Home Historical Novel Jala Deepam Part 2 Ch26 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 2 Ch26 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

58
0
Jala Deepam Ch26 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 2 Ch26 | Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 2 Ch26 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் –26 அடுத்தது யார்?

Jala Deepam Part 2 Ch26 | Jala Deepam | TamilNovel.in

ஆஜானுபாகுவாய் வெள்ளை வெளேரென்ற சட்டை சராய்களுடனும், நீலக் கண்களுடனும் நீண்ட வாளை உருவி நின்ற வில்லியம் கிப்போர்ட்டின் அழகையும், அவன் வாளைப் பிடித்திருந்த உறுதியையும், நிலத்தில் கால்கள் ஊன்றி நின்ற திடத்தையுங் கண்ட இதயசந்திரன் பெரு மகிழ்ச்சி கொண்டான். தன் முகத்தில் கையுறை வீசிய வெள்ளைக்காரன் வெற்றுத் துணிச்சல் கொண்டவனல்ல. உண்மையில் வீரன் என்ற நினைப்பு அவனுக்குப் பெரும் ஆறுதலும் அளித்தது. ஆகவே, கிப்போர்ட் ஏழெட்டு அடிகள் நடந்து வந்து மையத்திலிருந்த இடத்தில் நின்று, “நான் தயார்” என்று சொன்னதும் இதயசந்திரன் பரம சந்துஷ்டியுடன் அவனை நெருங்கியதும் வெள்ளைக்காரன் தனது தலையைத் தாழ்த்தி வணங்கி இரண்டடி பின்னுக்கு நகர்ந்து திடீரென வாளைத் தூக்கி இதய சந்திரன் தலையை நோக்கி இறக்கினான். வில்லியம் கிப்போர்ட்டின் நீண்ட அந்தப் பலமான வாள் மட்டும் தலையில் இறங்கியிருந்தால் இந்தக் கதை திரும்பும் பாதையே வேறு.

ஆனால் அந்த வாளின் கதி இதயசந்திரன் விதியை நிர்ணயிக்கச் சக்தியற்று ஒரு விநாடி அவன் தலைக்கு ஒரு அடி மேலேயே நின்றது. மறு விநாடி சுழன்றது. அது மட்டுமல்ல சுழன்றது, பிடித்திருந்தவனையும் சுழலச் செய்தது. தமிழன் திடீரெனத் தலைக்குமேல் தூக்கிய வளைவு வாள் அதனுடைய நட்ட நடுவில் தன் வாளைத் தடுத்து நிறுத்தியதும், பிறகு சர்ரென்று ஒரு மூலைக்கு அதை இழுத்துச் சுழற்றியதுமே அந்தச் சுழற்றலுக்குத் தான் சுற்றியிராவிட்டால் தனது வாட்கை மணிக்கட்டு எலும்பு முறிந்திருக்கக்கூடிய அளவுக்கு வலியைக் கொடுத்ததும் ஏதோ செப்பிடு வித்தையாயிருந்தது வெள்ளைக்காரனுக்கு. வாளின் கனத்தையும் நீளத்தையுமே அவன் நம்பியிருந்தான். மெல்லிய வாளிலும் பலமிருக்கும். அதைச் சுழற்றுவதில் வித்தையிருக்கும் என்பதை அவனறியவில்லை. ஆகவே வாளை அந்த மகாராஷ்டிர வளைவு வாளிடமிருந்து விடுவித்துக் கொள்ளவும் மணிக்கட்டைக் காப்பாற்றிக் கொள்ளவும் மும்முறை சுழன்ற அவன் சிறிது தன்னைத் திடப்படுத்திக் கொள்ள ஒரு விநாடி பின்வாங்கினான். அப்படிப் பின்வாங்கிய நேரத்தை எதிரி பயன்படுத்திக் கொள்வானென்று எதிர் பார்த்திருந்ததால் அவன் ஏமாந்தே போனான்.

