Home Historical Novel Jala Deepam Part 2 Ch29 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

Jala Deepam Part 2 Ch29 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

60
0
Jala Deepam Ch29 Jala Deepam Sandilyan, Jala Deepam Online Free, Jala Deepam PDF, Download Jala Deepam novel, Jala Deepam book, Jala Deepam free, Jala Deepam,Jala Deepam story in tamil,Jala Deepam story,Jala Deepam novel in tamil,Jala Deepam novel,Jala Deepam book,Jala Deepam book review,ஜல தீபம்,ஜல தீபம் கதை,Jala Deepam tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam ,Jala Deepam full story,Jala Deepam novel full story,Jala Deepam audiobook,Jala Deepam audio book,Jala Deepam full audiobook,Jala Deepam full audio book,
Jala Deepam Part 2 Ch29 | Jala Deepam | TamilNovel.in

Jala Deepam Part 2 Ch29 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

ஜல தீபம் இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் –29 குலாபியின் அடிமை

Jala Deepam Part 2 Ch29 | Jala Deepam | TamilNovel.in

மகாராஷ்டிரக் கடற்படைத் தளபதியான கனோஜி ஆங்கரே திடீரெனத் தனக்கு ஏற்படுத்திய பதவி மாற்றத்தைக் கேட்டதும் பெரும் மனோவேதனையையும் ஓரளவு திகிலையுங்கூட அடைந்த தமிழக வீரன், அந்த வேதனையும் திகிலும் கண்களில் மிகத் தெளிவாகத் துலங்க ஏறிட்டு நோக்கினான் எதிரே ராட்சத ரூபத்துடன் நின்றிருந்த அந்த மாபெரும் வீரனை. அவரது பயங்கர விழிகள் தமிழனை ஏற இறங்கப் பார்த்ததன்றி இதழ்களும் சற்றுப் பரிதாபத்துடன் மடிந்தன.

“தமிழா! உனக்கு இந்தப் புதிய பதவி பிடிக்கவில்லை போலிருக்கிறது?” என்ற அவர் கேள்வியில் கேலியுடன் பரிதாபமும் கலந்தொலித்தது.

இதயசந்திரன் கண்கள் அவர் கண்களைச் சற்றும் சலனமின்றிச் சந்தித்தன. “மீனை எடுத்துத் தரையில் போடுகிறீர்கள்” என்று அவன் சொன்ன பதிலில் லேசான குழப்பமும் சற்று அதிகமான வெறுப்பும் கலந்து கிடந்தது.

கனோஜியின் ஈட்டிக் கண்கள் அவன் கண்களை அப்படியே கவர்ந்து நிறுத்தின. ”உவமை சரியல்ல தமிழா! முதலை என்று வைத்துக்கொள். முதலில் தரையிலிருந்து முதலையை எடுத்துத் தண் ணீரில் போட்டேன். இப்பொழுது அதைத் தரைக்கு இழுக்கிறேன். தமிழகத்தில் நீ இருந்தபோது தரைப்படை வீரனாயிருந்தாய். உன்னை எடுத்துக் கடலில் போட்டு மாலுமியாக்கினேன். இப்பொழுது எனது தரைப் படைக்குத் தலைமை வகிக்கத் தகுந்தவன் வேண்டியிருக்கிறது. அதற்காக எனது தரைப் படையின் உபதளபதியாக நியமிக்கிறேன்” என்று கூறிய கனோஜி, மேலும் விளக்கினார்: “இதயசந்திரா! தஞ்சை மகாராஷ்டிரர் தரைப் படையில் நீ வேலை பார்த்திருக்கிறாய். தவிர, சென்னை பிரிட்டிஷாரிடமும் அலுவல் புரிந்திருப்பதாக நீயே கூறியிருக்கிறாய். இந்த அனுபவங்களோடு உனக்கு நுண்ணிய அறிவும் இருக்கிறது. இந்த அனைத்தும் நமது தரைப் படைக்குத் தற்சமயம் தேவை.. இன்னும் சில நாட்களில் சிறுகச் சிறுக எனது தரைப் படை வீரர்கள் இங்கு கப்பல் மூலம் வருவார்கள். சிறுகக் சிறுகக் கொலாபாவுக்கு அக்கரையிலிருக்கும் ஆலிபாக்கிற்கு. அனுப்பப்படுவார்கள். அங்கு ஏற்கெனவேயுள்ள சிறு படை மெள்ள மெள்ள விரிவுபடுத்தப்படும். இதைத் தவிர, ஆங்காங்கு இந்த ஸஹ்யாத்ரி மலைத் தொடரில் எங்கெங்கு நமது துறைமுகங்களிருக்கின்றனவோ அங்கெல்லாம் அடுத் தடுத்து உள்ள கரைகளில் சிறுசிறு படைகள் இருக்கின்றன. அவற்றில் சிலவும் இங்கு வரும். நாலைந்து நாட்களில் மிகச் சிறந்த படைப் பிரிவொன்றை இங்கு திரட்டிவிட முடியும். அதைத் தலைமை ஏற்று நடத்த எனக்கு அடுத்த படி ஒரு வீரன் தேவை. அந்த வீரன் நீ!”

