம் கனோஜியிடமிருந்து வந்திருந்தால்கூட அவரது ஆஸ்தான மண்டபத்தில் என் முகத்தின்மீது கையுறையை வீசியெறியும் வெள்ளைக்காரனை நான் மன்னிக்க முடியுமா? அவன் என்னைச் சண்டைக்கு அழைக்கும் போது பின்வாங்குவதுதான் வீரனுக்கு அழகா? இதில் எனக்கு மாத்திரமல்ல அவமானம். ஸார்கேலையும் இந்த அவமானம் விடாது. ‘ஸார்கேலின் கோட்டைக்குள்ளேயே சென்று அந்தக் கொள்ளைக்காரன் உபதளபதியை முகத்தில் அறைந்து திரும்பினான் நமது தூதன்’ என்று வெள்ளைக்காரர் கொக்கரித்தால், ஸார்கேலின் பெயருக்கு மீளா இழுக்கு ஏற்படும். ஆகவே இந்தச் சண்டை தவிர்க்கத் தக்கதல்ல” என்று.

மற்ற மூவரும் சில விநாடி நேரம் மௌனம் சாதித் தனர். நீண்ட யோசனைக்குப் பின்பு ஹர்கோவிந்த், “இந்தச் சண்டைக்கு நாங்கள் சாட்சிகளாயிருந்து என்ன செய்யப் போகிறோம்?” என்று வினவினான் மெள்ள.

“சண்டை நேர்மையாக நடந்தது என்பதற்கு நீங்கள் சாட்சிகள்” என்றான் இதயசந்திரன்.

“தங்கள் நேர்மையைப் பற்றி யாருக்கும் சந்தேகம் கிடையாதே?” என்று சுட்டிக் காட்டினான் இப்ரஹீம்.

“உங்கள் கருத்து அப்படியிருக்கலாம். மூன்றாமவர் கருத்து வேறுபடலாம். தவிர, நான் கவர்னர் தூதுவருடன் போரிடுகிறேன். தூதர்களிடம் போரிடுவதோ அவர்களை அவமானப்படுத்துவதோ, அரச தர்மமாகாது. ஆகவே இந்தச் சண்டையில் நான் வெகு ஜாக்கிரதையாயிருக்க வேண்டியிருக்கிறது” என்றான் இதயசந்திரன்.

அதற்கு மேல் அந்த மூவரும் எந்தக் கேள்வியும் கேட்க வில்லை. தங்களுக்குத் தாங்களே பலபடி கேட்டுக்கொண்டு கோட்டைக்கு வந்து சேர்ந்தனர்.

கனோஜியின் பெருமாளிகையை அடைந்ததும் கோட்டைக் காவலர் தலைவனை அழைத்த இதயசந்திரன், “காவலரே! கவர்னர் தூதரை எழுப்பி அவருக்குக் காலை யில் வேண்டிய ஆகாரத்தைக் கொடுங்கள். பிறகு மிகுந்த மரியாதையுடன் நமது மாளிகைக்குப் புறம்பேயுள்ள இடத்தில் அவரை அழைத்து வாருங்கள். அங்கு சண்டை விஷயமாகச் செய்ய வேண்டிய ஏற்பாடுகளை இவர்கள் மூவரும் கவனித்துக் கொள்வார்கள்” என்று உத்தரவிட்டு அவனை அனுப்பிய பின்பு, பர்னாண்டோவை நோக்கி, “பர்னாண்டோ ! கவர்னரின் தூதுவர் சண்டை செய்யுமிடத்தை அடைந்ததும் அவர் எந்த ஆயுதம் கொண்டு போரிடப் பிரியப்படுகிறார் என்பதை விசாரித்தறிந்து கொள். அந்த ஆயுதம் கொண்டே போராடுகிறேன்” என்றான்.

பர்னாண்டோ அந்த ஏற்பாட்டை எதிர்த்தான். “இது சரியல்ல தலைவரே” என்றும் கூறினான்.

“எது சரியல்ல பர்னாண்டோ?” என்ற இதயசந்திரன் முகத்தில் வியப்புக்குறி தோன்றியது.