இதயசந்திரன் இருந்த இடத்தைவிட்டு நகரவில்லை. நீண்டகால மாலுமித் தொழிலாலும், வெய்யிலிலும். காற்றிலும் அடிபட்டதாலும் பழுப்பேறியிருந்த உடலுட னும் உடலுக்குச் சற்று அதிகமாகவே கருகியிருந்த முகத்துடனும், சர்வ சகஜமாக நின்றிருந்த அவன் தோரணையைக் கண்டு, காதரைன் அந்த விநாடியிலும் பிரமித்தாள். அவனிடம் பழையபடி ஆசையும் கொண்டாள். கிப்போர்ட்டின் வாளை அவன் தனது வாளால் அனாயாசமாகத் தடுத்துச் சுழற்றி விட்டதும் வாளுடன் ஆளும் சுழன்றதும் அவளுக்குப் பெரிதும் விந்தையாயிருந்தது. கப்பலில் அவனுடன் பயணம் செய்தபோதெல்லாம் அவன் வாள் திறமையைப்பற்றி மாலுமிகள் பேசியதைக் கேட்டிருந்தாள். இருப்பினும் பிரிட்டிஷ் வட்டாரங்களில் பெரிய வாள் வீரனென்று பெயர் பெற்ற கிப்போர்ட்டை இத்தனை அலட்சியமாக அவன் நடத்த முடியுமென்பதை அவள் முற்றும் எதிர் பார்க்கவில்லை. எதிர்பாராத அந்த நிகழ்ச்சி அவளை மீண்டும் தமிழனின் திறமையிலும், திறமையை விளக்கிய கம்பீர சரீரத்திலும் திளைக்க விட்டதால், ‘அப்பா! என்ன இளைப்பான எத்தனை வலுவான சரீரம்! இவர் வளைந்து நிற்கும்போது வளைந்த மகாராஷ்டிரர் வாளைப்போல் தானிருக்கிறார். இந்தியன் என்ற ஒரு பிழை மட்டுமில்லா விட்டால்…’ என்று நினைத்த காதரைன் மேற்கொண்டு நினைக்காமல் பெருமூச்சு மட்டும் விட்டாள்.

அவள் இத்தகைய நினைப்புகளில் ஆழ்ந்து கொண் டிருக்கையிலேயே நிதானப்பட்டுவிட்ட கிப்போர்ட் மீண்டும் போரைத் துவக்கினான். இம்முறை அவன் வாளைச் சுழற்றிக் கொண்டு இதயசந்திரனை நெருங்கிய போது மிகுந்த எச்சரிக்கையுடன் நெருங்கினான். வாளைச் சுழற்றி எதிரியின் மார்பை எட்டிவிட முயன்றானே தவிர வாளை உயரத் தூக்கவில்லை. மாறுபட்ட இந்தப் போர் முறையால் ஆரம்பத்தில் அவனுக்குச் சிறிது பலனும் கிடைத்தது. இரண்டு மூன்று முறைகள் அவன் வாளைத் தடுத்த தளபதியின் வாளில் முதலில் கண்ட வலு காணப் படவில்லை. அந்த வாளின் தடையையும் மீறி அவனது நீண்ட வாள் தமிழனின் உடலுக்கு வெகு அருகில் செல்வதும் சாத்தியமாயிற்று. ஆகையால் அந்தப் போர் முறையையே கையாண்ட கிப்போர்ட் தனது நீண்ட வாளை மார்பளவு உயரத்துக்கு மேலே செல்லவிடாமல் வளைத்து வளைத்துச் சுழற்றியே தாக்கினான். மெள்ள மெள்ள அதிலும் ஓர் உண்மை புலனாயிற்று அவனுக்கு. திரும்பத் திரும்ப, சுற்றிச் சுற்றித் தனது நீண்ட வாளை எதிரி மார்பை நோக்கிச் செலுத்திய கிப்போர்ட் தனது வாள் முதலிரண்டு மூன்று தடவைகளைப் போல் எதிரி வாளின் பாதுகாப்பை உடைக்க முடியவில்லையென்பதை யும் தனது வாள் நுழைய முயன்ற இடங்களில் எதிரியின் வளைந்த வாள் முன்னதாகவே இருந்ததையும் உணர்ந்த தால் தமிழன் ஏதோ தன்னுடன் விளையாடுகிறானே தவிர உண்மையாகப் போரிடவில்லையென்பதைப் புரிந்து கொண்டான். அந்த உண்மையைப் புரிந்து கொண்ட தால் அவன் முகத்தில் குறுவியர்வை துளிர்த்தது. வெகு. சீக்கிரம் போர் முடியாவிட்டால் எதிரி தற்காப்புப் போரிலேயே தன்னைச் சளைக்க அடித்து விடுவானென்பதை உணர்ந்து கொண்ட கிப்போர்ட் வெகு மும்முரத்துடனும் வாளைத் தூக்கியும் சுழற்றியும் நீட்டியும் பாய்ந்து பாய்ந்து போரிட்டான்.