இதயசந்திரன் முகம் பிரமை தட்டிக் கிடந்தது… கனோஜியின் கடற்படையைப் பற்றிய விவரம் பூராவையும் அவன் அறிந்திருந்தாலும், இப்படியொரு தரைப் படை இருக்க முடியும் என்று. அவன் சொப்பனத்திலும் நினைக்கவில்லை. அத்தகைய தரைப் படை ஸஹ்யாத்ரியின் பல பகுதிகளில் ரகசியமாகத் திரட்டப்பட்டிருந்ததை நினைத்துப் பார்த்து, நீரில் எப்படியோ அப்படி நிலத்தி லும் பெரும் திட்டங்களை ரகசியமாக வகுக்கும் இந்த. மனிதனின் திறமை எத்தனை அசாதாரணமானது என்று உள்ளூர வியந்தும் கொண்டான். அந்த வியப்பு விளைவித்த பிரமையுடன் கேட்டான் ஸார்கேலை நோக்கி, “ஸார்கேல்! பதவி மாற்றத்துக்குக் காரணம் உண்மையில் தங்கள் தேவையா, எனது திறமையின்மையா?” என்று.

“திறமையின்மை என்று யார் சொன்னது?” என்று ர் கனோஜி பதிலுக்கு.

”ஜல தீபத்தை நங்கூரம் பாய்ச்சிவிட்டு வெள்ளைக்காரி பின்னால் சுற்றியதை நீங்கள் தானே சுட்டிக் காட்டினீர்கள் சற்று முன்பு?’ என்று குறிப்பிட்டான் இதயசந்திரன்.

“ஆம். குறிப்பிட்டேன். ஜல தீபத்தை நங்கூரம் பாய்ச்சிவிட்டு நீ தோர்லாவாடாவில் உட்கார்ந்துவிட்டது தவறுதான். ஆனால் அது உ.னது திறமையின்மையைக் குறிக்கவில்லை. சபலத்தைக் குறிக்கிறது. காரணம் அதுவல்ல இதயசந்திரா, மகாராஷ்டிர சரித்திரம் அடுத்த சில மாதங்களுக்குக் கடலிலிருந்து தரைக்கு மாறுகிறது. ஆகவே, நீயும் தரைக்கு மாற்றப்படுகிறாய். தமிழா! உனக்கும் இந்த மகாராஷ்டிரத்துக்கும் விதி சம்பந்தமான தொடர்பு ஏதோ இருக்கிறது. மகாராஷ்டிர ராஜ்யத்தின் மூன்றாவது வாரிசு ஒருவனைத் தேடி இங்கு வருகிறாய். விதியால் கடலிலிருந்து கொங்கணிக் கரையில் வீசப் படுகிறாய். கடலிலிருந்து இந்த நாட்டில் விசிறப்பட்டவன் இப்பொழுது வேறு இரு வாரிசுகளின் போர்களில் சம்பந்தப்படுகிறாய். ஷாஹுவை அரியணையிலிருந்து அகற்ற மகாராணி தாராபாய் செய்யும் முயற்சிக்கும், அரியணையில் திடமாக உட்கார்ந்துவிட ஷாஹு செய்யும் முயற்சிக்கும் இடையில் நீயும் அகப்பட்டுக் கொண்டிருக்கிறாய்” என்று கூறிய கனோஜி தமது ராட்சத சரீரத்தை மேஜைக்காகத் திருப்பினார். “வா இப்படி” என்று இதயசந்திரனையும் தமக்கு அருகில் அழைத்து, தமது கைத்துப்பாக்கியால் பாரத தேசப் படத்தில் ஒரு இடத்தைச் சுட்டிக் காட்டி, “இந்த இடத்தைத்தான் உனக்கு முன்பு காட்டினேன்” என்று கூறினார் படத்தைப் பார்த்துக் கொண்டே.