“தனி நபர் விரோதத்தின் மீது சண்டையிடும் முறை இதுவல்ல. யார் அவமானப்படுத்துகிறாரோ, அவரிஷ்ட மல்ல போர் முறையோ, ஆயுதத் தேர்வோ. நீங்கள் இஷ்டப்படும் ஆயுதங் கொண்டுதான் அவர் போரிடலாம். இது தான் ஐரோப்பாவில் பழக்கம்” என்றான்.

இதயசந்திரன் முகத்திலிருந்த வியப்புக் குறி புன்முறுவ லாக மாறியது. “பர்னாண்டோ’’ என்று விளித்த தளபதி குரலில் சற்றுக் கேலியும் இருந்தது.

“என்ன தளபதி?”

“இது ஐரோப்பாவல்ல. ஆசியா கண்டம், அதிலும் பாரதநாடு.”

“ஆம்.”

“தியாகத்துக்குப் பேர் போனது.”

“இருக்கட்டுமே.”

“நாம்தான் தூதனுக்குச் சிறிது விட்டுக் கொடுப்போமே’ என்ற இதயசந்திரன் பர்னாண்டோவின் பதிலுக்குக் காத்திராமல் தோர்லாவாடாவுக்குள் நுழைந்தான். நுழைந்தவன் ஆஸ்தான மண்டபத்தையும் தாண்டி காதரைன் இருந்த அறையின் கதவைத் தட்டினான். உள்ளிருந்து வந்தது காதரைனின் அதிகாரக் குரல், “யாரது?” என்று.

இதயசந்திரன் முகத்தில் இகழ்ச்சிக் குறி படர்ந்தது. “நான் தான் உன் காதலன்” என்ற சொற்களிலும் இகழ்ச்சி ஒலி தாண்டவமாடியது.

“யார், தளபதியா?” காதரைன் குரலில் வியப்புமிருந்தது, அச்சமுமிருந்தது.

“ஆம் கேட்டி’ என்ற இதயசந்திரன் குரல் குழைந்தது.
உள்ளிருந்து பதிலேதும் நீண்டநேரம் வரவில்லை. பிறகு மெல்லக் கதவு மட்டும் திறக்கப்பட்டது. கதவு திறந்தபோது காதரைன் இரவு ஆடையைக் கழுத்திலிருந்து கால்வரை தொங்கும்படி அணிந்திருந்ததைக் கவனித்த இதயசந்திரன், “அப்பா! இன்றுதான் இப்படிப் பார்க்கிறேன் கேட்டி” என்றான்.

“எப்படி?’ குழப்பத்துடன் வந்தது அவள் கேள்வி. “கழுத்திலிருந்து கால்வரை மூடியுள்ள வேடத்தில்.” “இது வேடமா?”

“மாறுபட்டதெல்லாம் வேடந்தானே?” இதைச் சொல்லி நகைத்தான் இதயசந்திரன்.

அவன் அப்பொழுது குறிப்பிட்ட மாறுபாடு உடை யைப் பற்றியது மட்டுமல்ல என்பது அவளுக்குப் புரிந்திருந்தது. முதல் நாள் ஆஸ்தான மண்டபத்தில் தான் பூரணமாக நிலைமையைத் திருப்தி விட்டது, அபாண்ட மான பொய் கூறியது- இவற்றைத்தான் தமிழன் குறிப்பிடுகிறான் என்பதைப் புரிந்து கொண்டதால், ‘’இவன் எதற்காக இங்கு வந்திருக்கிறான்?’ என்று தன்னைத் தானே கேட்டுக்கொண்டாள். அவள் முகத்தில் அச்சம் நன்றாகத் துலங்கியது. அந்த அச்சத்துடன் சினமும் கலந்து கொள்ளவே, “இங்கு எதற்காக வந்தாய் நீ?” என்று கேட்டாள் மரியாதையைக் கைவிட்டு.

”உன்னைக் கடைசி முறையாகப் பார்க்க வந்தேன்” என்றான் இதயசந்திரன் இகழ்ச்சி குரலில் ஒலிக்க.