அந்த மும்முரச் சண்டையிலும் இருந்த இடத்தை விட்டு நகராமல் தன் வாளைக் கொண்டு எதிரி வாளைத் தடுத்துக் கொண்டே சில சமயங்களில் ஹர்கோவிந்திடமும், சில சமயங்களில் காதரைனுடனும் உரையாடத் தொடங்கி னான் தளபதி. “ஹர்கோவிந்த்! ஜல தீபம் உடனடியாக எங்கும் போகத் தேவையிராது. ஆகையால் முடிந்த வரையில் கோட்டையை நெருக்கிக் கொண்டு வந்தே நங்கூரம் பாய்ச்சிவிடு. அதைப் பாதுகாக்கச் சில காலிவாத்துக்களைச் சுற்றிலும் நிற்க வை. நீங்கள் மூவர் கூட அங்கு தேவையில்லை. ஒருவர் இருந்துகொண்டு மற்றவர் கோட்டைக்கு வந்துவிடலாம்’ என்று கூறினான்.

கிளிங் கிளாங் சர் என்ற வாட்களின் மோதல் ஒலிகள், உராய்ந்த ஒலிகள் இவற்றுக்கிடையே உதிர்ந்த அந்தச் சொற்களுக்கு ஹர்கோவிந்தும் பதில் கூறினான், “அப்படியே செய்கிறேன். நான் இருந்து கொண்டு இவர் களை அனுப்புகிறேன் கோட்டைக்கு. இவர்களில் ஒருவர் திரும்பிய பிறகு நான் வருகிறேன்” என்று.

“காதரைன்! இனி நீ போகலாம். உன்னையும் கிப்போர்ட்டையும் பாதுகாக்க இவர்களுக்கு உத்தரவு இருக்கிறது என்று இவர்கள் எதிரில் உனக்குக் கூறவே இங்கு அழைத்து வந்தேன். இனி நீ போய்ப் பயணத்துக்கு ஏற்பாடு செய்துகொள். இன்று பிற்பகல் நீ புறப்பட்டு விடலாம் கிப்போர்ட்டுடன்” என்று கூறி அவளைச் செல்லும்படி, இடதுகையால் சைகை செய்தான்.

கை ஏதோ அவனுக்குச் சம்பந்தப்படாதது போல் வாளைச் சுழற்ற, வாய் மற்றவர்களுக்குச் சேதி சொல்ல, நடந்த அது போரா விளையாட்டா என்பது புரியவில்லை காதரைனுக்கு. அவள் கண்கள் வியப்பால் பெரிதும் மலர்ந்தன. கண்களைகூடத் தமிழன் எதிரிமீதும் அவன் வாள்மீதும் ஊன்றி வைக்காமல் அரைப் பார்வையிலே போரிட்டு வந்தது அவளுக்கு விசித்திரமாயிருந்தது. அந்த விசித்திரம் அவள் இதயத்தில் மீண்டும் காம வேட்கையைக் கிளப்பிவிடவே அவள் பதிலேதும் சொல்லவில்லை.