“ஆம், அந்த இடந்தான்” என்றான் இதயசந்திரன்.

“இது…” “ஸதாரா?”

”அப்படித்தான் இப்பொழுது அழைக்கிறார்கள்” என்ற கனோஜி ஆங்கரே படத்திலிருந்து கண்களை மட்டும் இதயசந்திரன் மீது திருப்பி, “இதன் பெயர் ஸாத் ஆரா, ஸதாரா என்று திரிந்துவிட்டது. மகாராஷ்டிர மன்னர்களின் இந்தத் தலை நகரம் மலைச்சரிவில் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. பதினேழு பாதுகாப்புச் சுவர்கள், ஸ்தூபிகள், வாயில்கள் உள்ளதால் ஸாத் ஆரா என்றழைக்கப்பட்டது. இதைத் தாக்குவதோ, பிடிப்பதோ பிரும்மப் பிரயத்தனம். இங்குதான் உட்கார்ந்திருக்கிறார் மகாராஜா ஷாஹு, மொகலாயர் ஆதரவுடன். இப்பொழுது இவர் என்னை ஒழித்துக் கட்டத் திட்டமிட்டு வருகிறார்’ என்று விளக்கினார்.

பதிலேதும் கூறாத இதயசந்திரன் தலையசைத்தான். ராணி தாராபாயால் ஸார்கேலாக நியமிக்கப்பட்ட கனோஜி ஆங்கரேயை மகாராஜா ஷாஹு அழிக்க முற்படுவதில் விந்தை ஏதுமில்லையென்றாலும் ஏற்கெனவே தாராபாயின் போர்களில் சிக்கியுள்ள ஷாஹு இந்தத் தலைவேதனையை ஏன் விலை கொடுத்து வாங்கிக் கொள்ள வேண்டும் என்று சிந்தித்தான் இதயசந்திரன். ஆனால் கனோஜி ஆங்கரேயின் சக்தி தாராபாயின் பக்கலில் இருக்கும்வரை ஐந்து ஆண்டுகளாக ஷாஹு சூடியிருக்கும் மணிமகுடம் நிலையற்றதாகவே இருக்கு மென்பதையும் புரிந்து கொண்டதால் கேட்டான், ”எப்பொழுது தங்கள் மீது தாக்குதலைத் தொடங்குவார் மகாராஜா? எந்தப் பக்கத்தில் தொடங்குவார்?’ என்று.

“இன்னும் இரண்டு மாதங்களில் தொடங்கலாம். அவர்கள் படை தயாராயிருக்கிறது. படைத் தலைவரையும் நியமித்தாகி விட்டது” என்றார் கனோ ஜி புன்முறுவலுடன்.

“யாரது?” என்று வினவினான் இதயசந்திரன். “பாஹிராவ் பிங்களே…” என்ற கனோஜி வார்த்தையை முடிக்குமுன்பே, “யார், பேஷ்வா.

பிங்களேயா?” என்று கேட்டான் வியப்புடன் இதய சந்திரன்.

“ஆம்” என்றார் ஆங்கரே. “பேஷ்வாவையே நேரில் அனுப்புவதனால் தங்களைக் கண்டு மகாராஜாவுக்குச் சிறிது அச்சந்தான் இருக்க வேண்டும்” என்றான் இதயசந்திரன்!

கனோஜி சற்று நிமிர்ந்து நின்று இதயசந்திரனை நோக்கிப் புன்முறுவல் கோட்டினார். “தமிழா! அச்சமிருக்கிறதோ இல்லையோ மகாராஜாவுக்கு, என்னை மிக முக்கியஸ்தனாக மதித்திருக்கிறார். சாதாரண ஒரு கொள்ளைக்காரனை நோக்கி மகாராஷ்டிரப் படையே வருகிறதென்றால் அது நமக்கு மிகவும் பெருமை” என்று அம்முறுவலுக்கிடையே கூறிவிட்டுச் சற்று ரகசியமாக, “இதயசந்திரா! இது ஒரு பெரிய சந்தர்ப்பம் நமக்கு . மகாராஜா ஷாஹு ஜன்மத்தில் அடைந்திராத படிப்பி னையை அடைவார் இந்தப் படையெடுப்பில்” என்று சொன்னார், அதைச் சொன்னபோது அவர் கண்களிலிருந்த ஒளி அந்தப் படிப்பினை கற்பிக்கப்படுவது நிச்சய மென்பதைத் தெளிவாகக் காட்டியது.