“கடைசி முறையா? எப்படிக் கடைசி முறை?” என்று கேட்டாள் கேட்டி.
“இன்று உன் நான்காவது காதலன் ஒருவேளை, மூன்றாவது புருஷனும் ஆகலாம்- அவனுடன் உன்னை அனுப்பப் போகிறேன் பம்பாய்க்கு” என்று குறிப்பிட்ட இதயசந்திரன் புன்முறுவல் காட்டினான்.

அல்லி மலரின் அழகிய கண்கள் அவனை உற்று நோக்கின. அவள் இதயத்திலிருந்து பெருமூச்சொன்று வந்தது. அவள் சொன்னாள், “இதயசந்திரா, நீ மட்டும் நான் சொல்கிறபடி கேட்டிருந்தால் என்ன இன்பத்தில் நாமிருவரும் திளைத்திருப்போம், கொள்கை கொள்கையென்று கொள்கைகளைக் கட்டிக் கொண்டு திண்டாடினாய். அதைச் சற்றுத் தளர்த்தியிருந்தால் நம் வாழ்வு எத்தனை மாறுபட்டிருக்கும்? இன்று நீயும் நானும் சேர்ந்து பம்பாய் போவோம். அங்கு ஐரோப்பிய நாகரிகத்தின் மடியில் நீ விளையாடியிருப்பாய் பற்பல அழகிகளை நீ சந்தித்திருப்பாய். ஆனால் எல்லாவற்றை யும் கெடுத்தாய். இன்று பிராணனையும் விடப் போகிறாய்!” என்று.

இதயசந்திரன் மெல்ல நகைத்தான். “பிராணனை விடப் போகிறேனா?” என்றும் வினவினான் நகைப்பின் ஊடே.

“ஆம், வில்லியம் வாட்போரில் இணையற்றவன். கைத்துப்பாக்கியால் சுடுவதில் குறி தவறாதவன்” என்றாள் காதரைன்..

“கேட்டி, நீ கூறியது எனக்குப் பலத்தைத் தருகிறது’. அவன் ஒருவேளை சொல் வீரனோ என்று நினைத்தேன். செயல் வீரனாகவுமிருந்தால் மிக நல்லது. இன்னும் அரை ஜாமத்தில் புறப்படத் தயார் செய்து கொள்.”
“எங்கு?”

“உன் காதலன் கையால் என் மரணத்தைப் பார்க்க” என்று கூறிவிட்டு இதயசந்திரன் சென்றான்.

அவன் சென்ற திசையைப் பார்த்துக் கொண்டு காதரைன் நீண்ட நேரம் நின்றாள். பிறகு பெருமூச்சு எறிந்து, “இதயசந்திரா! நீ வெள்ளைக்காரனாயிருக்கக் கூடாதா? . நீ கேட்டபடி உன்னை மணமே புரிந்து கொண்டிருப்பேனே” என்று சற்று வாய் விட்டே சொன்னாள். பிறகு உள்ளே சென்று புறப்படத் தன்னைத் தயார் செய்து கொள்ளலானாள்.

சரியாக அரை ஜாமம் கழிந்ததும் அவளுக்கு அழைப்பு வந்தது. அவள் கதவைத் தட்டிய கோட்டைக் காவலன்,

“எல்லாம் தயாராகிவிட்டது. உங்களுக்காகத்தான் தளபதி காத்துக்கொண்டிருக்கிறார்” என்று அறிவித்தான். காதரைன் பதிலேதும் சொல்லாமல் புறப்பட்டாள். அவளை அழைத்துக் கொண்டு சண்டை நிலத்துக்கு வந்த கோட்டைக் காவலன் அங்கு ஆயுதமேதுமின்றி வேடிக்கை பார்க்க வந்தவன் போல் நின்று கொண்டிருந்த இதயசந்திர னிடம், “இதோ அழைத்து வந்துவிட்டேன்” என்று அவளை ஒப்படைக்கும் பாவனையும் கூறி, அவளைச் சுட்டியும் காட்டினான்.