அந்தச் சண்டையைப் பற்றி அவன் மட்டுமின்றி அவனுடைய உபதலைவர்களும் அதிகமாகச் சட்டை செய்யாதது அவளுக்கு வியப்பாயிருந்தது. ஆரம்பத்தில் நின்று அந்தச் சண்டையைப் பார்த்த உ.பதளபதிகள் மூவரும் சிறிது நேரத்திற்கெல்லாம் சற்று எட்ட இருந்த பாறைமீது உட்கார்ந்து ஏதோ பேச முற்பட்டதைக் கண்ட காதரைன் ஜல தீபத்தின் தளபதி, உபதளபதிகள் சம்பந்தப்பட்ட வரையில் இது சண்டையே அல்ல என்று தீர்மானித்துக் கொண்டாள். இதயசந்திரன் பெரும் கடல் வீரன் என்பது அவளுக்குத் தெரிந்தது தான். அதை அவள் அனுபவித்துமிருந்தாள். ஆனால் தனிப் போரில் நிலத்தில் அவன் இணையற்ற வாள் வீரன் என்பதை அன்று உணர்ந்ததால் அவன்மீது அவளுக்கிருந்த இச்சை அதிக மாயிற்று. ஆகவே அவன் போகச் சொன்ன பிறகும் போகவில்லை அவள். “போரின் முடிவுக்குப் பிறகு போகிறேன்” என்று கூறினாள் அவள் கோபத்துடன்.

“அப்படியானால் போரை முடித்து விடுவோமா?” என்று கேட்டான் இதயசந்திரன் கிப்போர்ட்டை நோக்கி.

இந்தக் கேள்வியால் அதிக உக்ரமடைந்த கிப்போர்ட் தன் வாளை எழுப்பித் தன் பலம் முழுவதையும் உபயோகித்து இதயசந்திரன் தலைமீது இறக்க முயன்றான். அடுத்த விநாடி ‘உச்’ என்ற துன்ப ஒலி அவனிடமிருந்து வந்தது. அந்த ‘உச்’சைத் தொடர்ந்து அவன் நீளவாள் தரையை நோக்கித் தொங்கியது. காதரைன் விழிகள் அகல விரிந்தன. கிப்போர்ட்டின் மணிக்கட்டிலிருந்து குருதி மெல்ல வந்து கொண்டிருந்தது. கிப்போர்ட்.

அடுத்தது யார்? தனது உதட்டை அவமானத்தால் கடித்துக் கொண்டிருந் தான். எந்த மந்திரத்தால் தன் வாள் விலகியது? எந்த விநாடியில் தனது வாள் கை மணிக்கட்டு எதிரி வாள் நுனியால் குத்தப்பட்டது என்பதை உணர முடியாத காரணத்தால் அவன் முகத்தில் பிரமிப்பும் குடிகொண் டிருந்தது.

எதிரி வாள் நிலத்தில் தொங்கியதும், “இந்தா வாள் எடுத்துக் கொள்” என்று ஹர்கோவிந்திடம் வீசி எறிந்தான் இதயசந்திரன். அந்த வாளை அவன் பிடித்து அதன் நுனியில் மட்டுமிருந்த சிறு ரத்தக் கறையைப் பார்த்து, “லேசாகத்தான் குத்தியிருக்கிறீர்கள் தளபதி! இது எப்படி முடிந்தது? வாளின் வேகத்தை வாள் பாயும் போது எப்படிக் குறைவுபடுத்த முடியும்?” என்று வினவினான் வியப்புடன். அவன் கூறியதைக் கேட்டதும் பர்னாண்டோ வும், இப்ரஹீமும் அதை ஒரு விநாடி ஆராய்ந்தனர். மறுவி நாடி பிரமை தட்டிய கண்களைத் தளபதியின் மீது திருப்பினர்.