அந்த ஒளியைக் கண்ட இதயசந்திரனின் மனம் பெரு மிதத்தால் பொங்கியது. தனது நிலையையும் சாதனையை யும் இத்தனை நிச்சயமாக நினைக்கவல்ல ஒரு மாவீரனிடம் தான் பணிபுரிய நேர்ந்தது பெரும் பாக்கியமென்று நினைத்தான். இருப்பினும் ஒரு பெரும் மகாராஷ்டிரப் படையை, எந்தக் கட்டுப்பாடுமில்லா மலைவீரர்கள் கொண்ட படையைக் கொண்டு எப்படி எதிர்ப்பது என்று சந்தேகப் பட்டான் தமிழன். துறைமுக ஓரமுள்ள மலைப் பகுதிகளில் சிறுசிறு கூட்டமாக வைத்துள்ள பிரிவுகளை ஒன்று திரட்டி னால் அவையனைத்தும் ஒரே படையாக இயங்க முடியுமா என்ற ஐயப்பாடும் இருந்தது தமிழக வீரனுக்கு. தவிர, பேஷ்வாவே தலைமை வகித்துப் படையை நடத்துகிறா ரென்றால், அவர் எப்படியோ என்ன திறமைசாலியோ என்றும் எண்ணிப் பார்த்தான். ஆகவே கேட்டான் – “நமது தரைப் படையைச் சிறுசிறு தனிப்பட்ட பிரிவு களைக் கொண்டு அமைக்கிறோம். இவர்களை ஒரே படையாக இயங்கச் செய்யப் பயிற்சி வேண்டும். அதற்குக்காலம் பிடிக்குமோ?” என்று.

“தேவையில்லை. ஒன்றாக இயங்க இந்தப் பிரிவுகள் பழக்கப்பட்டிருக்கின்றன” என்றார் கனோஜி.

”பேஷ்வா பிங்களே எப்படி? திறமைசாலியா?”

“திறமைக்கும் அவருக்கும் சம்பந்தம் கிடையாது.”

”என்ன பேஷ்வாவுக்கா?”

“ஆம்.”

“திறமையில்லாமல் எப்படி பேஷ்வாவாக முடியும்?”

“பேஷ்வா ஆவதற்கு மன்னன் கருணை தான் வேண்டும். திறமை அவசியமல்ல” என்று கூறிய கனோஜி நகைத்தார்.

இதயசந்திரன் அவர் எதிரியைத் தவறாக மதிப்புப் போடுகிறார் என்று எண்ணினான். “தகுதியில்லாமல் பதவி வருமா?” என்று வினவவும் செய்தான்.

“வரும் சந்தர்ப்பங்களால் பதவிக்கு வருகிறவர்களும் மிருக்கிறார்கள். தகுதியால் பதவிக்கு வருகிறவர்களுமிருக் கிறார்கள். சாதாரணமாகப் பதவியும் தகுதியும் ஒன்று சேருவதில்லை. பதவி வந்தவுடன் தகுதியிருப்பதாக நமக்கு ஒரு பிரமை ஏற்படுகிறது. பதவிக்கு வந்தவனிடம் சலுகை கள் சன்மானங்கள் எதிர்பார்க்கும் சிலர் தகுதி மற்றும் பல சிறப்புகளையும் கற்பிக்கிறார்கள். அந்தப் புகழ்ச்சிக் கோஷம், பாராட்டுக்கூச்சல் திரும்பத் திரும்பக் காதில் விழுவதால் மக்களும் அவனைத் தகுதியுள்ளவர்களாக மதிக்கிறார்கள். சோதனை வரும்போது தகுதியின்றிப் பதவி பெறுபவன் வேஷம் வெளியாகிறது” என்று கூறினார் கனோஜி ஆங்கரே இகழ்ச்சியுடன்.