இதயசந்திரன் வெள்ளைக்காரப் பாணியில் அவளை நோக்கி நன்றாகத் தலைதாழ்த்தினான். “கேட்டி! உன் பொருட்டு ஏற்பட்டுள்ள சண்டை இது. ஆகவே இதைப் பார்க்க உன்னை அழைத்தேன். இந்தச் சண்டை உங்கள் நாட்டு விதிப்படி நடக்கிறது. இதோ இருக்கும் கோட்டைக் காவலரும் எனது உபதளபதிகள் மூவரும் இச்சண்டைக்குச் சாட்சிகள். இதில் நான் கொல்லப் பட்டால் உனக்கோ கிப்போர்ட்டுக்கோ அவரது மெய்க் காவலருக்கோ எந்தத் தீங்கும் விளையாமல் பாதுகாத்து உங்களைப் பம்பாய்க்கு அனுப்பிவைக்க இவர்கள் என்மீது ஆணையிட்டிருக்கிறார்கள்” என்று கூறிவிட்டு விடுவிடு என்று நடந்து சற்றுத் தூரத்தில் நின்றிருந்த கிப்போர்ட்டிடம் சென்று, “தூதுவரே! நீங்கள் வாட் போரையே விரும்பியதாகச் சொன்னார்கள். ஆகவே, வாட்களைக் கொண்டே போரிடுவோம். நீங்கள் தயாரானதும் சொல்லுங்கள்” என்று கூறிவிட்டு அவனைத் தோளிலும் செல்லமாகத் தட்டிவிட்டுத் திரும்பத் தன் உபதளபதிகள் இருந்த இடத்துக்கு வந்த இதயசந்திரன் தனது சட்டையை அவிழ்த்துக் கீழே எறிந்து சராயுடனும் திறந்த உடம்புடனும் நின்றான். “ஹர்கோவிந்த்! உன் வாளைச் சிறிது நேரம் கடன் கொடு’ என்று கேட்டு வாங்கிக் கொண்டான். மகாராஷ்டிரர்களின் அந்த வளைவு வாளை இருமுறை கூர்பார்த்துக் காற்றில் இருமுறை விசிறியும் பதம் பார்த்தான். பிறகு தூரத்தே நின்ற எதிரியை நோக்கினான்.

ஆஜானுபாகுவான வில்லியம் கிப்போர்ட் தனது கோட்டைக் கழற்றி ஷர்ட்டுடன் மட்டும் நின்றான். காலிலிருந்த பூட்ஸைத் தரையில் ஊன்றிச் சரிபார்த்தான். பிறகு இடையிலிருந்த கச்சையிலிருந்த வாளை உருவி எடுத்து உறையைப் பக்கத்திலிருந்த மெய்க்காவலனிடம் கொடுத்தான். பிறகு தனது நீண்ட வாளைக் கையால்

நீட்டிப் பார்த்து எதிரியின் வாளையும் பார்த்தான். அந்தச் சிறிய வளைவு வாளைப் பார்த்த கிப்போர்ட் தனது வாளுடன் அந்த வாள் எப்படி இணைய முடியும். அதைக் கொண்டு எப்படிப் போராட முடியும் என்று நினைத்துப் பார்த்தான். தனது வாளின் நீளத்திடம் அணுகக்கூட எதிரியால் முடியாதென்ற நினைப்பால் இதயசந்திரனிடம் ஓரளவு அனுதாபங்கூட ஏற்பட்டது அவனுக்கு. இருப்பினும் கடமையைச் செய்யத் துணிந்த கிப்போர்ட் உருவிய வாளுடன் தமிழனை எதிர்நோக்கி வந்தான். சில வினாடிகளில் போரை முடித்து விடலாமென்ற நினைப்புடன் தான் வந்தான். கிப்போர்ட் நினைத்தது வேறு, நடந்தது வேறு. அவன் நினைத்தது சுலப வெற்றி. விளைந்தது வெற்றியுமல்ல, தோல்வியுமல்ல. வெறும் கேலிக் கூத்து.

Previous articleJala Deepam Part 2 Ch24 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 2 Ch26 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here