தளபதி அதற்கப்புறம் அங்கு நிற்காமல், “கிப்போர்ட்டின் காயத்துக்குக் கட்டுப் போடுங்கள். அவர்களை அழைத்து வாருங்கள்” என்று கூறிவிட்டு, “கேட்டி, வா! வா போவோம் மாளிகைக்கு” என்று கூறிவிட்டு நடந்தான் தோர்லாவாடாவை நோக்கி.

காதரைன் நடந்து சென்ற இதயசந்திரனைப் பார்த் தாள். சற்று எட்ட மணிக்கட்டில் குருதி பெருக நின்று கொண்டிருந்த கிப்போர்ட்டைப் பார்த்தாள். ஓடிவந்து அவன் வாளை வாங்கிக்கொண்டு கைக்குட்டையால் காயத்தைக் கட்ட முனைந்து கொண்டிருந்த இப்ரஹீமைப் பார்த்தாள். ஏதும் செய்யாமல் பிரமை பிடித்து நின்ற பிரிட்டிஷ் மெய்க்காவலரையும் பார்த்தாள். பிறகு முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க இதயசந்திரனைத் தொடர்ந்து சென்றாள். அவனைத் தொடர்ந்து வேக மாகச் சென்ற காதரைன் அவனையும் தாண்டி விடுவிடு வெனத் தோர்லாவாடாவை அடைந்து தனது அறைக்குச் சென்று கதவைத் தாழிட்டுப் படுக்கையில் படுத்தாள்.

நடந்ததெல்லாம் மந்திர வித்தை போலிருந்தது அவளுக்கு. அன்று வரை அவள் வில்லியம் கிப்போர்ட்டை பெரிய வாள் வீரனென்று நினைத்திருந்தாள். பம்பாயில் இரண்டு மூன்று முறை அவன் தனக்காக வாட்போரிட்டு எதிரிகளை எமனுலகு அனுப்பியிருந்ததை அவள் கண் கூடாகப் பார்த்திருக்கிறாள் தாமஸ் சௌனுடன் தனக்குத் திருமணம் நடக்குமுன்பு சௌனும் கிப்போர்ட்டும் நெருங்கிய நண்பர்களாயிருந்ததையும், தான் சௌனை மணந்தது அவனுக்குப் பெரிய ஏமாற்றமென்பதையும், அந்த ஏமாற்றத்தையும் அவன் கண்ணியமாக ஏற்று விலகி யிருந்தாலும் தன்னைப் பார்த்த போதெல்லாம் காதல் அவன் கண்களில் வீசியதையும் நினைத்துப் பார்த்த காதரைன் அப்பொழுதெல்லாம் வியாபாரியான சௌனை விட்டு இந்தப் பெரிய வீரனை மணந்தாலென்ன என்று நினைத்தேனே. இவன் வீரம் இவ்வளவுதானா?” என்று நொந்து கொள்ளவும் செய்தாள்.

அதே சமயத்தில் இதயசந்திரனின் சிரித்த முகம் அவள் மனக்கண்முன் எழுந்தது. இன்று பிராணனை விடப் போகிறாயே என்று தான் சொன்னபோது ‘பிராணனை விடப் போகிறேனோ?’ என்று கேட்டு அவன் நகைத்தது அப்பொழுதும் தத்ரூபமாக எழுந்தது அவள் மனக்கண்! முன்பு. ‘உன் காதலன் கையால் என் மரணத்தைப் பார்க்க வா” என்று ஒரு ஜாமத்திற்கு முன்பு அவன் அழைத்தது, ஒருவேளைசண்டையில் மரணம் ஏற்பட்டால் கிப்போர்ட்டையும், தன்னையும் பாதுகாக்க உபதளபதிகளை ஆணையிடச் சொன்னது எல்லாம் வெறும் நாடகம்; கேலிக்கூத்து என்பதை உணர்ந்ததால் அவள் உள்ளத்தில் மிதமிஞ்சிய சினமும் எழுந்தது.