“அப்படியானால்… பேஷ்வா பிங்களே…” என்று துவங்கினான் இதயசந்திரன்.

“பிங்களே இரண்டே திங்களில் நமது சிறையில் இருப்பார்?” என்று அறிவித்த கனோஜி, “தரையில் இந்த நிலை இருப்பதால்தான் நீரிலிருந்து நிலத்துக்கு வருகிறாய்!’ என்று கட்டளையிடும் தோரணையில் கூறினார்.

பதிலுக்குத் தலை வணங்கிய இதயசந்திரன், ”அடுத்து நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று வினவினான்.

‘நாளை முதல் இங்கு வரும் படை வீரரைத் திரட்டிப் பயிற்சி அளி. அவர்களுக்கு வேண்டிய ஆயுதங்களைத் தயார் செய்ய ஆயுத சாலைக்கு உத்திரவிடு. அத்துடன் ஆலிபாக்கிலுள்ள படைகளையும் அணி வகுத்து நடத்து. அவர்களுக்கு வேண்டிய ஆயுதங்களைப் பம்பாயிலிருந்து வரவழைப்போம்” என்றான்.

இதயசந்திரனின் முகத்திலே கேள்வி பெரிதாக எழுந்து நின்றது. ”பம்பாயிலிருந்தா?” என்று அவன் வாய்விட்டுக் கேட்காவிட்டாலும் முகத்தில் கேள்வி பிரதிபலித்ததால் ஆங்கரே பதில் கூறினார், ”ஆம். பம்பாயிலிருந்துதான் பிரிட்டிஷாரிடமிருந்து’ என்றார்.

“பிரிட்டிஷார் உங்கள் விரோதிகளல்லவா?” என்று வினவினான் இதயசந்திரன் வாய்விட்டு.

கனோஜி அவனருகில் வந்து அவன் தோளில் கை னவத்து, “இன்று வரையில் விரோதிகள்.. நாளை முதல் நண்பர்கள்” என்று விளக்கியதன்றி அவன் தோளையும் அழுத்தினார் வேடிக்கையாக.

அந்த அழுத்தத்தால் தோள் எலும்பு முறிவுறாததைக் குறித்து மகிழ்ந்த இதயசந்திரன், கனோஜியை ஏற இறங்கப் பார்த்தான் பக்கவாட்டில். அவன் பார்த்ததைக் கண்ட அவர் பெருவிழிகள் இகழ்ச்சிச் சிரிப்பைக் கக்கின. அவர் மீசையும் இதழ்கள் அசைந்ததால் வேடிக்கையாக அசைந்தது. ‘யாரை நண்பர்களாக வைத்துக் கொள்வது, யாரை விரோதிகளாக்கிக் கொள்வது என்பது இவரிஷ்டம் போலிருக்கிறது?’ என்று தனக்குள் சொல்லிக் கொண்ட இதயசந்திரன், “நட்புக்கு அவர்கள் ஒப்புக் கொள்வார் களா?” என்று வினவினான்.

கனோஜி லேசாக நகைத்தார். “அவர்களாக நமது நட்பை நாடினால் நாம் எப்படி மறுக்க முடியும்?” என்று வினவினார் நகைப்பின் ஊடே.

”அவர்களாகக் கோருவார்களா உங்கள் நட்பை? ஆம் ஆம்! கோருவார்கள். இப்பொழுதுதானே அவர்கள் கப்பல்கள் இரண்டைத் தாக்கியிருக்கிறீர்கள்?” என்ற இதயசந்திரன் சொற்களில் கேலி இருந்தது.