அந்தச் சினம் நிலைத்தது ஒரு விநாடி. மனம் ஜல தீபத்தின் அறைக்குச் சென்றது. அங்கு அவன் கைகளின் தழுவல் எத்தனை ஆனந்தத்தைத் தந்தது அவளுக்கு. ‘அவன் இந்தியனாயிருந்தாலென்ன, வீர புருஷன் தானே’ என்று எண்ணினாள் காதரைன். படுக்கை யில் கிடந்த இந்த நேரத்திலும் சாதி காதலைவிடப் பெரியதா என்றுகூடத் தன்னைக் கேட்டுக்கொண்டாள். ஆனால் உறுதியற்ற அவள் மனம், வலுவற்ற அவள் சிந்தை, இந்தியனை வதுவை செய்து கொள்ள மறுத்தது. அந்த மறுப்பினாலும் கிப்போர்ட்டிடம் ஏற்பட்ட வெறுப்பினாலும் வாட்டப்பட்டுப் படுக்கையிலே கிடந்தாள் காதரைன். இரண்டு நாழிகைகளுக்குப் பிறகு தோழிகளிருவர் வந்து நீராட அழைத்தபோதும் அவள் கொஞ்சத்தில் எழுந்திருக்கவில்லை. “நீங்கள் பிற்பகல் கிளம்ப வேண்டுமாம். இப்பொழுது நீராடினால்தான் சரியாயிருக்கும்” என்று தோழியொருத்தி வலியுறுத்திய பிறகுதான் காதரைன் நீராடச் சென்றாள்.

நீராடியதும் அவள் உடைகளை இரு பெரும் தகரப் பெட்டிகளில் சேடிகள் அடைத்தார்கள். அத்தனை உடை அவளுக்குக் கிடையாதாகையால், “இரண்டு பெட்டிகள் எதற்கு?” என்று வினவினாள் அவள்.

”ஒரு பெட்டியில் நீங்கள் ஏற்கெனவே ஜலதீபத்தில் உடுத்திய ஆடைகள் இருக்கின்றன. இன்னொன்றில் தளபதி உங்களுக்குப் பரிசாகக் கொடுத்த ஆடைகள்” என்றாள் தோழியொருத்தி.

“எங்கே, அந்தப் பெட்டியைத் திற” என்ற காதரைன் தோழிகள் பெட்டியைத் திறந்ததும் அந்தப் பெட்டியி லிருந்த ஆடைகளை எடுத்தாள். அதில் பல நாட்டவர் ஆடைகள், பல பட்டாடைகள், பல பஞ்சாடைகள், வண்ண வண்ண ஆடைகள் இருந்தன. “இவை ஏது?” என்று வினவினாள் தோழிகளை நோக்கிக் காதரைன்.

”அரண்மனை பொக்கிஷ அறையிலிருந்தவை. பல கப்பல்களிலிருந்து கைப்பற்றப்பட்டவை” என்றாள் தோழி.
கொள்ளை அடிக்கப்பட்ட அந்த ஆடைகளிலொன்றை எடுத்துத் தன்மீது சேர்த்துப் பார்த்தாள் காதரைன். அளவு சரியாயிருந்தது. கௌன் ஒன்றை எடுத்துப் போட்டுப் பார்த்தாள். கச்சிதமாயிருந்தது அவளுக்கு. வியப்படையும் விழிகளைச் சேடிகள்மீது நிலைக்கவிட்ட காதரைன், “சரியாக அளவு பார்த்துப் பொறுக்கி யிருக்கிறீர்கள்” என்றாள்.