கனோஜி ஆங்கரே அந்தக் கேலியை லட்சியம் செய்ய வில்லை. அவன் தோளில் வைத்துப் பிடித்திருந்த கையை யும் அப்புறப்படுத்தவில்லை. சிறிது நேரம் சிந்தனையில் இறங்கினார். பிறகு மெள்ளக் கூறினார், “இதயசந்திரா! இரண்டரை ஆண்டுகளில் நீ கடற்போர் கற்றாயே தவிர, அரசியல் கற்கவில்லை. கற்றிருந்தால் உனக்கு நிலைமை தெளிவாகப் புரியும். நன்றாகச் சிந்தித்துப் பார். விஜயதுர்க்கத்திலிருந்து உன்னை அனுப்பியபோது நன்றாக எச்சரித்து அனுப்பினேன் ஜன்ஜீராவின் பக்கத்தில் செல்லாதே என்று. வெள்ளைக்காரியிடமிருந்த மயக்கத்தில் உன்னையும் அறியாமல் ஜன்ஜீராவை அணுகினாய், அங்கு எதிர்ப்பட்ட கப்பல்களிலிருந்து தப்ப, காமாந்தகனாக இருந்தவன் பிரும்மேந்திர ஸ்வாமியாக மாறி எதிரிகளை ஏமாற்றி அவர்கள் படகுகள் நான்கை முகத்துவாரத்தில் அமிழ்த்திவிட்டாய். இதனால் ஸித்தி ரஸுல் யாகூத்கான் கொதிக்கிறான். அதை ஆட்சேபித்து எனக்கு ஓலையும் அனுப்பியிருக்கிறான். உன் செய்கையால் ஏற்கனவே யுள்ள ஸித்திகளின் விரோதம் மிகைப்படுகிறது. தரையில் மொகலாயர் ஆதரவுடன் ஷாஹு, கடலில் ஸித்திகள் இவர்கள் எதிர்ப்பு. இந்த இருவரைச் சமாளிப்பதே எளிதல்ல. மூன்றாவதாக இப்பொழுது பிரிட்டிஷ் போர்க் கப்பல்கள் இரண்டையும் ஒரு குராப்பையும் சிறிய காலிவாத்தையும் வைத்துக் கொண்டு விரட்டியிருக்கிறேன். ஆகவே பிரிட்டிஷ்காரர் விரோதமும் இப்பொழுது சேர்ந்திருக்கிறது. பிரிட்டிஷார் திறமையான கடலோடிகள். தந்திரசாலிகள். மேலுக்கு வர்த்தகர்கள். உ.ண்மையில் ராஜதந்திரிகள். வீரர்கள். அவர்கள் விரோதமும் சேர்ந்தால் நமக்குக் கடற்பகுதி பெரும் யமனாகப் போய் விடும். ஆகையால், அவர்கள் நட்பு அவசியம். அதை அவர்கள் நாடும் போது அந்த நட்புக் கரத்தை நாம் கைப்பற்ற வேண்டும்” என்று.

இங்கு பேச்சைச் சற்று நிறுத்திய கனோஜி, ”இதய சந்திரா! திரும்பத் திரும்ப அவர்கள் நமது நட்பை நாடி வருவார்கள் என்று நான் சொல்வது உனக்கு விசித்திரமாயிருக்கலாம். ஆனால் சிந்தித்துப்பார். நெடுந்தூரத்திலிருந்து அவர்கள் போர்க் கப்பல்களை வரவழைக்கிறார்கள் வியாபாரத்துக்குப் பாதுகாப்பு என்ற போர்வையில். இப்படி இரண்டிரண்டாக வரும் போர்க் கப்பல்கள் வெகு சீக்கிரம் கடற்படையானால் அவர்களைச் சமாளிப்பது எளிதல்ல. ஆனால் வரும் கப்பல்களையெல்லாம் நாம் தாக்கி அழித்துக் கொண்டிருந்தால் அவர்களுக்குக் கடற்படை உருவாகாது. ஆகவே, கப்பல்கள் ஒழுங்காக வந்து சேர அவர்களுக்கும் அவகாசம் வேண்டும். ஆகையால், அவகாசத்தைப் பெற அவர்கள் நமது நட்பைத் தேடுவ தைத் தவிர வேறு வழியில்லை. அப்படி அவர்கள் நட்பை நாடினால் நாம் அங்கீகரிக்கலாமா என்பதுதான் கேள்வி” என்று கூறினார்.

இதயசந்திரன் அவரது சொற்களை மனத்தில் நன்றாக வாங்கிக்கொண்டு சிந்தித்துப் பார்த்தான். நிலைமையையும் எதிரிகளையும் எத்தனை திட்டமாகப் புரிந்து கொண்டிருக்கிறார் கடற்படைத் தளபதி என்பதை நினைத்துப் பார்த்துப் பிரமிப்பும் அடைந்தான். நிலத்தில் பாய, கனோஜி கடலில் அமைதி தேடுகிறார் என்பது புரிந்தது.

அவனுக்கு. அத்துடன் ஒரு சந்தேகமும் ஏற்பட்டது. வேண்டுமென்றே பிரிட்டிஷ் கப்பல்கள் இரண்டையும் பிடிக்காமல் காயப்படுத்தி விரட்டியிருப்பாரோ ஸார்கேல் என்று கேள்வியும் அவன் மனத்துள் எழுந்தது.

அவன் நினைப்பையும் ஸார்கேல் புரிந்து கொண்டார். “இல்லை இதயசந்திரா! நான் வேண்டுமென்று அவற்றைத் தப்ப விடவில்லை. அவை பெரும் போர்க் கப்பல்கள். பிடிக்க முடியாதென்ற காரணத்தாலேயே விரட்டினேன்” என்றார்.

“அப்படியானால் பிரிட்டிஷாரிடமிருந்து செய்தியை எதிர்பார்க்கிறீர்களா விரைவில்?” “ஆம்” என்றார் ஆங்கரே.

“செய்தி வராவிட்டால்?” இதயசந்திரன் கேள்வியில்.. சந்தேகமிருந்தது.

”வரும். அவர்கள் ராஜ தந்திரிகளாயிருந்தால் வரும். வராவிட்டால் வேறு வழி இருக்கிறது. வருமா வராதா என்பதையும், பிரிட்டிஷாரிடம் நட்புக்கொள்ளலாமா கூடாதா என்பதையும் நாளை கேட்டு விடுவேன்” என்ற ஆங்கரே, “இதயசந்திரா! நமக்குத் தெரியாத விஷயங்கள் பல. ஆனால் பராசக்திக்குத் தெரியாதது ஏதுமில்லை. அவள் கூறுவாள் எது நடக்கும் எது நடக்காது என்று. நாளை உத்தரவு கேட்கப் போகிறேன்” என்றும் அறிவித்தார்.

அவரது முரட்டுப் பக்தி அவனுக்கு வியப்பை விளைவித்தது. ஆனால் ஒன்று நிச்சயமாகத் தெரிந்தது. அந்தப் பக்தி மூடபக்தியோ எதுவோ, அதனால் கனோஜிக்கு நன்மையே விளைந்திருக்கிறது என்பது வெகு திட்டமாகத் தெரிந்தது அவனுக்கு. அத்துடன் நாளை அந்த ஓலைகள் உருளுவதைப் பார்க்கவும் ஆசையாயிருந் தது அவனுக்கு. பராசக்தியின் சந்நிதானம் அப்பொழுதே அவன் கண் முன்னால் எழுந்தது. குலாபியின் அருள் கண்கள் தன்னை அப்பொழுதும் உற்று நோக்குவதாகத் தோன்றியது அவன் உள்ளத்துக்கு. ‘ நாளை பல விஷயங் கள் தெளிவாகும். ஏன், என் நிலைகூடத் தெளிவாகும்’ என்று உள்ளுக்குள் சொல்லிக் கொண்டான் இதயசந்திரன்.

கனோஜியும் அவன் மனத்திலுள்ளதைத் திருப்பிச் சொல்வதுபோல் சொன்னார், “இதயசந்திரா, நாளை குலாபி தீர்மானிப்பாள் என் கதியை, உன் கதியை, மகாராஷ்டிரத்தின் கதியை. மகாராஷ்டிரம் சிறப்பதும் இறப்பதும், வாழ்வதும் தாழ்வதும் நாளை அவள் தரும் கட்டளையைப் பொறுத்திருக்கிறது. கட்டளை எதுவா யினும் சரி, அதை இந்தக் கனோஜி நிறைவேற்றியே தீருவான். கனோஜி வாழ்வில் குலாபிக்குத்தான் அடிமை” என்று.

இதைச் சொன்ன அவர் தோரணையில், பார்வையில், சொற்களில் கனவு விரிந்து கிடந்தது, அந்தக் கனவில் ஆழ்ந்தவர் போல் கனோஜி நீண்ட நேரம் மௌனமாகவே நின்றார். அவர் சொற்களால் ஈர்க்கப்பட்ட தமிழனும் நின்றான், சொல்லிழந்து, திறனிழந்து. குலாபியின் நினைப்பில் வந்த நிலைமை அது. அடிமை நிலைதான் அது. ஆனால எப்பேர்ப்பட்ட ஆனந்த நிலை!

Previous articleJala Deepam Part 2 Ch28 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 2 Ch30 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here