“நாங்கள் பொறுக்கவில்லை” என்றாள் ஒருத்தி. “வேறு யார் பொறுக்கியது?” என்று வினவினாள் காதரைன்.

“தளபதி” என்றாள் இன்னொரு தோழி.

“யார்! யார்!’ காதரைன் விழிகளில் நீர் சுரந்தது. அதை மறைக்க அவள் வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள். பிறகு சேடிகளை வெளியே போகச் சொல்லிக் கதவைத் தாளிட்டுக் கொண்டாள். உணவு வந்ததும் கதவைத் திறந்து உணவைச் சிறிதளவே உண்டாள்.

பகலவன் உச்சியிலிருந்து நகர்ந்து இரண்டு நாழிகை கள் ஆகியதும் இரு காவலர் வந்து அவள் பெட்டிகளை வார் போட்டுக் கட்டி எடுத்துச் சென்றனர். கோட்டைக் காவலன் வந்து, ”புறப்படுங்கள்” என்று கூறினான்.

காதரைன் புறப்பட்டாள். மெல்ல மெல்ல ஆஸ்தான மண்டபத்துக்கு வந்தாள். அங்கு தனது ஆசனத்தில் கம்பீரமாக அரசன் போல் அமர்ந்திருந்த தளபதி, “மிஸஸ் சௌன் வாருங்கள்!” என்று சம்பிரதாயமாக அழைத்துச் சிறிது தள்ளியிருந்த ஆசனத்தில் அமர்ந்திருந்த கிப்போர்ட்டை நோக்கி, “கிப்போர்ட்! இதோ மிஸஸ் சௌனை ஒப்படைக்கிறேன், எந்த மாசோ மருவோ இன்றி. அழைத்துச் செல்லுங்கள். நான் பிடித்த மரக் கலங்கள் இரண்டும் பம்பாய் துறைமுகத்துக்கு இன்னும் சில நாட்களில் வந்து சேரும்” என்று கூறி எழுந்திருந்தான் ஆசனத்திலிருந்து.

காதரைனின் விழிகள் அவன் விழிகளுடன் ஒரு விநாடி சந்தித்தன. பிறகு கிப்போர்ட்டை நோக்கின. கிப்போர்ட் டின் மணிக்கட்டில் கட்டுப் போடப்பட்டிருந்தது, அவன் முகம் சுரணையற்றுக் கிடந்தது. இருவரையும் நோக்கிய தும் பேசாமல் வாயிலை நோக்கி நடந்தாள் காதரைன். இதயசந்திரனும் அவளைப் பின்பற்றி நடந்தான். வாயிலைத் தாண்டிய பின்னும் அவளைத் தொடர்ந்தே சென்ற தளபதி கொலாபா தீவுக் கோட்டையைக் கரையி லிருந்து பிரித்த நீர் நிலைக்கு வந்ததும் அங்கிருந்த படகில் அவளைக் கையைப் பிடித்து இறக்கி விட்டான். இறக்கிய அந்தச் சமயத்தில் அவள் கை தன் கையை மிக இறுக்கு வதையும் ஆதரவைத் தேடுவதையும் உணர்ந்ததால் இதய சந்திரன் இதயத்தில் அப்பொழுதும் அனுதாபம் சுரந்தது. கையை விட்ட பின்பு அவள் படகில் இறங்கி அமர்ந்த பின்பும் தன்னையே நோக்குவதைக் கண்டான். கிப்போர்ட் ஏற, படகு நகர்ந்தது எதிர்க்கரையை நோக்கி. அதில் உட்கார்ந்து தன்னையே நோக்கிக்கொண்டு சென்ற காதரைனை நோக்கிய இதயசந்திரன், ‘மூன்றாமவளும் நகர்ந்து விட்டாள். அடுத்தது யார்?’ என்று தன்னைத் தானே கேட்டுக்கொண்டான்.

Previous articleJala Deepam Part 2 Ch25 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 2 Ch27 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here